/* up Facebook

Oct 25, 2014

"என்னால் முடிந்தது...உங்களாலும் முடியும்!" கெர்ட்ரூடு எலியன்


‘‘நோபல் பரிசு பெற வேண்டும் என்ற லட்சியத்துடன் ஆராய்ச்சி செய்தீர்களா? இப்படித்தான் எல்லோரும் கேட்கிறார்கள். நோபல் பரிசுக்காக யாராவது வேலை செய்ய இயலுமா? ஒருவேளை நோபல் பரிசு கிடைக்காவிட்டால் என்னுடைய ஆராய்ச்சி அர்த்தமற்றதாக மாறிவிடுமா? நான் மேற்கொண்ட ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும் மனித சமூகத்துக்குப் பயன்பட வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் தவிர, எனக்கு வேறு எந்தக் காரணமும் இல்லை!’’

இப்படி முழங்கியவர் கெர்ட்ரூடு எலியன் (நிமீக்ஷீtக்ஷீuபீமீ ணிறீவீஷீஸீ) 1918ல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிறந்தார். அப்பா பல் மருத்துவர். எலியனுக்கும் அவரது தம்பிக்கும் சந்தோஷமான குழந்தைப் பருவம் அமைந்திருந்தது. இளம் வயதிலிருந்தே புத்தகங்கள் படிப்பதிலும் அறிவை விசாலமாக்கிக் கொள்வதிலும் அதிக ஆர்வத்துடன் இருந்தார் எலியன். பள்ளிப் படிப்பு முடித்தவுடன் எந்தத் துறையில் உயர்கல்வி கற்பது என்ற குழப்பத்தில் இருந்தார் எலியன். அப்போது அவருடைய அருமை தாத்தா புற்றுநோயால் இறந்து போனார். தாத்தாவின் இழப்பு எலியனை மிகவும் துயரத்தில் ஆழ்த்தியது. ‘புற்றுநோயால் இனி ஒருவரும் இறக்கக் கூடாது... அதற்கு ஏதாவது செய்ய வேண்டும்’ என்று முடிவெடுத்தார். 

ஹன்டர் கல்லூரியில் சேர்ந்து வேதியியல் பாடம் படித்தார். அப்போது எலியனின் தந்தை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கினார். அதனால் கல்லூரிப் படிப்பு தடைப்பட்டது. பல்கலைக்கழக உதவியாளர் வேலைக்கு விண்ணப்பித்தார் எலியன். அந்தக் காலத்தில் பரிசோதனைக்கூடங்களில் பெண்களை வேலைக்கு எடுத்துக்கொள்வதில்லை. பெரும் முயற்சிக்குப் பிறகு, செவிலியர் பள்ளியில் கற்பிக்கும் பணி கிடைத்தது. அதுவும் 3 மாதங்களுக்கு மட்டுமே. அதற்குப் பிறகு மீண்டும் வேலை தேடல். இறுதியில் ஒரு மருத்துவரிடம் வேலை கிடைத்தது. ஆனால், சம்பளம் எதுவும் கிடையாது. பணம் கிடைக்காவிட்டாலும் தனக்கு நல்ல அனுபவம் கிடைக்கும் என்று நினைத்து வேலை செய்தார் எலியன்.

ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு சம்பளம் பெற ஆரம்பித்தார் எலியன். அதில் கொஞ்சம் பணத்தைப் பெற்றோருக்கு அனுப்பினார். மீதிப் பணம் படிப்புக்காக. வேதியியல் பிரிவில் ஒரே ஒரு பெண்ணாக எலியன் படித்தார். வேலையும் படிப்புமாக உழைத்து, பட்டம் பெற்றார். முழு நேர ஆய்வுப் படிப்பில் சேர பணம் இல்லாததால் ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்தார். இரவில் படிப்பைத் தொடர்ந்தார். 1941ம் ஆண்டு மாஸ்டர் டிகிரி பெற்றார். இரண்டாம் உலகப் போர் காலகட்டம். மருந்து கம்பெனிகளில் மருத்துவர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டது. அப்போது பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. ஒரு உணவுத் தொழிற்சாலை, ஜான்சன் அண்ட் ஜான்சன் போன்ற நிறுவனங்களில் வேலை கிடைத்தாலும், தொடர இயலா சூழல்.

இறுதியில் ஜார்ஜ் ஹிட்சிங்ஸ் என்ற ஆய்வாளருக்கு உதவியாளராகும் வாய்ப்பு கிடைத்தது. எலியனின் புத்திசாலித்தனத்தையும் அபாரத் திறமையையும் எளிதில் கண்டு கொண்ட ஜார்ஜ் ஹிட்சிங்ஸ், புதுப்புது வாய்ப்புகளை வழங்கினார். வேதியியல் ஆர்வம் நுண்ணுயிரியலுக்குத் திரும்பினாலும், உயிர் வேதியியல், மருந்தியல், நோய் எதிர்ப்பியல், நச்சுயிரியல் என்று அவரது தேடலும் ஆராய்ச்சியும் விரிந்தன. சவாலான, திருப்தியான பணியில் இருந்தாலும், டாக்டர் பட்டம் பெறும் எண்ணம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. பகுதி நேரமாகச் சேர்ந்து படிக்க ஆரம்பித்தார் எலியன். 

பகலில் வேலை, இரவில் படிப்பு என்று ரொம்பவே களைத்துப் போனார். விரைவில் வேலையா, படிப்பா என்று முடிவெடுக்கும் சூழல் உருவானது. பணம் இல்லாமல் படிக்க முடியாது. அதனால் படிப்பை நிறுத்திவிட்டு, வேலையைத் தொடர்ந்தார் எலியன். ஆனாலும், ‘டாக்டர் பட்டம் பெற முடியவில்லையே’ என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது. ஜார்ஜ் ஹிட்சிங்ஸுடன் சேர்ந்தும் தனியாகவும் நிறைய மருந்துகளை கண்டுபிடித்தார் எலியன். குறிப்பாக ரத்தப்புற்று நோய், அக்கி, எய்ட்ஸ் நிவாரணம் போன்றவற்றுக்கான மருந்துகளை கண்டு பிடித்தார். 

மாற்றுச் சிறுநீரகம் பொருத்தப்படுகிறவர்களுக்கு அவர்கள் உடல் அதை ஏற்கும் விதத்தில் மருந்து கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பால்தான் இன்று உலகம் முழுவதும் பல லட்சம் பேர் உயிருடன் வாழ்ந்து வருகிறார்கள். இதுபோன்று 45 மருந்துகளை கண்டுபி டித்து அதற்கான உரிமங்களையும் பெற்றார் எலியன். எலியனின் கண்டுபிடிப்புகளுக்காகவும் மருத்துவத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காகவும் 23 கௌரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டன. ’டாக்டர் பட்டம் பெற வேண்டும் என்ற என் லட்சியம் நிறைவேறிவிட்டது. பார்க்கத்தான் என் பெற்றோர் இல்லை’ என்று வருந்தினார் எலியன்.

எலியனுக்காக நிச்சயிக்கப்பட்ட மணமகன், நோய் பாதிப்பில் இறந்து போனார். அதற்குப் பிறகு எலியனுக்குத் திருமணம் மீது ஆர்வம் இல்லாமல் போய்விட்டது. தன் கவனம் முழுவதையும் ஆராய்ச்சியில் செலுத்தினார். ஓய்வு நேரங்களில் பல்வேறு நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். விதவிதமாகப் புகைப்படங்கள் எடுத்தார். இசை மீதும் தீராத காதல் இருந்தது அவருக்கு.  பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றிருந்ததால் எலியனை ‘மினி இன்ஸ்டிடியூட்’ என்று  அழைத்தனர். புற்றுநோய் ஆராய்ச்சி மையங்களில் பல பொறுப்புகளை வகித்தார். 1988ல் ஜார்ஜ் ஹிட்சிங்ஸ், சர் ஜேம்ஸ் பிளாக் ஆகியோருடன் கெர்ட்ரூடு எலியனுக்கும் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. முறையாக டாக்டர் பட்டம் பெறாத வெகு சிலரே நோபல் பரிசைப் பெற்றிருக்கிறார்கள். 

அவர்களில் எலியனும் ஒருவர்! நேஷனல் மெடல் ஆஃப் சயின்ஸ் விருதும் நேஷனல் இன்வண்டர்ஸ் ஹால் ஆஃப் ஃபேமில் பதவியில் அமர்த்தப்பட்ட முதல் பெண் என்ற பெருமையும் கிடைத்தன. ஓய்வு பெற்ற பிறகு நிறைய கல்வி நிறுவனங்களில் உரையாற்றினார். வகுப்புகள் எடுத்தார். ஆராய்ச்சிகளை தொடர்ந்தார். ஆராய்ச்சி கட்டுரை களை எழுதினார். பல்வேறு நிறுவனங்களில் கௌரவ பொறுப்புகளை ஏற்று திறம்படச் செய்தார். 1999ம் ஆண்டு, 81 வயதில் உலக வாழ்க்கையிலிருந்து மறைந்து போனார் எலியன்.‘‘கடினமான வேலைகளை செய்ய பயப்படாதீர்கள். எது ஒன்றும் எளிதாகக் கிடைத்துவிடப் போவதில்லை. 

மற்றவர்கள் என்ன சொன்னாலும் உங்கள் லட்சியத்தில் உறுதியாக நில்லுங்கள். வேதியியலில் பெண்கள் காலடி எடுத்து வைக்காத காலகட்டத்தில், நான் தைரியமாக நுழைந்ததால்தான் இன்று ஏராளமான பெண்கள் இந்தத் துறைக்கு வருகிறார்கள். நான் முறையாக டாக்டர் பட்டம் பெறவில்லை... ஆனாலும், எனக்குக் கிடைத்த டாக்டர் பட்டங்களுக்குக் குறைவே இல்லை. என்னால் முடிந்தபோது, உங்கள் ஒவ்வொருவராலும் ஏன் முடியாது?’’ என்கிறார் எலியன்.

நன்றி - தினகரன்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்