/* up Facebook

Oct 24, 2014

ரோஸா லக்ஸம்பர்க் : காதல், அரசியல், மரணம் - யமுனா ராஜேந்திரன்


அவர் நேற்றுத்தான் மரணமுற்றது போலிருக்கிறது. திரைப்படத்தில் அவர் கொல்லப்படும் இறுதிக்காட்சி இன்னும் மனதில் நிற்கிறது. நூற்றி முப்பத்து நான்கு ஆண்டுகள் உருண்டோடிவிட்டது அற்புதமான ஆளுமை கொண்ட இந்தப் பெண் பிறந்து. அதைப்போலவே அவர் பாசிஸ்ட்டுகளால் கொலை செய்யப்பட்ட அந்த அந்தகார இரவின் பின் என்பத்தி ஆறு ஆண்டுகள் ஓடி விட்டன. 1871 ஆம் ஆண்டு  கிழக்கு ஐரோப்பாவிலுள்ள போலந்து நாட்டில் ஸமோஸ்க் நகரில் மார்ச் 5 ஆம் நாள் யூதப் பெற்றோருக்குப் பிற்ந்தார் ரோஸா.

ரோஸாவின் பெற்றோர் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். மறுமலர்ச்சி யுக மதிப்பீடுகளுடனும் கெதேவின் இலக்கித்துடனும் சேர்ந்து வளர்ந்தவர் ரோஸா. 1873 இல் அவரது குடும்பம் வார்ஸாவுக்குக் குடி பெயர்நதது. அங்குதான் அவரை வாழ்நாள் முழுதும் அலைக்கழித்த இடுப்புவலி அவரைப் பீடித்தது. பள்ளிக் கூட நாட்களிலேயே ரோஸா அரசியலில் பிரவேசித்துவிட்டார். ரஷ்ய் தீவிரவாதிகளினால் பாதிப்புக்குட்பட்ட நரோத்னிக் தழுவிய போலந்து புரொலிடரியட்டில் செயல்பட்டார் ரோஸா. அக்கட்சி போலீசின் வேட்டகைக்குட்பட்ட போது, 1887 இல் பள்ளி இறுதி முடித்திருந்த ரோஸா சூரிச்சுக்குப் பறந்தார். அவ்வாண்டில்தான் அவர் மார்க்ஸ் எங்கெல்ஸைப் படிக்கத் துவங்கினார்.

இங்குதான் அவளது காதலனும் தோழனுமான லியோ ஜோகித்சேவை அவர் சந்தித்தார். தென்றலும் புயலும் மாறி மாறி வீசிய அவர்களது காதல் வாழ்வு 1906-1907 ஆம் ஆண்டுகளில் சந்தோஷங்களுடனும் கொந்தளிப்புகளுடனும் கழிந்தது. 1907 இல் அவர்களுக்கிடையிலான உறவு ஜோகிசத்சேக்கு அவரது ரஷ்யத் தலைமறைவு வாழ்க்கையில் ஏற்பட்ட இன்னொரு ரஷ்யத் தோழியுடனான உறவின் பின் முறிந்தது. ஆனால் அவர்களது முன்னைய நெருக்கமும் அரசியல் தோழமையும் ரோஸாவின் இறுதி நாட்கள் வரை இருவரையும் இணைத்திருந்தது. 1919 ஆம் ஆண்டு ஸ்பார்ட்டஸிஸ்ட்டுகளின் எழுச்சியைத் தொடரந்து ரோஸாவும் கார்ல் லீப்னெக்ட்டும் கொல்ப்பட்டதின் பின் ரோஸா கொலையுண்ட சூழ்நிலை குறித்த ஆய்வை மேற்கொண்டு அதை வெளியுலகுக்குச் சொன்னவர் ரோஸாவின் காதலனும் தோழனுமான ஜோகித்செதான்.

ரோஸா சூரிச் பல்கலைக் கழகத்தில் கணிதமும் இயற்கை விஞ்ஞானமும் பொருளாதாரமும் கற்றார். அவரது சிறை வாழ்வில் அதிகமும் அவர் இயற்கை விஞ்ஞானம் சம்பந்தமாகத்தான் படித்தார். அவரது மையப்பாடம் பொருளாதாரமாக இருந்தாலும் அவர் தனிமையில் தனது தோழமையாகத் தேர்ந்தது பறவைகள் பற்றிய, தாவரங்கள் பற்றிய புத்தகங்களும் தான்.

பல்கலைக் கழகத்தில் அவரது டாக்டர் பட்டத்துக்காக அவர் சமர்ப்பித்த ஆய்வேடு போலந்தின் தொழில் வளரச்சி சம்பந்தமானதாகும். அவரது பள்ளிக் கூட நாட்களின் நம்பிக்கைகளை அறிவார்ந்த வகையில் அவரது பொருளியல் ஆய்வு உறுதிப்படுத்தியது. போலந்தின் உற்பத்தியானது ரஷ்ய சந்தைக்கும், ரஷ்ய முதலாளித்துவத்துக்காகவும்தான் உற்பத்தி செய்கிறது என்பதை அவர் தனது ஆய்வில் நிறுவினார். இந்தப் பொருளியல் ஆய்வுதான் வாழ்நாள் முழக்கவுமான அவரது அரசியல் நம்பிக்கைகளை வடிவமைத்தது.

ரஷ்ய முதலாளித்துவத்தை எதிர்த்து போலந்து, ரஷ்யத் தொழிலாளர்கள் ஒன்றுபடவேண்டும் என ரோஸா நினைத்தார். பாட்டாளிவர்க்க சர்வதேசியத்தை தன் வாழ்நாள் முழுக்க அவர் உயரத்ப்பிடித்தார்.

அவரது தேசியவாதத்திற்கான எதிர்ப்பையும் சர்வதேசியத்தையும் அன்றைய வரலாற்று வளரச்சியிலிருந்தும் அவருடைய அனுபவத்திலிருந்தும் பிரிக்கமுடியாது. அவரும் ஜோகித்சேவும் அன்று ஆரம்பித்து நடத்திய தொழிலாளர் குரல் பத்திரிக்கை வந்து கொண்டிருந்த காலத்தில் 60000 தொழிலாளர்கள் திரண்ட பொதுவேலை நிறுத்தம் லோட்ஸ் நகரத்தைக் கலக்கியது. இதன் விளைவாக ரோஸா தலைமை தாங்கிய புராலிடேரியட் கட்சி போலந்து தொழிலாளர் லீக்குடன் இணைந்து போலந்து சோசலிஸ்ட் கட்சி உதயமானது. இங்குதான் சோசலிசமும் தேசியமும் இணைய முடியாது என்ற தனது கோட்பாட்டுக்காக துரோகத்தனமான அனுபவத்தைப் பெற்றார் ரோஸா.

இக்கட்சியின் தலைவர்களில் ஒருவனான பில்சுட்ஸ்க்கி சோசலிசத்தை முற்றிலும் கைகழுவியவராக தேசியம் பேசி முஸோலினியைப்போல பிற்பாடு இருபதுகளில் போலந்தை ஆண்ட சர்வாதிகாரியாக ஆனான். தேசியமும் சர்வாதிகாரமும் இணைந்ததை நேரில் கண்ட ரோஸா இதன்பின்பு இக்கட்சியினின்று வெளியேறி போலந்து லித்துவேனிய சமூக ஜனநாயகக் கட்சியை ஆதரித்தார். இக்கட்சியைத் தான் அவர் தனது வாழ்வின் மிகுதி நாட்களில் ஆதரித்து வந்தார்.

தேசியவாதம் குறித்த எதிர்ப்புக் கொண்ட ரோஸா, பள்ளி நாட்களில் போலந்து மொழிக்கு மாறாக ரஷ்ய மொழி திணிக்கப்பட்போது கொதித்தெழுந்தார். கலாச்சார அடையாளத்தை வற்புத்திய ரோஸா அந்த அடையாளம் பிறப்பையோ இனத்தையோ கொண்டதாக அமையாமல் வர்க்கத்தைக் கொண்டதாக இருப்பதையே விரும்பினார். இவ்வகையில் சர்வதேசியவாதியான ரோஸா சர்வதேசிய தொழிலாளர்களின் வளர்ச்சி பெற்ற இயக்கத்தோடு தன்னை இணைத்துக்கொள்ள அவாவியபோது அன்று ஐரோப்பாவில் வளரச்சி பெற்ற சோசலிஸ்ட் கட்சியாகவும் மரபார்ந்த மார்க்சிஸ்ட் கட்சியாகவும், இரண்டாம் அகிலத்தின் சித்தாந்தமாக முனையாக இருந்த ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியல் சேர்ந்து செயல்பட முனைந்தார்.

தனது டாக்டர் பட்டத்துக்காக ஆய்வைச் சமர்ப்பித்தவுடனேயே ஜெர்மனிக்குப் போகவிரும்பிய அவருக்கு அன்றைய ஜெர்மானியக் குடியேற்றக் கொள்கையின் கெடுபிடி பிரச்சினையாக இருந்துது. இதன் பொருட்டு போலியாக ஒரு செளகர்யக் கல்யாணம் செய்துகொள்ள முடிவு செய்த ரோஸா, குஸ்தாவ் லுவாக் எனும் போலந்திலிருந்து குடியேறிய ஜெர்மானியரை மணந்து கொண்டார்.

அன்று முதல் அவரது வாசஸ்தலமாகிய ஜெர்மனி இறுதியில் அவரது உயிரையும் எடுத்துக் கொண்ட நகரமாக ஆகியது.

அவரது அரசியல் நடவடிக்கைகள் அவர் காலத்திலேயே பிரசித்தமானது. அவரது மறைவுக்குப்பின் தொகுக்கப்பட்ட ரோஸாவினது தனிப்பட்ட கடிதங்கள பெண்ணிலைவாத வட்டாரங்களில் அவரது வாழ்வு குறித்த அதீதமான தேடலைத் தூண்டிவிட்டது. தனிமனுஷியாக இயற்கை, தாவரங்கள், பிராணிகள் அவற்றின் ஜீவனுள்ள செயல்பாடு என்பன அவரது தனிமைத் துணைகளாக ஆகியிருந்தன. இந்த ஈடுபாடு அவரது பள்ளிக் கூட நாட்களிலிருந்தே தொடங்குகிறது. ஆனால் போராட்டம் புரட்சி என்பது, தன்னின் அழிவு, வன்முறை, சாவு, புறஉலகு போன்றவற்றோடு சதா தொடர்புடையது. இந்த அகத் தனிமைக்கும் புறநடவடிக்கைக்குமான பதட்டம் ரோஸாவுக்குள் அவரது வாழ்நாளெல்லாம் தொடர்ந்து வந்தது.

அவர் இனம் மொழி போன்ற அடையாளங்களை ஒப்பாதது போலவே, பெண் எனும் தனி அடையாளத்தையும் ஒப்புக் கொண்டவரல்ல. இந்த அடையாள மையங்கள் அனைத்தும் முதலாளித்துவத் தன்மை கொண்டதென அவர் நினைத்தார். தனித்த பெண்களின் இயக்கம் என்பதில் அவர் அவ்வளவு ஈடுபாடு காட்டியவராக இல்லை. வர்க்க அடையாளம் கொண்ட ஆண் பெண் உறவு என்பதாக அவரது வாழ்க்கைப் பார்வை அமைந்தது.

காதலர்களும் தோழர்களும்:

தனது காதலனும் தோழனுமான ஜோகித்சேவுடன் அவருக்கிருந்த உறவு உணர்ச்சிபூர்வமான கொந்தளிப்பான காதல்நிறைந்த உறவாகும். அவர் ஜோகித்சேவை மணந்து கொள்ள விரும்பினார். நிறையக் கடிதங்கள் எழுதி மன்றாடினார். குழந்தை பெற்றுக் கொள்ளவும் விரும்பினார். ஆனால் ஜோகித்சே புரட்சிகர நடவடிக்கையும், குடும்ப வாழ்வும் குழந்தைபெறலும் இணைந்து போகமுடியாது என்றார்.

ஜோகித்சேவின் இன்னொரு பெண் உறவின் பின் ரோஸா தன்னைவிடவும் மிக இளவயதினனான கோயட்சேவுடன் உறவு கொண்டிருந்தார். கோயிட்ஷே ரோஸாவின் தோழி கிளாரா ஜெத்கினின் மகன். இந்த உறவு கிளாரா ஜெட்கினுக்குத் தெரியவந்தபோது ரோஸாவுக்கும் அவருக்கும் இடையில் பகைமை மூண்டது. கிளாரா ஒரு போலி என விமர்சித்தார் ரோஸா. கிளாராவுக்கு விருப்பமில்லாததினாலேயே அவர்கள் உறவு தொடரவில்லை. அதற்குப் பின்பாக ஹான்ஸ் திபன்பாக்குடன் ரோஸா கொண்டிருந்த உறவு உணரச்சிவசமானதல்லாததாகியது. அறிவுபூர்வமான நிதானமான அரசியல் தவிர்ந்த உறவாக அது இருந்தது. ஆயினும் கோயிட்சே போரில் இறந்த வேளையில் கிளாராவும் ரோஸாவும் சேர்ந்தே துக்கம் அடைந்தார்கள்.

ரோஸாவின் அரசியல் உலகும் கோட்பாட்டுலகும் விரிந்ததாயினும் அவரது உள் உலகம் தனிமையால் நிறைந்தது. தேர்ந்தெடுத்த நண்பர்களையே அவர் கொண்டிருந்தார். அவரது நட்புக்கும் அவரோடான அரசியல் ரீதியிலான உடன்பாட்டுக்கும் எந்த வகையிலும் சம்பந்தமில்லை. அரசியல் எதிரிகளிடம் அவர் நட்பு வைத்த்¢ருக்கிறார் தீவிரமாக அரசியல் உடன்பாடு கொண்டவர்களை தனிப்பட்ட உளவியல் காரணங்களினால் வெறுத்த வந்திருக்கிறார் அரசியல் எதிரியான காவுட்ஸ்க்கியோடு அவர் நட்பு பாராட்டினார். அரசியல் உடன்பயணயான த்ரோத்ஸ்கியுடன் விரோதம் பாராட்டினர். தனிநபர் எனும் அளவில் மிகுந்த பிடிவாதம் கொண்டவர் ரோஸா. சாதாரணமாக ஆட்ளை நிராகரிக்கத் தயங்காதவர். அவர் பூமியிடமும் பறவையிடமும் தீராத அன்பு பாராட்டியவர்.

அவரது நண்பர்கள் விரல்விட்டு எண்ணத்தக்கவர்கள். அவர் மிக நெருக்கமாக கடிதத்தொடர்பு கொண்டவர்க்ள சாஞ்ச்சா லீப்னெக்ட், லூயிஸா காவுட்ஸ்க்கி ஜோகித்ஸே போன்றவர்களாவர். அவருடயை கடிதங்களில் அவர் தன்து கோட்பாடுகள் பற்றி விவாதிப்பதி;லலை. தன்னைச் சுற்றிலும் ஒரு பாதுகாப்பான தனி உலகத்தையே வேண்டினார். அவர் நண்பர்களையும் சரி எதிரிகளையும் சரி எடுத்த எடுப்பில் தீர்மானித்துவிடுவார். அவரை தனிப்பட்ட முறையில் அறிந்திருப்பவர்கள் சொல்கிறபடி அவர் நிரம்பவும் சிக்கலானவராகவும், சீக்கிரம் கோபப் படக்கூடியவராகவும் இருந்தார்.

அவருடைய மரணத்திற்குப் பிறகு அவருடைய சிநேகிதிகள், ரோஸாவை அரசியலை அடிப்படை வாழ்வாகக் கொள்ளாத, குடும்ப வாழ்வுக்கு ஏங்கிய பெண்ணாக, கடுமையான அரசியல் கொண்ட அரசியல்ஜீவி அல்லாத பெண்ணாகச் சித்தரித்தார்கள். ஆனால் அவரது உறவுகள் அனைத்தும அரசியலின் வழியில் அவர் கண்டடைந்தவைதான். இன்னும் அவரது படிப்பு, இயல்பான ஈடுபாடுகள், ஆய்வுகள், அவரின் சர்வதேசியம், அவரது இயற்கை நேசிப்பு போன்றவற்றுக்கிடையில் அரசியல் பெண், அரசியல் அல்லாத குடும்பப் பெண் என்று கூறு போடமுடியாது என்கிறார் அவரது வரலாற்றை எழுதிய நெட்டல்.

ரோஸா எனும் பெண்ணின் காதல், கோபம், அவரை இறுதியில் சந்தித்த மரணம் என்பது வரை அரசியலை அவரது வாழ்விலிருந்தும் ஆளுமையிலிருந்தும் பிரிக்கவே முடியாது.

ரோஸாவின் அரசியல்

ரோஸாவின் நாற்பத்தி எட்டாண்டு கால வாழ்வென்பது ஐரோப்பிய புரட்சிகர அரசியலுடன் மட்டுமல்லாது மூன்றாம் உலக நாடுகளின் விமோசனத்திலும் அக்கறை கொண்டு வாழ்ந்த முழமையான வாழ்வு. அவருடைய The Accumulation of Capita எனும் புத்தகம் மூன்றாம் உலக நாடுகளுக்கு விரிவு பெறும் மூலதனம் ஏற்படுத்தும் விளைவுகள் பற்றிய அவரது ஆய்வாகும். ருஷ்ய சமூக ஜனநாயகக் கட்சி தோன்றுவதற்கு இருபத்தியோரு ஆண்டுகளுக்கு முன்பு, 1882 ஆம் ஆண்டு தோன்றிய போலந்து புராலிடேரியன் கட்சியின் உறுப்பினர் அவர். போலந்து ரஷ்யா ஜெர்மனி போன்ற நாடுகளின் புரட்சிகர இயக்கங்களில் நேரடியாகப் பங்கு பற்றியவர் அவர். கார்ல் மார்க்சிலிருந்து தொடங்கும் யூத இனத்தின் இடதுசாரி மரபில் வந்தவர் அவர்.

உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மேதைகள் புரட்சியாளர்கள் அனைவருடனும் சமதையாக நின்று விவாதித்த புரட்சிகரப் பெண்மணி அவர். லெனின் பிற்பட்ட விவசாயிகளின் நாட்டிலிருந்து, அச்சூழலிலிருந்து தனது கோட்பாட்டை வளர்த்தெடுத்தார். ரோஸா ஐரோப்பாவிலேயே பிரம்மாண்டமானதும் வளர்ச்சியுற்றதுமான தொழிலாளி வர்க்கப் போராட்ட அனுபவங்களினூடே தனது பரட்சிக் கோட்பாட்டை உருவாக்கியவர். லெனின், த்ரோஸ்த்க்கி, கார்ல் காவுட்ஸ்க்கி, அகஸ்டோ பெபல், மெஹ்ரிங், கார்ல் லீப்னெக்ட், பெர்ன்ஸ்டீன், கிளாரா ஜெத்கின், ரோஸாவின் காதலரும் புரட்சியாளருமான லியோ ஜோகிஸ்க்கி போன்றவர்கள் ரோஸாவின் சமகாலத்தவர்.

கம்யூனிஸ்ட் கட்சிகளும் புரட்சிகரக் குழக்களும் இன்று வரை பேசிவரும் பல்வேறு ஸ்தாபன மற்றும் நடைமுறைப் பிரச்சினைகள் இந்த மேதைகளுக்கிடையில் எழுந்தது.

1). சட்டபூர்வமான வழியிலான சீர்திருத்தவாதம், புரட்சிகர மாற்றம் இவற்றுக்கிடையிலான பிரச்சினைகள. 2). புரட்சியில் தொழிலாளி வர்க்கத்தால் தலைமை தாங்கப்படும் பொதுவேலை நிறுத்தத்தின் முக்கியத்துவம், தன்னெழுச்சி பற்றிய முக்கியத்துவம் போன்ற பிரச்சினைகள். 3). ஏகாதிபத்தியத்திற்கெதிரான போராட்டத்தை, ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான யுத்தத்தை, எதிர்ப்பு போராட்டமாக மாற்றுவதன் அவசியம், அச்சூழலில் சமாதான இயக்கங்களின் தேவை போன்றவை குறித்த பிரச்சினைகள். 4). புரட்சிகரக் கட்சிக்கும் வர்க்கத்துக்கும், கட்சிக்கும் மக்களுக்கும் இருக்கவேண்டிய உயிரூக்கமுள்ள தொடர்பு, கட்சிக்குள்ளும் வெளியிலும் ஜனநாயக மத்தியத்துவத்தைப் பேணுவதில் உள்ள பிரச்சினைகள். 5). ஏகாதிபத்தியத்தின் கீழும், முதலாளித்துவ சமூக அமைப்பின் கீழும், தேசியப் பிரச்சினை அணுகப்படக்கூடியதான வரையறை. 6). கட்சியில் அதிகாரத்துவமும் அதிகாரத்தில் இருக்கும் கட்சியில் அதிகாரவர்க்கமும் உருவாகி விடக்கூடியதான ஆபத்து குறித்த எச்சரிக்கை, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் குறித்த அதி முக்கியத்துவம். 7). புரட்சிகரக் கட்சி தொடர்ந்த வர்க்கப் போராட்டத்துக்கு மாற்றாக தொழிற்சங்கவாதத்தை முன்வைக்கும் போக்குக்கு எதிரான போராட்டம். 8). சமகால ஏகாதிபத்தியத்தின் அரசியல் மற்றும் அதற்கான அவர்களது பொருளாதார வேர்கள் பற்றியதும், கார்ல் மார்க்ஸின் முலதனம் இரண்டாவது பாகத்தில் தீர்க்கப்படாததான கோட்பாட்டுப் பிரச்சினைகள் பற்றியதும் தொடர்ச்சியானதுமான The Accumlation of Capital : A contribution to economic explanation of imperialism புத்தகத்தில் வைக்கப்படும் வாதங்கள் என மிக முக்கியமான பிரச்சினைகளை ரோஸா தனது அரசியல் வாழ்வில் விவாதிக்க நமக்கு முன் விட்டுச் சென்றிருக்கிறார்.

பெர்ன்ஸ்டீன் மற்றும் கார்ல் காவுட்ஸ்க்கியின் சீர்திருத்தவாதம் பற்றியும், தொழிற்சங்கவாதம் பற்றியும், யுத்தத்திற்கு ஆதரவானதும் பற்றிய அவர்களது நிலைபாட்டுக்கெதிரானதுமான சளையாத போராட்டம் ரோஸாவினுடையது. ரோஸாவின் சிந்தனை செயல் சித்தாந்தம் ஆகியவற்றின் செயல்மையம் சர்வதேசீயம்தான். பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமை, தேசம் இனம்மொழி போன்றவற்றால் பிரிக்கப்படமுடியாத, இடைநிறுத்தப்படமுடியாத ஜீவநதியோட்டம் போன்றது அவரது சர்வதேசீயம். இந்த பாட்டாளிவர்க்க சர்வதேசீயம் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் அமைகிற கட்சி, பாட்டாளி வர்க்கத்தின் ஜனநாயகத்தால் உத்தரவாதப்படுத்தப்படும் சோசலிச சமூகம், இதுவே அவரது இறுதி இலட்சியம்.

இந்த நிகழ்வுப் போக்கில் அவர் பாட்டாளி வர்க்கத்தின் புத்திபூர்வமான பங்கெடுப்பை, தன்னெழுச்சியை, செயலை, பங்கெடுப்பை எந்த அரசியல் நிகழ்வின் புரட்சித் தன்மைக்கான முதல் நிபந்தனையாக ஆக்கினார். பாட்டாளி வர்க்கத்தின் பெயரால் அவர்களுக்காக முடிவெடுக்கிற கட்டளையிடுகிற அமைப்பாக கட்சி இருப்பதை, தொழிற்சங்கம் இருப்பதை அவர் மறுதளித்தார்.

சீர்திருத்தம் பொதுவேலை நிறுத்தம் ஏகாதிபத்தியம்:

சட்டச்சீர்திருத்த நடவடிக்கைக்கான போராட்டங்கள் புரட்சிக்கான போராட்டங்களிலிருந்து பிரிக்கமுடியாதவை. சீர்திருத்தமும் புரட்சியும் இரு துருவங்கள். ஒவ்வொரு வர்க்கச் சட்டமும் புரட்சியின் விளைவே. புரட்சியின் இறுதி லட்சியத்திலிருந்து பிரிக்கப்படும் சீர்திருத்தவாத நடவடிக்கைகள், இருக்கும் அமைப்பைத் தொடர்ந்து காக்கும் சமரசத்திற்கே இட்டுச் செல்லும். சீர்திருத்தங்கள் நீண்ட கால புரட்சிக்கு இட்டுச் செல்லும் என்றோ, புரட்சி சீர்திருத்தங்களின் சுருக்கப்பட்ட வடிவம் என்றோ சொல்வது வரலாற்றுக்கு முரணானது எனச் சொல்லும் எட்வர்ட் பெர்ன்ஸ்டீனது சீர்திரத்தவாதத்திற்கெதிரான ரோஸாவின் போராட்டம் பற்றிய பிரசுரம் :

Social reform or Social Revolution.

அரசியல் மற்றும் பொருளாதார  ரீதியிலான பொதுவேலை நிறுத்தம் என்பது தொழிலாளிவர்க்க அதிகாரத்திற்கு புரட்சகர நடவடிக்கையில் மையமானது எனக் கண்டார் ரோஸா. பொது வேலைநிறுத்தங்களில், பொருளாதார நோக்கங்களை அரசியல் நோக்கங்களிலிருந்து பிரிப்பதோ அரசியல் நோக்கங்களை பொருளாதாரக் கோரிக்கைளிலிருந்து பிரிப்பதோ ரோஸாவுக்கு உடன்பாடானதல்ல. பொருளாதாரப் போராட்டங்கள் நீண்ட கால நோக்கில் அரசியல் போராட்டத்துக்கான களத்தைத் தயாரிக்கும் அதே போதில் அரசியல் போராட்டங்கள் பொருளாதார அதிகாரத்துக்கான தொழிலாளி வர்க்கத்தின் பங்கெடுப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும். பொதுவேலை நிறுத்தங்கள் தொழிலாளி வர்க்கத்தின் ஆன்மீக பலத்தை உயர்த்துவதோடு தனிமைத் துயரை விரட்டி கூட்டு மனப்பான்மையைத் தருகிறது என்கிறார் ரோஸா. Mass Strike  எனும் குறுநூல் பொது வேலை நிறுத்தம் தொடர்பான அவரது பிரசுரமாகும்.

1914 இல் தொடங்கிய முதல் உலகப் போர்க் காலகட்டத்தில் சோசலிஸ்ட் இன்டர்நேஷனல் அமைப்புக்குள்ளும், ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான இச்சண்டையில் ஜெர்மன் ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவான ஒரு போக்கு ஜெர்மன் ஜனநாயகக் கட்சிக்குள்ளும் எழுந்தது. காலனியாதிபத்தியத்தை எதிர்த்தாலும் காலனிய நாடுகளில் ஏகாதிபத்தியம் சீர்திரத்தம் செய்தது என்றும், அங்குள்ள பூர்வகுடி மக்களுக்கு அவர்களின் வாழ்வை மேம்படுத்தியது என்று சொன்னது 1907 ஆம் ஆண்டு கூடிய ஸ்ட்ருட்காட் இன்டர்நேஷனலின் கூட்டம். கார்ல் காவுட்ஸ்க்கி போன்றோர் ஏகாதிபத்தியம் முதலாளித்தவலத்தின் தவிர்க்கவியலா வளர்ச்சி அல்ல என்று வாதிட்டனர். சோசலிஸ்ட் இன்டர்நேஷனலில் இருந்த சமூக ஜனநாயகவாதிகளின் வலதுசாரிப் பிரிவை இவர் பிரதிநிதித்துவப் படுத்தினார். ரோஸா யுத்தத்திற்கு எதிரான நிலைபாட்டை மேற்கொண்டார். சோசலிசம் அல்லது காட்டமிராண்டித்தனம் இதுதான் நமக்கு முன்னுள்ள தேர்வு என்றார் அவர்.

அனைத்துக் கலாச்சார வளர்ச்சியின் வீழ்ச்சி, அழிவு, கொலை, கல்லறை, இதுவே ஏகாதிபத்தியம் என்றார் Junious எனும் புனைபெயரில் இக்காலகட்டத்தில் ரோஸா எழுதிய பிரசுரம் : Junius Pamphlet.

கட்சியும் வர்க்கமும்

பரந்து பட்ட தொழிலாளர்களின் பிரக்ஞைபூர்வமான பங்கெப்பு என்பதனை சோசலிசத்தைச் சாதிப்பதற்கான மிக அவசியமான முன்நிபந்தனையாகக் கண்டார் ரோஸா. லெனினும் ரோஸாவும் கலந்துரையாடலில் ஈடுபட்ட முக்கியமான விஷயங்களில் இதுவும் ஒன்று. ரோஸாவின் பார்வையில் தொழிலாளிவர்க்க இயக்க அனுபவங்களிலிருந்து படிப்பினை பெற்று, அதைப் பொதுமைப்படுத்துவதன் மூலமே புரட்சிகரக் கோட்பாடு உருவாகவேண்டும். தொழிலாளி வர்க்கத்தின் பிரக்ஞைபூர்வமான ஆர்வம் பிரக்ஞைபூர்வமான பங்கெடுப்பு இது இரண்டும் சோசலிசத்தைக் கட்டமைக்க முக்கியம் என்கிறார் ரோஸா. தொழிலாளி வர்க்கத்தை சோசலிசத்திற்கு படிப்பிப்பது என்பது அவர்களிடம் உரையாற்றுவது பிரசுரங்களை விநியோகிப்பது அல்ல என்கிறார் அவர். செயல்மட்டுமே மக்களைக் கல்வி மயப்படுத்தும் என்கிறார் ரோஸா.

மிகச்சிறப்பான மத்தியக்குழு இழைக்கும் தவறுகளிலிருந்து பாடம் கற்பதைவிட, புரட்சிகரத் தொழிலாளர் இயக்கத்திலிருந்து பாடம் பெறுவது அதி சாராம்சமானது என்கிறார் ரோஸா.

ரோஸா லக்ஸம்பர்க்கின் இந்த நிலைபாட்டுக்கான வேர்களை நாம் அன்று நிலவிய ஜெர்மன் சூழலிருந்துதான் விளங்கிக் கொள்ள முடியும். அகஸ்தோ பெபல், கார்ல் காவுட்ஸ்க்கி, எட்வர்ட் பெர்ன்ஸ்டீன், ஹில்பர்டிங் போன்றோர் பிரதிநிதித்துப் படுத்திய ஜெர்மன் பாராளுமன்றப் பாதை, கட்சியினதும் தலைமையினதும் கட்டளையில்லாமல் தொழிலாளி வர்க்கத்ததால் ஏதும் செய்யமுடியாது என்னும் அவர்களது நிலைபாடாக இறுகிப்போயிருந்தது. ரோஸா ஏற்கனவே செயலாற்றிய போலந்து சோசலிஸ்ட் கட்சி நிலைபாடு இது. இனவாத அமைப்பு அது. சமூக அடிப்படையற்று போலந்து தேசிய விடுதலை பேசியது அது. தேசியப் போராட்டத்திலிருந்து முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் விலகியிருந்தனர். தொழிலாளி வர்கக்த்திற்கு அப்படிப்பட்ட ஆர்வம் ஏதும் அப்பொழுது இருக்கவில்லை.

இந்த இரண்டு இயக்கங்களும் அடிமட்ட வர்க்க சக்திகளைப் பற்றியோ தொழிலாளி வர்க்கத்தின் பங்கெடுப்புக்குள்ள முக்கியத்துவம் பற்றியோ உணரவில்லை. முற்றிலும் மறுக்கப்படும் ஒரு விஷயத்தை அழுத்திப் பேச ஆரம்பிக்கும் போது, அதில் சம்பந்தப்பட்டவருக்கு முழு வாழ்வினதும் பிரச்சினையாக அதுவே ஆகிவிடுவதை நாம் வரலாற்றின் பல்வேறு சந்தர்ப்பங்களில் பார்க்கிறோம். வர்க்கப் பார்வை புறக்கணிக்கப்படும் போது அதுவே சம்பந்தப்பட்டவர்க்கு முழு முதல் பிரச்சினை. பெண்நிலை நோக்கு, சூழலியல் நோக்கு, விளிம்புநிலை மக்கள் போன்ற நோக்குகளில் சம்பந்தப்பட்டவர்க்கு அச்சமயத்தில் அதுவே அவர்தம் முழு வாழ்வினதும் பிரச்சினையாகிறது. தொழிலாளி வர்க்கத்தின் பிரக்ஞைபூர்வமான பங்களிப்பு புறக்கணிக்கப்படும் சூழலில், ரோஸாவுக்கு அதுவே அவரது முழு இயக்கத்துக்குமான பிரச்சினையாக ஆகிறது. ரோஸாவின் தொழிலாளி வர்க்கப் பங்கெடுப்பு பற்றிய நிலைபாடு இவ்வாறுதான் உருவாகிறது. கட்சி அமைப்பை இரண்டாம் பட்சமாக இதனால்தான் அவரால் பாரக்கமுடிகிறது.

தொழிலாளி வர்க்கத்தின் தன்னெழுச்சி என்பது ரோஸாவுக்கு திரிபுவாதத்திற்கெதிரான உடனடிப் போராட்டத்தோடு சம்பந்தப்பட்டது. இங்கு அவருக்கு அதுவே முதலாவதாகவும் ஆகிறது.

பாஸ்டில் சிறையுடைப்பும், 1905 ஆம் ஆண்டு ரஷ்யப் புரட்சியும் தன்னெழுச்சியானவைதான். யாரும் அதைத் தலைமை தாங்கி நடத்தவில்லை. ரஷ்யாவில் தோன்றிய 1917 பிப்ரவரி எழுச்சி தன்னெழுச்சிதான். ஆனால் இம்முறை அதிக அளவிலான சோசலிஸ்ட்டுகள் உள்ளிட்ட தன்னெழுச்சி. பிப்ரவரியிலிருந்து அக்டோபர் புரட்சி வெற்றியடையும் வரையிலான ஏற்ற இறக்க நிகழ்வுகளில் போல்ஷ்விக் கட்சியின் வழிகாட்டுதல் இருந்தது. இத்தகைய புரட்சிகரக் கட்சி புரட்சியின் ஆரம்ப எழுச்சியில் இருந்து அதன் இறுதிக்கட்டம் வரை தேவைதான். ரோஸா உடனடியில் அதிகாரவர்க்க மத்தியத்துவத்தினிடையில் வேலை செய்ய வேண்டி இருந்ததால்தான் தொழிலாளி வர்க்கத் தன்னெழுச்சியை மையப்படுத்த வேண்டியவரானார். லெனின், த்ரோஸ்த்க்கி, பிளக்கனோவ் போன்ற ரஷ்யத் தலைவர்கள் இக்காலகட்டத்தில் ரஷ்யாவுக்கு வெளியிலேயே இருந்தனர். அமைப்பென்று ஏதும் இல்லை. பொருளாதாரவாதத்தையும் தொழிற்சங்க வாதத்தையும் விமர்சிப்பதினூடே, லெனின் தனது ஆய்வைத் தொடங்குகிறார். வர்க்க எழுச்சியானது பிரக்ஞைபூர்வமான ஸ்தாபனத்தினால் ;வழிகாட்டப்படவேண்டியதின் தேவையை அப்போது லெனின் உணர்கிறார்.

அன்றிலிருந்த நிலைமை லெனினது கட்சிக் கட்டமைப்பு மேலிருந்து கீழான கட்டமைப்புதான். லெனினது கட்சி பற்றிய இக்கோட்பாடு மாறாத தன்மை படைத்ததல்ல. கட்சி ஜனநாயக மயப்படுத்தப்பட வேண்டும், தொழிலாளி வர்க்கம் தன்னுணர்ச்சி பூர்வமாக தன்னெழுச்சியான புரட்சிகர வர்க்கம் என்கிற நிலைபாட்டுக்கு லெனின் பிற்பாடு வந்து சேர்கிறார்.

கட்சி பற்றிய லெனினது முக்கியமான பிரசுரம் செய்ய வேண்டியது என்ன? என்பதாகும். இப்புத்தகம் அன்று நிலவிய பொருளாதாரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில், கட்சியின் கட்டமைப்பு மற்றும் அதன் பாத்திரம் பற்றிப் பேசும் நூலாகும். லெனின் இந்நூலில் ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் கட்சிக்குள் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசுகிறார். தனது பண்ணிரண்டு ஆண்டுகள் தொகுப்புக்கான முன்னுரையில், செய்ய வேண்டியது என்ன எனும் தனது நூல் தவறான முறையில் வியாக்கயானப்படுத்தப்படுத்தப்படுவதை வேதனையோடு விமர்சித்த லெனின், இப்புத்தகம் ரஷ்யக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் வரலாறு பற்றிய ஞானமுள்ள ஒருவரது குறிப்புகளுடன் அல்லாது வேறு மொழிகளில் பிரசுரிக்கப்படுவது விரும்பத்தக்கதல்ல என்றும் கூறுகிறார்.

லெனினது கட்சி பற்றிய கோட்பாடு, அக்காலத்தில் நிலவிய உள்நாட்டு யுத்தத்தினிடையில், தொழிலாளிவர்க்கம் வளர்ச்சி பெற்றிருந்த சூழலில், அதிமையப்படுத்தப்பட்ட பாதி ராணுவக்கட்டமைப்பு பற்றிய கட்டைமைப்புக் கோட்பாடுதான். அதன் வரலாற்று முக்கியத்துவத்தை மீறி அதைப் பொதுமைப்படுத்ததுது சரியானது அல்ல. மேலும் மட்டுமீறிய மையத்துவ அழுத்தம் லெனினால் கட்சிக்கு கொடுக்கப்பட்டதை அக்காலகட்ட ரஷ்யப் பிண்ணனியிலேயே புரிந்து கொள்ள வேண்டும். இந்த இருவரது வரலாற்றுச் சூழலைப் புரிந்து கொள்ளாமல், ரோஸாவையும் லெனினையும் இரு எதிரெதிர் துருவங்களில் நிறுத்துபவர்கள் வரலாற்றுக்குருடர்கள் அன்றி வேறில்லை.

அதிமத்தியத்துவம் விளைவித்த சேதங்களை ஸ்டாலினியத்திலிருந்து, கிழக்கு ஐரோப்பிக் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளிலிருந்து இன்றளவும் நம் நாடுகளில் நிலவி வரும் கம்யூனிஸ்ட் கட்சிகள், புரட்சிகர விடுதலை அமைப்புகள் என்று சொல்லிக் கொள்பவை வரை, நாம் அதனது மானுட விரோதத்தன்மையை பாரத்துக் கொண்டதான் இருக்கிறோம்.

ரோஸா வலியுறுத்திய பிரக்ஞையுள்ள தொழிலாளர்களின், ஒடுக்கப்பட்ட மக்களின் பங்கெடுப்பு மட்டுமே சித்தாந்தம் வழிகாட்டக் கூடிய தலைமையயை புரட்சிகரத் தலைமையாக மாற்றும்.

ரோஸாவுக்கும் லெனினுக்கும் நடந்த இந்த விவாதங்களுக்கு அடிப்படையாக அமைந்த புத்தகங்கள் பனி;வருவன. காரல் மார்க்ஸ் எங்கெல்சின் : The class struggle in France லெனினுடைய What is to be done மற்றும் One step forward two step backward. ரோஸாவின் The programme of the Communist party of germany: Spartacist மற்றும் Speech to the foundation congress of the german communist party  போன்றனவாகும்.

தேசிய இனப்பிரச்சினை

ரோஸாவின் பெயர் அதிகமாகப் பிரஸ்தாபிக்கப்படும் இன்னொரு பிரச்சினை தேசிய இன விடுதலை தொடர்பானதாகும். இப்பிரச்சினையிலும் ரோஸாவுக்கும் லெனினுக்கும் இடையில் விவாதம் மூண்டது. பிரச்சினை போலந்தின் விடுதலை தொடர்பானதாக எழுந்தது. போலந்து எனும் நாடு ரஷ்யன்-ஜெர்மன்-ஆஸ்ட்ரியன் பேரரசுகளால் பிரிக்கப்பட்ட ஒரு நாடு. ரோஸா போலந்து தொழிலாளர் கட்சியின் தரைவராயிருந்தவர். 1896 ஆம் ஆண்டு ஆவர் போலந்து பிரச்சினையை ஆய்வு செய்து The Industrial development of Poland  எனும் புத்தகத்தை வெளியிட்டார். இந்தப் புத்தகத்தில் தேசியம் சம்பந்தமாக அவர் எடுத்த நிலைபாட்டை அவர் தனது மரணம் வரை கொண்டிருந்தார்.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலும் கார்ல் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் நிலைபாடு இதுதான் : முதலாளித்துவ ஜனநாயகத்தின் வரையறைதான் தேசிய அரசு என்பது. ஆகவே சோசலிஸ்ட்டுகளின் கடமை  முடியாட்சிக்கு எதிராகவும், நிலப்பிரபுத்துவ நிலவுரிமை ஆதிக்கத்திற்கு எதிராகவும் போராடவேண்டும். முதலாளித்துவம் வளர்ந்து கொண்டுவந்த காலகட்டத்தில் ஐரோப்பிய தேசியங்கள் பற்றிய மார்க்ஸ் ஏங்கெல்ஸ் நிலைபாடு இதுதான். அவர்களது முதல் எதிரி ஜார் பேரரசும் ஹாப்ஸ்பர்க் பேரரசும்தான். இதற்கு எதிரான அனைத்தையும் அவர்கள் வரவேற்றார்கள். இதன் ஆதரவுடன் வரும் அனைத்தையும், அது தேசிய இயக்கமாயினும் அவர்கள அதை எதிர்த்தார்கள். ஜாரிஸ்ட் ரஷ்யாவுக்கு எதிராக, போலந்து தேசிய விடுதலைக்காக புரட்சிகர ஜெர்மனியை ஆயதமேந்த அறைகூவல் விடுத்தனர் இவர்கள். ஜாரிஸத்தின் வீழ்ச்சியும் ஹாப்ஸ்பர்க் பேரரசின் வீழ்ச்சியும் இதனால் துரிதப்படும் என்று நம்பினர். ஆனால் இதே காரணங்களுக்காக ஸ்லாவியர்கள் குரோசியர்கள் ஸெர்பியர்கள் போன்றோரின் தேசிய விடுதலையை எதிர்த்தனர். இவை ஜாரையும் ஹாப்ஸ்பர்க் முடியாட்சியையும் வலுப்படுத்தும் என்று அவர்கள் நினைத்தார்கள்.

இவ்வாறு முடியாட்சியை வீழ்த்துவது எனும் கண்ணோட்டத்திலிருந்துதான் மார்க்சும் எங்கெல்சும் தம் காலத்திய தேசிய இனப்பிரச்சினையைப் பார்த்தார்கள். தேசிய இனப் பிரச்சினையில் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் அக்கறை என்பது ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவோடு வரையிடப்பட்டது. ஆசிய ஆப்ரிக்க இலத்தீனமெரிக்க முதலாளித்வ தேசீய கருத்தாக்கம் பற்றி அவர்கள் அக்கறை கொள்ளவில்லை. காலனிய நாடுகளில் விடுதலைக்குப் பின்னான சமூகங்களில் சோசலிச அமைப்புக்கான சாத்தியம் ஏங்கெல்ஸின் கவனத்துக்குள் வரவில்லை. ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் பிரச்சினைகள் தீர்க்கப்படுமானால் அதையொட்டி பாதி நாகரீகமான நாடுகள் தமது ஒப்புமைக்கேற்ப எழும் என்று நினைத்தார் ஏங்கெல்ஸ்.

ஓப்பீட்டளவில் ரோஸாவின் அக்கறை ஐரோப்பா சார்ந்தாயினும், ஆசிய ஆப்ரிக்க இலத்தீனமெரிக்க தேசியங்களையும் அவர் கவனங் கொண்டார்.

மார்க்ஸ் எங்கெல்ஸ் வரையறுத்த ஐரோப்பா மாறிவிட்டது என்றார் அவர். மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் ஜனநாயகப் புரட்சிகள் முடிந்துவிட்டன என்றார் ரோஸா. மார்கஸ் எங்கெல்ஸ் காலத்தில் புரட்சியின் மையங்களாக மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பா இருந்தது. ஆனால் தற்போது புரட்சியி;ன் மையம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ரஷ்யாவுக்கு கிழக்கு நோக்கி நகர்ந்துவிட்டது என்றார் ரோஸா. ஜெர்மன் பிரான்ஸ் பிரிட்டன் பெல்ஜியம் போன்ற நாடுகள் இப்பேது ரஷ்யாவை எதிர்பார்க்கவில்லை. மாறாக ரஷ்யா இவர்களை எதிர்பார்த்து நிற்கிறது என்றார். போலந்து முதலாளித்துவம் தனது சந்தைக்காக ரஷ்யாவைச் சாரந்து நிற்கிறது. ரஷ்ய ஜாரிஸத்துடன் சேர்ந்து போலந்தினது தொழிலாளி வர்க்கத்தையும் புரட்சிகரப்பகுதிகளையும் ஒடுக்க போலந்து முதலாளித்துவம் முனைகிறது என்றார் ரோஸா.

எந்த சமூக வர்க்க சக்தியும் போலந்தை மீட்டெடுக்கக்கூடிய நிலையில் தற்பொழுது இல்லை என்பதையே தனது ஆய்வு நிருபிக்கிறதாகச் சொல்கிறார் ரோஸா.

இந்ய ஆய்விலிருந்து முதலாளித்துவத்தின் கீழ் தேசிய சுதந்திரத்திற்கு முற்போக்குப் பாத்திரம் இல்லை என்ற நிலைபாட்டுக்கு ரோஸா வந்தார். மாறாக சோலிசத்தின் கீழ் மானுடக் குலத்தின் சர்வதேசிய ஒற்றுமை நடைமுறையாகிவிடும், இச்சூழலில் தேசிய கோஷங்களுக்குத் தேவையிருக்காது என அவர் சொல்கிறார். தொழிலாளிவர்க்கம் தேசிய சுயநிர்ணய உரிமைக்காகப் போராடத் தேவையில்லை. அது மட்டுமல்ல அது எதிர் புரட்சித்தன்மை வாய்ந்ததும் என்றார் அவர்.

தொழிலாளி வர்க்கத்தின் தேசிய கோஷம் என்பது தமது கலாச்சார நடவடிக்கையில் தேசிய சுயாதீனம் என்கிற கோரிக்கையோடு வரையறைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் ரோஸா.

ரோஸா லக்சம்பர்க்கின் இந்த நிலைபாடும் அவரது அக்காலத்திய அரசியல் சந்தர்ப்பவாத எதிரிகளுக்கெதிரான விமர்சன நிலைபாடாகத்ததான் மேற்கொள்ளப்படுகிறது. ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான போரில் ஒன்றைச் சார்ந்து மற்றொன்றை எதிர்ப்பதன் மூலம் தனது நலனைக் காத்துக் கொள்ளலாம் எனும் போலந்து சோசலிஸ்ட் கட்சியின் வலதுசாரி நிலைபாட்டுக்கு எதிராக அவர் இந்நிலைபாட்டை மேற்கொள்கிறார். ரஷ்யாவுக்கு எதிராக ஆஸ்த்திரிய ஜெர்மன் ஏகாதிபத்தியங்களின் ஏஜென்டாகச் செயல்பட்டான் டாஸின்ஸ்க்கி எனும் போலந்து சோசலிஸ்ட் கட்சியின் தலைவன். வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களை அவன் கண்டித்தான். ரஷ்யப் பேரரசோடு தொழிலாளிகளை இணைத்து, அவர்களை ஜெர்மன் ஆஸ்ட்ரிய ராணுவத்துக் காட்டிக் கொடுத்தான் அவன்.

தனது உடனடி நிலைபாட்டிலிருந்து எழுந்த இந்த வரையறுப்பை அனைத்து விதமான சுயநிர்ணய உரிமைக்கும் எதிர்ப்புத் தெரிவிப்பது என ரோஸா பொதுமைப்படுத்தினார். இந்தக் பொதுமைப்படுத்தல் அவருக்குள் தகித்த பாட்டாளிவரக்க சர்வதேசீயம், உலகளாவிய மனிதநேயம் எனும் நிலைபாட்டிலிருந்து எழுந்தது. உண்மையில் இந்தச் சோகம் ரோஸாவினது மட்டுமல்ல மனித குலத்தை நேசிக்கிற ஒவ்வொருவருக்கும் நேரும் சோகம்தான்.

ரஷ்ய ஒரு ஒடுக்கும் நாடு. போலந்து ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் நாடு. லெனின் ரஷ்யப் பேரரசைச் சார்ந்தவர். ஒடுக்கப்படும் நாட்டின் உரிமைக்காகப் போராட வேண்டியது அவரது புரட்சிகரக் கடமை. ரோஸா பாட்டாளிவர்க்க சர்வதேசீயத்திற்காக நிற்பவர். அவருக்குப் போலந்து விடுதலையைவிட, ரஷ்ய போலந்து பிரெஞ்சு ஜெர்மன் ஆஸ்த்ரிய தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமை முக்கியம். போலந்தின் தேசிய விடுதலை எந்தவிதமான முற்போக்குப் பாத்திரமும் வகிக்காது என்பது அவரது நிலைபாடு. ரோஸாவினதும் லெனினதும் இறுதி இலக்கு சர்வதேசீயத் தொழிலாளர் ஒற்றுமைதான்.

ரோஸா தேசீய சுயநிர்ணய உரிமையை வர்க்கப் போராட்டத்தோடு இணைக்கவே முடியாதெனப் பார்த்தார். லெனின் தேசிய சுயநிர்ணய உரிமையயை வரக்கப் போராட்டத்துடன் இணைத்துக் கொண்டு போபகமுடியும் என நினைத்தார். ரோஸாவிடம் இங்கு தவறுவது இயங்கியல். எதிர்மறைகளின் ஒற்றுமை.

தேசீய விடுதலைக்காக போராட்டப் பகுதியை சர்வதேசிய சோசலிசத்திற்கான போராட்ட முழுமையோடு இணைப்பது என்பதை லெனின் உணர்ந்து கொண்டிருந்தார். ரோஸா லக்ஸம்பர்க் சுதந்திரமான சிந்தனையாளர். ஆய்வாளர். மார்க்ஸ் ஏங்கெல்ஸ் லெனின் போன்றோரது வரையறுப்பக்களோடு முரண்படுவதற்கான வரலாற்றுக் காரணங்கள் கொண்டவர் ரோஸா. இதே ரோஸா லக்ஸம்பர்க், மார்க்ஸ் ஏங்கெல்ஸ் நம்பிக்கைக்கு எதிராக, துருக்கிக்கு எதிரான ஸ்லாவ் மக்களின் தேசீய இயக்கத்தை ஆதரித்தார். இது போலந்து தொடர்பான அவரது அணுகுமுறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. ஆயினும் இங்கும் ரோஸாவினது அளவுகோல் பாட்டாளிவர்க்க சர்வதேசீயம்தான்.

போல்ஷிவிசம் பற்றிய விமர்சனம்

1918 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரஸ்லாவ் சிறையிலிருக்கும் போது ரஷய்ப்புரட்சி பற்றிய The Russian Revolution எனும் புத்தகத்தை ரோஸா எழுதினார். ஜெர்மன் ரஷ்ய மொழிப் பிரசுரங்களை இந்நூலுக்கான ஆதாரங்களாக அவர் எடுத்துக் கொள்கிறார். 1922 இல், நான்கு ஆண்டுகள் கழித்து, ரோஸாவின் நண்பர் பால் லெவி அந்நூலை வெளியிட்டார். அன்று அது எழுதி முடிக்கப்படாத ஒரு புத்தகம். 1928 இல் மறுபடியும் பதிதாகக் கண்டெடுக்கப்பட்ட கையெழுத்துப் படிகளில் இருந்து அதன் ஜெர்மன் பதிப்பு வெளியானது. அதனது ஆங்கிலப்பதிப்பு 1940 ஆம் ஆண்டு நியூயார்க்கில் வெளியானது.

மேற்கத்திய சமூக ஜனநாயகத்திடம் இல்லாது போன புரட்சிகரப் பெருமிதம், புரட்சிகரத் தகைமை கொண்டவர்கள் போல்ஷிவிக்குகள். அவர்களது அக்டோபர் எழுச்சியானது ரஷ்யப் புரட்சி விமர்சனம் மட்டுமல்ல, சர்வதேசீய சோசலிசத்தினது விமோசனத்தினது பெருமிதமுமாகும் என்கிறார் ரோஸா. இவர்கள் சர்வதேசீய பாட்டாளிவர்க்கத்திற்கு முன்னுதாரணமானவர்கள், முதலாமவர்கள் மட்டுமல்ல. இவர்கள் மட்டுமேதான் உதாரணமானவர்கள் என்கிறார் ரோஸா. எங்கெங்கும் எதிர்காலம் போல்ஷிவிஷத்திற்கு உரியதே எனக் குரல் தருகிறார் ரோஸா. மேற்கத்திய ஜனநாயக சோசலிசத்தின் துரோகம், ரஷயப் புரட்சியி;ன் தனிமை போன்றன திரிபுகளுக்கும் தவறுகளுக்கும் இட்டுச் செல்லுமென அவர் நினைத்தார்.

சர்வதேசீய ஆதரவு இல்லாமல், பாட்டாளிகளின் எத்துனை பெரிய தியாகம் இருந்தாலும் தனிப்பட்ட நாட்டில் தவிர்க்கவியலாமல் முரண்பாடுகளையும் சிக்கல்களையும் புரட்சி கொண்டிருக்கும் என்றார் ரோஸா.

ரஷ்யாவில் நிகழந்த ஒவ்வொன்றும் காரண காரியம் சார்ந்தவை. உடனடியில் லெனின் போன்ற புரட்சியாளர்களிடம் முழுமையான ஜனநாயகம், பாட்டாளிவர்க்க சர்வாதிகார முன்னுதாரணம், சோசலிசப் பொருளாதாரம் போன்றவற்றை நம் இச்சூழலில் கோருவது அதி மானுடச் செயலாகவே இருக்கும். அவர்களால் முடிந்த அளவு மிகக் கடுமையான சூழலினிடையேயும் அவர்கள் சாதித்திருக்கிறார்கள் என்றார் ரோஸா. இவ்வாறு ரஷ்யப் புரட்சியைப் போற்றிப் புகழ்கிற் அவர், எல்லாவற்றையும் விமர்சனம்செய் எனும் மார்க்சீய மரபிற்கேற்ப சுதந்திர மார்க்சீயவாதியாகத் தனது விமர்சனங்களையும் முன்வைக்கிறார்.

புறநிலை அம்சங்கள் புரட்சியை தவறுகளுக்கு இட்டுச்செல்லும், அதைப்போலவே தலைமைத்துவத்தில் இருக்கிற அகநிலை அம்சங்கள் இந்தத் தவறுகளை இன்னும் ஆபத்துள்ளதாக ஆக்கிவிடும். ஆபத்து எங்கே வருகிறதெனில் அவர்களது சூழலில் எழுந்த அவர்களது நடவடிக்கை கோட்பாடுகள் போன்றவற்றை உறைநிலையில் கோட்பாட்டு அமைப்பாக்கி சர்வதேசியப்பாட்டாளிகளுக்கு அதைப் பரிந்துரை செய்யும் போது இத்தவறுகள் வரும் என்கிறார் ரோஸா.

இத்தகைய தவறுகள் நேர்ந்துவிட்டது என்பது வரலாறாக இருக்கிறது. இப்படித்தான் லெனினது செய்ய வேண்டியது என்ன? எனும் புத்தகம் கட்சி அமைப்பின் வேத புத்தகமானது.  ரோஸாவின் போல்சிவிஷம் தொடர்பான விமரசனங்கள் நான்கு விஷயங்கள் பற்றியது. : 1). நிலப் பிரச்சினை. 2). தேசிய இனப்பிரச்சினை. 3) அரசியல் நிர்ணய சபை குறித்த பிரச்சினை. 4). தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகள் குறித்த பிரச்சினை.

போலஸ்விக்குகள் உடனடியான நிலப்பறிமுதலை முன்வைத்து அதனை விவசாயிகளுக்குப் பகிர்ந்து கொடுப்பதை திட்டமாகக் கொண்டிருந்தார்கள் என ரோஸா சொன்னார் : முதலாவதாக முதலாளித்துவ நிலஉரிமையாளர்கள் அத்தோடு சிறுபான்மையினரான கிராம பணக்கார முதலாளிகள்தான் இருந்தார்கள். அவர்களிடமிருந்து நிலங்களை எடுப்பது புரட்சிகர இயக்கத்துக்கு சிறுபிள்ளை விளையாட்டு. ஆனால் அதன் பின்பு பறிக்கப்படுவதை விவசாயிகளுக்குப் பிரித்துக் கொடுப்பது விவசாய உற்பத்தியினை சமூக மயமாக்கப்படக்கூடிய எத்தகைய முயற்சிக்கும் எதிராக, எண்ணிக்கையில் பலமாக, புதிதாக வளர்ச்சியடைந்த நில உடமை கொண்ட விவசாயிகள், தாங்கள் புதிதாக வென்ற உரிமையுடன் பற்களாலும் நகத்தாலும் புரட்சியை எதிர்ப்பார்கள். எந்த விதமான சோசலிசத் திட்டங்களுக்கும் எதிராக அவர்கள் நிற்பார்கள். இந்த ஆபத்து ஸ்டாலின் காலத்திலேயே வெளிச்சத்துக்கு வந்தது. சிறிய தொழிலாளி வர்க்கத்தின் தனிமை, விரோதத்தன்மையுள்ள பிற்போக்காக சிறுமுதலாளி விவசாயிகள், ஸ்டாலின் காலத்தில் எழுச்சி பெற்றவர்கள் இவர்களே. ஆனால் விவசாயிகளின் நிலப்பசியும் எழுச்சியும் போல்ஸ்விக்குககளுக்கு வேறு வழியை விட்டுவைக்கவில்லை. மேலும் வர்க்க எதிரிகள் தனிமைப்பட்டிருந்து புரட்சியை எவ்வகையிலும் கவிழ்த்துவிட பசிகொண்டலைந்தார்கள்.

தேசிய இனப்பிரச்சின தொடர்பாக சகலவிதமான சுயநிர்ணயக் கோரிக்கைகளையும், பிரிந்து போகும் உரிமையையும் ரோஸா லக்ஸம்பர்க் நிராகரித்தார். ரஷ்யாவின் அன்றைய நிலையில் ரோஸாவின் நிலைபாடு ரஷய்ப்புரட்சி உடனடியில் புதைகுழியில் வீழுவதிலேயே முடிந்திருக்கும். நிர்ணய சபையும் சோவியத்துக்களும் இரண்டுமே வேண்டும் என்றார் ரோஸா. நிர்ணய சபை விவசாயப் பிரதிநிதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. சோவியத்தில் தொழிலாளிவர்க்கப் பிரதிநிதிகள் பெரும்பான்மையினராக இருந்தனர். போல்ஸ்விக்குகள் தொழிலாளி வர்க்கத்தின் அழுத்தமான வடிவமான சோவியத்தைத் தேர்ந்தார்கள். நிர்ணய சபையைக் கலைத்தார்கள்.

ரோஸாவின் நோக்கம் பரந்துபட்ட மக்கள் பிரதிநிதித்துவத்தைக் கோருவதாக இருந்தது. 1918 நவம்பர் 20 இல் ஜெர்மன் தேசிய சபை முதலாளித்துவத் தன்மை கொண்டது என்றும், பிர்க்ஞைபூர்வமாகவோ அல்லாமலோ புரட்சியை கீழ்மைப்படுத்தும் என்கிறார் ரோஸா. நமக்கு இப்போது முன்னுள்ள பிரச்சினை ஜனநாயகமா சர்வாதிகாரமா என்பதல்ல. முதலாளித்துவ ஜனநாயகம் உண்டு. சோசலிச் ஜனநாயகம் உண்டு. பாட்டாளி வரக்க சர்வாதிகாரம்தான் சோசலிச அர்த்தத்தில் ஜனநாயகமாகும். போல்சிவிஷம் பற்றிய ரோஸாவின் பிரதான விமர்சனம் யாதெனில், ஜனநாயகத்தை அவர்கள் தொழிலாளர்களின் ஜனநாயகத்துக் கட்டுப்படுத்துகிறார்கள், ஜனநாயகத்தைக் கீழாகக் கருதுகிறார்கள் என்பதுதான். தொழிலாளர் ஜனநாயகம் என்பது பாட்டாளிவர்க்கப் புரட்சியிலிருந்தும் சோசலிசத்திலிருந்தும் பிரிக்கப்படமுடியாதது என அவர் நம்பினார்.

பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்பது ஜனநாயகத்தைச் செயல்படுத்துவதற்கு மாறாக அதை அழிப்பது அல்ல, இந்த சர்வாதிகாரம் வர்க்கத்தின் செயலாக இருக்க வேண்டும். மாறாக வர்க்கத்தின் பெயரால் செயல்படும் தலைமை தாங்கும் சிறுபான்மையுடையதாக அல்ல எனறார் அவர். பொதுத் தேர்தல்கள் இல்லாமல் அபிப்பிராயங்களின் சுதந்திரமான போராட்டம் இல்லாமல், கட்டுப்பாடற்ற சுதந்திரமான பத்திரிக்கைச் சுதந்திரம், கூட்டம் கூடும் உரிமை இல்லாமல், எல்லா வெகுஜன நிறுவனங்களிலும் வாழ்வு இருந்தும் கட்டுப்பட்டுப் போகும். ஆதிகாரவர்க்கம் மட்டுமே உற்சாகமாகச் செயல்பட்டுக் கொண்டு, மேல்மட்டத் தொழிலாளிவர்க்கத்தில் சிலரை மட்டுமே அழைத்து கூட்டங்களின் தலைவர்களின் பேச்சைக் கேட்டுக் கைதட்டிக் கொண்டு, நிச்சயமாக இது பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் இல்லை. இது விரல்விட்டு எண்ணக் கூடிய அரசியல்வாதிகளின் சர்வாதிகாரம், முதலாளித்துவ அர்த்தத்தில் சர்வாதிகாரம் என்றார் ரோஸா.

மூலதனக் குவியல்

1906 லிருந்து 1913 ஆம் ஆண்டு வரை ரோஸா அரசியல் பொருளாதாரம் பற்றி ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியினர்க்கு வகுப்பெடுத்துக் கொண்டிருந்தார். அக்காலகட்டத்தில் இந்நோக்கத்துக்காக அவர் An Introduction To the Political Economy  எனும் புத்தகத்தை எழுதத் துவங்கினார். வரலாற்றின் திட்டமிட்ட வரையறைக்குள், முதலாளித்துவ உற்பத்தியின் செயல்முறை உறவுகளை தெளிவுடன் என்னால் விளக்கமுடியாத நிலைக்கு நான் வந்தேன் எனத் துவங்கும் ரோஸா, மிக ஆழ்ந்து நோக்கியபோது இது எவ்வாறு பிரச்சனையை முன்வைப்பது என்பது தொடர்பான பிரச்சினை மட்டுமல்ல, மார்க்ஸின் மூலதனம் இரண்டாம் பகுதியின் கோட்பாட்டுப் பிரச்சினைகளோடு தொடர்பு படுத்தி தீர்வு காணப்படவேண்டிய விஷயம் என்பது தெரிந்தது என்கிறார் அவர்.

அதே சமயத்தில் அது சமகால ஏகாதிபத்திய அரசியலுடனும் பொருளாதார வேர்களுடனும் மிக நெருக்கமாக பிணைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் நான் உணர்ந்தேன் என்று தொடர்ந்து சொல்கிறார் அவர்.

இவ்வழிதான் ரோஸா தனது Accumulation of capital : A contribution to an economic explanation of Imperialism எனும் புத்தகத்தை எழுதினார். இப்புத்தகத்தில் அவர் வளர்ச்சியடைந்த தொழில்நாடுகளுக்கும் வளர்ச்சியற்ற விவசாய நாடுகளுக்கும் இடையிலான உறவை ஆராய்ந்தார். இந்த ஆய்வின் மூலம் இவர் வந்தடைந்த பிரதான நிலைபாடு இதுதான்: ஏகாதிபத்தியம் நீண்ட காலத்துக்கு முதலாளித்துவத்தை நிலைநாட்டிக் கொள்ளும் அதே வேளை, அதனது இடிபாடுகளுக்கடியில் அது மனித குலத்தை சதா அச்சுறுத்திக் கொண்டே இருக்கும்.

இப்புத்தகத்துக்கு முன்னுரை எழுதிய பொருளியல் பேராசிரியர் ஜான் ஜகோபின் குறிப்பிடும் போது : கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக முதலாளித்துவத்தின் நீட்சியானது புதிய பிரதேசங்களுக்குப் பரவியதால்தான், கல்வித்துறைசார் பொருளியலாளர்கள் சொல்கிறபடி, பரந்துபட்ட சார்பற்ற வளர்ச்சி ஏற்ப்பட்டது என்பதை சிலரே மறுக்கமுடியும். பல கல்வித்துறை சார் பொருளியலாளர்கள் உலகெங்கும் பிரதேசங்களின் எல்லை மூடப்பட்டுவிட்டதால், முதலாளித்துவத்திற்கு நேர்ந்திருக்கும் அசெளகரியமான நிலையைக் கவனத்திலெடுக்கிறார்கள்.

இப்புத்தகம் ரோஸா திட்டமிட்ட வகையில் முழுமையடையாத ஒரு நூலாகும். பத்து அத்தயாயங்கள் எழுதுவதற்காகத் திட்டமிட்ப்பட்ட புத்தகத்தின் ஐந்து அத்தியாயங்கள் மட்டுமே கண்டெடுத்துத் தொகுக்கப்பட்டிருக்கிறது. அவரது அசலான திட்டத்தில் இடம்பெற்ற ஐந்து அத்தியாயங்கள் அல்லது எழுதி கிடைக்காது போன அத்தியாயங்கள் இவைதான் : 1).சமூக உற்பத்தி. 2).நிலப்பிரபுத்துவ பொருளாதார அமைப்பு 3). மத்திய கால நகரிகமும் கைவினைத் தொழிலும் 4). மூலதனத்தின் இலாபம் 5). நெருக்கடி.

ரோஸாவால் திட்டமிடப்ப்ட்ட முழமையான புத்தகம் மார்க்ஸின் பொருளாதாரம் பற்றின முழு ஆய்வுகளின் சுறுக்கப்பட்ட வடிவமாகவும், அதன் நீட்சியாக ஏகாதிபத்தியக் காலகட்டம் பற்றின மார்க்சியப் பொருளாதார ஆய்வாகவும் இருக்கிறது. இப்புத்தகத்துக்கான முன்வரைவுகளை ரோஸா தனது காதலரும் தோழனுமுமான லியோ ஜோகித்சிக்கு எழுதிய ஒரு கடிதத்திலும் விரிவாகக் குறிப்பிடுகிறார். உலகமயமாதல் சூழலில் பரவாலாகிவரும் மூலதனம் பற்றிய ரோஸாவின் திட்டமிடப்பட்ட ஆய்வு இவ்வகையில் நம் காலத்திற்கும் பொறுத்தமானதாகும்.

ரோஸா எதிர்த்துப் போராடிய விஷயங்கள் இன்றளவும் இடதுசாரிக்கட்சிகளில் போராடவேண்டிய பிரச்சினைகளாகத்தான் இருக்கிறது. தொழிற்சங்கவாதம், கட்சியில் அதிகாரவர்க்கப் போக்கு, புரட்சிக்குப் பிந்திய சமூகங்களில் ஜனநாயகம், கட்சியில் தொழிலாளர்களின் பங்கெடுப்பு, ஏகாதிபத்தியம் விரிந்த உலகமயாதல் போக்கு, போன்றவற்றைப் பற்றி ரோஸா சொன்னது இன்னும் பொறுத்தமாகத்தான் இருக்கிறது.  தேச விடுதலைப் போராட்டத்தை, அதன் அடிப்படையில் ஒப்புக் கொண்ட பிரான்ஸ் பெனான், அமில்கார் கேப்ரியல் போன்றவர்கள் அதனது தலைமை சக்தி அதனது எதிர்கால சமூகப் பொருளியல் தெரிவு போன்றவை குறித்த கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள்.

தேசியம் எதிர்ப் புரட்சித்தன்மை எய்துவதற்கான வாய்ப்பு எப்போதுமே இருக்கிறதென்பதை தேசியத்தை ஆதரிக்கிற பெரும்பாலுமான கோட்பாட்டாளர்கள் வலியுறுத்துகிறார்கள். தேசிய யுத்தத்தின் தலைமை சார்ந்த பிரச்சினையையும், புரட்சிக்குப் பிந்திய சமூகத்தின் ஆளும் சக்திகளில் வர்க்கம் சார்ந்த பிரச்சினைகளையும் அவர்கள் எழுப்புகிறார்கள்.

இவ்வகையில்தான், இன்று தேசிய ஒடுக்குமுறைக்கெதிரா அம்மக்களின் போராட்டத்தை ஆதரிக்கிறவர்கள், தேசியத்தை இருவகைகளாக புரட்சிகர தேசியம், எதிர் புரட்சிகர தேசியம் என வரையறுக்கிறார்கள். தேசியம் பாசிசத்தோடு தன்னை இணைத்துக் கொண்டதை தன் அனுபவத்தில் கண்டவர்  ரோஸா. அவர் மிகப்பெரும் விடுதலைச் சக்தியாக நம்பிய அதே ஜெர்மன் சமூக ஜனநாயகம்தான் அவரது கொலைக்கும் காரணமாகியது. அந்த சமூக ஜனநாயகத்திலிருந்துதான் நாசிசமும் பின்னாளில் தோன்றியது. அவர் தேசியம் தொடர்பாக விடுத்த எச்சரிக்கை இன்றைக்கும் பொறத்தமானது. அவர் பின் புரட்சி சமூகங்களில் ஜனநாயகம் சம்பந்தமாக எழுப்பிய கேள்விகள் இன்றைக்கும் பொறுத்தமானது. அவர் புரட்சிகரக் கட்;சியில் மக்களை விலக்கிய அதிகாரவர்க்கம் சம்பந்தமாக எழுப்பிய கேள்வியும் இன்றைக்கும் பொறுத்தமானது.

ரோஸாவின் மரணம்

முதலாம் உலகப் போரில் ஜெர்மன் சமூக ஜனநாயவாதிகள் யுத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தபோது தொழிலாளிவர்க்கத்தையும் ராணுவத்தையும் போருக்கு எதிராக நில்லுங்கள், யுத்தத்தை சோசலிசத்துக்கான உள் நாட்டு யுத்தமாக மாற்றுங்கள் என்றார்கள் ரோஸாவும் லீப்னெக்ட்டும். தனிமையிலிருக்கும் ரஷ்யப் புரட்சி பற்றி மிகுந்த அக்கறை கொண்டார் ரோஸா. அந்தப் புரட்சி காப்பாற்றப்படவேண்டுமானால் சர்வதேசியத் தொழிலாளர்கள் அப்புரட்சியைக் காப்பாற்ற வேண்டும், அதற்கு உதவ வேண்டும், அதன் பொருட்டு உலகின் பல்வேறு இடங்களில் தோழமைபூர்வமான புரட்சிகள் தோன்ற வேண்டும் என நினைத்தார் அவர்.

முதலாம் உலகப் போரைக் கண்முன் நின்று பார்த்தவர் ரோஸா. போருக்கு எதிராக நின்றவர் அவர். முதலாம் உலகப் போரின் இறுதியில் ஆட்சிக்கு வந்த சமூக ஜனநாயகவாதிகள் ரோஸாவையும் லீப்னெக்ட்டையும் உறுதியாகக் கொலை செய்வதென்று திட்டம் தீட்டினார்கள். சம்பவங்கள் மிக விரைவாக நடந்தேறியது.

1919 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் நாள் ரோஸா லக்ஸம்பர்க்கும் கார்ல் லீப்னெக்டும் அடைக்கலம் புகுந்திருந்த வீடடிலிருந்து கைது செய்யப்பட்டார்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி, அவர்கள் நேராக ஈடன் ஹோட்டலுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். இரண்டு பேரும் விசாரனை அறைக்கு அழைத்துச் செல்லப்படுவதான நாடகம் நடந்தது. லீப்னெக்ட் சிறிது நேரத்தில் வெளியே கொண்டுவரப்பட்டார். முதலிலேயே துப்பாக்கிப் பின்கட்டையால் அடிக்கப்பட்டு காயம்பட்டிருந்தார் அவர். மறுபடியும் துப்பாக்கிப் பின்கட்டையால் மண்டையில் அடிக்கப்பட்டார் அவர். ராணுவ வாகனத்தில் தூக்கி வீசப்பட்டார். லாண்டவேயர் கால்வாய்க்கு அருகில் கார் நின்றது. சில அடிகள் நடக்குமாறு அவரை வற்புறுத்தினார்கள். தப்பிச் செல்ல முயன்றார் சுட்டோம் எனும் நாடகத்தின்படி அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். பிற்பாடு அடையாளமற்ற நபர் என அவரது உடல் பிரதேச பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

ராணுவ வாகனம் திரும்பவும்; ஈடன் ஹோட்டலுக்கு வந்தது. இப்போது ரோஸாவின் முறை. அறையிலிருந்து ரோஸா வெளியெ அழைத்துச் செல்லப்பட்டார். பின்மண்டையில் துப்பாக்கியில் அடித்ததில் ரோஸாவின் கபாலம் பிளந்தது. அவருடைய உடலை காரில் வீசினார்கள். பக்கவாட்டில் ஒருவன் துப்பாகியில் நெற்றியில் சுட்டார்கள். வாகனம்; விரைந்தது. லாண்டவேயர் கால்வாயில் உடலை வீசியெறிந்தார்கள். ரோஸாவின் காதலரும் தோழருமான் ஜோகித்சி பிற்பாடு திட்டமிடப்பட்ட கொலை இதுவென நிரூபித்துக் காட்டினார். மிக விரைவிலேயே அதற்கான விலையையும் அவர் கொடுத்தார். 1919 மார்ச் 10 ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். போலீஸ் தலையைகத்தையொட்டியிருந்த சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு ஜோகித்சி கொலை செய்யப்பட்டார். தப்பிக்க முயற்சி செய்த போது கொல்லப்பட்டார் என பின்னால் போலீஸ் அறிக்கை வெளியிட்டது. ரோஸாவுக்காகவே தனது உயிரைக் கொடுத்தார், ரோஸாவின் நண்பனும் தோழனும் காதலனும் ஆன ஜோகித்சி.

சோசலிசம் அல்லது காட்டமிராண்டித்தனம் என தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்தவர் ரோஸா. முதலாளித்துவத்திற்கு ஏற்படும் நெருக்கடியை சோசலிசத்திறகான புரட்சியாக தொழிலாளி வர்க்கம் தலைமையேற்று மாற்ற வேண்டும் என்பதை நம்பியவர் ரோஸா. அவர் ஜெர்மன் ஜனநாயகக் கட்சியில் இருந்தபோது அவர் அடைந்த அனுபவங்கள் அனைத்தும் மிகக் கசப்பானவை. சோசலிசம் பேசிக் கொண்டிருந்த சமூக ஜனநாயகக் கட்சிகள் அனைத்துமே ஏகாதிபத்திய ஆதரவுக் கட்சிகளாக மாறிக் கொண்டிருந்தன. இன்னும் கபடத்தனமாக ஜெர்மன் மொழிலாளிவர்க்கம் ராணுவச் சீருடையணிந்து தனிமையிலிருந்த ரஷய்ப் புரட்சிக்கு எதிராகவும் திருபப்பட்டது.

ஏகாதிபத்தியங்களுக்கு ஆதரவாக தொழிலாளர்கள் ஒருவரையொருவர் வெறுக்கவும் கொலை செய்யவும் துணிந்தனர். அவர் எச்சரிக்கை கொண்டிருந்த காட்டுமிராண்டித்தனம், இட்லர் காலத்தில் ஜெர்மனியில் வந்தது. புத்தகங்கள் எரிக்கப்பட்டன. எழுத்தாளர்களும் கலைஞர்களும் தூககிலிடப்பட்டார்கள். கம்யூனிஸ்ட்டுகள் வேட்டையாடிக் கொல்லப்பட்டார்கள். யூதர்கள் லட்சக்கணக்கில் உயிரோடு எரிக்கப்பட்டார்கள். இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை ஆரம்ப ஆண்டுகளிலேயே முன்னுனர்ந்திருந்தார் ரோஸா.

ரோஸாவின் மந்திர வாக்கியமொன்றுண்டு. அது என்றென்றைக்கும் பொருத்தமானதுதான். ‘சுதந்திரம் என்பது எப்போதுமே முழுமையாக வேறுபட்டு சிந்திக்கிறவனுக்குத் தரப்படும் சுதந்திரம் தான்’.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்