/* up Facebook

Oct 21, 2014

ஸர்மிளா ஸெய்யித்தின் உம்மத் - யமுனா ராஜேந்திரன்


முழுமையான நாவல் வாசிப்பென்பது சமநேரத்தில் பல்வேறு அடுக்குகளிலான சிந்தனையுடன் அந்நாவல் சுட்டும் புனைவுலகினுள் பயணம் செய்வதாகும்.

தொடர்பாடல் எனும் வகையில் வாசகனோடு கொள்ளும் உறவில் நாவலின் சொல்முறை இணக்கமாக இருக்கிறதா எனக் காண்பது ஒரு அணுகுமுறை. வட்டார வழக்கு நாவல்களில் பின்குறிப்பாகச் சொற்பட்டியலில் வட்டார வழக்குகளுக்கு விளக்கம் தராதுவிட்டால் நாவலின் சொல்முறையில் முழுமையாகத் தோய்வது பல சமயங்களில் இயலாதுபோய்விடுகிறது.

மாறாக, கதை சொல்லியின் விவரணங்களில் தமிழகம் ஈழம் புகலிடம் என அனைத்துத் தமிழருக்குமான மொழியைக் கண்டடைந்து, பாத்திரங்களுக்கு இடையிலான உரையாடலில் குறிப்பிட்ட மதம் மற்றும் வட்டார மாந்தர்களின் வழக்கு மொழியைக் கொண்டிருப்பது உம்மத் நாவலில் இயங்கும் மாந்தரின் ஆதாரத்தன்மை, நாவலின் வாசிப்புத்தன்மை என இரண்டையும் உறுதி செய்து கொள்கிறது. இந்த வகையிலான இலகுவான தொடர்பாடல் மொழிநடை ஸர்மிளா சயித்தின் உம்மத் நாவலில் அவருக்கு இயல்பாகக் கூடி வந்திருக்கிறது.

உம்மத் எழுதி இரண்டாண்டு கழித்து நூல்வடிவம் பெற்றிருக்கிறது என்பதைக் குறித்துக் கொள்வோமானால், நாவல் 2009 மே 18 இற்குக் பிற்பட்ட கால அனுபவத்தை 2012 ஆம் காலம் வரை எடுத்துக் கொள்கிறது எனும் புரிதலுக்கு நாம் வரமுடியும். உடனடி பின்முள்ளிவாய்க்கால் அனுபவங்களே நாவலின் பின்னணியாக அமைகின்றது. பின் முள்ளிவாய்க்கால் அனுபவங்களை, அவலங்களை முன்வைத்து நாவலாசிரியராக ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டம் தொடர்பாகத் திட்டவட்டமான கருத்துக்களை ஸர்மிளா ஸெய்யித் நாவலின் முன்னுரையில் முன்வைக்கிறார். நாவலைத் தொடர்ந்து வாசிக்கிறபோது இந்த அரசியல் சட்டகத்தினுள்தான் நாவல் தொழிற்படுகிறது என்பதையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

“சமூகத்தை மாற்ற முற்படுகிற சக்திகள் மக்களின் பொதுச் சிந்தனையை மழுங்கடிக்கின்றன. இலக்கற்ற கொஞ்சமும் அறநெறியில்லாத சிந்தனைகளை மக்களிடத்தே திணிப்பதில் இயக்கங்கள் எளிமையாக வெற்றியடைந்தே வருகின்றன.

தனிமனித சுயஇலக்குகள், இச்சைகள் சமூகத்தின் நோக்கையே மாற்றிவிடுவதுடன் தூரநோக்கற்ற செம்மையற்ற சித்தாத்தாங்களும் இடைவெளிகள் நிரம்பிய போராட்டக் குழுக்களும் பொதுஜன இயல்பு வாழ்வில் ஏற்படுத்துகிற தாக்கங்கள் பல்வேறு கோணங்களில் மனதையும் உடலையும் வருத்தக்கூடியன. ஈழப் போராட்ட அனுபவத்திலிருந்து கிடைக்கக் கூடிய பாடமென்பது இதுதான்.

….தேசிய விடுதலைப் போராட்டம் ஏதோ ஒரு நிலையில் முடியக்கூடியது. வெற்றியை-விடுதலையை மட்டுமே இலக்காகக் கொண்டு இயங்கும் குழுக்களின் இலக்குகள் சிதைந்துவிடுவதும், சிறுகணமும் சிந்தித்துப் பார்க்காத இழப்புகளுடன் தோல்வியைச் சந்திக்க நேர்வதும் யதார்த்தமானதே….” (பக்கம் : 10 : முன்னுரையில் ஸர்மிளா ஸெய்யித்)

நாவலில் கதைசொல்லியின் பிரதியாகச் செயல்படும் பாத்திரம் என நாம் தவக்குலைக் குறிப்பிட முடியும். இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஏறாவூரைச் சேர்ந்த தவக்குலின் பார்வையில்தான் நாவல் நகர்கிறது. செயற்கைக்கால் பொறுத்தப்பட்ட முன்னாள் போராளிப் பெண்களான தெய்வானை மற்றும் யோகா போன்றவர்களின் அனுபவங்களை இணைப்பவராக, இவர்களது பாடுகளை அரசுசாரா நிறுவனத்தின் செயல்பாடுகளுடன் இணைப்பவராக, தான் எதிர்கொள்ளும் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிரான தனது அனுபவங்களைச் சொல்பவராக, நாவலின் சம்பவங்களையும் பிரச்சினைகளiயும் தீர்வுகளையும் இணைப்பவராக நாவலெங்கும் விரவிநிற்பவர் தவக்குல் கதாபாத்திரம்தான்.

தவக்குலுக்குக் குறிப்பிட்ட விடுதலை இயக்கத்தின் மீது கடுமையான விமர்சனம் கொள்ளக் காரணங்கள் உண்டு. தமது சமூகம் சார்ந்த மக்களை இனச்சுத்திகரிப்பை ஒத்த நடவடிக்கைக்கு உட்படுத்தி யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றியவர்கள் அவர்கள்தான். இதுவன்றி தான் இன்று தன்னை ஆத்மார்த்தமாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் பெண்கள் மறுவாழ்வுக்குக் காத்திருக்கும் ஊனமுற்ற தமிழ்ப் போராளிப் பெண்களின் இத்தனை அவலத்திற்கும் காரணம் குறிப்பிட்ட போராளி இயக்கம் எனவே கருதுகிறார் தவக்குல்.

தவக்குலின் பார்வையில் தமிழர்களின் போராட்டம் குறித்து அவர் திட்டவட்டமாகச் சொல்கிறார். பிரச்சினைக்குச் சாத்தியமான தீர்வையும் அவர் கொண்டிருக்கிறார்.

“தனிஈழக் கோட்பாட்டை முன்வைத்துப் போராடிய இயக்கம், தங்கள் நியாயத்தை, பலத்தை நிரூபிக்க அநியாயமாக ஈவிரக்கமேயில்லாமல் மனிதாபிமானமேயில்லாமல் திட்டமிட்டு மக்களைக் கொன்று குவித்தனர். இதையேதான் அரசாங்கமும் செய்தது. மக்களின் உரிமைகள் அபிலாஷைகள் அடங்கிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாதிருக்கும்வரை இறுதிப்போர் இராணுவத்துக்குக் கிடைத்த வெற்றி என்று கொள்ள முடியுமே தவிர சிறுபான்மையினருக்கும் ஜனநாயகத்திற்குமான வெற்றியாகவோ அமைதியாகவோ கொள்ள முடியாதென்ற உறுதியான நிலைப்பாட்டையே தவக்குல் கொண்டிருந்தாள்” (பக்கம் : 176)

“இருதரப்புமே தனிப்பட்ட நோக்கங்களுக்காக, ஏகாதிபத்திய அதிகாரங்களை நிரூபிப்பதற்காக நடத்திக் கொண்டதொரு போராட்டத்தில் மக்கள் சாகடிக்கப்பட்டனர்” (பக்கம் : 177)

“போராளிகள் பாவம். சமூக அங்கீகாரம் இல்லாமல் எவ்வளவு கஷ்டப்படுகினம் தெரியுமே.. பெத்த தாய், அக்காவே இப்படி நடத்திறது கொடுமையல்லே.. இதுக்கு நாம என்ன செய்ய ஏலும்.. வெளியே வந்தா ஏதாச்சும் உதவிக்கு வழி பார்க்க ஏலும்.. வீட்டுக்குள்ளே இருக்கிறவுக்கு நாம என்ன செய்யக் கிடக்கு..எல்லாம் இந்த இயக்கம் செஞ்ச வேல.. உணர்ச்சிவசமாப் பேசி மக்கள திசைதிருப்பியற்குப் பதிலா உருப்படியான ஒரு சமூகத்தைக் கட்டமைச்சிருக்கலாம். படிப்பிலயும் பொது அரசியலிலயும் ஈடுபடறதுக்கு ஊக்குவிச்சிருக்கலாம்” (பக்கம் : 219)

தவக்குலின் பார்வையில் வெளிப்படும் இந்த அரசியல் ஈழப் போராளிப் பெண்களான தெய்வானை மற்றும் யோகா போன்றவர்களுக்கும் ஊடுறவிச் செல்கிறது. தவக்குல் அறிந்தபடி தெய்வானையின் போராட்ட அனுபவங்கள் இரு வேறுபட்ட பார்வைகளைக் கொண்டிருக்கிறது. அவரது உளவியல் இந்த இரு வேறுபட்ட அனுபவங்களினால்தான் உருவாகியிருக்கிறது. பின்வருவது தெய்வாணையின் இருவேறு மனநிலைகள்.

“வண்புணர்ச்சி எனும் வார்த்தையைத்தானும் தன வாழ்நளில் முன்புகேட்டிராத தெய்வானை இராணுவத்தின் பாலியல் வன்புணர்வுக்குப் பெண்கள் மோசமாக ஆளாகியதில் மிக மோசமாக அதிர்ந்தாள்” (பக்கம் : 100).

“ஓரு விஷயத்த உண்மையா அறியவேண்டுமென்டால் அதின்ட எல்லாப் பக்கத்தையும் எல்லாத் தொடர்புகளையும் ஆராயணும். முழுசாச் செய்ய முடியாதெண்டாலும் முயற்சிக்கணும். நான் தவறு செஞ்சிட்டன். சமூக விடுதலை என்ற பேரில் மக்களைக் கொண்டொழிக்கிற இயக்கத்தில நானிருக்கிறன். காட்டைப் பார்க்காமல் மரத்தைப் பார்த்து இதுக்குள்ள வந்து விழுந்திட்டன். அவையளும் பொதுமக்களைக் கொல்லினம் இவையளும் அதைத்தான் செய்யினம் என்டால், இதுண்ட அர்த்தம் என்ன… ” (பக்கம் : 104)

போரில் கால் இழந்த இன்னொரு போராளிப் பெண்ணான யோகா குறித்த நாவலின் சித்தரிப்பு என்பது அவரது குடும்பத்தவர்களால் அவள் அடையும் துன்பத்தைச் சொல்கிறது. பிறிதொரு மட்டத்தில் போராளிகளின் இருப்பிடம், அங்கு நிலவிய தோழமை என்பன குறித்த அவளது பார்வையிலான உன்னதச் சித்திரத்தைத் தருகிறது. இயக்கத்தின் நடைமுறை மற்றும் அரசியல் மீது அவளது அனுபவத்தில் குற்றச்சாட்டுக்கள் ஏதும் இல்லை.

ஆனால், அவள் தனது அனுபவத்திற்கு அப்பால் இயக்கத்தின் மீதான பாரதூரமான குற்றச்சாட்டு ஒன்றினை, செவிவழி கேட்டதைப் பதிவு செய்கிறாள். யோகாவின் பார்வையில் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்த நாட்களின் அனுபவமொன்று பின்வருவது : யோகாவின் போராளித் தோழிகள் மலர்விழி மற்றும் யமுனா என இரு பெண் போராளிகள் இடையிலான உரையாடல் இது. இதனை யோகா செவிமடுக்கிறாள்.

“ரசாயன ஆயுதமே..அது தடை செய்யப்பட்டதல்லே.. அத யார் பாவிப்பினம்… நாமே… சிறிலங்கா இராணுவமே..”

” மக்களைக் கொன்றொழிக்கிற ரசாயன ஆயுதங்களை ஆர் பாவிக்கினமோ, யார் பாவிச்சாலும் போர்க்குற்றம். சாதாரண மக்களில் யுத்தத்தை இப்பிடித் திணிக்கிறது பிசகான காரியம்” (பக்கம் :154)

இங்கு யோகாவின் அனுபவத்தினுள் மலர்விழி மற்றும் யமுனா என இரு போராளித் தோழிகளைக் கொணர்வது கதைசொல்லி என்பது தெளிவு. இயக்கம் பற்றின உன்னதமான வாழ்ந்து பெற்ற அனுபவம் கொண்டிருந்த யோகாவும் இப்போது போராட்டத்தின் தார்மீகம் குறித்த கேள்விகளுக்கு ஆட்பட்டுவிடுகிறாள். போராளிகள் தரப்பிலிருந்து இவ்வகையிலான உரையாடல்கள் இருந்ததற்கான சான்றுகள் இல்லை என்பது ஒருபுறமிருக்கு இத்தகைய ரசாயனக் குண்டுகளைப் பாவித்தவர்கள் அரசு தரப்பினர் என்ற குற்றச்சாட்டுத்தான் சேவை அமைப்பினரால் சொல்லப்பட்டிருக்கிறதே ஒழிய போராளிகள் ரசாயனக் குண்டு போட்டார்கள் என்பதனை எந்தத் தரப்புமே சொல்லியிருக்கவில்லை. இந்த உரையாடல் ஒரு இட்டுக்கட்டபட்ட உரையாடலாகவே நாவலுக்குள் இருக்கிறது.

இவ்வாறு நாவலுக்கு புறமும் உள்ளுமாக போராட்டமும் இயக்கமும் குறித்த ஒரு எதிர்மறையான பொதுஅபிப்பிராயத்தை பாத்திரங்களாகத் தெய்வாணையும் தவக்குலும் யோகாவும் கூட உருவாக்குகிறார்கள். இலங்கை அரசு நிறுவனம், இலங்கை ராணுவம் என அல்லாமல் அரசு சாரா நிறுவன அரசியலும் இணக்கம் எனும் பெயரில் இதனைத்தான் முன்வைக்கிறது. தவக்குலும் போராட்டம் குறித்த இதே பார்வையைத்தான் கொண்டிருக்கிறார்.

நிஜத்தில் தமிழர் போராட்டம் தோன்றியதற்கான காரணத்தை, அது ஆயுதப் போராட்டமாகப் பரிமாணம் பெற்றதனை ஒரு குறிப்பிட்ட இயக்கத்தின் அரசியலாகவோ அது மக்களின் மீது திணிக்கப்பட்ட ஒரு போராட்டமாகவோ கொள்ள முடியாது. ஈழத்தின் ஆயுதவிடுதலையை முன்னெடுத்தவை பத்துக்கும் மேலான இயக்கங்கள். அவற்றுக்கு மக்களின் ஒப்புதலும் இருந்தன. அந்த ஒப்புதலுக்குப் பின்னாக வலுவான காரணங்கள் அன்றும் இருந்தன. இன்றும் இருக்கின்றன. இன்னும் கல்வி கற்பதனாலோ அல்லது தேர்தலில் ஈடுபடுவதனாலோ தீர்த்துவிடக்கூடிய பிரச்சினையாக அன்றும் அது இருக்கவில்லை. இன்றும் அவ்வாறன தீர்வு சாத்தியம் இல்லை.

போராட்டத்தின் தோல்விக்கான காரணங்கள் அது திணிக்கப்பட்டதால் நேர்ந்ததோ, தனித்து இயக்கம் விட்ட அரசியல் பிழைகளால் மட்டுமோ நேர்ந்தவை அல்ல. எழுபதுகளில் இருந்த உலகம் இரண்டாயிரத்தில் முற்றிலுமாக மாறிப்போயிருந்தது. ஈழ அரசியல் வெளிச்சக்திகளால் தீர்மானிக்கபட்டதாக ஆகியது. இவ்வாறான அகண்ட அரசியல் பின்னணிகளை வெறுமனே ஒரெயொரு குறிப்பிட்ட இயக்கத்தின் மீது குற்றங்களையும் வெறுப்பையும் சுமத்துவதால் புரிந்துகொள்ள முடிவது இல்லை.

நாவலில் போருக்குப் பின்னான சமூகத்தில் வாழநேர்ந்த மூன்று வகையான பெண்களது தோழமையும சகோதரத்துவ உணர்வும் சொல்லப்படுகிறது. நாவலின் வலிமை என்பது மதங்களை ஊடறுத்துச் செல்லும் இந்தப் பெண் சகோதரத்துவ உணர்வு அற்புதமாக வெளிப்பட்டிருப்பதுதான. நாவலில் ஓவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு விரிவான கதை இருக்கிறது. குடும்பத்தினால் கைவிடப்படும் சிறுமியான யோகா தற்கொலை விருப்ப உணர்வைக் காவித்திரிகிறாள். அதனது நீட்சியாகவே அவள் இயக்கத்தில் சேர்கிறாள். அங்கு அவள் சாதுரியன் என ஒரு காதலனையும் கண்டடைகிறாள். காலை இழக்கும் அவள் உறவினரால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுத் தன்னை எரியூட்டி மாய்த்துக் கொள்கிறாள். காதலன் களத்தில் மரணமடைகிறான்.

இன்னொரு பெண்ணான தெய்வாணை 2003 சமாதான உடன்படிக்கையை அடுத்து விடுமுறைக்கு வீடு திரும்புபவள் சிங்கள ராணுவத்தினன் மீது காதல் கொண்டு போராட்ட்த்தற்குத் திரும்பாது விடுகிறாள். அவளது காதலன் சமிந்த குண்டுவெடிப்பில் மரணமுறுகிறான். அவளது காதல் சித்தரிக்கப்பட்ட விதம் நாவலின் மிகப் பெரும் முரண்களில் ஒன்று. தெய்வாணைக்கு இருவிதமான அனுபவங்கள் உண்டு. சிங்கள ராணவத்தினரின் தமிழ்ப் பெண்களின் மீதான வண்புணர்வைக் கண்டு அதிர்ச்சிக்கு உள்ளானவள் அவள். அதே வேளை சாதாரண சிங்கள மக்களைக் கொல்லும் இயக்கத்தின் நடவடிக்கையில் அதிருப்தி கொண்டவள். இயக்கத்தை மறுக்கக் காரணங்கள் கொண்ட அவளது உளவியலில் ஒரு சிங்கள் ராணுவத்தினன் மீது காதலில் வீழும்போது அவன் சார்ந்த அமைப்பு புரிந்த, தான் அதிர்ந்த, வண்புணர்வுகள் ஒரு உறுத்தலாகக் கூட அவளது சிந்தைக்குள் வந்துபோகவில்லை என்பது நாவலின் பாத்திரச் சித்தரிப்பில் மிகப்பெரும் முரண்.

தமிழ் சினிமாக் காதல் போலக் கண்டதும் காதல் வகையாகவே அந்தக் காதல் இருக்கிறது. ஓரு வகையில் அவளுக்கே அது ஒப்பமுடியாததாக இருப்பதனால்தான் தனக்குள்தானே அவள் காரணங்களையும் கற்பித்துக் கொள்கிறாள். கதைசொல்லியின் மிகப் பலவீனமான ஒரு உறவுச் சித்தரிப்பாக இது இருக்கிறது. தனது காதல் குறித்து தெய்வாணை சொல்கிறாள் பாருங்கள்:

“பல்லாயிரம் உயிர்களும், பலகோடி சொத்துக்களும், அழிவதற்கு ஏதுவான யுத்தத்தின் தோற்றுவாயாக அமைந்த மொழிதான் அவர்களது காதலினிடையேயும் இடையீடு செய்தது. என்னென்னமோ பேசத் தோன்றியபோதும், எதையுமே பேசவிடாமல் மொழிதடைசெய்தது” (பக்கம்: 381)

“சமாதான உடன்படிக்கை அமுலில் இருந்த காலத்தில் விடுமுறையில் ஊருக்குத் திரும்பியவள் திரும்பிச் செல்லாமல் இருந்ததற்குச் சமிந்தாவின் மீதான காதலும் காரணம் அல்லாமலா? காதல்தான் அவளைக் கட்டிப்போட்டது. இயக்கத்தின் கட்டுப்பாடுகள் விதிகளை மீறச்செய்தது. தகர்த்தெறிந்தது” (பக்கம் : 383).

“போர்க்கால இலக்கியங்களும் போர்க்காலத் தொலைக்காட்சி நாடகங்களும் காண்பிக்கிற சிங்கள ஆணுக்கும் தமிழ்ப் பெண்ணுக்குமான காதல் போலக் கட்டுக்கதையில்லை இதென்று தெய்வானை துணிந்து நம்பினாள். இருவேறு இனத்தவர்களின் காதலும் திருமணமும் போரை முழுவதும் முடிவுக்குக் கொண்டுவந்து சமாதானப் புறாக்களைப் பறக்கவிடும் என்றே பல போர்க்கால இலக்கியங்கள் கூற முற்பட்டிருக்கின்றன. பல தொலைக்காட்சி நாடகங்கள் அப்படியாகத்தான் காண்பித்தன. ஆழக்கால் பதித்திருந்த குரோதத்தையும் வன்மத்தையும் காதல் எடுத்தெறிந்துவிட்டதாகவும் மனம் இப்போது சுதந்திரம் பெற்றுவிட்டதையும் புரிந்து கொண்டிருந்தாள் தெய்வானை” (பக்கம் : 384)

இந்த இடத்தில் தமிழ்ப் பெண்களின் மீது இலங்கை ராணுவத்தினரது வண்புணர்வு என்பதன் தொடர்விளைவுகளைத் தமிழ்ப் பெண்களின் பார்வையில் உக்கிரமாகச் சித்தரித்த சிங்களக் கலைஞர்களான ஹந்தகமாவின் ‘இது எனது சந்திரன்’ மற்றும் பிரசன்ன விதானகேயின் ‘பிறகு’ போன்ற திரைப்படங்கள் எனக்குள் வந்து போகின்றன.

தவக்குலின் வாழ்வு மிகுந்த துயரும் வன்முறையும் சூழந்தது. சுபியான் எனும் ஆணாதிக்கவாதியிடமிருந்து மீளும் அவளை அவள் நம்பிய அரசுசாரா நிறுவனம் கைவிடுகிறது. அவள் இறுதிவரை சளையாது எதிர்த்துப் போராடிய இஸ்லாமிய அடிப்படைவாதம் அவளது தந்தையின் உயிரைக் காவு கொள்கிறது. அடிப்படைவாதம், அரசின் உளவுத்துறை இரண்டும் அவளை நாட்டைவிட்டே துரத்துகிறது. அவளது நேபாள மனித உரிமை நண்பன் சுவாசும் அவளது மனைவியும் அவளை நோபாளத்துக்கு அழைத்துக் கொள்கிறார்கள். தலிபானிய எதிர்ப்பு மனநிலை, போராட்டம் குறித்த எதிர்மை என இரண்டு பண்புகளும் கொண்ட இந்நாவல், இறுதியில் தவக்குலின் இலங்கையிலிருந்தான வெளியேற்றத்தை முன்வைத்து முடிகிறது. துருதிருஷ்டவசமாக இந்த வெளியேற்றத்தை தமிழ் ஆயுதப் போராட்டத்திற்கு வழங்க நாவல் தயங்கிநிற்கிறது. மட்டுமன்று இணக்கத்திற்கான அவாவை அது திரும்பத்திரும்ப உற்பத்தி செய்தபடியே இருக்கிறது. ஈழப் போராட்டமும் தமிழ் மக்களது பிரச்சினைக்கான தீர்வும் குறித்து தவக்குல் கொண்டிருந்த நம்பிக்கைகளுக்கு எதிரான சான்றுகளுடன் ஈழப்பிரச்சினை போர் முடிவுற்றதின் பின்பான ஐந்து ஆண்டுகளின் பின்னும் இன்றும் கனன்று கொண்டே இருக்கிறது.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்