/* up Facebook

Oct 1, 2014

நான்! பாலற்ற ஒருவனின் குரல்: விக்ரம் - தமிழில் ஆர்த்தி வேந்தன்


விக்ரம், பால் அற்ற தன்மையை நம்பும் ஒருவர். நிறங்கள் என்னும் LGBT அமைப்பில் பணியாற்றும் அவருடைய ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் மொழி பெயர்ப்பு இது.

இந்த பிரதியில், என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களையும் ஒவ்வொரு தனிமனிதனுக்குமான அடிப்படை மனித உரிமை என்று நான் கருதும் சிலவற்றையும், எப்போதும் போல் பெரும்பான்மை சமூகமும் ஒரு சில LGBT அமைப்புகளும் கூட இது “சிறுபான்மையிலும் சிறுபான்மை” என்று சொல்லிப் புறக்கணிக்கும் விடயங்களையும் பேச முடிவு செய்துள்ளேன்.

நான் பிறந்த நாளில் என்னை சுற்றி இருந்த அனைவரும் என் வருகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். ஆனால் இன்று என் பிறந்த தினத்தைப் பின்நோக்கிப் பார்த்தால் குழந்தையான என்னைச் சுற்றியிருந்த சொந்தம் அனைவரும் என் தனிப்பட்ட பாகங்கள் மீது தேவையில்லாத கவலை கொண்டனர் என்பதை உறுதியாக சொல்ல முடியும். இன்னும் தெளிவாகக் கூறவேண்டுமானால் “குழந்தை ஆணா, பெண்ணா? என்ற கேள்வி பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைப் பிறப்புப் பற்றி பேசும் பொது சமூகத்திற்கு எழும் பொதுவான ஒன்றுதான் ஆயினும் அந்த கேள்விக்கான பதிலின் அடிப்படையில் நான் எப்படி வாழ வேண்டும் என்பதை முடிவு செய்யக்கூடாது என்று நினைக்கிறேன். இந்த கேள்வியும் இந்த கேள்விக்கான பதிலிலும் எந்த பிரச்சனையும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இந்த கேள்விகளுடன் தொடர்புடைய பொதுவான உணர்வுகள் தான் எனக்கு விந்தையாக இருக்கின்றது. பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும் எங்களுக்கு சமமான மகிழ்ச்சிதான் என்று பெருமையாக சொல்லும் இக்கால பெற்றோர்களும் கூட தன் குழந்தை ஆணும் இல்லை பெண்ணும் இல்லை என்பதை உடனடியாக ஏற்று கொள்ள மாட்டார்கள் என்பது பொதுவான நிதர்சனம். அதிர்ஷ்டவசமாகவோ அல்லது துரதிஷ்டவசமாகவோ அந்த மருத்துவர் என்னை ‘ஆண்’ என்று உறுதி செய்தார். அதனால் என் பாலினத்தில் (biological sex) எந்த குழப்பமும் இல்லை, ‘நல்ல’ ஆணாக வளர்வேன் என்று பெற்றோர்களும், உறவினர்களும் நம்பினர்

மாற்று பாலினத்தவர் அல்லது திருநங்கைகள் என்று பொது சமுகத்தால் சொல்லப்படும் மனிதர்களின் உடலியல், உளவியல் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து என் பிரச்சினை கொஞ்சம் வேறுபட்டது. நினைவு தெரிந்த நாளிலிருந்து, சரியாக எப்போதென்று  நினைவில் இல்லை, என்னால் ஒரு விடயத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. ஏன், உடலில் சில இருக்கும் உறுப்புகளை வைத்தோ அல்லது இல்லாததை வைத்தோ வாழ்க்கையின் பெரும்பாலான செயல்கள் முடிவு செய்யப்படுகிறது? அந்த உறுப்புகளுக்கும் நம் செயல்களுக்கும் எந்த தொடர்பும் இல்லாத போதிலும்?

பிறப்பின் போது இனப்பெருக்க உறுப்பு என்ன என்பதைப் பதிவு செய்வது அவசியமாக இருக்கலாம், ஏனென்றால் எல்லாக் குழந்தைக்கும் அது ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஆனால் அதன் அடிப்படையில் ஒரு குழந்தைக்கு குறிப்பிட்ட விதத்தில் மட்டும் ஆடைகள் அனிவிப்பது, குறிப்பிட்ட வகையான பொம்மைகளை மட்டும் தருவதன் அவசியம் எனக்கு புரியவில்லை. ஆண், பெண் என்பதை உறுதி செய்யும் அந்த உறுப்பைக் கொண்டு பொம்மைகள் செயல்படப் போவதில்லை. பிறகு ஏன் ஆணுக்கான பொம்மை, பெண்ணுக்கான பொம்மை என்று தரம் பிரிக்கிறோம்?

யோசித்து பாருங்கள், ஒரு வேளை இந்தச் சமுகம் ரத்தப் பிரிவை முக்கியமான ஒன்றாக கருதி, ‘அ’ ரத்த பிரிவை கொண்ட எல்லா குழந்தைகளும் சிவப்பு வண்ண ஆடையும் ‘ஆ’ ரத்த பிரிவு கொண்ட குழந்தைகள் எல்லாம் நீல வண்ண ஆடையும் அணிய வேண்டும் என்று சொன்னால் நீங்கள் அதை அபத்தமாக நினைப்பீர்கள். ஆனால் என்னால் இதை பல சூழ்நிலைகளில், தர்க்க ரீதியில் விவாதிக்க முடியும். இனப்பெருக்க உறுப்பின் அடிப்படையில் பிரிவுபடுத்துதலைக் காட்டிலும் ரத்தப் பிரிவை கொண்டு பிரிவுபடுத்துதல் அர்த்தமுள்ளதாக தெரிகிறது. உதாரனத்திற்கு, பெரும்பாலான சமூக சூழ்நிலையில், யார் ஒருவருக்கும் இன்னொருவரின் பாலினத்தை பற்றி கவலைகொள்ள எந்த ஒரு முறையான காரணங்களும் இல்லை. வங்கியில் வேலை செய்யும் ஒருவருக்கு அவரின் எந்த அலுவலக வேலையையும், பாலினத்தை உறுதி செய்யும் உறுப்பை கொண்டு செய்ய போவதில்லை. அதே நேரம் யாரவது விபத்தில் சிக்கினால் அவருக்கு எந்த உறுப்பு இருக்கிறது என்ற தகவலை விட எந்த ரத்த பிரிவு இருக்கிறது என்ற தகவல் உபயோகமானதாக இருக்கும். ஏன் நம்மில் யாருக்கும் பெயரை வைத்துக் குருதியின் பிரிவைச் சொல்ல முடிவதில்லை.  ஆனால் எளிதில் பாலினத்தை அடையாளப்படுத்துகிறோம்?

இது ஒரு கற்பனையான கேள்வி தான். பிறந்த சூழ்நிலை, இனம், நிறம், சாதி என்று பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் மனிதர்களின் வாழ்க்கை கட்டமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையிலே நடத்தப்படுகிறார்கள் (குறிப்பாக இந்தியாவில்).  சில வேலைகளில் இந்தப் பிரிவுகள் தவறானவை என்பதை ஒப்புக்கொள்கிறோம். ஆனால் ஒரு சமூகமாக உலக அளவில், குழந்தையை பாலினத்தை கொண்டு அடையாளப்படுத்துவதன் விளைவுகளை நாம் உள்முக நோக்குடன் பார்ப்பதில்லை. பள்ளி காலங்களின் ஆரம்ப நாட்களில் என் ஆசிரியர்கள்,“நான் மற்ற பசங்களிடம் கூடிப் பழகாமல் தனித்து இருக்கிறேன்” என்ற புகாரை என் பெற்றோர்களிடம் முன்வைத்தனர். அவர்கள் பயன்படுத்திய மொழியிலிருந்து நான் ஒரு “ஆண்” என்று அவர்கள் முடிவு செய்துள்ளனர் என்பதையும் அதனால் மற்ற “ஆண்” மாணவர்களிடம் பேசி பழக முடியாமல் ஒதுங்கி நிற்கும் என் தன்மை அவர்களுக்கு விந்தையாக இருந்திருக்கிறது என்பதையும் இந்த தருணத்தில் உணர முடிகிறது. எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது, பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்டிருக்கும் விளையாட்டுகள் மீதே எனக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது. வலுக்கட்டாயமாய் என் மீது தினிக்கப்படும் “ஆண்” விளையாட்டுக்களின் மீது எனக்கு விருப்பம் இல்லை. எனக்குப் பெண்ணாக மாறவும் விருப்பமில்லை அதே நேரம் நான் ஆணும் இல்லை. ஏன் ஒரு குழந்தை ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருக்க வேண்டும் என்று எனக்கு புரியவில்லை.

நான் ஒரு ‘அற்புதமான’ குழந்தையாக மட்டுமே இருக்க ஆசைப்பட்டேன். “பையனாகவோ” “பிள்ளையாகவோ”அல்ல. ஆனால் இதை இந்த சமூகம் அதனை ஒத்துக்கொள்ளாது. எதார்த்தத்தில் நிறையப் பிரச்சனைகள் உண்டு. அதிர்ஷ்டவசமாக நான் இருபாலினப் பள்ளியில் பயின்றேன். என் பெற்றோர்கள் முற்போக்குச் சிந்தனையாளர்களாக இருந்தனர். இருப்பினும் பாலினம் குறித்த என் சிந்தனைகளை ஏற்பது அவர்களுக்குச் சவாலாகத்தான் இருந்தது. எப்போதும் பையன்களும், பிள்ளைகளும் தனித்தனியாகவே அமர்ந்தாலும், சில சமயங்களில் படிப்பதற்காகவும் மற்ற சில வேலைகளுக்காகவும் பெண்களுடன் அமர அனுமதிக்கப்பட்டேன். நான் பெண்களைக் ‘கவர’ முயற்சி செய்வதாக நினைத்து எனக்கு சில பிரச்சனைகளை தந்தனர். உண்மையில் எங்களுக்குள் இருக்கும் பொதுவான ஆர்வங்களைத்தான் ஆராய்ந்து கொண்டிருந்தேன். எனக்கு மிக பெரிய சவாலாக இருந்தது விளையாட்டு. விளையாட்டுப் பயிற்சி வகுப்பில் ஆண், பெண் தனியாகப் பிரிக்கபடுவது மட்டுமல்ல. என் மீது சுமத்தப்பட்ட ஆண் பால் அடையாளம் காரணமாய் நான் உடல் வலிமையை அதிகம் பயன்படுத்தும் ஆக்ரோசமான விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும் என்று என் சகாக்களும், விளையாட்டு ஆசிரியர்களும் எதிர்பார்த்தனர். சில சமயங்களில் பெண்களை விட ஆண்களுக்கு அதிகமாக உடல் வலிமை இருக்கலாம். ஆனால் ஆண் என்ற அடையாளம் இருப்பதற்காக மட்டும் வலிமையான விளையாட்டுகளில் நான் பங்கேற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் இருக்கும் பகுத்தறிவு எனக்கு புரியவில்லை. என்னால் பெண்களுடனும் சேர்ந்து கொள்ள முடியவில்லை. ஏனென்றால் அது அவர்களுக்கு செளகரியமாக இருக்கவில்லை. ஆசிரியர்களும் நான் பெண்களுடன் பழகுவதை விரும்பவில்லை. ஆனால் என்னை போன்ற ஒரு “பையன்” எதோ ஒரு காரணத்துக்காய் அவர்கள் எதிபார்க்கும் வலிமையான உடல் பலத்தை வெளிப்படுத்தாத காரணத்தினால் ‘பலவீன்மானவன்’ ‘பொட்டை’ என்றும் முத்திரை குத்தினர். இது எங்கள் ஆர்வத்தை மட்டுபடுத்தி முழுமையாக குலைக்கச் செய்வது மட்டுமல்ல, பெண்களையும் அவமதிக்கும் ஒன்றாகும். ‘பொட்டை’ என்று அழைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே “பையன்கள்” எதை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்வதற்குத் தயாராக இருந்தனர். விளையாட்டில் பையன்களை ஆர்வம் செலுத்த வைப்பதற்கு இதை ஒரு நல்ல வழியாக விளையாட்டுஆசிரியர் கருதினார். மற்ற ஆண்களிடமிருந்து நான் வித்தியாசமாக இருப்பதில் பெருமை கொண்டேன். அதனால் வேண்டுமென்றே உடல் ரீதியாக வலுவற்றவனாய் நடித்தேன். அதன் விளைவாகப் பள்ளியில் எந்த விளையாட்டிலும் பங்கேற்கவில்லை. ஆனால் என்னை ஒரு பெண்ணாக அடையாளப்படுத்துவதில் எந்த ஆர்வமும் இருந்ததில்லை. சமீப நாட்களில் தான் உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டு, என்னை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள ஜிம், நீச்சல் போன்றவற்றை வழக்கமாக செய்கிறேன்.

நான் உயர்நிலைப் பள்ளியில் படித்து கொண்டிருந்த போது, ஒரு நாள் தென் ஆபிரிக்காவில் இன ஒடுக்குதல்களுக்கு எதிரான போராட்டம் வெற்றி பெற்ற செய்தியை வானொலியில் கேட்டபடி எழுந்தேன். அந்நாட்டில் இனி ஆங்கிலேயர்களுக்கும், ஆபிரிக்கர்களுக்கும் தனிதனியான பூங்கா, பாலம், ரயில்பெட்டிகள் இருக்காது என்பதைக் கேட்க மகிழ்ச்சியாக இருந்தது.நெல்சன் மண்டேலாவின் குரலை கேட்பதற்குக் கிளிர்ச்சியாக இருந்தது. அதற்கு அடுத்த சில நாட்களிலே இந்தியாவில் சாதிப் பிரிவினைகளை எதிர்த்து அம்பேத்கார் போராடியதை நாங்கள் வரலாற்றுப் பாடத்தில் படித்தோம். பல்வேறு சமுகங்கள்‘மானுட சமத்துவத்தை’ அடைந்திருப்பதை நான் பெருமையாக நினைத்துக் கொண்டிருந்த போது தான், இனி ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக மாடிப்படிகளை பயன்படுத்த வேண்டும் என்று பள்ளியின் அறிவிப்பைக் கேட்க நேர்ந்தது. தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.இப்படி ஒரு புதிய வழிமுறையைக் கொண்டு வருவதற்கு எந்தப் பொது காரணமும் இல்லை. ஆனால் கொண்டு வந்தார்கள்.

சில ஆசிரியர்கள் மாணவர்களின் நன்னடத்தையைச் செம்மைபடுத்துவதற்கு இந்த பிரிவினை அவசியம் என்று கருதினர். முதல் தளத்தில் இருக்கும் வகுப்பிற்கு நுழைவதற்கு இரண்டு படிக்கட்டுகள் இருந்தன. இரண்டும் கட்டிடத்தில் இரு மூலையில் இருந்தன. இந்தப் புதிய வழிமுறையால் ஆண், பெண் இருவரும் வகுப்பிற்கு போவதற்கு நீண்ட நேரம் நடக்க வேண்டியிருந்தது. இது வசதியற்ற ஒன்றாக இருந்ததால் பலர் இதை எதிர்த்தனர். ஆனால் எனக்கு இந்தப் புதிய வழிமுறையின் திணிப்பு என் தனிப்பட்ட உரிமையை அத்துமீறுவதாகத் தோன்றியது. மேலே போவதற்கோ அல்லது கீழே வருவதற்காகவோதான் படிகட்டுகளை மாணவர்கள் பயன்படுத்தினர். ஒருவேளை ஏதாவது தனித்த ஒழுங்கற்ற செயல்கள் இருந்தாலும் அதை அவர்கள் தனிப்பட்ட முறையில் கையாண்டிருக்க வேண்டும். என் பள்ளி நிர்வாகிகளின் இந்த திணிப்பு முட்டாள்தனமாக மட்டுமல்ல எனக்கு மனிதத்தன்மையற்ற செயலாகவும் தோன்றியது. இருப்பினும் பொது அறிவுக்கும், அடிப்படை மனித உரிமைக்கும் எதிரான இந்த விக்டோரியன் கால நெறிமுறைகளின் வெற்றியை கண்டு ஒரு குரலற்ற பார்வையாளனாகத்தான் இருந்தேன்.

ஆனால் இப்போது, இதுபோன்ற அறிவற்ற, மனிதத் தன்மையற்ற செயல்களை எதிர்த்து என் குரலை அழுத்தமாக பதிவு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு விதத்தில், எப்போதும் உறுதியாக இருப்பதற்கு கற்றுக் கொண்டு இருக்கிறேன். சமீபத்தில் நான் வேலை செய்த கார்ப்ரேட் நிறுவனத்தில் நான் மற்ற ‘ஆண்களைப்’ போல நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டேன். அப்போதுதான் மற்றவர்களுக்கு பணியிடம் இயல்பாக அல்லது ஆரோக்கியமாக இருக்கும் என்றனர். நான் எவ்வளவு தூரம் இதற்குப் பதில் வினையாற்றினேன் என்று தெரியவில்லை. ஆனால் நான் என்னை எப்படி வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை யாரும் கட்டளையிட அனுமதிக்கவில்லை.
கடந்த சில வருடங்களாக, பால் சிறுபான்மையினருக்கான (LGBTQ) அமைப்புகளில் என்னை இணைத்துக்கொண்டு நான், என் போன்ற ஒத்த கருத்துகள் உடையவர்களுடன் பழகுவதால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இருப்பினும் பாலின சிறுபான்மையினரின் நலனுக்காக செயல்படுவர்கள் கூட பாலற்ற தன்மையைப் (gender fluidity) புரிந்து கொள்ளவோ, ஏற்று கொள்ளவதோ இல்லை. சில சமயம் நான் சந்திக்கும் மனிதர்கள் என்னை ‘கே’ அல்லது ‘திருநங்கை’ என்று அடையாளப்படுத்த முயற்சி செய்கின்றனர். இந்த உலகம் என்னைப் போன்றவர்களை எதாவது ஒரு தெளிவான பாலின அடையாளத்தில் பொருத்தப் பார்க்கிறது. பால் அடையாளம் இங்கு மிக மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. எடுத்துக்காட்டுக்குச் சொல்வதெனில் நாம் பயன்படுத்தும் மொழியில் கூட இரு பால் அடையாளம் மட்டுமே இருக்கிறது. மூன்றாம் பாலுக்கான சொல்லோ மற்ற பால்களுக்கான வார்த்தைகளோ இல்லை.

நான் ஒரு மனிதன், அவ்வுளவுதான். ஏன் மற்றவர்கள் என்னை ‘அவள்’ என்றோ ‘அவன்’ என்றோ வகைப்படுத்த முயல்கின்றனர்? என்னை பொறுத்தவரை பாலினம் என்பது திரவத் தன்மையானது (fluid) அது நேரத்திற்கு ஏற்ப சூழ்நிலைக்கு ஏற்ப மாறக்கூடியது. என் மாற்றுப் பாலின நண்பர்களுக்கு (திருநங்கை, திருநம்பி) அவர்கள் மாறிக்கொண்டிருக்கும் பாலினத்திற்கு மாறுவது எவ்வளவு முக்கியம் என்பது எனக்குப் புரிகிறது. ஆனால் என்னுடைய இலக்கு எந்த ஒரு குறிப்பிட்ட பாலினம் மீதும் இல்லை என்பதை அனைவருக்கும் புரியவைக்க வேண்டும். ஏனெனில் நான் பால் அற்றவன். பாலினத்தின் முக்கியதுவத்தை நாம் கேள்விக்கு உட்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். உதாரணத்திற்கு ஏன் ஆடைகளை ‘பெண்’ ஆடைகள், ‘ஆண்’ ஆடைகள் என்று பிரிவு படுத்துகிறோம்..? வாழ்க்கை பற்றிய என் தேடலும், பாலினம் பற்றிய என் தனிப்பட்ட புரிதலும் எனக்கு ஒன்றை ஆழமாய் கற்று கொடுத்திருக்கின்றன. என் வாழ்வின் குறிக்கோள், இலக்கை சென்றடைவது இல்லை. பயணத்தை மகிழ்வுடன் கடப்பது மட்டும்தான். மற்றவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் என்னை திருப்தி படுத்தும் வகையில், என்னை சிறந்த முறையில் வெளிப்படுத்துவதற்கான வழிகள் மூலம் நான் சொல்வதைச் சொல்லியபடி பயணிக்கத்தான் இருக்கிறேனே தவிர எந்தப் பாலினம் எனக்கு பொருந்தும் என்பதைக் கண்டுபிடிப்பதற்காக இல்லை.

சிலர் பால் அற்றவன் என்றால் எனக்கு எந்தப் பாலினம் மிகவும் பொருத்தமாக இருக்குமோ அதில் என்னை எங்காவது பொருத்திவிடலாம் என்று நினைக்கின்றனர். ஓரே மாதிரியான கேள்விகள் என்னிடம் கேட்கப்படுகின்றன, ‘பெண்ணாக மாற விருப்பம் இல்லையென்றால் ஏன் பெண்களுக்கான உடையை அணிகிறேன்’ என்று. இதனைப் பலவிதமாகப் பார்க்கலாம். முதலில், நான் அந்நேரத்தில் அவ்வாறு உணர்கிறேன். அதனால் பெண்களுக்கான ஆடையை அணிந்தேன். அதில் என்ன தவறு? இரண்டாவது ஏன் ஆண்களும் பெண்களும் வெவ்வேறு வகையான ஆடைகளை அணிய வேண்டும்? சில சமயம் ‘உங்களுக்கு இதில் என்ன பிரச்சனை, எந்த வகையில் என் ஆடை உங்களை பாதிக்க செய்கிறது?’ என்று அவர்களிடம் திரும்பி கேட்பதுண்டு.

நான் என்னை முழுமையாக ஏற்று கொண்டேன் என்பது எனக்கு முழுமையான மகிழ்ச்சியை தருகிறது. என்னைப் போன்றவர்களைப் புரிந்துக்கொள்ள மற்றவர்களுக்கு உதவும் என்ற நம்பிக்கையில் என் அனுபவங்களை மகிழ்ச்சியுடன் பகிர முடிகிறது. பலர் பாலினம் குறித்தான பதட்ட நிலையிலேயே வாழ்கின்றனர். அவர்கள் அடையாளப் படுத்தப்பட்டிருக்கும் பாலினம் குறித்த ஏதோவொரு தன்மை அவர்களுக்கு ஒவ்வாமையாக இருக்க கூடும். உதாரணத்திற்கு ஒரு பெண் படிப்பற்காக, தான் இருக்கும் ஊரை விட்டு வெளியே போக அனுமதி மறுப்பது ஏனென்றால் அந்த ஊரில் எந்த பெண்ணும் ஊரை விட்டு வெளியே போனதில்லை என்பதாக இருக்கலாம். ஒரு ஆண் நகப்பூச்சு இட்டுக்கொள்ள அனுமதி மறுப்பது ஏனென்றால் ஆண்கள் அதை செய்ய கூடாது என்ற பொது பிம்பத்தாலாகும். இந்த இடத்தில் பாலின அடையாளப்படுத்துதல் என்பது அடிப்படையான தனிமனித உரிமை என்பதை உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன். இது, ஆணாகவோ, பெண்ணாகவோ அடையாளபடுத்த விரும்பாத என்னை போன்றவர்கள் மட்டும் கவலை கொள்ளக் கூடிய, பேச வேண்டிய விடயமல்ல, ஒவ்வொரு மனிதரும் பேச வேண்டிய விடயம்.

சிலர் கேட்பதுண்டு, நகத்துச் சாயமிடுவதில் என்ன முக்கியதுவம் இருக்கிறது, இதில் ஏன் மனித அடிப்படை உரிமைகளைப் பற்றி பேச வேண்டும் என்று. ஒரு பெற்றோர் குழந்தையிடம் பாலினத்தை அடையாளம் காட்டி நகத்துக்கு வர்ணம் பூச கூடாது என்று சொல்வது சமத்துவத்தின் உரிமையையும், அடிப்படை மனித உரிமையையும் மீறும் செயல். நகப் பூச்சுக்கும் உடல் உறுப்புக்கும் என்ன தொடர்பு இருக்கிறது. குழந்தைக்கு (அவள்/அவன்) விரல்கள் பெரிதாக இருப்பதால் சிவப்பு வண்ணத் துணி அணியக் கூடாது என்று சொல்வது போல் மிகவும் அபத்தமாக உள்ளது. ஒரு குழந்தை அல்லது மனிதன் நகத்துக்கு வர்ணம் தீட்டக்கூடாது என்பது, பெற்றோர் குழந்தைகளை வளர்க்கும் செயல்களில் ஒன்று. இது சட்டத்தின் கீழோ அல்லது மனித உரிமைகளின் கீழோ வராது என்னும் அபத்த வாதங்களை முன்வைக்கலாம். நகப்பூச்சை பயன்படுத்துவதில் பாலின நெறிமுறைகளைத் திணிப்பது கொடுரம் மட்டும்மல்ல, குழந்தையானது சுயத்தின் வெளிப்பாட்டை – சமூகத்துடன் ஓர் ஆரோக்கியமான பரிமாற்றத்தை வளர்த்துக் கொள்வதை இது தடுக்கிறது. அந்தக் குழந்தை நகப்பூச்சைப் பயன்படுத்த கூடாது என்பது மட்டுமல்ல, அதனின் விளைவால், இப்படி பாலின அடையாளத்தால் எந்தவோர் அர்த்தமுள்ள சமூகப் பரிமாற்றத்திலும் பங்கேற்க முடியாமலேயே மனிதன் வளர்க்கப்படுகிறான். அதனால்தான் நான் இதனை மனித உரிமையின் மீறலாகப் பார்க்கிறேன்.

எனக்குப் பதில் சொல்லக் கடினமாக இருக்கும் இன்னொரு தனிப்பட்ட கேள்வி ‘உன் பாலின அடையாளம் என்ன?’ என்பது. எதாவது ஒரு அடையாளத்தைச் சொல்லியே ஆக வேண்டும் என்பவர்களுக்கு பாலற்ற ஒருவன் (gender fluid) என்று சொல்வேன். என்னிடம் குறிப்பிட்ட எந்த அடையாளமும் இல்லை என்று நினைக்கிறேன். என்னைப் பொறுத்த வரை பாலினம் எனபது ஒரு செயலாக்கம். அடையாளம் அல்ல. உங்களுக்கு நான் பெண் போலத் தோன்றினால் ‘அவள்’ என்று அழையுங்கள். ஆண் போல் தோன்றினால் ‘அவன்’ என்று அழையுங்கள் என்று சொல்வேன். என்னை மதிப்பும் மரியாதையுடனும் நீங்கள் நடத்தும்வரை, என் பாலினத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்குக் கவலையில்லை. என்னை வெளிப்படுத்துவதற்கான என் உரிமையில் தலையிடுபர்களிடம்தான் என் பிரச்சனை. எனக்கு பிடித்த ஆடைகளை அணிய உரிமை இருக்கும் வரை, எனக்கு பிடித்தமான செயல்களில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள உரிமை இருக்கும் வரை, ஒத்த கருத்துடையவர்களிடம் சுதந்திரமாக இணைவதற்கு உரிமையிருக்கும் வரை, உண்மையில், என் வாழ்க்கையில் பாலினம் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக எனக்கு படவில்லை. நீங்கள் என்னை ஆணாகவோ, பெண்ணாகவோ அல்ல வேறு எதாவது பாலினமாகவோ நினைப்பதைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை.

இது என் தனிப்பட்ட வாழ்ககையின்  சில அனுபவ எதிரொலிகள் மட்டுமே. இந்தச் சமூகம் பாலினத்தை எப்படிக் கையாள வேண்டும் என்பதைச் சொல்வதற்கு நான் ஒரு தத்துவவாதியோ, சமூகவியலாளரோ இல்லை. இருப்பினும்  ஆண், பெண் என்ற பாலினத்தைத் தாண்டிப் பார்க்க வேண்டும் என்பது, பொது அறிவு என்று மட்டுமே சொல்கிறேன். எல்லாச் சூழ்நிலைகளிலும் ஆணையும் பெண்னையும் சமத்துவமாக நடத்தாத சமூகத்தில் வாழ்கிறோம். இன்னும் பல நாடுகளில் ஆண்களுக்குச் சமமான உரிமையைப் பெண்களுக்கும் வழங்குவதற்கான பல உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. பாலினத்தை முற்றிலும் ஒதுக்குவது எதார்த்தத்தில் சாத்தியம் இல்லை. அதே சமயத்தில், ஒரு சமூகமாக நம் உயிர்கள் இரட்டைப் பாலின அடையாளத்திற்குள் மட்டுமே சிக்க மாட்டார்கள் என்பதை உணர வேண்டும். மேலும் பாலின அடையாளத்தின் தடைகள் எதுவும் இல்லாமல், அவரவர் விருப்பத்திற்கேற்ப செயல்களில் ஈடுபடவும், அவர்களை வெளிப்படுத்தவதற்கான சுதந்திரம் ஒவ்வொருவருக்கும் இருப்பதும் அவசியம். அதை நோக்கிய பயணம் அதனினும் அவசியமானது.

இதை நாம் எப்படிச் செய்யபோகிறோம்? எல்லோருக்கும் ஒரே உரிமைகள் தருவதும் அதே சமயத்தில் ஆண்கள் தரும் தொல்லைகளில் இருந்து பெண்களுக்குப் பாதுகாப்பும் எப்படித் தர போகிறோம்? எல்லாவற்றுக்கும் நாம் விடையளிக்க முடியாது. குறைந்தபட்சம் நாம் சரியான கேள்விகளையாவது கேட்க வேண்டும். Opposite sex is Neither எனும் நூலில் அதன் ஆசிரியர் மாகி (Maggie) சொல்வது போல் ‘நாகரிகம் என்பது, அது சொல்லப்படும் பதிலில் அல்ல. கேட்கப்படும் கேள்விகளில் தான் வரையறுக்கப்படுகிறது” (re-quotedby Kate Bornstein; ref: www.ctheory.net/articles.aspx?id=61). நாம் மானிட நாகரிகத்தை செம்மைபடுத்துவதற்கு குறைந்தபட்சம் இக்கேள்விகளையேனும் எழுப்புவது அவசியம் எனும் நம்பிக்கையுடன் முடிக்கிறேன்.

நன்றி - எனில்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்