/* up Facebook

Oct 1, 2014

கழிவறை என்பது பெண்களின் உரிமை


இந்தியாவில் 80% வீடுகளில் மின் வசதி இருக்கிறது. 90% வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டி இருக்கிறது. 80% இந்தியர்கள் மொபைல் போன் பயன்படுத்துகிறார்கள். பிரமாண்ட வளர்ச்சி... இந்த வளர்ச்சிக்காக ஒரு கணம் பெருமைப்பட்டுக் கொள்ளுங்கள். அதே நேரத்தில் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் வெட்கித் தலைகுனிய வேண்டிய இன்னொரு புள்ளி விவரமும் இருக்கிறது. இந்தியாவில் 59% வீடுகளில் கழிவறை வசதியில்லை. அதனால் சுமார் 60 கோடிப் பேர் - மொத்த மக்கள் தொகையில் சரிபாதி மக்கள் இயற்கை உபாதைகளைத் தீர்ப்பதற்காக திறந்தவெளியைப் பயன்படுத்துகிறார்கள்.

உத்தரப் பிரதேசத்தில் பதூன் மாவட்டத்தில் உள்ள கட்ரா கிராமத்தில் இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்ற இரண்டு பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்குப் பிறகே, கழிவறையின் முக்கியத்துவம் பற்றி விவாதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். கும்பகோணத்தில் பள்ளி எரிந்து பல குழந்தைகள் கரியான பிறகு அவசர அவசரமாக குடிசைகளை மாற்றியதைப் போல... சுனாமியில் பல்லாயிரம் உயிர்கள் பறிபோன பிறகு குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சி அளித்ததைப் போல... இரு சகோதரிகளின் வல்லுறவுப் படுகொலைக்குப் பிறகு கழிவறையின் முக்கியத்துவம் உணரப்படுகிறது. அநேகமாக அந்த சகோதரிகளின் இறுதிச் சடங்குக்குப் பிறகு இது மறக்கப்படலாம்.  

உ.பி.யில் மட்டுமல்ல... உலகம் முழுவதும் 250 கோடி மக்களுக்கு சுகாதாரமான கழிவறை இல்லை என்கிறது ஐ.நா. இவர்களில் 110 கோடி பேர் கழிவறையை ஒருமுறை கூட கண்டதே இல்லையாம். திறந்தவெளியைத்தான் பயன்படுத்துகிறார்கள். இதன் காரணமாக ஆண்டுக்கு 2லட்சம் குழந்தைகள் நோய்த்தொற்றுக்கு ஆளாகி உயிரிழக்கிறார்கள். பல நூறு கோடிகளைக் கொட்டி செவ்வாய்க்கும் நிலவுக்கும் ராக்கெட் விடும் அரசுகளின் கண்களுக்கு கழிவறை இல்லாத அடித்தட்டு மக்களின் அவதியைப் பற்றிக் கவலைப்பட நேரமில்லை. 

கழிவறை பயன்படுத்தாத மக்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் முன்னணியில் இருக்கிறது இந்தியா. வடக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் 70% வீடுகளில் கழிவறை இல்லை. தமிழகத்தின் நிலை சற்றுப் பரவாயில்லை. நகர்ப்புறங்களில் வசிக்கும் மத்திய தர வர்க்க மக்களின் மத்தியில் கழிவறையின் அத்தியாவசியம் உணரப்பட்டிருக்கிறது. நகரங்களுக்கு உள்ளேயே அமிழ்ந் திருக்கும் குடிசைப்பகுதிகள், கடலோரக் குப்பங்கள், கிராமப்புறப் பகுதிகளின் நிலை உத்தரப் பிரதேசத்துக்கு சற்றும் குறைந்ததில்லை என்பது தான் யதார்த்தம். திறந்தவெளிகளும் புதர்க்காடுகளும் மர மறைப்புகளும் கடலோரங்களுமே இயற்கை உபாதைகளைத் தீர்ப்பதற்கான இடங்கள். 

கழிவறை என்பது வெறும் கழித்தலுக்கான இடம் மட்டுமே அல்ல. கண்ணியமான வாழ்க்கையின் தொடக்கமும் அதுதான். கழிவறை இன்மையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். பாலியல் சீண்டல்களையும் வல்லுறவுகளையும் எதிர்கொள்ளும் இடமாக இருப்பது அவர்கள் இயற்கை உபாதைகளை தீர்க்கச் செல்லும் போதுதான். உத்தரப் பிரதேசத்தில் நடந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. தமிழகத்தில் அப்படி வெளிச்சத்துக்கு வராமல் மறைந்துபோன சம்பவங்கள் ஏராளம் உண்டு என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். திருப்பூர், சேலம், தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் பெரும்பாலான வீடுகளில் டாய்லெட் இல்லை. மேல்தட்டு மக்களின் வீடுகளில் மட்டுமே அவ்வசதி இருக்கிறது. அரசு கட்டித்தரும் காலனி வீடுகளில் கட்டாயம் டாய்லெட் இருக்க வேண்டும். 

அப்படிக் கட்டினாலும் கூட மக்கள் அதைப் பயன்படுத்துவதில்லை. லட்சக்கணக்கான மக்கள் இன்னும் திறந்தவெளியையே நாடுகிறார்கள்.  பெண்களின் அவஸ்தைகளையும் சிக்கல்களையும் புரிந்துகொள்ள திராணியற்ற ஆட்சியாளர்களைக் கொண்ட இந்தியாவில் தலைமுறையாக நீளும் இந்த அவலத்துக்கான தீர்வு அருகாமையில் இல்லை.  ‘‘அன்னன்னைக்குப் பிழைச்சுக் கரையேற மனுஷங்க படுற பாட்டுல கழிவறை பத்தியெல்லாம் யோசிக்கிறதுக்கு யாருக்கும் நேரமில்லை. இன்னஞ் சொல்லப் போனா, அது ஒரு விஷயமே இல்லை. காலங்காலமா பழகிப் போயிடுச்சு. எல்லா கிராமங்கள்லயும் அதுக்குன்னு ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுக் கிடக்கும். இல்லைன்னா மலையோரம், புதருன்னு ஒதுங்குவாங்க. 

ஆம்பிளைகளுக்குப் பிரச்னையில்லை. பொம்பளைங்க பாடுதான் கஷ்டம். அதுவும் சின்னப்புள்ளைங்க ரொம்பவே சிரமப்படுதுங்க. காலையில சூரியன் கிளம்புறதுக்கு முன்னாடியே எழுந்திரிச்சுப் போயிட்டு வந்துறணும். அதுக்கப்புறம் போகணும்னா ராவான பின்னாடிதான் முடியும். அதுலயும் திடீர்னு அந்தப் பக்கம் ஆம்பிளைங்க வந்துட்டா அலறி அடிச்சுக்கிட்டு எழுந்திருக்கணும். பகல்ல எல்லாத்தையும் அடக்கிக்கணும். ஆத்திரம் அவசரத்துக்குக் கூட எங்கேயும் ஒதுங்க முடியாது. ரொம்ப அவஸ்தைன்னா வீட்டுக்குப் பக்கத்துல எங்காவது போயிட்டு மண்ணைப் போட்டுத்தான் மூடணும். மாதாந்திர நேரத்துல பொம்பளப்புள்ளைங்க படுற கஷ்டம் கொஞ்சமில்லை. பல நேரங்கள்ல அவமானமா இருக்கும். 

இந்த மாதிரி இருட்டுல போகும்போது பாம்பு, பூரான்னு விஷங்க தீண்டிரும். அப்படி ஏகப்பட்ட புள்ளைக செத்துப் போயிருக்குக. எங்க கிராமம் காரைக்குடி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில இருக்கு. இயற்கை உபாதைக்கு ரோட்டோரமாத்தான் போகணும். ஒரு பஸ்ஸோ, காரோ வந்தாக்கூட எழுந்து நிக்கணும். ரோட்டுல போறவங்க பாக்குற பார்வையே சங்கடமா இருக்கும். டாய்லெட் கட்ட அரசாங்கம் நிதியுதவி செய்யுதுன்னு சொல்றாங்க. ஆனா, அது அவ்வளவு எளிதா எல்லா மக்களுக்கும் கிடைக்கிறதில்லை. யாரை அணுகணும்னு கூட நம்ம மக்களுக்குத் தெரியிறதில்லை. காலனி வீடுகள்ல டாய்லெட் கட்டிக் கொடுக்கிறாக. ஆனா, அதை பயன்படுத்த யாரும் தயாரா இல்லை. காலங்காலமா இல்லாம பழகிட்டதால அது பாட்டுக்கு மூடிக்கிடக்கு.  

காடு, கரைக்குப் போயிட்டு வர்ற நேரத்தில ஆம்பிளைங்க சீண்டுறதும் நடக்குது. யாரும் தட்டிக் கேட்க முடியாது. தட்டிக்கேட்டா ஊருக்குள்ள வாழ முடியாது. அதனால பெத்தவங்களே பிரச்னையை அமுக்கிடுவாங்க. சில புள்ளைங்க அவமானம் தாங்கமுடியாம மருந்தை தின்னுட்டோ, தூக்குப்போட்டுக்கிட்டோ தற்கொலை செஞ்சுக்கிறதும் நடக்குது... என்று குமுறுகிறார் உழைக்கும் பெண்கள் இயக்கத்தின் தலைவி சந்தனமேரி. 

நன்றி - தினகரன்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்