/* up Facebook

Sep 25, 2014

இவற்றில் ஆண்களின் பங்கு என்ன? - விலாசினி


தமிழ்நாட்டில், இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை ஸ்வேதா பாசுவைத் தெரிந்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். சினிமாவிலேயே கட்டுண்டு கிடக்கும் சமூகத்திற்கும் இவர் குழந்தை நட்சத்திரமாக தேசிய விருது பெற்ற செய்தி புதிதுதான். ஆனால் இன்று, ஏதோ ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு ஸ்வேதா பாசுவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தீர்ப்புகள் எழுதிக்கொண்டிருக்கிறோம்.

விபச்சாரம் சமூக சீர்கேடு அல்லவா? இது எப்படித் தனிமனித விஷயமாகும் என்பவர்களுக்கு ஒரு தகவல். இந்தியக் குற்றவியலின் கீழ் ஒரு நபர் தன் உடலைப் பயன்படுத்திப் பொருளீட்டிக்கொள்வது என்பது தண்டனைக்குரிய செயலல்ல. அதாவது, ஒரு பெண், தன் பொருளாதாரத் தேவைகளுக்காகத் தன் உடலை ஒரு ஆணுடன் பகிர நினைத்தால் அது குற்றமாகாது. ஆனால், இதை ஒரு அமைப்பின்வழி செய்வதும் (விபச்சார விடுதிகள்) பொது இடங்களில் மற்றவர்களையும் பாலியல் தொழிலுக்கு அழைப்பதும், ஈடுபடத் தூண்டுவதும்தான் குற்றம்.

ஏன் ஒருதலைப்பட்சம்?

ஸ்வேதா பாசு விஷயத்தில் நடந்தது என்னவென்றால் அவர் விபச்சார விடுதியில் வைத்தோ, பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்ததற்காகவோ கைது செய்யப்படவில்லை. ஒரு நட்சத்திர விடுதியில் ஒரு ஆணுடன் ‘சமரசமான’ நிலையில் இருந்ததற்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அப்படி அவர் யாருடன் இருந்தார் என்பதையும் அவர்கள் தைரியமாக ஏன் வெளியிடவில்லை? காவலர்கள் இந்தச் செயலில் ஈடுபட்ட ஆண்களையும், அந்த நட்சத்திர விடுதி உரிமையாளரையும் கைது செய்யாததும், அல்லது, அவர்கள் மீதும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று யாருக்கும் எந்தச் செய்தியும் தெரியப்படுத்தாததும் நிச்சயம் ஒரு மோசமான முன்னுதாரணம்.

குற்றமே இல்லை என்றபோதும், தைரியமாகத் தான் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக ஸ்வேதா பாசு ஒப்புக்கொண்டிருக்கிறார். அந்தத் தைரியம்கூட இல்லாத ஆண் மகன்களை நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கிறது.

பகிரங்கப்படுத்தப்படும் அந்தரங்கம்

பாலியல் வழக்குகளில் பாதிப்படைவது எல்லாம் சம்பந்தப்பட்ட பெண்கள் மட்டும்தான். மற்ற குற்றங் களில் கைது செய்யப் படுபவர்களுக்குக்கூட அந்தரங்கம் பேணப்படுகிறது. ஆனால் பாலியல் வழக்குகளில், அது ஒரு பெண் விரும்பி மேற்கொள்ளும் தொழிலாக இல்லாமல், அவள் மீதான வன்முறையாக இருந்தாலும் காவல்துறை, மீடியாவின் அணுகுமுறை மிக மோசமானது. சமீபத்தில், பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட ஒரு மாணவியின் அடையாளம் மீடியாக்களால் வெளியிடப்பட்டு அவளின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டு என்றென்றும் மீள முடியாத மன உளைச்சலை அவளுக்கு அளித்திருக்கிறது. ஆனால் அவளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியவர் யார் என்று நம் ஒருவருக்கும் தெரியாது.

பாலியல் தொழில் செய்தாலும் ஒரு பெண்தான் குற்றவாளி, பாலியல் வல்லுறவுக்கு ஆளானாலும் அவள்தான் குற்றவாளி. இப்படி ஒழுக்கமாக இல்லை, அப்படி உடை அணியவில்லை, இரவுகளில் ஆணுக்கு இணையாக வீட்டுக்கு வெளியில் வேலை பார்க்கிறாள் என்று அவளை நோக்கி ஏராளமான குற்றச்சாட்டுகள். ஒரு பெண் பாலியல் தொழிலைத் தனியாகச் செய்ய முடியுமா? அவளுடன் உறவு வைத்துக்கொள்பவர்களையும் தாண்டி இன்னும் பல ஆண்கள் இதில் சம்பந்தப்பட்டிருப்பார்கள். ஆனால் அந்த ஆண்கள் யார்? என்ன செய்கிறார்கள்? அனைத்தும் ரகசியம். தன்னுடைய உடலை அடகு வைத்துப் பொருளீட்டுவது தவறென்றால், அப்படிச் சம்பாதிப்பதையும் பெண்களிடமிருந்து பங்கு போட்டுக்கொள்ளும் ஆண்களுக்கு என்ன தண்டனை? அவளிடமிருந்து அத்தகைய சேவையைப் பெறுவதற்கும், அவளை அப்படிச் செய்ய உளவியல் ரீதியாகத் தூண்டும் ஆண்களுக்கும் என்ன தண்டனை?

ஊடகங்களின் பொறுப்பு

காவல்துறையினர் ஸ்வேதா பாசுவின் புகைப்படங்களை வெளியிடவில்லை; பெயர் அறிந்தவுடன் மீடியாக்களால் செய்யப்பட்டது இது என்றும் சில குரல்கள் ஒலிக்கின்றன. முதலில் கைது செய்ததே தவறு என்னும் பட்சத்தில், காவல் துறையினரின் செய்கையை நியாயப்படுத்த முடியாது. மேலும், அவர் நடிகை என்பதாலேயே அவரது புகைப்படங்களைக் கண்டபடி வெளியிட்டபடி இருக்கும் ஊடகங்கள் தங்கள் ஊடகத்துறை பற்றிய அறச்சிந்தனையை வளர்த்துக் கொள்வது அவசியம். காண்பதும், கேட்பதுமெல்லாம் செய்தியாகாது.

ஸ்வேதா பாசுவின் படங்கள் வெளியானதற்குக் காரணம் வைத்திருக்கும் மீடியா இதே போன்றதொரு வழக்கில் கைதான மற்றொரு ஆந்திர நடிகை திவ்யா ஸ்ரீ என்பவர்க்கு பதிலாகத் தமிழ் நடிகை ஸ்ரீவித்யா என்பவரின் புகைப்படத்தை மாறி மாறி வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. தகவல் தொழில்நுட்பத்தின் உச்சபட்ச வளர்ச்சியால் ஒரு சிறு தவறான செய்தியும் ஒரே சமயத்தில் கோடிக்கணக்கானவர்களைச் சென்றடையமுடியும். துரதிர்ஷ்டவசமாக உண்மைச் செய்தி வெளிவருவதற்குள் பொது மக்கள் அடுத்த, பரபரப்பான செய்திக்குச் சென்றுவிடுவார்கள். முந்தைய, தவறான செய்தி அப்படியே பதிந்துவிடும். பெயர் குழப்பத்தால் பாதிக்கப்பட்ட ஸ்ரீவித்யா ஒவ்வொரு பத்திரிகையாக “அது நானல்ல” என்று அறிக்கைவிடும் நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இதற்கு ஊடகங்கள் எப்படிப் பொறுப்பேற்கப் போகின்றன? அவர்கள் ஸ்ரீவித்யாவிற்கு தரும் பதிலென்ன?

தன் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் தேவையான பொழுதுகூட காவல் நிலையம் செல்வதை விரும்பாத சமூகம்தான் எங்கோ, யாரோ ஒரு பெண் என்றால் எந்த ரத்த பந்தமும் இல்லாமலேயே அவள் மீது உரிமையெடுத்து, ஒழுக்க போதனைகள் வழங்கி, அவளைப் பற்றிய தங்கள் அனுமானங்களைப் பொது இடத்தில் இலவசமாகப் பகிர்ந்துகொள்கிறது. பல சமயம் அது அவளின் படுக்கையறையை எட்டிப்பார்க்கவே விரும்புகிறது.

எட்டிப்பார்க்கும் அநாகரிகம்

ஸ்வேதா பாசு பொருளாதாராத் தேவைகளுக்காகத்தான் பாலியல் தொழிலில் ஈடுபட்டார் என்றவுடன் அதற்கும் தங்கள் அறச்சீற்றத்தைக் காண்பித்து நியாயம் பேசுபவர்கள், “அவர் என்ன பட்டினி கிடந்தாரா? அவர் குடும்பம் கஷ்டப்படுகிறதா? சொகுசு வாழ்க்கைக்காகத்தான் இப்படிச் செய்தார். அது எப்படி நியாயம் ஆகும்?” எனக் கேட்கின்றனர். ஒருவரின் பொருளாதாரத் தேவை என்பது இவ்வளவு வருமானத்திற்குள் அடங்க வேண்டும் என்று சட்டமே எந்த அளவுகோலையும் வழங்கவில்லை. அதை நிர்ணயிக்க நாம் யார்? இது மற்றொருவர் வாழ்க்கையில் மூக்கை நுழைப்பது.

அவர் அடிப்படைத் தேவைகளுக்காக இல்லாமல், சொகுசு வாழ்க்கைக்காகவே செய்ததாக இருந்தாலும் சட்டப்படியே அது குற்றமில்லை எனும்பொழுது இதைப்பற்றி மற்றவர்கள் கவலைப்பட ஒன்றுமில்லை.

ஒரு பெண் பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருப்பதும், ஒரு ஆண் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதும் பொதுவில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் அல்ல. அது அவரவர் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு சார்ந்தவை. கலாச்சாரம், ஒழுக்கம், பண்பாடு என்பதையெல்லாம் இன்னமும் பெண் உடலோடு மட்டுமே தொடர்புபடுத்திப் பார்க்கும் வழக்கத்தை ஆண்கள் இனியேனும் பரிசீலிப்பது நல்லது. எங்கோ இருக்கும், செய்திகளில் இவ்வாறு அடிபடும் பெண்களால் சமூக ஒழுக்கம் கெடும் என்றெல்லாம் எந்தவொரு ஆணும் கவலைப்பட வேண்டியதில்லை. பாலியல் தொழில் செய்பவரைக் கண்டால் பிடிக்காது என்றால், தாங்கள் அவர்களிடம் செல்லாமல் இருப்பதுதான் உச்சபட்ச ஒழுக்கமாக இருக்க முடியும். வேண்டுமானால் அத்தனை ஆண்களும் ஒன்றிணைந்து “இனி பாலியல் தொழில் செய்பவர்களிடம் நாங்கள் செல்ல மாட்டோம்” என்று சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளலாம். யார் தடுக்க முடியும்?

கைவிடப்படும் கண்ணியம்

மணமுடித்திருக்கும் ஒரு பெண் அல்லது ஆணின் திருமணத்திற்கு வெளியிலான உறவுகளை அழைப்பதில்கூட கண்ணியம் காக்க நம் சமூகத்திற்குக் கற்றுத்தர வேண்டியதாக இருகிறது. இன்னும் ‘கள்ளக் காதல்’ என்ற பதத்தையே இவ்வுறவுமுறைகளுக்கு ஊடகங்கள் பயன்படுத்துகின்றன. எல்லாவற்றிலும் மேற்கத்திய மோகம் ஆட்டிப்படைக்கும் நாம் அவர்கள் இவ்வுறவுமுறைகளை திருமணத்தை மீறிய உறவுகள் (Extra Marital Affair) என்று அழைப்பதை மட்டும் கவனிக்கத் தவறிவிட்டோம்.

வயதுக்கு வந்த ஆணும் பெண்ணும் இணைவது, என்ன காரணமாக இருந்தாலும், மற்றவர்களுக்கான செய்தியல்ல என்பதை ஏற்கெனவே வளர்ந்துவிட்டவர்கள் உணர்வார்களா என்பது ஐயமே. ஆனால், அடுத்த தலைமுறைக்காவது இது பற்றிய புரிதலை ஏற்படுத்துவது அவசியம். பாலியல் கல்வி என்பதை வெறும் உடலுறுப்புகளின் விளக்கம் பற்றியதாக இல்லாமல் ஆண், பெண் உறவுமுறைகள், அதன் சிக்கல்கள் என்று உளவியல் சார்ந்தும் கற்றுத்தர வேண்டியது அவசியம். அவசரமும்கூட. பள்ளி வயதிலேயே இத்தகைய உளவியல் சார்ந்த, உடல் சார்ந்த உறவுமுறைகளைக் குழந்தைகள் தெரிந்துகொள்வது வளர்ந்தபின் அவர்களின் உறவுகளைக் கையாள்வதிலும், உணர்வு ரீதியாக அவர்களைத் தைரியமாக ஆக்குவதிலும் முக்கியப் பங்காற்றுபவை. பாலியல் கல்வி பாடத்திட்டத்தில் இதுவும் சேர்க்கப்பட வேண்டும்.

ஸ்வேதா பாசுவின் கைது உணர்த்தும் மற்றொரு கசப்பான உண்மை பொது மனங்களில் படிந்திருக்கும் வக்கிரம் பற்றியது. பெண் நடிகர்கள், தொலைக்காட்சி தொகுப்பாளர்கள், ஃபேஷன் மாடல்கள் பலர் சமூக வலைத்தளங்களில் இயங்குவது அவர்கள் சார்ந்திருக்கும் தொழிலுக்கு இன்றியமையாதது. ஆனால் அங்கும் ஒருவர் தான் பெண் என்பதாலேயே பல அசிங்கங்களைச் சந்திக்க நேரிடுகிறது. அவர்கள் மட்டுமல்ல. பொதுவாகவே சமூக வலைத்தளங்களில் முனைப்பாக இயங்கும் பெண்கள் ஒவ்வொருவரின் மீதும் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் வக்கிரப் பார்வைகளும், பாலியல் நிந்தனைகளும் சர்வசாதாரணம்.

இனத்தோடு சேரும் இனம்

இந்த விஷயத்திலும் ஸ்வேதா பாசுவிற்கு ஆதரவாகக் குரல் கொடுப்பவர்களையும் தாக்க ஆரம்பித்துள்ளனர், “இனம் இனத்தோடுதான் சேரும்” என்று. அதாவது பாலியல் தொழில் செய்பவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும், அதை எதிர்த்து அவர்களுக்கு ஆதரவாகப் பேசுபவர்களும் அத்தொழிலைச் செய்பவர்கள்தாம் என்பது சில ஒழுக்கவியலாளர்களின் கருத்து. ஆம், பெரும்பான்மை ஆண்கள் இதுபோன்ற விஷயங்களில் பெண்ணுக்கு எதிரான நிலைபாட்டைக் கொண்டிருந்தால் பெண் இனம் இனத்தோடு சேர்ந்துதான் போராட வேண்டியிருக்கும்.

அப்படி ஒருநாள் ஒட்டுமொத்த பெண் சக்தியும் ஒன்று திரண்டால் சமூகத்தின் மொத்தக் கயமையும் பொசுங்கக்கூடும்.

நன்றி - தி ஹிந்து

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்