/* up Facebook

Sep 8, 2014

விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் : லட்சுமி அம்மாள், லட்சுமி பாய், லட்சுமி செகல்இந்திய தேசிய ராணுவத்தைப் பொறுத்தவரை, ஒரு ராணுவ வீரன் சாதாரணமாக மூன்றாண்டு காலம் பெற வேண்டிய அனைத்துப் பயிற்சிகளையும் ஆறு மாதங்களுக்குள் பெற்றுக்கொண்டு போர் முனைக்குச் செல்லத் தயாராக இருக்க வேண்டும். ஜான்சி ராணி ரெஜிமென்ட்டும் இதற்கு விதிவிலக்கல்ல. இயந்திரத் துப்பாக்கி இயக்குதல், விமான எதிர்ப்புப் பீரங்கிகளைக் கையாளுதல், தந்திச் செய்தி, சமிக்ஞை அனுப்புதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

‘தில்லி சலோ’ என்ற முழக்கத்துடன் ஐ.என்.ஏ. வீரர்கள் புறப்பட்டனர். ஆனால் அந்த முதல் படைப்பிரிவில் லட்சுமிக்கு இடம் கிடைக்கவில்லை. அவர் ஆத்திரத்துடன் கமாண்டிங் ஆபீசர் மனோரஞ்சிதா சத்யவதியிடம் போய் ஏன் தன்னை அனுப்பவில்லை என்று கேட்டார். “வீராங்கனைகளுக்கு நீ நன்றாகப் பயிற்சி தருகிறாய். இன்னும் நிறையப் பேருக்குப் பயிற்சி தர வேண்டும். அதனால்தான் உன்னை நிறுத்தியிருக்கிறேன்” என்றார் அவர். போர்முனையில் நேரடியாகக் களமிறங்க வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றாலும், எத்தனையோ லட்சுமிகளை போருக்குத் தயார் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது.

இம்பால் வரை முன்னேறிய இந்திய தேசிய ராணுவம் அதற்கு மேல் முன்னேற முடியவில்லை. கடும் மழையாலும், ஜப்பான் மீது அமெரிக்கா நடத்திய அணுவெடித் தாக்குதலைத் தொடர்ந்தும், இந்திய தேசிய ராணுவம் சண்டையை நிறுத்திக்கொள்ள வேண்டியதாயிற்று.

“இது தோல்வியல்ல, பின்னடைவுதான். இறுதிவெற்றி இந்தியாவுக்கே. ஆகவே உங்களுக்கு நீண்ட விடுப்புத் தருகிறேன். மீண்டும் அழைக்கும்போது வாருங்கள்” என்று விடைகொடுத்து அனுப்பினார் நேதாஜி. அந்த அழைப்பு வரவேயில்லை.

பின்னர் இந்திய தேசிய ராணுவத்தினர்மீது விசாரணை நடைபெற்றது. ஒரு நாள் ஈப்போ நகர நீதிமன்றக் கட்டிடத்தில் லட்சுமி விசாரணைக்குச் சென்றார். “நீ ஏன் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்தாய்?” என்று கேட்டார் ஓர் அதிகாரி.
“உங்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து எங்கள் தாய்நாட்டை விடுவிப்பதற்காக” என்றார் லட்சுமி.
“அவ்வளவு நாட்டுப்பற்றா? என்னை போர் முனையில் சந்திக்க நேர்ந்திருந்தால் என்ன செய்திருப்பாய்?” என்று கேட்டார் அவர். “உங்களை சுட்டுக் கொன்றிருப்பேன்” என்று தயங்காமல் பதிலளித்தார் லட்சுமி.

ஜான்சி ராணி படைப்பிரிவுக்குப் பயிற்சி அளித்த அதே கேப்டன் லட்சுமிதான் குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்துல் கலாமை எதிர்த்துப் போட்டியிட்டவர். குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண் என்ற பெருமையைப் பெற்ற லட்சுமி செகல், தமிழகத்தைச் சேர்ந்தவர், சென்னையில் வசித்தவர்.

அவரது தந்தை சுவாமிநாதன் பிரபல வழக்குரைஞர். தாய் அம்மு சுவாமிநாதன் நாட்டின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர். அந்தக் காலத்திலேயே இவர்கள் கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள்.

சென்னையில் மருத்துவம் பயின்ற லட்சுமி, பணியின் காரணமாக சிங்கப்பூர் சென்றபோதுதான் நேதாஜியை சந்தித்தார். இந்திய தேசிய ராணுவத்துக்கு நன்கொடை தரச்சென்றார். நேதாஜியின் அழைப்பை ஏற்று ஐ.என்.ஏ.வில் சேர முன்வந்த ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு ஜான்சி ராணி படைப்பிரிவின் கேப்டன் ஆனார்.

சுதந்திரத்திற்குப் பிறகு கான்பூரில் வசிக்கத் துவங்கிய அவர், கான்பூர் நகரத் தொழிலாளர் குடியிருப்புப் பகுதியில் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். இலவச மருத்துவம் அளிக்கிறார். மகளிர் அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகள் வகித்தவர்.

88 வயதானாலும் இன்றும் நாள்தோறும் குறைந்தது பன்னிரண்டு மணிநேரம் உழைக்கும் உத்தமப் பெண்மணியாகத் திகழ்கிறார் கேப்டன் லட்சுமி செகல்.
*
பி.கு. - லட்சுமி செகல், 2012 ஜூலை 23ஆம் தேதி கான்பூரில் மறைந்தார். அவரது உடல் மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்யப்பட்டது. அவர் தனது கண்களை தானம் செய்திருந்ததால், பாப்லி, ராம்பியாரி என்ற இரு பார்வையற்ற பெண்களுக்கு பார்வை கிடைத்தது.

லட்சுமியின் தாய்-தந்தை (அம்மு-சுவாமிநாதன்) கலப்புத் திருமணம் மட்டுமல்ல, இவரது வாரிசுகளும் கலப்புத் திருமணம் செய்தனர். இளைய மகள் மிருணாளினி சாராபாய் பரத நாட்டியக் கலைஞர். இந்திய அணு சக்தித் துறையின் சிற்பி விக்ரம் சாரா பாயை மணந்தார். இவர்களின் மகள் மல்லிகா சாராபாய் நாட்டியக் கலைஞர், இப்போது குஜராத்தில் சமூகப் போராளி. 2009இல் காந்திநகர் தொகுதியில் அத்வானியை எதிர்த்துப் போட்டியிட்டவர்.

அம்மு-சுவாமிநாதன் தம்பதியின் மூத்த மகள் லட்சுமி, அவரது கணவர் பிரேம் குமார் செகல். லாகூரைச் சேர்ந்தவர். பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் உயர் அதிகாரி. ஜப்பானியருடன் போரிட மலேயாவுக்குச் சென்றபோது ஜப்பானியரின் போர்க்கைதி ஆகிவிட்டார். பிறகு இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து பிரிட்டிஷ் இந்திய ராணுவத்துக்கு எதிராகப் போரிட்டார். ஜப்பான் முறியடிக்கப்பட்ட பின் கைதுசெய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தார். நாடு விடுதலை அடைவதையொட்டி அவரும் விடுதலை ஆனார். லட்சுமி ஐ.என்.ஏ.வில் இருந்தபோது செகலை சந்தித்தார். 1947இல் திருமணம் செய்ததால் லட்சுமி செகல் எனப் பெயர் பெற்றார்.

லட்சுமி-பிரேம் தம்பதியின் மகள்தான் சுபாஷினி அலி. இவர் கவிஞரும், கலைஞரும், இந்தித் திரையுலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவருமான முஸாபர் அலியைத் திருமணம் செய்தார். சுபாஷினி அலி இப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவர்.
இவர்களுக்குப் பிறந்த மகன் ஷாத் அலி, இந்தி திரைப்பட இயக்குநர். அலை பாயுதே-யின் இந்தி வடிவம் சாத்தியா உள்பட நான்கு படங்களை இயக்கியவர். ராவண், ராவணன் உள்பட சில படங்களின் உதவி இயக்குநர்.

நன்றி - மலர்த்தரு

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்