/* up Facebook

Sep 12, 2014

புதுமைப்பித்தனின்சாப விமோசனத்தில் பெண்ணியச் சிந்தனை - முனைவர்.த.அருள்ஜோதி,சாப விமோசனம் என்ற சிறுகதைப் புதுமைப்பித்தன் அவர்களால் எமுதப்பட்டதாகும். இராமயணத்தில் கூறப்பட்ட ஒரு நிகழ்ச்சியை எடுத்துக்கொண்டு அகலிகையின் வாழ்வையும் அவள் படும் வேதனையையும் எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் இராமயண நிகழ்ச்சிகளில் மற்றப் பெண்கள் நிகழ்ச்சிகளும், அகலிகையின் வாழ்க்கை வரலாற்றுடன் அமைந்தள்ளன. அகலிகையின் வாழ்க்கை நடு நிகழ்ச்சியாகவும், மற்றவைக் கிளை நிகழ்ச்சியாகவும் சிறுகதையில் இடம்பெற்றுள்ளன. 

இராமயணத்தில் இடம்பெறும் அகலிகைப் பற்றிய நிகழ்ச்சி பெரிதாகப்படுவதில்லை அதே நிகழ்ச்சி காலத்திற்கு ஏற்றாற் போல் சூழ்நிலைக்குத் தக்கவாறு சிறுகாதையில் இடம்பெறும் பொழுது நம்மைக் கவர்ந்து விடுகிறது. புதுமைப்பித்தன் அவர்கள் காப்பியக் கதையில் இடம் பெறும் நிகழ்ச்சியை சிறுகதை எல்லைக்குள் அடக்கிக் காட்டுவது போற்றத்தக்கதாகும். அந்நிகழ்ச்சிப் பூரணமாக அமைந்துள்ளது. அகலிகை என்ற பெண்ணின் வாழ்நாளில் நடந்த நிகழ்ச்சியாக இடம் பெற்றுள்ளன. இக்கதையில் நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தருவதைக்காட்டிலும்அகலிகையின் மன உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தந்து படம் பிடித்துக் கூறுவது போற்றத்தக்கதாகும். 

கணவனே தெய்வம் 
மனதால் எந்த ஆடவனையும் நினைக்காது தான் கட்டியக் கணவன் ஒருவனையே தெய்வமாக நினைத்து வழிபட வேண்டும் என்று சங்க இலக்கியம், திருக்குறள், காப்பியங்கள் போன்ற இலக்கியங்கள் வழியாகச் சொல்லப்பட்டு வரும் செய்தியை மாற்றிக் காட்டியது இச்சிறுகதை. இதில் முக்கியக்கரு என்னவெனில் இந்திரனின் கபட நாடகத்தால் கௌதமன் மூலம் சாபம் பெற்ற அகலிகை பின்னாளில்கௌதமனே விரும்பி வந்து தன்னைச் சேரும் போது இந்திர நாடகம் மனத்திரையில் தோன்ற அவள் நெஞ்சம் கல்லாய் இறுகி கற்சிலையாகிறாள். அகலிகையின் மனச்சுமை மடிந்தது. கற்சிலையாவது அவளது பெண்ணியச் சுதந்திரமாகும்.

சமூகம்

சமூகத்தில் பெண்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு ஆண்களின் அதிகாரங்களே முதன்மைப் பெற்றுள்ளன. மேலும் பெண்கள் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கின்ற மரபு வழிக் கடமைகள், சமூகக் கட்டுப்பாடுகள் இவையெல்லாம் சிந்திக்கப்பட வேண்டியவையாக இருக்கின்றன. அகலிகையின் வாழ்வில் கற்சிலையில் இருந்து இராமன் காலடிப் பட்ட பின் பெண்ணாகி அவள் மனம்படுகின்ற துன்பம், அவளைக் கண்ட முனிப்பத்தினிகள் அவளைக் கண்டதும் பறைச்சியைக் கண்டது போல் ஒதுக்கி அவளை காட்சிப் பொருள் போல கண்டு அகலிகையை ஏசுகின்ற சொற்கள் சாபத்தீயை விட அதிகமாகச் சுட்டன. ‘அவள் மனம் ஒரேயடியாகச் சுடுகாடு மாதிரி வெந்து தகித்தது. சிந்தனை திறந்தது. “தெய்வமே! சாப விமோசனம் காண்டாலும் பாப விமோசனம் கிடையாதா? என்று தேம்பினாள். யந்திரப் பாவையானாள். ‘மகனும் அன்னியனாகிவிட்டான், அன்னியரும் விரோதிகளாகிவிட்டார்கள். இங்கென்ன இருப்பு?’ என்பதே அகலிகையின் மனசு அடித்துக்கொண்ட பல்லவி. 

இவள் தூய்மை நிரூபிக்கப்பட்ட பின்னும் மற்றவர் முன்னிலையில் தவறாக தானே நினைத்துத் தன்னைமறைத்துக் கொள்ளுகின்ற அகலிகையின் நிலையும் சமூகக் கட்டுப்பாடுகளை நமக்கு நினைவு+ட்டுகின்றன.

விலைமகள்

விலைமகள், பொதுமகள், பரத்தை, பொருட்பெண்டீர், வேசி, தாசி, தேவடியாள்என காலந்தோறும் வெவ்வேறு அடைமொழிகளால் அறியப்பட்டு உடல் சுகம் தரும் தொழிலாளர்களாய் இன்று முத்திரைக் குத்தப்பட்டுள்ளனர்.

குலமகள், விலைமகள் எனும் பேதம் கண்டு பரத்தையருக்கு என்று தனி இடம் பார்வை சாங்கப்பாடல்களில் உண்டு. பொருளுக்காக இல்லாமல் சமூக ஒமுக்கத்தை மீறிய தாய் வழிச் சமூக எச்சங்களாய் பரத்தையர் உள்ளனர். மணிமேகலையில்மணிமேகலையின் பாட்டி மாதவியிடம் மணிமேகலையைப்பரத்தமைத் தொழிலுக்கு உட்படுத்த வற்புறுத்தும் இடத்து மாதவி அதை மறுப்பதும், கற்புக் கரசியானக் கண்ணகியின் மகளாகவே மணிமேகலையை வளர்ப்பதும் நமக்கு பரத்தமைத் தொழிலில் இருந்து தங்கள் சந்ததிகளைக் காப்பாற்றியமைத் தெரிகிறது. பத்தினி, பரத்தை ஆகிய இருவரும் சித்தர்களின் பாடல்களில் பேதமில்லை. பெண்மகள் குறித்தும், பெண்ணுடல், பெண்ணுறவு குறித்தும் எள்ளல்கள் காணப்படுகின்றன.

புதுமைப்பித்தனின் சாபவிமோசனத்தில்கௌதமன் அகலிகையை விலைமகள் என்று கூறுகிறான். புதுமைப்பித்தனின் மற்றொரு சிறுகதையான பொன்னகரம் குலமகளானாலும், பொருட்பெண்டீரானாலும் பெண்கள் ஆண்களால் நுகரப்படுபவர்களே. அது ஒரு ஆடவனால் புணரப்பட்டாலும், பலரால் புணரப்பட்டாலும் வலிப் பெண்ணுக்கு மட்டுமே ஏற்படுகிறது என்பதை எடுத்துரைக்கிறது. 


அகலிகை, சீதை 

சாபவிமோசனத்தில் இந்திரனால் அகலிகையும், இராவனால் சீதையும் கவரப்பட்டு மனதளவில் எந்தத்தவறுகளும் செய்யாத, ஒமுக்கம் தவறாதப்பெண்மணிகளாக இருப்பினும் கௌதமரால் அகலிகை சாபத்தைப் பெற்றுக் கல்லாகி சாப விமோசனம் பெற்றும் இராமனால் உலகுக்குப் பத்தினித்தன்மை நீரூபிக்கசீதை தீயில் பிரவேசித்தும் தன் தூமையை நிரூபிக்கின்றனர். 

கற்பு என்பது உடல் அளவிலா, மனதளவிலா என்பது பற்றிய குழப்பங்கள் இருந்து வருகின்ற ஒன்றாகும். சாப விமோசனத்தில் அகலிகையும், சீதையும் தன்மனதளவில் களங்கப்படதாப் பெண்கள் என்பதும் அவர்களுக்கு வைத்ததர்வில் அவர்கள் வெற்றிப்பெற்று உலக மக்களுக்கு தங்கள் பத்தினித் தன்மையை நீரூபித்தனர் என்பதும் தெரியவருகிறது.

 
சமுதாயம்பெண் ஒரு ஆடவனை மணந்து விட்டால் சாகும் வரைஅந்த ஆடவன் எப்படிப்பட்டத் தீயவனாயினும் அவனுடனேயே இருந்து வாழ வேண்டும் என்கிறது. ஆண்களுக்கு அவ்வாறு கற்பு கற்பிக்கப்படுவதில்லை. இந்திரன் இந்திராணியை விட்டு அகலிகையிடம் உடல் சுகத்திற்காக கௌதமராக மாறியும், இராவணன் சீதை மீதுஆசைக்கொண்டு மண்டோதரியை விட்டு முனிவர் வேடம் கொண்டு மாறியும் பிரன் மனை நோக்கக் கூடாது என்பதை மறந்து ஆசைப்பட்டுள்ளனர்.

அகலிகை களங்கமற்றவள். இளமைக்கால காதலனாக இந்திரன் இருந்திருப்பின் அவளும் விரும்பியிருப்பின் அவன் இந்திரனாகவே வந்திருக்க வேண்டும். அவன் கௌதமர் வேடத்தில் வந்துள்ளான். எனவே தன்ஆசைக் கணவன் என்றே அவள் எண்ணினாள்.

 பதினான்கு வருடம் வன வாசம் தீர்ந்து அயோத்தி வந்த சீதை அகலிகையைக் கண்டு இராமன் இராவணன் சிறையெடுப்பால் தன்னைத் தீக்குள் இறங்கச் செய்த அந்நிகழ்வை கூறியதும் உயிர் கொடுத்த இராமனையே பார்க்க நினைக்காது வெறுக்கிறாள். இதிலிருந்து ஆண்கள் இராமனாயினும், கௌதமராயினும் ஒரே மன நிலை உள்ளவர்களே என்பதை உணர்கிறாள்.


 இங்கு அவள் உடல் களங்கப்பட்டது. மனம் களங்கப்பட வில்லை. அந்நிகழ்ச்சிக்கு அது வேதனைப்பட்டு ஆண் வர்க்கத்தை எதிர்த்து கௌதமனேபின் நாளில் குழந்தை கிடைத்தால் இவள் மனம் மாற்றமடையுமோ என்று எண்ணி அகலிகையை நெருங்கி வந்த போது அந்த நிகழ்வே, உணர்வே பிடிக்காமல் கற்சிலையாகவே மாறி விடுதலைப் பெறுகிறாள். 

 இராமன் சீதை தீயில் மூழ்கி வந்தப் பின்பும், கௌதமன் அகலிகைக் கற்சிலையான சாபத்திலிருந்து உயிர் பெற்றப் பின்பும் பரிசுத்தவாதிகளாக எண்ணினர். அவர்களுக்கு தங்கள் மனைவியர் புது மனப் பெண்கள் போல் தெரிந்தனர். ஆனால் அந்த இருப்பெண்களோ ஈருயிர் ஓருடலாய் இருந்த தங்கள் கணவன்மார்களே தங்களை நம்ப வில்லையே என்று எண்ணி மனதில் துன்பப்படுகின்றனர். 

 இந்திரன் மீது அகலிகை காதல் கொண்டிருப்பின் இந்திரன் இந்திரனாகவே வந்திருக்க வேண்டுமே, அவன் ஏன் கௌதமனாக உருமாறி வந்திருக்கிறான் என்பதை கௌதமர் ஒரு நிமிடம் யோசித்திருந்தால் சாபம் கொடுத்திருக்கவே வேண்டியதில்லை.

பெண்களை மையமிட்ட நிகழ்ச்சிகள், செய்திகள், சிக்கல்கள் முதலானவை இச்சிறுகதையில் இடம் பெற்றுள்ளன. அகலிகை சீதையிடம் இராமன் மனதிற்கு நீ தூய்மையானவள் எனத் தெரிந்தால் போதாதா? உலகுக்கு நீருபிக்க வேண்டுமா எனக் கேட்கிறாள். ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கைக் கொண்டு வாழ வேண்டும் என்றும், மேலும் பெண்கள் தற்சிந்தனையுடனும், தற்சார்புடனும் வாழ வேண்டும் என்பதைச் சிந்திக்கிறாள். 

 பெண்கள் தங்கள் சக்தியை உணருவதில்லை. எதிர்த்துப் போராடும் போர்க் குணத்தைப் பெண்களிடம் சமூகம் வளர்ப்பதில்லை. அடங்கிப் போகும் அடிமைச் சுபாவத்தைச் சமூகம் புகழும் காரணத்தால் அந்த முகமூடியையே பெண்கள் அணிய ஆசைப்படுகின்றனர் என்பது சீதையின் செயலால் அறியமுடிகிறது.

 முடிவுகள்

சாபத்தின் காரணமாக விமோசனம் பெற்றாலும் சமூகத்தில் களங்கப்பட்டவள் என்று முத்திரைக் குத்தப்படுவதிலிருந்து விமோசனம் பெற முடியவில்லை.

ஆண்டவனே ஆனாலும் பெண்ணைச் சந்தேகப்படக் கூடியவனாக இருக்கிறான்.

பெண் அவள் எந்த சூழ்நிலையில் ஏமாற்றப்பட்டாள் என காரணத்தை அறியாமல் விலைமகள் என ஏசுவது சமூகத்தில் காலந்தோறும் இருந்து வரும் ஒன்றாக இருக்கிறது.

காலந்தோறும் பெண்ணின் வாழ்வு ஆண்களையே நம்பியுள்ளது.காரணம் பொருளாதார ரீதியாகப் பெண் ஆண் மகனைச்சார்ந்தே வாழ்கிறாள். 

பெண் என்பவள் சமூகத்தில் போகப் பொருளாகவும், மோகப் பொருளாகவும், குழந்தையைப் பெற்றுத் தரும் கருவியாகவும் எண்ணியுள்ளனர். 

முனிப்பத்தினியாயினும், அரக்கியாயினும், குலமகளாயினும், விலைமகளாயினும் ஆண்களுக்கு அடிமைகளே என சமூகம் கற்பித்துள்ளது.

உலகில் இறைவனால் படைக்கப்பட்ட உயிரினங்களில் மிக அழகானதும்,இனங்களைப் பெருக்கி இன்பத்தைத் தந்து வாழச் செய்யும் சிறப்புடையதுமானஉயிரினம் பெண்ணினம். அதிலும் நம் மனித இனத்தில் பெண்களின் பங்கு முக்கியமான ஒன்றாகும். எனவே பெண்ணின் உடல், உள்ள உணர்வுகளை புரிந்து கொண்டு ஆண்கள் செயல்பட்டால் உலக இன்பத்துக்கு நன்மைப்பயக்கும்.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்