/* up Facebook

Sep 28, 2014

மனிதம் பேசும் மாடலிங் பெண் - டி.எல்.சஞ்சீவிகுமார்


சமூக சேவைக்கான கருணையும், மனித உரிமை மீறல்களுக்கு எதிரான போராட்டக் குணமும் ஃபேஷன் துறையில் ஆர்வம் கொண்ட ஓர் இளம் பெண்ணிடம் இருப்பது ஆச்சர்யம்தானே. அந்த ஆச்சர்யத்துக்குச் சொந்தக்காரர் ஷீபா, சென்னைவாசி.

திட்டப்பணி மேலாண்மையில் முனைவர் பட்டம் பெற்ற இவர், பிரபல தகவல் தொழில்நுட்பம் நிறுவனம் ஒன்றில் ‘டெலிவரி ஹெட்’ பொறுப்பில் இருக்கிறார். சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய ஷீபாவின் புகைப்படங்களை வலைத்தளம் ஒன்றில் பார்க்க நேரிட்டது. அதில் குழந்தைகள் புடைசூழ கேக் வெட்டிக்கொண்டிருந்தார் அவர்.

கடந்த ஐந்து வருடங்களாகத் தன் பிறந்தநாளைச் சேவையோடு இணைந்த கொண்டாட்டமாகத்தான் கடைப்பிடித்துவருகிறார் ஷீபா. ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கும் 50 குழந்தைகளையும் தன் வீட்டுக்கு அழைத்து வந்து, அவர்களுடன் சேர்ந்து தன் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடியிருக்கிறார்.

தனக்குப் பரிசளிக்கும்போது முடிந்தவரை அலங்காரப் பொருட்களைத் தவிர்த்து, நோட்டுப் புத்தகங்கள், உடைகள் அல்லது பணம் என உபயோகமானவற்றைக் கொடுக்கும்படி முன்னதாகவே நண்பர்களிடம் சொல்லியிருந்தார்.

அதன்படியே சுமார் ஐம்பதாயிரம் ரூபாய் பணமும், கணிசமான அளவுக்கு ஸ்டேஷனரி பொருட்களும் கிடைத்தன. அவற்றைக் குழந்தைகளுக்குக் கொடுத்து ஷீபா தன் பிறந்தநாள் கொண்டாட்டத்தை அர்த்தப்படுத்தியிருக்கிறார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.டெக். படிப்பில் கோல்டு மெடல் வாங்கியிருக்கும் ஷீபா, உளவியல் நிபுணரும்கூட. அறிவுசார் உளவியலில் (Cognitive psychology) ஆய்வியல் நிறைஞரான இவர், புரஃபெஷனல் கவுன்சிலிங் சைக்காலாஜிஸ்ட்ஸ் அமைப்பின் செயலாளராகவும் இருக்கிறார்.

மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு வார்த்தைகளை உச்சரிப்பது, உணவு உண்பது, கை கழுவுவது உள்ளிட்ட அடிப்படைப் பயிற்சிகளை அளிக்கிறார்.

“சென்னை சித்தாலப்பாக்கத்தில் இருக்கும் ஆதரவற்ற முதியோர் இல்லம் மற்றும் ஆதனூரில் இருக்கும் ஆதரவற்ற சிறுவர் இல்லம் ஆகியவற்றில் வாரந்தோறும் இலவசமாக கவுன்சிலிங் அளித்துவருகிறேன்” என்று சொல்லும் ஷீபாவுக்கு அழகுணர்ச்சி அதிகம்.

“ஆமாம், என்னை அழகுபடுத்திக் கொள்வதில், என்னை ரசிப்பதில் எனக்கு விருப்பம் அதிகம். நம்மை நாமே ரசிக்காமல், நம்மை நாமே நேசிக்காமல் போனால் பிறரை எப்படி நேசிக்க முடியும்? அழகுணர்ச்சி ஒவ்வொரு மனிதருக்கும் தேவை.

தவிர, அழகுணர்ச்சிக்கும் தன்னம்பிக்கைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தோற்றப் பொலிவே தன்னம்பிக்கையை அதிகரிக்கும்” என்கிறார்.

கடந்த 2007-ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு டைட்டில் வென்ற ஷீபா, மிஸ் பியூட்டிஃபுல் ஐஸ் அண்ட் மிஸ் பியூட்டிஃபுல் ஹேர் சப் - டைட்டிலையும் வென்றிருக்கிறார்.

மேலும் 2009-ம் ஆண்டு கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் இருந்து பலர் கலந்துகொண்ட மிஸ் சவுத் இண்டியா போட்டியில் மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்றிருக்கிறார். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு மாடலிங் மற்றும் சினிமாவில் இருந்த ஆர்வம் இப்போது இல்லை என்கிறார் ஷீபா.

“சினிமா, மாடலிங் போன்ற ஃபேஷன் துறைகளில் ஆசை இருந்தது உண்மைதான். உண்மையில் அது ஒரு வேஷம். அங்கெல்லாம் பெண்களுக்கான சுதந்திரம் குறைவு என்பதை உணர்ந்தபோது அதிலிருந்து விலக முடிவு செய்தேன். ஒரு பெண்ணாக அந்தத் துறைகளில் இருந்துகொண்டு சமூகரீதியாக இயங்க முடியாது என்பதுதான் யதார்த்தம்” என்கிறார்.

மனிதம் என்ற மனித உரிமைகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஷீபா, அவர் வசிக்கும் பகுதியில் பெண்களுக்கு எதிரான செயல்பாடுகளுக்கு எதிராகப் போராடி வருகிறார். தவிர, குழந்தைத் தொழிலாளர் பிரச்சினைகளை மையமாக வைத்து இவர் இயக்கிய ‘விடியலை நோக்கி’ மற்றும் ‘ஹேப்பினெஸ் பிஹைண்ட் டிராஜெடி’ ஆகிய குறும்படங்கள் கவனம் ஈர்க்கின்றன.

அடுத்து என்ன என்று ஷீபாவிடம் கேட்டால், “ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் இளம் வயதினர் பல்வேறு காரணங்களால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அவர்களுக்கானப் பிரத்யேக இலவச கவுன்சில் அளிக்க திட்டமிட்டுள்ளேன்” என்கிறார்.

நன்றி - தி ஹிந்து

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்