/* up Facebook

Sep 20, 2014

ஊழிக்காலம்: முள்ளிவாய்க்கால் நாட்குறிப்பு: கபிலன் சிவபாதம்


ஊழிக்காலம் பெயரே சற்று வித்தியாசமாக உள்ளது. இதுவரை கேள்விப்படாத சொல். தேடிப்பார்த்ததில் உயிரினங்களின் உருவாக்கத்திற்கும் தோற்றத்திற்கும் இடைப்பட்ட காலமே ஊழிக்காலம் என்றழைக்கப்படுகின்றது என தெரியவந்தது. தமிழனத்தின் அழிவும் அதற்கு பின்னரான வாழ்வும் எப்படி இருக்கப்போகின்றது என்பதையும் இந்நூல் சொல்லி நிற்கின்றது.

இது ஊழிக்காலம் நூல் பற்றியது மட்டுமே, தமிழ்க்கவி அவர்களின் ஏனைய பேட்டிகள், நேர்காணல்கள் என வேறெந்த விடயத்திற்குள்ளும் போகவில்லை.

ஆரம்பத்திலேயே குறிப்பிட்டு விடுகின்றேன். இந்நூலை வாசிக்க வேண்டாம் என்று அறிவுரைகளும் ஆலோசனைகளும் இலவசமாகவே தரப்பட்டன. இணையத்தளங்களிலிலும் அப்படியான கருத்துக்களே மேலோங்கி காணப்பட்டது. இதுவே இந்நூலை நான் வாசிப்பதற்கு உந்துசக்தியாகவும் அமைந்தது.

தமிழ்க்கவி அவர்களை நான் சிறுவனாக இருந்த போதே தமிழ் தொலைக்காட்சியில் பார்த்துள்ளேன். அதன் பின்னர் அவரை பற்றி கேள்விப்படுவது இந்நூலின் மூலமே. ஏற்கனவே “ஈழம்- சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்” மற்றும் “கூண்டு” ஆகிய புத்தகங்களை வாசித்துள்ளதால் இதில் புதிதாக என்ன இருக்கப்போகின்றது என்ற மனநிலையிலயே வாசிக்க ஆரம்பித்தேன்.

இராணுவத்தினரின் பிடியிலிருக்கும் பார்வதியின் நினைவுகள் பின்னோக்கி செல்ல கண்களின் திரையில் கதை விரிகின்றது.

ஆரம்பம் முதலே பார்வதியின் இடப்பெயர்வை பக்கத்திலிருந்தே பார்ப்பது போல் கொண்டு சொல்லும் எழுத்து நடை அழகு. இறுதிவரை தினேஸின் நிலை என்னவாகும் என்றே தோன்ற வைக்கின்றது. தினேஸ் ஒவ்வொரு முறையும் இடப்பெயர்விற்கு தயார்படுத்தும் போது சர்வசாதரணமாக குண்டுகளிற்கு மத்தியில் சென்று பொருட்களை எடுத்துவரும் தினேஸ் திரும்புவாரா மாட்டாரா.. அப்படியே அவர் திருமபாவிட்டால் பார்வதியும் அவரை நம்பியுள்ளவர்களும் என்னாவார்கள் என்று மனம் கேட்டுக்கொண்டேயிருக்கின்றது. அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதை யூகிக்க முடியாமல் தொடர்ந்து வாசிக்க வைக்கின்றது.

வந்துபோகின்ற ஒவ்வொரு மனிதர்களாகவும் ஓரு நிமிடம் வாழ்ந்துவிட்டுதான் மனது தொடர்ந்து செல்கின்றது. குண்டுகளை பல்லால் கடித்து துப்பியும், கண்களால் செயலிழக்கச் செய்தும் வீரம் காட்டும் சினிமா ஹீரோக்களை விட இங்கே வந்துபோகும் ஒவ்வொரு குடும்பத்தலைவர்களும் குண்டுகளை நேருக்நேர் சந்தித்து பயணிக்கும் கதாநாயகர்கள் ஆகின்றனர்.

ஊழிக்காலத்தில் இடம்பெற்ற ஒரு நல்ல விடயம் தமிழ் சமூகத்திடமிருந்த ஏற்றத்தாழ்வுகளை குறைந்தபட்சம் போர்க்காலத்திலாவது இல்லாமல் ஆக்கியது. எதைக் கொண்டு வந்தோம் கொண்டு செல்வதற்கு.. இறுதியில் எல்லாமிழந்து நின்றதைத்தான் காணமுடிந்தது. பணம் வேண்டாம் உணவுப்பொருட்கள் தாருங்கள் என்று நவீன உலகில் கேட்கப்படுகிறது அங்கே..

குண்டுகள் மட்டுமே அவர்களை வேட்டையாடவில்லை. இயற்கையும் தன் பங்கிற்கு தாண்டவம் ஆடிவிட்டுச் சென்றுள்ளது. பசி, நோய், வெயில், மழை போன்றவற்றுடன் இயல்பான உடற்பசியும் சேர்ந்து கொண்டது.

குண்டடிபட்டு கீழே விழுந்தவரிடம் பால் பக்கெற்றை திருடியதாகட்டும், சுயநலத்திற்காக அடிப்படைத்தேவைகளை துஷ்பிரயோகம் செய்த தளபதிகள், போராளிகள், சக மனிதர்களாகட்டும், “இப்படி மனிதாபிமானமே இல்லாமல்” நடந்து கொள்கிறார்களே என்று எண்ணத்தோன்றுகிறது. உயிர் வாழ வேண்டும் என்ற ஆசை இல்லாதவர்களே இருக்கமுடியாது. இப்படியொரு நிலையில் நான் என்ன செய்திருப்பேன் என்று இந்நூலை வாசிக்கும் ஒவ்வொருவரும் ஒரு நொடி சிந்தித்துப்பார்த்தோமானால், எங்களில் பலரின் ஒழுக்கம் ஒருமுறை எம் முன் வந்து பல்லிளித்துவிட்டு போகும்.

இடையிடையே பார்வதி சந்திக்கும் சில மனிதர்கள், அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத அரசியல் கருத்துக்களை சொல்லிவிட்டு போனாலும் அவை யதார்த்தமான உண்மைகளே. தமிழீழ விடுதலைப்போராட்டம் துரோகத்தால் வீழ்த்தப்பட்டது என்பது யாவரும் அறிந்த உண்மை. துரோகம் என்பது தனியே சர்வதேசம் மட்டும் செய்ததில்லை. அங்கே களத்திலும் நடந்தேறியுள்ளது என்பதை இந்நூல் வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது. அங்கே காட்டிக்கொடுத்தவனும் போராளி, காப்பாற்றியவனும் போராளி.

விடுதலைப்புலிகளில் சிலர் துரோகியாகியிருக்கலாம். ஆனால் விடுதலைப்புலிகளின் ஆன்மாவின் நேர்மையை தமிழ்க்கவி எங்கேனும் குறிப்பிடுவார் என்று எதிர்பார்த்தேன். ஏமாற்றமே. எல்லாப் போராட்டங்களையும் போலவே அதிகாரத் துஷ்பிரயோகமும், துரோகமும்  தமிழீழ விடுதலைப்போராட்டத்தையும் விட்டுவைக்கவில்லை.

அங்கே காட்டிக்கொடுத்தவனும் இங்கே காசை அடித்தவனும் இன்றும் நம்முன்னே நடமாடிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். இதுவும் ஒரு நாள் கடந்துபோகும் என்று சொல்லி காலத்தை வீணடிப்பதைவிட, அவர்களை இனங்கண்டு மக்கள் மத்தியில் நிறுத்துவது இன்னொரு அவலத்தை தடுத்து நிறுத்தும்.

நாவல் முன் வைக்கும் இன்னொரு குற்றச்சாட்டு கட்டாய களப்பணிக்கு ஆட்களை பிடித்தது மற்றும் மக்களை கேடயங்களாக பயன்படுத்தியது. இது ஏற்கனவே கார்டன் வைஸ், பிரான்சிஸ் ஹரிசன் போன்றவர்கள் தங்கள் நூல்களில் குறிப்பிட்டவை தான். ஆனால் அவர்கள் குற்றச்சாட்டை வைத்துவிட்டு அதற்கான பதிலையும் முடிந்தளவு தேடியிருந்தார்கள். மற்றும் புலிகளை அந்த நிலைக்கு தள்ளியவர்கள் மீதும் கடுமையான விமர்சனங்கள் முன்வைத்தார்கள். இந்நூலில் வெறுமனே எங்கோ தப்பு நடந்திருக்கின்றது என்று மட்டும் சொல்லிட்டு முடிந்துவிட்டது.

கட்டாயக் களப்பணிக்கு ஆட்களைப் பிடித்தல் மற்றும் மனிதகேடயங்களாக பாவித்தல் முதலானவற்றைக் காரணம் சொல்லி எப்படி புலிகள் இயக்கத்தை வெறுக்க முடியாதோ அதே போல் இந்த இரண்டு குற்றச்சாட்டிற்குமாக இந்த நூலையும் தள்ளிவைத்துவிட முடியாது.

இது போன்ற முள்ளிவாய்க்கால் நாட்குறிப்புக்கள் பல வெளிவரவேண்டும். இப்படியொரு அவலம் தமிழினத்திற்கு நடந்ததென்பதை கடந்த 5 ஆண்டுகளில் மறந்துவிட்ட சமூகத்திற்கு இப்படியான நூல்கள் நூற்றாண்டுகள் கடந்தும் எமது அழிவை நினைபடுத்தும் ஆவணமாக அமையும்.

கபிலன் சிவபாதம்: தனது ஒன்பதாவது வயதில் சுவிற்சர்லாந்திற்கு புலம்பெயர்ந்த இரண்டாம் தலைமுறை ஈழத்தமிழர். வாசிப்பிலும் அதுபற்றி எழுதுவதிலும் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர்.

நன்றி - எனில்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்