/* up Facebook

Sep 18, 2014

கண்டுகொள்ளப்படாத கண்ணகி - சா.ரு. மணிவில்லன்


தமிழ் நவீன இலக்கியத்தில் பெண்களைப் பிரதான கதாப்பாத்திரங்களாகக் கொண்ட பல நாவல்கள் உள்ளன. ஆனால் பெண்ணியப் பார்வையில் படைப்புகளின் எண்ணிக்கை மிகவும் குறைவானது தான். பெண் படைப்பாளிகளின் படைப்புகள் கூட, பல நேரங்களில் பொதுப் பார்வையில் அல்லது ஆண்கள் பார்வையில் அமைந்து விடுகின்றன. வெகுசில படைப்புக்கள் இதற்கு விதிவிலக்காக இருப்பதுண்டு. அப்படி விதிவிலக்கான படைப்புகள் தமிழ் சூழலில் கொண்டாடப்படுகிறதா அல்லது கண்டுகொள்ளப்படாமல் விடப்படுகிறதா என்பது அந்த படைப்பாளி சார்ந்திருக்கும் குழு அல்லது அரசியல் சார்ந்தே இருக்கிறது. தன் படைப்பின் மீது மட்டும் நம்பிக்கை வைத்தியங்கும் படைப்பாளிக்குத் தன்னம்பிக்கை மட்டுமே துணையாக இருக்க முடியும் என்று தோன்றுகிறது.

பெண்களின் வலியையும், வேதனைகளையும் தொடர்ந்து தன் படைப்புகளில் பதிவு செய்து வருபவர் சு.தமிழ்ச்செல்வி. அளம், மாணிக்கம், கீதாரி எனத் தன் நாவல்களில் கிராமத்து பெண்களின் வாழ்வை எளிய மொழியில் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார். சு.தமிழ்ச்செல்வியின் ஆறாவது நாவல் கண்ணகி. உயிர்மை வெளியீடாக 2008ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரில் மீன் வியாபாரம் செய்யும் கண்ணகியின் கடந்த காலக் கதைதான் கண்ணகி நாவல். சித்தேரிக் குப்பத்தில் வாழ்ந்த கசாம்புவிற்குத் தொழில் மாட்டுத் தரகு. இவர் மூன்று மனைவிகள், 17 மகன்கள், 1 மகள் என ஒரு பெரிய குடும்பத்தின் தலைவர். தன் குடும்பத்தின் தேவைக்காகவே வாராவாரம் மாடு வெட்டுவார். வீட்டுக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு மீதமுள்ளதை வியாபாரம் செய்வார்.

கசாம்பின் ஒரே மகள் கந்தாமணி. அவளின் ஒரே மகள்கண்ணகி. கண்ணகியின் குடும்பம் மணித்தாற்றின் கரையோரம் ஆயியார் மடத்தெருவில் உள்ளது. ஆற்றின் அக்கரையில் ஆற்றங்கரைப் பிள்ளையார் கோவில். அதற்கு அடுத்து ரைன் கரை உள்ளது. மாலை வேளைகளில் ஆற்றுப் பகுதியில் பாலியல் தொழில் நடைபெறும். ரைன் கரையில் பகல் பொழுதிலும் நடக்கும்.

கண்ணகியின் மேல் அப்பனும் தாத்தனும் பாசத்தோடு இருக்கின்றனர். பள்ளியில் பாதியிலே நிறுத்தப்படும் கண்ணகி வீட்டோடு இருக்கிறாள். 10 வயதிலே 20 வயது பெண் போல் தோற்றம் அவளுக்கு. ஆற்றுக்கு  வருபவர்கள், ரைன் கரைக்கு செல்பவர்களின் பார்வைக்கு பயந்து மகளை அப்பா வீட்டுக்கு அனுப்பி வைக்கிறாள் கந்தாமணி. கண்ணகி சடங்காகியும் தாத்தா வீட்டிலேயே இருக்கிறாள்.

மின்சார வாரியத்தில் கூலியாக வேலை பார்க்கும் ஆசைதம்பி சித்தேரிக் குப்பத்திற்கு மின் கம்பம் நட குழிதோண்ட வருகிறான். அவனின் சித்தப்பனின் கூட்டுகாரன்தான் கண்ணகியின் அப்பன். அந்த அறிமுகத்தில் காசாம்பி வீட்டுக்கு வந்து போகையில் கண்ணகியை மயக்கி கார்குடல் அழைத்து சென்றுவிடுகிறான்.

தாத்தா பாட்டி வந்து அழைத்தபோதும் அவர்களுடன் செல்லாமல் ஆசைதம்பியை கல்யாணம் செய்து கொள்கிறாள். பதிமூன்று வயதில் உறவுகளை விட ஆசைத்தம்பிதான் முக்கியமாக பட்டது அவளுக்கு…

கண்ணகி வந்த நேரம் ஆசைதம்பி வேலை நிரந்தரமாகி மாதம் 150 ரூபாய் சம்பளக்காரனாகி விடுகிறான். சம்பளம் உயர உயர ஆசைத்தம்பியின் மனைவிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து, மூன்று மனைவி காரனாகிவிடுகிறான்.

kannagiகண்ணகியின் துயரங்களும் பெருகுகின்றன. அவளுக்கு இரண்டு குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன. காரணம் ஆசைத்தம்பியின் அடி உதை தான். கார்குடலில் கண்ணகிக்கு ஆதரவாக அவளது சின்ன மாமியார் சின்னவெட மட்டுமே. காலம் கடக்க கடக்க கசப்பே மிஞ்சுகிறது அவளுக்கு. ஒரு நாள் யாரிடமும் சொல்லாமல் கார்குடலை விட்டு அவள் வெளியேறுகிறாள்.

பிறந்த வீடு செல்லும் கண்ணகியை அவளுடைய அம்மா திட்டி அனுப்பி விடுகிறாள். பிறகு மனம் போன போக்கில் பயணித்து பாண்டி போய்ச் சேருகிறாள். பேருந்து நிறுத்தத்தில் தன்னைப் பரிவோடு ஆதரிக்கும் திவ்யநாதனை நம்பி அவனோடு செல்கிறாள். நெருக்கடியான வாழ்கையை வாழும் திவ்யநாதன் கண்ணகியைத் தன் மரியம் புஷ்பத்திடம் வேலைக்கு சேர்த்து விடுகிறான்.

திவ்யநாதனிடம் நெருக்கமாக பழகும் கண்ணகி கர்ப்பம் தரித்ததும், உண்மையை ஏற்கத் தெம்பில்லாத திவ்யநாதன் கண்ணகியை விட்டு விலகிச் செல்கிறான். பழியை தான் மட்டுமே சுமந்து பாண்டி அரசு மருத்துவமனையின் கழிவறையில் தன் மகன் பாரதியை பெற்றறெடுக்கிறாள்.

அப்பன் பெயரை வெளிப்படையாகச் சொல்லமுடியாத குழந்தையை வளர்க்க விரும்பாத கண்ணகி குழந்தையை ஓர் ஆசிரமத்தில் சேர்த்து விடுகிறாள். பக்கத்து வீட்டுக்காரியின் தயவில் சிங்கப்பூர் பயணிக்கிறாள்.

சிங்கப்பூரில் அவளுடைய முதலாளி அவளைத் தன் இச்சை பெண்ணாக வைத்துக் கொள்கிறான். முதலில் இதை மறுத்த கண்ணகி அடி உதை பட்டு வேறு வழி இல்லாமல் அதற்கு ஒத்துப் போகிறாள். பதினாலு ஆண்டுகள் சிங்கப்பூரிலேயே அன்சாருடன் வாழ்கிறாள்.

ஊருக்கு பணம் அனுப்பித் தன் பிள்ளையை எடுத்து வந்து வளர்க்க சொல்கிறாள். 14 ஆண்டுகளுக்குப்பின் ஊர் திரும்பும் கண்ணகி மறுபடியும் ஆசைத்தம்பியுடன் குடும்பம் நடத்துகிறாள். எல்லாம் தெரிந்திருந்தாலும் அவளிடம் இருக்கும் பணத்துக்காக அவனும் அடங்கிப் போகிறான்.

சிங்கப்பூர் சென்று திரும்பும் பாரதிக்கு அம்மாவை பிடிக்காமல் தனியாகச் சென்று விடுகிறான். அவளிடம் இருக்கும் பணத்தை கொஞ்சம் கொஞ்சமா வாங்கி மகள்கள் திருமணத்தை நடத்தி வைக்கும் ஆசைத்தம்பி நோய்வாய்பட்டு இறந்து போகிறான்.

கண்ணகி மேல் மரியாதை இல்லாமல் விலகிச் செல்லும் மகன் பாரதியை நினைத்து வருந்துகிறாள். மகன் பாரதி நெருங்கி வந்து தன் பிள்ளைகளின் காது குத்து நிகழ்வுக்கு அழைக்கும்போது, சிங்கப்பூரில் இருந்து ஊர் திரும்பும் அன்சார் அவளை திருச்சி வரச் சொல்கிறான். ஒரே நேரத்தில் இரண்டு பக்கமிருந்தும் அழைப்பு. கண்ணகி எங்கு சென்றாள் என்பதுதான் சிறப்பான அம்சமாகிறது.

கண்ணகியின் இளம் வயதுகளில் வாழ்கையில் நடந்த நிகழ்வுகள் பற்றிய பதிவு, பிள்ளைகளின் பார்வையில் ரைன் கரையிலும், ஆற்றிலும் நடக்கும் பாலியல் தொழில் பற்றிய பதிவுகள், பருவ வயதில் இனக்கவர்ச்சியினால் ஏற்படும் நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் என எல்லாவற்றையும் மிக குறைந்த வார்தைகளிலேயே காட்சி படுத்தி விடுகிறார்.

கசந்தாமணி, தன் வீட்டில் இருந்தால் என்ன மாதிரியான தவறுகள் ஏற்படுமென அஞ்சி மகளை அப்பன் வீட்டுக்கு அனுப்பி வைத்தாளோ அதே தவறுதான் அங்கேயும் நடந்தது வாழ்வின் முரண்தான்.

கார்குடல் காவல் தெய்வங்கள் குதுர வீரன் கத, கரும்பாயிரம் கருப்பு சாமி கதை, வேடப்பர் கத, பாழாற்று கத, முடவன் முழுக்கு கதை என பல உப கதைகள் நாவலுக்கு வலுச் சேர்க்கின்றன. ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள கடவுள்கள் பற்றி மக்கள் கூறும் கதைகள் ஏராளம். அவற்றுள் சிலவற்றை நாவலில் சரியான இடங்களில் பதிவுசெய்துள்ளார்.

காலனியில் பிறந்து விட்டோம் ஆண்டைகளின் தயவில் வாழ நினைக்கும் நாகம்மாள் வாழும் அதே ஊரில்தான் சுயமரியாதையாக வாழப் போராடும் எட்டு செட்டிகளும் வாழ்கிறார்கள். சாதியைப் படைத்த சாமியைத் திட்டுவதும், துயரங்களில் சாமியிடம் வேண்டுவதுமென வாழும் கிராமத்து மக்களை இந்தாவல் முழுதும் காணலாம்.

ஆசைதம்பி, தான் காதலித்து அழைத்து வந்து கலியாணம் செய்து கொண்டவள் உயிரோடு இருக்கும்போதே மேலும் இரண்டு பெண்களைக் கல்யாணம் செய்துகொள்கிறான். மற்றொரு பெண்ணிடம் உறவு வைத்துக்கொண்டு அவளைத் தன் மனைவியுடன் சேர்த்தே படம் பார்க்க அழைத்துச் செல்கிறான். அவனை யாரும் அவமதிக்கவில்லை குறை சொல்லவில்லை. ஆனால் அறியாமையால், கண்ணகி செய்ததை மட்டும் குறை கூறுகின்றனர். அவள் அம்மாவே அவளை அவமதிக்கிறாள்.

இங்கு ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி என இருப்பது ஏன் என கேள்வி எழுப்புகிறாள். முதலில் பொறுமையாக இருந்து இறுதியில் துணிச்சலான முடிவை எடுக்கிறாள்.

கணவன் இரண்டாம் கல்யாணம் செய்தபோது அதை எதிர்த்து தன் உரிமையை நிலை நாட்ட முடியாதவள், கர்ப்பமாக்கிவிட்டு விலகிச் செல்லும் திவ்யநாதனை அம்பலபடுத்தாமல் தானே அவமானத்தை சுமந்தவள், வீட்டு வேலைக்கென கூறி தன்னை வேசை தொழிலுக்கு விற்றவர்கள் மீதும் கருணை காட்டியவள், இறுதியில் தாய் – மகன் உறவு இன்னும் விரிசலாகும் என்ற நிலையில் தன்னை வேசியாக வைத்திருந்தாலும் ஒரு மனுசியாக மதிக்க தெரிந்த அன்சாரைப் பார்க்கப் புறப்படுகிறாள்.

தமிழ் மரபில் கற்பின் பிரதிநிதியாக அல்லது அடையாளமாக கொண்டாடப்படும் காவிய கண்ணகியின் கற்பிதத்திற்கு மாறாக இருக்கிறாள் இந்த கண்ணகி. பெண்ணிய பார்வையில் ஒரு பெண்ணின் வாழ்வை மிகவும் கச்சிதமான மொழியில் சிறப்பாக பதிவு செய்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த சு.தமிழ்ச்செல்வி கடலூர் மாவட்டத்தின் கிராமங்கள் சார்ந்த பழக்க வழக்கங்களையும், நாட்டார் கதைகளையும் சொல் வழக்குகளையும் இந்நாவலில் நன்றாகப் பதிவு செய்துள்ளார்.

கண்ணகி, சு.தமிழ்செல்வி
உயிர்மை பதிப்பகம்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்