/* up Facebook

Sep 5, 2014

செப், 5: அன்பென்றால்..!"அன்னை தெரசா" : நினைவு தின சிறப்பு பகிர்வு!


ஒரு பெண், தன்னுடைய பன்னிரண்டு வயதில் துறவறம் புக முடிவு செய்து, பதினெட்டாவது வயதில் வீட்டை விட்டு வெளியேறி, தான் என்று இல்லாது, இந்த உலகத்தையே தன்னுடைய குடும்பமாய் பாவித்த...ு, சக மனிதர்களின் வாழ்க்கை மேம்பட தன்னுடைய இறுதி நாள் வரை ஒரு பெண் போராடிக்கொண்டே இருந்திருக்கிறார் என்றால் அது "அன்னை தெரசா"வை தவிர வேறு யாராக இருக்க முடியும்.

1910-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 தேதி, அல்பேனியாவில் பிறந்த அன்னை தெரசாவிற்கு பெற்றோர் இட்ட பெயர் "ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ". கோன்ஜா என்பதற்கு அல்பேனிய மொழியில் 'ரோஜா அரும்பு' என்று அர்த்தமாம். தன்னுடைய பதினெட்டு வயதில் "லொரேட்டோ சகோதரிகளின் சபையில்" மறைப்பணியாளராகத் தன்னை இணைத்துக் கொண்டவர், ஏழை மக்களின் வாழ்க்கை தரம் உயரவும்,எய்ட்ஸ், தொழுநோயாளிகள், காச நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தன்னுடைய இறுதி மூச்சு உள்ளவரை உழைத்திருக்கிறார். இந்தியாவில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதற்காகவே இந்தியா வந்தவர், டார்ஜிலிங்கில் தன்னுடைய பணியை தொடங்கினார்.
செப்டம்பர் 10, 1946 இல் ஆண்டு, லொரேட்டோ கன்னிமடத்திற்கு தெரேசா பயணம் செய்த பொழுது அவருக்கு ஏதோ உள்ளுணர்வு ஏற்பட்டிருக்கிறது.அதன் பின்னர் அவர் கன்னியர் மடத்தை விட்டு, ஏழைகளோடு குடிசை பகுதியில் வாழ்ந்து வரத்தொடங்கினார். 1948-ஆம் ஆண்டில் ஏழைகளுடனான தனது சேவையை ஆரம்பித்தவர், லொரேட்டோ துறவற சபையின் உடைகளைக் களைந்து, நீல கரையிடப்பட்ட சாதாரண வெண்ணிற பருத்தி புடவையை அணிந்தது, இந்திய குடியுரிமையினைப் பெற்றுக்கொண்டு குடிசை பகுதிகளுக்குள் சேவை செய்து வரத் தொடங்கினார். தொடக்கத்தில், பள்ளிக்கூடம் ஆரம்பித்த அவர் பின்னர் ஆதரவற்றோர் மற்றும் பசியினால் வாடுவோரின் தேவைகளை அறிந்து அவர்களது பசியினை போக்கிட எல்லா முயற்சிகளையும் செய்து வந்தார். அவரது முயற்சிகள் விரைவிலேயே பிரதமர் உட்பட இந்தியாவின் உயர் அதிகாரிகளின் கவனத்தை அவர் பக்கம் ஈர்த்து அவர்களது பாராட்டுதலைப் பெற்றுத்தந்தன.

தெரேசா தனது நாட்குறிப்பில், தனது முதல் வருடம் துன்பங்கள் நிறைந்ததென்றும், வருமானமில்லாத காரணத்தால் உணவுக்காகவும், ஏனைய பொருட்களுக்காகவும் யாசிக்க நேர்ந்ததென்றும், ஆரம்ப நாட்களில் சந்தேகமும், தனிமையும், கன்னிமடத்தின் வசதிகளுக்குத் திரும்பும் சலனமும் ஏற்பட்டதென்றும் தனது நாட்குறிப்பில் எழுதினார்.

எத்தனை எத்தனை இன்னல்கள் அவருக்கு வந்த போதிலும், தான் எடுத்த காரியத்தில் பின்வாங்காமல் ஏழை மக்களின் வாழ்க்கை தரம் உயர வேண்டும்,அவர்களின் பசி போக வேண்டும் என்பதையே தன்னுடைய முழு மூச்சாய் கொண்டு தான் எதிர் கொண்ட சவால்களை எதிர்த்து வாழத் தொடங்கினார்.அதன் பின்னரே கொல்கத்தா மாநகரில் "அன்பின் பணியாளர்" என்ற சபையினை நிறுவி பலரும் ஏழை மக்களுக்காக தொண்டு செய்ய வழி வகுத்தார். இந்த சபையின் குறிக்கோளாக அவர் கூறியது, "உண்ண உணவற்றவர்கள், உடுத்த உடையற்றவர்கள், வீடற்றவர்கள், முடமானவர்கள், குருடர்கள், தொழு நோயாளிகள் போன்றோர்களையும், தங்களை சமூகத்திற்கே தேவையற்றவர்களெனவும், அன்பு செய்யப்படாதவர்களெனவும், கவனிக்கப் படாதவர்களெனவும் எண்ணிக்கொண்டிருப்பவர்களையும், சமூகத்திற்கே பெரும் பாரமென்று எண்ணப்பட்டு அனைவராலும் புறக்கணிக்கப்பட்டவர்களையும் கவனித்தலே ஆகும்." இந்த குறிக்கோளோடு இறுதி வரை பயணித்து வந்தார்.

கொல்கத்தாவில் 13 உறுப்பினர்களோடு ஆரம்பிக்கப்பட்ட இச்சபை, இவர் இறந்த போது 'அன்பின் பணியாளர் சபை' 123 நாடுகளில் 610 சபை செயல்பட்டுக் கொண்டிருந்தது.இன்று 6000க்கும் மேலான நல்ல உள்ளங்களால் நடத்தப்படும் அநாதை இல்லங்கள் ,எய்ட்ஸ் நலவாழ்வு மையங்கள், தொண்டு மையங்களையும் தன்னகத்தே கொண்டு அகதிகள், குருடர், ஊனமுற்றோர், முதியோர், மது அடிமைகள், ஏழை எளியோர், வீடற்றோர், வெள்ளத்தினாலும், தொற்றுநோயாலும் பஞ்சத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்களைக் கவனிக்கும் இடமாகவும் இருக்கிறது.
1970-களில் அன்னை தெரசாவின் சேவையை இந்தியா அறிந்திருந்தாலும், உலகம் முழுவதும் தெரிவதற்கு காரணமாக இருந்தது மேல்கம் முக்கெரிட்ஜ்ன் "சம்திங் பியூடிபுல் பார் காட்" என்ற ஆவணப்படம் தான்.இந்திய குடியுரிமை பெற்ற இவருக்கு, இவரது சேவைக்காக இந்திய அரசு "பாரத ரத்னா" விருது வழங்கி கௌரவப்படுத்தியது.1979-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு கொடுக்கப்பட்டது.அதற்கு பரிசாக கொடுக்கப்பட்ட தொகை முழுதையும், ஏழைகளுக்கே செலவிட வழி செய்தார்.இவரது அதிகாரபூர்வ வாழ்க்கைச்சரித்திரம், இந்திய ஆட்சிப் பணியாளரான நவீன் சாவ்லாவால் எழுதப்பட்டு 1992-ல் வெளியிடப்பட்டது.

ஏழை பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு இல்லை, ஜாதி மத பேதமில்லை, நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவனையும் சக மனிதனாய் நினைத்து எல்லோர் இடத்திலும் அன்பு செலுத்தியதால், "ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ" என்ற அல்பேனிய பெண்ணை, இந்திய மக்கள் தங்களின் அன்பின் வெளிப்பாடாக "அன்னை தெரசா" என்று அழைக்கத் தொடங்கினார்கள். உலகமே போற்றும் அன்பின் வடிவமான "அன்னை தெரசா" நினைவு தினம் இன்று.

-இ.லோகேஸ்வரி

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்