/* up Facebook

Sep 7, 2014

சென்னை 375: சென்னையில் மிளிர்ந்த பெண்மை - ஷங்கர்ருக்மணி அருண்டேல்
ருக்மணி அருண்டேல்
டாக்டர் லஷ்மி
டாக்டர் லஷ்மி
டி.பி.ராஜலட்சுமி
டி.பி.ராஜலட்சுமி
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
சமைத்துப் பார் மீனாஷி அம்மாள்
சமைத்துப் பார் மீனாஷி அம்மாள்
எம்.எஸ்.சுப்புலட்சுமி
எம்.எஸ்.சுப்புலட்சுமி
சென்னை தினம் கொண்டாடுகிற வேளையில் சமூக மாற்றத்துக்கான காரணகர்த்தாக்களாகவோ, ஏதோ ஒரு துறையில் களம்கண்ட காரிகைகளாகவோ இருந்த சென்னைப் பெண்களையும் சேர்த்தே கொண்டாட வேண்டும். அப்போதுதான் அந்தக் கொண்டாட்டம் முழுமை பெறும். அந்த வகையில் சமூகத்துக்குப் பங்காற்றிய பெண் ஆளுமைகள் பற்றிய தொகுப்பு:

டாக்டர் லக்ஷ்மி, குடும்ப நாவல்களின் முன்னோடி

திருச்சி மாவட்டத்தில் தொட்டியம் என்ற ஊரில் 1921-ம் ஆண்டு மார்ச் மாதம் 23-ம் தேதி திரிபுரசுந்தரியாகப் பிறந்தவர். இவர் எழுதுவதற்காக வைத்துக் கொண்ட புனைப்பெயர் ‘லக்ஷ்மி’. சிறு வயதில் இருந்து மருத்துவராகும் கனவைச் சுமந்துகொண்டு படிப்பில் சிறந்து விளங்கிய இவர், சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். அப்போதே கதைகளையும் எழுதத் தொடங்கினார்.

மருத்துவக் கல்விக்கு இனிமேலும் தன்னால் செலவு செய்ய முடியாத நிலையில் இருப்பதாகவும், படிப்பை நிறுத்திவிட்டு ஊருக்கு வரச் சொல்லியும் இருந்த தந்தையின் கடிதம் திரிபுரசுந்தரிக்கு வேதனையையும் திகைப்பையும் அளித்தது. அந்தச் சமயத்தில்தான் ஒரு அமெரிக்கச் செய்தித்தாள் நறுக்கு அவர் கண்ணில் பட்டது. அமெரிக்க மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர், தன் படிப்புக்காகக் காய்கறி லாரி ஒட்டிச் சம்பாதித்து அதில் வரும் வருவாயில் படித்து அறுவைசிகிச்சை நிபுணர் ஆனார் என்ற தகவல் அவரைப் பொறுத்தவரை திருப்புமுனையாக இருந்தது.

நாள்தோறும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இருந்து பிராட்வே வழியாக டிராம் வண்டியில் பயணிக்கும்போது ஒரு நிறுத்தத்தில் ‘ஆனந்த விகடன்’ பெயர்ப் பலகை கொண்ட அலுவலகத்தைப் பார்த்திருந்த திரிபுரசுந்தரி, அதன் ஆசிரியர் எஸ்.எஸ். வாசனைச் சந்தித்து உதவி கேட்க முடிவுசெய்தார். மறுநாளே ஒரு கதையை எழுதி வரச் சொன்னார் வாசன். இரவு முழுவதும் கண் விழித்து ‘தகுந்த தண்டனையா?’ என்ற சிறுகதையை எழுதி அளித்தார். அப்போதைய விகடன் பொறுப்பாசிரியர் கல்கியைச் சந்தித்து ‘லக்ஷ்மி’ என்ற புனைப்பெயரையும் இட்டுக் கொடுத்தார்.

கதை பிரசுரமானது. ஏழு ரூபாய் சன்மானம் கிடைத்தது. அடுத்தடுத்து அவருக்கு உதவும் வகையில் ஒரு சிறுகதைக்கு 10 ரூபாய் வீதம் சன்மானம் அளிக்கப்பட்டது. அடுத்து ஒரு சிறு தொடர் எழுதவும் வாய்ப்பு வந்தது. அதற்குச் சன்மானம் ஐநூறு ரூபாய்.

மருத்துவராக ஆன பிறகு திரிபுரசுந்தரிக்கு அவரது எழுத்தே வாழ்க்கைத் துணையையும் அளித்தது. தாய்மை என்ற மருத்துவ நூலுக்காக விருது வாங்கச் சென்றபோது இலங்கையில் கண்ணபிரான் என்பவரைச் சந்தித்து அது திருமணமாகக் கனிந்தது.

சென்னையில் ஒரு டிராம் வண்டிப் பயணம் மூலம் தனது விதியையே மாற்றிக்கொண்ட குடும்பக் கதையாசிரியர் டாக்டர் லக்ஷ்மிக்கு ‘ஒரு காவிரியைப் போல’ நாவலுக்கு சாகித்ய அகாடமி பரிசும் கிடைத்தது. இவர் 1987-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி காலமானார்.

சமைத்துப் பார் மீனாக்ஷி அம்மாள், சமையல் உலகின் ராணி

மெட்ராஸின் உணவு வரலாற்றில் மைலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடம் சாலையில் எளிமையாகக் காணப்படும் 188-ம் எண் வீட்டுக்கு முக்கிய இடம் உண்டு. 70 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்ப் பெண்களின் கைவிளக்காக விளங்கிவரும் சமைத்துப் பார் புத்தகங்களின் நூலாசிரியர் மீனாக்ஷி அம்மாள் அங்கேதான் வாழ்ந்தார்.

ஒரு இளம் பெண் அடுப்பு முன்பிருந்து பானையைக் கிளறுவது போன்ற கோட்டுச் சித்திரம்தான் சமைத்துப் பார் புத்தகத்தின் அட்டைப்படம். இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு புதிதாகத் திருமணமாகி வெளியூர் செல்லும் அனைத்துப் புதுப்பெண்களும் தங்கள் மாமியாரையும், நாத்தனார்களையும் மனம் குளிர்விக்கப் பிரியமான தாயாகத் தன் புத்தகம் வழி உதவியிருக்கிறார் மீனாக்ஷி அம்மாள்.

பதின்ம வயதிலேயே இவருக்குத் திருமணம் நடந்தது. மூத்த மகன் பிறந்த இரண்டு வருடங்களிலேயே மீனாக்ஷி அம்மாளின் கணவர் இறந்துவிட்டார். இரண்டு வயது மகன், ஏழு வயது மைத்துனர், மாமியார் இவர்களைக் காக்க வேண்டிய பொறுப்புகளுக்கு இடையேதான் இந்தப் புத்தகத்தை எழுதினார் மீனாக்ஷி அம்மாள்.

1951-ல் முதல் பதிப்புக் கண்ட சமைத்துப் பார் இதுவரை எண்ணற்ற பதிப்புகளைக் கண்டுவிட்டது. இப்புத்தகம் 1968-ல் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது. தமிழில் இதுவரை எழுதப்பட்ட சமையல் நூல்களில் மீனாக்ஷி அம்மாவை அடித்துக்கொள்ள இன்னும் யாரும் வரவில்லை.

ஒரு காலகட்டம்வரை சமையல் புத்தகம் சமையலறைகளில் ரகசியமான ஒன்றாகவே பெண்களால் பராமரிக்கப்பட்டது. சமைப்பதற்காக ஒரு புத்தகத்தின் துணையை நாடுவதை, அப்போதுள்ள குடும்பங்கள் விரும்பவில்லை. திருமணமாகும் வயது வந்த பெண் சமையல் திறனையும் இயற்கையாகப் பெற்றிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அந்தச் சூழ்நிலையில் அனைத்துத் தமிழ்ப் பெண்களுக்கும் மீனாக்ஷி மாமி ஒரு கேடயமாக மாறியிருந்தார் என்றால் ஆச்சரியமில்லை.

இப்போதும் ஐ.டி துறை சார்ந்து மேல்நாடுகளில் பணிபுரிய வேண்டிய நிலையில் இருக்கும் இளைஞர்களுக்கும், மணப்பெண்களுக்கும் இந்தப் புத்தகம் வரப் பிரசாதமாகவே உள்ளது.

நெருங்கிய குடும்பங்களுக்குள்ளேயே திருமணம் செய்துகொண்டு, பெரிதாக இடமாற்றம் இல்லாமல் கூட்டுக் குடும்பமாக இருந்த நிலை மாறிய காலத்தில் எழுதப்பட்ட நூல் சமைத்துப் பார். கூட்டுக் குடும்பங்கள் சிறு குடும்பங்களாக மாறிய நிலையில் ‘சமைத்துப் பார்’ மீனாக்ஷி அம்மாள், எழுதியே லட்சாதிபதி ஆனார்.

டி.பி. ராஜலட்சுமி, தமிழ் சினிமாவின் தலைமகள்

தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவையாற்றில் இசைக் குடும்பத்தில் பிறந்தவர் டி.பி. ராஜலட்சுமி. தந்தை பஞ்சாபகேச அய்யர், தாயார் மீனாட்சி. அக்கால வழக்கப்படி அவருக்கு ஏழு வயதிலேயே திருமணம் செய்துவைக்கப்பட்டது. வரதட்சிணைக் கொடுமையால் திருப்பி அனுப்பப்பட்டார். மகளின் நிலை கண்டு துயருற்ற அவரது தந்தை மனம் வாடி மரணமுற்றார்.

ராஜலட்சுமி சிறு வயதிலேயே வறுமை வாட்டாமல் தன் விதவைத் தாயுடன் திருச்சி வந்தார். தன் தந்தை கற்றுக்கொடுத்த பாடலை ஒரு கோயிலுக்குச் சென்று மனமுருகப் பாடிப் பார்க்கத் தொடங்கினாள் அந்தச் சிறுமி. அந்தக் குரல்தான் அவருக்கு பின்னர் வாழ்வு தந்தது.

திருச்சியில் சி.எஸ். சாம்பண்ணா நாடகக் குழுவில் தாயும் மகளுமாகப் பணியில் சேர்ந்தனர். முதலில் ஸ்த்ரீபார்ட் வேடங்களில் நடித்த ஆண்களுக்குப் பாடத் தொடங்கிய ராஜலட்சுமி, பவளக் கொடி நாடகத்தில் முதல் முறையாகக் கதாநாயகியாக நடித்தார். நாடக உலகில் ஜொலித்த ராஜலட்சுமியை வெள்ளித்திரை அள்ளிக்கொண்டது. 1929-ம் ஆண்டு வெளிவந்த கோவலன் படத்தில் ராஜலட்சுமி அறிமுகமானார். 1931-ல் பேசும் படமாக வெளிவந்த காளிதாஸில் கதாநாயகியானார். அதில் அவர் பாடி, ஆடிய “மன்மத பாணமடா மாரில் பாயுதடா” பாடலைத் தமிழகமே கொண்டாடியது.

நடிகையாக வெற்றிபெற்ற ராஜலட்சுமி மதுரை வீரன் உள்ளிட்ட படங்களை இயக்கினார். தயாரிப்பாளர், இயக்குநர், எழுத்தாளர் என்று பல பரிணாமங்கள் இவருக்கு உண்டு. டி. பி. ராஜலட்சுமி இறுதிக் காலத்தில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு 1964-ம் ஆண்டு சென்னையில் காலமானார்.

எம்.எஸ். சுப்புலட்சுமி, காற்றினிலே வரும் கீதம்

மெட்ராஸ் மியூசிக் அகாடமியில் தன் 17 வயதில் முதல் முறையாக எம்.எஸ் பாடிய அனுபவம் குறித்து ஒரு ரசிகர் எழுதியுள்ளார். வளரிளம் பருவத்தில் உள்ள பெண் தன் தாய் பக்கவாட்டில் தம்புரா வாசிக்கப் பாடிய போது, அனுபவம் கொண்ட முன்னணி இசைக் கலைஞர்கள்கூட அந்தப் புதிய குரலை அற்புத உணர்வுடன் ரசித்துப் பாராட்டியதாக குறிப்பு உள்ளது. காரைக்குடி சாம்பசிவ ஐயர், எம்.எஸ்ஐப் பார்த்து, “குழந்தே, உனது குரலில் வீணை இருக்கிறது” என்றாராம்.

1916-ல் செப்டம்பர் 16-ம் தேதி சுப்ரமணிய அய்யருக்கும், சண்முகவடிவுக்கும் பிறந்தவர் மதுரை சண்முகவடிவு சுப்புலக்ஷ்மி. அவரது பாட்டி அக்கம்மாள் வயலின் கலைஞர், அம்மா வீணைக் கலைஞர்.

1936-ல் திரைப்படத்தில் நடிப்பதற்காகச் சென்னை வந்தபோது, ஏற்கனவே நாடறிந்த பாடகியாகப் புகழ்பெற்றுவிட்டார். சேவா சதனம், மீரா உள்ளிட்ட படங்களில் பாடி நடித்தார்.

சுதந்திரப் போராட்ட வீரரும், எழுத்தாளர் கல்கியின் நண்பருமான டி.சதாசிவத்தை 1940-ல் மணந்தார். 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட இசை சாதனைக்காக பாரத ரத்னா விருது பெற்றார். மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு எனப் பெரிய தலைவர்களை எல்லாம் வசீகரித்த குரல் அவருடையது.

சதாசிவத்தின் மரணத்துக்குப் பிறகு மேடைகளில் பாடாமலேயே இருந்த எம்.எஸ். 2004-ம் ஆண்டு சென்னையில் காலமானார்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, மருத்துவச் சேவையுடன் மானுட சேவை

பெண்கள் பொதுவாழ்க்கைக்கு வருவது இப்போதும் அரிதாக உள்ள சூழ்நிலையில், சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் உண்மையான புரட்சிப் பெண்ணாக, சமூக மனுஷியாகப் பெரிய சாதனைகளையும் பங்களிப்புகளையும் செய்தவர் முத்துலட்சுமி ரெட்டி.

புதுக்கோட்டை சமஸ்தானத்தில் உள்ள திருக்கோகர்ணத்தில் 1886-ல் நாராயணசாமி, சந்திரம்மாள் தம்பதியினருக்குப் பிறந்தார். திண்ணைப் பள்ளியில் படித்த முத்துலட்சுமி, நன்றாகப் படித்ததால் உயர்நிலைப் பள்ளிவரை செல்ல அவருக்கு அனுமதி கிடைத்தது.

மாணவர்கள் தேறுவதே அரிதாக இருந்த மெட்ரிகுலேஷன் பரீட்சையில் வெற்றிபெற்ற ஒரே மாணவியாக முத்துலட்சுமி திகழ்ந்தார். அதற்குப் பிறகு அவர் படிப்பதற்குத் தடைகள் உடைந்தன. 20 வயதில் மருத்துவக் கல்வியில் சேர்ந்து, இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்ற பெயரைப் பெற்றார். திருமணத்தில் விருப்பம் இல்லாமல் சமூகப் பணியிலேயே அவரது ஈடுபாடு இருந்தாலும் சகோதரிகளின் வாழ்வை உத்தேசித்துத் தன் மனமொத்த கணவராக டி.சுந்தர ரெட்டியைத் தேர்ந்தெடுத்தார்.

சென்னை மாகாணத்தின் முதல் சட்டமன்றத் தலைவர் ஆனார். பின்னர் சென்னை சட்டமன்றத்தின் முதல் துணைத் தலைவராகவும் மெட்ராஸ் மாநகராட்சியின் முதல் துணை மேயராகவும் இருந்தார். கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் துயரத்தை நேரில் கண்ட முத்துலட்சுமி ரெட்டி, உடனடியாக சென்னையில் அவ்வை இல்லத்தைத் தொடங்கினார். தனது நெருங்கிய உறவினர் புற்றுநோயால் அவதிப்பட்டு இறந்ததைக் கண்டு அரசின் உதவிகூட இல்லாமல் நண்பர்களின் ஆதரவைப் பெற்றுச் சென்னை புற்றுநோய் மருத்துவமனையைத் தொடங்கியவர் முத்துலட்சுமி ரெட்டி.

ஆங்கிலேய இந்தியாவில் அப்போது வழக்கத்தில் இருந்த தேவதாசி முறையையும், பால்ய மணத்தையும் ஒழிக்க பெரியார் ஈ.வே.ரா. மூவலூர் ராமாமிருதம் அம்மையாருடன் இணைந்து போராடினார். 1956-ல் முத்துலட்சுமி ரெட்டிக்கு பத்மபூஷன் விருதளித்து இந்திய அரசு கவுரவித்தது. 1968 ஜூலை 22 அன்று அவர் காலமானார்.

ருக்மிணி அருண்டேல், பல்துறைப் போரொளி

ருக்மிணி தேவி 1904-ம் ஆண்டு பிப்ரவரி 29-ம் தேதி நீலகண்ட சாஸ்திரி - சேஷம்மாள் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். பொதுப் பணித்துறை பொறியாளராக இருந்த அவருடைய தந்தை, அன்னிபெசண்ட் அம்மையார் உருவாக்கிய தியசாபிகல் சொசைட்டியின் தீவிர உறுப்பினராகச் செயலாற்றியவர். தந்தையின் அறிமுகத்தால் ருக்மிணி தேவியிடம் சிறு வயதிலேயே அன்னிபெசண்ட் அம்மையாரின் தாக்கம் இருந்தது.

தியசாபிகல் சொசைட்டியில் பணியாற்றிய வெள்ளையரான ஜார்ஜ் சிட்னி அருண்டேல் என்ற ஆங்கிலேயருடன் காதல் வயப்பட்டார். ருக்மிணி தேவியாக இருந்தவர் 1920-ல் ஜார்ஜைத் திருமணம் செய்து ருக்மிணி அருண்டேல் ஆனார்.

தியசாபிகல் சொசைட்டியின் இளைய மெய்ஞானிகள் கழகத்தின் தலைவராகப் பதவியேற்ற அருண்டேல் தம்பதியினர் வெவ்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து மெய்ஞானசபையின் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

லண்டனில் 1924-ம் ஆண்டு பிரபல பாலே நடனக் கலைஞர் அன்னா பாவ்லோவிடம் ருக்மினி நடனம் கற்றுத் தேர்ந்தார். அப்போதுதான் இந்தியப் பாரம்பரிய நடனமான பரதக் கலையை நோக்கி ருக்மிணி அருண்டேலின் கவனத்தை அன்னா பாவ்லோ திருப்பினார்.

பரதம் என்பது கவுரவத்துக்குரிய ஒன்றாகப் பார்க்கப்படாத காலம் அது. அதனால், அதைச் சொல்லித்தரவும் அவ்வளவாக ஆட்கள் இல்லை. பரதக் கலை ஆசிரியர்களைத் தேடிப்பிடித்து பரதம் பயின்றார் ருக்மிணி.

கலாக்ஷேத்ரா உதயம்

மயிலாப்பூர் கௌரி அம்மா, பந்தநல்லூர் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை ஆகியோரிடம் நடனம் பயின்ற ருக்மிணி, தியசாபிகல் சொசைட்டியின் வைர விழா நிகழ்ச்சியில் தனது முதல் அரங்கேற்றத்தை 1935-ல் நடத்தினார்.

1936-ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை அடையாறில் கலாக்ஷேத்ரா அமைப்பைத் தனது கணவருடன் இணைந்து தொடங்கினார்.

தி பெசண்ட் தியசாபிகல் ஹை ஸ்கூல், தி மரியா மான்டிசோரி ஸ்கூல் ஃபார் சில்ரன், தி கிராஃப்ட் எஜூகேசன் அண்ட் ரிசர்ச் சென்டர் மற்றும் உ.வே.சாமிநாதையர் நூலகம் ஆகியவற்றையும் கலாக்ஷேத்ரா வளாகத்துக்குள் அமைத்துள்ளார். சென்னைக்கு மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதுமிருந்து மாணவர்கள் தங்கிப் பயிலும் கலைப் புகலிடமாக திருவான்மியூரில் உள்ள கலாக்ஷேத்ரா திகழ்கிறது.

1956-ல் ருக்மிணி தேவிக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. ஜனாதிபதி பதவி தேடிவந்தபோது, அது தன் பணிகளுக்கு இடையூறாக இருக்கும் என்று இவர் மறுத்தார்.

நன்றி - தி ஹிந்து

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்