/* up Facebook

Sep 30, 2014

ஆனாலும் திமிருதான் அவளுக்கு கவிதைத் தொகுதி பற்றிய ஒரு சிறப்புப் பார்வை - வெலிகம ரிம்ஸா முஹம்மத்


இலங்கை நாட்டின் கிழக்கு மாகாணத்தின், மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்த காத்தான்குடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் எம்.எஸ். அப்துல் மஜீத் என்பவர். இவர் பெரும்பாலும் தனது கவிதைகளை மதியன்பன் என்ற புனைப்பெரிலேயே எழுதிவருகின்றார். காத்தான்குடி அஸ்ஸஹ்றா வெளியீட்டுப் பணியகத்தின் மூலம் 97 பக்கங்களில் 36 பக்கங்களை உள்ளடக்கியதாக  ``ஆனாலும் திமிருதான் அவளுக்கு``  என்ற மகுடத்தில் அமைந்த தனது கன்னிக் கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். இந்தத் தொகுதியிலுள்ள அனைத்துக் கவிதைகளும் ஏற்கனவே பத்திரிகைகள், வானொhலிகள், இணையத்தளம், முகநூல், மதியன்பனின் வலைப்பூ போன்றவற்றில் வெளிவந்த கவிதைகளாகக் காணப்படுகின்றன.

தான் வாழுகின்ற சமூகத்தில் காணுகின்ற பிரச்சினைகளை கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்காமல் அதனை துணிவோடு யதார்த்தபூர்வமாக மக்கள் மயப்படுத்துவதே ஒரு கவிஞரின் தார்மீகப் பொறுப்பாகும் என்ற கூற்று கவிஞர் மதியன்பனுக்கும், அவரது கவிதைகளுக்கும் மிக மிகப் பொருந்திப் போகின்றது. ஏனெனில் இந்தத் தொகுதியில் உள்ள பெரும்பாலான கவிதைகள் இன்றைய காலகட்டத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக நடந்துகொண்டிருக்கும் அடக்குமுறைகளை, அட்டூழியங்களை, அநியாயங்களைப் படம்பிடித்துக் காட்டுவதாகவே அமைந்துள்ளன.

எங்கோ ஒரு மூலையில் எதையுமே செய்ய முடியாமல் சமூக சிந்தனையோடு முடங்கிப் போய்க் கிடக்கும் அந்த நல்ல உள்ளங்களுக்காகவே தனது நூலை முற்போக்கு எழுத்தாளர் மதியன்பன் சமர்ப்பித்துள்ளார். இந்த நூலுக்கான அணிந்துரையை நிலாத் தெருவில் ஒரு உலா என்ற தலைப்பிட்டு கவிஞர் அஷ்ரப் ஷிஹாப்தீனும், மதிப்புரையை மலரின் இதழ்களாகிப் போன மதியன்பனின் கவிதைகள் என்ற தலைப்பிட்டு கவிஞர் ரீ.எல். ஜவ்பர்கானும், ஆசியுரையை மாற்றத்தை வேண்டி நிற்கும் மதியன்பன் கவிதைகள் என்ற தலைப்பிட்டு பொறியியலாளர் அப்துர் ரஹ்மானும்;, வெளியீட்டுரையை ஒரு தாயின் கன்னிப் பிரசவம் என்ற தலைப்பில் எம்.எல்.ஏ. அஸீஸ் அவர்களும், நூலின் பின்னட்டைக் குறிப்பை நூலாலாளர் பற்றி என்ற தலைப்பில் மாறன் ஆகியோரும் வழங்கியுள்ளனர்.

எண்பதுகளில் கவிதை இலக்கியத் துறைக்குள் நுழைந்தவர் கவிஞர் மதியன்பன். ஆனாலும் அண்மைக்காலம் வரை இவர் கவிதைத் தொகுதியொன்றை வெளிக்கொண்டுவர நாட்டம் காட்டாமலேயே இருந்து வந்துள்ளார். ஆயினும் இவரிடம் பல கவிதைத் தொகுதிகளை வெளியிடுவதற்கான பல கவிதைகள் குவிந்து கிடப்பதாக அறிய முடிந்தது. இனிவரும் காலங்களில் அவற்றை தொகுத்து பல காத்திரமான கவிதைத் தொகுதிகளை வெளியிடுவார் என நம்பலாம்.

``ஆனாலும் திமிருதான் அவளுக்கு`` என்ற இந்தத் தொகுதியில் அரசியல், ஆன்மீகம், போராட்டம், சுனாமி, தேர்தல், போதை, இயற்கை, நடைமுறைப் பிரச்சினைகள் போன்ற விடயங்களை உள்ளடக்கியதான உணர்வுபூர்வமான பல கவிதைகள் விரவிக் காணப்படுகின்றன. குறிப்பாக சமகாலத்தில் நடக்கின்ற இடர்களை இயம்புவதாகவே இத்தொகுதி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இனி இவரது ஒரு சில கவிதைகளை ரசனைக்காக எடுத்துக்கொள்வோம்.

வாழ்வுக்கும்  சாவுக்கும் இடைப்பட்டதே வாழ்க்கை. அதற்குள் எத்தனையோ போராட்டங்கள், கழுத்தறுப்புகள், காட்டிக்கொடுப்புகள், வஞ்சனைகள் என்று மனிதன் எதை எதையோவெல்லாம் கற்றுக்கொண்டு பிறருக்கு அநியாயம் செய்கின்றான். வாழ்கின்ற காலத்தில் யாரையும் மதிக்காமல் தன்னைத்தானே பெருமை பேசிக்கொள்ளும் பலர் இருக்கின்றார். நாம் வாழ்கின்றபோது யாரை எல்லாம் சந்தோசமாக சிரிக்க வைத்தோமோ அவர்கள்தான் நாளை நாம் இறந்தால் நமக்காக அழுவார்கள். அதல்லாமல் அவர்களை இப்போது கண்ணீர் சிந்த வைத்தால் எம் இறப்புக்கு பின் சந்தோசப்படுவார்கள். இன்று பட்டம், பதவி, பணம், அந்தஸ்து எல்லாம் இருந்தாலும் மரணித்த பின் மையித் (சடலம்) என்ற பெயரே மனிதனுக்கு எஞ்சுகின்றது. இவ்வாறான வாழ்க்கைத் தத்துவத்தை விலகிச் செல்லும் விட்டில் பூச்சிகள் (பக்கம் 01) என்ற கவிதையினூடாக கவிஞர் சொல்லியிருக்கின்றார்.

விளக்கு ஒளியிழக்கும் போது விலகிச் செல்லும் விட்டில்களாய் வந்தவர்கள் விசாரித்து விட்டுப் போகிறார்கள்.. உறவுகள் மட்டும் அங்கே ஒட்டிக் கிடக்கிறது அவனை அடக்கி விட்டுச் செல்வதில் அத்தனை அக்கறை அவர்களுக்கு.. இப்போதெல்லாம் அவனுக்கு பெயர்கூட சொந்தமில்லை மையித் மரக்கட்டை என்றாயிற்று..

விமானமும் விஞ்ஞானமும் (பக்கம் 15) என்ற கவிதை காணாமல் போன மலேசியா விமானத்தைப் பற்றியதாக எழுதப்பட்டுள்ளது. தொழில்நுட்பம், விஞ்ஞானம் என்று உலகம் வியக்கும் வித்தைகளின் நடுவேயும் ஒரு விமானம் காணமல்போய் உலகத்தவர்களை அதிசயிக்க வைத்தபோது எழுதப்பட்ட கவிதை இது. எத்தனையோ தினங்களாகத் தேடியும் அதுபற்றிய தகவல்களை அறியாமல் உலகமே அதிசயத்தில் மூழ்கியிருந்ததை நாம் மறந்துவிட முடியாது.

விமானம் விழுந்ததா.. கடத்தலா.. காற்றில் பறக்கிறதா..? இன்னும் தெரியாமல் வியப்பில் கிடக்கிறது உலகம்.. அதி உயர அண்டனாவையும், டவரையும் நம்பிய அமெரிக்கா கூட இப்போது வெம்பிப்போய் விழி பிதுங்கி நிற்கிறது.. சாட்டலைட்டில் சாதித்தவர்களெல்லாம் இப்போது சாத்திர காரர்களிடம் சரணடைந்து கிடக்கிறார்கள்.. தேடும் பணிகள் கூட இனிமேல் தேவையற்றுப் போகலாம்.. ஓடும் விமானங்களும் தாமாகவே ஓய்வெடுத்துக் கொள்ளலாம்..

சேமிப்பும் புத்தகமும் (பக்கம் 24) என்ற கவிதையை வாசித்துப் போகையில் பணத்தை சேமித்தல் என்ற கற்பனையே ஏற்பட்டது. ஆனால் இறுதியில்தான் அது மறுமை நாளுக்கான நன்மையை சேகரிக்கும் விடயம் பற்றி எழுதப்பட்டதாக அறிய முடிந்தது. அந்தளவுக்கு வாழ்க்கையோடு ஒப்பிட்டு இக்கவிதை எழுதப்பட்டிருக்கின்றமை கவிஞரின் திறமையைப் பறைசாற்றுகின்றது.

நிறையவே சேமித்திருக்கிறேன்.. ஆனால் இருப்பு எவ்வளவு என்று இன்னும் தெரியவில்லை.. அதிகாரிகள் கூட இன்னும் அறிவிக்கவில்லை.. வைப்புப் புத்தகத்தை வழங்கவுமில்லை.. இரவு பகலாக உழைத்தே இத்தனையும் சேமித்திருக்கிறேன்.. அதற்காக தூக்கமிழந்தேன்.. சாப்பாட்டைத் தவிர்த்தேன்..

இந்தக் கவிதையின் இறுதிப் பகுதி இவ்வாறு அமைந்துள்ளது.

மறுமைநாள் மஹ்சரில் எனக்கு வைப்புப் புத்தகம் வழங்கப்படும்.. சேமிப்பையும் சேமிக்கச் சொன்னவனையும் என்னால் காணமுடியும்..

பெட்டைகளின் உடுப்பும் பெடியன்களின் கடுப்பும் (பக்கம் 35) என்ற கவிதை நகைச்சுவை பாணியில் எழுதப்பட்டிருக்கின்றது. இக்கவிதை இன்றைய இளம் பெண்களின் போக்கை நன்கு சுட்டிக் காட்டுகின்றது. பெண் சுதந்திரத்துக்கு உதாரணமாக ஆடைக் குறைப்பைத்தான் சில பெண்கள் கூறுகின்றார்களோ என்று ஐயப்படுமளவுக்கு அவர்களின் நடைமுறை வாழ்க்கை அமைந்திருக்கின்றது. கடைத் தெருக்களில், பூங்காக்களில், பஸ்களில் எல்லாம் குறித்த சில பெண்களை அருவருப்புடன் நோக்கும் நிலையும், ஆபாசத்துடன் ரசிக்கும் நிலையும் காணப்படுகின்றது.

பெட்டைகளின் இடுப்பும் அதுகள் போடுற உடுப்பும் எங்கிட பொடியன்மார கடுப்பேத்துதாம்.. நாகரிகம் மிஞ்சிப் போய் அவங்கிட உடுப்பெல்லாம் இப்போ நடுவால பிஞ்சி போச்சுதாம்.. இடுப்புத் தெரிய பொம்புள கட்டுற புடைவையைப் பார்த்து இளசுகள் இடைத்தேர்தல் நடத்துதாம்.. இளைஞர்களின் இடுப்பின் மடிப்போடு இறங்கிப் போச்சுதாம்.. பெட்டைகளின் உடுப்பு குறையக் குறைய பெடியங்கள் மனசு நிறைஞ்சு போகுதாம்..

போதையின் தீதைக் கேளாய் (பக்கம் 61) என்ற கவிதையும் சிந்திக்க வைக்கும் ஒரு கவிதையாகும். அன்பு, ஞானம், அறிவு போன்ற எத்தனையோ விடங்களை கற்று சிறப்பாக வாழ்வதை விட்டுவிட்டு போதை தரும் இழிவான மதுவிற்குள் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் எத்தனைப் பேர்? கருத்துக் கணிப்புகளிலும் குடியை மறந்தவர்களின் தொகை காலத்துக்குக் காலம் குறைவதாகத் தெரிவதில்லை. எத்தனை விளம்பரங்கள், அறிவுறுத்தல்கள் செய்தாலும் குடிக்கின்ற கூட்டம் குடித்துக் கொண்டே தான் இருக்கின்றது. மதுவை மறந்து குடிக்க வேண்டியவை எவை என்பதை கீழுள்ள கவிதை வரிகள் சுட்டிக் காட்டுகின்றது.

நான் சொல்கிறேன் குடி.. குடித்துவிட்டுத்தானே எழுதுகிறது பேனா மையை.. குடித்துவிட்டுத்தானே மழை பொழிகிறது மேகம் நீரை.. குடித்துவிட்டுத்தானே உயிர் வாழ்கிறது நுளம்பு குருதியை.. இப்படி எல்லாமே குடித்திருக்க நீ மட்டுமேன் குடிக்கக் கூடாது, குடி.. அன்பெனும் மதுவைக் குடி.. அறிவெனும் மதுவைக் குடி.. ஆன்மீகம் எனும் ஞானத்தைக் குடி.. இப்படி அழகான குடிகள் அணிவகுத்திருக்க எதற்காகத் தேர்ந்தெடுத்தாய் இந்த இழிவு தரும் குடியை..

சொர்க்கத்துக்கு சொந்தக்காரி றிஸானா (பக்கம் 82) என்ற கவிதை சவுதிக்கப் போய் தன்னுயிரை இழந்த றிஸானா நபீக்கின் மறைவையொட்டி எழுதப்பட்டிருக்கின்றது. றிஸானாவுக்கான மரண தண்டனையைக் கேட்டு உலகே ஸ்தம்பித்து நின்றது. எல்லா உள்ளங்களும் அவளுக்காகப் பிரார்த்தித்தது. வறுமையை போக்க வெளிநாட்டுக்குச் சென்று அங்கு நடந்த சம்பவத்தால் றிஸானாவின் தலைவிதியே மாறிப்போனதை உலகம் வெகுசீக்கிரம் மறந்துதான்விட்டது. இன்றும் நம் நாட்டில் எத்தனையோ றிஸானாக்கள் போலி பாஸ்போட்டுடன் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவது அவர்களின் அறியாமையா என்றுகூட எண்ணத் தோன்றுகின்றது. றிஸானாவுக்காக கவிஞரின் பேனா இவ்வாறு கண்ணீர் சிந்தியிருக்கின்றது.

அழக்கூட முடியவில்லை அடைத்துப் போகிறது நெஞ்சு.. உள்ளத்தில் உறைந்தவளே றிஸானா! உன் மரணச் செய்தி இன்னும் மரணித்துப் போகவில்லை எங்களை விட்டும்! சுவனத்துக் குயிலே உன் விடுதலைக்காய் எத்தனை உள்ளங்கள் இரவு பகல் அழுதன தெரியுமா? எல்லாம் முடிந்துவிட்டது.. இறைவன் அழைத்துக் கொண்டான் உன்னை என்று நம்புகிறோம் ஏற்பாட்டை ஏற்றுக் கொள்கிறோம்.. றிஸானா! செல்லமாய் விளையாடும் சின்ன வயதில் சிறை சென்ற வண்ண மொட்டு நீ..

இனவெறியர்கள் ஆடும் ஆட்டத்தில் அப்பாவி பொதுமக்கள் தமது உயிர்களை இழக்கின்றனர். மதங்கள் சமாதானத்தை போதித்துக் கொண்டிருக்கையில், சமாதானத்தை வேண்டி போர் நடத்தும் சில மூடர்களினால் ஒரு நாட்டின் வரலாறே சிவப்பாக மாறியிருக்கின்றது. யுத்தம், சண்டை, என்று தொடர்ந்தால் அது உலகத்தின் அமைதிக்கே பங்கம் விளைவிக்கின்றதை யாரும் மறுக்க முடியாது. ஆனாலும் குறித்த நாடுகளுக்கிடையில் போராட்டங்கள் நிகழும்போது மற்ற நாடுகள் மௌனித்துவிடுகின்ற துரதிஷ்ட நிலைமையும் கண்கூடாக நடந்துவரும் பேருண்மை எனலாம். உன்னால் மட்டும் முடியும் என்பதால் (பக்கம் 89) என்ற கவிதை வரிகள் அதை கீழுள்ளவாறு கூறியிருக்கின்றன.


கொடிய பருந்திடம் மாட்டிக்கொண்ட கோழிக் குஞ்சுகளாய் இன்று காஸா முஸ்லிம்கள் கருவறுக்கப்படுகிறார்கள்.. இஸ்ரேல் நாய்களின் இரத்தப் பசிக்கு இஸ்லாமியக் குழந்தைகள் இரையாக்கப்படுகின்றனர்.. சொந்த மண்ணிலே அகதிகாய் இப்போது நொந்து போய்க் கிடக்கிறது நம் சொந்தங்கள்..

நடைமுறையில் நிகழ்கின்ற சம்பவங்ளை கருவாகக் கொண்டு கவிதை படைக்கின்றார் கவிஞர் மதியன்பன். சமகாலத்தின் நடக்கின்ற விடயங்கள் அவர் பேனைக்குள் புகுந்து சமூகப் பற்றுமிக்க கவிதையாக வெளிவருகின்றன. பலரும் பேசத் தயங்கும் சில விடயங்களையும் மிகத் துணிச்சலாக எழுத்தயிருக்கின்றமை கவிஞரின் மனத் தைரியத்துக்கு எடுத்துக்காட்டாகும். யதார்த்தவாதியாக தன்னை கவிதைகளுக்குகூடாக இனங்காட்டிக் கொள்ளும் கவிஞரின் படைப்புக்கள் எதிர்காலத்திலும் நூலுருவம் பெற்று வெளிவர வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்!!!

 

நூல் - ஆனாலும் திமிருதான் அவளுக்கு

நூல் வகை - கவிதை

நூலாசிரியர் - காத்தான்குடி மதியன்பன்

வெளியீடு - அஸ்ஸஹ்றா வெளியீட்டுப் பணியகம்

விலை - 300 ரூபாய்
...மேலும்

Sep 29, 2014

காவல் துறையும் பெண்களும்


சட்டம் உன் கையில்: வழக்கறிஞரும் குடும்பநலஆலோசகருமான ஆதிலட்சுமி லோகமூர்த்தி

சமுதாயத்தில் இன்று பெண்களுக்கு எதிரான பல குற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.  பெண்களை பாதுகாக்க பல சட்டங்கள் இயற்றப்பட்டு  நடைமுறையில் உள்ளன.  பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதில் காவல் துறையினருக்கு பெரும் பங்கு இருப்பது மறுக்க முடியாத உண்மை.  ஆனால், பல நேரங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல் துறையின் உதவி உரிய நேரத்தில் கிடைக்கப் பெறாமல் இருக்கிறது என்பதையும்  மறுப்பதற்கில்லை. அதற்குக் காரணம் காவல் துறையினரின் அலட்சியமா? பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுடைய சட்ட உரிமையை சரியாக புரிந்து  கொள்ளாத நிலையா? 

இது விவாதத்துக்குரிய வினாவே. சில நேரங்களில், விசாரணை என்ற போர்வையிலோ, உண்மையான விசாரணைக்காகவோ காவல் துறையினரால்  பெண்கள் ஆஜர்படுத்தப்படும் நேரங்களில் பெண்களின் உரிமைகள் என்ன? காவல் துறையினரின் கடமைகள் என்ன? இதுவும் பெரும்பாலான  பெண்களுக்கு பரிச்சயமில்லாத ஒரு தளமாகவே இன்றளவும் இருந்து வருகிறது. கல்வியறிவு பெற்ற பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

பொதுவாக நடைமுறையில் சட்டங்களை இருவகைப்படுத்தக் கூடிய நிலை உள்ளது. தனிநபர் சம்பந்தப்பட்ட திருமணம், சொத்துரிமை போன்ற  விஷயங்கள் ‘உரிமையியல் சட்ட’த்தின் கீழும், சமுதாயத்துக்கு எதிராக நடைபெறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான பாலியல்  வன்புணர்ச்சி, வரதட்சணை கொடுமை போன்ற குற்றங்களை ‘குற்றவியல் சட்ட’த்தின் கீழும் வகைப்படுத்தி பார்க்கிறோம்.  குற்றங்களிலிருந்து பொது  மக்களை காப்பாற்றவும், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், குற்றங்கள் நடைபெற்ற நிலையில் அதில் தகுந்த விசாரணை மேற்கொள்ளவும்,  சந்தேகப்படும் நபரை விசாரிக்கவும், குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் என காவல் துறையினரின் பங்கு பெருமளவில்  தேவைப்படுகிறது.

காவல் துறையினர் பொதுமக்களின் நண்பன் என்று உரக்கக் கூறினாலும், காவல் துறையின் மீது பொது மக்களுக்கு ஒரு விதமான அச்சம்  இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக பெண்கள் காவல் துறையை நாடவோ, உதவி கேட்கவோ தயங்கும் நிலை பரவலாக உள்ளது. பொதுமக்களின்  நம்பிக்கையையும் நன்மதிப்பையும் காவல் துறையினர் பெறும்போது, மக்கள் அவர்களின் உதவியை நாடுவதில் தயக்கம் இல்லாமலிருக்கும்.  பொதுவாக, ஒரு குற்றம் நடைபெறும்போது பாதிக்கப்பட்ட நபரோ, அவரைச் சார்ந்த நபரோ குற்றம் நடைபெற்ற எல்லைக்குட்பட்ட காவல்  நிலையத்திலோ, காவல் துறை உயர் அதிகாரியிடமோ, நேரடியாகவோ, தபால் மூலமோ புகார் மனுவை தகுந்த நேரத்துக்குள் அளிப்பது அவசியம். 

இவ்வாறான புகார் மனு தாக்கல் செய்யும் போது, அந்த புகார் மனுவை மிகுந்த கவனத்துடன் தயார் செய்வது புகார்தாரரின் அடிப்படைக்  கடமையாகும். பெரும்பாலான நேரங்களில் புகார் மனுவை உரிய முறையில், சரியான நேரத்தில் சரியான நபரிடம் கொடுக்கத் தவறுவதே பல  குற்றவாளிகள் தப்பிக்க ஏதுவாகிறது. இந்த புகார் மனுவின் அடிப்படையிலேயே குற்றங்கள் விசாரிக்கப்பட்டு, விசாரிக்கப்படும் நபர் தவறு  செய்திருக்கும் பட்சத்தில் அவர் மீது குற்றம் சாட்டப்படும்.  ஒருவர் புகார் மனு கொடுத்த பிறகு அவருக்கு காவல் நிலையத்தி லிருந்து CSR   (Community Service Register)  எனப்படும் புகார் ஏற்பு சான்றிதழ் கொடுக்கப்படும்.   

புகார் மனுவின் அடிப்படையில்  விசாரணை மேற்கொண்டு அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் அந்த குற்றத்துக்கான முதல் தகவல் அறிக்கை (FIR   First Information Report) தயாரிக்கப்படுகிறது. இந்த இடத்தில் குற்றங்கள் என்று கூறும்போது, ஜாமீன்  கொடுக்கக்கூடிய குற்றங்கள்  (ஙிணீவீறீணீதீறீமீ), ஜாமீன் கொடுக்க இயலாத குற்றங்கள் (NonBailable) என்று இரு வகைப்படுத்தப்படும்.   இதில் ஜாமீன் கொடுக்க இயலாத  குற்றங்களுக்கு நீதிமன்றத்தை அணுகியே குற்றவாளிகள் ஜாமீன் பெற இயலும். முதல் தகவல் அறிக்கை தயார்  செய்தவுடன் காவல் துறையினரால்  வழக்கு அதன் எல்லைக்குட்பட்ட நீதிமன்றத்துக்கு அனுப்பப்படும்.  சில நேரங்களில் புகார் மனு பதிவு செய்யப்படாமலோ,  பதிவு செய்யப்பட்ட  மனுவின் மீது விசாரணை மேற்கொள்ளாமலோ, காவல் துறையினர் மெத்தனப் போக்குடன் செயல்படும் பட்சத்தில், தகுந்த நீதிமன்றத்தை நாடி  ஆணை பெற்று உரிய நிவாரணம் பெற சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது. 

சில நேரங்களில் பாதிக்கப்படும் நபர் கொடுக்கும் புகார் மனு சரிவர பதிவு செய்யப்படவில்லை எனில், அதாவது, என்ன குற்றம், அது நடந்த இடம்,  குற்றம் சாட்டப்படும் நபர் அல்லது சந்தேகப்படும் நபர், அந்தக் குற்றத்தால் ஏற்படும் உயிர் மற்றும் பொருள் இழப்பு போன்றவை சரிவர  குறிப்பிடவில்லையென்றால், சரியான முதல் தகவல் அறிக்கை தயாரிக்க முடியாது. அதனால் பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனு அனைத்து  விஷயங்களையும் உள்ளடக்கியதாக, தெளிவானதாக இருப்பதை உறுதி செய்வது மிகவும் அவசியம். பெண்களை காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு  அழைக்கும் போது அல்லது அவர் மீது விசாரணை நடைபெறும் போது, ஒரு பெண் காவலர் உடனிருப்பது சட்டப்படி அவசியம். 

பாலியல் முறைக்கு ஆட்படுத்தப்பட்ட பெண் குழந்தையை விசாரிக்கும் பட்சத்தில், அக்குழந்தையின் பெற்றோர் முன்னிலையிலோ, காப்பாளர்  முன்னிலையிலோ, காவல் உடை தவிர்த்து,  சிவில் உடையில்  பெண் காவல் அதிகாரி அந்தப் பெண் குழந்தையை விசாரிப்பது அவசியம். மேலும்,  சூரிய உதயத்துக்கு முன்னரும், சூரிய மறைவுக்குப் பின்னரும் பெண்களை காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை மேற்கொள்வது சட்டத்துக்கு  ஏற்புடைய தல்ல. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பெண்கள் காவல் நிலைய விசாரணைக்கு அழைக்கப்படுவதே ஏற்புடையது.  காவல் நிலையத்திலோ, காவல் துறையினராலோ விசாரணை என்ற பெயரில் பெண்களிடம் அத்துமீறி நடப்பது, தேவையில்லாமல் அவர் உடுப்புகளை  களைந்து சோதனை இடுவது சட்ட மீறல் மட்டுமன்றி ஒரு மனித உரிமை மீறலும் கூட.

இந்திய அரசியல் சாசனத்தின் ஷரத்து 21 தனி மனிதனின் உயிரையும் சுதந்திரத்தையும் பேணி பாதுகாக்க வலியுறுத்துகிறது.  சட்ட விதிமுறைகளை  மீறி எந்த ஒரு தனிநபரின் சுதந்திரத்தையும் விசாரணை என்ற பெயரால் காவல் துறையினர் அத்துமீறல் செய்ய உரிமையில்லை. சில நேரங்களில்  பெண்கள் குற்றவாளிகளாக சட்டத்தின் முன் நிறுத்தப்படும்போதும், அவர்களுக்கென சில உரிமைகள் உள்ளன. 

சட்டத்தின் பிடியில் சிறையிலிருக்கும் பெண்ணின் உடல்நிலைக்கோ, ஆரோக்கியத்துக்கோ பங்கம் ஏற்படும் போது நீதிமன்றத்தில் முறையிட்டு,  சிறைச்சாலை மருத்துவமனையிலோ, அரசு மருத்துவமனையிலோ தேவைப்படும் மருத்துவ உதவியை பெற்றுக்கொள்ள உரிமையுண்டு. 

குற்றம் சாட்டப்பட்ட கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு  சிறைச்சாலை மருத்துவமனையிலோ, அரசு மருத்துவமனையிலோ தகுந்த மருத்துவ  பரிசோதனைக்கு ஏற்பாடு செய்துகொள்ளவும் ஆரோக்கியமான உணவும் தேவைப்படும் மருந்துகளும் பெறவும் உரிமை உண்டு. 

சிறைச்சாலையில் இருக்கும் நாட்களில் பெண் கைதி கருவுறும் பட்சத்தில் சிறைச்சாலை அலுவலர் மூலம் தவறு செய்தவரை கண்டு பிடித்து அவர்களுக்கு சட்டப்படி தகுந்த தண்டனை பெற்றுத் தருவது அவசியம்.

சிறைத் தண்டனையை அனுபவிக்கும் கருவுற்ற பெண் தண்டனை காலத்தில் பிரசவிக்கும் போது, அவருக்கு பிறக்கும் குழந்தையின் பெயர் சிறைப்  பதிவேட்டில் சேர்க்கப்படாது. சிறைத் தண்டனை அனுபவிக்கும் பெண்ணை பாலியல் வன்முறைக்கு ஆட்படுத்தும் நபருக்கு தகுந்த தண்டனை பெற்றுக்  கொடுப்பது அவசியம்.

இன்றைய இயந்திரமயமான உலகில் பெண்கள் பல இன்னல்களையும் இடர்பாடுகளையும் எதிர்கொள்ள நேர்கிறது.  சிலவற்றை தன்னிச்சையாகவே  நிவர்த்தி செய்யக்கூடிய ஒரு தன்னம்பிக்கையை பெண்கள் தங்களுக்குள் வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.  இன்று கல்வி நிலையில் பல  பெண்கள் உயர்ந்திருக்கிறார்கள்...பொருளாதார சுதந்திரத்தையும் சில பெண்கள் பெற்றிருக்கிறார்கள். எனினும், எல்லா  நிலைகளிலும் தன்னம்பிக்கை  கொண்டவர்களாக செயலாற்ற முடியாமல் தவிக்கிறார்கள்.  ஒரு பெண் தன் மீது நம்பிக்கை கொண்டால் மட்டுமே இந்த  சமுதாயம் அவள் செய்யும்  செயலின் மீது நம்பிக்கை கொள்ளும். இந்த நாட்டு பெண்கள் இன்னல்களிலிருந்து தங்களை தாங்களாகவோ, சட்டத்தின் மூலமாகவோ, காவல்  துறையின் உதவியுடனோ பாதுகாத்துக் கொள்ள தன் மீது மிகுந்த நம்பிக்கையுடையவர்களாக விளங்குவது அவசியம்.
நன்றி தினகரன்
...மேலும்

Sep 28, 2014

மனிதம் பேசும் மாடலிங் பெண் - டி.எல்.சஞ்சீவிகுமார்


சமூக சேவைக்கான கருணையும், மனித உரிமை மீறல்களுக்கு எதிரான போராட்டக் குணமும் ஃபேஷன் துறையில் ஆர்வம் கொண்ட ஓர் இளம் பெண்ணிடம் இருப்பது ஆச்சர்யம்தானே. அந்த ஆச்சர்யத்துக்குச் சொந்தக்காரர் ஷீபா, சென்னைவாசி.

திட்டப்பணி மேலாண்மையில் முனைவர் பட்டம் பெற்ற இவர், பிரபல தகவல் தொழில்நுட்பம் நிறுவனம் ஒன்றில் ‘டெலிவரி ஹெட்’ பொறுப்பில் இருக்கிறார். சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய ஷீபாவின் புகைப்படங்களை வலைத்தளம் ஒன்றில் பார்க்க நேரிட்டது. அதில் குழந்தைகள் புடைசூழ கேக் வெட்டிக்கொண்டிருந்தார் அவர்.

கடந்த ஐந்து வருடங்களாகத் தன் பிறந்தநாளைச் சேவையோடு இணைந்த கொண்டாட்டமாகத்தான் கடைப்பிடித்துவருகிறார் ஷீபா. ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கும் 50 குழந்தைகளையும் தன் வீட்டுக்கு அழைத்து வந்து, அவர்களுடன் சேர்ந்து தன் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடியிருக்கிறார்.

தனக்குப் பரிசளிக்கும்போது முடிந்தவரை அலங்காரப் பொருட்களைத் தவிர்த்து, நோட்டுப் புத்தகங்கள், உடைகள் அல்லது பணம் என உபயோகமானவற்றைக் கொடுக்கும்படி முன்னதாகவே நண்பர்களிடம் சொல்லியிருந்தார்.

அதன்படியே சுமார் ஐம்பதாயிரம் ரூபாய் பணமும், கணிசமான அளவுக்கு ஸ்டேஷனரி பொருட்களும் கிடைத்தன. அவற்றைக் குழந்தைகளுக்குக் கொடுத்து ஷீபா தன் பிறந்தநாள் கொண்டாட்டத்தை அர்த்தப்படுத்தியிருக்கிறார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.டெக். படிப்பில் கோல்டு மெடல் வாங்கியிருக்கும் ஷீபா, உளவியல் நிபுணரும்கூட. அறிவுசார் உளவியலில் (Cognitive psychology) ஆய்வியல் நிறைஞரான இவர், புரஃபெஷனல் கவுன்சிலிங் சைக்காலாஜிஸ்ட்ஸ் அமைப்பின் செயலாளராகவும் இருக்கிறார்.

மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு வார்த்தைகளை உச்சரிப்பது, உணவு உண்பது, கை கழுவுவது உள்ளிட்ட அடிப்படைப் பயிற்சிகளை அளிக்கிறார்.

“சென்னை சித்தாலப்பாக்கத்தில் இருக்கும் ஆதரவற்ற முதியோர் இல்லம் மற்றும் ஆதனூரில் இருக்கும் ஆதரவற்ற சிறுவர் இல்லம் ஆகியவற்றில் வாரந்தோறும் இலவசமாக கவுன்சிலிங் அளித்துவருகிறேன்” என்று சொல்லும் ஷீபாவுக்கு அழகுணர்ச்சி அதிகம்.

“ஆமாம், என்னை அழகுபடுத்திக் கொள்வதில், என்னை ரசிப்பதில் எனக்கு விருப்பம் அதிகம். நம்மை நாமே ரசிக்காமல், நம்மை நாமே நேசிக்காமல் போனால் பிறரை எப்படி நேசிக்க முடியும்? அழகுணர்ச்சி ஒவ்வொரு மனிதருக்கும் தேவை.

தவிர, அழகுணர்ச்சிக்கும் தன்னம்பிக்கைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தோற்றப் பொலிவே தன்னம்பிக்கையை அதிகரிக்கும்” என்கிறார்.

கடந்த 2007-ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு டைட்டில் வென்ற ஷீபா, மிஸ் பியூட்டிஃபுல் ஐஸ் அண்ட் மிஸ் பியூட்டிஃபுல் ஹேர் சப் - டைட்டிலையும் வென்றிருக்கிறார்.

மேலும் 2009-ம் ஆண்டு கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் இருந்து பலர் கலந்துகொண்ட மிஸ் சவுத் இண்டியா போட்டியில் மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்றிருக்கிறார். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு மாடலிங் மற்றும் சினிமாவில் இருந்த ஆர்வம் இப்போது இல்லை என்கிறார் ஷீபா.

“சினிமா, மாடலிங் போன்ற ஃபேஷன் துறைகளில் ஆசை இருந்தது உண்மைதான். உண்மையில் அது ஒரு வேஷம். அங்கெல்லாம் பெண்களுக்கான சுதந்திரம் குறைவு என்பதை உணர்ந்தபோது அதிலிருந்து விலக முடிவு செய்தேன். ஒரு பெண்ணாக அந்தத் துறைகளில் இருந்துகொண்டு சமூகரீதியாக இயங்க முடியாது என்பதுதான் யதார்த்தம்” என்கிறார்.

மனிதம் என்ற மனித உரிமைகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஷீபா, அவர் வசிக்கும் பகுதியில் பெண்களுக்கு எதிரான செயல்பாடுகளுக்கு எதிராகப் போராடி வருகிறார். தவிர, குழந்தைத் தொழிலாளர் பிரச்சினைகளை மையமாக வைத்து இவர் இயக்கிய ‘விடியலை நோக்கி’ மற்றும் ‘ஹேப்பினெஸ் பிஹைண்ட் டிராஜெடி’ ஆகிய குறும்படங்கள் கவனம் ஈர்க்கின்றன.

அடுத்து என்ன என்று ஷீபாவிடம் கேட்டால், “ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் இளம் வயதினர் பல்வேறு காரணங்களால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அவர்களுக்கானப் பிரத்யேக இலவச கவுன்சில் அளிக்க திட்டமிட்டுள்ளேன்” என்கிறார்.

நன்றி - தி ஹிந்து
...மேலும்

Sep 27, 2014

நான் இந்த இடத்துக்கு உரியவள் அல்ல - அஜீத் பிள்ளை


ஒருவர் மீது படும் அதீத ஊடகவெளிச்சம் சில வேளைகளில் மோசமான விளைவுகளையும் உருவாக்கும் என்பதற்கு உதாரணம் நஸ்ரினின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வாழ்க்கை.

நஸ்ரினுக்கு 13, 14 வயது இருக்கலாம். ஆனால் அவளது மெலிந்த உடலோ 11 வயதுப்பெண் என்ற எண்ணத்தையே ஏற்படுத்தும். குழந்தைப் பாலியல் தொழிலாளியாக வாடிக்கையாளர்களைத் தேடி காமாத்திபுராவில் உள்ள சுக்லாஜி தெருவில் அலைந்து கொண்டிருந்தவள் அவள். வாடிக்கை கிடைக்காதபோது இரவு உணவுகூட கிடைக்காமல் தூங்கப்போன நாட்கள் உண்டு. இந்தத் துயரங்களுக்கு கூட்டுச் சேர்க்கும் வகையில் அவள் ப்ரவுன் சுகர் போதை அடிமையும்கூட. மாற்றத்திற்கே வாய்ப்பில்லாத அவளது பரிதாப வாழ்வில் வேகவேகமாக சில விஷயங்கள் நடந்து, அவளுக்குக் கொஞ்சம் நிவாரணத்தையும் அளித்தன.

மகிழ்ச்சியான மறுவாழ்வு

மும்பை சிவப்பு விளக்குப் பகுதியில் வாழ்பவர்களின் போதை அடிமை நிலைமை குறித்து சயீத் மிஸ்ரா ஒரு ஆவணப்படத்தை எடுத்தபோது அவரது குழுவினர் நஸ்ரினைச் சந்தித்தனர். அவளது அவலநிலையைப் பார்த்து போதைப் பழக்கத்தையும், பாலியல் தொழிலையும் விட விருப்பமா என்று சயீத் மிஸ்ரா கேட்டார். நஸ்ரின் ஒப்புக்கொண்டாள். கட்டணம் செலுத்த இயலாத போதை அடிமைகளுக்கு உதவும் போதைப் பொருள் மறுவாழ்வு மையத்தில் நஸ்ரின் சேர்க்கப்பட்டாள்.

அங்கேதான் நான் அவளை முதலில் சந்தித்தேன். குழந்தைத்தனமான ஏதோ ஒரு பண்பு என்னை உடனடியாக அவளிடம் ஈர்த்தது. அவளது குறும்புப் புன்னகை யாரையும் நெகிழவைத்துவிடும். அந்த மறுவாழ்வு மையத்தில் உள்ள மற்ற நோயாளிகளும் அப்படித்தான் அவளால் ஈர்க்கப்பட்டார்கள்.

காமாத்திபுரா தெருக்களில் அவளது அனுபவங்களைப் பிறருடன் பகிர்ந்துகொண்டபோதுகூட மிக மிக வெளிப்படையாக இருந்தாள். இந்த வெளிப்படைத்தன்மையும், முதிர்ச்சியான பேச்சும்தான் அந்த மையத்துக்கு வந்திருக்கக்கூடிய யாராவது ஒருவர் மூலம் ஊடகத்தினருக்குத் தெரிந்திருக்கக்கூடும். அருமையான ஹியூமன் இன்டரஸ்ட் ஸ்டோரியாக அவளது வாழ்க்கைக் கதை நிச்சயமாக பத்திரிக்கை ஆசிரியர்களைக் கவர்ந்திருக்கும்.

ஊடக வானில் நட்சத்திரம்

அவள் சந்தித்த சோதனைகளையும், நெருக்கடிகளையும் அம்பலப்படுத்துவதில் நான் அதிகம் கவனம் செலுத்தவில்லை. ஆனால் அவளைப் பற்றிய செய்திக்கட்டுரைகள் வரத் தொடங்கியபிறகு நானும் என் கடமையைச் செய்ய வேண்டியிருந்தது. நான் எழுதினேன். ஆனால் அவளது அடையாளத்தை வெளிப்படுத்தும் புகைப்படத்தை எனது ஆசிரியர்கள் வலியுறுத்திக் கேட்கவில்லை. ஆனால் பல பத்திரிகைகள் அப்படியான கவனத்துடன் இல்லை. ஒரு ஆங்கில வார இதழ், நஸ்ரினின் படத்தை அதன் அட்டையாகப் போட்டு அதன் விளம்பரங்கள் மும்பை முழுவதும் வெளியிடப்பட்டன. மரைன் டிரைவ் தொடங்கி பாந்திரா வரை ஹோர்டிங்குகளில் நஸ்ரின் வெறித்துப் பார்த்தாள்.

அடுத்தடுத்து அவளது நேர்காணல்களும் புகைப்படங்களும் பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கின. சில வாரங்களிலேயே நஸ்ரின் குழந்தைப் பிரபலமானாள். அவளுக்கு உதவியளித்த சமூக சேவகர்கள்கூட ஊடக கவனத்தைப் பெறத்தொடங்கினர். திரைப்பட நட்சத்திரங்கள் நஸ்ரினை அழைத்துப் பரிசுகள் வழங்கினர். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர், மலர்கொத்துடன் வந்து அவளது மறுவாழ்வுக்கு உதவிகள் அளிப்பதாக உறுதி கூறினார். ரோட்டரி கிளப் மற்றும் லயன்ஸ் கிளப்பைச் சேர்ந்தவர்கள் உதவிசெய்ய ஆர்வத்துடன் இருந்தனர்.

புகழின் வெளிச்சத்தில்

இத்தனை கவனிப்புகளின் இடையே நஸ்ரின் தன்னையே ஒரு விஐபியாக நினைக்கத் தொடங்கினாள். அவமானத்தின் சித்திரமாகக் கள்ளமற்ற உள்ளத்துடன் இருந்த அந்தப் பெண் அகந்தை மிக்கவளாக மாறினாள். ‘நாளை அமிதாப் பச்சன்கூட சந்திக்க வரலாம்’ என்று என்னிடம் கூறினாள். அவள் ஏற்கனவே சுனில் தத்தையும், சஞ்சய் தத்தையும் சந்தித்திருந்தாள். “எல்லாரும் என்னைப் பார்க்க பெரிய, பெரிய காரில் வருகிறார்கள். உங்களிடம் ஏன் ஒரு கார் இல்லை?” என்று என்னிடம் கேட்பாள். அவளைப் பற்றி வந்த செய்திக் கட்டுரைகளால் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் நஸ்ரினுக்கு ஆதரவு அலை கிளம்பியது. லண்டனிலிருந்து நைரோபி வரை, வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்கள் பணப்பைகளைத் திறந்து நன்கொடைகளை வாரி வழங்கினர். இந்தியாவுக்கு விடுமுறைக்கு வருபவர்கள் நஸ்ரினை அழைத்து ஆடம்பர உணவகங்களில் டின்னரும் மதிய உணவும் அளித்தனர். விலை உயர்ந்த துணிகள், ஷூக்கள், கேக், சாக்லேட், ஐஸ் க்ரீம் என்று வாங்கிக்கொடுத்தனர். நஸ்ரினுக்குக் கிடைத்த இந்தத் திடீர் அங்கீகாரம் அவளை ராணி என்று நினைக்கச் செய்தது.

அவளை வேடிக்கைப் பார்க்க வந்தவர்களின் வாழ்க்கையைவிட அவள் வாழ்ந்த கடினமான வாழ்க்கைதானே இதற்கெல்லாம் காரணம்? அவள் தெருக்களில் அலைந்துகொண்டிருந்த போது இவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்?

நான் அந்த மறுவாழ்வு மையத்தின் தன்னார்வலராக இருந்ததால், நஸ்ரினைப் பார்க்க வந்த ‘அங்கிள்கள் மற்றும் ஆண்டிகளை’ப் பற்றித் தெரிந்துகொள்ள முடிந்தது. ஒன்று இந்தச் சின்னப்பெண்ணுக்கு நெடுங்கால உத்தரவாதம் ஏதும் இன்றி உதவிசெய்யலாம். அத்துடன் பப்ளிசிட்டிக்கும் சாத்தியம் உண்டு. ஒரு புகைப்படம் அல்லது செய்தி வரும். இந்த உலகத்துக்குப் போதுமான அளவு திரும்பச் செய்யவில்லை என்ற குற்றவுணர்வால் ஆட்பட்டு நஸ்ரினுக்கு உதவுபவர்களும் உள்ளனர்.

கசந்த பழைய வாழ்க்கை

நஸ்ரின் தனக்குக் கிடைத்த கவனிப்பைக் கொண்டாட ஆரம்பித்தாள். ஒரு கட்டத்தில் அவளது நலம் விரும்பிகள், அவளது எதிர்காலம் குறித்து யோசிக்கத் தொடங்கினர். ஒரு வீட்டுப் பணிப்பெண்ணாக நஸ்ரின் வேலைக்குப் போக ஆலோசனை கூறினர். ஆனால் திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் மேல்தட்டுப் பிரபலங்களுடன் சேர்ந்து பழகிய பிறகு நஸ்ரினுக்கு அப்படியான வேலையில் சேர்வதற்கு விருப்பம் இல்லை. ஹைதராபாத்தில் உள்ள அவளது பெற்றோரிடம் கொண்டுபோய் விட சிலர் ஆலோசனை கூறினர். ஆனால் தனது குடும்பத்தினரைச் சங்கடப்படுத்த நஸ்ரின் விரும்பவில்லை. அவளைப் பள்ளிக்கு அனுப்பலாம் என்றும் ஆலோசனைகள் எழுந்தன. ஆனால் அந்தச் சிறுமியோ பள்ளிகளையே வெறுத்தாள். தெருக்களில் சுதந்திரத்தை ருசித்த அவள் எந்தவிதமான ஒழுங்குக்குள்ளும் வருவதற்கு விரும்பவே இல்லை.

ஒருகட்டத்தில் நஸ்ரினுக்குக் கிடைத்த போற்றுதலும், ஆதரவும் வெளிரத்தொடங்கின. சிலர் அவளைப் பற்றித் தவறாகப் பேசத்தொடங்கினர். பிற போதை அடிமைகளின் பெற்றோர்கள் அந்த இல்லத்துக்கு வரும்போது, நஸ்ரினிடம் அவளது முந்தைய அனுபவங்கள் பற்றி மோசமான கேள்விகளைக் கேட்டனர். நஸ்ரின் தனிமையாகவும், பாதுகாப்பற்றவளாகவும் உணரத்தொடங்கினாள். அதை அவளது உடல்பாவத்திலேயே உணரமுடியும். “அங்கிள், இந்த உலகம் என்னுடைய உலகம் அல்ல” என்று ஒருமுறை என்னிடம் சொன்னாள்.

அவளைப் பொருத்தவரை, அனைத்து ஊடகக் கவனமும் அர்த்தமற்றதாகிப் போனது. “தெருவில் அவர்கள் எனது உடலைச் சுரண்டினர். இங்கே எனது வாழ்க்கையைச் சுரண்டுகிறார்கள். எனக்கு எல்லாம் தெரியும். நான் ஒன்றும் முட்டாள் அல்ல” அவள் எத்தனை உள்ளுணர்வு உள்ளவள் என்பதை உணர்ந்தேன்.

சாமர்த்தியமான சிறுபெண்ணாக பல சீராட்டல்களையும் அனுபவித்த அந்தப் பெண், தன்னைப் பராமரிப்பவர்களுக்கே சுமையாகிப் போனதை உணரத்தொடங்கினாள். வீட்டு வேலைக்காரப் பெண்ணாக இருந்து யாரோ ஒருவர் வீட்டில்- அவர்கள் எத்தனை பணக்கார்ராக இருந்தாலும்- பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருக்கவோ, உணவு சமைக்கவோ விரும்பவில்லை என்று சொன்னாள். பள்ளிக்குப் போகவும் அவளுக்கு விருப்பமில்லை. அங்கே யாரோடும் தன்னால் ஒட்டமுடியாது என்று கூறினாள். “அங்கிள், நான் தெருவுக்கு விற்கப்பட்ட ஒன்றுமறியாத பெண். நான் இந்த இடத்துக்கு உரியவள் அல்ல” என்றாள்.

பயணம் முடிந்தது

இந்த உரையாடல் நடந்து சில நாட்களில் நஸ்ரின், மறுவாழ்வு மையத்திலிருந்து தப்பித்துவிட்டாள் என்ற செய்தியைக் கேள்விப்பட்டேன். அவளது இருப்பிடத்தைத் தேட சில முயற்சிகளும் நடந்தன. மும்பையில் ஒருவரைத் தேடுவது மிகவும் சிரமம். நஸ்ரின், தனது தரகனிடமே மீண்டும் போய்விட்டிருக்கக் கூடும் என்ற ரீதியிலும் விசாரிக்கப்பட்டது. ஆனால் அவனோ காமாத்திபுராவிலிருந்து வெளியேறி புறநகர் பகுதிக்குக் குடியேறியிருந்தான்.

மறுவாழ்வு மையத்தில் நஸ்ரினை மறந்தே போனார்கள். மாதங்கள் கழிந்தன. நஸ்ரின் இறந்துவிட்டதாகச் செய்தி வந்தது. காவல்துறையினர் அதைத் தற்கொலை வழக்காகப் பதிவு செய்திருந்தனர். நஸ்ரினின் உடலை அடையாளம் காண மறுவாழ்வு மையத்துக்குத் தகவல் தரப்பட்டது.

நஸ்ரினின் உடல் ஜூகுவில் உள்ள கூப்பர் மருத்துவமனையின் பிணவறையில் இருந்தது. புழுக்கமான மாலையில் மறுவாழ்வு மையத்தின் மருத்துவரும் நானும் அந்த சிறுபெண்ணின் பாதியளவு கருகியிருந்த உடலைப் பார்த்தோம். அவளது கள்ளமற்ற புன்னகை இன்னும் என் மனதில் அலையடித்துக் கொண்டிருக்கிறது. சென்ட்ரல் பாம்பேயில் உள்ள சுடுகாட்டுக்கு அவளது உடலை எடுத்துச் சென்ற நினைவு எனக்கு இன்னும் இருக்கிறது. எல்லாமே அவசர அவசரமாக நடந்தது. அவளது உடலைப் போர்வையால் மூடினோம். புதிதாக வெட்டப்பட்ட குழியில் அவளது உடலை இறக்கினோம். கையளவு மண்ணை எடுத்து உள்ளே போட்டோம், நஸ்ரினின் பயணம் முடிந்தது.

அவளது மரணம் பற்றி ஒரு ஊடகமும் செய்தி எழுதவில்லை.

பத்திரிக்கையாளர் அஜீத் பிள்ளை எழுதிய Off The Record, Hachette Inida புத்தகத்தில் இருந்து.

ஆதாரம்: thehoot.org

தமிழில்: ஷங்கர்
...மேலும்

Sep 26, 2014

காலம் என்னும் நதி - ஷங்கர்


முன்னாள் பிரதமர் சந்திரசேகரிடம் இருந்து ஞானபீட விருது பெறுகிறார் குர்அதுல்ஐன் ஹைதர்
முன்னாள் பிரதமர் சந்திரசேகரிடம் இருந்து ஞானபீட விருது பெறுகிறார் குர்அதுல்ஐன் ஹைதர்

வேற்றுமையில் ஒற்றுமை காணும் பண்பாடு பற்றிப் பேச்சளவில் பெருமை கொள்பவர்களாகவே இந்தியாவில் பெரும்பான்மை யானவர்கள் இருக்கிறார்கள்.

ஆனால் அதன் உயிர் சான்றாக இருந்தவர் உருது பெண் எழுத்தாளர் குர்அதுல்ஐன் ஹைதர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகர் நகரத்தில் 1928-ல் ஜனவரி 20-ம் தேதி பிறந்த குர்அதுல்ஐன் ஹைதர், உருது இலக்கிய உலகில் புயல் போல நுழைந்து அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நாவல்கள், சிறுகதைகள், பயண இலக்கியங்களை எழுதியவர்.

டெய்லி டெலிகிராப், பிபிசி ஆகிய செய்தி நிறுவனங்களில் நிருபராகப் பணியாற்றியவர். 1989-ல் இவருக்கு ஞானபீடப் பரிசு கிடைத்தது.

கல்வியில் சிறந்த ஹைதர்

படித்த இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்த குர்அதுல்ஐன் ஹைதருக்கு இஸ்லாமியக் கல்வியுடன் சேர்ந்து தாராளவாத மேற்கத்திய பாணிக் கல்வியும் அளிக்கப்பட்டது.

இந்தியப் பண்பாடு, இஸ்லாமியக் கலாசார விழுமியங்கள் மற்றும் மேற்கத்தியப் பண்பாட்டின் சிறந்த அம்சங்களின் கலவையாக அவரது ஆளுமை உருவானதில் வியப்பேதும் இல்லை.

கவிஞர் முகமது இக்பால், ஜவகர்லால் நேரு, முகம்மது அலி ஜின்னா, மவுலானா அபுல் கலாம் ஆசாத் போன்ற பிரபலங்களும் கலைஞர்களும் இயல்பாக வந்து செல்லும் இடமாக அவர் வீடு இருந்தது.

எழுத்தும் ஊடகப் பணியும்

சிறு வயதிலேயே தந்தையை இழந்த குர்அதுல்ஐன், 1947-ல்இந்தியா சுதந்திரமடைந்த போது தன் தாய் மற்றும் சகோதரனுடன் பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்தார். அங்கேதான் அவரது முதல் நாவல் வெளியானது. ‘மேரே பி சனம்கானே’ (எனது கோயில்களும்தான்) என்ற அவரது முதல் படைப்பு வெளியானபோது ஹைதருக்கு வயது 19. இந்திய-பாகிஸ்தான் பிரிவினை ஏற்படுத்திய துயரங்கள் குறித்த படைப்பு அது.

பிரிவினை அனுபவங்களை நேரில் பார்த்த அவர், தன் படைப்புகளிலும் அந்த துயர நிகழ்வுகளின் தடயங்களைப் பதிவுசெய்திருக்கிறார்.

லண்டனில் பிபிசி செய்தியாளராகப் பணியாற்றிய பிறகு இந்தியா திரும்பினார். இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியின் உதவி ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

வரலாற்றின் கதை

1959-ல் அவர் எழுதிய அக்னி நதி (ஆக் கா தர்யா) நாவல்தான் அவருடைய மிகப் புகழ்பெற்ற படைப்பு. 3000 ஆண்டு கால இந்திய நாகரிகத்தின் வரலாற்றை ஒரு கதையாகச் சொல்லும் படைப்பு இது. வேத காலத்தில் தொடங்கி, பவுத்தம் இந்தியாவில் வேரூன்றிய காலகட்டம் வழியாக 1956-ல் முடியும் நாவல் இது.

பெரிய வரலாற்று நிகழ்வுகளின் பின்னணியில் மனிதர்களின் சிந்தனை, ஆசாபாசங்கள், மோதல்களைச் சித்தரிக்கும் படைப்பு இது.

அக்னி நதியில் வரும் சம்பா என்ற பெண் கதாபாத்திரம் இந்தியப் பெண்ணின் பிரதிநிதியாக இருக்கிறாள். ஆதியில் அவள் சம்பக்காக வருகிறாள். அவளது அறிவுக்கும், நுண்ணுணர்வுக்கும் பொருத்தமில்லாத ஒரு பிராமண இளைஞனைத் திருமணம் செய்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் அவளுக்கு.

இடைக்காலத்தில் சம்பாவதியாக, மத்திய கிழக்கு நாட்டிலிருந்து வரும் அபுல் மன்சூர் கமாலுதீன் மீது காதல் கொள்பவளாக வருகிறாள். அவளுக்கும் கடைசியில் தனிமையே மிஞ்சுகிறது.

நவீன காலத்திலும் சம்பா வருகிறாள். அவளும் புறக்கணிப்பையும் தனிமையையும்தான் கடைசியில் சந்திக்கிறாள். கைவிடுதல், தனிமை, அடிமைத்தனம் என ஆண்களின் கரங்களால் இந்தியப் பெண் வரலாறெங்கும் துயருறும் சித்திரத்தை சம்பாவின் வழியாக வரைகிறார் அக்னி நதியின் ஆசிரியர்.

அக்னி நதி நாவலில் நூற்றுக் கணக்கான கதாபாத்திரங்கள் தோன்றி மறதியில் மறைந்து போவார்கள். நாவலின் இறுதியில் ஒரே பின்னணியில் உள்ள இந்துக் குடும்பங்களும், முஸ்லிம் குடும்பங்களும் பிரிவினைக் காலகட்டத்தில் சிதறி ஓடும் அவலம்தான் மனதில் பதிகிறது.

சிலர் இங்கிலாந்துக்கும், சிலர் பாகிஸ்தானுக்கும் ஓடுகிறார்கள். சிலர் இந்தியாவிலேயே தங்குகின்றனர். மாறிய சூழலில் அவர்களால் முழுமையாக வேர்கொள்ளவே முடியவில்லை. ஒரு தேசம் கைவிட்ட நிலையில் இருக்கின்றனர். இதுதான்

அக்னி நதியின் ஒட்டுமொத்த வரைபடம்.சிறு வயதில் பாகிஸ்தானுக்கு அம்மாவுடன் சென்றாலும், லண்டனிலிருந்து இந்தியா திரும்பிய அவர், தனது மரணம் வரை இந்தியாவிலேயே இருந்தார். உருது இலக்கியத்தின் பெரும் இலக்கியகர்த்தாவான அவர் 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி நுரையீரல் பாதிப்பால் காலமானார்.​

நன்றி - தி ஹிந்து
...மேலும்

Sep 25, 2014

இவற்றில் ஆண்களின் பங்கு என்ன? - விலாசினி


தமிழ்நாட்டில், இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை ஸ்வேதா பாசுவைத் தெரிந்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். சினிமாவிலேயே கட்டுண்டு கிடக்கும் சமூகத்திற்கும் இவர் குழந்தை நட்சத்திரமாக தேசிய விருது பெற்ற செய்தி புதிதுதான். ஆனால் இன்று, ஏதோ ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு ஸ்வேதா பாசுவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தீர்ப்புகள் எழுதிக்கொண்டிருக்கிறோம்.

விபச்சாரம் சமூக சீர்கேடு அல்லவா? இது எப்படித் தனிமனித விஷயமாகும் என்பவர்களுக்கு ஒரு தகவல். இந்தியக் குற்றவியலின் கீழ் ஒரு நபர் தன் உடலைப் பயன்படுத்திப் பொருளீட்டிக்கொள்வது என்பது தண்டனைக்குரிய செயலல்ல. அதாவது, ஒரு பெண், தன் பொருளாதாரத் தேவைகளுக்காகத் தன் உடலை ஒரு ஆணுடன் பகிர நினைத்தால் அது குற்றமாகாது. ஆனால், இதை ஒரு அமைப்பின்வழி செய்வதும் (விபச்சார விடுதிகள்) பொது இடங்களில் மற்றவர்களையும் பாலியல் தொழிலுக்கு அழைப்பதும், ஈடுபடத் தூண்டுவதும்தான் குற்றம்.

ஏன் ஒருதலைப்பட்சம்?

ஸ்வேதா பாசு விஷயத்தில் நடந்தது என்னவென்றால் அவர் விபச்சார விடுதியில் வைத்தோ, பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்ததற்காகவோ கைது செய்யப்படவில்லை. ஒரு நட்சத்திர விடுதியில் ஒரு ஆணுடன் ‘சமரசமான’ நிலையில் இருந்ததற்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அப்படி அவர் யாருடன் இருந்தார் என்பதையும் அவர்கள் தைரியமாக ஏன் வெளியிடவில்லை? காவலர்கள் இந்தச் செயலில் ஈடுபட்ட ஆண்களையும், அந்த நட்சத்திர விடுதி உரிமையாளரையும் கைது செய்யாததும், அல்லது, அவர்கள் மீதும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று யாருக்கும் எந்தச் செய்தியும் தெரியப்படுத்தாததும் நிச்சயம் ஒரு மோசமான முன்னுதாரணம்.

குற்றமே இல்லை என்றபோதும், தைரியமாகத் தான் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக ஸ்வேதா பாசு ஒப்புக்கொண்டிருக்கிறார். அந்தத் தைரியம்கூட இல்லாத ஆண் மகன்களை நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கிறது.

பகிரங்கப்படுத்தப்படும் அந்தரங்கம்

பாலியல் வழக்குகளில் பாதிப்படைவது எல்லாம் சம்பந்தப்பட்ட பெண்கள் மட்டும்தான். மற்ற குற்றங் களில் கைது செய்யப் படுபவர்களுக்குக்கூட அந்தரங்கம் பேணப்படுகிறது. ஆனால் பாலியல் வழக்குகளில், அது ஒரு பெண் விரும்பி மேற்கொள்ளும் தொழிலாக இல்லாமல், அவள் மீதான வன்முறையாக இருந்தாலும் காவல்துறை, மீடியாவின் அணுகுமுறை மிக மோசமானது. சமீபத்தில், பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட ஒரு மாணவியின் அடையாளம் மீடியாக்களால் வெளியிடப்பட்டு அவளின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டு என்றென்றும் மீள முடியாத மன உளைச்சலை அவளுக்கு அளித்திருக்கிறது. ஆனால் அவளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியவர் யார் என்று நம் ஒருவருக்கும் தெரியாது.

பாலியல் தொழில் செய்தாலும் ஒரு பெண்தான் குற்றவாளி, பாலியல் வல்லுறவுக்கு ஆளானாலும் அவள்தான் குற்றவாளி. இப்படி ஒழுக்கமாக இல்லை, அப்படி உடை அணியவில்லை, இரவுகளில் ஆணுக்கு இணையாக வீட்டுக்கு வெளியில் வேலை பார்க்கிறாள் என்று அவளை நோக்கி ஏராளமான குற்றச்சாட்டுகள். ஒரு பெண் பாலியல் தொழிலைத் தனியாகச் செய்ய முடியுமா? அவளுடன் உறவு வைத்துக்கொள்பவர்களையும் தாண்டி இன்னும் பல ஆண்கள் இதில் சம்பந்தப்பட்டிருப்பார்கள். ஆனால் அந்த ஆண்கள் யார்? என்ன செய்கிறார்கள்? அனைத்தும் ரகசியம். தன்னுடைய உடலை அடகு வைத்துப் பொருளீட்டுவது தவறென்றால், அப்படிச் சம்பாதிப்பதையும் பெண்களிடமிருந்து பங்கு போட்டுக்கொள்ளும் ஆண்களுக்கு என்ன தண்டனை? அவளிடமிருந்து அத்தகைய சேவையைப் பெறுவதற்கும், அவளை அப்படிச் செய்ய உளவியல் ரீதியாகத் தூண்டும் ஆண்களுக்கும் என்ன தண்டனை?

ஊடகங்களின் பொறுப்பு

காவல்துறையினர் ஸ்வேதா பாசுவின் புகைப்படங்களை வெளியிடவில்லை; பெயர் அறிந்தவுடன் மீடியாக்களால் செய்யப்பட்டது இது என்றும் சில குரல்கள் ஒலிக்கின்றன. முதலில் கைது செய்ததே தவறு என்னும் பட்சத்தில், காவல் துறையினரின் செய்கையை நியாயப்படுத்த முடியாது. மேலும், அவர் நடிகை என்பதாலேயே அவரது புகைப்படங்களைக் கண்டபடி வெளியிட்டபடி இருக்கும் ஊடகங்கள் தங்கள் ஊடகத்துறை பற்றிய அறச்சிந்தனையை வளர்த்துக் கொள்வது அவசியம். காண்பதும், கேட்பதுமெல்லாம் செய்தியாகாது.

ஸ்வேதா பாசுவின் படங்கள் வெளியானதற்குக் காரணம் வைத்திருக்கும் மீடியா இதே போன்றதொரு வழக்கில் கைதான மற்றொரு ஆந்திர நடிகை திவ்யா ஸ்ரீ என்பவர்க்கு பதிலாகத் தமிழ் நடிகை ஸ்ரீவித்யா என்பவரின் புகைப்படத்தை மாறி மாறி வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. தகவல் தொழில்நுட்பத்தின் உச்சபட்ச வளர்ச்சியால் ஒரு சிறு தவறான செய்தியும் ஒரே சமயத்தில் கோடிக்கணக்கானவர்களைச் சென்றடையமுடியும். துரதிர்ஷ்டவசமாக உண்மைச் செய்தி வெளிவருவதற்குள் பொது மக்கள் அடுத்த, பரபரப்பான செய்திக்குச் சென்றுவிடுவார்கள். முந்தைய, தவறான செய்தி அப்படியே பதிந்துவிடும். பெயர் குழப்பத்தால் பாதிக்கப்பட்ட ஸ்ரீவித்யா ஒவ்வொரு பத்திரிகையாக “அது நானல்ல” என்று அறிக்கைவிடும் நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இதற்கு ஊடகங்கள் எப்படிப் பொறுப்பேற்கப் போகின்றன? அவர்கள் ஸ்ரீவித்யாவிற்கு தரும் பதிலென்ன?

தன் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் தேவையான பொழுதுகூட காவல் நிலையம் செல்வதை விரும்பாத சமூகம்தான் எங்கோ, யாரோ ஒரு பெண் என்றால் எந்த ரத்த பந்தமும் இல்லாமலேயே அவள் மீது உரிமையெடுத்து, ஒழுக்க போதனைகள் வழங்கி, அவளைப் பற்றிய தங்கள் அனுமானங்களைப் பொது இடத்தில் இலவசமாகப் பகிர்ந்துகொள்கிறது. பல சமயம் அது அவளின் படுக்கையறையை எட்டிப்பார்க்கவே விரும்புகிறது.

எட்டிப்பார்க்கும் அநாகரிகம்

ஸ்வேதா பாசு பொருளாதாராத் தேவைகளுக்காகத்தான் பாலியல் தொழிலில் ஈடுபட்டார் என்றவுடன் அதற்கும் தங்கள் அறச்சீற்றத்தைக் காண்பித்து நியாயம் பேசுபவர்கள், “அவர் என்ன பட்டினி கிடந்தாரா? அவர் குடும்பம் கஷ்டப்படுகிறதா? சொகுசு வாழ்க்கைக்காகத்தான் இப்படிச் செய்தார். அது எப்படி நியாயம் ஆகும்?” எனக் கேட்கின்றனர். ஒருவரின் பொருளாதாரத் தேவை என்பது இவ்வளவு வருமானத்திற்குள் அடங்க வேண்டும் என்று சட்டமே எந்த அளவுகோலையும் வழங்கவில்லை. அதை நிர்ணயிக்க நாம் யார்? இது மற்றொருவர் வாழ்க்கையில் மூக்கை நுழைப்பது.

அவர் அடிப்படைத் தேவைகளுக்காக இல்லாமல், சொகுசு வாழ்க்கைக்காகவே செய்ததாக இருந்தாலும் சட்டப்படியே அது குற்றமில்லை எனும்பொழுது இதைப்பற்றி மற்றவர்கள் கவலைப்பட ஒன்றுமில்லை.

ஒரு பெண் பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருப்பதும், ஒரு ஆண் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதும் பொதுவில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் அல்ல. அது அவரவர் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு சார்ந்தவை. கலாச்சாரம், ஒழுக்கம், பண்பாடு என்பதையெல்லாம் இன்னமும் பெண் உடலோடு மட்டுமே தொடர்புபடுத்திப் பார்க்கும் வழக்கத்தை ஆண்கள் இனியேனும் பரிசீலிப்பது நல்லது. எங்கோ இருக்கும், செய்திகளில் இவ்வாறு அடிபடும் பெண்களால் சமூக ஒழுக்கம் கெடும் என்றெல்லாம் எந்தவொரு ஆணும் கவலைப்பட வேண்டியதில்லை. பாலியல் தொழில் செய்பவரைக் கண்டால் பிடிக்காது என்றால், தாங்கள் அவர்களிடம் செல்லாமல் இருப்பதுதான் உச்சபட்ச ஒழுக்கமாக இருக்க முடியும். வேண்டுமானால் அத்தனை ஆண்களும் ஒன்றிணைந்து “இனி பாலியல் தொழில் செய்பவர்களிடம் நாங்கள் செல்ல மாட்டோம்” என்று சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளலாம். யார் தடுக்க முடியும்?

கைவிடப்படும் கண்ணியம்

மணமுடித்திருக்கும் ஒரு பெண் அல்லது ஆணின் திருமணத்திற்கு வெளியிலான உறவுகளை அழைப்பதில்கூட கண்ணியம் காக்க நம் சமூகத்திற்குக் கற்றுத்தர வேண்டியதாக இருகிறது. இன்னும் ‘கள்ளக் காதல்’ என்ற பதத்தையே இவ்வுறவுமுறைகளுக்கு ஊடகங்கள் பயன்படுத்துகின்றன. எல்லாவற்றிலும் மேற்கத்திய மோகம் ஆட்டிப்படைக்கும் நாம் அவர்கள் இவ்வுறவுமுறைகளை திருமணத்தை மீறிய உறவுகள் (Extra Marital Affair) என்று அழைப்பதை மட்டும் கவனிக்கத் தவறிவிட்டோம்.

வயதுக்கு வந்த ஆணும் பெண்ணும் இணைவது, என்ன காரணமாக இருந்தாலும், மற்றவர்களுக்கான செய்தியல்ல என்பதை ஏற்கெனவே வளர்ந்துவிட்டவர்கள் உணர்வார்களா என்பது ஐயமே. ஆனால், அடுத்த தலைமுறைக்காவது இது பற்றிய புரிதலை ஏற்படுத்துவது அவசியம். பாலியல் கல்வி என்பதை வெறும் உடலுறுப்புகளின் விளக்கம் பற்றியதாக இல்லாமல் ஆண், பெண் உறவுமுறைகள், அதன் சிக்கல்கள் என்று உளவியல் சார்ந்தும் கற்றுத்தர வேண்டியது அவசியம். அவசரமும்கூட. பள்ளி வயதிலேயே இத்தகைய உளவியல் சார்ந்த, உடல் சார்ந்த உறவுமுறைகளைக் குழந்தைகள் தெரிந்துகொள்வது வளர்ந்தபின் அவர்களின் உறவுகளைக் கையாள்வதிலும், உணர்வு ரீதியாக அவர்களைத் தைரியமாக ஆக்குவதிலும் முக்கியப் பங்காற்றுபவை. பாலியல் கல்வி பாடத்திட்டத்தில் இதுவும் சேர்க்கப்பட வேண்டும்.

ஸ்வேதா பாசுவின் கைது உணர்த்தும் மற்றொரு கசப்பான உண்மை பொது மனங்களில் படிந்திருக்கும் வக்கிரம் பற்றியது. பெண் நடிகர்கள், தொலைக்காட்சி தொகுப்பாளர்கள், ஃபேஷன் மாடல்கள் பலர் சமூக வலைத்தளங்களில் இயங்குவது அவர்கள் சார்ந்திருக்கும் தொழிலுக்கு இன்றியமையாதது. ஆனால் அங்கும் ஒருவர் தான் பெண் என்பதாலேயே பல அசிங்கங்களைச் சந்திக்க நேரிடுகிறது. அவர்கள் மட்டுமல்ல. பொதுவாகவே சமூக வலைத்தளங்களில் முனைப்பாக இயங்கும் பெண்கள் ஒவ்வொருவரின் மீதும் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் வக்கிரப் பார்வைகளும், பாலியல் நிந்தனைகளும் சர்வசாதாரணம்.

இனத்தோடு சேரும் இனம்

இந்த விஷயத்திலும் ஸ்வேதா பாசுவிற்கு ஆதரவாகக் குரல் கொடுப்பவர்களையும் தாக்க ஆரம்பித்துள்ளனர், “இனம் இனத்தோடுதான் சேரும்” என்று. அதாவது பாலியல் தொழில் செய்பவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும், அதை எதிர்த்து அவர்களுக்கு ஆதரவாகப் பேசுபவர்களும் அத்தொழிலைச் செய்பவர்கள்தாம் என்பது சில ஒழுக்கவியலாளர்களின் கருத்து. ஆம், பெரும்பான்மை ஆண்கள் இதுபோன்ற விஷயங்களில் பெண்ணுக்கு எதிரான நிலைபாட்டைக் கொண்டிருந்தால் பெண் இனம் இனத்தோடு சேர்ந்துதான் போராட வேண்டியிருக்கும்.

அப்படி ஒருநாள் ஒட்டுமொத்த பெண் சக்தியும் ஒன்று திரண்டால் சமூகத்தின் மொத்தக் கயமையும் பொசுங்கக்கூடும்.

நன்றி - தி ஹிந்து
...மேலும்

Sep 24, 2014

பெண்களுக்கு பாதுகாப்பானதா இந்த உலகம்? - தனசீலி திவ்யநாதன்


கடந்த சில மாதங்களாக நம்மை வெட்கப்படவும் வேதனைப்படவும் வைத்த நிகழ்வுகளில் ஒன்று, பெண்கள் மீதான பாலியல் வன்முறை நிகழ்வைக் குறித்த விவாதங்களில் குற்றம் இழைத்தவர்களுக்கு பதிலாகப் பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றவாளி கூண்டில் ஏற்றும் அநீதிதான்.

ஒரு பெண் வன்முறைக்கு ஆளாகிவிட்டால் போதும். உடனே ஆயிரக்கணக்கான கேள்விக் கணைகள் தொடுக்கப்படும். வன்முறை சம்பவம் எங்கு நடந்தது? அந்தப் பெண் யார்? எந்தச் சாதியைச் சார்ந்தவர்? என்ன உடை உடுத்தியிருந்தார்? அவருடன் இருந்தவர் யார்? சம்பவம் நடந்த நேரம் இரவா? பகலா? இதுபோன்ற கேள்விகள் எழுப்பப்படும். வன்முறைச் சம்பவம் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் நிகழ்ந்தால் அங்கு இவளுக்குத் தனியாக என்ன வேலை? என்ற கேள்வி வேறு. சாதியில், பொருளாதாரத்தில் பின்தங்கியவராக அந்தப் பெண் இருந்தால் அவர் ஒழுக்கமானவராக இருக்க மாட்டார் என்ற தீர்மானம் உடனே நிறைவேறிவிடும். புடவையைத் தவிர எதை உடுத்தியிருந்தாலும், இப்படி உடை உடுத்தினால் ஆண்கள் சீண்டிப் பார்க்காமல் என்ன செய்வார்கள்? என்ற நியாயப்படுத்துதலும் நடக்கும்.

நிகழ்வின் போது உடன் இருந்தவன் ஆண் நண்பனோ, காதலனோ என்றால் கண்டவனோடு சுற்றினால் இப்படித்தான் நடக்கும் என்ற விமர்சனமும் நிச்சயம் உண்டு. இரவு நேரத்தில் நடந்தது என்றால், நேரம் கெட்ட நேரத்தில் இவளுக்கு வெளியில் என்ன வேலை என்ற கேள்வியும் கேட்கப்படும்.

இம்முறை பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை, வீட்டில் கழிப்பறை இல்லாத காரணத்தால் இரவில் வெளியே சென்ற பெண்கள். எனவே, நிகழ்வுக்குப் பின் நடந்த விவாதங்களில் பெண்களை விமர்சிக்காமல், பெண்களுக்குக் கழிப்பறை இல்லாத வாழ்க்கை பாதுகாப்பு அற்றது என்று முடிவு செய்யப்பட்டது. இங்கும் எல்லோருடைய கவலையும் பெண்களின் பாதுகாப்பு குறித்து அல்லாமல், கழிப்பறைகூட இல்லாத வீடுகளே. ஒரு பெண் குழந்தை (கதவு இல்லாத) தன் வீட்டில் தன் பெற்றோருடன் பாதுகாப்பாகப் படுத்துறங்க முடியாது. பெண்கள் தாங்கள் வசிக்கும் ஊரில், தங்களின் வீட்டிலிருந்து சில மீட்டர்கள்கூட பாதுகாப்பாகச் சென்றுவர முடியாது. எல்லோருக்கும் பொதுவான பேருந்தில் பயணிக்க முடியாது என்றால் இது சட்டம் ஒழுங்கு பிரச்சினை அல்லவா? ஒட்டு மொத்த சமுதாயத்தின் பிரச்சினை அல்லவா?

கேள்வி கேளுங்கள்

இங்கு நாம், நம் நாட்டின் நாகரிகம், பண்பாடு, பெண்ணைக் கடவுளாக, தாயாகப் போற்றும் வாழ்க்கைமுறை, ஒருவனுக்கு ஒருத்தி எனும் அறநெறி, கற்பு என்னும் கண்ணியம் இவை அனைத்தையும் கேள்விக்கு உள்ளாக்க வேண்டாமா?

நம் வீடுகளில் நாம் வளர்க்கும் ஆண்பிள்ளைகளின் இத்தகைய வன்முறைப் போக்கு நமக்குக் கவலைதர வேண்டும். இதற்கான காரணங்களை நாம் தேட வேண்டும். அவற்றை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

இதற்கு மாறாக, பஞ்சாயத்தைக்கூட்டி, பெண்கள் இரவு வேளைகளில் வெளியே செல்லக் கூடாது. தக்க துணையின்றி தனியே செல்லக் கூடாது. சரியான உடைகளை உடுத்த வேண்டும். கண்டிப்பாகப் பெண்கள் கைப் பேசியைப் பயன்படுத்தக் கூடாது என்ற கட்டுப்பாடுகளை விதிப்பதே நிகழ்கிறது. இத்தகைய கட்டுப்பாடுகள் பெண் கல்வி, வேலைவாய்ப்புகள், பெண்ணுரிமை, சுதந்திரம் என அனைத்தையும் மறுக்கும். மேலும், இந்த அணுகுமுறை இந்தப் பிரச்சினைக்குப் பெண்கள்தான் காரணம் என்ற மாயையை உருவாக்கி, வன்முறையில் ஈடுபட்ட கயவர்கள், அதற்கான காரணங்கள் குறித்த ஆய்வையும் தடுக்கிறது.

சமூக சிந்தனையுள்ள ஒவ்வொருவரும், ஆண் ஏன் தனியாகவோ, குழுவாகவோ வன்முறையில் ஈடுபடுகிறான்? பெண்கள் மீதான பாலியல் வன்முறையில் ஒரு பெண்ணின் உடலைக் கடந்து அவளின் தன்னம்பிக்கை, சுதந்திரம், ஆளுமையென அனைத்தையும் அவன் சிதைக்கக் காரணம் என்ன? ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் சமுதாயத்தில், ஆணுக்கு எங்ஙனம் எதிரியாகிப்போனாள்? ஒரு பெண் குழந்தையைச் சிதைக்கும் வகையில் ஆணின் வக்கிரம் அதிகரித்து வருவது ஏன்? போன்ற கேள்விகளை எழுப்புவதும் அதற்கான விடைகளைத் தேடுவதுமே வன்முறையற்ற வாழ்வுக்கு உதவும்.

சமத்துவம் இல்லை

இந்தச் சமுதாயத்தில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து வாழ்ந்த போதிலும், பாகுபாடு இன்றி சமமாக வாழ்வது இல்லை. இந்தியாவில் எப்படி சாதிய அடுக்கில், ஒரு சாதியைச் சார்ந்தவரைவிட இன்னொரு சாதியைச் சார்ந்தவர் கீழானவராகக் கருதப்படுகிறாரோ, அவ்வாறே ஆண்களைவிடப் பெண்கள் கீழானவர்களாகவே கருதப்படுகின்றனர். பெண், ஆணுக்கு நிகராகக் கல்விகற்று, சரிசமமாக வேலை செய்வது, உடை உடுத்துவது, வாகனங்களை ஓட்டுவது, இரவில் நடமாடுவது என்பதெல்லாம் ஆணை எரிச்சல் அடையச் செய்கிறது. காலகாலமாகத் தனக்கு அடிமைப்பட்டு ஏவல்செய்த ஓர் இனத்தின் உரிமை வாழ்வு அவனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. பெண்மீதான வன்முறைக்கு அவனைத் தூண்டுகிறது.

ஊடகம் தரும் தூண்டுதல்

பாலியல் வக்கிரங்கள் நிகழ்வதற்கு ஊடகம், குறிப்பாக இணையம் பெரும் தூண்டுகோலாக இருக்கிறது. ஊடகங்களில் காட்சிப்படுத்தப்படும் பாலியல் வாழ்க்கை ஒரு அன்பின் வெளிப்பாடாக, கணவன் - மனைவி இடையே நிகழ்வதாக சித்திரிக்கப்படுவதில்லை. பெரும்பாலும் அவை இயற்கைக்கு முரண்பட்டதாக, மிகைப்படுத்தப்பட்டதாக, வன்முறையுடன் கூடியதாகச் சித்திரிக்கப்படுகின்றன. இதன் விளைவாக இது தனது இயல்பு வாழ்க்கையில் சாத்தியமல்ல எனத் தெரிந்தவன் இதைப் பரீட்சித்து பார்க்க எதிர்த்துப் போராட இயலாத, தனித்துவிடப்பட்டப் பெண்களை, குழந்தைகளைத் தேர்வுசெய்கிறான்.

இந்தச் சூழலில் நமக்கு எழும் கேள்வி, ஊடகத்தில் காட்டப்படும் பல்வேறு சாகச நிகழ்வுகளை முயற்சி செய்ய அஞ்சுபவன், பெண்ணை மட்டும் வல்லுறவு கொள்வது ஏன்? காரணம் சாகச விளையாட்டுகளில் அவனின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. ஆனால், ஒரு பெண்ணின் வாழ்வையே சீர்குலைத்துவிட்டுச் சட்டத்தின் ஓட்டையில் அவன் எளிதாக தப்பி சுதந்திரமாக நடமாட முடியும்.

இந்நிலை மாற, சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். தண்டனைக்கான வயதுவரம்புகள் நீக்கப்பட வேண்டும். ஒரு குற்றவாளிகூடத் தப்பிவிடாதபடி காவல்துறையும், நீதித்துறையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். குற்றங்களை வெளியில்வந்து பதிவு செய்யவும், குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவவும், பெண்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக ஆண்-பெண் பாகுபாடுகள் களையப்பட்டு பாலின சமத்துவத்திற்கான முனைப்புகள் வீடு, பள்ளி, பணியிடம் என எங்கும் தொடங்கப்பட வேண்டும். ஆண் குழந்தைகள் வளர்ப்பிலும், அவர்களுக்கு அறிவுடன் அறநெறியைப் பயிற்றுவிப்பதிலும் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். இந்த உலகம் அனைவருக்கும் பாதுகாப்பானதாய், இனிதானதாய் இருக்க ஒவ்வொருவரும் பங்களிப்பு செய்வோம்.

நன்றி - தி ஹிந்து
...மேலும்

Sep 23, 2014

முஸ்லிம் பெண்கள் அதிகாரப்படுத்தப்படுதல் : தேவைகளும் தடைகளும் - அ.மார்க்ஸ்


ஆட்சிமன்றங்கள், நீதித்துறை, நிர்வாகத் துறைகள் ஆகியவற்றில் இந்திய முஸ்லிம் பெண்களின் நிலை     

சட்ட, பாராளுமன்றங்கள், நீதிமன்றங்கள், நிர்வாகத் துறைகள் ஆகியவற்றில் முஸ்லிம் பெண்களின் பங்கு குறித்த தரவுகள் இதுவரை முறையாகத் தொகுக்கப்படவில்லை. முதன் முதலாக இந்திய முஸ்லிம்கள் குறித்த தரவுகள் ஓரளவு முழுமையாகத் தொகுக்கப்பட்டது சச்சார் குழு அறிக்கையில்தான். முஸ்லிம்கள் குறித்துப் புனையப்பட்டிருந்த பல பொய்கள் அதன் மூலம் தகர்ந்தன. எனினும் சச்சார் அறிக்கை மீது வைக்கப்படும் மிக முக்கியமான விமர்சனங்களில் ஒன்று அது முஸ்லிம் பெண்கள் குறித்து உரிய கவனம் செலுத்தவில்லை என்பது.  பேராசிரியைகள் ஸீனத் சவுகத் அலி, ஃபரிதா லம்பே முதலானோர் இதனை அப்போதே கண்டித்தனர்.சச்சார் குழுவில் இருந்த ஏழு உறுப்பினர்களில் ஒருவர் கூட பெண் இல்லை என்பதை புகழ் பெற்ற பத்திரிக்கையாளர் சீமா முஸ்தபா சுட்டிக் காட்டினார். இந்திய முஸ்லிம் பெண்களின் நிலையை முஸ்லிம் ஆண்களுடனும், பிற பெண்களுடனும் ஒப்பீட்டுத் தரவுகளை சேகரிக்க சச்சார் குழு தவறியது.

ஆனால் ஒரு மேலோட்டமான பார்வையிலேயே நாம் சிலவற்றைச் சொல்ல முடியும். முஸ்லிம் பெண்கள் 1) முஸ்லிம் ஆண்களைக் காட்டிலும் 2) பிற மதப் பெண்களைக் காட்டிலும் கல்வி மற்றும் ஆற்றல் படுத்தப் படுவதில் பின் தங்கி உள்ளனர் எனச் சொல்வதற்கு விரிவான ஆய்வுகள் தேவை இல்லை. எடுத்துக் காட்டாக ஒன்றிரண்டைச் சொல்லலாம். 1990 தொடங்கி அடுத்த 20 ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ் தேர்வுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை வெறும் 47 தான். மொத்தம் தேர்வு செய்யப்பட்டவர்களில் வெறும் 2.92 சதந்தான் முஸ்லிம்கள். 1992, 2004 ஆகிய ஆண்டுகளில் ஒரு முஸ்லிம் கூடத் தேர்வு செய்யப்படவில்லை. இது மொத்த முஸ்லிம்களின் எண்ணிக்கை. முஸ்லிம் பெண்கள் எனப் பார்த்தால் இந்த 20 ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வெறும் 9 பேர்கள்தான்.

ஜம்மு காஷ்மீருக்கு அடுத்து முஸ்லிம்கள் மிக அதிகமாக உள்ள அசாமில் 2013ல் தான் உம்மே பர்தினா அடில் என்கிற ஒரு முஸ்லிம் பெண் ஐ.ஏ.எஸ்  தேர்வில் வெற்றி பெற முடிந்தது.  தமிழ் நாட்டில் 1974ல் தான் யாஸ்மின் அகமது என்கிற பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக முடிந்தது. 60 சதத்திற்கும் மேல் முஸ்லிம்கள் உள்ள ஜம்மு காஷ்மீரில் 2012ல் தான் முதன் முதலில் ஷெஹ்ரி டி அஸ்கர் என்பவர் ஐ.ஏ.எஸ் அதிகாரியானார், அதே ஆண்டில்தான் அம்மாநிலத்தில் ருவேதா சலம் என்கிற பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஆனார். குஜராத்தில் 2012ல்தான் சாரா ரிஸ்வி என்பவர் முதல் முஸ்லிம் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி என்கிற பெயரைப் பெற்றார். தமிழ்நாட்டில் 2014ல் தான் முதல் ஐ.பி.எஸ் ஆனார்.

தமிழ்நாட்டில் இது வரை இரண்டே இரண்டு முஸ்லிம் பெண்களுக்குத்தான் சட்டமன்றத்தில் நுழைய வாய்ப்புக் கிடைத்துள்ளது. 1991 – 96 ல் அரவாக்குறிச்சி தொகுதியிலிருந்து மரியமுல் ஆசியா சட்டமன்ற உறுப்பினர் ஆனார். 2006 – 11 ல் பதர் சயீத் திருவல்லிக்கேணி தொகுதியிலிருந்து சட்ட மன்ற உறுப்பினராக இருந்தார். பதர் சயீத் பின்னர் வக்ஃப் வாரியத் தலைவராகவும் ஆக்கப்பட்டார். எந்த முஸ்லிம் பெண்ணும் தமிழகத்தில் அமைச்சராகும் வாய்ப்புப் பெறவில்லை.

நாடாளுமன்றத்திற்கு இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லிம் பெண்களையும் விரல்விட்டு எண்ணிவிடலாம். இன்றைய 16வது நாடாளுமன்றத்தில் 543 உறுப்பினர்களில் 23 உறுப்பினர்கள் மட்டும்தான் முஸ்லிம்கள். அவர்களில் ஆனந்த் நாக் (காஷ்மீர்) தொகுதியிலிருந்து வெற்றி பெற்ற மெஹ்பூபா மஃப்டி மற்றும் பர்தமன் – துர்காபூர் (மே.வ) தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மம்தாஸ் சங்கமித்தா ஆகிய இருவர் மட்டும்தான் முஸ்லிம் பெண் எம்.பிக்கள். முஸ்லிம் அல்லாத பெண் எம்பிக்களின் எண்ணிக்கையும் குறைவுதானே எனக் கேட்கலாம். உண்மைதான். மக்கள் தொகையில் பாதி பெண்கள் எனக் கொண்டாலும் சுமார் 270 பெண் உறுப்பினர்களாவது இருக்க வேண்டும் ஆனால் 61 பெண்கள்தான் உள்ளனர். ஆனால் இந்த வீதத்தில் பார்த்தாலும் கூட எட்டு முஸ்லிம் பெண்களாவது இன்று தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒருவர் தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  சென்ற 15 வது நாடாளுமன்றதிலும் கூட மூன்று முஸ்லிம் பெண்கள் மட்டும் தான் இருந்தனர்.

நீதித் துறையில் நிலைமை இதை விட மோசம். இதுவரை உச்ச நீதிமன்றத்தில் ஒரே ஒரு முஸ்லிம் பெண் நீதிபதிதான் இருந்துள்ளார். அவர்தான் முதல் பெண் உச்சநீதிமன்றப் நீதிபதியுங்கூட. பின்னாளில் தமிழக ஆளுநராக இருந்த பாத்திமா பீவிதான் அவர். மேற்கு வங்கத்தில் முஸ்லிம் மக்கள் வீதம் 25.2 சதம். ஆனால் நீதித்துறையில் அவர்களின் பங்கு வெறும் 5 சதம். அசாமில் மக்கள்தொகை 30.9 சதம் நீதித் துறையில் பணியாற்றுவோர் 9.4 சதம். ஜம்மு காஷ்மீரில் மக்கள் வீதம் 66.97 சதம் நீதித் துறையில் அவர்கள் 48.3 சதம். இந்திய அளவில் சராசரியாக நீதித் துறையில் பணியாற்றும் முஸ்லிம்கள் 7.8 சதம்தான். இது முஸ்லிம் ஆண்களையும் சேர்த்த கணக்கு. இதில் முஸ்லிம் பெண்கள் என்று பார்த்தால் ஒரு சதத்திற்கும் குறைவாகத்தான் இருக்கும்.

யோசித்துப் பார்த்தால் இன்று இந்திய அளவில் பெயர் தெரியக் கூடிய முக்கியமான முஸ்லிம் பெண்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஒரு மேலோட்டமான பார்வையில் எனக்கு உடனடியாக நினைவுக்கு வரும் சில முகங்கள்:

சானியா மிஸ்ரா, டென்னிஸ் வீராங்கனை, இந்திய டென்னிஸ் விளையாட்டு வீரர்களின் சங்கத்தின் (ITPA) துணைத் தலைவர். புதிதாக உருவாகியுள்ள தெலங்கானா மாநிலத்தின் பண்பாட்டுத் தூதுவர் (Brand Ambassador),

நீதியரசர் எம். ஃபாதிமா பீவி, கேரள முஸ்லிம், முதல் உச்ச நீதி மன்ற பெண் நீதிபதி (1989), தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர், தமிழக ஆளுநர் (1997 – 2001),

மெஹ்பூபா மஃப்டி, நாடாளுமன்ற உறுப்பினர், ஜம்மு காஷ்மீரின் முக்கிய எதிர்க் கட்சித் தலைவர்,

டாக்டர் சீனத் ஷௌகத் அலி, பேராசிரியை, எழுத்தாளர், நூலாசிரியர், விஸ்டம் ஃபவுன்டேஷன் நிறுவனர்,

டாக்டர் ஃபரிதா லம்பே, கல்வியாளர், மும்பை நிர்மலா நிகேதன் கல்லூரி முதல்வர்,

நஜ்மா ஹெப்துல்லாஹ், பா.ஜ.க உறுப்பினர்,  மத்திய சிறுபான்மைத் துறை துணை அமைச்சர்,

ஆசீஃபா கான், பா.ஜ.கவின் சிறுபான்மை அணியின் தேசிய செயற்குழு உறுப்பின்ர்,

உஸ்மா நஹீத், அனைத்திந்திய முஸ்லிம் சட்ட வாரிய (AIMPLB) உறுப்பினர், இக்ரா பெண்கள் பன்னாட்டுக் கூட்டுறவு (IIWA) என்கிற தொண்டு நிறுவனம் மூலம் முஸ்லிம் பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்கள் அளித்து சுய தொழில் வாய்ப்பை ஏர்படுத்தி வருபவர்,

சீமா முஸ்தபா, புகழ் மிக்க பத்திரிக்கையாளர்.,

ஷபனா ஆஸ்மி, சமூக ஆர்வலர், நடிகை,

சமீபத்தில் நூறாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்ட இந்திய வம்சாவளி வீராங்கனை நூருன்னிசா இனாயத் கான்,. பிரிட்டனின் ஆகப் பெரிய போர் வீரர் விருதான ஜார்ஜ் க்ராஸ் விருது வழங்கப் பட்டவர். தாய் திப்பு சுல்தான் மரபினர். ரஷ்யாவில் குடி பெயர்ந்து வாழ்ந்த போது நாஜிப் படைகளுக்கு எதிராக பிரிட்டிஷ் விமானப் படையில் பெண்களுக்கான துணைப் பிரிவில் சேர்ந்து ஒயர்லெஸ் ஆப்ரேஷன் துறையில் பயிற்சி அளிக்கப்பட்டு Special Operation Executive  ஆகச் செயல் பட்டவர். நாஸிகளில் பிடியில் இருந்த ஃப்ரான்சில் பணி செய்து கொண்டிருந்தபோது காட்டிக் கொடுக்கப்பட்டு விசாரணைக்குப் பின் 30 வது வயதில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இது ஒரு முழுமையான பட்டியல் அல்ல என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன்.

இரண்டு

ஒன்று தெளிவாகிறது. இந்த மூன்று துறைகளிலும் முஸ்லிம்கள் பெரிய அளவில் பின் தங்கியுள்ளனர். இவர்களுள்ளும் முஸ்லிம் பெண்களின் நிலை மிக மோசம்.

இன்னொரு வகையில் பார்த்தோமானால் மொத்தத்தில் ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களின் நிலை மிகவும் பின் தங்கியுள்ளது. மொத்தப் பெண்களுக்குள்ளும் முஸ்லிம் பெண்களின் நிலை படு மோசம்.

தொகுத்துச் சொல்வதானால் முஸ்லிம் பெண்களின் நிலை இப்படி ஆனதற்கு இரண்டு காரணங்கள். 1. அவர்கள் பெண்களாக இருப்பது. 2, அவர்கள் முஸ்லிம்களாக இருப்பது.

முஸ்லிம் பெண்கள் திறமையில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. எனினும் அவர்களால் மற்றவர்களுக்குச் சமமாக மேலெழுவதற்குத் தடையாக உள்ள  நெருக்கடிகளை மூன்றாக வகைப்படுத்தலாம்.அவை: 1. நிதி நெருக்கடிகள் 2. கலாச்சார நெருக்கடிகள் 3. சிறுபான்மையராக இருப்பதால் எதிர்கொள்ளும் நெருக்கடிகள். இவற்றைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

1. நிதி நெருக்கடி: முஸ்லிம் பெண்களைப் பொருத்த மட்டில் நிதி நெருக்கடி அவர்களை இரு வடிவங்களில் பாதிக்கிறது. இந்தியாவிலேயே அதிக வறுமை வயப்பட்ட சமூகமாக முஸ்லிம்கள் உள்ளனர். வட மாநிலங்கள் பலவற்றில் முஸ்லிம் பெண்கள் வீட்டிலிருந்து கொண்டே பின்னல் வேலை செய்வது, பீடி சுற்றுவது முதலான கடும் உடல் உழைப்பைக் கோருவதும் அதிகச் சுரண்டல் நிறைந்ததுமான பணிகளில் உள்ளனர். இவர்களுக்கு இளமையில் படிப்பு என்பது சாத்தியமில்லாமல் உள்ளது.

வசதிகள் இருந்தபோதும் முஸ்லிம் குடும்பங்களில் பெண்களுக்கு நிதிச் சுதந்திரம் இருப்பதில்லை. ஒரு சுதந்திரமான தொழில் முனைவராக அவர்கள் செயல்பட வாய்ப்பு அளிக்கப் படுவதில்லை. ஆண்கள்தான் எல்லாவற்றையும் முடிவு செய்பவர்களாகவும், செயல்படுத்துபவர்களாகவும் உள்ளனர்.

2. கலாச்சார நெருக்கடிகள்: முஸ்லிம் பெண்கள் பிற பெண்களைக் காட்டிலும் மிகவும் பின் தங்கி இருப்பதற்கு இவைதான் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. முஸ்லிம் பெண்கள் வீட்டுக்குரியவர்கள். ஆண்களோடு சேர்ந்து படிப்பது, பணி செய்வது. அரசியலில் ஈடுபடுவது ஆகியவற்றிற்கு ஷரியாவில் இடமில்லை என்கிற கருத்து முஸ்லிம் சமூகத்தில் வேரூன்றி இருப்பது முஸ்லிம் பெண்கள் பின் தங்கி இருப்பதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த நோக்கில் அமைந்த ஹதீஸ்கள் அவை மிக்க பலவீனமானவையாக இருந்தாலும் அவற்றுக்கு முதன்மை அளிப்பது, திருக்குரானின் புனித வசனங்களை அவற்றுக்குரிய சூழல்களிலிருந்து பிரித்து விளக்கமளிப்பது ஆகியவற்றின் ஊடாக இந்தக் கருத்துக்கள் முஸ்லிம் சமூகத்தில் ஆழப் பதிக்கப்பட்டுள்ளன. இதற்கு மாறாக இன்னும் பலம் மிக்க ஹதீஸ்களின் துணையோடும், இறைமறை வசனங்களை உரிய சூழலுடனுன் பொருத்தியும் இன்று பல மார்க்க அறிஞர்கள் மாற்று விளக்கம் அளிப்பதை கவனத்தில் எடுப்பது முஸ்லிம் சமூகம் தடைகளை மீறி மேம்பாடடையத் துணை புரியும்.

2010ல் தேவ்பந்த் தாருல் இஸ்லாம் பல்கலைக் கழகம் அளித்த ஃபட்வாவை இப்படி முஸ்லிம் சமூகத்தைப் பின்னுக்கு இழுப்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். “பெண்களின் சம்பாத்தியத்தில் குடும்பம் பிழைப்பது ஹராம்” என்பதுதான் அந்த ஃபத்வா. மூன்று மதத் தலைவர்கள் பங்கு பெற்ற ஒரு அமர்வில் விதிக்கப்பட்ட இந்த ஃபத்வா, “பெண்கள் இப்படிப் பணி செய்வதற்கு ஷரியாவில் இடமில்லை. தனியார் துறை ஆனாலும், அரசுத் துறை ஆனாலும் ஹிஜாப் இல்லாமல் பெண்களும் ஆண்களும் உரையாடக் கூடிய நிலைக்கு அனுமதி இல்லை” என உறுதி படக் கூறுகிறது.. ஷியா பிரிவைச் சேர்ந்த மௌலானா கல்பே ஜவ்வாத்தும் இந்த ஃபத்வாவை ஆதரிக்கிறார், பெண்கள் வெளியே சென்று சம்பாதிக்க ஷரியாவில் இடமில்லை என்கிறார்.

ஆனால் இதற்கு எதிரான கருத்துக்களும் முஸ்லிம்கள் மத்தியிலிருந்து வந்தன. “ஆண்களுக்கும் ஷரியா விதிகள் உள்ளன. ஆண்கள் ஷரியா விதிகளைச் சரியாகப் பின்பற்றினால் பெண்கள் அவர்களோடு பணி செய்வதில் என்ன பிரச்சினை/” என்கிறார் லக்னோ இட்கா மசூதியின் நய்பி இமாம் ரஷீத். தாருல் இஃப்தா ஃபிடங்கி மெஹலின் மஃப்டி மௌலானா காலித் ரஷீதும் தேவ்பந்த் ஃபத்வாவைக் கண்டித்துள்ளார்.

நீண்ட முஸ்லிம் வரலாற்றில் இந்தக் கருத்திற்கு மாறாகப் பெண்கள் பல்வேறு பொறுப்புகளை மேற்கொண்டு செயல்பட்டதற்குப் பல எடுத்துக் காட்டுகளைச் சொல்ல இயலும். நபிகளின் முதல் மனைவி கதீஜா அம்மையார் ஒரு பணக்கார வணிகராக முழு நிதிச் சுதந்திரத்துடன் வாழ்ந்தார். நபிகளுக்குப் பின் இஸ்லாமிய அரசியலில் மிக்க தைரியமாகவும் அரசியல் நடவடிக்கைகளில் தேர்ந்தும் செயல்பட்டவர் நபிகளாரின் இன்னொரு மனைவி ஆயிஷா அவர்கள். இத்தகைய வாய்ப்பு அன்றைய இஸ்லாமியச் சமூகத்தில் இருந்தது கருதத்தக்கது. கலீபா உமர் தனது ஆட்சியில் சந்தையை மேற்பார்வை இடும் முக்கிய பொறுப்பை ஷாஃபா பின் அப்துல்லா என்கிற பெண்மணியிடம் அளித்திருந்தார். ஃபாதிமிட் கலீபாக்களின் காலத்தில் (6ம் நூ) யேமன் நகரத்தின் ஆளுநராக இருந்தது அர்வா பின்ட் அஹமத் என்கிற பெண். நம் காலத்தில் முஸ்லிம் நாடுகளில். பெனாசிர் பூட்டொ, கலீடா சியா, ஷேக் ஹசீனா ஆகியோர் நாடாண்டிருகின்றனர்.

பெண்கள் வாகனங்கள் ஓட்டுவது தடை செய்யப்பட்ட இறுக்கமான முஸ்லிம் நாடுகளிலும் கூட முஸ்லிம் பெண்கள் அலுவலகங்களில் பணி செய்யத் தடை இல்லை. தாலிபன் ஆட்சியிலும் கூட ஆண்கள் பெண்களுக்கும், பெண்கள் ஆண்களுக்கும் வைத்தியம் செய்யக் கூடாது என்று மட்டுமே தடுத்திருந்தனர். மலேசியாவில் டோல் கேட்கள் அனித்திலும் ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண்கள் பணியாற்றுவதைக் காணலாம். தற்போது சவூதி அரேபியாவின் கல்ஃப் ஒன் இன்டஸ்ட்ரியல் வங்கியின் தலைமைப் பொறுப்பில் உள்ள பாக்டர் நாஹிர் தாஹேர் ஒரு பெண்தான். உலக அளவில் நூறு ஆற்றல் மிக்க பெண்கள் என்கிற பட்டியலில் சுமார் 10 முஸ்லிம் பெண்கள் இடம் பெறுகின்றனர் (2007). எகிப்தின் கமர்ஷியல் இன்டஸ்ட்ரியல் வங்கியின் நிர்வாகப் பணியாளர்களில் 70 சதம் பெண்கள். தலைமை இடத்தில் இடரண்டாவதாக உள்ள சகரர் எல் சலாப் ஒரு பெண். ஷேய்கா லுப்னா அல் காசிமி என்கிற பெண்தான் ஐக்கிய அரபு எம்ரேட்களின் நிதி அமைச்சர். இப்படி நிறையச் சொல்லலாம். எகிப்திய நீதி மன்றங்களில் 31 பெண் நீதிபதிகள் உள்ளனர்.

3. சிறுபான்மையினராக இருப்பதால் உருவாகும் நெருக்கடிகள்: சச்சார் குழு அறிக்கையில் முன்வைக்கப்படும் கருத்துக்களில் ஒன்று முஸ்லிம் குடியிருப்புகளின் அருகில் பள்ளிக் கூடங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது. வகுப்புக் கலவர வாய்ப்புள்ள பகுதிகளில் முஸ்லிம் குடியிருப்புகளிலிருந்து பள்ளிகள் தொலைவில் அமையும் போது பிள்ளைகள், குறிப்பாகப் பெண் குழந்தைகள் அவ்வளவு தூரம் செல்வதற்கு அஞ்சிப் படிப்பை நிறுத்திவிடும் போக்கைச் சுட்டிக் காட்டி அந்தப் பரிந்துரை செய்யப்பட்டது. பாடத் திட்டங்களில் வரலாற்றுத் திரிபுகள், தினம் சரஸ்வதி துதி பாடச் சொல்லிக் கட்டாயப் படுத்துதல் முதலியன பள்ளிக் கூடங்களை முஸ்லிம் குழந்தைகளிடமிருந்து அந்நியப்படுத்தி விடுகின்றன. சமூகத்தில் வேகமாகவும் ஆழமாகவும் பரவும் வெறுப்பு அரசியல் ஆசிரியர்களிடம் ஆழமாக வேரூன்றும்போது அவர்கள் முஸ்லிம் குழந்தைகளை வேறுபடுத்திப் பார்க்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது.

படித்து முடித்த பின் வேலை தேடும்போதும் முஸ்லிம் அடையாளம் ஒரு பிரச்சினையாகி விடுகிறது, இராணுவம் முதலான துறைகள் முஸ்லிம்களுக்கு இடமில்லாமல் போவது ஒரு எழுதப்படாத விதியாகிறது. சச்சார் அறிக்கை இது குறித்து விரிவாகப் பேசுகிறது. ரங்கநாத் மிஸ்ரா குழு அறிக்கையை நடைமுறைப் படுத்தி முஸ்லிம்களுக்கு உரிய ஒதுக்கீடு வழங்குவது, பெருகி வரும் தனியார் துறைகளில் சமூக நீதியை நிலை நாட்ட சில மேலை நாடுகளில் உள்ளது போல சம வாய்ப்பு ஆணையம் முதலியவற்றை அமைப்பது முதலியன இன்று உடனடித் தேவை ஆகிறது. சமூகத்தில் விரைவாகப் பரவும் வெறுப்பு அரசியலும்.  காவல்துறையும் ஊடகங்களும் கட்டமைக்கும் பயங்கரவாதப் பிம்பமும் முஸ்லிம்கள் அதிகாரம் பெறுவதற்குப் பெருந்தடையாகி விடுகின்றன.

இவை ஒட்டு மொத்தமாய் முஸ்லிம் சமூகத்தைப் பாதிப்பவைதான் என்றாலும் பெண்களுக்கு இதனால் வரும் பாதிப்புகள் கூடுதல். இதற்கான தீர்வை நாம் அரசியல் களத்தில்தான் தேட வேண்டும்

மூன்று

“ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அறிவாற்றலில் குறைந்தவர்கள் (நகிசுல் அக்ல்). அவர்கள் வீட்டு வேலைக்கு மட்டுமே தகுதியானவர்கள் என இஸ்லாத்தில் எங்கும் சொல்லப்படவில்லை. ஆனால் முஸ்லிம் சமூகத்திற்குள் இந்தக் கருத்து வலுவாக இயங்குகிறது. முஸ்லிம் பெண்கள் மத்தியிலும் இது ஆழமாக வேரூன்றி உள்ளது. முஸ்லிம் பெண்கள் தங்களின் இரண்டாம் பட்சமான நிலையை ஏற்றுக் கொண்டு, தங்கள் உரிமைகளை ஆண்களிடம் கையளித்து விட்டதுதான் முஸ்லிம் பெண்களின் இந்தப் பின் தங்கிய நிலைக்குக் காரணம். பெண்களைப் பாதிக்கும் பிரச்சினைகளில் ஒரு ஆலிமுடைய கருத்துக்கும் ஒரு ஆலிமாவின் கருத்துக்கும் எந்த வேறுபாடும் இருப்பதில்லை” என்கிறார் அனைத்திந்திய முஸ்லிம் சட்ட வாரிய உறுப்பினர் உஸ்மா நஹீத்.

“இந்திய முஸ்லிம்கள் மத்தியில் அடிப்படை வாதந்தான் மிகுந்துள்ளது என்கிற கருத்தோடுதான் பல ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று வந்து கொண்டிருந்தேன், நேரடியாகப் பார்க்கும் போதுதான் என்னுடைய கருத்து எத்தனை தவறு என்பது விளங்கியது. கடந்த பத்து ஆண்டுகளில் அவர்கள் மத்தியில் ஒரு மிகப் பெரிய முற்போக்கான சிந்தனை மாற்றம் வந்துள்ளது இன்றைய இந்திய முஸ்லிம் ஒரு புதிய முஸ்லிமாக உருப்பெற்றுள்ளதை என்னால் உணர முடிந்தது,. தனது குறுங்குழு மனப்பான்மையை ஒழித்த, முற்போக்குச் சிந்தனைகளால் தன்னை வளப்படுத்திக் கொண்ட, நாலும் தெரிந்த, கல்வியில் நட்டம் கொண்ட, தீவிர மதக் கருத்துக்களிலிருந்து விடுபட்ட ஒரு புதிய தலைமுறை உருவாகியுள்ளது” என்கிறார் லண்டன் வாசியும், முக்கிய பத்தி எழுத்தாளரும், நூலாசிரியரும், “இந்திய முஸ்லிம்களின் வசந்தம்” எனும் நூலைச் சமீபத்தில் எழுதியுள்ளவருமான ஹஸன் சரூர்.

சச்சார் அறிக்கை முஸ்லிம் பெண்களின் பிரச்சினைகளைப் புறக்கணித்து விட்டது என விமர்சிக்கும் சீமா முஸ்தபா, “சாச்சார் அறிக்கையை வாசிக்கும்போது எல்லா இடங்களிலும் காணக் கிடப்பது முஸ்லிம்களின் பின் தங்கிய நிலை மட்டுமல்ல, அந்தப் பின் தங்கிய நிலையிலிருந்து விடுபடத் துடிக்கும் துடிப்பும் தான்” என்கிறார்.

இந்த ஆர்வத்தின் ஆரம்பப் புள்ளியாக நான் 1990 களின் தொடக்கத்தைக் காண்கிறேன். பாபர் மசூதி இடிப்பு, உலக மயத்தின் ஊடாக உருவான திறப்புகள் ஆகியவற்றின் ஊடாக சுய பரிசோதனையுடன் கூடிய, நவீன காலத்துக்குரிய முன்னேற்ற ஆர்வம் ஒன்று இந்திய முஸ்லிம்கள் மத்தியில் உருவாகியது. ஓட்டுக்குள் சுருங்கிய ஆமைகளாக இனியும் இருக்க இயலாது என அவர்கள் கிளம்பினர், முதன் முதலாக “முஸ்லிம்களை அதிகாரப் படுத்துதல்” (Muslim Empowerment) என்கிற குரல் எழுந்தது. மாநாடுகள் போடப்பட்டன. அரசியல் சட்ட அவையித் தொடரின் போது ஊத்தி மூடப்பட்ட இட ஒதுக்கீட்டுக் கோரிக்கை அறுபது ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் மேலுக்கு வந்தது. முஸ்லிம் ஆண்கள், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் உருவான இந்த எழுச்சி ஒரு குறிப்பிட அளவு பெண்கள் மத்தியிலும் வெளிப்பட்டது. பெண்கள் வீட்டுக்குள் முடங்கப்பட வேண்டியவர்கள் என்கிற பழைய நம்பிக்கைகளிலிருந்து இந்தப் புதிய முஸ்லிம்கள் விடுபட்டனர். முன்னைக் காட்டிலும் முஸ்லிம் மதக் கடமைகளை நிறைவேற்றுவதில் ஆர்வம், தாடி வளர்த்தல், ஹிஜாப் அணிதல் ஆகிய அடையாளங்களை உறுதிப் படுத்துதல் என்பன அதிகமாகிய அதே நேரத்தில், புதிய சூழலுக்கு உரிய வகையில் முற்போக்கான அணுகல் முறைகளை இத்துடன் இணைப்பது என்கிற நிலை இன்று ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் அடையாள உறுதியாக்கம் அவர்களை பிற சமூகங்களிலிருந்து அந்நியப் படுத்துவதற்கு மாறாக, ஒரு இருபதாண்டுகளுக்கு முன் இருந்ததைக் காட்டிலும் பிற சமூகங்களுடன் அவர்களின் உறவு நெருக்கமாவதையும் காண முடிகிறது. இந்தச் சூழல் எதிர்காலத்தில் முஸ்லிம் பெண்களின் நிலையில் பாரதூரமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை.

இந்த மாற்றம் ஏதோ புதிய முஸ்லிம் ஆண்கள் பெண்களுக்கு அளிக்கும் கொடை அல்ல. முஸ்லிம் பெண்களும் இன்று புதிய முஸ்லிம் பெண்களாக உருப் பெறுகின்றனர். “இந்தக் கல்வி அமைப்பு முஸ்லிம் பெண்களைப் புறக்கணித்தாலும், முஸ்லிம் பெண்கள் கல்வியைப் புறக்கணிக்கவில்லை” என்கிறது சச்சார் குழு அறிக்கை. முஸ்லிம் பெண்கள் கல்விக் கூடங்களில் சேரும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்கிறார் முஸ்லிம் கல்வியாளர் ஃபரிதா லம்பே எழுதப் படிக்கத் தெரிந்த பெண்களின் வீதம் சில மாநிலங்களில் பிற மதத்தவரைக் காட்டிலும் அதிகமாகக் கூட உள்ளது” என்கிறார் அவர்.

இன்று முஸ்லிம் பெண்களின் நிலை நீதித் துறை ஆகட்டும், நிர்வாகத் துறை ஆகட்டும் எல்லாவற்றிலும் பிற பெண்களைக் காட்டிலும் மிகவும் பின் தங்கியுள்ளது என்பதில் அய்யமில்லை. ஆனால் இப்போது உருவாகியுள்ள இந்தப்  புதிய பிரக்ஞை உரிய பலன்களை முஸ்லிம் பெண்கள் மத்தியில் விரைவில் ஏற்படுத்தும். இதற்குத் தடையாக உள்ளவற்றை நாம் மேலே அலசியுள்ளோம். அவற்றைத் தகர்ப்பதில் நாம் கவனம் குவிக்க வேண்டும்.

என்ன வழி ?

1. முஸ்லிம்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்படல் வேண்டும். வீட்டுக்குள் இருந்து  கடினமான கை வேலைகளின் மூலம் உழைத்துச் சம்பாதிக்கும் நிலைகளிலிருந்து பெண்கள் மீட்கப்பட வேண்டும். அவர்களுக்கு சுய தொழில் வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும். அதற்குரிய நிதி அமைப்புகளையும் உருவாக்க வேண்டும். செசன்யா, வங்க தேசம் முதலான நாடுகளில் “நுண் நிதியம்” (micro finance) என்பது இவ்வகையில் முஸ்லிம் பெண்களின் நிலை மேம்படுவதில் பெரிய பங்காற்றியுள்ளது.  பெண் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை அளிக்கும் வகையில் முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் தரம் உயர்த்தப்படுதல் மட்டுமின்றி நவீனப் படுத்தப்படவும் வேண்டும்.

2. பெண்களுக்கு நிதிச் சுதந்திரம் அளிக்கப்படல் வேண்டும். ஆண்களே வருமானம் மற்றும் செலவுகளைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது என்கிற நிலை போய் பெண்கள் சுயமாகத் திட்டமிட்டுச் செயல்படும் சூழல் குடும்பத்திற்குள் உருவாக்கப்பட வெண்டும். இதற்கு முஸ்லிம் ஆண்கள் மத்தியில் பெரும் மனமாற்றம் ஏற்படல் அவசியம்.

3, பெண்கள் வேலைக்குச் செல்லக் கூடாது என்பது போன்ற காலத்திற்குப் பொருந்தாத கட்டுப் பெட்டித் தனமான கருத்துக்களுக்கு நாம் விடை கொடுத்தாக வேண்டும். முஸ்லிம் சமூகத்திற்குள், ஆலிம்கள் மத்தியிலும். மார்க்க அறிஞர்களுக்கு இடையிலும் இது போன்ற நுண்மையான பிரச்சினைகளில் இரு எதிர் எதிர்க் கருத்துக்கள் நிலவுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பெண்களைப் பின்னுக்குத் தள்ளும், வீட்டுக்குள் முடக்கும் பழமைவாதிகளின் கருத்துக்கள் பல மிகவும் பலவீனமான ஹத்தீஸ்களின் அடிப்படையில் எழுகின்றன என மார்க்க அறிஞர்கள் சொல்வதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த வகையில் தீர ஆய்வு செய்தும் நபிகள் மற்றும் கலீபாக்களின் வரலாற்றிலிருந்தும் இன்றைய சூழலுக்குத் தக எடுத்துக்காட்டுகளை நாம் தேர்வு செய்ய வேண்டும். நபிகளின் காலத்திலோ, இல்லை அதற்குச் சற்றுப் பின்னரோ பெண்களுக்கு நிதிச் சுதந்திரம் கிடையாது, அவர்களுக்கு அரசியலில் பங்கில்லை, அவர்கள் புறப் பணிகளில் ஈடுபடக் கூடாது  என்கிற நிலை இல்லை என்பதற்குரிய வரலாற்றுச் சான்றுகளை நாம் மதிக்க வேண்டும். முஸ்லிம் இயக்கங்கள் பெண் கல்வி குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும்.

4.உலகம் கடந்த இருபதாண்டுகளில் பெரிய அளவில் மாறியுள்ளது. புதிய தொழில்கள், புதிய வாய்ப்புகள், புதிய கல்விகள் எல்லாம் உருவாகியுள்ளன. இவற்றில் நமக்கு உரிய பங்கைப் பெறுவதற்கு இங்கே வளர்க்கப்படும் வெறுப்பு அரசியல் தடையாகி விடக் கூடாது. முஸ்லிம் தீவிரவாதம் குறித்த ஊடகப் பிரச்சாரங்கள். அதற்குப் பின்னணியாக  காவல்துறை அவிழ்க்கும் பொய்க் கதைகள் ஆகியவை குறித்த விழிப்புணர்வும் அத்தகைய நடவடிக்கைகளை உறுதியுடன் எதிர் கொள்வதற்கான  அமைப்புகளும் வலுவாக்கப்பட வேண்டும். ரங்கநாத் ஆணையப் பரிதுரைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

நன்றி - அ.மார்க்ஸ்
...மேலும்

Sep 22, 2014

நாங்கள் மனிதர்கள் இல்லையா? - தீபிகா படுகோன் பதிவு

நடிகை தீபிகா படுகோன் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட சற்றே நீளமான நிலைத்தகவல், 12 மணி நேரத்தில் சுமார் 8 ஆயிரம் பேரால் ஷேர் செய்யப்பட்டதுடன், ஒரு லட்சம் லைக்குகளை அள்ளியது. ஒரு நடிகை மீதான சமூகத்தின் பார்வையை பதிவு செய்திருக்கும் அந்த நிலைத்தகவல் அப்படியே:
என்னுடைய பார்வை... 

ஒரு பெண் பாலுறவு வைத்துக்கொள்ள விரும்புகிறாள் என்பதற்கு, ஒரே ஒரு அடையாளம் தான் இருக்கிறது. அது அவள் "ஆம்!" என்று சொல்கிற பொழுது மட்டுமே. இந்த வரியை நான் மேலே எழுதுவதன் காரணம், நாமெல்லாம் இந்தியாவில் சமூகத்தின் ஒரு பகுதியினர் கொண்டிருக்கிற பார்வையை மாற்ற தீவிரமாக பாடுபடுகிறோம் என்பதே காரணம். இப்படி செய்வதன் மூலம் சமூகத்தை சமத்துவமின்மை, வன்புணர்வு, பயம், வலி அற்ற உலகை நோக்கி நடை போடவே நாம் விரும்புகிறோம். 

என்னுடைய தொழிலைப் பற்றி நான் எதுவும் தெரியாத அப்பாவியாக இல்லை. அது வெவ்வேறு விஷயங்களை என்னிடம் இருந்து எதிர்பார்க்கிறது. சில வேடங்கள் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை போர்த்திக்கொண்டு நடிக்க வேண்டியிருக்கலாம், இன்னொன்று முழுமையாக நிர்வாணமாக நடிக்க வேண்டிய பாத்திரமாக இருக்கலாம். இதில் எதை நான் ஏற்று நடிக்க வேண்டும் என்பது என்னுடைய தேர்வு மட்டுமே. அது ஒரு வேடம் மட்டுமே, அதுவே உண்மை கிடையாது. எந்த வேடத்தில் நடித்தாலும் அதை சிறப்பாக செய்ய வேண்டியது என்னுடைய வேலை.

நான் இதைத் தெளிவாக சொல்கிறேனா என்பதே என்னுடைய கவலை. அதை ஷாருக்கானின் 8 பேக் அல்லது வேறொரு ஆண் அல்லது பெண்ணின் உடலமைப்போடு குழப்பிக்கொள்ளக்கூடாது. பெண் சமத்துவம் மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றுக்காக நாம் உழைத்துக்கொண்டிருக்கிற பொழுது இப்படிப்பட்ட கீழ்மையான தந்திரங்களின் மூலம் வாசகனின் கவனத்தை ஈர்ப்பதையே நான் எதிர்க்கிறேன். ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் சமூகத்தில் பெண்கள் முன்னேறுவதை கொண்டாடும் அதே சமயம் நிழல் மற்றும் நிஜ வாழ்க்கையை நாம் குழப்பிக்கொள்ளக்கூடாது. ஒரு பழைய கட்டுரையைத் தோண்டி எடுத்து “OMG: Deepika’s Cleavage Show!” என்று தலைப்பிட்டு வாசகர்களை ஈர்ப்பது பின்னோக்கி செலுத்தும் சிந்தனையை பெருக்கவே நம்முடைய தாக்கத்தை பயன்படுத்திக்கொள்வது ஆகும்.

ஒரு நடிகையின் உள்ளாடை உள்ளே எட்டிப்பார்க்க தூண்டுகிறது என்றால், அவள் அதை திட்டமிட்டு செய்யவில்லை. அதை ஜூம் செய்தோ, வட்டமிட்டு, அம்புக்குறியிட்டோ, புள்ளி வைத்தோ காட்டுவதைவிட அவளுக்கு ஏன் நீங்கள் கொஞ்சம் மரியாதை தரக்கூடாது. அதை அப்படியே விட்டுவிட்டு நகர்வதை விட்டு ஏன் அதை தலைப்புச்செய்தியாக ஆக்குகிறீர்கள்? நாங்கள் மனிதர்கள் இல்லையா? ஆம் நாங்கள் சினிமாவில் கதாநாயகர்களின் 8 பேக்ஸை ரசிக்கிறோம், விரும்புகிறோம், ஜொள்ளு வடிக்கிறோம். ஆனால், நாங்கள் ஆண்களின் கவட்டையை அவர் பொதுமக்கள் முன்னர் தோன்றும் பொழுது பெரிதுபடுத்திக்காட்டி அதை மலிவான தலைப்புச்செய்தி ஆக்குகிறோமா?

என் உடலைக் கொண்டாடுவதில் எனக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆன் ஸ்க்ரீனில் எந்த வேடத்திலும் நடிக்க நான் வெட்கப்பட்டதில்லை. என் அடுத்த படத்தில் நான் உண்மையில் பார் டான்சராக நடிக்கிறேன். அந்த வேடத்தில் ஆண்களின் காம உணர்வுகளை தன்னுடைய வாழ்வாதாரத்துக்காக தூண்டிவிட்டு சம்பாதிக்கிற பெண் வேடத்தில் தான் நடிக்கிறேன். ஓர் உண்மையான நபரை போகப்பொருளாக மாற்றுவதற்கும், அவர் நடிக்கிற வேடத்தை அப்படி அணுகுவதற்கும் வேறுபாடு இருப்பதாகவே பார்க்கிறேன். என்னுடைய கதாப்பாத்திரங்களை அவை சுவராசியமாக இருக்குமென்றால் கூராய்வு செய்யுங்கள். அந்தப் பாத்திரத்தின் மார்பக அளவு, கால் நீளம் ஆகியவற்றை அந்த வேடத்தை அது ஏற்றுக்கொள்ளுமாறு ஆக்குமென்றால் நிச்சயமாக விவாதியுங்கள். ஒரு பெண்ணை திரைக்கு வெளியே மதியுங்கள் என்று தான் கேட்கிறேன். 

இது மார்பகம், ஆணுறுப்பு, மற்ற பாகங்கள் பற்றிய ரிப்போர்டிங் பற்றியது அல்ல. எந்தச் சூழலில் இந்த ரிப்போர்டிங் நிகழ்ந்தது என்பதைப் பற்றியது. ஒரு தலைப்பு விற்க வேண்டுமென்பதற்காகவே இப்படி செயல்பட்டுள்ளார்கள். அதுவும் பெண்கள் மீதான பார்வை மாற வேண்டிய அவசரத்தேவை இருக்கும் இந்த காலத்தில் இப்படி நடந்துகொண்டிருக்கிறார்கள். இந்த விஷயத்தை இத்தோடு முடித்துக்கொள்கிறேன். எல்லாருக்கும் ஒரு பார்வை இருக்கிறது. இதை மேலும் கொண்டு சேர்த்தால் அது பெற வேண்டிய கவனத்தைவிட அதிகம் பெற்று, இன்னமும் என் வாதங்கள் திரிக்கப்பட்டும், தவறாக புரிந்துகொள்ளப்பட்டும் தேவையில்லாத தலைப்பு இன்னமும் அதிகமாக விற்பனையாகவே உதவும் என்று எண்ணுகிறேன். 

இவையெல்லாவற்றையும் சொல்லிய பின்னர் நமக்குள் அன்பு, கண்ணியம், மரியாதை ஆகியவற்றை ஒருவருக்கொருவர் காட்டிக்கொள்வோம். நன்றாக வாழ்வோம், அடிக்கடி சிரிப்போம், எல்லையில்லாமல் அன்பு செய்வோம் - தீபிகா படுகோன்
 
தமிழில்: பூ.கொ.சரவணன்

 நன்றி - இணையம்
...மேலும்

பெண்ணுடல் மீதான வன்முறை -எச்.பீர்முஹம்மது


பெண்ணுடல் மீதான ஆணின் கண்காணிப்பும், அதனை தொடர்ந்த பலாத்காரமும், பாலியல் வதையும் இந்தியாவில் சமீப ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றன. ஆதி மனித சமூகம் தாய்வழி சமூக கட்டமைப்பிலிருந்து தந்தை வழி சமூக கட்டமைப்பிற்கு மாறிய நிலையில் இதற்கான தொடக்கம் குறிக்கப்பட்டு விடுகிறது. நிலப்பிரபுத்துவ சமூக கட்டமைப்பில் தான் பெண்கள் அதிகம் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டார்கள். அதற்கு முந்தைய அடிமை முறை சமூகத்தில் பெண்கள் அடிமைகளாக மாற்றப்பட்டு வன்புணர்விற்கு பிறகு கொல்லப்பட்டார்கள். வரலாற்றில் தந்தைவழி சமூக மாறுதலுக்கு பிந்தைய எல்லா சமூக கட்டமைப்பிலும் பெண்களின் உடல் என்பது ஆணின் அதிகாரத்திற்கு உட்பட்டது தான். இதன் தொடர்ச்சியில் இன்றைய நவீன காலகட்டத்தில் அதன் வடிவம் மாறியிருக்கிறது. அதே நேரத்தில் பெண்களின் சமூக இருப்பும் மாற்றமடைந்திருக்கிறது. இன்று சராசரி இந்திய பெண் எதிர்கொள்ளும் முக்கிய சவால் என்பதே தன் மீதான ஆணின் அதிகாரத்தை வெல்வது தான்.  சராசரி ஆண் போல்  பெண்களுக்கு 24X7 நடமாடும் சுதந்திரம் (Freedom of Mobility)என்பது ஆபத்தானதாகவும், நிச்சயமற்றதாகவும் இருக்கிறது. சூரிய மறைவிற்கு பின் நடமாடுவது என்பதே இந்தியாவின் பெரு நகரங்கள் தொடங்கி சிறு கிராமங்கள் வரை  பெண்களுக்கு மிக பாதுகாப்பற்றதாக இருக்கிறது. பல இரவு நேர பாலியல் வன்முறை சம்பவங்கள் மிக இயல்பான ஒன்றாக மாறி விட்டன. இந்தியாவில் பாலியல் வன்முறை என்பது அசாதாரண நிலையிலிருந்து சாதாரண நிலைக்கு மாற்றமடைந்து வருகிறது. இந்நிலையில் இதற்கான அடிப்படை காரணம் என்ன என்பதைப்பற்றி சமீபத்தில் ஐ.நா சபையின் சார்பில் தெற்காசியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் ஆண்களிடம் சர்வே ஒன்று நடத்தப்பட்டது.

அதில் பாலியல் வன்முறைக்கான காரணம் என்பதை குறித்து பல கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் 70 -80 சதவீத ஆண்கள் பாலியல் வன்முறைக்கான காரணம் குறித்து பின்வருமாறு தெரிவித்தார்கள். முதலாவது ஆண்கள் தங்களுக்கு பெண்களின் ஒப்புதல் இல்லாமலேயே அவர்கள் மீது பலாத்காரம் செய்ய உரிமை இருப்பதாக நம்புகின்றனர். இரண்டாவது வெறும் வேடிக்கை, கோபம் அல்லது அவர்களுக்கான தண்டனை என்பதாக கருதுகின்றனர். இதில் மது உட்கொள்ளல் என்பது ஒரு சிறு காரணம் மட்டுமே. மேலும் பல பெண்களுடன் உறவு,பாலியல் தொழிலாளர்களுடன் உறவு, மனைவி மீதான உடலியல் வன்முறை போன்றவையும் இதற்கான கூடுதல் காரணங்கள் என்று அறியப்பட்டன. மேலும் ஆண்மையை நிரூபிக்கும்  சோதனைக்கூடமாக பெண்ணின் உடலை வக்கிர ஆண்களில் ஒருபகுதியினர் கருதுகின்றனர். இதன் நீட்சியில் மற்றுமொரு முக்கிய காரணமாக குழந்தை பருவத்தில் குடும்பத்தால், சமூகத்தால் தாங்கள் உளவியல் மற்றும் உடலியல் சித்திரவதைக்கு உள்ளானதன் பழிவாங்கும் செயல்முறை தான் இந்த பலாத்காரம் என்கின்றனர். அவர்களுக்கு ஆரம்பக்கல்வி  மறுக்கப்படுவது கூட  இதனை நோக்கி அவர்களை நகர்த்துகின்றது. மேலும் முக்கியமான ஒன்றாக பெரும்பாலான பாலியல் பலாத்காரங்கள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அறிமுகமான நபர்களாலே நிகழ்த்தப்படுகின்றன. இந்தியாவில் பாதிக்கப்படும் பெண்களில் நான்கில் மூன்று பேர் பாலியல் குற்றவாளிகளை சரியான அடையாளம் காண்கின்றனர்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்களில் பெரும்பாலானோர் தங்களுக்கு நடந்த சம்பவம் குறித்து வெளிப்படுத்துவதில்லை. காவல்துறையில் புகார் அளிக்க முன்வருவதில்லை. மருத்துவ பரிசோதனைக்கும் அவர்கள் தயாரில்லை. காரணம் இந்திய சமூகம் காலங்காலமாக கட்டமைத்து அசைக்காமல் வைத்திருக்கும் பெண்ணிற்கு எதிரான ஆதிக்க மதிப்பீடு தான். இதனால் தங்களின் எதிர்காலம் பாதிக்கப்படுமோ என்று அவர்கள் அச்சங்கொள்கின்றனர். குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படும் போது போதுமான சாட்சியங்களுடன், மருத்துவ அறிக்கையும் அவர்கள் மீதான குற்றத்தை நிரூபிக்க ஆதார மூலங்களாக தேவைப்படுகின்றன. ஆனால்  பாதிக்கப்படும் பெண்கள் தங்களின் எதிர்காலம் கருதி சுய ஆதாரங்களை அழித்து விட்டு உடலை சுத்தம் செய்து விடுவதால் சில சமயங்களில் குற்றத்தை நிரூபிக்க ஆதார பற்றாக்குறை ஏற்பட்டு விடுகிறது. இதுவும் இன்றைய இந்தியாவில் பாலியல் வன்முறை வழக்குகளின் பலவீனத்திற்கு காரணமாகி விடுகிறது. பல சமயங்களில் குற்றவாளிகள் தப்பித்து விடுகிறார்கள். இந்தியாவில் கிரிமினல் சட்ட நடைமுறைகளில் உள்ள பலவீனம் கூட ஒருவகையில் இப்படியான வன்முறைகள் திரும்ப திரும்ப நிகழ்வதற்கு காரணமாகி விடுகின்றன. குற்றத்திற்கான தண்டனை உறுதியாக, விரைவாக கிடைக்கும் என்ற நிச்சயமற்ற சூழல்  பலருக்கு சிறைச்சாலை குறித்த அசட்டுத்தைரியத்தை கொடுக்கின்றன. நடைமுறை இவ்வாறு இருக்க ஆண் பெண் இணைந்த சமூகத்தில் இதற்கான தீர்வு குறித்து ஆராய வேண்டியதிருக்கிறது.

இந்தியாவின் சமூக கட்டமைப்பில் ஆண் பெண் உறவு குறித்த மதிப்பீடுகள், பெண் உடல் மற்றும் உடை ஆகியவற்றின் மறுசிந்தனை அவசியமாகிறது. கல்விமுறையில் மாற்றம் என்பது இதன் சிறுபகுதியே. குறிப்பாக பாலியல் குறித்த அறிவியல் பூர்வமான ஊட்டத்தை இளந்தலைமுறையினர் மத்தியில் அளிப்பது இன்றைய சூழலில் மிக அவசியமான ஒன்று. அதாவது அதனை பாலியல் கல்வியாக கல்விநிலையங்களில் போதிக்க வேண்டும். இதற்கான குரல்கள் பல காலமாக இந்தியா முழுவதும் எழுந்து வருகின்றன.  உலகில் பாலியல் குறித்தும், பாம்பு குறித்தும் தான் அதிகமான தவறான நம்பிக்கைகள் (Myth)நிலவுகின்றன. அறிவியல் பூர்வமான பாலியல் கல்வி முறை இதனை போக்கும் என்பது பலரின் எதிர்பார்ப்பு. அதாவது இருபாலர் இணைந்த கல்விக்கூடங்களில் இதனை தனித்தனியாகவோ அல்லது சூழலை பொறுத்து இருவருக்கும் சேர்த்தோ நடத்தலாம். இதன் மூலம் பெண் குறித்த ஆணின் பல தவறான பிம்பங்கள் உடைய வாய்ப்பிருக்கிறது. மேலும் ஆண் பெண் உறவு குறித்த முறையியல், மதிப்பீடுகள், வரைமுறைகள் மாற வேண்டும். இருபாலர் கல்வி மற்றும் இருபாலரும் இணைந்த பணி முறை ஆகியவை இம்மாதிரியான மதிப்பீடுகளை ஓரளவிற்கு மாற்றி இருக்கின்றன. ஆனால் இன்றைய நிலையில் ஒரு பெண் மற்றொரு பெண்ணுடனோ அல்லது ஓர் ஆண் மற்றொரு ஆணுடனோ தொடர்பு கொண்டால் அது நட்பாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஓர் ஆண் மற்றொரு பெண்ணுடனோ அல்லது ஒரு பெண் மற்றொரு ஆணுடனோ தொடர்பு கொண்டால் அது நட்பிற்கு அப்பால் கவர்ச்சியாக , உடலியல் ரீதியான தொடர்பாக பார்க்கும் மனோபாவம் நிலவுகிறது. இந்த தவறான மனோபாவம் கண்டிப்பாக மாற வேண்டியது அவசியம். நட்பு என்பது பரஸ்பர அறிமுகம் கொண்ட, உரையாடல் கொண்ட ஓர் ஆத்மார்த்த உளவியல் கூறே. இதன் எதார்த்த அர்த்தம் மீட்டுருவாக்கம் செய்யப்பட வேண்டும். மேலும் பெண்ணுடல் குறித்த ஆணின் பார்வையாக இன்றைய நிலையில் பெண் அணியும் உடை முன்வைக்கப்படுகிறது. இனக்குழு சமூக காலகட்டத்தில் ஆணும் பெண்ணும் இடுப்புக்கு கீழே உடை அணிந்த காலத்தில் அது மேலும் பரிணாம வளர்ச்சி பெற்று உடல் முழுவதையும் மறைக்கும் ஒன்றாக மாறியது. நவீன சமூகம் உடையை தேர்வு செய்ய   காலநிலை, உடல்பொருத்தம் மற்றும் சௌகரியம் போன்ற பல வரைமுறைகளை வகுத்துக்கொண்டு செயல்படுகிறது. 

மேற்குலகை பொறுத்தவரை இது ஓரளவிற்கு சரியாக கடைபிடிக்கப்படுகிறது. அங்கு உடை ஒரு பெரும் விவாதப்பொருளே அல்ல. மாறாக இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உடை என்பது மேற்கண்ட வரைமுறைகளை தாண்டி நாகரீகம் மற்றும் தன்னை வெளிப்படுத்தல் என்ற அம்சங்களாக பார்க்கப்படுகிறது. அழகு சாதன பொருட்களுக்கு உலகில் இந்தியா மிகப்பெரும் சந்தை என்பதும் இதனோடு சேர்த்து கவனத்தில் கொள்ள வேண்டியதிருக்கிறது. உலகமயமாக்கலுக்கு பிறகு ஆடை சந்தைகளில் பெண்களுக்காக விதவிதமான வடிவங்களில், நிறங்களில், வகைகளில் உடைகள் வந்திறங்குகின்றன. இங்கு எல்லாவித உடைகளும் ஆணின் கண்காணிப்பிற்கும், கவனத்திற்கும் உட்பட்ட ஒன்றாகவே இருக்கின்றன. பெண்கள் தலைமுதல் கால் வரை முழுவதுமாக தங்களை மூடிக்கொள்ள வேண்டும் என்று சொல்லும் பிற்போக்கு ஆண்களும், உங்களுக்கு சுதந்திரம் கொடுக்கிறோம் என்று விதவிதமான வடிவங்களில் உடைகளை தயாரித்து பெண்களுக்கு வழங்கும் ஆண்களும் தங்கள் நோக்கத்தில் ஒன்றுபட தான் செய்கின்றனர்.

பெண்ணின் உடல் என்ற நோக்கம் தான் அது.  ஆனால் இன்றைய இந்தியாவில் எல்லாவிதமான உடைகளும் பெண்களுக்கு சவாலாக தான் இருக்கின்றன. காரணம் பெண்கள் மீதான வன்முறை என்பது அதை தாண்டியே இருக்கிறது. கண்முன் நிகழ்ந்து கொண்டிருக்கும் பல சம்பவங்களை நாம் மேற்கோள் காட்ட முடியும். ஆக இன்றைய இந்தியாவில் விவாதபொருளாகி இருக்கும் உடையை பொறுத்தவரை உடை தான் எல்லா பிரச்சினைகளுக்கான காரணம் என்பதோ அல்லது உடை தான் பெண் விடுதலைக்கான கூறு என்பதோ இரண்டுமே அபத்தமான வாதம் தான். வக்கிர ஆண்களுக்கு அது ஒரு பொருட்டே அல்ல. அவர்களின் கண்காணிப்பும், இச்சையும் பெண்ணுடல் என்ற இலட்சிய கருத்தாக்கத்தை நோக்கியே இருக்கின்றது. தோல்சுருங்கிய மூதாட்டிகள் கூட பலாத்காரத்திற்கு உள்ளாவது இதனால் தான். இன்றைய  கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார அம்சங்களில் இன்றைக்கு பெண்கள் படிப்படியாக சுதந்திர தேடலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் சூழலில் உடையை தாண்டிய சிந்தனைகள் அதிகம் அவசியப்படுகிறது.  ஆண்- பெண் உடலை தாண்டிய சிந்தனை தான் அது.  எந்த சூழலிலும் அது பெண்ணுடலை வன்முறைக்கு உட்படுத்தாத ஒன்றாக இருப்பது அவசியம்.

...மேலும்

Sep 21, 2014

ஊடகங்கள் செய்யும் பாலியல் வன்கொடுமை - மு.வி.நந்தினி


பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பதிவு செய்வதற்காக இன்றைய நாளிதழ்களை தேடியபோது, கிருஷ்ணகிரி கல்லூரி பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான செய்தியை தினமலர் எழுதியிருக்கும் விதம் மிகவும் அருவருக்கத்தக்கதாக இருந்தது. உடலால் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டிருந்த அந்தப் பெண்ணை எழுத்தால் வன்முறை செய்திருந்தது தினமலர். சம்பவத்தை நேரில் பார்த்து எழுதியதைப் போல் எல்லா தகவல்களும் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன, அதில் பாதி இட்டுக்கட்டிய பொய். மஞ்சள் பத்திரிகைகளில் எழுதுவதுபோல படிப்பவர்களுக்கு கிளுகிளுப்பான உணர்வை தர வேண்டும் என்று எழுதுபவர்கள் பத்திரிகையாளர்களா? இவர்களிடம் எப்படிப்பட்ட ஊடக அறத்தை எதிர்பார்க்க முடியும்? இதோ இந்தச் செய்தியைப் படித்துப் பாருங்கள்.

கிருஷ்ணகிரி: காதலனை கட்டிப்போட்டு விட்டு, கல்லூரி மாணவியை கற்பழித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரி பட்டினம் பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண், கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், வேலம்பட்டியை சேர்ந்த கார் டிரைவர் ஒருவருக்கும் இடையே கடந்த ஒராண்டாக காதல் இருந்து வந்துள்ளது. இருவரும் கல்லூரி முடிந்த பின், பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை, இருவரும் காரில் சென்று ராயக்கோட்டை அருகேயுள்ள கோட்டம்பட்டி என்ற இடமருகே, உல்லாசமாக இருந்துள்ளனர். அந்த இடத்தில் மது அருந்தி கொண்டிருந்த, வாகன ஓட்டிகளான பிரகாஷ்(28), சுப்ரமணியம்(28), பிரகாஷ்(24) மற்றும் மணி(22) ஆகியோர் காதலர்கள் இருவரையும் பார்த்துள்ளனர். அவர்கள் நான்கு பேரும், காதலனை கட்டிப்போட்டு விட்டு, கல்லூரி மாணவியை கற்பழித்துள்ளனர். மேலும் அதனை தங்கள் செல்போனில் பதிவு செய்தனர். பிரகாஷ் என்பவரின் செல்போன் எண்ணை கொடுத்து, தாங்கள் அழைக்கும் போதெல்லாம் வர வேண்டும் என மிரட்டியுள்ளனர். சற்று நேரட்டில் மாணவியும், அவரது காதலனும் மயங்கினர். இதனை அந்த பகுதியில் மாடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் கண்டு, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சேலம் சரக டி.ஐ.ஜி.,அமல்ராஜ் மற்றும் எஸ்.பி., கண்ணம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். கல்லூரி மாணவியிடமிருந்த செல்போன் எண்ணை கொண்டு 4 பேரையும்பிடித்த போலீசார், அதில் மணியை தவிர மற்ற மூன்று பேரை கைது செய்துள்ளனர். மணியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்