/* up Facebook

Aug 7, 2014

சுதந்திர கருக்கலைப்பிற்கான உரிமை - விஜி

(கடந்த ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 41 வது இலக்கிய சந்திப்பின் நினைவாக வெளியான “குவர்னிகா” இலக்கிய தொகுப்புக்காக பெண்ணிய செயற்பாட்டளரும் எழுத்தாளருமான விஜி அவர்களால் எழுதப்பட  “சீமொன் வெய்” (Simone Veil) அவர்களின் பெண்ணியவாதக் கருத்தியலை முன்வைத்து ..
 
கருக்கலைப்பு என்பது இவ்வுலக மானிட சமூகத்திற்கு புதியதொரு விடயம் அல்ல. மிக நீண்டகால வரலாற்றைக் கொண்டது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பெண்கள் தம் வயிற்றில் உருவாகும் கருவை சிதைத்து விடுவதினூடாக கருக்கலைப்பினை மேற்கொண்டு வந்திருக்கிறார்கள். சமூக, பொருளாதார, பண்பாடு போன்ற பல்வித காரணிகள் ஏற்படுத்தும் நெருக்கடிகளினால் தாம் கருவுறுகின்ற சிசுக்களை ஈன்றெடுக்க முடியாத நிலைக்கு பெண்கள் தள்ளப்படுகின்றார்கள். ஆனால் இக்கருக்கலைப்பினை செய்கின்ற தருணங்களில் பெண்கள் பல நெருக்கடிகளை சந்திக்க நேரிடுகின்றது. குறிப்பாக மத நம்பிக்கையின் அடிப்படையில் கருக்கலைப்பு என்பது ஒரு பாவமான காரியமாக கருதப்படுகின்றது. அத்தோடு கலாச்சாரம், பண்பாடு எனும் சமூக அழுத்தங்களால், கருக்கலைப்பினை செய்யமுனைகின்ற பெண்களை சமூதாயம் பழித்தொதுக்குகின்றது. இந்த நிலையிலேயே பெண்கள் தம்மால் சுமக்கமுடியாத, விரும்பாத கருக்களை ரகசியமான முறையில் சிதைக்கும் நிலைக்குள்ளாக்கப்படுகின்றனர்.
 
கடந்த நூற்றாண்டு வரைக்கும் உலகின் அனைத்துவிதமான நாடுகளிலும் கருக்கலைப்பு என்பது மிகப்பெரும் பாவமாக பிரகடனப்படுத்தப்பட்டு இருந்ததோடு, சட்டத்தினாலும் தடைசெய்யப்பட்டதொன்றாகவே இருந்துவந்துள்ளது. எனினும் மக்கள் ஆட்சி முறைமைகளும், ஐனநாயக விழிப்புணர்வுகளும் ஏற்படுத்திய அரசியல் மாற்றங்கள் கருக்கலைப்பு என்பதன் அவசியம் குறித்த புரிதல்களுக்கு இட்டுச்சென்றுள்ளது. இன்று உலகின் பல நாடுகளில் கருக்கலைப்பு என்பது சட்டவிரோதமானது என்கின்ற நிலை மாற்றத்துக்குள்ளாகியுள்ளது. இவ்வாறான மாற்றத்திற்காக பல்வேறு நாடுகளில் உள்ள பெண்கள் பாரிய போராட்டங்களை நடாத்தியிருக்கிறார்கள். மதங்களுக்கெதிராகவும், ஆணாதிக்க கருத்துகளுக்கெதிராகவும் எழுதியும், போராடியுமே இந்த கருக்கலைப்புக்கான உரிமையை பெற்றுள்ளார்கள். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலே தான் முதலில் இவ்வாறான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இந்த வகையில் பிரான்சு நாட்டிலும் சுதந்திர கருக்கலைப்பு உரிமையைப் பெறுவதற்காக பெண்கள் நீண்டகாலமாக போராடி வந்துள்ளனர் என்பதை அறியக்கூடியதாக உள்ளது.
 
“கருக்கலைப்பு உரிமைக்கான பிரஞ்சுப் பெண்களின் போராட்டம்.”
 
எல்லா நாடுகளையும் போன்று பிரான்சு தேசத்திலும் கருக்கலைப்பிற்கு எதிரான சமூக கலாச்சார நெருக்கடிகள் இருந்து வந்துள்ளது. பிரான்சு நாட்டில் சுதந்திரமான கருக்கலைப்பு பற்றிப் பேசுவதற்கும், அதை நடைமுறைப்படுத்துவதற்காகவும் பிரான்சு நாட்டுப் பெண்கள் பல போராட்டங்களை மேற்கொண்டிருந்தார்கள். இதற்கான போராட்டத்தில் பங்குகொண்ட பிரஞ்சுப் பெண்களில் முன்னணியில் நின்று செயல்பட்டவர் சீமோன் வெய் (Simone Veil) எனும் பெண்ணாகும். யூத இன பெற்றோருக்கு 13-07-1927 இல் மகளாகப் பிறந்தவர் சிமோன் வெய் அவர்கள். இவரது தந்தை புகழ் மிக்க கட்டிடக்கலை நிபுணர்களில் ஒருவராக இருந்தார். தனது பிள்ளைகள் மீது மட்டுமல்லாது பிற குழந்தைகள் மீதும் அன்பும் பாசமும், இரக்கமும் கொண்டவர் சீமொன் வெய் அவர்களின் அன்பிற்குரிய தாயார். 1930 களில் ஐரோப்பாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்ட பஞ்சமானது பிரான்சு தேசத்தையும் தீண்டியது. பிரஞ்சு வாழ் ஏழை மக்கள் மிகவும் துன்பத்திற்குள்ளானார்கள். குழந்தைகளை வளர்ப்தற்கே பெற்றோர்கள் திகைத்து நின்றகாலம் அது. பஞ்சத்தில் வாடிய சில குடும்பத்து பிள்ளைகளோடு தான் பெற்ற நான்கு குழந்தைகளையும் சேர்த்து வளர்த்து வந்தவர் சீமொன் வெய் அவர்களின் தாயார். இவ்வாறான குண இயல்பைக் கொண்ட பெற்றோர்களின் மகளாக பிறந்த சீமொன் வெய் ‘அவர்களுக்குள்’ சமூகத்தின் மீதான அக்கறை துளிர்ப்பதும் இயல்பானதுதானே. 
 
1939 ம் ஆண்டு நிகழ்ந்த இரண்டாம் உலகமகாயுத்தத்தின் விளைவுகளினால் சில நாடுகளும் நாட்டு மக்கள்களும் பாதிக்கப்ட்டிருந்தார்கள் என்பது உண்மையே! ஆனால் ஒரு இன மக்கள் மட்டும் தேடித் தேடி அழித் தொழிக்கப்பட்டார்கள். இரண்டாம் உலகமகா யுத்தமானது யூத இன மக்களையும் அழித்தொழிக்கும் ஒரு யுத்தமாக வியாபித்தது. ஜேர்மன் நாட்டு நாசிப்படைகளினால் யூத இன மக்கள் வேட்டையாடப்பட்டார்கள். பிரஞ்சு நட்டிலும் ஜேர்மனியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட மண்ணில் வாழ்ந்த யூத இன மக்களை இனம்கண்டு கைதுசெய்தார்கள். பிரான்சு தேசத்தில் நாசிகளால் கைப்பற்றப்பட்ட யூதக் குடும்பங்களில் சீமோன் வெய் அவர்களின் குடும்பமும் ஒன்றாக இருந்தது.
 
 யூத இன மக்களை அழித்தொழிக்கும் நோக்கத்தோடு 1943 இல் பிரான்சின் தென் கிழக்கு பகுதியில் உள்ள நீஸ் (Nice) எனும் நகரமும் நாசிப்படைகளினால் சுற்றி வளைக்கப்பட்டது. தனது இலக்கிய பேராசிரியரின் வீட்டில் படித்துக்கொண்டிருக்கும்போது 30-03-1944 இல் 16 வயதையுடைய சீமோனும் ஏனைய யூதமக்களுடன் கைதுசெய்யப்பட்டார் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டார்கள். எல்லோரும் வெவ்வேறாக பிரித்தெடுக்கப்பட்டார்கள். சீமொன் வெய் அவர்களின் சகோதரியான டெனிஸ் (Denise) என்பவர் யூத இன அழிப்பு நடவடிக்கைக்கு எதிரான இயக்கத்தில் இணைந்து செயல்பட்டவர். பிற்பாடு அவரும் நாசிகளால் கைது செய்யப்பட்டார். அவரது தகப்பனும் சகோதரனும் கைதுசெய்யப்பட்டதும் அவர்களுக்கு என்ன நடந்ததென்பதும் இதுவரையில் சீமொன் வெய் அவர்களுக்கு தெரியாத ஒரு நிரந்தர துயரமாகவே இருக்கின்றது. சீமொன் வெய் கைது செய்யப்பட்டு இரண்டு கிழமைக்குப் பிற்பாடு (13 Avril 1944) அவரது தாயாரும் பிறிதொரு சகோதரியுமான மதலின் (Madeleine) அவர்களும் ஒன்றாக பிரான்சின் புறநகர் பகுதியான றான்சியில் (Drancy) தடுத்து வைக்கப்பட்டு பிற்பாடு ஜேர்மனியிலுள்ள நாசிகளின் முகாமுக்கு (Auschwitz) அனுப்பப்பட்டனர். இந்த முகாமில் தான் மிகக் கொடூரமான யூத இனப்படுகொலைகள் நடைபெற்றுள்ளது.
 
“18 வயதுக்கு உட்பட்ட யூத இனத்தவர்கள் எல்லோரையும் அழித்தொழிக்கும் வேலையை செய்வதற்காக பிரித்தெடுக்கும்போது ஒரு கருணையுள்ள ஜேர்மன் இராணுவ வீரனால் நான் உயிர் தப்பினேன். பிரஞ்சு மொழி தெரிந்த அந்த இராணுவ வீரன் எனக்கு 18 வயது கடந்து விட்டதாக கூறும்படி ஆலோசனை வழங்கினார். 18 வயதைத் தாண்டியதாக பொய் சொன்ன காரணத்தால் தான் நான் இன்று உயிருடன் இருக்கின்றேன்.” என்பதாக “வாழ்க்கை” எனும் தனது சுயசரிதை நூலில் குறிப்பிட்டுள்ளார்.
 
1945 இல் ஹிட்லருக்கு எதிராக போராடிய நேசநாடுகளின்; முற்றுகையினால், தானும் தனது இரு சகோதரிகளும் மரணத்தின் விளிம்புவரை சென்று தப்பியதாகவும் கூறுகின்றார். தனது தாய் அந்த முகாமிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டதாகவும், மற்றும் தந்தையும், சகோதரனும் கைது செய்யப்பட்டவுடன் ‘லுத்வேனியா’ முகாமிற்கு அனுப்பப்பட்டவர்கள் ஒருபோதும் திரும்பவேயில்லை எனவும் விபரித்துச் செல்கிறது அவரது ‘வாழ்க்கை’ எனும் நூல்.

தாய், தந்தை, சகோதரன் மூவரையும் இழந்தநிலையில் சீமோன் உட்பட இரண்டு சகோதரிகளும் பிரான்சுக்கு திரும்பியிருந்தார்கள். உயர்கல்விப்பரிட்சையில் சீமோன் வெய் சித்தியடைந்து விட்டார் என்கின்ற மறுநாளேதான் அவரது கைதும் இடம்பெற்றிருந்தது. ஆகவே மரணத்தை வென்றுவந்த சோதனைகளையும், தாய், தந்தை மற்றும் சகோதரனையும் இழந்து நின்ற வேதனைகளையும் கடந்து தனது உயர்கல்வியை தொடர்ந்தார். பல்கலைக்கழக பட்டப்படிப்பை சட்டத்துறையிலும், அரசியல் விஞ்ஞானத்துறையிலும் மேற்கொண்டார். பின்னர் சட்டத்தரணியாக சிலகாலம் பணியாற்றிவிட்டு, நீதித்துறையில் பல உயர் பதவிகளில் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து அரசியலுக்குள் நுழைந்த சீமோன் வெய் அவர்கள் 1974 ஆம் ஆண்டு சுகாதார அமைச்சராக பணியாற்றினார். இந்தவேளையில்தான் அன்று மிகவும் தீவிரமாக இருந்த பெண்களின் பிரச்சனையான “சுதந்திர கருக்கலைப்பு” என்கின்ற சட்டத்தை கொண்டுவர பெரும் பிரயத்தனங்களில் இறங்கினார்.
 

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்