/* up Facebook

Aug 4, 2014

செல்வமனோகரியின் 'மழுங்கடிக்கப்பட்ட அடையாளங்களும்' - -வெள்ளைக்கிருஷ்ணன்

selvamanokariஏறக்குறைய இருபது ஆண்டுகளாக கவிதைகளை எழுதிக்கொண்டிருக்கும் செல்வமனோகரியின் முதலாவது புத்தகம் ; - 'மழுங்கடிக்கப்பட்ட அடையாளங்களும்' என்று இப்பொழுதுதான் வந்திருக்கு. கவிஞர்கள் சோ. பத்மநாதன் முன்னுரையையும் அனார் பின்னுரையையும் எழுதியிருக்கிறார்கள். 110 பக்கங்கள் உள்ள இந்த நூலில் 63 கவிதைகள் உள்ளன. துயரமும் நம்பிக்கையுமாய் வாழ்க்கை அமைந்திருப்பதையும் நாட்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதையும் தன்னுடைய கவிதைகளில் அதிமாக எழுதிச் செல்கிறார் செல்வமனோகரி. எளிமையான கவிதைகளில் வலி நிரம்பியிருக்கிறது. அந்த வலியிலும் துளியளவு நம்பிக்கையும் மகிழ்ச்சித்தருணங்களும் உள்ளன. இந்தத் துளி நம்பிக்கை சாதாரணமான ஒன்றல்ல. விதையைப் போன்றது. அது எல்லையற்று விரிந்து சடைக்கும் வினைத்திறன் உடையது.

'உனக்குத் தெரியுமா
இந்த அழகான கவிதைக்கு
ஓர் அழகான மனதின்
சிதைவுதான் உரமென்பது...'

(தேய்வு) பக்கம் 36.

அதிகாரம், புறக்கணிப்பு, புரிதலின்மை என்பவற்றினால் கணமும் தினமும் எங்கும் மனங்கள் சிதைக்கப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன. மனித வரலாறு நீட்டுக்கும் இந்தச் சிதைவுகளையும் வலியையும் காணலாம். இது அறிவு கோலோச்சும் யுகம். என்றாலும் மனங்களைக் காயப்படுத்தும் இழி நிலை இன்னும் நீங்கி விடவில்லை. அது நம் அருகிலிருந்தே சிதைப்புகளைச் செய்து கொண்டிருக்கிறது. உறவாகவும் நட்பாகவும் அதிகார அமைப்பாகவும் எனப் பல நிலைகளில். ஆனால், என்னதான் இருந்தாலும் இந்தச் சிதைவுகளையே உரமாக்கும் வலிமை உடைய இதயங்களும் வரலாறு நீளத்துக்கும் உள்ளன. வரலாற்றின் இயங்கு விதியை இவைதான் உருவாக்கிக் கொண்டும் உயிர்ப்பித்துக்கொண்டும் இருக்கின்றன. தானும் அதில் ஒன்று என்று உணர்த்துகிறார் செல்வமனோகரி. சிதைப்புக்கும் ஒருங்கு கூடலுக்குமான தொடர் போராட்டத்தையும் இடைவிடாத நிகழ்ச்சியையும் மிகச் சுலபமான வார்த்தைகளால் வெளிப்படுத்துகிறார்.

'இந்தக் கடைசித் தொலைக்
கடக்கும் வலிமை
அந்த வரம்
எனக்கில்லை என்று நீ...
.................
...............
துன்புறுத்தும் நினைவுகளாய்
என் பாதையில்
நீயிட்ட தடைகள் மட்டுமே
ஞாபகத்திலிருந்தன.

இந்த இடைவெளியைக் கடப்பேன்
அந்த விதானத்தைத் தொடுவேன்'

(கடைசித் தொலைவு) பக்கம் 42

இப்படிப் பல கவிதைகள் செல்வமனோகரியையும் அவருடைய கவிதை உலகத்தையும் அறிமுகப்படுத்தி, தனியாக அடையாளப்படுத்துகின்றன.

செல்வமனோரியின் கவிதைகளைக் குறித்து அனார் எழுதியிருக்கும் பின்னுரை தனியான கவனத்திற்குரிய ஒன்று. இலக்கியம் குறித்த அனாரின் பார்வையையும் செல்வமனோகரியின் கவிதைகளைப் பற்றிய அவருடைய உணர்தல்களையும் அந்தப் பின்னுரை வெளிப்படுத்துகிறது. '...ஒரு பெண்ணிடம் வருகின்ற கவிதைத் தருணங்கள் அவளுடைய நெற்றிக் கண்ணாகவும் ஆன்மாவின் குரலாகவும் உயிரில் துளிர்க்கின்ற கண்ணீராகவும் அவளுக்கான சிறகுகளாகவும் சாளரங்களாகவும் மாற்று உருவங்களைக் கொண்டிருக்கின்றன. மனோகரியின் பல கவிதைகளில் நதி ஒரு படிமமாக ஓடிக்கொண்டேயிருக்கின்றது. உண்மையில் அவை ஒன்று போலவே இருக்கும் வௌ;வேறு நதிகள்....' (அனார் - பக்கம் 106)

பெரும்பாலும் கையறு நிலையை வெளிப்படுத்தும் செல்வமனோகரியின் கவிதைகள் எங்களின் வாழ்க்கை நிகழ்ந்த காலத்தின் அடையாளங்கள். அந்த வாழ்க்கையின் மெய்முகம். சோ.ப கூறுவதைப்போல 'செல்வமனோகரி காணும் காட்டும் உலகம் ஏன் நமக்கு எந்த நம்பிக்கையையும் தருவதாக இல்லை?'ஏனென்றால் 'செல்வமனோகரி கவிதையுலகில் நுழைந்த காலம் போரும் இழப்பும் புலப்பெயர்ச்சியுமாய் நாம் நலிவுற்ற காலம். அவருடைய நம்பிக்கை ஆட்டங்கண்டிருந்தால் அதைப் புரிந்து கொள்ள முடியும்' (சோ.ப – பக்கம் ஒiஎ)

தமிழ்க்கவிதையில் இன்னும் ஒரு பெண்குரல் தீரமாய், வலியாய், பாடுகளின் சாட்சியாய், எதிர்ப்புணர்வின் அடையாளமாய்.. நமக்கிடையில் நம்மோடு கலந்திருக்கிறது.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்