/* up Facebook

Aug 29, 2014

கலைவாதி கலீலின் ஓ பலஸ்தீனமே கவிதைத் தொகுதி பற்றிய ஒரு கண்ணோட்டம் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உலகின் எந்த மூலை முடுக்குகளை எடுத்துக்கொண்டாலும் சித்;திரவதை நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது. வல்லரசுகள் அதற்குக் கீழுள்ள நாடுகளை சித்திரவதைப்படுத்துவது என்பது வரலாறு கண்ட பேருண்மை. காலங்காலமாக நிகழ்ந்து வரும் இத்தகைய நிகழ்வுகள் சர்வதேசம் குறித்த பார்வையை மக்களுக்கு தெரிவித்தபோதும் அது குறித்த இறுதி மதிப்பீடுகள் இன்று வரை ஏற்பட்டதில்லை என்பதுதான் நிதர்சனம்.

பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அவ்வப்போது இஸ்ரேல், பலஸ்தீனம் மீது ஏற்படுத்திய தொடர் தாக்குதல்களால் எத்தனை எத்தனை மக்கள் உயிரிழந்தார்கள்? சொத்து சுகங்களை இழந்தார்கள்? அந்த யுத்தம் ஒரு நிறுத்தத்துக்கு ஐக்கியப்படாமல் இன்று இந்த நிமிடம் வரை தொடர்ந்துகொண்டிருப்பதுதான் பெரும் துரதிஷ்டவசமான நிகழ்வாகும். இது குறித்த கருத்தாடல்கள் அல்லது கண்டனங்களை பல நாடுகள் மேற்கொண்டு இருக்கின்றது. ஆனபோதும் யுத்த முடிவு ஒன்றை பலஸ்தீனம் எதிர்காலத்திலாவது காணுமா என்பது ஐயத்துக்கும் அச்சத்துக்கும் உரிய விடயமாகவே காணப்படுகின்றது. அண்மையில் சுமார் ஒன்றரை மாதங்களாக இஸ்ரேலினால், பலத்தீனர்கள் மீது காஸாவில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மரணித்தது யாவரும் அறிந்ததே. இதில் 500 க்கும் மேற்பட்ட பச்சிளம் பாலகர்கள், 250 க்கும் மேற்பட்ட பெண்கள், 100 க்குக் கிட்டிய முதியோர்கள் உள்ளடங்குவர்.

கலை, இலக்கியம் இரண்டும் கலைவாதிக்கு கண்கள் போன்றவை. கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம், நடிப்பு, இசைப்பாடல், ஓவியம், மேடைப் பேச்சு போன்ற சகல துறைகளிலும் அவரது ஆளுமை வெளிப்பட்டு நிற்கும். இந்த வகையில் பல்கலை வேந்தன் என்ற பட்டம் இவருக்கு கிடைக்கப் பெற்றமை மிகவும் பொருத்தமானதே. பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் இவரது பங்களிப்பு சற்று அதிகமாகவே இருந்துள்ளது. இருந்துவருகின்றது. தற்போது நவமணி பத்திரிகையின் உதவி ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். 

தர்காநகர் தேசிய கல்வியியற் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதியான கலைவாதி கலீல் அவர்கள் மன்னார் படிப்பு வட்டத்தின் ஊடாக 68 பக்கங்களில் வெளியிட்ட ஷஷஓ பலஸ்தீனமே! நஜீ அல் அலியும் ஹன்ஸல்லாவும்|| என்ற நூல் குறித்த பார்வையை பதிவு செய்வது காலத்தின் தேவையாகும். கலைவாதி கலீல் அவர்கள் ஏற்கனவே உலகை மாற்றிய உத்தமர் (இயல் - இசைச் சித்திரம்), ஒரு வெள்ளி ரூபாய் (சிறுகதைகள்), கருவறையிலிருந்து கல்லறைக்கு (புதுக் கவிதைகள்), றோணியோக்கள் வாழுமா? (ஆய்வு நூல்) ஆகிய நான்கு நூல்களை ஏற்கனவே வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இவரது வெள்ளி ரூபா என்ற சிறுகதைத் தொகுதி எழுத்தாளர் தேசியக் கவுன்ஸில் விருது பெற்றுள்ளது.

இந்நூல் இஸ்ரேலுக்கும் பலஸ்தீன விரோதப் போக்கை கடைப்பிடிக்கும் அரபு ஆட்சியாளர்களுக்கும் எதிராக நஜீ அல் அலி என்பவரால் வரையப்பட்ட கூடார்த்த சித்திரங்களுக்கு எழுதப்பட்ட வரிகள் கலைவாதியின் கவிதைகளாக மலர்ந்திருக்கின்றது. இது தழுவலோ மொழி பெயர்ப்போ அல்ல. சித்திரங்களைப் பார்த்து கவிஞரின் மனதில் தோன்றிய எண்ணங்கள். 

இஸ்ரேலால் கைப்பற்றப்பட்ட காஸா, மேற்குக் கரைப் பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வந்த போராட்டம் மிகுந்த காலப்பகுதியில் இனந்தெரியாதோரால் இந்த நஜீ அல் அலி கொலை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 

உண்மைகளை உரத்துச் சொல்லும் எவருக்கும் வாழ்வதற்கான உரிமை மறுக்கப்படுகின்றது என்பதற்கு நஜி அல் அலியின் கொலையும் வரலாற்று சான்றாக அமைந்துள்ளது. யதார்த்தபூர்வமான சிதிதிரங்களை தத்ரூபமாக வரைந்ததினாலோ என்னவோ அவருக்கு அந்தக் கொடுமை நிகழ்ந்துவிட்டது. இனி அவரது சித்திரங்களுக்கு நூலாசிரியர் கலைவாதி அவர்கள் எழுதிய கவிதைகளில் சிலதை நோக்குவோம்.

பிஞ்சின் கரத்தில் அக்கினிக் குஞ்சு (பக்கம் 17) என்ற கவிதை பின்வருமாறு அமைகின்றது.

உயிர் நீங்கி ஓய்ந்த போதும்
உதிரமே உடலாய் மாறும்
கரம் வீழ்ந்து சாய்ந்த போதும்
குருதியே கரமாய் மாறும்

ஒரு கரம் ஓயும் போது
மறுகரம் கல்லை மாற்றும்
ஒரு உயிர் சாயும் போது
மறு உயிர் கல்லை ஏந்தும்

பச்சிளங் கரங்களுக்கும்
பாரிய வலிமையுண்டே
நிச்சயம் அல் அக்ஸா
நிச்சயம் பலஸ்தீனம்!

பாதிக்கப்பட்ட மக்களுக்காக எழுந்த ஒரு எழுச்சிக் குரலாக மேலுள்ள கவிதையை நோக்கலாம். உயிர்கள் ஒன்றன் பின் ஒன்றாக மாண்ட போதும் சத்தியத்துக்காக போராடும் மக்கள் இருக்கின்றனர் என்ற கருத்து புலப்பட அவர் எழுதியிருக்கின்றார் என்பது எனது அவதானம்.

அதேபோல தீ (பக்கம் 20) என்ற கவிதையும் உணர்ச்சித் தீயை வாசகர் மனதில் எரித்துவிட்டுச் செல்கின்றமை கவிதையின் சிறப்பம்சமாகும்.

கல்லில் கசியும் குருதித் துளிகள் 
கானகப் பூவை மலர்விக்கும்
கல்லைப் பிளந்தும் செடி துளிர்க்கும்
பூக்கள் மலர்ந்து தீ கக்கும்

கையின் உறுதி கல்லின் வலிமை
காபிர் கூட்டம் நடுநடுங்கும்
வெள்ளைப் பிறையும் வெண் போர் வாளாய்
துள்ளி எழுந்தே துணை சேர்க்கும்.

பூக்கள் மலர்ந்தால் கூட அவை தீ கக்கும் வீரத்துடன்தான் இருக்கின்றன. அதுபோல வெள்ளைப் பிறையும் போர் புரியத்தக்க வாளாய் மாறி துணை சேர்க்கும் என்ற கற்பனை கவிஞரின் மன வேதனையையும், வீராவேசத்தையும் எடுத்துக் காட்டுகின்றதெனலாம்.

இஸ்ரேலின் பிடிக்குள் சிக்குபட்ட பலஸ்தீனம் பற்றியும், பலஸ்தீனத்தை ஆக்கிரமித்தவர்களுக்குமாக கல் என்ற கவிதையில் (பக்கம் 31) கவிஞர் இப்படிக் கூறுகின்றார்.

முள்ளின் படுக்கையில்
முகங் குப்புறக் கிடக்கிறது பலஸ்தீனம்
அதனுள் அழிந்து எழ, எழ முயன்று
ரணத்துள் வழக்கம்
மஸ்ஜிதுல் அக்ஸா!

வானை நோக்கும் 
கைகள் ஏந்தத் 
துவக்கு இல்லையென்றால்...
கல்லை ஏந்தும்
அது சிறு கல்லை ஏந்தும்!

கல்லைக் கொண்டு 
யானைப் படையை 
பூண்டோடு அழித்த
புரட்சி வரலாறு
எம்மிடம் உளது ஜாக்கிரதை!

பல வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டபோதும் இந்த நூல் இன்றைய காலத்துக்கு மிகவும்  பொருந்துகின்றது. பல்துறை ஆளுமை கொண்ட கலைவாதி கலீல் அவர்கள் இளம் எழுத்தாளர்களுக்கு நிறைய களம் அமைத்துக் கொடுப்பவர். பலரது மனதிலும் மரியாதைக்குரியவராக வலம் வருபவர். சுமார் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக சளைக்காமல் எழுதிவரும் கலைவாதி கலீல் அவர்களது பல்வேறு வகையான காத்திரமான அனைத்து ஆக்கங்களும் நூலுருபெற்று வெளிவர வேண்டும் என்பது எல்லோரது எதிர்பார்ப்புமாகும். அவர் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை நிறையவே இருக்கிறது. வாழ்த்துக்கள்!!!

நூல் - ஓ பலஸ்தீனமே நஜீ அல் அலியும் ஹன்ஸல்லாவும்
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - தாஜுல் உலூம் கலைவாதி கலீல்
வெளியீடு - மன்னார் படிப்பு வட்டம்
தொலைபேசி - 0785659319

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்