/* up Facebook

Aug 1, 2014

மேரி சோப்ரா!


பாலிவுட் இப்போது படைப்பின் உச்சத்தில் நிற்கிறது. கவித்துவமான மேக்கிங்கில் கவனம் ஈர்க்கும் மிக முக்கிய இயக்குநரான சஞ்சய் லீலா பன்சாலி அதில் முக்கியமானவர். எடிட்டராக புனே திரைப்படக் கல்லூரியில் வாழ்க்கையைத் தொடங்கியவர் இப்போது எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் என சகல துறைகளிலும் கலக்குகிறார். இந்த ஆண்டின் ராம்-லீலாவின் வெற்றிக்குப் பிறகு தன் சொந்த நிறுவனமான 'சஞ்சய் லீலா பன்சாலி புரொடக்ஷன்ஸ்’ சார்பாக இந்தியாவின் குத்துச்சண்டை வீராங்கனையான மேரிகோமின் வாழ்க்கையைப் படமாகத் தயாரிக்கிறார். படத்தில் மேரிகோமாக நடிப்பது பிரியங்கா சோப்ரா.  

ஆர்ட் டைரக்ஷனுக்காகவே பாலிவுட் தாண்டியும் கொண்டாடப்பட்ட 'ப்ளாக்’ மற்றும் 'சாவரியா’ படங்களின் ஆர்ட் டைரக்டர் ஓமங் குமார் முதன்முறையாக இயக்குகிறார். செப்டம்பர் 5-ம் தேதி படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. சக்தே இந்தியா, பாக் மில்கா பாக் போன்ற படங்களில்  கொரியோகிராஃபி செய்த '
ரீல்ஸ்போர்ட்ஸ்’ நிறுவனம் இந்தப் படத்தின் சண்டைக்காட்சிகளை வடிவமைத்து இருக்கிறது. அதனால் மங்கோலியப் புருவத்தில் ஆரம்பித்து மேரிகோமை அப்படியே தத்ரூபமாகக் கொண்டுவர மெனெக்கெட்டிருக்கிறார்கள்.
மணிப்பூரில் மேரிகோம்  வீட்டுக்கே சென்று வாரக்கணக்கில் தங்கி இருந்து அவரது மேனரிஸங்களை அப்படியே உள்வாங்கி நடித்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா. மேரிகோமே ஒரு பேட்டியில் பிரியங்கா சோப்ராவின் அர்ப்பணிப்பைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

''பிரியங்கா சோப்ராவுக்கு பள்ளிக்காலத்தில் பாக்ஸிங் அனுபவம் உண்டு என்பதை இங்கு வந்தபோது தெரிந்துகொண்டேன். என் வீட்டில் தங்கி இருந்தபோது அவருக்கு பாக்ஸிங்கில் சில நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்தேன். எளிதில் உள்வாங்கிக்கொண்டார். குடும்பத்தில் குழந்தைகளையும் கணவரையும் கவனித்துக்கொண்டே நான் சாம்பியனாக இருப்பதை  ஆச்சர்யத்தோடு பார்த்தார். என் குத்துச்சண்டை வாழ்க்கையையும் குடும்ப வாழ்க்கையையும் நான் எப்படி பேலன்ஸ்டாக வைத்திருக்கிறேன் என்பதைக் கற்றுக்கொண்டு போயிருக்கிறார். அது அவரது மண வாழ்க்கைக்கும் உதவக்கூடும். படத்தில் குத்துச்சண்டையோடு என் வாழ்க்கை சவால்களும் இடம் பிடிக்கின்றன. உண்மையைப் பதிவு செய்ய விரும்புவதால் நான் என் குடும்பத்தினரை சம்மதிக்க வைத்துள்ளேன். நிச்சயம் முகம் கோணாமல் உண்மைக்கு அருகில் இந்தப் படம் இருக்கும்'' என சிலாகிக்கிறார். பிரியங்கா சோப்ரா என்ன சொல்கிறார்?

''பெண்களுக்கும் பாக்ஸிங்கிற்கும் ரொம்ப தூரம் என்றே கருதப்படுகிறது. உண்மையில் வடகிழக்கு மாநிலப் பெண்கள் உடல் அளவிலும் மனதளவிலும் நம் எல்லோரையும் விட வலிமையாகவே இருக்கிறார்கள். மேரிகோம் அதில் உச்சம். இந்தியாவில் ஒரு சாம்பியனின் பின்புலம் கண்ணீரை வரவழைப்பதாகவே இருக்கிறது. மேரிகோமும் அதற்கு விதிவிலக்கு அல்ல. இந்தப் படம் வெறும் மேரிகோமின் வாழ்க்கைப் பதிவாக மட்டும் அல்லாமல் இந்திய விளையாட்டுத் துறை, அரசியல் போன்ற விஷயங்களையும் பேசும்.  சண்டைக்காட்சிகளில் நிறைய காயப்பட்டிருக்கிறேன். ஷூட்டிங் ஆரம்பித்தபோது அப்பா உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். பொறுத்துக்கொண்டு நடித்தேன். ஆனால், திடீரென ஒருநாள் இறந்துவிட்டார். ஷூட்டிங் இதனால் சில வாரங்கள் தடைபட்டது. அதோடு ஒரு உண்மை சொல்லவா...? படத்தின் போஸ்டர்களில் கண்ணின் கீழே ஒரு காயம் இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அது மேக்-அப் அல்ல. நிஜமான காயம். படத்தில் அந்தக் காயத்தோடுதான் நடித்திருக்கிறேன்'' என்று சிரிக்கிறார்.

சபாஷ் மேரிகோம்...சபாஷ் பிரியங்கா சோப்ரா!


0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்