/* up Facebook

Aug 31, 2014

பெண் பெருமை பேசும் தமிழ் இலக்கியங்கள்


நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)நாம் வாழும் பூமியானது நானூற்றி ஐம்பத்து நாலு (454) கோடி ஆண்டுகளுக்குமுன் தோன்றியது. அதில் இருபது (20) இலட்சம் ஆண்டளவில் முதல் மனிதன் ஆபிரிக்காக் கண்டத்தில் தோன்றினான். அதிலும் இரண்டு (2) இலட்சம் ஆண்டுகளுக்குமுன்தான் உறுப்பியல் சார்ந்த அமைப்பியலான நவ நாகரிகப் பண்பாடுடைய மனிதன் தோன்றினான். 'மனிதன் தோன்றி என்பது ஆணும், பெண்ணும் தோன்றினர் என்பதுதான் பெருள். அவர்கள் தோன்றிய பொழுது பூமியில் ஓரறிவான புல்லும், மரமும், பிறவும், ஈரறிவான நந்தும், முரளும், பிறவும், மூவறிவான சிதலும், எறும்பும், பிறவும், நான்கறிவான நண்டும், தும்பியும், பிறவும், ஐயறிவான மாவும், புள்ளும், பிறவும், ஆகியவை வாழ்ந்து கொண்டிருந்தன. மனிதன்தான் உயிர்கள் வாழும் பூமிக்கோளை உலகம் என்று கணித்தான். அவனில் அமைந்த ஆறறிவு உலகத்தை நவீனமுறைப்படுத்தி, அறிவியல் முன்னிலை பெற்று, மக்கள் வாழ்வியலில் முன்னேறி வருவதை அவதானிக்க முடிகின்றது.

உலகத்திலுள்ள உயிரினங்கள் அத்தனைகளிலும் ஆண் இனமும், பெண் இனமும் உள்ளன. இந்த ஆண், பெண் இனங்களின் இணைவும், உறவும்தான் அந்தந்த உயிரினங்கள் அழியாது காப்பாற்றப்படுகின்றன. ஆண், பெண் ஆகிய இரு இனங்களில் ஓர் இனந்தானும் இல்லையெனில் அந்த உயிரினம் அழிந்து போவது திண்ணமாகும். எனவேதான் ஆண் இனத்தையும், பெண் இனத்தையும் இயற்கை தந்துதவுகின்றது. ஆணில் ஆண்மையும், வீரமும் அமைந்துள்ளதுபோல், பெண்ணில் பெண்மையும், அழகும், சாந்தமும் அமைந்துள்ளன. ஆண் பெண்மையையும், பெண் ஆண்மையையும் விரும்பி ஒன்றுபட்டு வாழ்வியலில் இறங்குவர். ஆணின்பின் பெண்ணும், பெண்ணின்முன் ஆணும் சேர்ந்து ஓடுவதுதான் வாழ்க்கையாகும். ஆணும், பெண்ணும் இந்த ஓட்டத்தில் வெற்றிவாகை சூட 'ஒருத்திக்கு ஒருவன், ஒருவனுக்கு ஒருத்தி' என்ற தாரகமந்திரத்தைக் கடைப்பிடிப்பர். அதில் நிச்சயம் வெற்றியும் காண்கின்றனர்.

இயற்கையில் பெண்கள் அழகுடையவர்கள். அவர்கள் உடலமைப்பு அவ்வாறமைந்துள்ளது. இதற்கு ஆணும் செயற்கைச் சாதனங்கள் கொடுத்துத் துணைநிற்பான். 'பெண் என்றால் பேயும் இரங்கும்', 'பெண்ணுக்குப் பொன் இட்டுப்பார்' என்பர். பெண்கள் அழகு பற்றிப் பாவலர், நாவலர், புலவர், கவிஞர், ஆசிரியர் ஆகியோர் பல பாடல்களைப் பாடியுள்ளனர். அதில் சங்ககாலப் புலவர்கள,; சங்ககாலப் பெண்ணின் தோற்றம், அவயவம் ஆகியவற்றை அடிமுதல் முடியீறாகப் புனைந்து பாடிய சங்கப் பாடல்கள் படிப்போர் மனதைத் தொட்டு நிற்கின்றன. இனிப் பெண் பெருமை பற்றித் தமிழ் இலக்கியங்கள் பேசும் பாங்கினையும் பார்ப்போம்.
(1) தொல்காப்பியk;:- இடைச்சங்க காலத் தொல்காப்பியர் (கி.மு. 711) யாத்த மூத்த நூலான தொல்காப்பியம் பெண்கள் பற்றிக் கூறுவதையும் காண்போம். மனைவி (பொருள். 77-10,13, 163-1, 164-1, 170-2, 223-1) என்றும், கிழத்தி (பொருள். 90-3, 116-2, 140-2, 144-32, 153-2, 171-2, 178-2, 200-3, 490-2, 494-1, 495-1, 496-1, 499-2) என்றும், காமக் கிழத்தி (பொருள். 144-49, 145-18,36) என்றும், நல்லோள் (பொருள். 77-30) என்றும், காதலி (பொருள். 77-28) என்றும், கிழவி (பொருள். 111-5, 118-2, 121-3) என்றும், கிழவோள் (பொருள். (145-43, 230-1) என்றும், 'அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல், நிச்சமும் பெண்பாற் குரிய என்ப'  (பொருள். 96) என்றும், 'உயிரினும் நாணம் சிறந்தது;  அதனினும் கற்புச் சிறந்தது' (பொருள். 111) என்றும், 'பேடை, பெடை, பெட்டை, பெண், மூடு, நாகு, கடமை, அளகு, மந்தி, பாட்டி, பிணை, பிணவு, பிடி' (பொருள். 547) என்னும் பதின்மூன்றும் (13) பெண்பாற் பெயராகும் என்றும், 'தோழி, செவிலி (பொருள். 490-1) என்றும், ‘விறலி, பரத்தை’ (பொருள். 491-1) என்றும், 'ஒண்டொடி மாதர்’ (பொருள். 494-1) என்றும்,  தொல்காப்பியம் பெண்களைச் சிறப்பித்துக் கூறுகின்றது. மேலும் களவிற் கூற்று நிகழ்தற்குரியோராகj; ‘தோழி, செவிலி, கிழத்தி’ (பொருள்.490) ஆகியோரும், கற்பிற் கூற்று நிகழ்த்தற்குரியோராக ‘விறலி, பரத்தை’ (பொருள்.491) ஆகிய பெண்களை நியமித்தமை பாராட்டுக்குரிய செயலெனலாம்.

(2) குறுந்தொகை:- கடைச் சங்கத்தில் எழுந்த எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் 'மயிலியல் செறிஎயிற்று அரிவை கூந்தல்' (2-3,4) என்றும், 'மௌவல் நாறும் பல்லிருங் கூந்தல்' (19-4,5) என்றும், 'அகவன் மகளே! அகவன் மகளே! மனவுக் கோப்பன்ன நன்நெடுங் கூந்தல் அகவன் மகளே பாடுக பாட்டே' (23-1,2) என்றும், 'வாலிழை மகளிர்' (45-2) என்றும், 'தேமொழித் திரண்ட மென்றோள்' (72-3) என்றும், 'வாருறு வணர்கதுப் புளரிப் புறஞ்சேர்பு' (82-1) – நீட்சி பொருந்திய கடைகுழன்றுள்ள கூந்தலைக் கோதி முதுகிடத்தே சேர்ந்து - என்றும், 'மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்' (135-2) என்றும், 'மனையோள் மடமையிற் புலக்கும்' (164-5) என்றும், 'குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார்' (208-3) என்றும், 'பசுப்புளி வேட்கைக் கடுஞ்சூல் மகளிர்' (287-4,5) என்றும், 'ஓரை மகளிர்' (316-5, 401-3) என்றும், 'கடலாடு மகளிர்’ (326-2) என்றும் பெண் பெருமை பேசும் சீரினையும் காண்கின்றோம்.

(3) கலித்தொகை:- எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான கலித்தொகை நூலின் பாலைக் கலியில் 'நிலைஇய கற்பினாள்' (1-13)  என்றும், 'எல்வளை' (12-10) என்றும், 'நலம்பெறு சுடர்நுதால்!' (12-14) என்றும், 'கிளிபுரை கிளவியாய்!' (12-18) என்றும், 'பணைத் தடமென்தோள், ஏந்துஎழில் மலர்உண்கண், நிரைவெண்பல், மணம்நாறு நறுநுதல், இருங்கூந்தல்' (13-1,2,3,4) என்றும், 'முளைநிரை முறுவலார்' (14-25) என்றும், 'புனையிழாய்!'  (15-9) என்றும், 'ஒளியிழாய்!' (15-13) என்றும், 'ஊறுநீர் அமிழ்து ஏய்க்கும் எயிற்றாய்' (19-11) என்றும், 'மாண்எழில் வேய்வென்ற தோளாய்!' (19-15) என்றும், குறிஞ்சிக்கலியில் 'கயமலர் உண்கண்ணாய்!' (1-1) என்றும், 'நறுநுதால்' (1-12) என்றும், 'சுடர்த் தொடீஇ!' (15-1) என்றும், 'மான்நோக்கின் மடநல்லாய்' (20-17) என்றும், 'திருந்திழாய்!' (29-1) என்றும், மருதக்கவியில் 'அணைமென்தோள்' (1-9) என்றும், 'ஒளிபூத்த நுதலாரோடு' (1-19) என்றும், முல்லைக்கலியில் 'நறுநுதால், நெட்டிருங் கூந்தலாய்' (5-53,57) என்றும், 'தாதுசூழ் கூந்தள்' (11-12) என்றும், நெய்தற்கலியில் 'நன்னுதால்!' (15-9) என்றும் பெண்ணைச் சிறப்பித்துப் பேசும் பாங்கினையும் காண்கின்றோம்.

(4) ஐங்குறுநூறு:- எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான ஐங்குறுநூறு பெண்ணழகைக் கூறும் சீர் இவை. 'நன்நெடுங் கூந்தல்' (153-5) என்றும், 'பணைத்தோள், ஒண்தொடி அரிவை' (171-3,4) என்றும், 'ஒண்தொடி அரிவை கொண்டனள்' (172-1) என்றும், 'கொய்தளிர் மேனி' (176-4) என்றும், 'மகளிர் நீர்வார் கூந்தல்' (186-2) என்றும், 'இரும்பல் கூந்தல்' (191-2)  என்றும், 'கொழும்பல் கூந்தல் ஆய்தொடி' (196-1,2) என்றும், 'வளையணி முன்கை வாலெயிற்று அமர்நகை' (198-1) என்றும், 'வீங்கு எல்வளை! ஆய்நுதல் கவின' (200-1) என்றும், 'குவளை உள்ளகங் கமழும் கூந்தல்' (225-2,3) என்றும், ‘நின் மென்தோள் நெகிழவும் திருநுதல் பசப்பவும்' 230-2,3) என்றும், 'சாந்தம் நாறும் நறியோள் கூந்தல் நாறு நின்மார்பே' (240-3,4) என்றும், 'காந்தள் நாறும் வண்டிமிர் சுடர்நுதல் குறுமகள்' (254-2,3) என்றும், 'மடமகள் வண்டுபடு கூந்தல் தண்டழைக் கொடிச்சி வளையள் முளைவாள் எயிற்றள்' (256-1,2,3) என்றும், ‘திருந்திழை அரிவை!' (355-1) என்றும், 'அணிஇழை' (359-4) என்றும், 'தாழிருங் கூந்தல்' (411-4) என்றும், 'தாதார் பிரசம் மொய்ப்ப போதார் கூந்தல்' (417-3,4) என்றும், 'நன்னுதல்!' (426-2) என்றும் 'முல்லை நாறுங் கூந்தல்' (446-1) என்றும் கூறும் செய்திகளை ஐங்குறுநூறு நூலில் நாம் நுகர்கின்றோம்.
(5) பதிற்றுப்பத்து:-  எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பதிற்றுப்பத்தில் 'ஒள் இழை மகளிரொடு' (13-21) என்றும், 'சுடர் நுதல், அசைநடை உள்ளளும் உரியள்' (16-13) என்றும், 'முகிழ் நகை, மடவரல், கூந்தல் விறலியர்' (18-5,6) என்றும், 'வாள் நுதல் அரிவை' (19-14) என்றும், 'கார் மலர் கமழும், தாழ் இருங் கூந்தல்' (21-33) என்றும், 'வளை மகள்' (23-23) என்றும், 'எல் வளை மகளிர்' (27-7) என்றும், 'வளைக் கை மகளிர்' (29-2) என்றும், 'ஒண் நுதல் மகளிர்' (30-28) என்றும், 'வண்டு பட ஒலிந்த கூந்தல், அறம் சால் கற்பின், ஒள் நுதல்' (31-23,24,25) என்றும், 'சில் வளை விறலி! மெல் இயல் மகளிர்' (40-21,23) என்றும், 'கார் விரி கூந்தல், சேயிழை மகளிர்' (43-1,2) எனவும், 'இழையர், குழையர், நறுந் தண் மாலையர், சுடர் நிமிர் அவிர் தொடி செறித்த முன்கை, திறல் விடு திருமணி இலங்கு மார்பின், வண்டு படு கூந்தல் முடி புனை மகளிர்' (46-1,2,3,4) என்றும், 'நல் நுதல் விறலியர்' (47-7) என்றும், 'ஒள் நுதல் விறலியர்' (48-2) என்றும், 'வரி மென் கூந்தல்' (50-19) என்றும், 'சில் வளை விறலி!' (57-6) என்றும் பெண் பெருமை பேசுவதையும் காண்கின்றோம்.

(6) நற்றிணை:- எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான நற்றிணையில் 'மனைமாண் இனியோள்' (3-8,9) என்றும், 'சுணங்கனி வனமுலை' (9-6) என்றும், 'தேம்பாய் மரா அம் கமழும் கூந்தல்' (20-3) என்றும், 'திருந்திழை மகளிர்' (40-4) என்றும், 'மாயக் குறுமகள்' (66-11) என்றும், 'சில்வளைக் குறுமகள்' (90-9) என்றும், 'நல்கூர் நுசுப்பின் மெல்லியல் குறுமகள்' (93-8) என்றும், 'குறிஞ்சி நல்லூர்ப் பெண்டிர்' (116-11) என்றும், 'பிறைநுதல்' (120-7) என்றும், 'விரிஒலி கூந்தல்' (141-12) என்றும், 'அணிநுதற் குறுமகள்' (147-1) என்றும், 'ஒள்ளிழை மகளிர்' (155-1) என்றும், 'ஐம்பால் வகுத்த கூந்தல், செம்பொறித் திருநுதல்' (160-6,7) என்றும், 'மடக்கண் தகரக் கூந்தல், பணைத்தோள், வார்ந்த வால் எயிறு' (170-1,2) என்றும், 'குவளை யுண்கண், இவள் மாமைக் கவினே!' (205-6,11) என்றும், 'ஒழுகுநுண் நுசுப்பு, தெளிதீங் கிளவியாள்' (245-5,6) என்றும், 'பொற்றொடி மகளிர், நெருங்கேர் எல்வளை' (258-5,11) என்றும், 'மேனி, கண், சாயல், கிளவி, வனப்பு, கமழ் கூந்தல்' (301) என்றும் பெண்களைப் பற்றிப் புகழ்ந்து, பாராட்டிப் பேசியுள்ள சீரினையும் காண்கின்றோம்.

(7) சிலப்பதிகாரம்:- ஐம்பெரும் காப்பியங்களில் தலைசிறந்து விளங்கும் நூலான இளங்கோவடிகள் (கி.பி. இரண்டாம் நூற்றாண்டு) யாத்த சிலப்பதிகாரத்தில் பெண்ணழகு பேசப்படும் பாங்கினையும் காண்போம். 'போதிலார் திருவினாள் (கண்ணகி) புகழுடை வடிவினாள்' (1-26) என்றும், 'மாசறு பொன்னே! வலம்புரி முத்தே! கரும்பே! தேனே! ஆருயிர் மருந்தே! தாழிருங் கூந்தல் தையால்! (2-73,74,75,80) என்றும், 'செம்பொற் கைவளை, பரியகம், வால்வளை, பவழப் பல்வகை அணிந்து' (6-92,93) என்றும், 'குறுநெறிக் கூந்தல் நெடுமுடி கட்டி' (12-23) என்றும், 'இணைமலர்ச் சீறடி' (12-45) என்றும், 'கொங்கைச் செல்வி! தென்தமிழ்ப் பாவை! செய்தவக் கொழுந்து!' (12-47,48) என்றும், 'பெருமனைக் கிழத்தி' (13-57) என்றும், 'பொன்னே! கொடியே! புனைபூங் கோதாய்! நாணின் பாவாய்! நீணில விளக்கே! கற்பின் கொழுந்தே! பொற்பின் செல்வி!' (16-89,90,91) என்றும் சிலம்பு பெண்ணழகைப் பேசுகின்றது.

(8) திருக்குறள்:- சங்க மருவிய காலத்தில் தோன்றிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான திருவள்ளுவர் (கி.மு.31) யாத்த திருக்குறளில் 'மனத்தக்க மாண்புடையள்' (51) என்றும், 'பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மையுண் டாகப் பெறின்' (54) என்றும், 'தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்' (55) என்றும், 'கனங்குழை மாதர்' (1081) என்றும், 'பிணை ஏர் மட நோக்கும் நாணும் உடையாட்கு' (1089) என்றும், 'இரு நோக்கு இவள் உண்கண் உள்ளது' (1091) என்றும், 'கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள.' (1101) என்றும், 'அணியிழை' (1102) என்றும், 'இவள் நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்' (1104) என்றும், 'காமம் செறிதோறும் சேயிழை மாட்டு' (1110) என்றும், 'நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் மென்னீரள் யாம்வீழ் பவள்' (1111) என்றும், 'முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேலுண்கண் வேய்த்தோள் அவட்கு' (1113) என்றும், 'மலரன்ன கண்ணாள்' (1119) என்றும், 'அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்' (1120) என்றும் பெண்கள் பெருமை பேசப்படுகின்றது
.
(9) நாலடியார்:- பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான நாலடியாரில் 'அறுசுவையுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட' (1-1) என்றும், 'மனையாள்' (3-4) என்றும், 'முல்லை முகைமுறுவல் முத்தென்றும்'  (45-1) என்றும், 'நிரைதொடீஇ' (111-3) என்றும், 'இனியார் தோள்' (338-3) என்றும், 'பூங்குழையார்' (370-1) என்றும், 'கொய்தளிர்' (373-3) என்றும், 'அரும்பெறற் கற்பின்' (381-1) என்றும், 'நறுநுதலாள்' (381-4) என்றும், 'மாதர் மனைமாட்சியாள்' (382-4) என்றும், 'மாண்கற்பின் இல்லாள் அமர்ந்ததே இல்' (383-3,4)  என்றும், 'கட்கினியாள், காதலன் காதல் வகைபுனைவாள், உட்குடையாள், ஊர்நாண் இயல்பினாள், உட்கி இடன் அறிந்து ஊடி யினிதின் உணரும;, மடமொழி மாதராள் பெண்.'  (384)  என்றும், 'சுடர்த்தொடீஇ' (398-2) என்றும் பெண்ணழகு பேசப்படும் சீர் இவையாம்.

(10) நான்மணிக்கடிகை:- பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான நான்மணிக்கடிகையில் 'பெண்மை நலத்துக்கு அணியென்ப நாணம்' (11-2,3) என்றும், 'நிலைநின்ற பெண் நன்று' (15-1,2) என்றும், 'மனைக்காக்கம் மாண்ட மகளிர்' (20-1) என்றும், 'மனைக்குப்பாழ் வாள்நுதல் இன்மை' (22-1) என்றும், 'தாயின் சிறந்த தமரில்லை' (35-2) என்றும், 'தாயென்பாள் முந்துதான் செய்த வினை' (45-3,4) என்றும், 'உருபோடு அறிவுடையாள் இல்வாழ்க்கைப் பெண்ணென்ப' (55-2,3) என்றும், 'கொடுங்குழை நல்லாரை நல்லவர் நாணுவப்பர்' (56-2,3) என்றும், 'ஈன்றாளோடெண்ணக் கடவுளு மில்' (57-3,4) என்றும், 'பேணிய நாணின் வரைநிற்பர் நற்பெண்டிர்' (90-2,3) என்றும், 'பாழொக்கும் பண்புடையாள் இல்லா மனை' (101-3,4) என்றும், 'மனைக்கு விளக்கம் மடவார்' (105-1) என்றும் பெண் புகழ் பாடப்படுகின்றது.

முடிவுரை
இதுவரை தொல்காப்பியம;, குறுந்தொகை, கலித்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை, சிலப்பதிகாரம், திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை ஆகிய பத்துச் (10)  சங்க இலக்கிய நூல்களில் பெண் பெருமை பேசும் பாங்கினைப் பார்த்தோம். அவற்றில் பெண்ணை- மனைவி, கிழத்தி, காமக் கிழத்தி, நல்லோள், காதலி, கிழவி, கிழவோள், பேடை, பெட்டை, பெடை, பெண், பாட்டி, தோழி, செவிலி, விறலி, பரத்தை, ஒண்டொடி மாதர், அரிவை, வாலிழை மகளிர், மகளிர், ஒளியிழாய், நறுநுதால், சுடர்த்தொடீஇ, திருந்திழாய், நெட்டிருங் கூந்தலாள், நன்னுதால், கொய்தளிர் மேனியர், சுடர்நுதல் குறுமகள், மடமகள், அணிஇழையாள், கூந்தல் விறலியர், வளைமகள், மெல் இயல் மகளிர், சில் வளை விறலி, மனைமாண் இனியோள், பொற்றொடி மகளிர், தென் தமிழ்ப் பாவை, கற்பின் கொழுந்தே!, பொற்பின் செல்வி, கனங்குழை மாதர், நறுநுதலாள், இல்லாள், கட்கினியாள், தாயென்பாள், நற்பெண்டிர், பண்புடையாள், ஈன்றாள், மடவார், நிலைநின்ற பெண், இனியார் தோள் போன்ற சொற்பதங்களை அடக்கிச் சங்க இலக்கிய நூல்களில் பாடல் சமைத்தமை சங்கப் புலவர்கள் மனித வாழ்வியலின் உச்ச நிலையை மனத்தில் பதித்துச் செயற்பட்டனர் என்பது தௌ;;ளத் தெளிவாகின்றது.

ஆண், பெண் ஆகிய இருவரும் ஒன்று சேர்ந்து செயற்படின் அவர்கள் வாழ்வியல் சிறந்தோங்கும் என்பதில் ஐயப்பாடேதும் இருக்காது. வாழ்க்கைக்குப் பெண்ணின் பங்கு மிகவும் முக்கியம் என்பதை யாவரும் ஏற்பர். அதை அன்றே சங்கப் புலவர்களும் அறிந்திருந்து பெண்கள் பெருமையும், சீரும், சிறப்பும் பேசிப் பாடல்கள் யாத்தனர் போலும். இப்பாடல்கள் இரண்டாயிரத்து ஐநூறு (2500) ஆண்டுகளாக மக்கள் மத்தியிற் பெண் பெருமை பேசிக்கொண்டு உயிருடன் உலாவி வரும் சீரினையும் காண்கின்றோம்.

நன்றி பதிவுகள்
...மேலும்

Aug 29, 2014

கலைவாதி கலீலின் ஓ பலஸ்தீனமே கவிதைத் தொகுதி பற்றிய ஒரு கண்ணோட்டம் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உலகின் எந்த மூலை முடுக்குகளை எடுத்துக்கொண்டாலும் சித்;திரவதை நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது. வல்லரசுகள் அதற்குக் கீழுள்ள நாடுகளை சித்திரவதைப்படுத்துவது என்பது வரலாறு கண்ட பேருண்மை. காலங்காலமாக நிகழ்ந்து வரும் இத்தகைய நிகழ்வுகள் சர்வதேசம் குறித்த பார்வையை மக்களுக்கு தெரிவித்தபோதும் அது குறித்த இறுதி மதிப்பீடுகள் இன்று வரை ஏற்பட்டதில்லை என்பதுதான் நிதர்சனம்.

பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அவ்வப்போது இஸ்ரேல், பலஸ்தீனம் மீது ஏற்படுத்திய தொடர் தாக்குதல்களால் எத்தனை எத்தனை மக்கள் உயிரிழந்தார்கள்? சொத்து சுகங்களை இழந்தார்கள்? அந்த யுத்தம் ஒரு நிறுத்தத்துக்கு ஐக்கியப்படாமல் இன்று இந்த நிமிடம் வரை தொடர்ந்துகொண்டிருப்பதுதான் பெரும் துரதிஷ்டவசமான நிகழ்வாகும். இது குறித்த கருத்தாடல்கள் அல்லது கண்டனங்களை பல நாடுகள் மேற்கொண்டு இருக்கின்றது. ஆனபோதும் யுத்த முடிவு ஒன்றை பலஸ்தீனம் எதிர்காலத்திலாவது காணுமா என்பது ஐயத்துக்கும் அச்சத்துக்கும் உரிய விடயமாகவே காணப்படுகின்றது. அண்மையில் சுமார் ஒன்றரை மாதங்களாக இஸ்ரேலினால், பலத்தீனர்கள் மீது காஸாவில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மரணித்தது யாவரும் அறிந்ததே. இதில் 500 க்கும் மேற்பட்ட பச்சிளம் பாலகர்கள், 250 க்கும் மேற்பட்ட பெண்கள், 100 க்குக் கிட்டிய முதியோர்கள் உள்ளடங்குவர்.

கலை, இலக்கியம் இரண்டும் கலைவாதிக்கு கண்கள் போன்றவை. கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம், நடிப்பு, இசைப்பாடல், ஓவியம், மேடைப் பேச்சு போன்ற சகல துறைகளிலும் அவரது ஆளுமை வெளிப்பட்டு நிற்கும். இந்த வகையில் பல்கலை வேந்தன் என்ற பட்டம் இவருக்கு கிடைக்கப் பெற்றமை மிகவும் பொருத்தமானதே. பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் இவரது பங்களிப்பு சற்று அதிகமாகவே இருந்துள்ளது. இருந்துவருகின்றது. தற்போது நவமணி பத்திரிகையின் உதவி ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். 

தர்காநகர் தேசிய கல்வியியற் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதியான கலைவாதி கலீல் அவர்கள் மன்னார் படிப்பு வட்டத்தின் ஊடாக 68 பக்கங்களில் வெளியிட்ட ஷஷஓ பலஸ்தீனமே! நஜீ அல் அலியும் ஹன்ஸல்லாவும்|| என்ற நூல் குறித்த பார்வையை பதிவு செய்வது காலத்தின் தேவையாகும். கலைவாதி கலீல் அவர்கள் ஏற்கனவே உலகை மாற்றிய உத்தமர் (இயல் - இசைச் சித்திரம்), ஒரு வெள்ளி ரூபாய் (சிறுகதைகள்), கருவறையிலிருந்து கல்லறைக்கு (புதுக் கவிதைகள்), றோணியோக்கள் வாழுமா? (ஆய்வு நூல்) ஆகிய நான்கு நூல்களை ஏற்கனவே வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இவரது வெள்ளி ரூபா என்ற சிறுகதைத் தொகுதி எழுத்தாளர் தேசியக் கவுன்ஸில் விருது பெற்றுள்ளது.

இந்நூல் இஸ்ரேலுக்கும் பலஸ்தீன விரோதப் போக்கை கடைப்பிடிக்கும் அரபு ஆட்சியாளர்களுக்கும் எதிராக நஜீ அல் அலி என்பவரால் வரையப்பட்ட கூடார்த்த சித்திரங்களுக்கு எழுதப்பட்ட வரிகள் கலைவாதியின் கவிதைகளாக மலர்ந்திருக்கின்றது. இது தழுவலோ மொழி பெயர்ப்போ அல்ல. சித்திரங்களைப் பார்த்து கவிஞரின் மனதில் தோன்றிய எண்ணங்கள். 

இஸ்ரேலால் கைப்பற்றப்பட்ட காஸா, மேற்குக் கரைப் பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வந்த போராட்டம் மிகுந்த காலப்பகுதியில் இனந்தெரியாதோரால் இந்த நஜீ அல் அலி கொலை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 

உண்மைகளை உரத்துச் சொல்லும் எவருக்கும் வாழ்வதற்கான உரிமை மறுக்கப்படுகின்றது என்பதற்கு நஜி அல் அலியின் கொலையும் வரலாற்று சான்றாக அமைந்துள்ளது. யதார்த்தபூர்வமான சிதிதிரங்களை தத்ரூபமாக வரைந்ததினாலோ என்னவோ அவருக்கு அந்தக் கொடுமை நிகழ்ந்துவிட்டது. இனி அவரது சித்திரங்களுக்கு நூலாசிரியர் கலைவாதி அவர்கள் எழுதிய கவிதைகளில் சிலதை நோக்குவோம்.

பிஞ்சின் கரத்தில் அக்கினிக் குஞ்சு (பக்கம் 17) என்ற கவிதை பின்வருமாறு அமைகின்றது.

உயிர் நீங்கி ஓய்ந்த போதும்
உதிரமே உடலாய் மாறும்
கரம் வீழ்ந்து சாய்ந்த போதும்
குருதியே கரமாய் மாறும்

ஒரு கரம் ஓயும் போது
மறுகரம் கல்லை மாற்றும்
ஒரு உயிர் சாயும் போது
மறு உயிர் கல்லை ஏந்தும்

பச்சிளங் கரங்களுக்கும்
பாரிய வலிமையுண்டே
நிச்சயம் அல் அக்ஸா
நிச்சயம் பலஸ்தீனம்!

பாதிக்கப்பட்ட மக்களுக்காக எழுந்த ஒரு எழுச்சிக் குரலாக மேலுள்ள கவிதையை நோக்கலாம். உயிர்கள் ஒன்றன் பின் ஒன்றாக மாண்ட போதும் சத்தியத்துக்காக போராடும் மக்கள் இருக்கின்றனர் என்ற கருத்து புலப்பட அவர் எழுதியிருக்கின்றார் என்பது எனது அவதானம்.

அதேபோல தீ (பக்கம் 20) என்ற கவிதையும் உணர்ச்சித் தீயை வாசகர் மனதில் எரித்துவிட்டுச் செல்கின்றமை கவிதையின் சிறப்பம்சமாகும்.

கல்லில் கசியும் குருதித் துளிகள் 
கானகப் பூவை மலர்விக்கும்
கல்லைப் பிளந்தும் செடி துளிர்க்கும்
பூக்கள் மலர்ந்து தீ கக்கும்

கையின் உறுதி கல்லின் வலிமை
காபிர் கூட்டம் நடுநடுங்கும்
வெள்ளைப் பிறையும் வெண் போர் வாளாய்
துள்ளி எழுந்தே துணை சேர்க்கும்.

பூக்கள் மலர்ந்தால் கூட அவை தீ கக்கும் வீரத்துடன்தான் இருக்கின்றன. அதுபோல வெள்ளைப் பிறையும் போர் புரியத்தக்க வாளாய் மாறி துணை சேர்க்கும் என்ற கற்பனை கவிஞரின் மன வேதனையையும், வீராவேசத்தையும் எடுத்துக் காட்டுகின்றதெனலாம்.

இஸ்ரேலின் பிடிக்குள் சிக்குபட்ட பலஸ்தீனம் பற்றியும், பலஸ்தீனத்தை ஆக்கிரமித்தவர்களுக்குமாக கல் என்ற கவிதையில் (பக்கம் 31) கவிஞர் இப்படிக் கூறுகின்றார்.

முள்ளின் படுக்கையில்
முகங் குப்புறக் கிடக்கிறது பலஸ்தீனம்
அதனுள் அழிந்து எழ, எழ முயன்று
ரணத்துள் வழக்கம்
மஸ்ஜிதுல் அக்ஸா!

வானை நோக்கும் 
கைகள் ஏந்தத் 
துவக்கு இல்லையென்றால்...
கல்லை ஏந்தும்
அது சிறு கல்லை ஏந்தும்!

கல்லைக் கொண்டு 
யானைப் படையை 
பூண்டோடு அழித்த
புரட்சி வரலாறு
எம்மிடம் உளது ஜாக்கிரதை!

பல வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டபோதும் இந்த நூல் இன்றைய காலத்துக்கு மிகவும்  பொருந்துகின்றது. பல்துறை ஆளுமை கொண்ட கலைவாதி கலீல் அவர்கள் இளம் எழுத்தாளர்களுக்கு நிறைய களம் அமைத்துக் கொடுப்பவர். பலரது மனதிலும் மரியாதைக்குரியவராக வலம் வருபவர். சுமார் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக சளைக்காமல் எழுதிவரும் கலைவாதி கலீல் அவர்களது பல்வேறு வகையான காத்திரமான அனைத்து ஆக்கங்களும் நூலுருபெற்று வெளிவர வேண்டும் என்பது எல்லோரது எதிர்பார்ப்புமாகும். அவர் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை நிறையவே இருக்கிறது. வாழ்த்துக்கள்!!!

நூல் - ஓ பலஸ்தீனமே நஜீ அல் அலியும் ஹன்ஸல்லாவும்
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - தாஜுல் உலூம் கலைவாதி கலீல்
வெளியீடு - மன்னார் படிப்பு வட்டம்
தொலைபேசி - 0785659319
...மேலும்

Aug 28, 2014

விளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி? - ஆர்த்தி வேந்தன்


தமிழ்ப் படங்களில், கதாநாயகிகள் ‘வயதுக்கு வருவதாக’ அமைக்கப்படும் காட்சி களைப் பார்க்கும்போது, இயக்குநருக்கு உண்மையிலே இந்த விஷயம் தெரியாதா அல்லது ஒரு பெண்ணிடமாவது கேட்டு இந்த மாதிரி காட்சிகளை எடுக்க மாட்டார்களா என்றும் தோன்றும். திரைப்படத்தில் காட்டுவதைப் போல் நட்டநடு சாலையில் வயிற்றைப் பிடித்துக் கொண்டு கதாநாயகி கத்துவது, வலி வந்தவுடன் நாயகனின் முகம் அவள் நினைவுக்கு வருவது எல்லாம் உண்மையில் எங்கும் நடப்பதில்லை.

பெரும்பாலான பெண்கள், பருவ வயதை நெருங்கியவுடனே, வயதுக்கு வந்தவுடனே உடம்பில் என்ன மாற்றம் ஏற்படும் என்பதைத் தெரிந்துகொள்வார்கள். அம்மா, அக்கா, அத்தை, பாட்டி, தோழிகள் என்று யார்மூலமாவது அந்த விஷயம் அவர்களுக்கு அறிமுகமாகியிருக்கும்.

பெண்கள் தாங்கள் வயதுக்கு வந்த செய்தியை முதலில் தனது அம்மாவிடம் சொல்லக் கூடாது என்று சொல்பவர்களும் உண்டு. நிகழ்வு நடந்தவுடன் பயம், வலி, பதற்றம், அவமானம் எல்லாம் கலந்த உணர்வுகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டுவரும். இதைப் பற்றி ஓரளவுக்குத் தெரிந்துவைத்திருப்பவர்கள் எப்படியாவது சமாளித்துவிடுவார்கள். ஒன்றும் தெரியாதவர் களுக்கு ஏற்படும் உணர்வு விவரிக்க முடியாதது.

என் பள்ளித் தோழி ஒருத்தி, தான் பூப்படைந்த போது, தனக்கு ரத்தப் புற்றுநோய் வந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டாள். அழுது ஆர்ப் பாட்டம் செய்ததில், அவரது உறவினர்கள் தலைசுற்றிக் கீழே விழாத குறைதான். பின்னர் தான், நடந்தது என்ன என்பதை உணர்ந்து ஆசுவாசப்பட்டனர்.


இது ஒரு பக்கம் இருக்க, ‘சானிட்டரி நாப்கின்’ விளம்பரங்களைப் பார்த்தாலே டி.வியை உடைத்தால் என்ன தப்பு என்றுதான் தோன்றும். (பெரும்பாலான விளம்பரங்கள் இந்த உணர் வைத்தான் ஏற்படுத்துகின்றன).

மாதவிடாய் நாட்களில், “நீங்கள் ஆசைப்படுவது போல் ஆடலாம், ஓடலாம்” என்று சொல்லி ஏணியில் ஏறுவதுபோல், எதன் மீதாவது ஏறிக் குதித்து ஓடுவதுபோல் காட்டுகின்றனர். உண்மையில் மாதவிடாய் நாட்களில் ‘ஓய்வு’ தவிர வேற எதுவும் தோன்றாது.

வயிற்று வலி, இடுப்பு வலி, ஒரு சிலருக்கு மார்பகம் வீங்கிப்போவது என்று பல வலிகளை அந்த மூன்று நாட்களில் பெண்கள் சந்திக்கின்றனர். இன்னும் சிலருக்குச் சோர்வு முகத்திலேயே எழுதி ஒட்டியிருக்கும். தவிர, மனரீதியாக ஏற்படும் பிரச்சினைகள் ஏராளம். இவற்றையெல்லாம் முற்றிலுமாக ஒதுக்கி வைத்துவிட்டு, மாதவிடாய் என்றால் ரத்தப்போக்கு மட்டும்தான் என்பதுபோல் காட்டுவது சலிப்பாக இருக்கிறது. எந்தப் பதற்றமும் இல்லாமல், ஓய்வு எடுப்பதைத்தான் நாங்கள் விரும்புகிறோம் என்பதுகூடவா விளம்பரத் தயாரிப்பாளர்களுக்குத் தெரியவில்லை?

மற்ற விளம்பரங்களைப் போல் இந்த விளம்பரங்களும் ஒன்றைத்தான் உணர்த்துகின்றன: விளம்பரத்தில் வரும் பெண்கள், விளம்பரத்தில் மட்டும் தான் இருக்கின்றனர்.

நன்றி - தமிழ்ஹிந்து
...மேலும்

Aug 27, 2014

தாய்மையைப் பற்றி ஒளிந்திருக்கும் 5 உண்மைகள்


முதல் கர்ப்பம் என்றால் பயம் கலந்த சந்தோஷ உணர்வை பெறுவீர்கள். நீங்கள் எவ்வளவு தான் தயாராக இருந்தாலும் கூட, நீங்கள் அறியாதது சில வகைகள் நடக்கலாம். இங்கு தாய்மையைப் பற்றி ஒளிந்திருக்கும் 5 உண்மைகள்

பயத்தின் கனவுகள் இந்த உலகத்தில் பாதுகாப்பு என எதுவும் இல்லை. உங்கள் குழந்தையை பெற்றெடுத்தவுடன், ஏதோ தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படுவதை போன்ற உணர்வை பெறுவீர்கள். உங்கள் குழந்தையை உங்கள் நண்பர்களும், உறவினர்களும் தூக்க முற்படும் போது, உங்கள் நினைவுக்கு வருவது அவர்கள் கையில் உள்ள கிருமிகளே. புகைப்பிடிப்பவர்கள் மத்தியில் செல்லும் போதும் போக்குவரத்து நெரிசலில் வாகனங்களில் இருந்து வெளிப்படும் புகைக்கு மத்தியில் செல்லும் போது நெஞ்சு படபடக்கும். விளையாட்டு பொருட்களில் உள்ள நச்சுத்தன்மை மற்றும் உணவுப் பொருட்களில் கலந்துள்ள ரசாயனங்கள் ஆகியவற்றை பற்றி மணிக்கணக்கில் நினைத்து கவலைப்படுவீர்கள். இதையெல்லாம் தவிர்க்க முடியாது என்றாலும் கூட அதற்காக இவைகளை எண்ணி பித்து பிடிக்காமல் இருங்கள். உங்கள் குழந்தைகளை அனைத்து விஷயத்தில் இருந்தும் பாதுகாக்க முடியாது என்பதை புரிந்து கொண்டு அமுது காணுங்கள்.

கவனிப்புகள் திசை மாறும் கர்ப்பமாக இருக்கிற அந்த ஒன்பது மாதங்களும் உங்களை உங்கள் குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் மிகவும் விசேஷமாக கவனித்து கொள்வார்கள். உங்களுக்கு அது பழகியும் போயிருக்கும். உங்கள் உடல் நலத்தைப் பற்றி எப்போதும் விசாரிப்பார்கள். உங்களை பார்க்க வரும் போது உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி வருவார்கள். ஆனால் குழந்தை பிறந்தவுடன் உங்கள் மீதிருந்த கவனம் திசை மாறும் என யாரும் உங்களுக்கு சொல்லியிருக்க மாட்டார்கள். ஆனால் அது தான் உண்மை. குழந்தைக்கு பாலூட்டி, உடை மாற்றி அதனை உறங்க வைப்பதே இப்போது உங்கள் வேலையாகி விடும். இப்போது கவனிப்பும், பரிசுப் பொருட்கள் அனைத்தும் குழந்தைக்கே வந்து சேரும். இனிமேல் உங்களுக்கு இரண்டாவது இடம் தான்: சந்திக்க தயாராக இருங்கள்; எப்போதுமே!

தாய்ப்பால் கொடுப்பது கஷ்டமானது தாய்ப்பால் சுரப்பது இயற்கையானது என்பதால் தாய்ப்பால் கொடுப்பது ஒன்றும் பெரிய வேலை இல்லை என நீங்கள் நினைத்திருப்பீர்கள். ஆனால் தாய்மை காலத்தில் கடினமான வேலைகளில் முக்கியமானதாக விளங்குகிறது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது. குழந்தை சரியாக வாயை கொடுக்காமல் போகலாம், உங்களுக்கு போதிய அளவு பால் சுரக்காமல் போகலாம், காம்புகளில் புண் ஏற்படலாம், பால் வருவதில் அடைப்பு ஏற்படலாம் அல்லது மார்பகங்களில் அழற்சி ஏற்படலாம். இதெல்லாம் போக, ஹார்மோன் மாற்றங்களால் தூக்கமின்மை ஏற்பட்டு உங்களுக்கு குற்ற உணர்வும் உண்டாகும். மருத்துவர் அல்லது செவிலியரின் உதவியை நாடி, இந்த நுட்பத்தை பற்றி புரிந்து கொள்ளுங்கள். அதை விட்டு விட்டு நீங்கள் ஒரு சிறந்த தாயாக இருக்க முடியவில்லை என வருந்தாதீர்கள். உங்கள் உணவு பழக்கத்தின் மீது கவனம் தேவை. அதே போல் போதுமான அளவிலான தண்ணீரை குடியுங்கள். போதுமான அளவில் தாய்ப்பால் கொடுக்க முடியவில்லை என்றாலும் கூட அதற்காக வருத்தப்படாதீர்கள்.

சிறு மேடு கூட மலையாகும் தாய்மை அடைவதற்கு முன்னாள் நீங்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளில் ஈடுபட்டிருப்பீர்கள். ஆனால் டையப்பர் அணியும் சிறுவண்டு வந்தவுடன், என்ன ப்ராண்ட் சோப்பு வாங்க வேண்டும் என்பதில் கூட குழப்பம் ஏற்படும். சீக்கிரமே சோர்வடைவீர்கள். குழந்தைக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க சின்ன சின்ன விஷயங்களில் கூட பதற்றம் ஏற்படும். முடிந்தவரை கூட இருப்பவர்களின் உதவியை பெற்றிடுங்கள்.
போட்டி மனப்பான்மை வந்துவிடும் நம் குழந்தை தனித்துவம் வாய்ந்த, முழுமையான குழந்தையாக வளரவே நாம் விரும்புவோம். இந்த மனப்பான்மை இருப்பதால், போட்டி மனப்பான்மையும் உங்களுக்குள் வந்து விடும். புதிய பெற்றோர்கள் எப்போதும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றியே பேசுவார்கள். இது ஒருவித தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கி விடும். குழந்தை எட்ட வேண்டிய வளர்ச்சியை கால காலத்தில் அடையவில்லை என்றால் இந்த பயம் ஏற்பட தான் செய்யும்.
நன்றி - மருத்துவ இணையம்
...மேலும்

Aug 26, 2014

மாதவிடாய் - இது ஆண்களுக்கான பெண்களின் படம்

 
விவரங்கள்
எழுத்தாளர்: இரா.உமா
தாய்ப் பிரிவு: கருஞ்சட்டைத் தமிழர்
பிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஜனவரி 16 - 2014
 வெளியிடப்பட்டது: 06 மே 2014

“எந்நாடு போனாலும்

தென்னாடுடைய சிவனுக்கு

மாதவிலக்கான பெண்கள் மட்டும்

ஆவதே இல்லை”

 - கவிஞர் கனிமொழி

mathavidaiமாதவிலக்கு எனப்படும் மாதவிடாய் குறித்து ஓர் ஆவணப்படம் வெளிவந்திருக்கிறது. கீதா இளங்கோவன் அந்த ஆவணப்படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். புனிதங்களும், தீண்டாமைகளும் உடைத்து நொறுக்கப்பட்டுக் கொண்டிருக் கின்ற சூழலில், பெண்ணின் மீது இந்தச் சமூகம் ஏற்றி வைத்தி ருக்கின்ற தீண்டாமையான மாதவிடாய் பற்றிய கருத்தாக்கங் களையும், மருத்துவர்களின் அறிவியல் சார்ந்த ஆலோசனை களையும் இப்படத்தில் பதிவு செய்திருக்கிறார். இதில் இடம் பெற்றுள்ள, “இது ஆண்களுக்கான பெண்களின் படம்” என்னும் தொடர், நோக்கத்தைத் தெளிவுபடுத்துகிறது.

பெண்ணின் உடலில் இயற்கையாக ஏற்படும் ஒரு மாதாந்திர நிகழ்வைக் குறித்து, 21ஆம் நூற்றாண்டிலும் மக்களிடையே நிலவும் மூடநம்பிக்கைகளையும், அறியாமையையும் வேதனையுடன் கீதா பதிவு செய்திருக்கிறார். சமூகத்திற்குச் சொல்ல வேண்டிய, பெரும்பான்மையும் சொல்லத் தயங்குகின்ற செய்தியைச் சிறப்பாகச் சொன்ன மாதவிடாய் படத்தின் இயக்குனர் மற்றும் அவருடைய குழுவினருக்கு நம்முடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

ஓர் உயர் நிலைப்பள்ளி மாணவியிடம், ‘மாதவிடாய்னா என்னம்மா?’ என்று கேட்கப்படுகிறது. அந்த மாணவியிடம், வெட்கமும், தயக்கமும்தான் விடையாக வெளிப்படுகின்றன. பள்ளி இறுதி ஆண்டுகளில் நிற்கின்ற அந்தப் பெண் குழந்தை, படித்து முடித்ததும், மேற்படிப்புக்குப் போகலாம் அல்லது மணவாழ்க்கைக்குள்ளும் தள்ளப்படலாம். ஒரு வேளை அந்தப் பெண் திருமணம் செய்து கொடுக்கப்பட்டால், தன் உடலைப் பற்றிய அடிப்படை மாற்றங்கள் கூடத் தெரியாத நிலையில், எப்படி அந்த வாழ்க்கையை எதிர்கொள்வாள்? இத்தனை ஆண்டுகள் அவளுக்குக் கற்பிக்கப்பட்ட கல்வி வேறு என்னதான் அவளுக்குச் சொல்லிக் கொடுத்தது?

மற்றொரு மாணவியிடம், “வயசுக்கு வந்தப்போ உங்கம்மா, என்ன சொல்லிக் கொடுத்தாங்க?” என்று கேட்கப்படுகிறது. ‘வெளியில போக்கூடாது, பூஜ ரூம் பக்கமா வரக்கூடாது, குங்குமம் வச்சிக்கக்கூடாது, வெறும் பொட்டுதான் வச்சிக்கணும், ஆடாம, ஓடாம, பொம்பளப் புள்ளயா அடக்க ஒடுக்கமா இருக்கணும். அந்த மாதிரி நாள்ல பள்ளிக்கூடம் வரும்போது, கையில இரும்புத் துண்டு, இல்லன்னா துடைப் பத்தை மடிச்சிக் கையில கொடுத்தனுப்புவாங்க’ என்று பதில் வருகிறது. ஆக, பள்ளிக் கூடத்திலும், மாதவிடாய் பற்றி அறிவியல் சார்ந்த விழிப்புணர்வு கிடைப்பதில்லை, வீடுகளிலும் மூடநம்பிக்கை சார்ந்த கருத்துகளே திணிக்கப்படு கின்றன.

அறிவியல் பயிற்சியாளர், ‘மாதவிடாய் பத்தி விளக்கமா சொல்லும்போது, பிள்ளைங்க வெக்கப்படுதுக. 10, 11, 12ஆம் வகுப்புலயே, அறிவியல் பாடத்துல, ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகள், மண்டலங்கள் இதெல்லாம் படத்தோட வருது. ஆனா டீச்சருங்களே நடத்த அசிங்கப்பட்டுட்டு, நீங்களே வாசிச்சி தெரிஞ்சிக்குங்கன்னு சொல்லிட்டுப் போயிடுறாங்க அப்படீன்னு அந்தப் பிள்ளைக சொல்லுதுக’ என்கிறார். பிறகு எப்படி இது குறித்து விழிப்புணர்வு ஏற்படும்?

தொடக்கப்பள்ளி நிலையிலிருந்தே பாலியல் கல்வி பாடத்திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும். கலாச்சாரக் காவலர்கள் கூச்சலிடுவதுபோல், பாலியல் உறவுகளை வகைப்படுத்துகின்ற கல்வியன்று, பாலியல் கல்வி. மனித உடல் அமைப்பு, உடல் உறுப்புகள், உடலியல் மாற்றங்கள் குறித்து, ஆரோக்கியமான முறையில் கற்றுத் தரப்படும் அறிவியல் கல்வியே பாலியல் கல்வி. ஆண், பெண் இருபாலருக்கும் மிகவும் இன்றியமையாத கல்வி பாலியல் கல்வி.

இந்தப் படத்தில், பெண்கள், இளம்பெண்கள், ஆண்கள் சொல்லி யிருக்கின்ற மாதவிடாய் குறித்த கற்பிதங்கள், உடலியல் கல்வி பாலியல் கல்வியின் தேவைக்குச் சான்றுகளாக இருக்கின்றன.

கூவிலபுரம் என்னும் ஊரில், மாதவிலக்கின் போது பெண்கள் நடத்தப்படும் விதம், தீண்டாமைக் கொடுமையின் உச்சம். ஊருக்கு ஒதுக்குப்புறத்தில், மாதவிலக்கானவர்கள், பிள்ளை பெற்றவர்கள் தங்குவதற்காகத் தனி வீடே வைத்திருக்கிறார்கள். கைக்குழந்தை வைத்திருப்பவர்கள்கூட, மாதவிலக்கின் போது, பச்சைக் குழந்தையைப் பிரிந்து, தனியாக அந்த வீட்டில்தான் இருக்க வேண்டுமாம். ‘வீட்டிற் குள்ளேயே இருந்து விட்டால், யாருக்கும் தெரியாமல் போய்விடும். இப்படித் தனி வீட்டில் வைப்பதால், ஊருக்கே தெரிந்துவிடுகிறது. பசித்தாலும், தாகம் எடுத்தாலும், யாராவது அந்தப் பக்கமாக வந்தால்தான் சோறோ, தண்ணீரோ கிடைக்கும்.

பிச்சை எடுப்பதுபோல, கையேந்திச் சாப்பிட வேண்டியிருக்கிறது’ என்று அவமானத்தில் குமுறுகிறார் ஓர் இளம்பெண். அந்த நேரத்தில் பயன்படுத்தப்படும் பாத்திரங்களை மூட்டையில் கட்டி, ஒரு மரத்தில் தொங்கவிட்டிருக்கிறார்கள். அதைப் பார்க்கும் நமக்கு, பெண்களின் தன்மானத்தைத் தூக்கில் தொங்கவிட்டது போலத் தெரிகிறது.

மருத்துவ ரீதியான விளக்கங்களும், எளிமையான சொற்களில், துறை சார்ந்த மருத்துவர்களைக் கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ள விதமும் அருமை. பள்ளி ஆசிரியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரின் கருத்துகளும் விழிப்புணர்வூட்டுபவையாக உள்ளன.

மாதவிடாயின் போது வெளிப்படும் ரத்தத்தில் உள்ள ஸ்டெம்செல்கள் 78 வகையான இரத்த சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தக் கூடியவை என்று கண்டறியப் பட்டுள்ளது. மாதவிடாய் ரத்தத்தைச் சேமிக்கும் வங்கிகளும் இருக்கின்றன என்ற செய்தியையும் தருகிறது இப்படம்.

மாதவிடாய் ரத்தத்தை உறிஞ்சுவதற்குத் துணிகளைப் பயன்படுத்திய நிலை மாறி, இன்று பஞ்சுப் பட்டைகள் கடை களில் கிடைக்கின்றன. ஆனாலும் சரியான கழிப்பறை வசதிகள் இல்லாத காரணத்தால், இச்சமயங்களில் பெண்களின் நிலை மிகவும் சிக்கலானதாக இருக்கிறது.

சமூகத்தில் ஆண்கள் பெண்கள், படித்தவர்கள் படிக்காதவர்கள் என அனைத்துத் தரப்பினரிடமும், மாதவிடாய் தொடர்பான மூடநம்பிக்கைகளும், அறியாமையும் மண்டிக் கிடப்பதை இப்படம் ஆழமாகப் பதிவு செய்திருக்கிறது. தலைவலி, காய்ச்சல் வந்தால் சொல்வது போன்று, மாதவிடாயின் போது ஏற்படும் வலிகளைப் பெண்கள் வெளிப்படையாகச் சொல்வ தில்லை.

மருந்துக்கடைகளில் ஆணுறையை எந்தத் தாளிலும் மறைக்காமல் எடுத்துக்கொடுக்கும் கடைக்காரர், பெண்கள் மாத விடாய்ப் பஞ்சுப் பட்டைகளை வாங்கும்போது, செய்தித்தாளில் வைத்துச் சுருட்டி, கருப்புப் பாலித்தீன் பையில் போட்டு ரகசியமாகத்தான் கொடுக்கிறார். இரண்டையுமே மறைக்க வேண்டியதில்லை. உடம்பிலிருந்து வெளியேறுகின்ற ரத்தக் கழிவுகள் சம்பந்தப்பட்டவைதானே இவைகள்.

நம் சமூகத்தில், பலவற்றை மதங்கள் மறைத்து வைத்துப் புனிதம் என்கின்றன அல்லது ஒதுக்கி வைத்துத் தீட்டு என்கின்றன. இரண்டுமே இல்லை என்கிறது அறிவியல். மாதவிடாயின் மீது கட்டப்பட்டுள்ள கற்பிதங்களை உடைக்கின்ற சிற்றுளியாக இப்படம் இருக்கிறது.

நன்றி - கீற்று
...மேலும்

Aug 25, 2014

மாதவிடாய் – கையாளும் விதங்கள்

சில நேரங்களில் உங்களுக்கு எளிதில் கோபம், எரிச்சல், அழுகை, உடல் மற்றும் மனச்சோர்வு ஏற்படுகிறதா? அல்லது உங்கள் குடும்பம் மற்றும் அலுவலகச் சூழ்நிலை உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறதா? ஆம் என்றால், உங்களுக்கு மாதவிடாய் வர இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன என்று கணக்குப் போடுங்கள். ஒரு வேளை 14 முதல் 2 நாட்களாக இருக்கலாம். உடல் மற்றும் மன அளவில் வெளிப்படும் மேற்கண்ட அறிகுறிகளைத்தான் ‘மாதவிடாய்க்கு முந்தைய நோய்க்குறிகள்’ (pre menstrual syndrome) என்கிறோம்.

‘மாதவிடாய்க்கு முந்தைய நோய்க்குறிகள்’ என்றால் என்ன?

ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதவிடாய் வருவதற்கு 2 முதல் 14 நாட்களுக்கு முன் உடல் அளவிலும் மன அளவிலும் அசௌகரியமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. மாதவிடாய் தொடங்கியதும் இந்த அசௌகரியங்கள் மறைந்துவிடுகின்றன. இந்த மாற்றங்கள் நடைபெறும்போது பல பெண்களேகூட அதை உணர்வதில்லை. இவை சுமார் 70 சதவீதப் பெண்களின் அன்றாடச் செயல்களில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மாதாமாதம் நடைபெறும் இந்த மாற்றங்கள் சில பெண்களின் வாழ்வையே முடங்கச் செய்துவிடும்!

மாதவிடாய் – யோகா எப்படி உதவும்? இந்த அசௌகரியங்கள் ஏன் ஏற்படுகின்றன?
இதற்குச் சரியான காரணம் தெரியவில்லை. ஆனால் ஈஸ்ட்ரோஜன் எனப்படும் ஹார்மோன் அளவில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவதால் இந்த அசௌகரியங்கள் ஏற்படுகின்றன என்று நம்பப்படுகிறது. இந்த ஏற்றத்தாழ்வுகள் உடலின் இயற்கையான இயக்கத்தைப் பாதிக்கும்போது நோய் அறிகுறிகளாக வெளிப்படுகின்றன. மரபுவழி, சத்துக்குறைவு, மனம் மற்றும் நடத்தை சார்ந்த காரணங்களும் இந்த ஏற்றத்தாழ்வுகளுக்கு காரணமாக அமையலாம்!

மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகள்!
வயிறு உப்புசம், பசியின் அளவில் மாற்றம், மார்பகங்களில் வலி அல்லது கனமாகத் தோன்றுவது, உடல் மற்றும் மனச் சோர்வு, தலைவலி, மூட்டு மற்றும் தசைகளில் வலி, முதுகு வலி, உடலில் நீர் கோர்த்துக்கொள்வது, எளிதில் உணர்ச்சிவசப்படுவது, குறிப்பிட்ட உணவுகளுக்காக ஏங்குவது, பதற்றம், அடிக்கடி மனநிலை மாறுவது, தூக்கமின்மை ஆகியன! இந்த அறிகுறிகள் மாதத்துக்கு மாதம் வித்தியாசப்படலாம்! பெண்கள் அதிகம் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது, அதிக ஆபத்தான சூழ்நிலைகளில் அவர்களை ஈடுபடுத்திக்கொள்வது, குடும்பத்தார் மற்றும் அடுத்தவருடன் சண்டை போடுவது போன்றவை இந்த நேரங்களில்தான் அதிகம் நிகழ்வதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. சிந்திக்கும் திறன் பாதிக்கப்படுவதால் உணர்ச்சி வசப்பட்டு முடிவுகள் எடுப்பதே இதற்குக் காரணமாகவும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்த நேரங்களில் உடலையும் மனதையும் நன்கு வைத்துக்கொள்வது மிகவும் அவசியம்!
 
சிகிச்சை முறைகள்!
உடல் மற்றும் மனதில் ஏற்படும் மாறுதல்களைத் தொடர்ந்து குறித்துக்கொண்டு வந்தால், எந்த மாதிரிச் சூழ்நிலைகளின்போது அந்த மாறுதல்கள் நிகழ்கின்றன என்பதைக் கண்டறிந்து அந்த சூழ்நிலைகளுக்கானக் காரணங்களைத் தடுக்கலாம். இந்த நேரங்களில் உப்பு மற்றும் கொழுப்பின் அளவை குறைத்துச் சாப்பிடவும். காபி தவிர்ப்பது நல்லது. அதிக நார்ச்சத்துள்ள உணவைச் சாப்பிட வேண்டும். திடீர் உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வது நல்லது.உடலிலும் மனதிலும் ஏற்படும் இந்த மாறுதல்கள் மிகவும் பாதிப்பாக இருந்தால், தகுந்த மருத்துவரை அணுகவும்.
...மேலும்

Aug 24, 2014

கருக்குழாய் கர்ப்பம்

மாதவிலக்கு தள்ளிப் போவது, மயக்கம் என எல்லா அறிகுறிகளும் இருக்கும். சிறுநீர் பரிசோதனையில் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டிருக்கும். ஆனாலும் அந்தக் கர்ப்பம் ஆரோக்கியமானதா, கர்ப்பப் பையில்தான் வளர்கிறதா என்பதை அந்தத் தாய் அறிய வாய்ப்பில்லை. ‘‘கர்ப்பப்பையில் வளர்வதற்குப் பதில் கருக் குழாயில் வளர்ந்தால், அந்தக் கருவைக் காப்பாற்ற முடியாது. கவனிக்காமல் விட்டால் தாயின் உயிருக்கும் ஆபத்தாகலாம்’’

‘‘இயற்கையாக பெண்ணின் கருமுட்டையும், ஆணின் உயிரணுவும் சேர்ந்து, கருவாகிறது. இதை கருக்குழாயானது எடுத்துச் சென்று கர்ப்பப் பையினுள் வைக்கிறது. கர்ப்பப் பையினுள் அது வளர்கிறது. இது ஆரோக்கியமான கர்ப்பம். கருக்குழாயில் தொற்று இருந்தாலோ, சிதைந்து போயிருந்தாலோ, கருவானது கர்ப்பப் பைக்குள் நகர்த்தப்படுவது தடுக்கப்பட்டு, கருக்குழாயிலேயே தங்கி வளரத் தொடங்கும். கர்ப்பப் பை மட்டுமே கருவைத் தாங்கி, அதன் ஒவ்வொரு கட்ட வளர்ச்சிக்கும் ஈடுகொடுக்கும் சக்தி உடையது.
மிகவும் குறுகலான கருக்குழாயினுள் கருவானது வளர முடியாமல் 40 முதல் 70 நாட்களுக்குள் குழாயையே வெடிக்கச் செய்துவிடும். கருக்குழாயின் மிகக் குறுகிய பகுதிக்குள் வளரும் போது, இந்த வெடிப்பு இன்னும் சீக்கிரம் நடக்கும். சில நேரங்களில் கருவானது, குழாயிலேயே அழுகிப் போகலாம். அதுவும் தாய்க்கு ஆபத்தானது. சிறுநீர் பரிசோதனையில் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டாலும், கருவானது கர்ப்பப் பையில் இருப்பதை 38 முதல் 45 நாட்களில்தான் தெரிந்து கொள்ள முடியும். அப்படித் தெரியாவிட்டால், கருக்குழாய் கர்ப்பமாக இருக்கலாம் என சந்தேகப்படலாம்.

ரத்தப் பரிசோதனை மற்றும் ஸ்கேன் செய்து பார்ப்பதன் மூலம் கருக்குழாய் கர்ப்பமா எனக் கண்டுபிடிக்கலாம். கருக்குழாயில் தங்கி வளரும் குழந்தையைக் காப்பாற்ற முடியாது. அதை வளர விடுவது தாயின் உயிருக்கே ஆபத்தானது என்பதால் ஊசி அல்லது மாத்திரை மூலம் அதை மடியச் செய்ய வேண்டும். அறுவை சிகிச்சையின் மூலம் கருவை வெளியே எடுத்து, கருக்குழாயைப் பாதுகாக்கலாம். சிலருக்கு கருக்குழாயானது அளவுக்கதிகமாக பாதிக்கப்பட்டிருந்தால், கருக்குழாயையும் நீக்க வேண்டி வரும்.

இரண்டில் ஒரு கருக்குழாயை மட்டும் நீக்குவதால், அந்தப் பெண் பயப்படத் தேவையில்லை. கர்ப்பம் தரிக்க ஒரு கருக்குழாயே போதுமானது. குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்ட பெண்கள், பிறகு மறுபடி குழந்தை வேண்டி, வெட்டப்பட்ட குழாய்களை இணைக்கிற ரீகேனலைசேஷன் அறுவை சிகிச்சையை மேற்கொண்டிருப்பார்கள். அந்தப் பெண்களுக்கும் இப்படி கருத்தரித்து, குழாயில் கரு தங்கி வளரும் வாய்ப்புகள் அதிகம்…’

நன்றி - மருத்துவ இணையம்

...மேலும்

Aug 23, 2014

தொடர் சிகிச்சையால் எயிட்ஸ் தாயும் பாலூட்டலாம் - எஸ்.ரவிசான்


எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட தாய் ஒருவர் தொடர் சிகிச்சைகளின் மூலம் தனது உடம்பில் காணப்படும் வைரஸின் அளவை குறைத்த மட்டத்தில் பேணுவாராயின் குறித்த தாயும் சாதாரண தாய்மார்கள் போல் தனது குழந்தைகளுக்கு பால் ஊட்டலாம் என நரம்பியல் ஆலோசகரும் சொய்சா பிரிவு வைத்தியசாலையின் வைத்தியருமான நிசானி லூகாஸ் தெரிவிக்கும் அதேவேளை இவ்வாறான ஒரு தாய் குழந்தைகளுக்கு பால் ஊட்டுவதனால் குறித்த குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும் தெரிவித்தார்.
தேசிய தாய் பால் வார தினம் எனும் தொனிப்பொருளினூடாக கடந்த செவ்வாய்க்கிழமை சுகாதார கல்வி பணியகத்தில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே வைத்தியர் நிசானி லூகாஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இக்கருத்தரங்கில் வைத்தியரும் மருத்துவ சுகாதார கல்வி இயக்குனருமான நிசானி லூகாஸ் குடும்ப வைத்திய  இயக்குனரும் வைத்தியருமான ஏமானந்த பெனராகம மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சரத் அமுனுகம பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் மஹிபால  சுகாதார பணியகத்தின் சமுதாய மருத்துவ ஆலோசகர்  தம்பிக்க ரோவான்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இலங்கையில் தேசிய தாய் பால் வாரத்தை முன்னிட்டு  வைத்தியர்களாலும் விசேட வைத்திய ஆலோசகர்களினாலும் கலந்து உரையாடப்பட்ட விடயங்களாவன. இலங்கையில் கடந்த பத்து வருடங்களாக தாய்ப்பால் வாரம் என்ற செயலமர்வு நடத்தபட்டு வருகின்றது இவ்வறான  செயலமர்வு மூலம் தாய்மார்களின் பாலூட்டல் விகிதத்தினை நாட்டில் அதிகரிப்பதை நோக்காகக் கொண்டே நாம் செயல்படுகின்றோம்.
ஆசிய நாடுகளை எடுத்துக்கொண்டால் பாகிஸ்தான், இந்தியா பங்களாதேஷ் நேபாளம் உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பிடும் போது எமது நாட்டில் குழந்தை ஒன்று பிறந்த ஒரு மணித்தியாலத்திற்கும், அதன் பின்னரான 06 மாத காலத்திற்கும் தாய்ப்பாலினை கொடுக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கையானது 01  இடத்திலும் அதாவது 85 சதவீதத்திலும் காணப்படுகின்றது.
உலகின் 193  தலைவர்களினால்  இரண்டாயிரம் ஆண்டு  பொது சபை ஒன்று கூட்டப்பட்டு தாய்ப்பால் ஊட்டல் விகிதத்தில் ஒரு முன்னேற்றத்தை அடைய வேண்டும் என உறுதி மொழியொன்று எடுக்கப்பட்டது. அந்த வகையில் இன்று இலங்கையானது தாய்ப்பால் ஊட்டல்களில் 85 சத  வீதத்தை எட்டியுள்ளது. இந்த வீதத்தை தொடர்ந்து பேணுவதுடன் இதில் அதிகரிப்பை ஏற்படுத்தவே நாம் முயற்சிக்கின்றோம். இலங்கையானது இவ்வாறு குழந்தை பால் ஊட்டலில் உயர்ந்த மட்டத்தில் இருப்பதனால் தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் நாட்டிற்கும் பல்வேறு நன்மை கிடைப்பதோடு ஆரோக்கியமான சமூகத்தை நாம் உருவாக்கலாம்.
உலகின் சிசு மரண வீதத்தை பார்போமானால்  சந்தைகளில் விற்கப்படும் குழந்தை பால்மா வகைகளை குடித்து வளரும் குழந்தைகள் சிசு மரண வீதத்தில் பெருபாலான பங்கினை வகிக்கிறது. ஒரு தாய் எவ்வாறான வேலைகள் தன்னிடம் காணப்பட்டாலும் தான் பெற்ற குழந்தைக்கு மூன்று நேரமும் தவறாது பாலினை கொடுக்க வேண்டும் இவ்வாறு  மூன்று நேரமும் கொடுக்கப்படும் பாலின் மூலம் குழந்தைக்கு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வெவ்வேறுபட்ட புரதச் சத்துக்கள் கிடைக்கும்.
பிறந்த குழந்தையொன்று தொடர்ச்சியாக 6 மாத காலத்துக்கும் அதன் பின்னரான இரண்டு வருட காலத்திலும் ஏனைய உணவுகளுடன் சேர்த்து தாய்ப்பாலை கொடுக்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் அந்த குழந்தை ஆரோக்கியமானதாகவும் சிறந்த மூளை வளர்ச்சியையும் கொண்டு காணப்படும்.
ஒரு தாய் குழந்தைக்கு பாலூட்டலினை மேற்கொள்வதனால் மார்பக புற்று நோயிலிருந்து தம்மை 42 சதவீதம் பாதுகாத்து கொள்ள முடிவதோடு வயதான காலங்களில் ஏற்படக்கூடிய எழும்பு முறிவு எழும்பு தேய்வு போன்றவை ஏற்படாமல் இருப்பதற்கு  பாலூட்டல் மிகவும் அவசியம். எனவே, சந்தைகளில் விற்கப்படும் குழந்தை பால்மா வகைகளை தவிர்த்து தாய்ப்பாலை ஒரு குழந்தைக்கு கொடுப்பதன் மூலம் குறித்த அந்த தாய் குழந்தை பயன்பெற்று நாட்டின் எதிர்காலத்தின் ஆரோக்கியமான ஒரு சமூகத்தை நாம் எதிர்பார்க்க முடியும்.
இலங்கையில் தாய் பால் தொடர்பான முகாமைத்துவ நிலையங்கள் 44 காணப்படுவதோடு இது தொடர்பான எந்தவொறு    தகவலையும் எந்த நேரத்திலும் பெற்றுக்கொள்ள முடியும். எனவே, தாய்ப்பாலினை கொடுப்பதன் மூலம் எமது நாட்டில் ஆரோக்கியமானதும் பாதுகாப்பானதுமான ஒரு சமூகத்தை உருவாக்க துணை நிற்போம் என தெரிவித்தார்.

நன்றி - வீரகேசரி
...மேலும்

Aug 22, 2014

கர்ப்பிணிகளின் கனிவான கவனத்துக்கு...* வழக்கமாக எடுத்துக் கொள்ளும் உணவைக் காட்டிலும் 300 கலோரிகள் கூடுதலாக எடுத்தாலே போதும்.

* கொழுப்புச் சத்தும் தேவைதான். கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் ஏ.டி.ஈ மற்றும் கே. இவை குழந்தையின் வளர்ச்சிக்கு அவசியம். நாள் ஒன்றுக்கு 70 கிராம் உண வில் என்ணெய் சேர்க்கலாம்.

* கர்ப்பக் காலத்தில் இரண்டு வகையான தாது உப்புகள் மிகவும் அவசியம். ஒன்று கால்சியம், மற்றொன்று இரும்பு. கர்ப்பக் காலத்தில் ரத்தத்தின் அளவு 50 மடங்கு அதிகரித்துவிடுவதால், ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு இரும்புச் சத்து மிமிக அவசியம். வால்நட், பேரீச்சம்பழம் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

* டாக்டரின் ஆலோசனை பெறாமல், இரும்புச்சத்து மாத்திரைகள் சாப்பிடக்கூடாது. மலச்சிக்கல் ஏற்படலாம்.

* குழந்தையின் எலும்பு, பல் வள‌ர்ச்சிக்கு கால்சியம் மிகவும் அவசியம். பாலில் பாஸ்பரஸ் இருப்பதால் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. பால், தயிர், மோர் இவற்றை சேர்த்துக் கொள்ளலாம். காபி, டீ, குளிர்பானங்களில் உள்ள காஃபின் என்ற பொருள், கால்சியம் கிரகிக்கப்படுவதை தடுக்கும். எனவே, அவற்றைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

* பச்சைக் காய்கறிகள், நார்ச்சத்துள்ள உணவுகள், பழங்கள் அதிகம் சேர்த்துக் கொள்வதன் மூலம் தாது உப்புக்கள் எளிதில் கிடைத்துவிடும். 

* தினமும் ஒன்னரை கப் வேக வைத்த காய்கறி (அ) ஒரு கப் பச்சைக் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளவேண்டும்.

* ரத்தத்தின் அள‌வை அதிகரிக்க செய்ய சோடியம் தேவை. எனவே, உப்பை முற்றிலும் தவிர்க்காமல் குறைத்துக் கொள்ளுங்கள்.

* செரிமானப் பிரச்னையைச் சரிசெய்ய நாள் ஒன்றுக்கு இரண்டரை லிட்டர் தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும்.
...மேலும்

Aug 21, 2014

கூட்டுக் குடும்ப அமைப்பே சிறந்தது: மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன்

இந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலுடன் மொத்தம் எட்டு முறை மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்றவர். பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் மக்களவையில் இவர்தான் மூத்த பெண் உறுப்பினர். முன்னாள் மத்திய இணை அமைச்சராகவும் பணியாற்றியவர் . முன்னாள் மக்களவை சபாநாயகர் மீரா குமாருக்கு அடுத்தபடியாக 16-வது லோக்சபாவில் சபாநாயகர் பதவி வகிக்கும் சுமித்ரா மகாஜனின் (71) பொழுதுபோக்கு புத்தகங்கள் படிப்பது, இசை, நாடகம் மற்றும் சினிமா.

பதற்றப்படாமலும் பொறுமையுடனும் மிக்க மன உறுதியோடும் அவை நடவடிக்கைகளை இவர் நடத்திச் செல்கிறார். முதல் முறையாக நாடாளுமன்றத்தில் நுழையும் எம்.பி.க்களுக்கு ‘பீரோ ஆஃப் பார்லிமென்டரி ஸ்டடீஸ் அண்ட் ட்ரெய்னிங்’ என்ற அமைப்பின் ஏற்பாட்டின் கீழ் இரண்டு பயிற்சி முகாம்களை சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தி முடித்தார். அவையில் உறுப்பினர்கள் நடந்துகொள்ள வேண்டிய விதிமுறைகளுடன் வேறு பல அத்தியாவசியமான விஷயங்களையும் புதிய உறுப்பினர்களுக்கு எடுத்துக் கூறினார். அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து…
உங்கள் குடும்பப் பின்னணி பற்றிச் சொல்லுங்களேன்.
நான் பிறந்தது மகாராஷ்டிரா ரத்னகிரி மாவட்டத்தில். எட்டு வயதில் என் அம்மா இறந்துவிட்டார். நான் மாமாவிடம் வளர்ந்து, படிப்பை முடித்தேன். என் திருமணம் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டு நடைபெற்றது. கணவர் ஜயந்த் மஹாஜன் 2001-ம் ஆண்டு காலமாகிவிட்டார். எங்களுக்கு இரு மகன்கள். இப்போது நான் மூன்று பேரக் குழந்தைகளின் பாட்டி.
உங்களின் அரசியல் பிரவேசம் எப்படி நிகழ்ந்தது?
அரசியலில் நுழையும்போது எனக்கு 39 வயது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரின் துணை மேயர் பதவியில் பணியாற்றினேன். பின்னர், அடல் பிஹாரி வாஜ்பாயின் அமைச்சரவையில் 1999 ல் இருந்து 2004-ம் ஆண்டுவரை இணை அமைச்சராகப் பல்வேறு இலாகா பொறுப்புகளையும் ஏற்றேன். அது சிறந்த அனுபவமாக அமைந்தது.
அரசியல் வாழ்க்கையில் உங்களுக்கு அறிவுரை வழங்கியவர் யார்?
மிகுந்த அனுபவமும் நிறைந்த நம்பிக்கையும் கொண்ட அறிவுரையாளர் எனது மரியாதைக்குரிய குஷபாவ் தாக்கரே. முன்பெல்லாம் இப்போது காணப்படுவதைப்போல் தேர்தல்களில் போட்டியிட கட்சி டிக்கெட்டுகளுக்காக, உறுப்பினர்கள் ஓடி ஓடி துரத்தித் துரத்தித் தேடி அலைந்தது கிடையாது. அப்போதெல்லாம் கட்சி உறுப்பினர்களைக் காட்டிலும், கட்சி என்பதுதான் எங்களுக்கெல்லாம் அதிமுக்கியமான, முதல் முன்னுரிமை பெறும் அம்சமாக இருந்துவந்தது.
நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் உங்கள் நிலை என்ன?
காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் அணுகினால், கண்டிப்பாக இந்தப் பிரச்சினை பற்றி ஆலோசிக்கத் தயார்.
உங்களால் மறக்க முடியாத சம்பவம் என்ன?
அது 1989-ம் ஆண்டு. எனது கன்னிச் சொற்பொழிவை நிகழ்த்த, நாடாளுமன்றத்தின் நூலகத்திற்குச் சென்று, குறிப்புகளைச் சேகரித்துக்கொண்டிருந்தேன். உருப்படியான ஒரு உரையாக இருக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் கவனமாக அதைத் தயாரித்துக்கொண்டிருந்தேன். அப்போது, பக்கத்தில் நின்றுகொண்டு அதனைக் கவனித்துக்கொண்டிருந்தார் லால் கிருஷ்ண அத்வானி. பின்னர் மக்களவையில் அந்த உரையைக் கேட்ட அவர், சொற்பொழிவு பிரமாதம் என்று கூறிப் பாராட்டியது மறக்க முடியாத ஒரு தருணம்.
இன்றைய சமூக வாழ்க்கை பற்றி உங்கள் கருத்து என்ன?
சமூகரீதியிலான உறவுமுறைகள் தற்போது இருந்த இடமே தெரியாத அளவுக்குச் சீர்கெட்டுவிட்டன. அந்தக் காலத்தில் செழிப்புடன் வளர்ச்சி கண்ட கூட்டுக் குடும்பம் எனும் பொன்னான கருத்தும், குடும்ப நல்லுறவும் சிறப்பான ஒற்றுமை உணர்வும் பெருமளவுக்கு சிதைந்து சீர்கெட்டுவிட்டன. சமுதாயத்தில் கூட்டுக் குடும்பம் என்ற கருத்தே இல்லாமல் போய்விட்டது. இப்போது அனைவரும் தனித்தனியே பிரிந்துபோய்விட்டபடியால், ஒற்றுமை என்ற சொல்லுக்கே விளக்கம் காண வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.
கடவுள் பக்தி உண்டா?
இந்த உலகில் நம் அனைவரையும் மீறிய ஒரு அதீத சக்திதான் கடவுள். அந்தக் கடவுளிடம் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. 

நன்றி - த ஹிந்து
...மேலும்

Aug 20, 2014

பெண்கள் மீதான தாக்குதல்களில் இளம் வயதினர் ஈடுபடுவது 132% அதிகரிப்பு!


புதுடெல்லி: பெண்கள் மீதான தாக்குதல் வழக்குகளில் இளம் வயதினர் ஈடுபடுவது  132 சதவீதம் அதிகரித்து உள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"2013ஆம் ஆண்டு பெண்கள் மீதான தாக்குதலில் இளம் வயதினர் ஈடுபடுவது  அதிக அளவு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட இது 132.3 சதவீதம் அதிகரித்து உள்ளது.

பெண்களுக்கு ஈவ் டீசிங் மூலம் அவமானம் விளைவிக்கப்பட்ட வழக்குகளில் இளம் வயதினர் ஈடுபடுவது 70.5 சதவீதம் அதிகரித்துள்ளது. பெண்கள்  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்குகளில் இளம் வயதினர் ஈடுபடுவது  60.3 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்திய தண்டனை சட்டப்படி மொத்தம்  கைதான குற்றவாளிகளில் 66.3 சதவீதம் பேர் 16 முதல் 18 வயது வரை உள்ள இளம் குற்றவாளிகள். 2012ஆம் ஆண்டு 27,936 குற்ற வழக்குகள் இளம்  வயதினர் மீது பதிவாகி உள்ளது. 2013ஆம் ஆண்டு 31,725  குற்ற  வழக்குகள் இளம் வயதினர் மீது பதிவாகி உள்ளது. இது 13.6 சதவீதம் அதிகரிப்பாகும்.

கடந்த வருடம் திருட்டு வழக்குகளில் அதிகபட்சமாக 7,969 இளம் குற்றவாளிகள் கைதாகி இருந்தனர். காயப்படுத்துதல் வழக்குகளில் 6,043 பேரும், வழிப்பறி வழக்குகளில் 3,784 பேரும் கைது செய்யப்பட்டனர். இது மொத்த இந்திய தண்டனை சட்ட குற்றங்களில் 40.9 சதவீதம் ஆகும்.  

பல்வேறு குற்ற வழக்குகளில் மொத்தம் 49,506 இளம் குற்றவாளிகள்  ஈடுபட்டுள்ளனர். இதில் 8,392 பேர் படிக்காதவர்கள். 13,984 பேர் தொடக்க கல்வி கற்றவர்கள். இந்த இரு வகையை சேர்ந்தவர்களும் 2013ல் மொத்தம் கைதாகியுள்ள இளம் வயதினரில் 50.2 சதவீதம் உள்ளனர். இதில் ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் வருமானம் மட்டுமே வரக்கூடிய ஏழை குடும்பத்தை சேர்ந்த இளம் வயதினரும் அடங்குவர்.

இதில் பெற்றோருடன் உள்ள இளம் வயதினர் 35,244. இது மொத்த இளம் குற்றவாளிகளில் 81 சதவீதமாகும். இவர்கள் 2013ல் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனாகா காந்தி கூறுகையில், "வயது வந்த குற்றவாளிகளுக்கு இணையாக இளம் குற்றவாளிகள் பாலியல் பலாத்காரம் போன்ற கொடிய செயல்களில் ஈடுபடுகிறார்கள். 50 சதவீத பாலியல் குற்றங்களில் 16 வயதுடையவர்கள் ஈடுபடுகிறார்கள். இதனால் சிறுவர்கள் சீர்திருந்த சட்டங்களால் என்ன செய்ய முடியும். திட்டமிட்டு கொலை, பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் இளம் குற்றவாளிகளையும் வயது வந்தோர் பட்டியலில் சேர்த்தால் அது அவர்களை பயமுறுத்தும்" என்று கூறியுள்ளார்.
...மேலும்

Aug 19, 2014

போராளி இரோம் ஷர்மிளா விடுதலை

மணிப்பூரில் 13 ஆண்டுகால உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் இரோம் ஷர்மிளாவை விடுதலை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, மணிப்பூரில் 2000ம் ஆண்டு ஆயுதப் படைகளுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தினால் பொதுமக்கள் 10 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, இரோம் ஷர்மிளா இந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்று 13 ஆண்டுகாலமாக தொடர்ந்து உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்தி வருகிறார். இதனால் அவரை பொலிசார் கைது செய்வதும் பின்னர் அவருக்கு வலுக்கட்டாயமாக உணவு அளிப்பதும் நடந்த வேளையில், அவர் மீது தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்ததால் அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்து அதனையே சிறைச்சாலையாகவு மாற்றி பல ஆண்டுகளாக அவருக்கு மூக்கு வழியே உணவு செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று மணிப்பூர் அமர்வு நீதிமன்றத்தில் இரோம் ஷர்மிளா மீதான வழக்கு விசாரணை நடைபெற்றுள்ளது. மேலும், இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, இரோம் ஷர்மிளா மீதான மாநில அரசின் தற்கொலை முயற்சி வழக்கை ரத்து செய்ததுடன் அவரை உடனே விடுதலை செய்யவும் உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளது
...மேலும்

Aug 18, 2014

ஆமிக்கு போன தமிழ்பெண் திடீர் மரணம்? அம்பலமானது உண்மை…
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த 14 ஆம் திகதி உயிரிழந்த தமிழ் இராணுவ பெண் புற்று நோய் காரணமாகவே உயிரிழந்தார். அவருடைய இறப்புக்கு வேறு எந்தக் காரணங்களும் இல்லை. இவ்வாறு தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி திருமதி பவானி பசுபதிராசா. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று சனிக்கிழமை பிற்பகல் ஊடக சந்திப்பு ஒன்று வைத்தியசாலைப் பணிப்பாளரால் நடத்தப்பட்டது.

இந்த மாநாட்டில் இராணுவத்தரப்பினரும் கலந்துகொண்டிருந்தனர். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட செல்வாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பிரசாத் அஜந்தா (வயது – 23) என்பவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த மாதம் 28 ஆம் திகதி சேர்க்கப்பட்டார்.

சத்தி, வயிறு வீக்கம் போன்ற நோய்களுடன் பலாலி படைத்தளத்தில் உள்ள வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக அவர் இங்கு அனுப்பிவைக்கப்பட்டார். இவரை பரிசோனை செய்த வைத்தியர்கள், இவருக்கு புற்று நோய் உண்டென்பதை அறிந்து வைத்தியசாலை புற்று நோய் விடுதியில் சேர்த்துச் சிகிச்சை வழங்கினர். குறித்த பெண் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே புற்று நோய்க்கான சிகிச்சையைப் பெற்று வந்துள்ளார் என்பதையும் அறியக் கூடியதாக இருந்தது.

இந்த நிலையில் இவருக்கு சூலகத்தில் ஏற்பட்ட புற்று நோயானது அதிகரித்து குடலில் தடைகளை ஏற்படுத்தியமையால் மரணம் ஏற்பட்டுள்ளது. இவருடைய உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இருக்கவில்லை. காரணம் ஏற்கனவே இவருடைய மரணம் புற்று நோயால் ஏற்பட்டதென குறிப்பிட்ட வைத்தியர் சிபாரிசு செய்துவிட்டார்  என்றார்.
...மேலும்

Aug 17, 2014

இஸ்ரேலியக் குடியுரிமை கொண்ட பாலஸ்தீனியப் பெண் - செல்லப்பா

பாலஸ்தீனிய பத்திரிகையாளர் ரூலா ஜேப்ரியல் (Rula Jebreal) தனது அனுபவங்களின் பதிவாக எழுதிய முதல் நாவல் மிரால். இது 2003-ல் வெளியானது. 15 வெவ்வேறு மொழிகளில் மொழிமாற்றமாகியுள்ள இந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு, பிரபல இயக்குநர் ஜுலியன் ஷ்னபெல் இயக்கிய படம் மிரால். மிரால் என்னும் பாலஸ்தீனியப் பெண்ணின் பார்வையில் விரியும் கதையில் பாலஸ்தீனியர்களின் பார்வையில் அவர்களது பிரச்சினை அலசப்படுகிறது.
ஆனால் இப்படத்தில் அரசியலைவிடச் சமூகம் சார்ந்த அன்பு, பாசம் போன்ற பல விஷயங்களுடன் கல்வியின் முக்கியத்துவமும் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன. பாலஸ்தீனம் என்னும் தனிநாட்டின் மீது வாஞ்சை கொண்ட இஸ்லாமியருக்கும் அதை அனுமதிக்க மறுக்கும் யூதர்கள் தலைமையிலான இஸ்ரேலிய அரசுக்கும் இடையில் நிகழும் முரண்பாடுகளின் முகங்களை நேர்மையுடன் சொல்ல முயன்றிருக்கிறார் யூதரான இயக்குநர் ஜுலியன் ஷ்னபெல். பிரான்ஸ், இஸ்ரேல், இத்தாலி, இந்தியா ஆகிய நான்கு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இணைந்து இதைத் தயாரித்திருக்கின்றன.
ஹிண்ட் ஹுஸைனி, நாட்யா, மிரால் ஷகீன் ஆகிய மூன்று பெண்களின் கதைகளின் வழியே சொந்த நிலத்திற்கு ஏங்கும் சாதாரண மக்களின் ஆசை, ஏக்கம், துன்பம் ஆகிய உணர்வுகள் மேலிடும் காட்சிகளை உள்ளடக்கியுள்ளது இப்படம். படம் 1947-ன் கிறிஸ்துமஸ் நாளன்று தொடங்குகிறது. இஸ்லாமியப் பெண்ணான ஹிண்ட் ஹுஸைனி வீட்டில் இரு மதத்தினரும் இணைந்து அந்நாளைக் கொண்டாடுகிறார்கள். சில மாதங்களுக்குள் ஜெருசலத்தின் அருகே உள்ள டெய்ர் யாசின் என்னும் கிராமத்தில் யூதப் படைகள் நிகழ்த்திய இனப் படுகொலைகளால் 50க்கும் மேற்பட்ட சிறுவர்கள் வீடிழந்து, பெற்றோரை இழந்து, நடுரோட்டில் கைகொடுக்க ஆளின்றி அவலத்துடன் நிற்கின்றனர். சிதிலடமடைந்த அவர்களது வாழ்வைச் செப்பனிடும் பணியை ஹுஸைனி ஏற்றுக்கொள்கிறார்.
இந்தச் சிறுவர்களுக்காகப் பள்ளி ஒன்றைத் தொடங்குகிறார் அவர். அரசியலில் இருந்து கல்வியும் பள்ளியும் விலகியிருக்க வேண்டும் என்ற எண்ணத்தால் எந்த அரசு நிறுவனத்தின் உதவியும் இன்றிப் பள்ளியை நடத்த விரும்பி அதைச் செயல்படுத்துகிறார். திருமணம்கூட செய்து கொள்ளாமல் அந்தப் பள்ளிக்காக வாழ்ந்து 1994-ல் ஹிண்ட் ஹுஸைனி மறைகிறார்.
அடுத்து மிராலின் அம்மா, நாட்யாவின் கதை. பருவ வயதில் பாலியல் சுரண்டலை எதிர்கொள்ள நேரிடுவதால் ஆதரவு கிடைத்த வீட்டிலிருந்து வெளியேறுகிறார். பேருந்து ஒன்றில் தகாத முறையில் நடந்துகொண்ட இளைஞனுக்கு எதிராகக் கோபத்தை வெளிப்படுத்தும் முயற்சியில் அவரது மனைவியின் மூக்கை உடைக்கிறார். இந்தக் குற்றத்திற்காகச் சிறையில் தள்ளப்படுகிறார்.
அங்கு நாட்யாவுக்குச் ஃபாத்திமா என்னும் நர்ஸின் நட்பு கிடைக்கிறது. ஃபாத்திமா பாலஸ்தீனுக்காகப் புரட்சி நடத்துபவர்களுடன் தொடர்புகொண்டிருந்தவர். எதிரிகளைக் கொல்வதற்காக வெடிகுண்டு வைக்கிறார். அது வெடிக்கவில்லை. ஆனால் இஸ்ரேல் சட்டம் அவருக்குத் தீவிரவாத முத்திரை குத்தி, ஆயுள் தண்டனையளித்துச் சிறைக்கு அனுப்பிவிட்டது. சிறையிலிருந்து வெளிவந்த நாட்யாவை மணந்து அவருக்கு ஆதரவு தருகிறார் ஃபாத்திமாவின் சகோதரர் ஜமால். குடிக்கு அடிமையான நாட்யா ஆழ்ந்த கழிவிரக்கம் காரணமாகத் தற்கொலை செய்துகொள்கிறார். எனவே ஜமால், மிராலின் தந்தையாக மாறி, அவளை அன்புடனும் அரவணைப்புடனும் கவனித்துக்கொள்கிறார். மிராலை ஹுஸைனியின் பள்ளிக்கு அனுப்பிப் படிக்கவைக்கிறார் ஜமால்.
மிரால் பாலஸ்தீன் பற்றியும், இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு பற்றியும் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்துகொள்கிறார். 1967-ல் நடைபெற்ற ஆறு நாள் போரின் காரணமாக உருவான அகதிகள் முகாமுக்குக் கல்வி கற்பிக்க மிராலை ஹுஸைனி அனுப்பிவைக்கிறார். அப்போது நேரிடையாக இஸ்ரேல் ராணுவத்தின் அட்டூழியத்தைப் பார்க்கிறார் மிரால். அவளுக்கு ஹனி என்னும் புரட்சியாளன் அறிமுகமாகிறான். பாலஸ்தீன விடுதலைக்குப் போராட முடிவெடுக்கிறாள். ஆனால் ராணுவத்திடம் அகப்பட்டுக்கொள்கிறாள். அவளிடம் இருக்கும் இஸ்ரேலியக் குடியுரிமையால் நீதிமன்றம் அவளை விடுவிக்கிறது. பின்னர் தனது அத்தை வீட்டில் தங்க நேர்கிறது. அவரது அத்தை மகன் சமீம் லிசா என்னும் யூதப் பெண்ணைக் காதலிக்கிறான். யூதர்கள் அனைவரும் கெட்டவர்கள் எனும் மிராலின் எண்ணத்தில் மாற்றம் ஏற்படுகிறது. இரு வாரங்கள் கழித்து வீட்டிற்குத் திரும்புகிறாள். சூழல் மாறுகிறது ஹனி துரோகி எனச் சித்திரிக்கப்பட்டுக் கொல்லப்படுகிறான். மிரால் மேற்படிப்புக்கு இத்தாலி செல்கிறாள்.
தந்தையுடன் சண்டை போடும் போதும், ஹுஸைனியுடன் பாலஸ்தீன் குறித்து உரையாடும் போதும் தேவைப்படும் உணர்ச்சிகளைத் திறமையாக வெளிப்படுத்தியுள்ளார் மிரால் வேடமேற்றிருக்கும் இந்திய நடிகை பிரீடா பின்டோ. அவருடைய தந்தையாக நடித்துள்ள அலெஸாண்டர் சித்திக் தனது தங்கை போல மனைவி நாட்யா போல மிராலும் சிதைந்துவிடக் கூடாதே என்னும் பதற்றத்தை நுட்பமாக நடிப்பில் கொண்டுவந்துள்ளார். தனக்குப் பிறந்த மகள் அல்ல மிரால் என்றபோதும் பொறுப்பான தந்தைக்குரிய கடமைகளில் இருந்து அவர் தவறவேயில்லை. பாலஸ்தீனர்களின் துயரங்களை உணரச் செய்வதில் இசை பிரதான பங்கு வகிக்கிறது. ஒளிப்பதிவு, வசனங்கள் ஆகியவற்றின் பங்கும் குறிப்பிட்டுச் சொல்லும்படி உள்ளது.
1993-ல் இஸ்ரேலியர் பாலஸ்தீனர் இடையில் ஏற்பட்ட ஓஸ்லா அமைதி ஒப்பந்தத்துடன் படம் முடிவடைகிறது. தனிநாடு என்னும் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள் மிராலும் ஹுஸைனியும். ஆனால் அந்த ஒப்பந்தத்திற்கு இன்றுவரை இஸ்ரேல் மதிப்பளிக்கவில்லை என்று கார்டு போடப்படுகிறது. படத்தில் முடிவு இல்லை. பாலஸ்தீனப் பிரச்சினைக்கும் இன்றுவரை முடிவு இல்லை

நன்றி - த ஹிந்து
...மேலும்

Aug 16, 2014

இணைய சீண்டலுக்கு தீர்வு சொல்லும் 14 வயது மாணவி!


இணையத்தின் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் இணைய சீண்டலுக்கு (சைபர்புல்லிங்) எளிதான தீர்வை முன் வைத்து வியக்க வைத்துள்ளார் 14 வயதான இந்திய வம்சாவளியைச்சேர்ந்த அமெரிக்க மாணவி திரிஷா பிரபு. கூகுள் நிறுவனம் சார்பில் நடத்தப்படும் அறிவியல் போட்டியில் இந்த தீர்வை முன் வைத்து அவர் இறுதிச்சுற்றுக்கு தேர்வாகியிருக்கிறார்.
இணையத்தை அறிந்தவர்களுக்கு அதன் இன்னொரு முகமான சைபர்புல்லிங் பற்றியும் நன்றாகவே தெரிந்திருக்கும். கருத்துக்கள், பின்னூட்டங்கள் மூலமாக இணையம் வழியே ஒருவரை சீண்டி விட்டு தொல்லைக்கு ஆளாக்கும் வழக்கமே இவ்வாறு குறிப்பிடப்படுகிறது.

பல நேரங்களில் இந்த இணைய சீண்டல், விளையாட்டு நோக்கில் இருந்தாலும் சில நேரங்களில் விபரீதமாகி விடுவதும் உண்டு. வெறுப்பை கக்கும் கருத்துக்கள் பல , துவேஷத்தை வெளிப்படுத்தும் தாக்குதல் என இணைய சீண்டலில் பல வகை உண்டு. இணைய சீண்டலால் சித்திரவதைக்கும் ,மன உளைச்சலுக்கும்  ஆளான அப்பாவிகள் இருக்கின்றனர். இணையச்சீண்டலால் உயிரை மாய்த்துக்கொண்ட பரிதாபத்துக்குரியவர்களும் இருக்கின்றனர். இணைய சீண்டலை நினைத்து நடுங்கும் இளம் உள்ளங்களும் உண்டு. தவிக்கும் பெற்றோர்களும் உண்டு. சிறியவர்,பெரியவர் மற்றும் வல்லுனர் என எல்லோரும் அறிந்ததுதான் இந்த பிரச்னை என்றாலும் இதற்கான தீர்வு என்ன என்றுதான் தெளிவாக யாருக்கும் தெரியாமல் இருக்கிறது.

பிஞ்சு உள்ளங்களை அதிகம் பாதிக்கும் இந்த பிரச்சனைக்கு அழகான தீர்வை ஆய்வு செய்து அளித்திருக்கிறார், அமெரிக்காவின் சிக்காகோ நகரில் உள்ள பள்ளி ஒன்றில் பயிலும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 13 வயது மாணவியான த்ரிஷா பிரபு. கூகுள் நடத்தும் அறிவியல் போட்டியில் பங்கேற்றவர் , சைபர்புல்லிங்கிற்கான தீர்வு முறையை முன்வைத்து இறுதி சுற்றுக்கு தேர்வாகி இருக்கிறார்.

த்ரிஷா முன்வைத்துள்ள தீர்வுக்கு பெயர் ரீதிங்க், அதாவது மறு யோசனை. த்ரிஷா சொல்லும் இந்த தீர்வு மிகவும் எளிதானது. ஆவேச மற்றும் துவேஷ கருத்துக்களை இணையத்தில் வெளியிடும் இளசுகளுக்கு , அந்த கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் முன் அவை பிறரது மனதை புண்படுத்தக்கூடியது என எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதுதான் அவர் சொல்லும் யோசனை. இவ்வாறு எச்சரிக்கை செய்து விட்டு, இனியும் வெளியிட விருப்பமா ? என கேட்டால் பெரும்பாலானோர்  அத்தகைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பார்கள் என்று இந்த மாணவி சொல்கிறார். எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும் என்று சொல்வார்களே அதே போல, இணையத்தில் உலாவும் போது மனதில் தோன்றியதை ஆவேசமாக பகிர்ந்து கொள்ளும் பழக்கம் உள்ளவர்களுக்கு , அத்தகைய கருத்துக்களை சாஃப்ட்வேர் மூலம் இனம் கண்டு மறுமுறை யோசிக்க வைத்தால் போதுமானது என்கிறார் த்ரிஷா.
பெரும்பாலான இளசுகள் அதிகம் யோசிக்காமல் ,குறிப்பாக பின்விளைவுகள் மற்றும் பாதிப்புகள் பற்றி யோசிக்காமல் எடுத்த எடுப்பில் கருத்துக்களை வெளியிட்டு விடுவதால்தான் சில நேரங்களில் விபரீதம் ஏற்படுகிறது என கூறும் த்ரிஷா , இவர்களை சிந்திக்க வைப்பதே ரீதிங்க்கின் குறிக்கோள் என்கிறார்.

இதற்கு நல்ல பலன் இருக்கும் என்று அவர், தான் சமர்பித்த திட்டத்தில் கூறியுள்ளார். ஆனால் திரிஷா இதை சும்மா கூறிவிடவில்லை. இதற்காக தீவிரமாக ஆய்வு செய்திருக்கிறார். சைபர்புல்லிங்கிற்கான தீர்வை நாடுவது என தீர்மானித்ததுமே, இதற்கான ஆய்வில் ஈடுபட்டார். பேஸ்லைன் மற்றும் ரீதிங்க் என இரண்டு முறைகளை உருவாக்கி , அதில் 500 க்கும் மேற்பட்டோரை பங்கேற்க கேட்டுக்கொண்டார். பேஸ்லைன் முறையில் துவேஷ கருத்துக்களை வெளியிடும் போது , அதை வெளியிட வேண்டும் என்று மட்டும் கேட்கும். ரீதிங்க் முறையில் ஆவேச கருத்துக்களை வெளியிடும் முன், இந்த கருத்துக்கள் விபரீதமானவை, பின் விளைவுகளை உண்டாக்கும் , இதை வெளியிட விருப்பமா? என்பது போல எச்சரிக்கை செய்யப்பட்டது. முதல் முறையில் 67 சதவீதம் பேர் தங்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். ஆனால் இரண்டாவது முறையில் 93 சதவீதம் பேர் , எச்சரிக்கைக்கு பிறகு தங்கள் மனதை மாற்றிக்கொண்டுள்ளனர். இதன் அடிப்படையிலேயே த்ரிஷா ரீதிங்க் சாஃப்ட்வேரை கூகுள் அறிவியல் போட்டிக்கு சமர்பித்துள்ளார். இது இறுதி சுற்றுக்கு உரியதாக தேர்வாகியுள்ளது.

இந்த முறைய மேம்படுத்த பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும், இணையத்திலும் பயன்படுத்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார். இதன் மூலம் இணைய சீண்டலுக்கு தீர்வு காணலாம் என்றும் நம்புகிறார்.

இந்த திட்டம் பற்றி அவர் கூகுள் அறிவியல் போட்டிக்கான இணையதளத்தில் விரிவாக குறிப்பிட்டுள்ளார். த்ரிஷாவின் இந்த கண்டுபிடிப்பு முதல் பரிசை வெல்கிறதா என அடுத்த மாதம் தெரியவரும். ஆனால் ,இணைய சீண்டல் இல்லாத இணையம் காண வேண்டும் எனும் அவரது நம்பிக்கை பாராட்டுக்குறியது.

த்ரிஷா பிரபு , சிக்காகோவில் நெபர்வில்லேவில் உள்ள பள்ளியில் 8வது கிரேடு படிக்கிறார். அவரைப்பற்றிய இணைய தேடலில் ஈடுபட்ட போது அவர் 9 வயதிலேயே புத்தகம் எழுதி அசத்தியிருக்கும் விஷயமும் தெரிய வந்தது.
...மேலும்

Aug 15, 2014

முதல் குடிமகள்: சாதித்ததும் சர்ச்சைகளும் - சரோஜ் நாராயணசுவாமி

பிரணாப் முகர்ஜிக்கு முன் இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்த பிரதிபா தேவிசிங் பாட்டீல், அந்தப் பதவியை வகித்த முதல் பெண். முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்திக்கும் ராஜீவ் காந்திக்கும் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர். மகாராஷ்டிராவிலுள்ள ஜல்காம் மாவட்டத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்த அவர், தேசிய, மாநில அரசியலில் 40 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்று அமைச்சராகவும் ஆளுநராகவும் பல ஆண்டுக் காலம் பணியாற்றியுள்ளார். தற்போது, 80 வயதாகும் பிரதிபா பாட்டீல் தன் அரசியல் வாழ்க்கையில் கல்வி, சுற்றுலாத் துறை, சமூகநலத் துறை, வீட்டுவசதி- இப்படிப் பல அமைச்சகங்களைச் சிறப்பாகக் கையாண்டவர். ராஜஸ்தான் மாநிலத்தின் 24-வது ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார்.
 
அரசியல் அனுபவம்
எம்.ஏ. பட்டம் பெற்ற பிரதிபா பாட்டீல், மும்பை அரசு சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி. பட்டமும் பெற்றிருக்கிறார். தன் 27-வது வயதில் அரசியலில் பிரவேசித்தார். மூத்த காங்கிரஸ் தலைவரும், மகாராஷ்டிர முன்னாள் முதல்வருமான யஷ்வந்த்ராவ் சவானின் வழிகாட்டல் மூலம் பெற்ற அரசியல் விவேகமும் அறிவாற்றலும் புத்திசாலித்தனமும்தான் அவரைக் குடியரசுத் தலைவர் பதவிக்கு இட்டுச்சென்றதாக நம்பப்படுகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதிபா பாட்டீலுக்குக் கிடைத்த மகத்தான வெற்றி, ஆண்-பெண் சமத்துவம் நோக்கிய நடவடிக்கைகளில் முக்கியமானது என்று கருதப்பட்டது. இந்த வெற்றி வெறுமனே அடையாளச் செயல்பாடு மட்டுமே என்பது மற்றொரு பிரிவினரின் கருத்து. அதேநேரம், இந்திய மக்கள் கடைப்பிடிக்கும் கொள்கைகளுக்குக் கிடைத்துள்ள சிறப்பான வெற்றி இது என்று வர்ணித்தார் பிரதிபா பாட்டீல். ஆனால் ஒரு பெண், இந்த உயரத்தைத் தொட 60 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது என்பதை மறந்துவிட முடியாது.
 
சந்தித்த சர்ச்சைகள்
அவர் குடியரசுத் தலைவராக இருந்த காலகட்டத்தில், அவருக்கு எதிராகப் பல சர்ச்சைகள் தலைதூக்கின. மரண தண்டனை விதிக்கப்பட்ட 35 கைதிகளின் தண்டனைக் காலத்தை ஆயுட்காலத் தண்டனையாக அவர் குறைத்தார். இந்தத் தண்டனைக் கைதிகளில் கொலைக் குற்றவாளிகள், ஆள்கடத்தல் செய்தவர்கள், குழந்தைகளைப் படுகொலை செய்தது மற்றும் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்தது போன்ற கொடும் குற்றங்களை இழைத்த பலரும் இருந்தனர். இருந்தபோதும் உள்துறை அமைச்சகத்தின் கருத்துகளும் அறிவுரையும் ஆராயப்பட்டு, மனுதாரர்களின் மேல்முறையீட்டுக்கு உரிய கவனம் செலுத்தி ஆய்வு செய்த பிறகே, அந்தக் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டதாகக் குடியரசுத் தலைவர் அலுவலகம் கூறியது. மிக அதிக அளவில் அயல் நாட்டுப் பயணங்களுக்குச் செலவுசெய்தார் என்றும், வரலாற்றிலேயே அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்ட குடியரசுத் தலைவர் என்றும் சர்ச்சைகள் எழுந்தன.
 
சேவை அமைப்புகள்
கணவர் டாக்டர் தேவிசிங் ராம்சிங் ஷெகாவத்துடன் இணைந்து, மும்பையிலும் ஜல்காமிலும் பல பள்ளிக்கூடங்களையும், கல்லூரிகளையும் நடத்திவரும் வித்யாபாரதி சிக்ஷன் பிரசாரக் மண்டல் என்ற கல்விக் கழகத்தைப் பிரதிபா நிறுவியுள்ளார். புதுடெல்லி, மும்பை, புனே ஆகிய நகரங்களில் பணிக்குச் செல்லும் பெண்களின் வசதிக்காக, ஷ்ரம் சாதனா டிரஸ்ட் சார்பில் தங்கும் விடுதிகளையும் பிரதிபா நிறுவியுள்ளார். மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் ஜல்காமில் இன்ஜினீயரிங் கல்லூரி ஒன்றையும், சர்க்கரை ஆலையொன்றையும் அமைக்கக் காரணமாக இருந்திருக்கிறார்.

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகமும், புனேயில் உள்ள பாரதிய வித்யா பீடமும் பிரதிபா பாட்டீலுக்குக் கௌரவ டி.லிட். பட்டம் வழங்கியுள்ளன. திருப்பதி வெங்கடேஸ்வரா வைத்திய அறிவியல் கழகம், லக்னோ பல்கலைக்கழகம், சிலி நாட்டுப் பல்கலைக்கழகம் ஆகியன அவருக்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன. 1967-ம் ஆண்டில் தொடங்கி, 2012-ம் ஆண்டு குடியரசுத் தலைவர் பதவிக் காலத்தை நிறைவு செய்ததுவரை பொதுவாழ்வில் எண்ணற்ற பொறுப்புகளிலும் பதவிகளிலும் திறம்படச் செயலாற்றியவர் பிரதிபா. மகாராஷ்டிர மாநிலத்தின் மண்ணின் மகளான அவருக்குக் கோல்டன் மகாராஷ்டிரா என்ற பட்டம் சூட்டப்பட்டதில் வியப்பேதுமில்லை. 

நன்றி - த ஹிந்து
...மேலும்

Aug 14, 2014

வாசிப்பும், யோசிப்பும் 50: தமிழ்க்கவியின் 'ஊழிக்காலம்'

தமிழ்க்கவியின் 'ஊழிக்காலம்' நேற்றுதான் என் கையில் கிடைத்தது. இந்த நாவலைப் பற்றி வெளிவந்த விமர்சனக் குறிப்புகள் காரணமாக இந்நாவலை வாசிக்க வேண்டுமென்ற ஆவல் அதிகரித்தது. அதற்கு வடிகாலாகப் புத்தகம் இங்குள்ள புத்தகக் கடையொன்றில் நேற்றுத்தான் கிடைத்தது. இந்த நூலினை வாசிக்க வேண்டுமென்று நான் நினைத்ததற்கு முக்கிய காரணங்களாகப் பின்வருவனற்றைக் குறிப்பிடலாம்:

1. தமிழ் மக்கள் எதிர்நோக்கிய, முள்ளிவாய்க்காலில் முடிந்த யுத்தக் காலகட்டத்தில் , எவ்விதமான சிரமங்களை அவர்கள் எதிர்நோக்கினார்கள். வெளிவரும் காணொளிகள் அழிவுகளைத்தாம் காட்டும். ஆனால் அக்காலகட்டத்தில் அங்கு வாழ்ந்த மக்களின் அன்றாடச் செயற்பாடுகளை, அழிவுகளை அவர்கள் எதிர்நோக்கியது எவ்வாறு போன்றவற்றை அக்காணொளிகள் காட்டுவதில்லை. இதனை அக்காலகட்டத்தில் அங்கு வாழ்ந்த ஒருவரின் நாட்குறிப்புகள் அல்லது பதிவுகள்தாம் புலப்படுத்தும். இதுவுமொரு காரணம் இந்நாவலை வாசிக்க வேண்டுமென்ற என் ஆவலுக்கு.

2. தமிழ்க்கவி விடுதலைப் புலிகள் அமைப்பிலும் இணைந்து இயங்கிய ஒருவர். அதனால் அவரது பதிவுகள் இயக்கம் சார்ந்ததாக இருக்குமா அல்லது நடுநிலையுடன் இருக்குமா என்பது பற்றி அறிய எனக்கிருந்த ஆர்வம் இன்னுமொரு காரணம்.

இதுபோன்ற மேலும் சில காரணங்களைக் குறிப்பிடலாம். ஆனால் மேலுள்ள காரணங்கள்தாம் முக்கியமானவை.

இந்த நாவலைப் பொறுத்தவரையில் ஏனைய முக்கியமான நாவல்களைப் போல் பாத்திரப்படைப்பு, கதைப்பின்னல், உரையாடல், கூறும்பொருள், மொழி என்பவற்றின் அடிப்படையில் அணுக முடியாது. இதன் முக்கியத்துவம் நடந்து முடிந்த பேரழிவினை ஆவணப்படுத்தும் பதிவுகள் என்ற வகையில்தானிருக்கின்றது. யூதச்சிறுமி ஆன் ஃபிராங்கின் புகழ்பெற்ற 'தினக்குறிப்புகள்' எவ்விதம் ஆவணச்சிறப்பு மிக்கவையாக இருக்கின்றனவோ (அத்தினக்குறிப்புகள் அச்சிறுமியின் பதின்ம வயது உள்ளத்துணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் இலக்கியச்சிறப்பும் மிக்கவை) அதுபோல்தான் தமிழ்க்கவியின் 'ஊழிக்காலம்' நாவலும் ஆவணச்சிறப்பு மிக்கதாகவிருக்கின்றது. அதன் காரணமாகவே ஈழத்தமிழர் இலக்கியத்தில் முக்கியமானதொரு படைப்பாகத் தன்னை நிலைநிறுத்துக்கொள்கின்றது.

இந்த நாவலில் யுத்தக்காலகட்டத்தில் மக்களின் இடம்பெயர்வுகளை, கூவிவரும் எறிகணைகளிலிருந்து தப்புவதற்காக அவர்கள் படும் சிரமங்களை, அன்றாட வாழ்வியற் பிரச்சினைகளை, இயக்கத்தவரின் செயற்பாடுகளை, இயக்கத்தைக் காரணமாக வைத்துச் சிலர் அடையும் ஆதாயங்களை .. இவற்றையெல்லாம் தமிழ்க்கவி இயலுமானவரையில் பதிவு செய்திருக்கின்றார். இயக்கத்தின் செயற்பாடுகளைப் பாராட்ட வேண்டிய இடங்களில் பாராட்டியும், கண்டிக்க வேண்டிய இடங்களில் கண்டித்துமுள்ளார். இறுதிக்கட்டம் வரையில் புலிகள் போராடிக்கொண்டிருந்ததை பதிவு செய்யும் 'ஊழிக்காலம்', இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குச் செல்ல முயன்றவர்கள் மீது புலிகள் துப்பாக்கிக்ப் பிரயோகம் செய்ததையும் விபரிக்கின்றது. இதற்குப் படகில் தப்பிச்சென்ற பாலகுமாரின் மனைவியும், மகளும் கூட விதிவிலக்கானவர்களல்லர். பாலகுமாரின் மகளும் இவ்விதமானதொரு சூழலில் , துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயங்களுக்குள்ளாகவதாக 'ஊழிக்காலம்' விபரிக்கின்றது. இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்ததால் , விடுதலைப்புலிகள் பற்றிய இவரது விமர்சனங்கள் பற்றி மாற்றுக்கருத்தினர் நிச்சயம் தத்தமது பார்வையில் விமர்சனங்களை வைக்கத்தான் செய்வார்கள்.

தமிழ்க்கவியின் 'ஊழிக்காலம்' என்னுமிந்த ஆவணப்பதிவில் என்னை மிகவும் பிரமிக்க வைத்தது மக்கள் இருப்பினை எதிர்நோக்கிய இயல்பு. பல்வேறு பட்ட எறிகணைகள் மக்கள் வாழ்ந்த பிரதேசங்களெல்லாம் சீறிப்பாய்கின்றன. பலரைப் பலிகொள்கின்றன. இலங்கை இராணுவத்தின் கைகளில் ஒவ்வொரு புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமும் விழுந்தவுடன் , மக்கள் மீண்டும் , மீண்டும் இடம்பெயர்கின்றார்கள். யுத்தத்தின் இறுதிவரையில் மக்கள் பலியாகிக்கொண்டிருக்கின்றார்கள். அதே சமயம் தமிழீழ வைப்பகம் போன்ற அமைப்புகள் இயங்கிக்கொண்டுதானிருக்கின்றன. மக்கள் வைப்பகங்களில் வைத்திருந்த பணத்தை அவ்வப்போது எடுத்து , உணவுக்காக, பங்கர்கள் கட்ட உதவும் பொருட்களைக் காவி வருவதற்கான கூலி போன்றவற்றுக்காக என்றெல்லாம் செலவழிக்கின்றார்கள். விலை அதிகமாகக்கொடுத்துப் பொருட்களை வாங்குகின்றார்கள். வியாபாரிகளும் அதிக விலைக்கு விற்கின்றார்கள். சங்கக்கடை போன்ற அமைப்புகள் யுத்தநிலைக்கேற்ப சந்திக்குச் சந்தி இடம்மாறி தம் சேவைகளை வழங்கிக்கொண்டுதானிருக்கின்றன. குழந்தைகள் பங்கர்களுக்குள் சதுரங்கம், தாயத்து போன்ற விளையாட்டுகளை விளையாடிக்கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொருமுறை இடம் மாறும்போதும் , புதிய இடங்களில் பங்கர்கள், மலசலக்கூடங்கள் அமைத்துத் தம் வாழ்வினைத் தொடர்கின்றார்கள். இவ்விதமான அழிவுகளுக்கு மத்தியிலும், மக்கள் ஒழுங்கிழந்து , சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. அழிவுகளை எதிர்நோக்கி, மீண்டும் நம்பிக்கையுடன் யுத்தத்தினை எதிர்கொள்கின்றார்கள்.

இவ்விதமான யுத்தச்சூழலில் மக்களின் அன்றாட இருப்பினை நன்கு பதிவு செய்துள்ளார் தமிழ்க்கவி. அது இந்நூலின் ஆவணச்சிறப்பினை அதிகரிக்கின்றது. பொதுவாக அமைப்பைச் சார்ந்தவர்களின் பதிவுகளில் தனிப்பட்ட மன உணர்வுகளைத்தான் , அதுவும் ஒருபக்கச்சார்பாகப் பதிவு செய்திருப்பார்கள். ஆனால் தமிழ்க்கவியின் 'ஊழிக்காலம்' இயலுமானவரையில் யுத்தச்சூழலில் வாழ்ந்த மக்களின் அன்றாட வாழ்வினைக் குறை, நிறைகளுடன் பதிவு செய்திருக்கின்றது.

நூலில் தமிழ்க்கவி நூல் நல்ல முறையில் வெளிவருவதற்குக் காரணமாக இளங்கோ (கனடா), 'ஆறா வடு' சயந்தன் ஆகியோர் இருந்ததாக நன்றி நவின்றிருப்பார். அதற்காக அவர்களையும் பாராட்டலாம் இவ்விதமானதொரு நூல் வெளிவரக் காரணமாகவிருந்ததற்காக.
...மேலும்

Aug 13, 2014

உள் ஒலிப் பயணம் - வா. ரவிக்குமார்

இந்திய இசை கருவி என்று நம்பும் அளவுக்கு வயலின் மாறிவிட்டது நமக்குத் தெரிந்ததுதான். அதன் மற்றொரு வகையான செல்லோவை இந்திய வாத்தியமாக மாற்றிவருகிறார் ஒரு கனடா பெண். கனத்த சாரீரத்தோடு இசையை வெளிப்படுத்தும் மேற்கத்திய வாத்தியம் செல்லோ. பேஸ் வயலின் என்று இதைச் சொல்பவர்களும் உண்டு. கனடாவைப் பூர்வீகமாகக் கொண்ட நான்ஸி, மேற்கத்தியப் பாணியில் செல்லோ வாசிக்கும் கலைஞர். ரோமின் புகழ்பெற்ற ஃபெஸ்டிவல் ஆர்கெஸ்ட்ராவில் இருந்தவர். சிகாகோவின் சிவிக் ஆர்கெஸ்ட்ரா, இத்தாலியின் ஃபுளாரன்ஸ் ஆர்கெஸ்ட்ராவிலும் செல்லோ கலைஞராக இருந்தவர்.

1982-ல் நான்ஸியின் இந்தியச் சுற்றுப்பயணம், அவரின் வாழ்க்கையையே திசை திருப்பியது. வாரணாசியில் கேட்ட இந்திய இசை, அதுவரை அனுபவிக்காத பரவசத்தை அவருக்குள் ஏற்படுத்தியது. அதுவரை அவருக்குள் இருந்த இறுக்கம் தளர்வதாக உணர்ந்தார். கண்களில் கண்ணீரோடு, கரையும் மனதோடு இந்திய இசையை மானசீகமாக அவர் வழிபடவே ஆரம்பித்தார். அவர் கேட்டது, இந்தியாவின் பாரம்பரிய துருபத் பாணி இசை.
 
செல்லோ மாற்றம்
புகழ்பெற்ற துருபத் வாய்ப்பாட்டுக் கலைஞரான பண்டிட் ரித்விக் சன்யாலிடம் இசைப் பயிற்சி பெறத் தொடங்கினார். தொடர்ந்து, புகழ்பெற்ற வீணை, வாய்ப்பாட்டு சகோதரர்களான உஸ்தாத் ஸியா மொகிதீன் தாகர், உஸ்தாத் ஸியா ஃபரூதீன் தாகர் ஆகியோரிடம் செல்லோ வாத்தியத்தில் துருபத் இசையை வாசிக்கும் பயிற்சியை எடுத்துக்கொண்டார். பொதுவாகச் செல்லோவை நாற்காலியில் அமர்ந்துதான் வாசிப்பதுதான் வழக்கம். வீணையில் இருப்பதைப் போன்ற இரண்டு தந்திகளைச் செல்லோவில் கூடுதலாக இணைத்து, இந்திய முறைப்படி தரையில் அமர்ந்தே வாசிக்கும்வண்ணம் வாத்தியத்தில் மாற்றத்தைக் கொண்டுவந்தார். அன்றிலிருந்து ஏறக்குறைய 30 ஆண்டுகளாக அவரின் செல்லோ ஒலிப்பது இந்தியத் துருபத் இசையைத்தான்.
 
உடலில் பாயும் இசை
மேற்கத்திய இசையையே மறந்துவிட்டீர்களா என்று கேட்பவர்களுக்கு இவரின் பதில்: “பாஹ் போன்ற மேற்கத்திய மேதைகளின் இசையை இப்போதும் கேட்கிறேன். ஆனால், என்னால் துருபத் இசையைத் தவிர வேறு எதையும் வாசிக்க முடியாது. என் நாடி நரம்பு முழுவதும் உள் ஒலிப் பயணம் செய்வது துருபத் இசைதான்”. இந்தியாவின் புகழ்பெற்ற மேடைகளில் செல்லோ மூலம் இந்திய துருபத் இசையை வாசிக்கும் ஒரே கலைஞர் என்னும் புகழோடு விளங்கும் நான்ஸி, மூன்று இசை ஆல்பங்களை வெளிட்டிருக்கிறார். மணி கவுல், உமேஷ் ஆகியோரின் இரண்டு திரைப்படங்களில் இசைப் பங்களிப்பையும் அளித்திருக்கிறார். 

இந்திய நிகழ்த்து கலைகளைக் கற்றுக் கொள்வதற்காக அமெரிக்கக் கல்வி நிறுவனம் வழங்கும் நிதியுதவியை இரண்டு முறை பெற்றிருக்கும் கலைஞர் இவர். இந்தியரை மணந்துகொண்டு நான்ஸி குல்கர்னி ஆகியிருக்கும் இவர், மகாராஷ்டிர மாநிலம் புனேயில் வசிக்கிறார். செல்லோவில் துருபத் இசையை வாசிப்பதற்கு மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்தும்வருகிறார். உலகம் முழுவதும் பயணித்து இந்தியாவின் துருபத் இசையைச் செல்லோவின் மூலம் பரப்பிவருகிறார் நான்ஸி குல்கர்னி. 

நன்றி - த ஹிந்து
...மேலும்

Aug 12, 2014

ஆகஸ்ட் 13: நோயாளிகளின் சேவைக்கே தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் நினைவு தின சிறப்பு பகிர்வு


இங்கிலாந்தின் உயர்குடியை சேர்ந்த வில்லியம் எட்வர்ட் நைட்டிங்கேல் - பிரான்சஸ் ஸ்மித் தம்பதி இத்தாலி நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பொழுது அவர்களுக்கு ஒரு அழகிய பெண் குழந்தை ப்ளோரன்ஸ் நகரில் பிறக்கவே அந்த பெண் குழந்தைக்கு அப்பெயரையே சூட்டினார்கள். பருவ வயது வந்ததும் அவருக்கு திருமணம் செய்து வைக்க முயன்றார்கள்.

"என்னிடம் மனம் முழுக்க அன்பு செலுத்து என்கிற குரல் தான் கேட்கிறது ! அதற்கான விடை கிடைத்த பிறகு இதைப்பற்றி யோசிக்கலாம் !" என்று உறுதியாக மறுத்துவிட்டு செவிலியர் பணிப்பயிற்சியில் இவர் இணைந்தார். செவிலியர் பணி என்பது அன்றைக்கு ஏழைப்பெண்கள் மட்டுமே மேற்கொள்ளும் இழிவான தொழிலாக
பார்க்கப்பட்டது. இவர் அதைப்பற்றி கவலைப்படாமல் சேவைப்பயிற்சியை முடித்தார். புன்முறுவலோடு நோயாளிகளிடம் ஆறுதல் வார்த்தை பேசினார் ; அவர்களின் காயங்களை துடைத்து மருந்து போட்டார். அவர்களுக்கு ஆறுதல் தந்தார்.

ரஷ்யா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்த கிரிமியன் போரில் வீரர்கள் காயம்பட்டு உதவ ஆளில்லாமல் இருக்கிறார்கள் என்று தெரிந்து முப்பத்தி எட்டு செவிலியரோடு துருக்கி போனார். அங்கே வீரர்களுக்கு உதவிகளை போர்க்களத்தில் அஞ்சாமல் செய்தார். அவர்களின் வீட்டு முகவரியை கேட்டு கடிதம் மற்றும் பணம் அனுப்பினார். இரட்டை இலக்கத்தில் இருந்த மரண சதவிகிதம் இவரால் ஐந்து சதவிகிதத்துக்கும் கீழே போனது. இரவெல்லாம் கூட கையில் விளக்கேந்தி வீரர்களுக்கு சேவை செய்ததால் அவரை கை விளக்கேந்திய காரிகை என்று போற்றினார்கள்.

திருமணமே செய்து கொள்ளாமல் தொடர்ந்து நோயாளிகளின் சேவைக்கே தன் வாழ்க்கையை அவர் அர்ப்பணித்துக்கொண்டார். அவர் எழுதிய நோட்ஸ் ஆன் நர்சிங் நூல் இன்றைக்கும் இத்துறைக்கு வருகிறவர்களுக்கு வேதநூல். பன்னிரெண்டு வருடங்கள் எழுந்து நடமாட முடியாத சூழலில் கூட செவிலியர்களின் செயல்பாடுகள் எப்படி அமையவேண்டும் என்பது போன்ற வெவ்வேறு தலைப்புகளில் இருநூறு புத்தகங்களுக்கு மேலே எழுதியவர் அவர்.

அவரின் சேவைகளை பாராட்டி வழங்கப்பட்ட ஐம்பதாயிரம் டாலரை மிகப்பெரிய நர்ஸ் பயிற்சி நிறுவனம் அமைக்க முழுக்க கொடுத்துவிட்டார் அவர். "காலம் மிகக்குறைவு ! ஆகவே,எல்லாரையும் அன்பு செய்யுங்கள் !" என்கிற தாரகமந்திரத்தை போதித்து அப்படியே தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட அவரை நினைவு கூர்வோம்.

- பூ.கொ.சரவணன்
...மேலும்

Aug 11, 2014

சிறகுகள் இல்லாத பறவை - பா. பானுமதி

பெண் என்பவள் ஆணாதிக்கச் சமூகத்தில் சிக்கித் தவிக்கும், சிறகுகள் இல்லாத பறவை. அந்தப் பறவைக்கு அனைத்து சுதந்திரமும் கொடுத்து விட்டோம். ஆனால், பறவை கூண்டைவிட்டு எங்கும் செல்லக் கூடாது என்ற ஒரே ஒரு கட்டுப்பாட்டை மட்டும் செயல்படுத்த வேண்டும் என்கிறது இந்தச் சமூகம். அப்படியும் சில பறவைகள் கூண்டைவிட்டு வெளியே வந்து வானில் சிறகு விரித்து பறக்கத் தொடங்கிவிட்டன. ஆனால், இன்னும் சில பறவைகளுக்கோ வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன.
 
கட்டுப்பாடு
மனிதனின் அடிப்படை உரிமையான உடையில்கூட பெண்ணுக்குக் கட்டுப்பாடுதான். பெண்களை விலைப் பொருட்களாக மாற்றிவிட்ட ஊடகங்களும், திரைப்படங்களும்தான் இதற்குக் காரணம். பொழுதுபோக்குதானே, இதை ஏன் பெரிதாக எடுத்துக் கொள்கிறீர்கள் என்று பலர் கேட்கலாம். ஆனால் இன்றைய தலைமுறையினர் அதிலிருந்து கற்றுக்கொள்ளக் கூடாததை எல்லாம் நிறைய கற்றுக் கொள்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.
 
படிப்பு
விரும்பியத் துறையைத் தேர்ந்தெடுத்துப் படிக்கவும் பெண்களுக்கு அனுமதியில்லை.பெண்களின் படிப்பு சார்ந்த முடிவுகளை பெரும்பாலான வீடுகளில் ஆண்களே எடுக்கிறார்கள் .அதையும் மீறி வெளியே வந்தாலும் சமூகம் அதற்கு இடம் தருவதில்லை. பெண்களுக்கென்றே சில படிப்புகளை ஒதுக்கி விடுகிறார்கள் பெரும்பாலான பெற்றோர்கள். பாதுகாப்பு என்ற போர்வையிலேயே பெண்கள் வளர்க்கப்படுகிறார்கள். உண்மையில் பெண்களுக்கு அந்தப் பாதுகாப்பு கிடைக்கிறதா? நீங்கள், நான் என்று ஒவ்வொருவருமே ஏதோ ஒரு வகையில் பெண்களுக்கான கொடுமைகளைச் செய்துகொண்டேதான் இருக்கிறோம். இங்கே யாரையும் தனித்துக் குறை கூறுவதிற்கில்லை.
 
தற்காப்பு
எத்தனை வீடுகளில் பெண் குழந்தைகளுக்குத் தற்காப்புக் கலைகளைக் கற்றுத் தருகிறோம்? இதெல்லாம் பெண் பிள்ளைகளுக்கு எதற்கு என்று விட்டுவிடுகிறோம். விளைவு, அநீதி நடக்கும் நேரங்களில் வேறொருவரின் துணையை நாட வேண்டியுள்ளது. சாதுவாக, அமைதியாக இருப்பதற்குப் பெண்மை என்று பெயரில்லை. பெண்மை என்பது வீரம் நிறைந்தது. ஆனால் அந்தப் பெண்மையை இந்தச் சமூகம் தன் கட்டுப்பாட்டுக்குள்ளே வைத்துக் கொள்கிறது.

மாற்றம் முதலில் பெண்ணிடம் இருந்தே வர வேண்டும். தனக்கு என்ன தேவையோ அதைத் துணிச்சலோடு எடுத்துச் சொல்லும் மன உறுதி பெண்களுக்குத் தேவை. பெண்கள் தங்களுக்குத் தேவையான உரிமைகளுக்காக யாரிடமும் யாசகம் கேட்கத் தேவையில்லை. இந்தச் சமூகம் பெண்ணை கண்ணே, மணியே என்று பாராட்டி, வேலைக்காரியாக மட்டுமே வாழப் பணிக்கிறது. எப்போதும் எதற்காகவும் பெண் ஒரு குறுகிய வட்டத்துக்குள் தன்னை குறுக்கிக் கொள்ளக் கூடாது.

கனவுகள் சுமந்த பெண்ணே, கலங்கி நிற்காதே. விடியும் பொழுது உனக்காகத்தான் ! 

 நன்றி - த ஹிந்து
...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்