/* up Facebook

Jul 2, 2014

ஆண்-பெண் நட்பு: காமம் மற்றும் சமஅந்தஸ்து

வெறும் தோழியான ஒரு girl friend ஐ எப்படி அழைக்க? நான் பங்கேற்ற ஆண்-பெண் சமநிலை பற்றின ஒரு நீயாநானா விவாத படப்பிடிப்பின் போது இந்த சிக்கலை பல பங்கேற்பாளர்கள் ஏதோ புதுசு என்பது போல் திடுக்கிட்டவாறு எதிர்கொண்டனர். கோபிநாத் தொடர்ந்து ஒவ்வொரு முறையும் “அந்த கெர்ல் பிரண்ட் இல்லீங்க என்று சொல்ல நேர்ந்தது. Female friend என்ற சொல் ஏதோ மிக்ஸி கிரைண்டர் போன்ற இரைச்சலை கொண்டுள்ளது. சிநேகிதி, தோழி ஆகிய பதங்களை வானம்பாடிகளில் இருந்து இடதுசாரிகள், பெண் பத்திரிகைகள் வரை அர்த்தம் திரித்து விட்டனர். ஆண்நண்பர்களும் இருக்கும்பட்சத்தில் ஒரு பெண்ணின் தோழி கெர்ல் பிரண்டா வெறும் பிரண்டா? ஆனால் இது ஒரு சொல்லாக்கம் பற்றின பிரச்சனை அல்லவே! ஆண்-பெண் நட்பு அதன் உள்முரண் காரணமாக ஒரு சங்கடமான உறவாகவே இருந்து வருகிறது.

முதலில் இருவரும் செக்ஸை உட்படுத்துவதா, குறைந்த அளவில் பரஸ்பர கவர்ச்சி மற்றும் அடியோடும் கிளர்ச்சிக்காகவேனும், வேண்டாமா வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டும். அடுத்து இருவரும் காமம் மேலிட்டால் உறவை முறிப்பதா அல்லது தொடர்வதா என்றும் தீர்மானிக்க வேண்டும். இவ்விசயத்தில் பெண்கள் தாம் அதிகம் கவனமாக இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. இங்கு ஒரு சுவாரஸ்யமான விசயம். ஒரு நட்பில் காமம் மேலிட்டால் அது காதலாக வேண்டிய அவசியம் இல்லை. அங்கும் இதை வெளிப்படையாக பேசி தங்களது தேவைகள் என்னவென்பதை விவாதித்து காமத்தை நேரடியாக எதிர்கொண்டு தொடர்ந்து நட்பாகவே தொடரும் ஜோடிகள் உள்ளனர். இவர்கள் 66% மேல் என்கின்றது ஒரு ஆய்வு. காமத்தை முழுக்க தவிர்ப்பது ஆண் பெண் நட்பை வலுப்படுத்தும் ஆழமாக்கும் எனும் ஒரு தரப்பும் உள்ளது. எப்படியும் வெளிப்படைத்தன்மை நல்லது என்கிறார்கள் உளவியலாளர்கள். அதற்கு நம்மூரில் “சிஸ்டர் என்றொரு சொல் எளிதாக பலருக்கும் பயன்படுகிறது. அல்லது ஒரு சஞ்சலமான தருணத்தில் தத்தமது பரஸ்பர கணவன் மனைவி பற்றி விசாரிப்பது (பலருக்கும் நண்பனின் மனைவி பால் பெரிய அக்கறை இல்லையென்றாலும்). ஆண்கள்/பெண்கள் குழுவில் ஒரே பெண்/ஆண் மட்டும் இருப்பதும் இறுக்கத்தை தளர்த்த மற்றொரு உத்தி.
 
அடுத்த முக்கிய தடை சம உரிமை. அலுவலக உரையாடல்களின் போது “இந்த ஆம்பளைங்களே/பொம்பளைங்களே இப்படித்தான் என்று மெல்லிய கிண்டலுடன் எதிர்பாலினத்தை தாழ்த்த முயல்வது சகஜம். திருமணமானவர்கள் என்றால் கணவன்/மனைவி ஜோக்ஸ், திருமணம் எனும் படுகுழி வகை புலம்பல், குடும்பம் மீதான புகார்கள் ஆண்-பெண் நண்பர்களுக்கு உறவில் தமது படிநிலை என்னவென்பதை நிறுவ பயன்படுகின்றன. பெண்கள் வெறும் குடும்பப் பெண்களாக இருந்த காலத்தில் இந்த வகை நட்பே அவசியமற்றதாக கருதப்பட்டது. இன்று காஸ்மோபொலிடன் கல்லூரிகளில் இருந்து கார்பரேட்டு உறவுநிலைகள் வரை இவ்வுறவு ஊக்குவிக்கப்படுகிறது, அதற்கான ஒரு கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் ஒரு தராசு சதா ஆண்-பெண் நட்பின் முன் தொங்குகிறது. அநேகமாய் ஆண்கள் தாம் அதிகாரமும் அந்தஸ்தும் மிக்கவராக இவ்வுறவு நிலையில் இருக்கிறார்கள். ஒரு பெண்ணை வழிநடத்தும், பாதுகாக்கும், ஊக்குவிக்கும் பாத்திரத்தை எடுத்துக் கொள்கிறார்கள். ஆண்களும் பெண்களும் சமநிலையாக பழகுவதாய் தெரியும் வகுப்புகள், அலுவலகங்களில் கூட இந்த நுட்பமான படிநிலையை காண்கிறோம். எப்படியும் கிண்டலும் கேலியும் பரஸ்பர அக்கறைக்கு நிகராக தேவைப்படுகிறது.
 
ஆண்-பெண் உறவுக்கு ஒரு இயல்பற்ற தன்மை உள்ளது. இருவேறுபட்ட உணர்வுநிலைகள், சிந்தனை மற்றும் செயல்பாட்டு முறைகள் கொண்ட ஆண்-பெண்கள் தங்கள் பாலினத்துக்குள் பழகும் போது ஒரு இயல்பான பாதுகாப்பை, கூட்டுணர்வை, புரிந்துணர்வை அடைகின்றனர். ஒரு கூட்டத்திலோ அமர்விலோ விளையாட்டு விருந்துகளிலோ அவரவர் குழுவிலாய் ஆண்-பெண்கள் சென்று சேர்ந்து மனம் திறப்பது ஒரு கட்டாயமோ சமூக கூச்சமோ காரணமாக அல்ல, அதன் காரணம் ஒரு இயல்பான சமூகமயமாக்கம். ஆக ஆண்-பெண் நட்புக்கான சந்திப்பு தளங்கள் உயிரியல் மற்றும் சமூக ரீதியாக மிகவும் குறுகிப் போய் விடுகின்றன. சமூக tabooக்கள் போன்ற தடைகளையும் ஆண்-பெண் நட்புகள் கடந்தாக வேண்டும்.
 
திருமணத்துக்கு பிறகு ஆண்-பெண் நட்பு ஆபத்தானதா அதற்கு எல்லைகள் உண்டா ஆகிய கேள்விகளையும் நாம் இன்றைய கலாச்சார வேளையில் விவாதித்தாக வேண்டும். உள்ளார்ந்த ஆபத்துக்களையும் கடந்து திருமணத்துக்கு பின்பான எதிர்-பால் நட்புகள் திருமணத்தை வலுப்படுத்துகின்றன என்கிறார்கள் உளவியல் ஆய்வாளர்கள். கணவன் மனைவிகள் முயற்சியெடுத்து அடுத்தவரின் ஆண்-பெண் நட்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பல சம்பவங்களை தினசரி காண்கிறோம். வேறெப்போதையும் விட ஆண்-பெண் நண்பர்கள் மோசமாய் காயம்படுவது அப்போது தான். உதாரணமாய் ஒரு மனைவி தனது கணவனின் தோழியை வன்மமாக உறவுப்பரப்பில் இருந்து நீக்குவது நீண்ட கால கசப்புக்கு வழிவகுக்குகிறது. அவமதிக்கப்பட்ட ஒரு தோழி “உன்னை புரிந்து கொள்ளாத ஒரு மனைவிக்காக என்னை நிராகரிக்கிறாயே என்று நண்பனை நொந்து கொண்டு பிறகு திருமணமான நண்பர்கள் மீது அநாவசிய ஜாக்கிரதையுடன் பழக நேரலாம். “என் மனைவி ரொம்ப பொஸஸிவ் என்று ஒரு ஆண் சுயசமாதானம் செய்து கொண்டாலும் தாம்பத்ய அவநம்பிக்கை அத்தருணமே ஸ்தாபிக்கப்படுகிறது. அதற்கு மேல் நீங்கள் ரெண்டு பக்கமும் பார்த்துக் கொண்டே புன்னகைப்பீர்கள். பிறகு அதற்கும் சேர்த்து குற்றவுணர்வு கொள்வீர்கள். உண்மையில், ஆண்-பெண் உறவு தனக்கு எந்த அனுகூலமும் தராது என்கிற ஒரு தவறான முன்தீர்மானம் தான் இதற்கு காரணம். ஒரு புத்திசாலியான மனைவி தன்னில் இருந்து வேறுபட்ட ஒரு பெண்ணை கணவனின் தோழியாக அனுமதிக்கவே செய்வாள். ஏன்?
 
அநேகமான தம்பதிகளுக்கு பரஸ்பர ஆர்வங்களும், ஒத்த நிலைப்பாடுகளும் இருப்பதில்லை. காதல் திருமணங்களில் கூட. திருமண உறவுகள் பொருந்துவதற்கு இந்த ஆளுமை வேறுபாடு தேவையும் கூட. அதனால் தம்மை ஒத்த ஒருவருடன் நட்பை அனுமதிப்பதன் மூலம் ஒரு கணவனோ மனைவியோ தமது உறவில் உள்ள குறையை சமனம் செய்ய முடியும். உதாரணமாய் ஒரு பெண் தன் நண்பனிடம் இலக்கிய ஆர்வத்தை பகிர அனுமதிப்பதன் மூலம் வீடுதிரும்பும் கணவன் திராபையான பல உரையாடல்களில் இருந்து தப்பிக்க முடியும். மேலும் பரஸ்பர பொருத்தமின்மை குறித்து குற்றவுணர்வோ வெறுப்போ உற்று அதை வன்மமாக புகாராக வெளிப்படுத்த நேராது.
 
ஆண்-பெண் நட்பு சுமூகமாக இயங்குவதற்கான தேவை நடைமுறையில் உள்ளதை அறிவோம். இதைக் கடந்து மற்றொரு உளவியல் அனுகூலமும் உள்ளது. இருபாலினமும் உளவியல் ரீதியாக மாறுபட்டவர்கள் என்பதால் தம்மவர்களிடம் கிடைக்காத சில விசயங்கள் எதிர்பாலின நட்பில் கிடைக்கின்றன. உதாரணமாக பெண்கள் வாழ்வின் உணர்ச்சிகரமான பிரச்சனைகளை தர்க்கப்படுத்தாமல் தீர்வு கேட்காமல் வெறுமனே வெளிப்படுத்த பகிர விரும்புபவர்கள். ஆண்கள் ஒன்று சேர்ந்தால் சமூக, அரசியல், கலாச்சார தளங்களில் சில பொதுவான அபிப்பிராயங்களை வைத்து உரையாடுவார்கள். தனிப்பட்ட நெருக்கடிகளை வெளிப்படையாய் உரையாடுவதில் ஆண்களுக்கு அதிக உவப்பில்லை, அவர்கள் அதை ரொம்ப பாதுகாப்பாயும் நினைப்பதில்லை. பெண்களின் குற்ற ஒப்புதல்களும், கண்ணீர் மன்றாடல்களும் சரி ஆண்களின் நிதானமான உலக நடப்பு ஆய்வுகளும் சரி அதன் மிகை காரணமாய் சலிப்பேற்படுத்துகின்றன. போலியாக படுகின்றன. இந்த மிகையை ஓரளவு மட்டுப்படுத்த ஆண்-பெண் உரையாடல்கள் உதவுகின்றன. ஆண் தன்னை எளிதாக மனதளவில் ஒப்புக் கொடுத்து வெளிப்படுத்த ஒரு பெண் தோழியின் அருகாமை தேவை இருக்கிறது. அங்கு அவன் பயமின்றி தன் அந்தரங்க நெருக்கடிகளை பேச முடியும். அதன் உக்கிரமான ஒரு நிலையில் தஸ்தாவெஸ்கியின் ரஸ்கோல்நிக்கோவுக்கு ஒரு சோன்யா போல. 
 
பெண்களுக்கு ஆணுடனான உரையாடல் ஒரு நல்ல மாற்றாக உள்ளது. குறிப்பாக அறிவுத்தேடல் அல்லது கலை ஆர்வம் கொண்ட பெண்கள் நம் சமூகத்தில் ஆண் நட்பை வேண்டுவது இதனாலே. பெண்களுடன் அழுது புரண்டு களைத்து பின் ஒரு ஆணுடன் உரையாடுகையில் அவர்களுக்கு நிச்சயம் ஆசுவாசமாக உள்ளது. எப்படியும் ஆண்-பெண் உரையாடலில் ஆண்களே அதிகம் உளவியல் ரீதியாய் பயன்பெறுவதாய் மற்றொரு ஆய்வு சொல்லுகிறது.
 
ஆண்-பெண் நட்பு நடைமுறை அவசியமாக வளர்ந்து வரும் சூழலில் ஆண்மை பெண்மை ஆகிய மரபான அடையாளங்களும் மெல்ல கலைந்து வருகின்றன. இறுக்கமான பால் அடையாளத்தை வைத்துள்ள ஆணோ பெண்ணோ தனது படிக்கும்/வேலை செய்யும் சூழலில் லகுவான எதிர்பால் உறவுகளை ஏற்படுத்த இயலாது. ஆண்கள் சற்று ஆண்மை கொண்ட பெண்களையும், பெண்கள் சற்று பெண்மை கொண்ட ஆண்களையுமே நட்பாக ஏற்று பழக விரும்புவதாய் பல ஆய்வுகள் சுட்டுகின்றன. இதை நடைமுறை வாழ்விலும் எளிதில் காண்கிறோம். Androgynous நபர்களுக்கு ஆண்-பெண் நட்பு சுலபமாவது ஏன்?
 
முதலில் சம்பிரதாயமான அந்தஸ்து மற்றும் அதிகார உரசலை இது வெகுவாக குறைக்கிறது. சுயபாலின பண்புகள் ஒரு அணுக்கத்தை நட்புக்குள் எளிதாக ஏற்படுத்துகிறது. ஒரு அடையாளம் என்ற நிலையில் நவீன சமூகம் இன்று androgynousஆக மாறி வருவது வேறு விசயம். தைரியமான உறுதியான பெண்ணும் நெகிழ்ச்சியான கவித்துவமான ஆணும் அச்சமூகத்தின் லட்சிய பிரதிநிதிகள். இந்த புள்ளியில் இருந்து காமம் மெல்ல மெல்ல ஒரு பிரச்சனையாக தேய்ந்து போவதும் சுவாரஸ்யமான விசயம்.
 

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்