/* up Facebook

Jul 14, 2014

பலாத்காரங்கள் அதிகரித்திருப்பதற்கு செல்போன்களே காரணம்: கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் குழுவின் பரிந்துரையால் சர்ச்சை - இரா.வினோத்

சமீப காலமாக அதிகரித்து வரும் பாலியல் பலாத்காரங்களுக்கு செல்போன்களே முக்கிய காரணம், பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க வேண்டுமென்றால் உடனடியாக பள்ளி, கல்லூரிகளில் செல்போன் பயன்படுத்துவதற்கு கட்டாய தடை விதிக்க வேண்டும் என கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இத்தனை ஆண்டுகளாக அதிகரிக்கும் பலாத்கார சம்பவங்களுக்கு பெண்கள் உடுத்தும் நவீன உடைகளே காரணம் என சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது செல்போன்களே காரணம் என்ற கர்நாடக எம்.எல்.ஏ.க்களின் அறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நாடு முழுவதும் உள்ள மகளிர் அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பலாத்கார சம்பவங்கள் குறித்தும் காணாமல் போகும் பெண்களின் நிலை குறித்தும் அறிக்கை சமர்ப்பிக்க கர்நாடக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் 23 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. கடந்த 6 மாதங்களாக க‌ர்நாடகா முழுவதும் பயணம் செய்து பல்வேறு களப்பணிகளை மேற்கொண்ட இக்குழு,கடந்த வெள்ளிக்கிழமை கர்நாடக சட்டப்பேரவையில் அறிக்கை தாக்கல் செய்தது. 23 எம்.எல்.ஏக்கள் அடங்கிய குழுவிற்கு தலைமை வகித்த புத்தூர் சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.ஷ‌குந்தலா ஷெட்டி, தங்களுடைய பரிந்துரைகள் குறித்து பேசியதாவது: 

அதிகரித்து வரும் பாலியல் வன்முறைகளுக்கு என்ன காரணம் என்பதை கண்டறிய கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி,கல்லூரிகளில் ஆய்வு நடத்தினோம். பாதிக்கப்பட்டவர்களிடமும் குற்றங்களை இழைத்தவர்களிடமும் பேசினோம். இறுதியில் எங்களின் ஆய்வின்படி, கர்நாடகத்தில் கடந்த 6 மாதங்களில் பாலியல் வன்முறைக்கு உள்ளானவர்களில் 90 சதவீதம் பேர் செல்போன் பயன்படுத்தியாதாலேயே பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிய வந்தது. 

உயிரை பறிக்கும் மிஸ்டு கால்
பெண் குழந்தைகள் வீட்டிலோ, பள்ளியிலோ,கல்லூரியிலோ இருக்கும்போது வரும் 'மிஸ்டு கால்' அவர்களுடைய வாழ்க்கையே 'மிஸ்' ஆக்க வைக்கிறது. தங்களை ஆபத்தை நோக்கி இழுக்கும் மிஸ்டு கால் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் வயதின் ஆர்வக்கோளாறு காரணமாக சம்பந்தப்பட்ட எண்ணுக்கு மீண்டும் அழைக்கின்றனர். தவறான நபர்கள் இதனை பயன்படுத்தி அந்த பெண்களை மறைவான இடத்திற்கு வரவழைத்து சீரழித்து விடுகின்றனர். இதே போல பெங்களூரில் கடந்த இரண்டு மூன்று மாதங்களில் வீட்டில் இருந்த பெண்களை தொடர்பு கொண்டு ஒதுக்குபுறமான இடத்திற்கு வரவழைத்து பலாத்காரம் செய்துள்ள சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த மாதம் கூட பிரவீனா என்ற பெண்ணுக்கு 'ராங் கால்' மூலமாக அறிமுகமான ஒருவன் சிறிது காலம் நண்பனை போல நடித்துள்ளான்.அதன் பிறகு ஒரு நாள் மாலையில் அந்த பெண்ணை ஒரு பாழடைந்த கட்டிடத்திற்கு வரவழைத்து தன்னுடைய கூட்டாளிகள் 3 பேருடன் சேர்ந்து பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளான். 

செல்போனுக்கு தடை
இதே போல பெண்கள் அதிகமாக கடத்தப்படுவதற்கும், தாக்கப்படுவதற்கும் செல்போன்களே காரணமாக இருக்கின்றது சமீப காலத்தில் நடைபெற்ற அனைத்து கடத்தல் சம்பவங்களுக்கும் செல்போன்களே குற்றவாளிகளுக்கு உதவிகரமாக இருந்துள்ளது. நவீன காலத்தில் பல்வேறு விஷயங்களுக்கு உதவும் செல்போன்,வளரிளம் பெண்களை பொறுத்த வரை அதிகளவில் கெடுதலே ஏற்படுத்துகிறது.எனவே பள்ளி, கல்லூரிகளில் பெண்கள் செல்போன் பயன்படுத்துவதற்கு அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும்'' இவ்வாறு அவர் தெரிவித்தார். காவல் நிலையத்தில் சிசிடிவி கர்நாடக எம்.எல்.ஏக்கள் குழு தாக்கல் செய்த அறிக்கையில் மேலும் சில பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன. அவை பின்வருமாறு: 

செல்போன் பயன்பாடு குறித்து பள்ளி, கல்லூரிகளில் மாதந்தோறும் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுதுறை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். அதேபோல குற்றங்களை தடுக்க வேண்டிய காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வரும் பெண்கள் மீதே பாலியல் வன்முறை நிகழ்த்தப்படுகிறது. எனவே பொதுமக்களுக்கு வெளிப்படையான சேவையை வழங்கும் நோக்கத்தில் அனைத்து காவல் நிலையங்களையும் கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் குழுவின் பரிந்துரை பெண்களின் உரிமையையும் பாதுகாப்பையும் பறிக்கும் செயல் என சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கர்நாடக அரசு இந்த பரிந்துரைகளை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.​ 

நன்றி - த ஹிந்து

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்