/* up Facebook

Jul 20, 2014

அன்று கால்பந்து வீராங்கனை...இன்று பெட்டி கடையில்!


அன்று கால்பந்து வீராங்கனை...இன்று பெட்டி கடையில்!அண்மையில் நடந்து முடிந்த உலக கோப்பை கால் பந்து போட்டியை குதூகலமாக கண்டு களித்தும், கோப்பையை வென்ற ஜெர்மன் அணியின் பெருமைகளை வாய் வலிக்க பேசியும் முடித்தாயிற்று. ஆனால் இத்தகையை பெருமை வாய்ந்த உலக கோப்பை கால்பந்து போட்டிகளில்,  லீக் சுற்றுக்கு கூட இந்தியாவால் நுழைய முடியவில்லையே என்ற ஆதங்கம் அடிமனதில் ஓடியபடிதான் உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டியை கண்டுகளித்திருப்பார்கள் இந்திய ரசிகர்கள்...

ஏற்கனவே இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு அளிக்கப்படுகிற முக்கியத்துவமும், ஊக்கமும், நிதியுதவியும், தனியார் நிறுவனங்களின் ஸ்பான்சர்ஷிப்பும் பிற விளையாட்டுகளுக்கு கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு. 

அதனை மெய்ப்பிக்கும் வகையிலான மற்றொரு உதாரணம்தான் அகில இந்திய அளவில் பல ஜூனியர், சீனியர் அளவிலான கால்பந்தாட்ட போட்டிகளில்  பங்கேற்று, விருதுகளை வென்று, பின்னர் போதிய நிதியுதவியோ, அரசின் ஊக்கமோ கிடைக்காமல் போய் இன்று வெற்றிலை பாக்கு கடை வைத்து நடத்தி வாழ்க்கையை ஓட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள ரஷ்மிதாவின் கதை. 

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ரஷ்மிதாவுக்கு தற்போது வயது 23. பள்ளியில் படித்தபோது தனது பள்ளியின் சார்பிலும், ஒடிசா மாநிலத்தின் சார்பிலும் பல ஜூனியர் மற்றும் சீனியர் அளவிலான சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளார். 2012 ஆம் ஆண்டு தேசிய அளவிலான  கால்பந்தாட்ட போட்டியில் ஒடிசா சார்பில் பங்கேற்று  வெற்றிக்கோப்பையை தட்டி, தான் சார்ந்த மாநிலத்திற்கு பெருமை சேர்த்தவர். 

இத்தகைய திறமை வாய்ந்த கால்பந்தாட்ட வீராங்கனையின் இன்றைய நிலை, வாழ்க்கையை ஓட்ட தனது கிராமத்தில் வெற்றிலை பாக்கு விற்கும் பெட்டிக்கடை வைத்து நடத்தும் அளவிற்கு உள்ளது. இவரது தந்தை ஒரு தினக்கூலி. ஒடிசா மாநிலத்தின் கிழக்கு புவனேஸ்வரில் இருந்து  120 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில்தான் வசிக்கிறார். 

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர்தான் பங்காளதேஷின் டாக்கா நகரில் நடைபெற்ற ஆசிய கோப்பை தகுதி சுற்று போட்டியில் இந்தியாவுக்காக விளையாடி உள்ளார். மேலும் பஹ்ரைனில் நடைபெற்ற சீனியர் அளவிலான தேசிய அணியிலும் பங்கேற்று விளையாடி அணி வெற்றிபெற உதவி உள்ளார். 

ஆனால் தொடர்ந்து விளையாட்டில் பங்கேற்று, மென்மேலும் ஒரு சிறந்த கால்பந்தாட்ட வீராங்கனையாக வேண்டும் என்ற அவரது லட்சியத்தை அடைய முடியாத அளவிற்கு வறுமை அவரை முடக்கி போட்டுவிட்டது. அரசு தரப்பிலிருந்தோ அல்லது வேறு எந்த ஒரு தரப்பிலிருந்தோ ரஷ்மிதாவுக்கு உதவிக்கரம் நீளாத நிலையில், கூலித்தொழிலாளியான அவரது தந்தையும் மகளின் கனவுக்கு உதவ முடியாத கையறு நிலையில் தவிக்க, வேறு வழியில்லாமல் தனது கனவை மூட்டை கட்டிவைத்துவிட்டு தந்தையைப்போன்றே தினக்கூலி வேலை பார்க்கும் ஒருவரை திருமணம் செய்துகொண்டுவிட்டு, குடும்ப வாழ்க்கையில் தனது கவனத்தை திருப்பிக்கொண்டுவிட்டார்.

கணவருக்கும் நிரந்தர வேலை இல்லாத நிலையில் குடும்ப செலவுகளை சமாளிக்க தனது வீட்டின் முன்புறம் சிறிய அளவிலான வெற்றிலை பாக்கு கடை வைத்து நடத்திக்கொண்டிருக்கிறார் ரஷ்மிதா. 

ஆனாலும் அவரிடம் கால்பந்தாட்டம் மீதான பேரார்வம் குறையவில்லை. கால்பந்தாட்டம் குறித்து பேசினாலே ரஷ்மிதா கண்களிலும், முகத்திலும் ஆயிரம் வால்ட்ஸ் பல்பு மின்னுகிறது. 

" கால்பந்தாட்டம் எனது ரத்தத்தில் கலந்துவிட்ட ஒன்று" என இன்னமும் அதன் மீதான ஆர்வம் குன்றாமல் பேசுகிறார் ரஷ்மிதா. அவர் கூறுவது உண்மைதான்..12 வயதிலேயே கால்பந்தாட்டத்தை விளையாட தொடங்கியவர் அல்லவா அவர்.  அவரது திறமையை கண்டறிந்து, சில கோச்சர்கள் தாமாக முன்வந்து கால்பந்தாட்டத்தின் நுணக்கங்களை ரஷ்மிதாவுக்கு முறையாக கற்றுக்கொடுத்து வளர்த்ததன் விளைவாக 2008 ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற AFC U-16 தகுதியாளர்களுக்கான போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று திரும்பினார்.  இந்த போட்டியில் கலந்துகொள்ள சென்றதால், அவரால் தனது 10 ஆம் வகுப்புக்கான தேர்வை எழுத முடியாமல் போய்விட்டது. ஏனெனில் தேர்வு தேதியும், போட்டி தேதியும் ஒன்றாக அமைந்துபோனதுதான் காரணம் என்று அதனை நினைவு கூர்கிறார் ரஷ்மிதா. 

ஆனால் அவரது இந்த தியாகத்திற்கு பலனில்லாமல் போகவில்லை. தனது மாநிலத்தில் நடைபெற்ற ஜூனியர் மற்றும் சீனியர் அளவிலான போட்டிகளில் பங்கேற்று, சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். அதனைத் தொடர்ந்து இந்திய சீனியர் மகளிர் கால்பந்தாட்ட தேசிய அணியிலும் இடம்பிடித்தார். 

ஆனால் விளையாட்டு விடுதியில் தொடர்ந்து தங்கியிருக்க தேவையான பணம் இல்லாத நிலையில், எந்த ஒரு உதவிக்கரமும் நீளாத சூழலில், அவர் அந்த விடுதியிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் , அவரால் மீண்டும் விளையாட்டுக்கு திரும்ப முடியாமலேயே போய்விட்டது. 

இந்நிலையில் இதுகுறித்த தகவல் ஊடகங்களில் வெளியாகின பின்னர்தான், ரஷ்மிதாவுக்கு உதவுவதாக உறுதியளித்துள்ளார் ஒடிசா மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் சுதம் மராண்டி. தன்னால் மீண்டும் விளையாட்டுக்கு திரும்ப முடியாமல் போனாலும், குறைந்தபட்சம் வறுமையிலிருந்தாவது மீள முடியும் என்ற நம்பிக்கையுடன் அரசின் உதவியை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார் ரஷ்மிதா!  
- பா. முகிலன்
 

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்