/* up Facebook

Jul 15, 2014

பயிரை மேயும் வேலிகள் - கேஷாயினி எட்மண்ட்

சில நாட்களுக்கு முன் சிலி நாட்டிலிருந்து வந்திருந்த பெண் ஒருவரை சந்தித்து உரையாடும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. பெயர் வலேரியா. இவர் ஒரு நாடக கலைஞர். அண்மையில் இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கும் சென்று அங்கு பயில்கின்ற மாணவர்களையும் சந்தித்து பயிற்சிகளை வழங்கியிருந்தார். இந்தியர் ஒருவரை திருமணம் செய்துள்ள இவர் இரு பெண் குழந்தைகளின் தாய்;. கணவரை விவாகரத்து செய்துவிட்டார். தற்போது இந்தியாவில் வசித்து வருகின்றார். அவருடன் இப்போது கொழும்பில் வசித்து வருகின்றவரான அமெரிக்க பெண்ணான இவோன் என்பரும் என்னை சந்தித்தித்தார். இவோன் ஒரு எழுத்தாளர். தற்போதும் ஒரு புத்தகம் எழுதிக்கொண்டிருக்கின்றார். இவருக்கு பிடித்த துறை பொருளாதாரம். மூவரும் கதைப்பதற்கு என்றே விஹாரமாதேவி பூங்காவில் சந்தித்தோம். அவரவர் குடும்பங்கள் தற்போதைய பணிகள் என்று ஆரம்பித்த அந்த உரையாடலில் அவர்கள் இருவரும் கூறிய பல விடயங்கள் நான் வளர்ந்த, வாழ்கின்ற சமூகத்தின் வரம்புகளை தாண்டியதாகவே இருந்தது.

அவர்கள் இருவரும் தம்முடைய பாலியல் உறவுகள், தமது ஆண் நண்பர்கள் பற்றிய விளக்கம் , விவாகரத்து என்று மிக சகஜமாக பேசும் போது தட்டுத்தடுமாறி என்னுடைய படிப்பு பற்றியும், நண்பர்கள் பற்றியும், விடுதி வாழ்க்கை பற்றியும் பேசிய என்னால் எம் சமூக வரம்புகள் பற்றி தான் சிந்திக்க முடிந்தது. அதில் அவர் பகிர்ந்த இரு விடயங்கள் பற்றியதே இந்த பதிவு. முதலாவது பிள்ளைகளுக்கான பாலியல் கல்வி அடுத்த விடயம் எம்மவர்களின் ஆணாதிக்க சிந்தனைகள்.

'என்னுடைய இரு பெண் பிள்ளைகளையும் யாராவது ஆண் மடியில் இருத்திப் பேசினால் கூட தயவுசெய்து பிள்ளைகளை ஆசனத்தில் அமர்த்தி பேசுங்கள். பிள்ளைகளை தொட்டுப் பேசுவதெல்லாம் வேண்டாம்' என்று நான் அவர்களிடம் வெளிப்படையாக சொல்லிடுவன் என்ற கருத்தினை வலேரியா தெரிவித்தார். இன்றைய நம்முடைய பத்திரிகைகளை புரட்டுங்கள். வெளியாட்களை விடவும் வேலியே பயிரை மேய்ந்த கதைகள் எத்தனை??? தமது தந்தை, தமையன், தாத்தா, மாமா என்று தெரிந்த ஒருவரினாலேயே பாலியல் வன்முறைகளுக்குட்படுத்தப்பட்ட குழந்தைகள், பெண்கள் எத்தனை?

நம் குழந்தைகள் சிறுவயதாகவே இருக்கும் போது அவர்களுக்கு வருகின்றவர்கள் , போகின்றவர்கள் எல்லோருக்கும் முத்தம் கொடுக்கவும், ஏதாவது பொருளைக்காட்டினால் அதை வாங்கிவிட்டு அவர்களது மடியில் அல்லது கைக்கு தாவவும் தான் பழக்குகின்றோம். நம்மில் எத்தனை பேர் குழந்தைகளுக்கு யாராவது உன்னை தொட்டால் எம்மிடம் வந்து சொல்ல வேண்டும் என்று பழக்கிக்கொடுக்கின்றோம்? முதலாவது எமக்குள் 'பாலியல் உறவுகள்' குறித்த கண்ணோட்டம் எவ்வாறிருக்கின்றது?  நம்முள் பெரும்பாலானோர் பிறப்புறுப்புக்களிலான உறவே பாலியல் உறவு என்று நினைத்துக்கொண்டிருக்கின்றோம். 'தொடுகை' மூலம் திருப்தியடைகின்ற எம்மை சுற்றியுள்ள வக்கிரகாரர்களையும், இவ்வாறான தொடுகைகளின் மூலம் உளவியல் ரீதியாக எதிர்காலத்தில் பாதிப்படையவுள்ள எம் குழந்தைகள் குறித்தும் எம்முள் பலருக்கு தெரிவதில்லை.... அதைவிட அவதானிப்பதில்லை என்று சொல்லாம்.

இவ்வாறு சொன்னவுடன் நவநாகரீக உடைகள் குறித்து பேசும் சிலர் இருக்கின்றார்கள். அந்தக்காலத்தில் ஜாக்கெட்டே இல்லாமல் புடவை கட்டிய கிழவிகளை விடவா இன்றைய உடைகளும் அதை அணிபவர்களும் 'செக்ஸியாக' இருக்கின்றார்கள். சுற்றியிருப்பவர்களை பாலியல் ரீதியாக  சுரண்டுவது அன்றிலிருந்தே தொடர்கின்றதொன்று. ஆனால் தற்போது தான் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன என்ற யதார்த்தத்தினை நாம் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். முன்னர் சமூகத்தினாலும், குடும்பத்தின் கௌரவங்களுக்காகவும் மூடி மறைத்தவைகளின் நீள்ச்சியே இன்று வெளிவருகின்ற விடயங்கள்.

அடுத்ததான என் நண்பிகள் பகிர்ந்த விடயம் 'ஆணாதிக்க சிந்தனைகள்' குறித்தது. வீட்டுக்குள் தன் மனைவியை ஒரு அடிமையாக நடத்துபவர்கள் சமூகத்தின் முன் காட்டுகின்ற சில படங்கள் பற்றிய கருத்துக்கள்... ' என்னுடைய திருமணம் காதல் திருமணம். பெற்றோர்களின் விருப்பத்திற்கு மாறாகவே என்னுடைய நாட்டை விட்டு புறப்பட்டேன். ஆரம்பத்தில் அன்பாகதானிருந்தார். என்னையும் சுதந்திர பெண்ணாக தான் நடத்தினார். ஆனால் இந்தியா வந்தவுடன் அவர் குணங்கள் மாறிவிட்டது. தன்னுடைய சமயம், கலாசாரம் என அனைத்தையும் பின்பற்ற என்னை வற்புறுத்தினார். இது தொடர்பில் எமக்குள் அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்படுவதுண்டு. சில நேரங்களில் இது நாட்கணக்கிலும் தொடரும். அந்நாட்களில் என்னை ஒருவிதமான அருவருப்பானவளாக தான் பார்ப்பார். தப்பித்தவறி என் கை அவரில் பட்டால் கூட போதும் உடனே கையை நீரினால் கழுவுவார். நான் நாள் முழுவதும் அழுது கொண்டும் சாப்பிடாமலும் இருந்த நாட்கள் உண்டு. ஏனென்று கூட கேட்கமாட்டார். ஆனால் ஏதாவது பார்ட்டிக்கு போனால் எல்லோருக்கும் முன் என் தோளில் கையை போட்டு அரவணைத்துக்கொண்டிருப்பார், என்னை முதலில் சாப்பிட சொல்லி வற்புறுத்தி எனக்கும் பரிமாறுவார். ஒருமுறை இவ்வாறு அடுத்தவர்கள் முன் நடிக்கும் போது தான் பொதுவிடத்தில் வைத்து அவரை கேள்வி கேட்டேன். இதுவே விவாகரத்து வரை சென்றது'  அதே வரிகளை மீண்டும் வாசித்து விட்டு இறுதி வரிகளை மட்டும் நீக்கிப்பாருங்கள். அநேகருடைய வலிகளை இது சொல்லும். ஆனால் என்ன 90 வீதமானவர்களுக்கு விவாகரத்தாகி இருக்காது அவ்வளவு தான். நம் குடும்ப மானம் முக்கியம்.. கல்லானாலும் புல்லானாலும் தாலி கட்டியவர் அல்லவா? இந்த கல்லுக்கும் புல்லுக்கும் தான் நெற்றியில் சிவப்பு பொட்டும் நெஞ்சில் நம் வீட்டுப்பணத்தில் வாங்கி கட்டிய தாலியும் சுமக்கின்றோம்.... நெஞ்சில் கூடவே கொஞ்சம் வலியையும் சுமக்க மாட்டோமா என்ன?

கூடவே அவர்கள் சொன்னதொரு விடயம் தங்கள் சமூகத்து ஆண்கள் இவ்வாறு விவாகரத்து ஆனாலும் 'தொடுகை தீட்டுகள்' பார்ப்பதில்லை என்பது. நம்முடைய படைப்புகளில் 'பெண்களை போற்றுகின்றோம்.. காண்பவற்றினையெல்லாம் பெண்களாகவே உவமிக்கின்றோம்.. நதிகள் முதல் புயல்கள் வரை பெண் பெயர்களை சூட்டுகின்றோம். ஆனால் நம் அருகில் நிற்கின்ற பெண்ணை மதிக்கின்றோமா? என்று நம்மையே கேட்டுக்கொண்டால் பதில்கள் மட்டும் மௌனமாக இருக்கும்...

ஆக நம்முடைய சமூதாயத்தில் மேலைத்தேய நாகரீகம் என்று சொல்லிக்கொண்டே உடையில், உணவில் மாற்றங்கள் உண்டாகி விட்டன. ஆனால் எமது குழந்தைகள் , பெண்கள் விடயங்களில் மட்டும் இன்றும் பல தசாப்தங்கள் பின் தள்ளியே இருக்கின்றோம் என்றே தோன்றுகிறது. 
இன்றிலிருந்தாவது நம் பெண் குழந்தைகளுக்கு மாமாக்களின் மடிக்கு தாவாமல்... ஒரு வேளை மாமாவோ, அண்ணாவோ , மச்சானோ எங்கே தொட்டாலும் அதை எம்முடன் பகிர்ந்துகொள்ளவும் கற்றுக்கொடுப்போம்... அதே ஆண் குழந்தை என்றால் 'நீ சாண் என்றாலும் ஆண்' என்று சொல்லி வளர்க்காமல் 'உன் தங்கையே ஆனாலும் அவளுக்கு என்று உணர்வு, உன்னளவிலான உரிமை உண்டு' என்று சிறு வயதிலேயே 'பெண்'க்கு மதிப்பளிக்க பழக்குவோம்.  பயிரை மட்டும் காப்பதல்ல வேலியையும் நாம் தான் சீர்படுத்த வேண்டுமல்லவா??

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்