/* up Facebook

Jun 4, 2014

நோபல் பரிசு அழகி- வங்காரி மாத்தாய் - வீ.அ.மணிமொழி


ஆப்பிரிக்காவில், மரத்தின் அன்னை (The Tree Mother Of Africa) என போற்றப்பட்டு வந்த வங்காரி மாத்தாயின் இறப்புச் செய்தி உலக மக்கள் அறிந்திருப்பர். அவரின் மரணச்  செய்திக் கேட்டு உலக மக்கள் யாவரும் மிகவும் சோகத்தில் ஆழ்ந்திருப்பது மாத்தாயின் உயர்ந்த சேவையை எண்ணிப் பார்க்க வைக்கின்றன. இது உலக மக்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பு எனலாம்.

 புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வங்காரி மாத்தாய், கடந்த 25 செப்டம்பர் 2011, தனது 71ஆம் வயதில், நைரோபியிலுள்ள மருத்துவமனையில் தனது உயிரைத் துறந்தார். 1 ஏப்ரல் 1940-ல் பிறந்த இவர், தனது கென்யா நாட்டின் பெண்களின் அடையாளமாய் விளங்கினார். பெண்களுக்கு மிகவும் பக்கப் பலமாகவும் முன்னுதாரணமாகவும் இருந்த இவரின் செயலைக் கண்டு பலரும் பெருமை பட்டனர். ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த இவர், கென்யா நாட்டில் பெரும்பான்மையான கிகுயு (kikuyu) என்ற இனத்தைச் சார்ந்தவர். இந்த அழகிய பெண்மணியின் சேவையையும் தியாகத்தையும் பாராட்டி 2004ஆம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. உலக அமைதிக்கான நோபல் பரிசு வென்ற முதல் ஆப்பிரிக்கா பெண்மணி என்ற பெருமையும் இவரையே சேரும். அரசியல், சமூகம் மற்றும் சுற்றுச் சூழல் நடவடிக்கைகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டும் வந்தார். கென்யா நாட்டின் சுற்றுச் சூழல் அமைச்சின் துணை அமைச்சராகவும் பொறுப்பேற்றிருந்தார். 

வறுமையின் காரணமாக, எத்தொழிலையும் செய்யத் துணிந்த ஆப்பிரிக்கா மக்கள், தங்களின் சுயநலத்திற்காக மரங்களையும் வெட்டி பணம் சம்பாதித்துக் கொண்டிருப்பதை அறிந்த பின், இவர் மிகவும் மன உளைச்சல் அடைந்தார். அவர்களின் இந்நடவடிக்கைகள் எதிர்காலத்தின் அழிவிற்கு வித்திடும் என நம்பிய இவர் கிரீன் பெல்ட் (Green Belt) என்ற இயக்கத்தைத் தொடங்கி அதில் தீவிரமாக ஈடுப்பட்டு வந்தார். இவ்வியக்கத்தின் மூலம் மரங்களின் அவசியத்தையும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் ஆப்பிரிக்கா மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டினார். இந்நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு முன்பு மாத்தாய் முதலில் கென்யா மக்களின் தேவைகளைக் கேட்டறிந்தார். இவர்களின் அவசியமானது சிலவற்றையே. அவை நல்ல குடிநீர், சமைப்பதற்கு விறகுகள், சத்துள்ள உணவு, கட்டுமானப் பொருட்கள் என இன்னும் சில தேவைகளை முன்வைத்தனர்.

அதற்கு, மாத்தாய் “உங்களுக்குப் பணம் வேண்டுமானால் மரத்தை நடுங்கள். அவை உங்களுக்குப் பணம் தரும்.” என்றார். ஆப்பிரிக்கா பெண்கள் “ எங்களுக்கு மரம் நட தெரியாது” என்றார்கள். சில வன அதிகாரிகளின் உதவியை நாடியப்பின் பெண்கள் மரக்கன்றுகளை நடத் தொடங்கினர். வளர்ந்த மரக்கன்றுகளைத் தங்களின் நிலத்திலேயே நட்டு வந்தனர். இப்படியே பல ஆயிர மரங்களை உருவாக்கினர். மரம் வளர்ந்த பிறகு நல்ல விலையில் போனது. இது பெரும் மாற்றத்தை பெண்களிடம் கொண்டு வந்தது. ஏனென்றால் மரம் நடுதல் அவர்களுக்குப் பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாறிவிட்டது.

 மாத்தாய் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் கொள்ளாமல், சமூகத்தின் வளர்ச்சியிலும் அதனால் நாட்டிற்கு ஏற்படும் முன்னேற்றங்களைப் பற்றியும் சிந்திக்கத் தொடங்கலானார். அதனால், இம்மூன்று கூறுகளையும் ஒன்றிணைத்து பார்க்கத் தொடங்கினார். தமக்கு நோபல் பரிசு வழங்கு விழாவில் “அமைதி இல்லாத ஒரு நாட்டில் வளர்ச்சி இருக்காது. மக்களாட்சி மாண்புகளை மதிக்காத ஒரு நாட்டை நீங்கள் முன்னேற்ற முடியாது. மேலும் இயற்கை வளங்களைச் சரியாக கையாளாத நாட்டின் வளங்கள் சுரண்டப்படுகின்றன. பெரும்பான்மையை ஏமாற்றி சிறுபான்மையிடம் வளங்கள் ஒப்படைக்கப்படுகின்ற ஒரு நாட்டை முன்னேற்றவே முடியாது” என தனது ஏற்புரையில் கூறினார்.

சுற்றுச்சூழலைப் பாதுக்காக்க வேண்டும் என்ற விழிப்புணவை ஏற்படுத்த அவர் மேலும் பல திட்டங்களைத் தீட்டிக் கொண்டு வந்தார். அதில் ஒன்று, இவ்விழிப்புணர்வைச் சிறுவயதில் மாணவர்களுக்கு ஏற்பட வேண்டும் என்பதற்காக புதிய பாடத்திட்டம் ஒன்றை உருவாக்கினார். இவரின் இச்செயலால் ஆப்பிரிக்கா மக்கள் தங்களின் நில அவசியத்தை மிக அருகில் புரிந்துக் கொண்டனர்.

இப்படியே பெண்கள், மனித உரிமைகள் என்று பல அடிப்படைகளில் பிரச்சாரங்களை ஆப்பிரிக்காமக்களிடையே பரப்பினார். எப்படிப்பட்ட பெண்கள் ஆப்பிரிக்காவிற்கு வேண்டும் என்பதையும் ஆழமாக உணர்த்தினார். இவரின் பணியை எண்ணில் அடக்க முடியாத வகையில் அவர் விட்டுச் சென்ற நல்ல விசயங்கள் மட்டும் உயிரோடிக் கொண்டிருக்கின்றன.

நன்றி - மணிமொழி

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்