/* up Facebook

May 7, 2014

பெண் எழுத்து: உலகை உலுக்கிய பெண் புத்தகங்கள் - ஆதி

 காலந்தோறும் பெண்களின் எழுத்து, ஒட்டுமொத்த உலகுக்கும் புத்துயிர் ஊட்டி வந்துள்ளது. பல புத்தகங்கள் உலகையே புரட்டிப் போட்டுள்ளன. உலகப் புத்தக நாள் (ஏப்ரல் 23) கடைபிடிக்கப்படும் இந்த நேரத்தில், பெண்கள் எழுதி உலகை உலுக்கியதாகக் கருதப்படும் 10 நூல்கள் இங்கே நினைவுகூரப்படுகின்றன.

டேல்ஸ் ஆஃப் கெஞ்சி, 1021:

உலகின் முதல் நவீன நாவல் என்று கருதப்படும் இதை எழுதியவர் ஜப்பானியச் சீமாட்டி முரசாகி. ஒரு பேரரசனின் மகனுடைய வாழ்க்கை, காதலைப் பற்றிய கதை. அதேநேரம் வீழ்ச்சியடைந்துவரும் அரசாட்சியையும் இது பதிவு செய்துள்ளது. இந்தக் கதை ஆயிரம் ஆண்டு பழமையானதாக இருந்தாலும், வரலாற்றை அறிந்துகொள்வதற்கான சிறந்த ஆதாரமாகத் திகழ்கிறது.

எ விண்டிகேஷன் ஆஃப் தி ரைட்ஸ் ஆஃப் உமன், 1792

நவீனப் பெண் உரிமைச் சிந்தனைகளை முதலில் வெளிப்படுத்திய இந்த
நூலை எழுதியவர் மேரி வோல்ஸ்டன்கிராஃப்ட். பெண்ணுக்கு உரிய சுதந்திரத்தையும், பெண்ணியத்தையும் உலகுக்கு உணர்த்திய நூல். பெண் என்பவள் முதலில் ஒரு சொத்து அல்ல, அவளும் மனுஷிதான். அவளுக்குக் கல்வி பெறவும், பொது வாழ்க்கைக்கு வரவும் உரிமை உண்டு என்று உரத்த குரலில் சொல்லி, ஆணாதிக்கச் சமூகத்துக்கு எழுத்து ரீதியில் சவால் விடுத்தது இந்தப் புத்தகம். இதனால் எரிச்சலடைந்த சிலர், மேரியைக் கழுதைப் புலி என்றெல்லாம் திட்டியிருக்கிறார்கள்.

அங்கிள் டாம்ஸ் காபின், 1852:

உலகுக்கெல்லாம் நீதி சொல்லும் அமெரிக்காவில் பல நூற்றாண்டுகளாக நிலவி வந்த மனிதனை மனிதன் அடிமைப்படுத்தி வைத்திருந்த இனவெறி வன்கொடுமை பற்றி முதலில் பேசிய இந்த நாவலை எழுதியவர் ஹாரியட் பீச்சர் ஸ்டோவ். முதலில் அமெரிக்காவையும் பிறகு உலகின் கண்களையும் இது திறந்தது. கறுப்பின அடிமை முறையை ஒழிக்க அமெரிக்காவில் நடந்த உள்நாட்டுப் போருக்கு இந்தப் புத்தகமும் ஒரு காரணமாகக் கருதப்படுகிறது.


இன்சிடென்ட்ஸ் இன் தி லைஃப் ஆஃப் எ ஸ்லேவ் கேர்ள், 1861:

அங்கிள் டாம்ஸ் கேபின் உண்மைச் சம்பவங்களைக் கதை போலச்
சொல்லியிருந்தது. ஆனால், இந்த நூல் ஹாரியட் ஆன் ஜேக்கப்ஸ் என்ற கறுப்பினப் பெண்ணின் நிஜமான சுயசரிதை. அடிமை வாழ்க்கை, அதிலிருந்து விடுபட அவர் நிகழ்த்திய போராட்டங்கள், பாலியல் வன்கொடுமை, குழந்தைகளை விற்பது எனத் தீவிரமான பல பிரச்சினைகளை நேரிடையாகப் பேசிய வகையில், இந்த நூல் முக்கியத்துவம் பெற்றது. கறுப்பினப் பெண் அடிமை ஒருவரின் சுயசரிதை அந்தக் காலத்தில் வெளியாவது, கற்பனை செய்து பார்க்க முடியாத ஒன்று.

தி ஸ்டோரி ஆஃப் மை லைஃப், 1903:

ஹெலன் கெல்லரின் வாழ்க்கை பற்றிப் புதிதாகச் சொல்லத் தேவையில்லை. பார்வையற்ற, கேட்கும் திறனற்ற அவரது தன்னம்பிக்கை, போராட்டம், சவால்களை எதிர்கொண்ட விதம் பற்றி அவரே விவரித்த நூல் இது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்த நூல், மனித குலத்துக்கு உத்வேகம் அளிக்கும் சிறந்த நூல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

தி டயரி ஆஃப் எ யங் கேர்ள், 1947:

சர்வாதிகாரி ஹிட்லர், அவரது நாஜி படை நிகழ்த்திய கொடூர
அட்டூழியங்கள் பற்றி எழுத்து ரீதியில் பேசிய சிறுமி ஆன் ஃபிராங்கின் இந்தப் புத்தகம், கடந்த நூற்றாண்டின் சக்திவாய்ந்த புத்தகங்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது. நாஜிப் படைக்குப் பயந்து ஆன் ஃபிராங்கின் குடும்பம் இரண்டு ஆண்டுகள் ஒரு மாடியறையில் ஒளிந்திருந்த காலத்தைப் பற்றி இந்த நூல் பேசுகிறது. ஆன் ஃபிராங்க் இறந்த பிறகு, அவரது டயரி கண்டெடுக்கப்பட்டுப் பதிப்பிக்கப்பட்டது.

தி செகண்ட் செக்ஸ், 1949:

இரண்டாம் தரமானவர்களாகவே கருதப்பட்டு வரும் பெண்களைப் பற்றிய பார்வையையும் பேச்சையும் மாற்றிய புரட்சிகரமான புத்தகமாகப் புகழ்பெற்ற பெண்ணியவாதி சீமன் தூ போவார் எழுதிய இந்தப் புத்தகம் கருதப்படுகிறது. வழக்கத்துக்கு மாறான ஒரு பெண், தான் யார், எப்படிப்பட்டவள் என்ற தேடலை மேற்கொண்டதைப் பதிவு செய்த புத்தகம். இந்தப் புத்தகம் லட்சக்கணக்கான வாசகர்களுக்கு அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது மட்டுமில்லாமல், புத்துயிரும் தந்தது. வாட்டிகன் கத்தோலிக்கத் திருச்சபையால் தடை செய்யப்பட்ட புத்தகம்.

சைலண்ட் ஸ்பிரிங், 1962:

கடந்த நூற்றாண்டில் மிகப் பெரிய தாக்கம்
செலுத்திய 100 முக்கியப் புத்தகங்களில், ரேச்சல் கார்சன் எழுதிய இந்தப் புத்தகத்துக்கும் இடம் உண்டு. சுற்றுச்சூழலுக்கு எதிரான அமைப்புகள் அதிகம் வெறுக்கும் புத்தகங்களில் ஒன்று இது. வெளியாகி ஒன்றரை ஆண்டுகளுக்குள் 10 லட்சம் பிரதிகள் விற்றன.

தி ஃபெமினைன் மிஸ்டிக், 1963 :

திருமணம், குழந்தைகள், வீடு ஆகியவற்றால் மட்டும் ஏன் ஒரு பெண் திருப்தியடைந்துவிட முடியாது என்பதைப் பெட்டி ஃபிரீடன் இந்தப் புத்தகத்தில் விளக்கியிருக்கிறார். 1960களில் பெண்ணிய இயக்கங்கள் புத்துயிர் பெற இந்த நூலும் முக்கியக் காரணம். நன்கு படித்த, புறநகர்ப் பகுதிகளில் வாழ்ந்த, போருக்குப் பிந்தைய அமெரிக்க இல்லத்தரசிகளின் அவல நிலை பற்றி இந்தப் புத்தகம் அலசியது. அவர்களது வாழ்க்கையைப் புரட்டிப் போடவும் இந்த நூல் காரணமாக இருந்தது.

ஐ நோ ஒய் தி கேஜ்டு பேர்ட் சிங்ஸ், 1969:

புகழ்பெற்ற ஆப்பிரிக்க - அமெரிக்கக் கவிஞர் மாயா ஏஞ்சலூவின் சுயசரிதை.
இனவெறி, மனவேதனைக் கொடுமைகளில் இருந்து விடுபட ஒருவரது மனவலிமையும், இலக்கியக் காதலும் எப்படி உதவின என்பதை அழுத்தமாகச் சொன்ன புத்தகம். இனவெறி, பாலியல் பலாத்காரம், பருவ வயதில் தாயாதல் உள்ளிட்ட கடுமையான நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுத் தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளப்பட்ட ஒரு இளம்பெண், எப்படி எதைப் பற்றியும் கவலையற்ற, தன்னம்பிக்கையுள்ள, மரியாதைக்குரிய பெண்ணாக மாறினாள் என்பதை இந்த நூல் விவரிக்கிறது.

நன்றி - தி ஹிந்து

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்