/* up Facebook

May 6, 2014

முகங்கள்: வழிகாட்டும் விழியாள் - டி. கார்த்திக்


அவருக்குப் பார்வை கிடையாது. ஆனால், நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகளுக்கு அவர் ஒரு வழிகாட்டி. பெண் குழந்தை என்றால் சிசுவிலேயே கள்ளிப் பாலைப் புகட்டும் உசிலம்பட்டியில் பிறந்த அவர், பல தடைகளை உடைத்தெறிந்து தென்னிந்திய அளவில் முனைவர் பட்டம் பெற்ற பார்வையற்ற முதல் பெண். புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் வரலாற்று துறை தலைவராகப் பணி புரிந்து வரும் ராதாபாய்தான் இவ்வளவு சிறப்புக்கும் உரியவர்.

‘‘ நான் இன்னைக்கு இந்தச் சிறப்பைப் பெற்றிருக்கிறேன் என்றால், அதற்கு என் தாயும் தந்தையும்தான் காரணம். எங்கள் வீட்டுக்கு நான் 8-வது குழந்தை. அதுவும் பார்வையற்ற குழந்தை. அந்தக் காலத்தில் பெண் குழந்தை என்றாலே வேண்டாப் பொருளாகப் பார்க்கும் ஊரில், பார்வையற்ற பெண்ணான நான் நிச்சயமாகக் கல்வி என்ற அறிவு ஒளியைப் பெற வேண்டும் என்று விரும்பியவர் என் தந்தை. பத்தாம் வகுப்பு வரை படித்த பிறகு என்ன செய்யலாம் என்று யோசித்தபோது திருச்சியில் உள்ள விழியிழந்தோர் பள்ளிக்குச் சென்றேன். அங்குதான் பி.யு.சி.யும், முதுகலை படிப்பும் படிக்க விதை விதைக்கப்பட்டது’’ என்கிறவர், கடந்த கால நிகழ்வுகளில் மூழ்கினார்.

பி.யு.சி. படித்த பிறகு கல்லூரியில் அத்தனை சுலபத்தில் ராதாபாய்க்கு இடம் கிடைக்கவில்லை. விரும்பிய துறையும் கிடைக்கவில்லை. கிடைத்த வரலாற்றுத் துறையை விரும்பிப் படித்தார் ராதாபாய். 1989-ம் ஆண்டில் ‘தமிழகத்தில் பார்வையற்றோர் நிலையும், மறுவாழ்வும்’ என்ற தலைப்பில் முனைவர் பட்டம் படிக்க விரும்பினார். முனைவர் பட்டம் படிக்கவும் வழிகாட்டி கிடைக்காமல் திண்டாடி, நீண்ட போராட்டத்துக்குப் பிறகே அந்தப் படிப்பையும் அவரால் சாதிக்க முடிந்தது. இத்தனை கஷ்டத்துக்குப் பிறகு கல்லூரியில் வேலை கிடைத்த பிறகும் ராதாபாய் சும்மா இருக்கவில்லை.

‘‘வாழ்க்கை என்பதே சவால்கள் நிறைந்ததுதான். ஆனால், பார்வையற்றவர்களுக்குக் கூடுதல் சவால் நிறைந்தது வாழ்க்கை. அவர்களின் நிலை எனக்குத் தெரியும் என்பதால், பார்வையற்ற மாணவிகளுக்கு விழிப்புணர்வு தரத் தொடங்கினேன். சுற்று வட்டாரங்களில் உள்ள ஊர்களுக்குச் சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். நம்மால் நிச்சயம் படிக்க முடியும் என்று அவர்களிடம் நம்பிக்கை விதையை விதைக்கத் தொடங்கினேன். அதற்கும் பலனும் கிடைத்து வருகிறது. இப்போது பார்வையற்ற மாணவிகள் பலரும் கல்லூரிகளில் படிக்கிறார்கள். அது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது’’ என்கிறார் ராதாபாய்.

ராதாபாய்க்கு கண்கண்ட துணையாகத் திகழ்கிறார் அவருடைய கணவர் லட்சுமி நாராயணன். திருமண வாழ்க்கைக்குப் பிறகும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர திருமண வாழ்க்கை என்றுமே தடையாக இருந்ததில்லை. தற்போது தஞ்சையில் உள்ள மதர் தெரஸா ஃபவுண்டேஷனுடன் இணைந்து எல்லாத் தரப்பு மாணவ மாணவிகளுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வரும் ராதாபாய், வாழ்க்கையில் முன்னேற, பயம் இருக்கக்கூடாது என்கிறார்.

“எந்த ஒரு செயலையும் தொடங்கும்போது நன்றாகவே தொடங்குகிறோம். இடையில் தோற்றுவிடுவோமோ என்ற பயம் வரவே கூடாது. அப்படியே தோல்வி வந்தாலும் முயற்சி செய்யத் தயங்கக் கூடாது. நான் பி.ஹெச்டி. படித்தபோது என்னுடைய கட்டுரைகளைச் சாதாரண கம்ப்யூட்டரில் நானே டைப்பிங் செய்தேன். ஒவ்வொரு கீ-க்கும் என்ன வார்த்தை என்பதை மனதில் ஏற்றிக்கொண்டு டைப் செய்தேன். முடியவில்லை என்று நினைத்திருந்தால் முடங்கியிருப்பேன். இப்போது தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. பார்வையற்றவர்கள் நல்ல முறையில் படித்து முன்னேற முடியும். சாதித்துக் காட்டவும் முடியும்’’ என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ராதாபாய்.

ராதாபாயின் வார்த்தைகள் பார்வையற்றவர்களுக்கு மட்டுமா?

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்