/* up Facebook

May 13, 2014

செய்யப் படுதலை செரிக்கும் கவிதைகள் – திலகபாமா


இது கவிதை செய்யப்படும் காலம். படைப்பை விட நேர்த்தியாகவும் சரிவிகிதத்திலும் செய்து நவீன கவிதை எனும் பேரெடுப்பது மிக எளிதாகி விட்டது. அது மட்டுமே நவீன கவிதையாயும் உலா வருகின்றது.

கவிதைக்கான கனங்களை உணருவதற்கான பொறுமை அருகிப் போய் விட்ட கால கட்டத்தில் தான் “வெற்றிடத்தை நீலத்தால் நிரப்பும் வானம்” கவிதைத் தொகுப்பு அமிர்தம் சூர்யாவிடமிருந்து எனக்கு கிட்டியது.

தொடர்ந்து கவிதை எழுதப்பட்ட காலங்களில் வாசித்திருந்த போதும், அதனூடான உரையாடல்களை விவாதங்களை ஏற்கனவே நிகழ்த்தியிருந்த போதும் ஒரு தொகுப்பு கவிஞனின் நினைவு மனம் அறிந்து வைத்திருந்த செய்யப் படுதலை தாண்டி அவன் நினைவிலி மனம் கவிதைக் காண கனங்களை அனிச்சைச் செயலாய் கண்டு கொண்டதை நம் முன்னே போட்டுவிட்டுப் போயிருக்கின்றது. எந்த கவிதைத் தொகுப்பு வாசிப்பிலும் என் முதல் தேடல் அப்படியான நினைவிலி  கவிதை மனத்தை அடையாளம் காண்பதாகவே இருந்திருக்கின்றது. இரண்டாவது வாழ்க்கின்ற வாழ்விற்கு எவ்வளவு  நெருக்கமாக இருக்கின்றது என்பதுவும்.

மேலோட்டமாகப் பார்த்தால் காதலும் காமமும் அதிகம் பேசப்பட்டதாய்த் தோன்றும் இத்தொகுப்பிற்குள் ஒரு சாமான்யனின் இயலாமை, தோல்விக்குப் பயந்து தொலைபவனாக கதை சொல்லியாக ஆண் பெண் உறவுகளுக்குள் சிக்கியும் சிக்காமலும் வாழும் ஆணின் தடயங்களாக சமூகம் மனிதன் மேல் திணித்துவிட்டுப் போன தலைமுறை வாசனையை நுகர்பவனாக, பெண்ணின் புதிதான பக்கங்களை வாசித்துவிட ஆர்வக் கோளாறு கொள்ளும் இளைஞனாக ஆம் இப்படி எல்லாமுமாக இருப்பதுவே இயல்பு, ஒன்றில் நிலைத்து விடாது அனுபவித்த வாழ்வை உணர்வுகளின் இறுகிய வடிவத்தை வடிவமாக்கும் சூத்திரதாரியாக வெற்றிடத்தை நீலத்தால் நிரப்பும் வானம் கவிதைத் தொகுப்பு கவிஞரை அறிமுகப்படுத்துகிறது நம்மிடம்.

வாழ்க்கை எனும் விளையாட்டில் சிலர் எதிர்த்து விளையாடுகின்றனர். சிலர் போராடுகின்றனர். சிலர் உடன் விளையாடுபவர்களுடன் உடனிருக்கிறார்கள். பார்வையாளனாய் இருக்க நேர்வது தோல்வியை சந்திக்க மறுத்தவனின், அஞ்சுபவனின் இடமது. அதை அவ்வுணர்வை ஆல்பமெனும் படிமமாக்கி தேடிச் செல்கிற கவிதை

“பிறகெப்படி தயாரிப்பது ஆல்பத்தை”

கவிதைகளின் சில வரிகளைச் சொல்லி இதில் இவையெல்லாம் இருக்கின்றது இந்த வெளிநாட்டுக் கலைஞனின் சாயலில் இருக்கிறது என்றெல்லாம் எனக்கு சொல்லத் தெரியாது. முழுக் கவிதையின் வாசிப்பில்  உணர்வுகள் படிமமாவதின் நேர்த்தியை உணரலாம்.

இளம்பிராயத்தில் கூட

வாங்கியது கிடையாது

பட்டாசுநெருப்பைத் திரியில் ஒட்டவைப்பதைத் தவிர

வாங்கி வெடிப்பவனுக்கும்

பார்த்து ரசிப்பவனுக்கும்

வித்தியாசம் தெரியாததால்…பார்வையைப் பதியமிடுவேன்

வழக்கம் போல் நின்றபடி

ஏளனத்தை சிரிப்பால் செதுக்கி

வேடிக்கை பார்க்கத்தான் லாயிக்குயென்பர்.

சூதாடும் நண்பர்களிடம்

நானும் சொல்லி வைத்தேன் –

நால்வராயும் நானே மாறியாடியதைஅப்பா சொல்வார்:

‘பார்வையாளனாய் வாழத் தெரிவது

ஞானியின் அம்சம்’

திருஷ்டி கழிப்பாள் –

‘எம்மவன் தாமரை மாதிரி,

ஒத்தி வைத்திருக்கிறேன் – அசல்

முகங்களின் ஆல்பத் தயாரிப்பை.

தோற்க பயந்து பயத்தை மறைத்து

நத்தை ஓட்டிற்குள்

இழுத்துக் கொள்ளுமென் முகம்

இல்லவேயில்லை ‘நெகடிவ்’விலும்.

கவிதை வாசித்து முடிக்கின்ற போது நம்முடைய நிஜமுகம் எந்த புகைப்படத்திலாவது இருக்குமா? என்ற கேள்வி எழும்பி வருவதின் மூலம் கவிதையின் உணர்வுகளை கவிஞனுக்கானதாய் மட்டுமல்லாது நமக்குள் கடத்தியிருப்பதையும், அதற்கு உணர்வுகள்  படிமமாகியிருப்பதுதான் காரணம் என்பதும் புரிய முடிகிறது.

17வது கவிதையில்

“… மக்கா எம்வூட்டு ஆதி சொத்து அம்போன்னு கொள்ளப் போதே”

இறப்புக்கு எதிரான வாழ்வின் நெடியை யாருக்கும் தெரியாமல் கொள்ளையடித்துச் செல்கிறார்கள் துக்க வீட்டிற்கு வந்தவர்கள் எனும் போது வாழ்வும் இறப்பும் எதிரெதிர் படிமமாய் தூக்கி அல்லது கொள்ளையடிக்கக்கூடிய சொத்தாய்  தொட்டுணர முடியாத  நெடி மாறுவதையும்,மரிக்காமல் பின் தொடருகின்றது ஒப்பாரியின் கடைசி வரி எனும் போதும் இல்லாத ஒன்று தொடருகின்ரதாய் உணரச் செய்கின்ற மொழியின் வல்லமையும் தெளிவாகின்றது.

பாலியல் குளத்தில்,

அது பாலியல் குளமல்ல, இந்த இடத்தில் கவிஞரிடமிருந்து நான் வேறுபடுகின்றேன்ஆண் பெண் எனும் gendera ஐ பற்றியதான பேச்சே அது sex ஐ பற்றியதானது அல்ல வெண் தாமரையும், செந்தாமரையும் ஆணும் பெண்ணுமாய் பூத்திருப்பதும், பிணைக்கப்படுதலும், முடிச்சுகள் அவிழ்வதுவும், கசக்கி வீசப்பட்டு காய்ந்து கிடக்கும் பூக்களைப் பற்றி கவிதை பேசுகையில் படிமமாகிய நான் நீ என்ற உணர்வுகள் நம்மை . வாழ்வியல் குளத்தில் பூக்க வைத்து, நாம் இதில் எந்நிறப் பூ, நாங்கள் தேர்ந்தெடுத்து பிணைக்கப் பட்டோமா? வேறுவழியில்லாமல் பிணைக்கப் பட்டோமா என்ற மனக் கேள்விகளை காட்சியாக்கிப் போகின்றன. ரொம்ப சிறப்பாக காட்சியமைக்கப் பட்ட கவிதை இது.

பல கவிதைகள் நம்மிடையே வெறுமனே உணர்வுகளைத் தந்து போகாமல் கதை சொல்லி கதைகளூடாக காட்சியாகிப் போகின்றன.

48, இப்படித்தான் நடந்திருக்கும்

பசித்த காகமும், வெடித்த மதிலும், இரண்டுமே நாமாகிப் போகின்ற வித்தையை மொழி ஆற்றுகின்றது

இவையெல்லாம் உணர்வுகள் இறுகி பருப் பொருளாய் உருமாறச் செய்து தொடவும், காணவும் சுவைக்கவும் வைத்த வேதியியல் மாற்றங்கள்

அடுத்து இன்று எல்லாக் கவிஞர்களுக்குள்ளும் இருக்கின்ற அவஸ்தை பெண்ணின் உணர்வுகளைச் சரியாக புரிந்து கொண்டோமா என்ற கேள்வியும் காண்பதற்கான ஆவலும்

16, பிரசவக் கவிதைகள்

பிரசவம் குறித்து பெண்ணின் உணர்வுகளாக பேசப்படுகின்ற கவிதை புதுப்பார்வை.

வலியாக மட்டுமே உணரப்படுகின்ற பேசப்படுகின்ற பிரஸ்தாபிக்கப்படுகின்ற ஒரு விசயம் வேறொன்றாகவும் ஒரு பெண்ணின் கற்பனைகள் விரிகின்ற இடமாகவும் மாறிப் போகின்ற உணர்வை படிமமாக்கியிருக்கின்ற கவிதை. எனக்கு அந்த அனுபவத்தோடு உடன்பாடுண்டு. பிரசவ நேரத்தில் வலியை உற்று பார்க்க வைத்தார் எனது  பெரியம்மா. அதற்குப் பின்னால் எனது வலிகள் குறித்த தரிசனங்கள் மாறியது.  எனது நாவலில் அது பேசப் பட்டிருக்கும்

பெண்கள் அதிகாரம் புகழ் கலவி மது தியானம் போன்ற போதைக்குள் சிக்காமல் இருப்பதற்கான காரணம் பிரசவத்தின் வலிக்குப் பின்னாலான இன்பத்தை  அனுபவித்து விடுபதுவே என்ற புதிய தரிசனத்தை தந்து போகின்றது. இக்கவிதை. நிறைய பெண்கள் இன்று ஆண்களாக மாறிக் கொண்டு வருகின்றார்கள் அதற்கு நான் பொறுப்பல்ல\

Face book பாதிப்பினால் எழுதப் பட்ட  காதல் கவிதைகள் செரிபடாத காதல் கவிதைகள்

தெருவில்  வரையப் பட்டு வரையப் பட்டவன் முகம் தெரியாமலேயே எற்ரியப் பட்ட களவாடப் படாத காசுகள் இருக்கையில் என் காதல் களவாடப் படுமா எனும் கேள்வியிலும்

கோலம் தின்னும் கறுப்பு எறும்பின் கூற்றில் மனிதன் தின்னும் வாழ்வியல் கோல பிம்பம் நமக்கு காணக் கிடைக்கும் போதும் ,  நாம் வியக்கின்ற சம்பவங்கள் வாழ்வியலோடு நெருங்கி விடுகின்ற போது வேஎறொன்ராய் பரிணமித்து விடுகின்றன.

கவிதைகளில் கால்நீட்டிப்

படுத்திருக்கும் நிழல்

என செய்யப் பட்ட கவிதைகள் வாழ்வியலுக்காக நிகழ்ந்து விடுகின்றபோது செரித்து விடுகின்றன

இவரது கவிதைகள் பல நல்ல கதை சொல்லிகளாக உலா வருகின்றன.

3.காதலின் ஆன்மாவை அவதானித்தல், வீடுபேறு போன்ற கவிதைகள் உணர்வு படிமங்களாதல், கதை சொல்லியாதல், காட்சிப்படுத்துதல், மொழி தானே. அப்பொருளாய் உருமாறிக் கொள்ளுதல் என பல முனைகளிலிருந்தும் மொழி பல்வேறு அனுபவங்களைத் தந்து போகின்றது.

வாழ்வு தருக்கின்ற நிர்பந்தங்களிலிருந்து முரண்படுவதும் சிலநேரம் இணக்கமாவதுமாகவே எல்லாருடைய வாழ்வும் பயணிக்கின்றது. பல்வேறு ருசிகளை அனுபவித்த போதும் , ஒற்றை ருசியை மட்டுமே அனுபவிப்பதாய் எப்பவும் சலித்துக் கொள்கின்ற மனநிலையிலிருந்து தப்பி விட்டவனுக்கே பசிக்கு, காதலுக்கு, இருப்பு, வாழ்வு, போர் இவற்றுக்கு பல்வேறு கிளைகளும் உண்டு என்பது புரியும் .போது இக்கவிதைகளுக்கும் வாழ்வியலுக்கும் உள்ள தொடர்பும் புரிபடும்

 நன்றி - மலைகள்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்