/* up Facebook

May 15, 2014

தலித் பெண்களுக்கான மேம்பாட்டில் ‘சதுரகிரி கானகம்’: சாதனைப் பயணத்தில் செந்தமிழ்ச் செல்வி - குள.சண்முகசுந்தரம்‘தலித் பெண்களுக்காக, தான் தொடங்கியுள்ள ‘சதுரகிரி கானகம்’, பெரிய ஆராய்ச்சி மையமாக வளரணும்’ என்கிறார் செந்தமிழ்ச்செல்வி.

யார் இந்த செந்தமிழ்ச்செல்வி?

14 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் ‘இளவட்டம்’ என்ற அமைப்பைத் தொடங்கி, கல்லூரி மாணவர்களுக்கு சாதிய கொடுமைகள், மூன்றாம் பாலினம், சுற்றுப்புறச் சூழல், மறைந்து போன விளையாட்டுகள், கிராமியக் கலைகள், பண்டைய விவசாய முறைகள் குறித்து விழிப்புணர்வு பட்டறைகளை நடத்தியவர். ஒன்பதாண்டு காலம் இந்தக் களத்தில் இருந்தவர். பிறப்பால் தலித் இல்லை என்றாலும் செந்தமிழ்ச்செல்வியின் சிந்தனையும் செயலும் தலித் முன்னேற்றத்தையே முற்றமிடுகிறது.

எம்.எஸ்.டபிள்யூ (சமூக நலன்) படிப்பை முடித்துவிட்டு, ‘தலித் பெண்களும் விவசாயமும்’ என்ற தலைப்பில் பி.ஹெச்டி. பட்டமும் பெற்றிருக்கும் இவருக்கு, 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை என்ற காரணத்தைக் காட்டி குடும்பத்தில் பிரச்சினைகள் தலைதூக்கியதால், திருமண வாழ்க்கையை உதறித் தள்ளிவிட்டு தனியாக வந்துவிட்டார். தான் நடத்தி வரும் சதுரகிரி கானகம் பற்றி அவரே சொல்கிறார்...

மதுரையில் அப்பா எனக்காக பத்து சென்ட் இடம் கொடுத்திருந்தார். அதை விற்று வத்திராயிருப்பு சதுரகிரி மலைக்கு பக்கத்துல எட்டு ஏக்கர் நிலம் வாங்கினேன். அந்த இடத்துக்கு ‘சதுரகிரி கானகம்’னு பெயர் வைத்து தலித் பெண்களுக்கு தொன்மை மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த இயற்கை விவசாய பயிற்சிகளை கொடுக்க ஆரம்பிச்சேன். எல்லோரும் இப்ப பயிற்சியை முடிச்சிட்டாங்க. இனிமே அவங்க உற்பத்தி களத்துக்கு போகணும்.

பயிற்சி முடிச்ச பெண்களை குழுவுக்கு பத்து பேர் வீதம் ஆறு குழுக்களா பிரிச்சு, அவங்களுக்கு மூணு ஏக்கர் நிலத்தை ரெண்டு வருட குத்தகைக்கு இனாமா பதிவு பண்ணிக் கொடுத்தாச்சு. மூன்று குழுக்கள் அந்த நிலத்துல கம்பு, சோளம், திணை, காளான்களை பயிர் பண்ணுவாங்க. மற்ற மூணு குழுக்கள் அதில் கிடைக்கும் சாகுபடியை மதிப்புக்கூட்டிய பொருட்களாக மாத்தி விற்பனைக்கு அனுப்புவாங்க.

இதுமட்டுமில்லாமல் பனை பொருட்கள், தென்னை விசிறி போன்றவற்றை தயாரிக்கும் பயிற்சிகளையும் அவங்களுக்கு கொடுக்க ஆரம்பிச்சிருக்கோம். அம்மா மட்டும் என்கூட இருக்காங்க. சாதிய விஷயங்களை அவங்க எந்தளவுக்கு உள்வாங்கி இருக்காங்கன்னு தெரியல. ஆனா, தலித் மக்களுக்காக நான் செய்யும் நல்ல காரியங்களுக்கு அவங்க ஒத்துழைக்கிறதும் இல்லை; எதிர்ப்பு காட்டுறதும் இல்லை.

இந்த சதுரகிரி கானகம் தலித் பெண்களுக்கான ஆராய்ச்சி மையமா வளரணும். இது முழுக்க முழுக்க தலித் பெண்களுக்கு மட்டுமே பயன் படணும்னு உயில் எழுதி வைச்சிருக்கேன்.

நிலங்களும் காடுகளும் தலித் மற்றும் பழங்குடி மக்களிடம்தான் இருந்தது. அவற்றை எல்லாம் நம் முன்னோர்கள்தான் அவர்களிடமிருந்து அடித்துப் பறித்திருக்கிறார்கள். விவரம் புரியாத தலித்கள், பீடிக்கும் புகையிலைக்கும் தங்களது நிலங்களை எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். அதை எல்லாம் நாம் தானே அவங்களுக்கு திருப்பிக் கொடுக்கணும். அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன்.

சாதியம் பேசுபவர்களுக்கு சவுக்கடி கொடுப்பதுபோல பேசுகிறார் செந்தமிழ்ச்செல்வி.

நன்றி - தி ஹிந்து

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்