/* up Facebook

May 1, 2014

குடும்பத்தின் சுமையா பெண்கள்? - செபா


இந்தியக் குடும்பங்களில் பெண் குழந்தைகள் பிறந்தால் “லட்சுமி வந்துட்டா” எனக் குதூகலிப்பார்கள். வீட்டிற்குத் தேவையான அத்தனை செல்வங்களையும் அள்ளிக் கொடுக்கப் போகிறவள் என்னும் எண்ணத்தில் மகிழ்கிறார்கள். இப்படித்தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையிலேயே பெண் குழந்தைகள் விருப்பத்துடன் எதிர்கொள்ளப்படுகிறார்களா என்னும் சந்தேகத்தை எழுப்புகிறது சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று.

பெண்களின் உடல்நலம், கல்வி, அரசியல் உரிமை, சொத்துரிமை, பெண்கள் மீதான சமூக, குடும்ப வன்முறை போன்ற பல்வேறு அம்சங்களைக் கணக்கில் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

ஜி 20 நாடுகளில் வசிக்கும் பெண்களின் நிலைமை குறித்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளை இந்த ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வில் 63 நாடுகளைச் சேர்ந்த 370 பாலின நிபுணர்கள் பங்குகொண்டனர். பெண்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் நாடுகளில் முதலிடம் பிடித்துள்ளது கனடா. நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் இந்த 20 நாடுகள் பட்டியலில் இந்தியா 19-ம் இடத்தையே பிடித்துள்ளது. பெண்களின் நிலைமையைப் பொறுத்தவரையில் சவுதி அரேபியாவைவிட இந்தியா மோசமான நிலையில் இருக்கிறது. இந்தியாவில் பெண்கள் ஒதுக்கிவைக்கப்படுகிறார்கள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். சில சம்பவங்களில் கொலைகூடச் செய்யப்படுகிறார்கள் என்று கூறும் அந்த அறிக்கை, பெண்கள் மீதான கரிசனத்தைக் கோருகிறது.

இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் கூட ஆண் குழந்தைகள் மீதான விருப்பம் கொண்டதாகவும் பெண் குழந்தைகளைக் கருவிலேயே அழிக்கக் கூச்சப்படாததாகவும் நம் சமூகம் உள்ளது. ஆகவே பெண் குழந்தைகள் கருவில் தப்பிப்பித்து வருவதே அதிசயம்தான் என்கிறார் ஷிமீர். இவர் மேப்ஸ்4எய்ட்.காம் என்னும் இணையதளத்தை நடத்திவருகிறார். இந்த இணையதளம் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபட்டுவருகிறது.

பெண் குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகிறார்கள், பெண்கள் வன்புணர்வு செய்யப்படுகிறார்கள், திருமணமான பெண்கள் வரதட்சணைக் கொடுமைக்கு ஆளாகிறார்கள், கணவனை இழந்த கைம்பெண்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள், சொத்துரிமை மறுக்கப்படுகிறது என அடுக்கிக்கொண்டே செல்கிறார் அவர். இதை எல்லாம் மீறி வந்துதான் பெண்கள் சாதிக்கிறார்கள்.

இந்தியாவின் வட பகுதிகளில் பெண்களை மட்டமாக நினைக்கும் போக்கு நிலவுகிறது. பெண்களை வீட்டைக் கவனிப்பவர்களாகவும், குழந்தைகளைச் சுமப்பவர்களாகவும் அவர்களைப் பராமரிப்பவர்களாகவும் மட்டுமே கருதுகிறார்கள். மேலும் பெண்களைத் திருமணம் செய்து கொடுக்க வரதட்சணை தேவைப்படுவதாலும், பெண்களின் பாலியல் விருப்பங்கள் குடும்ப கவுரவத்திற்கு இழுக்கு தரும் என்பதாலும் பெண்களைச் சுமையாகவே நினைக்கிறார்கள்.

கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் ஒரு கோடியே 20 லட்சம் பெண் சிசுக்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன என 2011-ல் லான்செட் நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சியூட்டுகிறது. இதன் காரணமாக பாலினச் சமநிலை சரிகிறது. பெண்கள் மீதான வல்லுறவு அதிகரிக்கிறது. சில பகுதிகளில் சகோதரர்கள் மனைவியைப் பகிர்ந்துகொள்கிறார்கள். குழந்தைத் திருமணங்களால் பெண்களின் கல்வி பாழாகிறது. இந்தியப் பெண்களில் 45 சதவிகிதத்தினருக்கு 18 வயதுக்கு முந்தியே திருமணம் செய்துவைக்கப்படுகிறது என்கிறது பெண்கள் தொடர்பான ஆய்வை மேற்கோள்ளும் சர்வதேச மையம் ஒன்று.

இதே நாட்டில் பிரதமராகப் பெண் இருந்திருக்கிறார், குடியரசுத் தலைவராக ஒரு பெண் பதவிவகித்துள்ளார். நகரத்தின் சுறுசுறுப்பான வீதிகளில் நாகரிக உடையணிந்து பணி நிமித்தம் செல்லும் நவீனப் பெண்கள் இரு சக்கர வாகனங்களில் சிட்டாய்ப் பறக்கிறார்கள், ஸ்டைலாக கார் ஓட்டிச் செல்கிறார்கள். டாக்டராகவும் வழக்கறிஞராகவும் அரசு அதிகாரியாகவும் சமூகத்திற்குப் பங்களிக்கிறார்கள்.

இத்தனையும் ஒரு புறம் நடக்கிறது. மறுபுறத்தில் பெண் சிசுக்கள் வலுக்கட்டாயமாகக் கலைக்கப்படுகின்றன, குழந்தைத் திருமணங்கள் அரங்கேறுகின்றன, பெண்கள் கவுரவக் கொலைகளுக்கு ஆளாகிறார்கள், குடும்ப வன்முறைக்குப் பலியாகிறார்கள், கடத்தப்படுகிறார்கள் வன்புணர்வு செய்யப்படுகிறார்கள் என்பது வேதனையூட்டுகிறது.

நன்றி - தி ஹிந்து

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்