/* up Facebook

Apr 22, 2014

கற்பு எனப்படுவது யாதெனில்…….ஒரு நோக்கு - ஆருத்ரா


கற்பு எனப்படுவது யாதெனில்…..இந்த கற்பு சம்பந்தப் பட்ட வியாக்கியானம் எனக்குப் புலப் படவேயில்லை. கற்பு ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானது என்பது சிலரது கருத்து.வேறு சிலரோ பெண்கள் மட்டுமே கற்போடு இருக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றனர். சில பெண்களோ ஏன் அவர்கள் மட்டும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாமா என்கின்றனர்.(குழப்புறாங்களே சாமி) இந்திய பண்பாட்டில் கற்பு என்பது  மிகவும் உயர்வான ஒருவிஷயமாகப் போற்றப்படுகிறது. கற்புடைய பெண்கள் கடவுளுக்கு சமானம் என்கிறர்கள். சிலர் கற்பு மன ரீதியானது என்கிறார்கள். வேறு சிலரோ கற்பு உடல் ரீதியானது என்கிறார்கள். பல சந்தர்ப்பங்களில், பெண்கள் இலகுவாக வசப்படும் பட்சத்தில் 'பெண்களுக்கு கற்பு தேவையில்லை' என்று ’பரந்த’ மனப் பான்மையுடன் ஆண்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். கற்பு பெண்களுக்குப் பாதுகாப்பான வேலியாக அமைகிறதா? அல்லது பெண்களுக்கு  முள்ளாக வதைக்கிறதா? முக்கியமாக சமூகத்தில் பெண்கள் வளர்ச்சிக்கு கற்பு தடைக்கல்லாக இருக்கிறதா?
எனக்குத்தலை சுற்றுகிறது…..

புராணங்கள் மற்றும் இதிகாசங்கள்  காட்டும் கற்பு:

ஜமதக்னி முனிவரின்  மனைவி ரேணுகா, பரசுராமரின் தாய்,  வானத்தில் சென்ற தேவேந்திரன் நிழல் கண்ட ரேணுகாவின் மனது ’தேவேந்திரனின் அழகினை வியந்த’ காரணத்தினால், கற்பிழந்ததாகக் காட்டப் படுகிறார். 
அருந்ததி( இந்துத் திருமணங்களில் அம்மி மிதித்தவுடன் காண்பிப்பார்களே)   மற்றும் பஞ்சகன்னிகைகள்  என்று , அழைக்கப்பெறுகின்ற கௌதம முனிவரின் மனைவி அகலிகை, பஞ்ச பாண்டவர்களின் மனைவி பாஞ்சாலி, இராமபிரானின் மனைவி சீதை, வாலியின் மனைவி தாரை, இராவணனின் மனைவி மண்டோதரி ஆகியோர் கற்பில் சிறந்தவர்களாகப் போற்றப் படுகிறார்கள் அத்திரி முனிவரின் மனைவி அனுசூயா  கடவுள்களான பிரமா, விஷ்ணு, சிவனைக் குழந்தையாக்கி , நிர்வாணமாக நின்று விருந்தோம்பியதாக புராணம் போற்றுகிறது.

ஐவரை மணந்த பாஞ்சாலி சிறந்த கற்புடையவள் எனப் போற்றப்படுகிறாள்.அவள் ஒரு சந்தர்ப்பத்தில் பாண்டவரைக் காணும் முன் கர்ணனிடம்  மனம் சபலப்பட்டதாக கிருஷ்ணர் கூறுவதாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது. பாண்டவரைக் கூட குந்தியின் புத்திரர்களே என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் அவர்கள் பாண்டுவின் புத்திரர் அல்ல. பாண்டுவும், திருதராஷ்டிரனும் கூட தங்கள் தந்தைக்குப் பிறக்கவில்லை. அவர்களின் பாட்டன் சந்தனு மகாராஜாவின் மீனவ குல மனைவி மச்சகந்திக்கு பிறந்தவர்கள். மச்சகந்தி கூட அவர்களை சந்தனு மூலம் பெறவில்லை. அவளது முதல் தொடர்பான  பராசர் என்ற முனிவர் மூலம் பெற்றாள். அப்படி  பிறந்த வியாசருக்கும் பாண்டு, திருதராஷ்டிரனுடைய தாய் அம்பிகை , அம்பாலிகைக்கும் பிறந்தவர்களே பாண்டுவும், திருதராஷ்டிரனும். (ஐயோ,  கொல்றேனா? நான் இல்லை. நதி மூலம் ரிஷி மூலம் பார்க்காதீர்கள் என்பது இதுதான் ). இவர்கள் தவிர  தன் கணவனாகிய மௌத்கல்ய முனிவரைக் கூடையில் வைத்து தேவ தாசியிடம்  அழைத்து சென்ற நளன் மகள்  நளாயினி, சூரியனைக் கட்டி  நிறுத்தும் அளவுக்கு சிறந்த  பத்தினியாகப் போற்றப்பட்டவள். இப்படி புராணம் போற்றும் ’கற்பு’க்கரசிகள் பலர்.

இலக்கியங்களிலும் இலக்கணங்களிலும் தமிழர் கற்பு  

‘கற்பெனப்படுவது பிறர் நெஞ்சு புகாமை’ எனத் தொல்காப்பியம் இலக்கணம் வகுக்கிறது. பெண்கள் என்பவள் சிறந்த பண்புடன் விளங்க வேண்டும் என்பதை,
கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்
மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் என்ன கிழவோள் மாண்புகள்
’   என்றும் தொல்காப்பியம் சொல்கிறது.

கற்பு என்பது ஒரு நடைமுறை சித்தாந்தம் அல்லது கருத்தியல் என்பது ஒரு பார்வை. அன்றாட வாழ்க்கையில் செயல்படுத்தப்படும் ஒரு வாழ்க்கைநோக்கு. ஒழுக்கம் என்று ஒட்டுமொத்தமாக வரையறைப்படுத்தபட்டது  எனலாம். கருத்தியல் என்பது ஒரு மாறும் விடயமாகும். கருத்தியல் சார்ந்த நெறிமுறைகள்  எல்லாச் சமுதாயங்களிலும் ஒன்றுபோல் பின்பற்றப் படுவதில்லை.நெறிமுறைகளை வகுத்துக் கொள்வதில் சமுதாயங்கள்  வேறுபாடுகள் காட்டுகின்றன. அதன் இலக்கணம் காலத்துக்கு காலம், தலைமுறைக்குத்தலைமுறை, சாதிக்குச்சாதி, இடத்துக்கு இடம் மாறிக்கொண்டேதான் இருக்கும். ஒரு சமூகத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஒழுக்க நெறி இன்னொரு சமூகத்தில் மறுக்கப் பட்டதாக இருக்கும். அத்தனை பேரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒழுக்க நெறிகளைப் பேணுவது சாத்தியமல்ல.

ஆகவே கற்பு என்பது எப்போதும் ஒரு குறிப்பிட்ட சூழலில் ஒரு காலகட்டத்தில் பொதுவாக ஏற்கப்பட்ட ஒழுக்கநெறி என்று கொண்டால், குடும்பம் என்ற கட்டமைப்பை உருவாக்கி நிலைநாட்டுவதற்காக உருவாக்கப்பட்ட நெறி என்று அதைச்சொல்லலாம். குடும்பம் செயல்படுவதற்கு சாதகமாக இருப்பவை எல்லாமே கற்புதான் என்றே அது புரிந்து கொள்ளப் பட்டிருக்கலாம். ஆனால் எது எல்லா தரப்பினருக்கும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரே  நெறியாக அமைய வேண்டும் என்பது எப்படி சாத்தியப்படும்?

கற்பின் அர்த்தம் என்ன?

கற்பு என்ற வார்த்தை ‘கல்’  என்ற சொல்லிலிருந்து வந்ததாகும். ஞானம் , அறிவு போன்ற ஒத்த அர்த்தம் கொண்டது. நாலாயிரம் திவ்ய பிரபந்தத்தில் , ‘பெரிய திருமொழி’யில் திருமங்கை ஆழ்வார் 
ஆழி ஏந்திய கையனை, அந்தணர் கற்பினை கழுநீர் மலரும் வயல்
கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே
'. என்கிறார்.

இங்கு 'அந்தணர் கற்பு' என்றால் ‘சான்றோர் ஞானம்' என்ற பொருளில் வருகிறது.

‘கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
கொளற்குரிய மரபிற் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள்வதுமே
' என்கிறது  நச்சினார்க்கினியர் உரை தொல்காப்பியம்.
கொண்டானிற் சிறந்த தெய்வம் இன்றெனவும்,
அவனை இன்னவாறே வழிபடுகவெனவும் இருமுது குரவர் கற்பித்தலானும் ‘அந்தணர் திறத்துஞ் சான்றோர்தே எத்தும்
’,
ஐயர் பாங்கினும் அமரர்ச்சுட்டியும் ஒழுகும் ஒழுக்கம் தலைமகன் கற்பித்தலானும் கற்பாயிற்று’ என்றும் ‘கற்றல்’ என்ற பொருளிலேயே கற்பு என்ற சொல் நச்சினார்க்கினியர் உரையில்  பயன்படுத்தப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் கற்பு என்பதற்குத் ’திண்மை’ என்று பொருள் பட

பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மை உண்டாகக் பெறின்
’  என்ற குறளில் கூறுகிறார்.

சிறை காக்கும் காப்பு எவன் செய்யும்
நிறைகாக்கும் காப்பே தலை
’  என்கிறது இன்னொரு குறள், மகளிரை சிறையில் வைத்துக் காக்கும் காவலால் பயன் இல்லை. அவர் தாமே கற்பு நெறியில் நின்று தம்மைக் காத்துக் கொள்வதே சிறந்தது என்பது இக்குறளின்  பொருளாகும்.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய் எனப் பெய்யும் மழை
’   கணவனைத் தொழுபவளே கற்புடையவள் என்றும் ஒரு குறளில் கூறுகிறார்.

கற்பெனப்படுவது சொல் திறம்பாமை’  என்கிறது  கொன்றை வேந்தன். வார்த்தையில் உறுதியாக நிற்றல் என்று அர்த்தம்.

கற்பு என்பது கணவனிலும் தெய்வம் வேறில்லையென எண்ணிக் கலங்காது அவனை வழிபடுவது’ என்கிறது அபிதான சிந்தாமணி.

நிறையில் காத்துப் பிறர்பிறர்க் காணாது
கொண்டோன் அல்லது தெய்வமும் பேணா
பெண்டிர் தம்குடி
” (மணிமேகலை).

கற்பு நெறியில் தன்னைக் காத்துக்கொண்டு, பிறர் தன்னைக் காணாமலும், பிறரைத் தான் காணாமலும் வாழும் பெண்கள்; கணவனைத் தவிர பிற தெய்வத்தை வணங்காத பெண்கள் பத்தினிப் பெண்டிராவர் என்கிறது மணிமேகலை.

இவை நான் அறிந்த  சில உதாரணங்கள் தாம். மேலும் பல இலக்கண இலக்கியங்களை படித்து அவற்றை ஆய்வு  செய்து பிரித்து மேய்ந்து பொருள் சொல்லும் அளவுக்கு எனக்கு வயதும் ’டமில்’லும்  ஒத்துழைக்காது. 
ஆனாலும் என் சிற்றறிவுக்கு எட்டிய அளவில் இலக்கியங்கள், ஆண் பெண் இருவரும் காதலுக்குப்  பிறகு, இருவருடைய உறவையும் உறுதிப் படுத்த நிகழ்த்தும் சடங்கினையே  ‘கற்பு' என்கின்றன. நிறை என்ற சொல்லுக்குப் பொருளைப் பார்த்தால் அழிவின்மை, உறுதிப்பாடு, நூல்வழியும் சமூக மரபுப்படியும் பெறும் அறிவு என்கின்ற பொருள்களே காணப்படுகின்றன. 
பல இடங்களில் ‘கற்பு' மகளிர் நிறை என்று  பொருள்படவே காணப்படுகின்றது.ஆனால்  நிறை என்பது பெண்களையே குறிக்கும் பதமாக எந்தக் காலத்தில்  ஏன் எப்படி ஏற்பட்டது என்பது விளங்கவில்லை.

சங்ககாலத்தில் பெண்ணின் கற்பையும் மகளிர் உடல் ரீதியான ஒழுக்கத்தையும்  இணைத்துப்பார்க்கும் வழக்கம் இருந்ததாகவே தெரியவில்லை.  குல வழக்கப் படி, நல்ல நூல்களின் அறிவுரைப்படி திருமணம்செய்துகொள்பவள் கற்புடையவள் என்பதே என் புரிந்துணர்வு.
முதன் முதலில் ‘சிலப்பதிகார’ காலத்தில் தான் பதிவிரதா தன்மையும், கற்பும் பெண்ணைச் சார்ந்த அம்சங்கள் என அடையாளம் காட்டத் தொடங்கி வைக்கப் பட்டன. தன் கணவன் மரித்தவுடன் அவனைத் தொடர்ந்து உயிர்நீத்த பாண்டியன் மனைவி கதா பாத்திரம் சிலம்பில் இருந்தே தொடங்குகிறது எனலாம்

சேரன் செங்குட்டுவன் தான் பெண்களுடைய 'கற்பு 'ப் பற்றிய விவாதத்தை முதலில் தொடங்கி வைத்தவன் எனலாம்.அதன் பின் தான் மக்கள் கற்பு என்ற தலைப்பில் பட்டி(வெட்டி)  மன்றம் நடத்த தொடங்கினர்.

கற்பு நிலை என சொல்ல வந்தார்,இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்’  என்றார் மகாகவி பாரதி .இதுவே எனது உறுதியான் நிலைப்பாடாகும்.கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது என்று புரிந்து கொள்ளவேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து. ஆண் எப்படி வேண்டியும் இருக்கலாம் என்றால் ,இந்திரன், சந்திரன், இராவணன்,  கிருஷ்ணன் இவர்களை எந்தப் பட்டியலில் சேர்ப்பீர்கள்? கடவுளர்களானால் கற்போடு( அப்படி ஒன்று நிரூபிக்கப் படும் பட்சத்தில்)  விளையாடலாமா? தசரதன், பாண்டு, போன்ற பலதார பிரியர்கள் எந்த வகையில் அடங்குவார்கள்?

ஆனால் காலம் மாறி விட்டது.ஆண்கள் கற்பிலிருந்து வெளிப்பட்டு  எங்களுக்கும் இந்த சமாச்சாரத்துக்கும் சம்பந்தம் இல்லை  என்று நிற்பது போன்றே இன்றைய பெண்களும் கற்பிலிருந்து – கற்பு கோட்பாட்டிலிருந்து விலகவே இன்றைய கால கட்டத்தில் விரும்புகிறார்கள். குறிப்பாக காதல் தோல்வி அடையும்போது கற்பு என்பதும் கேள்விக்குறியாகிறது நிதர்சனமாகும். எல்லா காதலும் நிறைவேறும் காதல் அல்ல.திருமண வாழ்க்கை இலகுவில் முறிந்து போகும் கால கட்டத்தில் இருக்கிறோம். திருமணத்துக்கு முன்பே சேர்ந்து வாழும் கலாச்சாரம் பரவி வருகிறது.(இது சங்க காலத்தில் இருந்த வழக்கமே- களவு எனப்பட்டது, களவினைச் சார்ந்தே கற்பு வந்தது 

ஆனாலும் கற்பு சமூகத்தின் உயரிய எல்லைக்கோடு என பலரால் கருதப் படுகிறது. அதை கடப்பவர் சிலரும்  உண்டு. அதைக் காப்பதாய் பாசாங்கு செய்பவர்களும் உண்டு.கற்பின்  நீதிபதி மனச்சாட்சி மட்டுமே  என்பது என் தாழ்மையான கருத்து. கற்பு என்பது உண்மையாக இருப்பது என்று எனக்கு அர்த்தமாகிறது. அது உண்மையாக இருப்பது - இரு தரப்பினரும் பேண வேண்டிய ஒழுக்கம் என்ற புரிதலே ஏற்படுகிறது.ஒருவர் அந்த ஒழுக்கத்தை மீறும் போது கற்பு அர்த்தமற்றதாகிறது என்பது என் கருத்து. அப்பாடி கற்பு பற்றி இப்படி ஒரு சற்றே பெரிய விளக்கத்தை மிக  ‘சுருக்கமாக’ச் சொல்லி விட்டேன்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்