/* up Facebook

Apr 8, 2014

விளிம்புநிலைப்பாடும் தலைக்கீழாக்கமும் - ஜூலியா கிறிஸ்தெவா


1970-இல் ஜூலியா கிறிஸ்தெவாவினுடைய தொடக்ககால எழுத்தொன்றிற்கு மிகவும் ஊக்கம் தரத்தக்க ஒரு மதிப்புரையை ரோலண்ட் பர்த் எழுத நேர்ந்த போது கிறிஸ்தெவாவைச் சுட்டிஅழைப்பதற்கு அவர் தேர்ந்தெடுத்த ஒரு வார்த்தை அந்நியள்” என்பதாகும். இந்த வார்த்தை மூலம்; கிறிஸ்தெவா பல்கேரிய நாட்டைச் சேர்ந்தவர் என்பதை மறைமுகமாகச் சுட்டுகிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறதென்றாலும் (ஜூலியா 1966-இல்தான் பாரிஸ் வந்து சேர்ந்தார்.) அவர் அதையும் தாண்டி இந்த வார்த்தை மூலம் சொல்ல நினைத்தது வேறொன்றாகும். அதாவது நிலைபெற்ற மதிப்பீடுகள் எல்லாவற்றையும் நிலைகுலையச் செய்யும் அவருடைய எழுத்தின் தன்மையைச் சரியாகப் பிரதிபலிப்பதற்காகத்தான் அந்தச் சொல்லைப் பயன்படுத்தினார். பர்த் எழுதினார்:

"ஜூலியா பொருட்களின் இடத்தை மாற்றிப் போட்டுவிடுகிறார். மேலும் ரெம்பவும் வசதியாக இருக்கிறது என்று நினைக்கிற ஓன்றையும் ரெம்பப் பெருமையாக இருக்கிறது என்று நினைக்கிற ஓன்றையும், அழித்து ஒழித்துவிடுகிறார்…அன்றியும் செல்வாக்குள்ள அதிகாரங்களையும், ஒற்றைவாதம் பேசும் அறிவியல் அதிகாரத்தையும் தலைகீழாகத் திருப்பிப் போட்டு விடுகிறார்.”

இவ்வாறு எழுதுவதன் ழூலம் ஜூலியாவினுடைய அந்நியத்தனமான சொல்லாடல்கள் நாம் பெரிதம் பொக்கிஷமாகக் கொண்டாடிக்கொண்டிருக்கும் மரபுகளைப் பாழடித்து வீழ்த்தி விடுகிறது எப்படியென்றால் அவர் சொல்லாடுகின்ற இடமே நம்முடைய வெளிக்கு வெளியே இருக்கிறது மேலும் நமது சொல்லாடல்களில் அமைந்து கிடக்கும் விளிம்பு நிலைகளோடு வேண்டுமென்றே தன்னை இணைத்துக்கொள்கிறது என்பதையும் சுட்டிக்காட்டிவிடுகிறார் பெர்த். சொற்பொருள் மாறுபாட்டை ஆராயும் மொழியியல் என்ற தன்னுடைய நூலின் முதல் வாக்கியத்திலேயே எல்லாரையும் எல்லாவற்றையும் தொந்தரவுக்கு உட்படுத்தும் தன்னுடைய நிலைப்பாட்டினை உறுதிப்படுத்திக்கொள்கிறார்.

இவருடைய மொழியியல் அணுகுமுறையைப் பயன்படுத்தி ஆங்கிலோ-அமெரிக்கப் பெண்ணியலை ஆராய்ந்து பார்க்க முயல்வது ஒருவகையில் பெண்ணியல் கோட்பாட்டிற்கு கிறிஸ்தெவா அளித்துள்ள பங்களிப்பினைப் புரிந்துகொள்ளப் பயன்படும் என்ற நோக்கில் அத்தகைய ஒரு முயற்சியினை டோரில் மொய் என்பார் எடுத்துள்ளார். இனி அவற்றைக் காணலாம்.
விளிம்புநிலைப்பாடும் தலைக்கீழாக்கமும்
கிறிஸ்தேவாவும் ஆங்கிலோ-அமெரிக்கப் பெண்ணிய மொழியியலும்

செரிஸ் க்ராமெர், பாரே தார்னே, நான்சி ஹென்லே ஆகியோர், ஆங்கிலோ-அமெரிக்கப் பெண்ணிய மொழியியலின் இன்றியமையாதவைகளாகக் கீழ்க்கண்ட நான்கு கருத்தாக்கங்களை முன் வைக்கின்றனர்,

1. மொழிப் பயன்பாட்டில் பாலின வித்தியாசங்களும் ஒப்புமைகளும் (மொழி பேச்சாகவும் இருக்;கலாம், வார்த்தையில்லாத சைகை போன்ற வேறுவகையாகவும் இருக்கலாம்)

2. மொழியில் பாலியம்  –குறிப்பாக மொழிஅமைப்பிலும் உள்ளடக்கத்திலும்

3. மொழி அமைப்பாலும் மொழி பயன்பாட்டிற்குமிடையிலான உறவுகள்- (பொதுவாக இவை இரண்டும் தனித்தனியாக ஆராயப்படும்)

4. மாற்றங்களுக்கான முயற்சிகளும் வாய்ப்புகளும்.

மேற்கண்ட இத்தகைய விளக்கங்களில் கவலைப்படத்தக்க ஒன்று என்னவென்றால் இவர்களிடம் ‘மொழி’ என்பது என்ன? அது எதைக் குறிக்கிறது? ஏன்கிற அடிப்படையான விவாதங்களில் கவனம் செலுத்துவதே இல்லை என்பதுதான். இந்தப் பற்றாக்குறை ஒரு பிரச்சினையாகவே இவர்களுக்குத் தோன்றுவதில்லை. ஆனால் கிறிஸ்தேவாவைப் பார்த்தீர்களானால் , அவர் ‘மொழி குறித்த பிரச்சினைகளை’ விவாதிப்பதற்குத்தான் அதிக நேரங்களைச் செலவழிக்கிறார். தொடக்கத்தில் இருந்தே மிகக் கவனமான விழிப்புணர்வோடு இந்தப் பிரச்சினையை அணுகினார். மொழியியலார் தங்களின் ஆராய்ச்சிக்காகத் தேர்ந்தெடுக்கும் எந்தவொரு பொருளையும் ‘மொழி’ என்ற வரையறைக்குள் கொண்டுவந்தார். “மொழியியலின் அறம்” என்ற தன்னுடைய கட்டுரையில், நவீன மொழியியலாளரின் மொழி குறித்த கருத்தாக்கத்தோடு நேருக்கு நேர் முரண்பட்டார், அவர்களுடைய ‘மொழி’ குறித்த கருத்தாக்கத்தில் இடம்பெறும் அறம் மற்றும் அரசியல்கூறுகளோடு கருத்து வேறுபாடு கொண்டார். மிகப் பிரபலமான நவீன மொழி இலக்கண ஆய்வாளர்கள்கூட, பேசுகின்ற தன்னிலை  –யின் மொழியில் தர்க்கம், ஒழுங்கு எல்லாம் இருப்பதாகக் கொண்டு அவைகளைக் கோட்பாட்டுமயபபடுத்தவும் செய்துள்ளனர், ஆனால் இவர்களே அரசியலில், தங்களை எந்த ஒழுங்கிற்கும் அடங்காத ‘அராஜகவாதிகளாக’ உரிமை கோரிக் கொண்டனர். நவீன மொழியியலாளர்கள் இன்றுவரையும்கூட,

 “மொழி என்பது அது தோன்றிய காலத்தில் இருந்தே ஒழுங்கிற்குள்ளும் அமைப்பிற்குள்ளுமாக நிலவி வருகிறது என்கிற ஒளிவட்டத்தில் குறிப்பவர்களாக இருக்கிறார்கள்.அவர்கள் நமது அடிப்படையான சமூக விதிமுறைகளுக்கு இசைவாகப் பொருந்துமாறு மொழிகளுக்கு விதிகளைக் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். 'மொழி’ என்பது குறிகளின் ஒழுங்குமுறை’ அல்லது அனைத்தையும் தர்க்க் முறைக்குள் மாற்றுகிற நடைமுறைகளைத் தந்திரம் என்பன அவர்களின் பார்வையாக” இருக்கிறது-

இவ்வாறு கிறிஸ்தேவா நவீன மொழியாளர்களை மதிப்பிடுகிறார். மேலும் மொழிக்குக் கோட்பாட்டளவிலான கருத்தாக்கங்களையும் தத்துவத் தளங்களையும் அமைக்கிற நவீன முயற்சிகளை, அடிப்படையில் அதிகாரத்தன்மை கொண்டவை, ஒடுக்குமுறைப் பண்பு கொண்டவை எனக் கருதுகிறார் கிறிஸ்தேவா,

 “ தங்களுடைய கெட்டியான சொல்லாடல்கள் மூலம் சமூக ஒப்பந்தங்களுக்குக் காரண-காரிய விளக்கம் கொடுத்து, சமூக அடக்குமுறையின் காவலர்களாக விளங்கும் நவீன மொழியலுக்குள் ஆழமாய் ஓடும் அறிவுத்தோற்றம் குறித்த ஆராய்ச்சியானது ‘அமைப்பியல்’ போன்ற கோட்பாடுகள் மூலம் சமூகத்தையும்  மொழியையும் இணைக்கிற முறையியலை உறுதிப்படுத்தியிருக்கிறது. மொழியியல் சித்தாத்தங்களைச் சமூகமயபபடுத்தியிருக்கிறது, எந்த ஒழுங்கிற்குள்ளும் அடங்காது எல்லாவற்றையும் சிதறடித்துக் கொண்டு ஓடும் சமூக இயக்கப் போக்கிற்கு எதிரான தடைச்சுவர்களை கட்டமைத்திருக்கிறது, எல்லாம் உண்மைதான். ஆனால் நவீனத் தன்னிலையும் நவீனச் சமூகமும் இணைந்து புதிதான மாற்றத்திற்கு உட்படுவதை இந்த மொழியியல் எதிர்கொள்ள நேரும்போது அது  எதுவும் செய்யமுடியாமல், ஒழுங்கற்ற அராஜக நிலைக்குள் தள்ளப்படுவதை உணர்வதில்லை.”

 இத்தகைய நெருக்கடிநிலைக்கு வெளியே நின்று கிறஸ்தெவா மொழியை அணுகுகிறார், விவாதிக்கிறார். சசூரின் ‘மொழிக்கிடங்கு(டுயபெரந) என்ற கருத்தாக்கத்திலிருந்து வெகுதூரம் இடம்பெயர்ந்து, ஓர் ஆய்வுப்பொருளாகப் “பேசும் தன்னிலையைக்”கொள்ள வேண்டும் என்ற மறு-நிர்மாணம் நோக்கி நகர்ந்து விடுகிறார். இந்நிலைப்பாடு, மொழியியலாளர்கள் பெரிதும் கொண்டாடும் மொழி என்பது ஒற்றைப் பொருளாலானது, ஒரே சீராய் ஒருமுகமான அமைப்பைக் கொண்டது என்ற கருத்தாக்கங்களில் இருந்து விலகி, மொழி, பன்முகமானது என்ற மிகவும் ஆர்வம்தரத்தக்க ஓர் அணுகுமுறையை மேற்கொள்ள வழி ஏற்படுத்தித் தருகிறது. மேலும் ‘பேசும் தன்னிலை’ என்பதை மீஉயர் ஆற்றலாக, அறிவுக்கு எட்டாததாக வரையறை செய்யும் தன்மையையும் தவிர்த்துவிட முடிகிறது. இந்தப் ‘பேசும் தன்னிலை’ குறித்துச் சிந்தனைத்தளத்தில் பணிபுரிந்துள்ள மார்க்ஸ், பிராய்டு, நீட்சே முதலியோர் சில கருத்தாக்கங்களை வளர்த்தெடுத்துள்ளனர். இந்தச் சிந்தனையாளர்கள், தன்னிலையைப் பிளவுபட்டவைஇ மையமற்றவை: வரையறைக்கு உட்படாதவை-என்றெல்லாம் வௌ;வேறு வகையான விளக்கங்களை முன் வைத்துள்ளனர்.இந்த விளக்கங்கள் இல்லை என்றால் கிறிஸ்தெவா சொற்பொருள் மாறுபாட்டை ஆராயும் மொழியியலை நினைத்துக்கூடப் பார்த்திருக்க முடியாது.கிறிஸ்தெவைப் பொறுத்தவரை பேசும் தன்னிலை என்பது~மொழி நிகழும் ஓர் இடம்~:மேலும்அது ஓர் அமைப்பாக மட்டும் இல்லை.தொடர்ந்து திரும்பத் திரும்ப மாற்றத்திற்கு உள்ளாகிக் கொண்டிருப்பது.இன்னும் சிறப்பாகத் தன்னையும் தன் மூலத்தையும் இழந்து நிற்பது.எனவே இவருக்குமொழி என்பது மிகவும் சிக்கலான குழப்பமான குறியீடுபடுத்தும் ஒரு முறைமையாகும்.ஆகவே அவர் எழுதுகிறார்;:ஒரு மொழியியலாளர் கவிதையைப் படிக்க நேர்ந்தால் அவர் முதலில் செய்ய வேண்டியது மொழி குறித்த தன்னுடைய பார்வையை மாற்றிகொள்ள வேண்டும்.அதோடு குறியீடு படுத்தும் இந்த முறைமையானது மொழியின் அமைப்பிற்குள் கட்டுப்பட்டதல்ல, அதற்கு மேல் பேச்சு இருக்கிறது, சொல்லாடல் இருக்கிறது, இத்துடன் மொழியியலுக்கும் அப்பால் ஒருவகையான எதிர்பாராதவிபத்து(உயரளயடவைல) இருக்கிறது, எப்படிப்பட்ட விபத்து? பன்முகப்பட்ட அழித்தொழிக்கிற விபத்து?

மொழிப் பயன்பாட்டில் பால் வித்தியாசங்கள்

மொழிப் பயன்பாட்டில் அமைந்துள்ள பால் வேறுபாடுகளை ஆராய்கிற முயற்சிகள் மிக விரைவில் ஓர் எல்லைக்கு வந்துவிடக்கூடியவை. மேலும் இத்தகைய ஆராய்ச்சியாளர்கள் ஒரே பேச்சை அதாவது மொழியை ஆண் கையாளும் போது “அவன் கோபப்படுகிறான்” என்பது போலவும் அதே மொழியைப் பெண் பயன்படுத்தும்போது அவள் “பயப்படுகிறாள்” என்பது போலவும் வேறுவேறான முறையில் பொருளுணரப்படுகிறது என எடுத்துக்காட்டுகின்றனர். சான்றாக, எந்தப் பின்னணியும் தெரிவிக்கப்படாத சூழலில் “நான் அந்த வீட்டிற்குள் நுழையவே மாட்டேன்” என்று ஆண் பேசும் போது அதை எவ்வாறு உணர்கிறோம் என்பதையும் அதே வார்த்தைகளைப் பெண் பேசும் போது எவ்வாறு பொருள் கொண்டு கொள்ளுகிறோம் என்பதையும் இந்த இடத்தில் எண்ணிப் பார்க்கலாம். நமக்குள் ஏற்கனவே படிய வைக்கப்பட்டிருக்கும் ஆண் -பெண் பால் வேறுபாடு காரணமாக, வீட்டிற்குள் நுழைய மாட்டேன் என்பது ஆண் கோபத்தால் சொல்வதாகவும் பெண் பயத்தினால் சொல்வதாகவும் நமது மூளை புரிந்து கொள்கிறது. இப்படி ஒவ்வொரு அசைவிலும் மொழிப் பயன்பாட்டில் பால் வேறுபாடு தெறித்துக் கொண்டே இருக்கிறது. இதுபோலவேதான் மொழியைப் பயன்படுத்தும்போது ஏற்படுகின்ற உடல்மொழியிலும் ஆண்-பெண் பால் வேறுபாடு வெளிப்படத்தான் செய்கிறது, இவ்வாறு வேறுபாடு வெளிப்படுவது என்கிற உண்மையைவிட, பெண் காட்டும் இந்த ‘வேறுபாடு’ ‘தாழ்வானது’ என்றும், புனையப்படுவது முக்கியமானது. இன்னும் சிலர் ஆண் -பெண் ஏன்ற பால் வேறுபாட்டினால் மட்டும் இந்த வேறுபாடு விளைவதில்லை. அவர்களின் அதிகாரத்தளம், சமூக அந்தஸ்திற்கு ஏற்பவும் மொழியால் இந்த வேறுபாடு உருவாகிக் கொண்டே இருக்கிறது என்கின்றனர், உண்மைதான் “ இன்றைக்கு இரவு சாப்பிடவில்லை” என்று ஏழை சொல்வதும், அதையே ஒரு பணக்காரன் சொல்வதும் ஒரே அர்த்தத்தில்-சமமான அர்த்தத்தில்-நமக்குள் புரிதலை ஏற்படுத்துவதில்லை. மொழிக்குச் சூழல்கள்தான் அர்த்தத்தை வழங்குகின்றன: ஹெலன் பேட்ரி என்பவர் தன்னுடைய ஆய்வில், பால் வேறுபாட்டை விட, பேசு பொருள் என்பது மொழிப் பயன்பாட்டில் வேறுபாடுகள் அமையக் காரணமாகினறது எனக் கருதுகின்றனர்.

 இத்தகைய ஒரு சூழலில், மொழிப் பயன்பாட்டில் பால் வேறுபாடு வினைபுரிகிறது என்று அதை ஒரு கோட்பாடாக்கிவிட முடியாது என்பதைவிட அது ஒரு அரசியல் பிழை என்பது போலவும் தோன்றுகிறது. “வித்தியாசம்” என்கிற இந்தக் கருத்தாக்கம் கோட்பாட்டுக் குறும்புத் தந்திரம் கொண்டது. இது இன்மை அல்லது இடைவெளிகளைக் குறித்து நிற்கிறது. ழாக் தெரிதா, “வித்தியாசம்” என்பது ஒரு கருத்தாக்கமே அல்ல, அது இயல்பான ஒன்று என வாதிடுகிறார். “வித்தியாசம்” எப்பொழுதும் நம்மை; வேறொரு இடத்திற்கும் எடுத்துச் செல்லுகிறது, மேலும் (எப்பொழுதும் இனப்பெருக்க வளமுடைய) அர்த்தத்தைப் புலம்பெயர்த்தல் மற்றும் தள்ளிப்போடுதல் எனும் வலைப் பின்னலுக்குள் ஈடுபடுத்தி விடுகிறது. ஆண்மை -பெண்மை என்பதான எதிர் இணைநிலைகளை, நிலையானவைகளாக்கி, அந்த “வித்தியாசம்” ஒன்றிலிருந்துதான் ;’அர்த்தம்’ உருவாகிறது என ஒற்றை வாதமாக இதை முடித்துவிட முடியாது, ‘வித்தியாசத்தைப்’ பன்முகப்பட்டதாகப் பல்கிப் பெருகுவதாகக் காண வேண்டும். பால் அடிப்படையில் இத்தகைய நிலைப்படுத்தப்பட்ட வித்தியாசங்களை முன்மொழியும் ஆய்வாளர்கள், “இவ்வித்தியாசங்களை” தாங்கள் உயிரியல் அறிவத்துறை அடிப்படையில் முன்மொழியவில்லை என நம்புகின்றனர், அதேநேரத்தில் மானுடவியல் கொள்கை பெண்களை “வாய் பேசாத ஊமை இனமாகக்” கருதுவது போல இவர்களும் கருதுகின்றனர். இந்த மானுடவியல் கொள்கையானது, சமூகத்தில் அமைந்துள்ள அதிகார உறவு அமைப்பில், பெண்கள் கீழடங்கித் தாழ்ந்த இனமாதலால், அவர்கள் இனத்திலிருந்து வித்தியாசமான ‘சமூக அனுபவங்களை’ அடைய நேர்கிறது, இத்தகைய (இந்த வேறுபட்ட) சமூக அனுபவங்கள்தான் :மொழியோடு” அவர்கள் கொள்ளுகின்ற உறவையும் வித்தியாசமாகக் கட்டமைக்கிறது. பெண்கள் அடக்குமுறைக்கு இயற்கையாகவே உள்ளாகக் கூடிய குணமுடையவர்கள்தான் என்றும் புனைந்து விடுகிறது. இவ்வாறு பெண்கள் எப்பொழுதும் மாறாமல் கீழடங்கிச் செல்பவர்கள்தான் என்று கட்டமைத்துவிட்ட பிறகு, ஆண்கள் மட்டு மடக்கற்ற அதிகாரம் கொள்வதற்கு இயல்பிலேயே தகுதி உடையவர்கள்தான் என்பதும் நிலைநிறுத்தப்பட்டுவிடுகிறது, இத்தகைய நிலைநிறுத்தம் ஆண்களின் மொழி அமைப்பை மாறாததாகவும் வளையாததாகவும் ஆக்கிவிடுகிறது. பெண் மொழி, ஆண் மொழி என்கிற இந்தத் தளத்தில் பணியாற்றுகிற இந்த ஆய்வாளர்கள், இவ்வாறு பெண்களுக்கான மொழித்திட்டத்தில் இடையூறாக இருக்கும் கூறுகளை ஓய்வின்றித் தேடி அலைவதைக் கடமையாகக் கொண்டு இயங்குகின்றனர். இக்கூறுகளில் எந்த அளவிற்கு அறிவுப்பூர்வமாக நிருபிக்கத் தக்கவை என்பதைக் குறித்து ஒரு சிறிதும் செயல்பட்டதாகத் தெரியவில்லை. மேலும் மாறாத குணம் கற்பிக்கும் இத்தகைய நடவடிக்கைகள் அரசியல் ரீதியாகப் பெண்களுக்குப் பயனுள்ளதாக அமையுமா என்று பார்த்தாலும், அவர்களுக்குப் பாதகமாக அமைந்துவிடத்தான் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இவை இவை நிலையான மாறாத பால் வேறுபாட்டுக் கூறுகள், இந்த இந்தக் கூறுகள் பெண்களுக்கு எதிரானவை என நிலைநிறுத்தினால், சில வெறுக்கத்தக்க குணங்கள் இயற்கையாகவே பெண்களுக்கானவை, ஆண்களுக்கு அத்தகைய குணங்கள் அந்நியமானவை என நிருபிப்பதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுவிடும். எனவே இந்த இணைஎதிர்வை (ஆண்மை- பெண்மை) அடிப்படையிலான வித்தியாசங்களைக் கற்பிக்கும் இந்த மாதிரியானது, இந்த ‘வளையாத அடைப்பிற்குள்’ எது நழுவிச் சென்றிருக்கிறது என்பதைப் பார்க்கவிடாமல் நம்மைக் குருடாக்கிவிடும்.

 மொழி என்பது இப்படி மாறாத, வளையாத ஒன்று அல்ல, பன்முகப்பட்ட குறியீட்டு முறையியலைக் கொண்டது. அதைப் பயன்படுத்துபவர்களுக்குள்ளும் அவர்களுக்கிடையிலுமெனப் பின்னிப் பிணைந்து கிடப்பது” என்பதுதான் கிறிஸ்தெவானுடைய மொழிக் கொள்கை-இக்கொள்கை ஒருவிதமான மாற்று அணுகுமுறையை முன்மொழிகிறது. அதாவது, “ஒரு குறிப்பிட்ட சூழலில்களில் குறிப்பிட்ட மொழயின் நடைமுறைத்திறம்” என்பது வேண்டுமென வலியுறுத்துகிறது. ஆனால் இந்த வகையான கல்வி, நம்முடைய கண்டுபிடிப்புகளைப் பொது உண்மைகளாக ஆக்குவதற்கு நம்மை அனுமதிக்காது. உண்மையில் கிறிஸ்தெவாவின் மொழி குறித்த இந்தப் பார்வை, மொழியை, உலகப் பொதுவான ஒரு மொழிக் கிடங்காகக் கருதுகின்ற முறையை விட, மொழி என்பது ஒரு “ குறிப்பிட்ட சூழல் சார்ந்த சொல்லாடல் என்ற முறையில் மொழியைக்கற்பதை நோக்கி நம்மை இட்டுச் செல்கிறது.கிறிஸ்தெவா காட்டும் எடுத்துக்காட்டுக்களையும், சோவியத் மொழியியல் அறிஞரான வி.என்.வோல்சி;நோவ்; எழுதி 1929-இல் வெளியான “மார்க்சியமும் மொழியின் தத்துவமும்” என்ற நூலையும் பின்பற்றிச் சென்றால் மேற்கூறிய இந்தச் சூழல் சார்ந்த சொல்லாடல் குறித்து மேலும் அறிந்து கொள்ள முடியும். 50 ஆண்டுகளுக்கு முன்னாலேயே எல்லாம் ஓர் அமைப்புக்குள் இயங்குகின்றன என்ற அமைப்பியல் சார்ந்த மொழியியலை வோல்சிநோவ் கடுமையாகத் தாக்கினார். அமைப்பியலை “மற்றொன்றை விரிக்கும் புறமெய்மை” என முத்திரை குத்தினார்.

 “ பேச்சினுடைய ஒரு கூறின் மொழியியல் வடிவத்திற்கும், அந்தப் பேச்சின் மொத்த வடிவத்திற்கும் எந்தவிதமான நேரடியான தொடர்பும் இல்லை. வாக்கிய அமைப்பிலிருந்து தாவுதலைச் செய்யும் போதுதான் சேர்த்துக் கட்டுதலின் சிக்கலை வந்தடைகிறோம்”

என்றார் அவர். வோல்சிநோவும் கிறிஸ்தெவாவும் மொழியியல், யாப்பியல், கவிதையியல் ஆகியவற்றிற்கிடையிலான பழைய ஒழுங்குசார்ந்த எல்லைகளைக் கட்டுடைப்பு செய்வதன் மூலமாக புதிய ஒரு துறையைக் கட்டமைத்தனர்-அந்தப் பெயர் பிரதிக் கோட்பாடு அல்லது சொற்பொருள் மாறுபாட்டுக் கோட்பாடு என்பதாகும்.

 வோல்சிநோவ் கூறியது போல “எல்லா அர்த்தங்களும் சூழல் சார்ந்தவை தான்“ என்றால் ஒவ்வொரு கூற்று அல்லது பேச்சின் சூழலும் ஆழ்ந்த ஆராய்ச்சிக்கு உரியவையாகிவிடும். மேலும் இந்தச் “சூழலை” மட்டுமே முதன்மைப்படுத்தி ஒற்றைவாதத்தை முன்னிறுத்தி மாறாத ஒன்றாக நிலைநிறுத்திவிடவும் நேரும். ழாக் தெரிதா எவ்வாறு, ஒரு பிரதி, எத்தனை வகையான “சூழலுக்கும் “ பொருந்திப் போகுமாறு அமைந்துள்ளது என்பதை நிகழ்த்திக்காட்டியுள்ளார். ஒரு பிரதிக்குச் சிறப்பான ஒரு “சூழலை” பொருத்தும் போது, அந்தப் பிரதியின் அர்த்தத்தை அந்த ஒன்றிற்குள்ளேயே ஒரேயடியாக மூடியாகிவிட்டது என்பதாகாது. எப்பொழுதும் வேறொரு சூழலைப் பொருத்தி அர்த்தம் கொள்வதற்கான சாத்தியப்பாடுகளைக் கொண்டதாகத்தான் அந்தப் பிரதி விளங்குகிறது, இதுதான் எந்தவொரு மொழிக் கூறின் “அமைப்பாகவும்” விளங்குகிறது(மாறாத, நிலையான அமைப்புடையது அல்ல எந்தவொரு மொழிக்கூறும்). இந்நிலையில் மொழியின் பாலியல் வேறுபாடுகளைப் பகுத்தாராயும் போது குறிப்பாக அடிக்கடி மேற்கோளாகக் காட்டப்படும். வெர்ஜினியா வுல்ப்-னுடைய கோட்பாடான “பெண்ணின் வாக்கியம்” என்பதைப் பார்க்கும் போது, ஒரு முடிந்து முடிபுக்கு வர இயலவில்லை. ஏனென்றால் பெண்ணின் வாக்கியம் என்ற அதே அமைப்பு, ஆண் எழுத்தாளர்களின் எழுத்திலும் காணப்படலாம்.மிக ஆர்வம் தரத்தக்க ‘பெண்ணின் வாக்கியம்’ என்ற முடிவை மேற்கொள்ள நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், அந்த மொழிக் கூற்றின் “முழுப் பிரதியையும்” ஒரு “பொருளாக” எடுத்துக் கொண்டு அதனுடைய கருத்தாக்கம், அதனுடைய அரசியல், அதனுடைய உளப்பகுப்பாய்வுத் தன்மை முதலியன பலவற்றையும் ஆராய்வதோடு மட்டும் அல்லாமல் அவைகள் எவ்வாறு சமூகத்துடனும், மற்ற பிரதிகளுடனும் உறவு கொண்டிருக்கின்றன என்பதையும் ஆராய வேண்டும். எனவேதான் கிறிஸ்தேவா, இடைப்பிரதியில் (இடையீட்டுப் பிரதியல்) என்ற கருத்தாக்கத்தை வடிவமைத்தார். இதன்மூலம் எவ்வாறு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறிகளின் அமைப்புக்கள் மற்றவைகளுக்குள் இடம்மாறி அமர்கின்றன என்பதை விளக்கினார்.

மொழிக்குள் பாலியல்

 செரிஸ்; க்ராமரௌ மொழியின் பாலியல் என்பதை ஆங்கில மொழியை முன்னிறுத்தி விளக்குகிறார், எப்படியென்றால், ஆங்கில அகராதி என்பதே ஆண்மையைக் கொண்டாடும் விதமாகவும், பெண்மையைப் புறக்கணித்தோ அல்லது இழிவாகவோ பேசுகிறவிதமாகவும்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது என்கிறார். டாலே ஸ்பெண்டர் என்பார் தன்னுடைய “ஆண் உருவாக்கிய மொழி” என்ற புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார்:

 “ஆங்கில மொழி ஆணகளால் உருவாக்கப்பட்டது… அது இன்றைக்கும் கூடப் பெரும்பாலும் ஆண்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது… இவ்வாறு மொழியில் கொண்டுள்ள தனி அதிகாரத்தின் மூலமாகத்தான் ஆண்கள் தங்களின் முதன்மை இடத்தை நிலைப்படுத்திக் கொண்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக பெண்களின் இடத்தை மௌனமாக்கி, அதுவே அவர்களின் இயற்கையான பண்பு என்றும் நிலைநாட்டியுள்ளனர். ஆண்கள் வடிவமைத்த இந்த மொழியைத்தான் எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து பெண்கள் பயன்படுத்திக்கொண்டிருப்பதுதான் ஆண்களின் முதன்மை இடம் இன்றைக்கும் நிலைத்து நிற்பதற்குக் காரணமாகும்.”

இத்தகைய பார்வை கொண்ட இந்த எழுத்து முறை ‘மொழி’ ஓர் மாறாத அமைப்பு என்ற அணுகுமுறையில் உருவானது என்று தெளிவாகத் தெரிகிறது. அதிகாரப்பூர்வமான மொழியியலின் குரலாக இது ஒலிக்கிறது.எனவே மொழிக்குள் பாலியலைத் தேடும் இந்தத் திட்டத்தை நாம் ஏற்றுக் கொண்ட அடுத்த கணத்திலேயே நாம் சிக்கலுக்குள் மாட்டிக் கொள்ளுகிறோம். ; வாலோசிநோவ் மற்றும் கிறிஸ்தெவா கூறுகின்ற “எல்லா அர்த்த உற்பத்திகளும் சூழல் சார்ந்தவை” என்பதை ஏற்றுக் கொண்டால், எந்த ஒரு தனியான வார்த்தையோ அல்;லது பொதுவான வாக்கிய அமைப்போ எதுவானாலும் அவைகளுக்கு நாம் “ஒரு சூழலை” அமைத்துக் கொடுக்காத வரை அவைகளுக்கான அர்த்தம் என்பது சாத்தியமில்லை. அப்படியானால் அந்த வார்த்தையோ அல்லது வாக்கியமோ தன்னளவில் பாலியல் பண்பு கொண்டது அல்லது கொள்;ளாதது என எப்படிக் கூற முடியும்? தோர்னே மற்றும் ஹென்லே விவாதிப்பது போல், ஒரே பேச்சு, அதை ஆண் பேசும் போதும், பெண் பேசும் போதும், முற்றிலும வேறு; வேறாக விளக்க முறுகிறதே என்றால் சூழல் தான் அப்படி வேறு வேறாக ஆக்குகிறதே ஒழிய, அந்தக் குறிப்பிட்ட பேச்சை நிகழ்த்தும் அந்த மொழிக்குள் அதனளவில் ஏற்கனவே எந்தவிதமான பாலியல் வேறுபாடும் உள்ளடங்கி யிருக்கவில்லை என்பதைத்தானே காட்டுகிறது. மொழி ஆண்களால் உருவாக்கப்பட்டது அல்லது பெண்களுக்கு எதிரான சதி என்ற இந்த முரட்டுத்தனமான கோட்பாட்டிற்கு எந்தவகையிலும் மொழியியல் பூர்வமான ஆதரவு கிடைப்பது அரிதிலும் அரிதாகும். எனவே மொழிக்குள் பாலியல் என்று மிகச்சிறப்பாக விளக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ள இந்தக் கோட்பாட்டிற்கு வேறொரு மாற்று விளக்கத்தை அளிக்க முயலுகிறார் கிறிஸ்தெவா..

பாலியல் குறித்த பிரச்சனை என்பது, ஆண்-பெண் என்ற இரு பாலினங்களுக்கு இடையிலான அதிகார உறவுப் பிரச்சினைதான். எனவே, ஒரு தந்தைவழிச் சமூக அமைப்பில், எல்லாக் கூற்றுக்களுக்குமான சூழலின் ஒரு பகுதியாக இந்த அதிகாரப் போராட்டமும் அமைந்திருக்கும். ஆனாலும் தனிப்பட்ட ஒரு பெண்ணின் ஒவ்வொரு இடைப்பேச்சும் கூட கீழான ஒன்றாகவே அமையும் என்பதாகக் கருதமுடியாது.

 மைக்கேல் பாரேத் இவ்வாறு எழுதுகிறார்.;பெண்கள் எப்பொழுதும் வெகுளிகள்: தந்தைவழிச் சமூக அதிகாரத்தின் முன்னால் பணிந்துப போகும் பலி ஆடுகள் என்றெல்லாம் பாலியல் கருத்தாக்கம் சார்ந்த பகுத்தாய்வுகள் பேசுவது திருப்திகரமாக இல்லை. எனவே நாம் இப்பொழுது மொழியில் அமைந்துள்ள வர்க்கப் போராட்ட உறவுகளை விளக்குகின்ற வோல்சிநோவினுடைய ஆராய்ச்சிகளை நோக்கினால், எந்த அளவிற்கு அவருடைய அந்த வர்க்கப் பார்வை கொண்ட ஆய்வுகள் பெண்;ணியல்வாதிகளின் பயன்பாட்டிற்கும் பொருத்தமாக அமைந்துள்ளது என்பதைக் கண்டு கொள்ளலாம் . அவர் எழுதுகிறார்:

வர்க்கம் என்பது மொழிக் குறிகளுடன் பொருந்திப் போவதில்லை. அதாவது வேறுபட்ட பல வர்க்கத்தினரும் ஒரே மொழிக் குறியீடுகளைத் தான் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் உச்சரிபபு முறையில் கொடுக்கின்ற வேறுபாடுகள்தான் மொழியை ஒரு வர்க்கத்திடமிருந்து மற்றொரு வர்க்கத்தைப் பிரித்துக் காட்டுகின்றன. இதன் விளைவாக மொழிக்குறிகள்தான் வர்க்கப் போராட்டத்தின் ஆடுகளமாகின்றன.

வோலசிநோவினுடைய இந்தப் பார்வைதான், எதையும் சாராம்சப்படுத்த விரும்பாத பெண்ணியல்வாதிகளின் பளகுத்தாய்வுக்குப் பெரிதும் உதவிகரமாக அமைந்துள்;ளது., இந்தப் பார்வை, நாம் ஒரு மொழியைத்தான் பயன்படுத்துகிறோம், ஆனால் நாம் வௌ;வேறு வகையில் நம்முடைய நோக்கத்திற்கு-விருப்பத்திற்கு-ஏற்பப் பயன்படுத்துகிறோம். இந்த நோக்கம்-விருப்பம் - பெரும்பாலும் அரசியல் மற்றும் அதிகார உறவு சார்ந்ததாகத்தான் அமையும். இதுதான் மொழிக் குறிகளை வேறுபடுத்தி அர்த்தப்படுத்துகிறது. எனவே மொழிக் குறிகளின் அர்த்தம் என்பது எப்பொழுதும் திறந்தவெளித் தன்மையோடுதான் அமைந்துள்ளது. இந்நிலையில் மொழிக் குறிகள் ஒற்றைக் குரல் கொண்டிருப்பதைவிட பன்முக அர்த்தம் கொண்டதாகத்தான் விளங்குகின்றன. அதேநேரத்தில் குறிப்பிட்ட காலகட்டத்தில் எந்தக் குழு அதிகாரம் கொண்டதாக விளங்குகிறதோ, அது தனக்கேற்றவாறு மொழிக்குள் இடையீடு செய்து, குறிப்பிட்ட ஒற்றை அர்த்தத்தை உற்பத்தி செய்து கொள்கிறது என்பதும் உண்மை. இப்படிச் சொல்வதன் பொருள், அந்த அதிகாரக் குழுவிற்கு எதிரானவைகளின் அர்த்தம் முற்றும் முழுதாக மௌனமாக்கப்படுகிறது என்றும் கூறுதலாகாது, இந்த அதிகாரப் போராட்டம் மொழிக் குறிகளுள் வினைபுரிந்து ஊடறுத்துக் கொண்டேதான் இருக்கும். அதாவது குறிகள் மாறாத நிலையான அர்த்தத்தை மேற்கொள்ள விடாது.

 குறிகளின் இந்த முடிவற்ற அர்த்த உற்பத்தித் தன்மை சார்ந்த கிறிஸ்தெவா-வின் பார்வை, அவருடைய பெண்ணியல் சொல்லாடலிலும் கவனப்படுத்தப்படுகிறது. இந்நோக்கில் மொழி ஆண்களால் உருவாக்கப்பட்டது என்ற டாலே ஸ்பெண்ட்ருடைய அணுகுமுறைக்கு முற்றிலும் இடம் இல்லாமல் போய்விடுகிறது. சமூக உறவுகளை அப்படியே எதிரொலிப்பதுதான் மொழி என்கிற பார்வைக்கு முற்றிலும் எதிரான பார்வை கிறிஸ்தெவாவினுடைய பார்வை. அவர் மொழி உற்பத்தி செய்யும் திறம் கொண்டது என்ற பார்வை கொண்டவர். அப்படியானால், நாம் மொழிக்கு வழங்குவதைவிட, மொழி நமக்கு அதிகம் வழங்கும் பண்பு கொண்டது என்றாகிவிடுகிறது. இந்நிலையில் எல்லாவிதமான அனுபவம்சார்ந்த மொழி ஆராய்ச்சிகள் எல்லாம் சொல்லுகின்ற, ஆங்கிலமொழியில் பாலியல் மேலாண்மை செலுத்துகிறது என்ற உண்மை நாம் முழுமனத்தோடு ஒத்துக் கொள்;ளத்தான் வேண்டும். (ஆங்கில மொழியில் மட்டுமல்;ல ஏறத்தாழ எல்லா மொழிகளிலும்). அதே நேரத்தில் மொழயின் இயற்கையான பண்பாகவே இது அமைந்துள்ளது என்றும் கொள்;ளத் தேவையில்லை. இது, பாலினங்களுக்கு இடையிலான மேலாதிக்கம் மிக்க அதிகார உறவுமுறையின் விளைவினால் ஏற்பட்;டது எனப் புரிந்து கொள்ள வேண்டும். பெண்ணியல்வாதிகள் நவீன காலத்தில் ஆணாதிக்கத்திற்கு எதிராகப் போராட்டத்தை முன்னிறுத்துவதில் வெற்றிபெற்றுள்ளனர். மனிதன், அவைத் தலைவன், செய்தி அறிவிப்பாளன் எனப் பொதுப் பெயர்கள் ஆண் பெயராக வெளிப்படுவதைப் பல பெண்ணியல்வாதிகள் கேள்விக்கு உட்படுத்தயுள்ளனர். அத்தகைய சொற்கள்; தங்களைத் தொந்தரவு படுத்துவதாக உணர்கின்றனர். (சூனியக்காரி, அடங்காப்பிடரி போன்ற சொற்கள் பெண்பாலாக மட்டும் இருப்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.)இப்படிப் பெண்ணியல்வாதிகள் சிலர் மொழியின் இயல்பிலேயே பாலியல் பண்பு சாராம்சமாக இருக்கிறது என வாதிடுவதற்கு ஏற்றவாறு மேற்கண்ட சொற்கள் சில விளங்கினாலும் நவீன மொழயிpயல் ஆய்வுகள் வேறுவிதமாக விளக்குகின்றன.அதாவது பாலினங்களுக்கு இடையில் அமைந்த பழைய மற்றும் நிகழ் காலச் சமூக அதிகார உறவுகளின் விளைவுதான் இந்தச் சொற்கள் என விளக்குகின்றன.

 மொழியின் பாலியம்; என்ற இந்த ஆராய்ச்சியில் அமைந்துள்ள குறிப்பிடத்தக்க ஒரு விவாதம் என்னவென்றால் பெயரிடுதல் பற்றிய பிரச்சனையாகும். தொடர்ந்து பெண்ணியல்வாதிகள் இப்படி விவாதிக்கின்றனர். அதாவது “உலகப் பொருட்களுக்குப் பெயரிடும் அதிகாரம் யார் கையில் இருக்கிறதோ அவர்கள் யதார்த்தத்தின் மேல் செல்வாக்குச் செலுத்தும் ஒரு நிலையை அடைகின்றனர்(கிராம்ரே)” என்பதுதான் அந்த வாதம். தொடர்ந்து, பெயரிடும் இந்த அதிகாரம், பெண்களிடம் இல்லை. மேலும் பெண்கள் மட்டுமே சார்ந்த அனுபவங்களுக்குப் பெயரிடுதலும் நிகழவில்லை. அதன் விளைவாகத்தான் பெண்கள் தாழ்நிலைக்கு ஆனார்கள் என்கின்றனர்: ஆனால் பல பிரெஞ்சுப் பெண்ணியல்வாதிகள் இத்தகைய பெயரிடுதல், முத்திரை குத்துதல் போன்றவைகளை மறுதலிக்கின்றனர். குறிப்பாகப் பெண்ணியம், பாலியம், போன்று பெயரிடுதலைக்கூட அவர்கள் விரும்புவதில்லை. ஏனென்றால் இப்படிப் பெயரிட்டு முத்தரையிடுகின்ற நடவடிக்கை ஆண்களின் செயல்பாட்டுத் தந்திரம் சார்ந்த ஒன்றாகும். இப்படித்தான் பெயரிடுவதன் மூலம் ஆண்கள் நம்முடைய இந்தக் கருத்துலகத்தை, தங்களுக்குச் சார்பான ஒரு முறையில் ஒழுங்குபடுத்திக் கொண்டு ஆண்மைய உலகத்தை நிலைநிறுத்திக் கொண்டனர். இது ஆண்களின் பகுத்தறிவு சார்ந்த ஒரு அணுகுமுறை. அது எப்பொழுதும் காரண காரியம், ஒழுங்கு, ஒருமை, தெளிவு போன்றவற்றிற்கு முதன்மை கொடுத்துச் செயல்படும். இந்த அணுகுமுறையின் மூலம் பெண்மையின் அடையாளமாகக் கருதப்படும் குழப்பம், துண்டு துண்டாய்ச் சிதறுதல், காரணகாரியமற்ற தன்மை ஆகியவற்றை வெளியே நிறுத்தி மௌனமாக்கிவிடும் என்றெல்லாம் பிரெஞ்சுப் பெண்ணியல்வாதிகள் கருதுகின்றனர். இத்தகைய கருத்தாக்கம் சார்ந்த உரையாடல், அரசியல் பார்வை கொண்டது மட்டுமல்லாமல் அதே நேரத்தில் புலனுணர்வுக்கு அப்பாற்பட்ட ஒரு யூகமாகவும் ஆகிவிடக் கூடியவைகளாகும். உடனடியாக நாம் இப்பொழுது செய்ய வேண்டியது என்னவென்றால் மரபார்ந்த ஆண்மை மற்றும் மரபார்ந்த பெண்மை சார்ந்த எதிரெதிர் கருத்தாக்கங்களைக் கட்டுடைப்பு செய்து, அவற்றிற்குள் செயல்பட்டிருக்கும் அரசியல் சக்திகளை எதிரெதிர் நிறுத்தி, அவற்றின் யதார்த்தங்களை அறிய முயல்வதுதான். அவ்வாறு அறிய நேரும்போது மேற்கண்டவாறு காரணகாரியம் பார்ப்பது ஆண்மை, காரணகாரியம் அற்றது பெண்மை போன்று உருவாக்கப்பட்டுள்ள கருத்தாக்கங்கள் எல்லாம் இல்லாமல் போகிற ஒரு சமூக அமைப்பை நாம் அமைக்க முடியலாம்.

 பெயரிடுதல் என்பது அதிகாரச் செயல்பாடு என்பது மட்டுமல்ல, நீட்சேயின் பார்வையில் ‘அறிவை அடைய அவாவுதல்; என்பதும் ஆகும். மேலும் உலகப் பொருட்களை-யதார்த்தங்களை-ஒழுங்குபடுத்தி, ஒன்றிணைக்கிற ஆசையின் வெளிப்பாடும் ஆகும். மேலும் பெண்ணியல்வாதிகளுக்கு இந்தப் பெயரிடுதல் என்பது மிக உயர்வான ஒரு மாற்றுத் தந்திரமாகவும் பயன்படக்கூடியது. எனவே பெயர்களைப் பார்த்து அவர்கள் தொந்தரவிற்கு உள்;ளாகத் தேவையில்லை. செயிண்ட் அகஸ்டைன் கருத்துப்படி, மொழி என்பது முதலில் பெயரிடுதல் அல்லது பெயாச் சொற்களின் வரிசையினால் உருவாக்;கப்படவில்லை. மேலும் பெயரிடுகிற முயற்சி எதுவும் வெற்றிகரமான ஒன்று அல்ல. முழுமையாக அது குறிக்கிற பொருளை அடையாளப்படுத்தவும் இல்லை. எனவேதான் பெர்ட்டோல்டு பிரெக்ட் ஓர் இடத்தில் “ உனக்கு நீயே பெயரிட முயலும் போது கூட நீ இன்னொன்றுக்குத்தான் பெயரிடுகிறாய்” என்கிறார். இப்படி விவாதிப்பதன் நோக்;கம் பெயரிடுதல் என்கிற இந்தச் செயல்பாடே வேண்டாம் என்பது அல்ல. மாறாக, இச்செயல்பாடு முழுவதும் நம்பத்தகுந்தது அல்ல என்பதுதான். பெண்ணியத்தில் பெரிதும் பேசபடக்கூடிய “பாலியம்” என்கிற இந்தச் சொல் கூட “ நான் ஒரு பாலியல்வாதி அல்ல, நான் ஒரு அறிவார்ந்த மனிதன்” என்று ஓர் ஆண் சொல்லும்போது இந்தச் சொல்லுக்கான அர்த்தம் பலவகையாக மாறுவதை பார்க்க முடிகிறது. ஹோல்ஸ் நோ கருதுவதைப் போல பாலினங்களுக்கு இடையிலான அதிகாரப் போராட்டத்தின் தன்மைக்கேற்ப இசசொல்லுக்கான அர்த்தம் வந்து கூடுகின்றது.

மொழி, பெண்மை, புரட்சி

மொழி ஈட்டும் பொருள்:

 கிறிஸ்தெவாவினுடைய பிரதிக் கோட்பாடு அல்லது சொற்பொருள் மாறுபாட்டுக் கோட்பாடு எவ்வாறு மையத்திலிருந்து விலகி விளிம்புநிலைகளையும், பன்முகத் தன்மையையும் வலியுறுத்துவதன் மூலம் மரபார்ந்த மொழியியலின் மைய அமைப்பையே தலைகீழாக மாற்றிவிட்டது என்பதை நாம் பார்த்தோம். இவ்வாறு தலைகீழாக மாற்றிய தன்மையை அறிந்து கொள்ள வேண்டும், ஏனென்றால் அவருடைய ‘மொழி ஈட்டும் பொருள்’ என்ற கோட்பாட்டை அப்பொழுதுதான் புரிந்து கொள்ள முடியும். அவருடைய இந்தக் கோட்பாடுதான் அவருடைய சாதனையின் சின்னமான முனைவர்பட்ட ஆய்வேட்டிலும் வெளிப்படுகிறது. இவ்வாய்வேடு 1974-ஆம் ஆண்டு பாரிஸீல் வெளியிடப்பட்டது. . பிலிப் ஈ லேவிஸ் என்பார் கிறிஸ்தெவாவினுடைய எழுத்துக்களெல்லாம் 1974 வரை ‘குறியிPடும் முறையியல்’ என்பதை வரையறை செய்கின்ற முயற்சியாகவே அமைந்துள்ளது என்கிறார். இதை வரையறை செய்வதற்காக லக்கானுடைய கற்பனைக்கும், குறியீட்டுக்கும் இடையிலான வேறுபாட்டை இடபெயர்ச்சிச் செய்கின்றார். அதாவது பிரதிக்கும் குறியீட்டுக்குமான வேறுபாடாக மாற்றிப் போடுகிறார். இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் இடையிலான கிறிஸ்தெவாவின் இந்தக் குறுக்கீடுதான் அவருடைய குறியீட்டு முறையியலை வடிவமைக்கிறது.

 இந்தச் சொற்பொருள் மாறுபாட்டுக் கோட்பாடு என்பது ஒடிபஸ் நிலைக்கு முந்தைய நிலையோடு தொடர்புடையதாகும். இந்த முந்தைய நிலையின் அடிப்படை நாடித்துடிப்பாக கோலோச்சுபவை மலத்துவாரம் மற்றும் வாய் சார்ந்த உணர்ச்சித் துடிப்புகளாகும். இவைகள் ஒரேநேரத்தில் வாழ்வு இறப்பு, என்பன போல இரட்டை எதிர்நிலைகளாகவும், அதேநேரத்தில் பன்முகமாகவும் செயல்படக்கூடியவை. இவைகளின் முடிவற்ற இந்த நாடித்துடிப்பு வெள்ளம் கோராய் என்கின்ற கருப்பையில் சேகரிக்கப்படுகிறது. இந்தக் கருப்பை நிகழ்வை பிளாட்டோ தன்னுடைய நூலில் கண்ணுக்குத் தெரியாத வடிவமற்ற இந்த இருப்புநிலை எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொள்கின்ற ஒன்றாகவும், அதேநேரத்தில் புரியாத புதிராகவும் இருந்து கொண்டு, புலப்படக்கூடிய ஒன்றாகவும் தன்னைப் பதிவு செய்து கொள்கிறது” என விளக்குகிறார். பிளாட்டோவின் இந்த விளக்கத்தை கிறிஸ்தெவா தனக்குத் தகுந்தவாறு பொருத்தமாக மறுவரையறை செய்துகொண்டு இவ்வாறு கீழ்க்கண்டவாறு விளக்குகிறார். கோராய் என்கிற அந்தக் கருப்பை ஒரு குறியும் இல்லை, ஒரு நிலையானதும் இல்லை. ஒரு தற்காலிகமான, ஒரு ஒலிக்குறிப்பு. இந்த ஒலிக்குறிப்பினுடைய இன்றியமையாத பண்பு அசைந்துக் கொண்டிருப்பது, ஒரு நாள் வாழ்வோடு முடிந்துவிடக்கூடியது… இது ஒரு மாதிரியாகவும் அமையாதது. வடிவத்திற்கான தாகத்தில் இருக்கிற வடிவமற்ற ஒன்று. இயங்குகின்ற ஒழுங்கு மட்டும் கொண்டது”.

 கிறிஸ்தெவாவை பொறுத்தவரை சொற்பொருள் மாறுபாட்டுக் கோட்பாடு என்பது இடம் சார்ந்த பிரச்சினையாகும். லக்கானுடைய கண்ணாடித் தோற்றத்தைப் பின்பற்றிச் செல்கிறார். இந்தக் கண்ணாடித் தோற்;றம்தான் எல்லாப் பொருட்களும் தோற்றம் பெறுவதற்கான வழியைத் திறந்துவிடுகிறது. இந்தத் தோற்றம்தான் கருப்பையிலிருந்து தொடர்பு அறுத்தலை தொடங்கி வைக்கிறது. இதைத தொடர்ந்து ஒடிபஸ் நிலை காயடித்தல் அச்சத்தோடு தோற்றம் பெறும் போது கருப்பையில் இருந்து பிரிதலும், பிளவுறுதலும் நடந்தேறிவிடுகின்றன. இந்நிலையில் தன்னிலை, மொழி என்னும் குறியீட்டு உலகத்திற்குள் நுழைகிறது. கருப்பை என்னும் மூலம் அடக்கப்படுகிறது. மொழி உலகத்திற்கான நாடித்துடிப்பாக மட்டும் நிலைபெறுகிறது. இந்தத் தன்மைதான் மொழி உலகத்திற்குள், அர்த்தமின்மைகளையும், மௌனங்களையும், இன்மைகளையும் கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக மொழி பன்முகத்தன்மைவுடையதாகவும், பலவிதமாக விரிகிற தன்மையுடையதாகவும் தோன்றிவிடுகிறது. மரபார்ந்த மொழியியல் கோட்பாடுகள், மொழியின் இந்தத் தன்மையை ஒரு காலத்திலும் விளக்குவதில்லை.

விளிம்புநிலையில் பெண்மை

கிறிஸ்தெவா எப்பொழுதுமே “பெண்” என்றால் என்ன என்று வரையறைச் செய்வதை எந்தவிதத் தயக்கமின்றி மறுத்து விடுகிறார். “ஒருத்தர் ஆணாக இருக்கிறார், ஒருத்தர் பெண்ணாக இருக்கிறார் என நம்புவதும் பேசுவதும் மாதிரி அபத்தம் வேறொன்றும் இல்லை” என 1974இல் அளித்த ஒரு நேர்முகத்தில் விளக்கினார். தந்தைவழிச் சமூகத்தில் பெண்ணை வரையறைப்படுத்துவதும், அதற்கேற்ப அவளை ஒடுக்குவதும் அச்சமூகத்தின் அரசியல் யதார்த்தமாக விளங்கினாலும்கூட, கிறிஸ்தெவா அதைக் கடுமையாக எதிர்க்க வேண்டிய தேவையை வலியுறுத்தினார். இந்தப் போராட்டத்தில் அப்படிப் பெண்ணை ‘வரையறைப்படுத்த முடியாது’ என வாதிடுவதின் இன்றியமையாமையைச் சுட்டிக் காட்டினார். அப்படியே ஏதாவதொரு வகையில் வரையறைப் படுத்தத்தான் வேண்டுமென்றால், தந்தைவழிச் சமூகம் வரையறைப் படுத்தியுள்ளதற்கு அப்படியே நேர் எதிரான ஒரு முறையில் அவள் இருப்பு அமைவதாக வாதாடினார். தந்தைவழிச் சமூகம் உரிமைகோருவது போல அவளை ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் அடையாளப்படுத்த முடியாது. அவள் வரையறைப் படுத்தி பெயரிடுவதற்கு வெளியே நிற்கிறாள். அதுபோல குறிப்பிட்ட கருத்தாக்கத்திற்குள் அவளை வடிவமைத்து அடைத்து விடுவதற்கும் அவள் ஒருபோதும் அடங்கிவிடுவதில்லை. ஆனாலும் கிறிஸ்தெவா இந்த ஆணாதிக்கச் சமூகத்தில், ‘விளிம்புநிலை மக்கள்’ என்று ஒரு பட்டியல் இட்டால் அதில் முதல் இடத்தை வகிப்பவள் பெண்ணாக இருக்கிறாள் என ஓர் இடத்தை வரையறை செய்வதையும் பார்க்கிறோம். ஆனால் இந்த வரையறை பெண்ணைக் குறித்த ஆணாதிக்கப் புனைவிற்கு எதிர்மறையானது. நடைமுறைத் தந்திரம் சார்ந்தது. கிறிஸ்தெவாவின் மொழியியல் கோட்பாட்டில் வினைபுரியும் அவருடைய “தலைகீழாக்கும் அறம்” இங்கே வினைபுரிந்துள்ளது. இந்த அடையாளப்படுத்துவதில் உள்ள ஆழமான அவருடைய ஐயப்பாடு காரணமாக (எதை இங்கே அடையாளப்படுத்த முடியும்? பாலின அடிப்படையில் அடையாளப்படுத்துவதுகூட மெய்மை சார்ந்ததா? ‘அடையாளப்படுத்துதல்’ என்ற இந்தக் கருத்தே விவாதத்திற்குரியது). “பெண் எழுத்து” என்று பெண்ணியல்வாதிகள் உரிமை கோருவது மற்றும் இயல்பிலேயே பெண்ணுக்கே உரிய சில குணங்கள் இருக்கின்றன என்று கருதுவது என்பனவற்றையெல்லாம் மறுத்து விடுகிறார். 1977-இல் அளித்த ஒரு நேர்காணலில் பெண் எழுத்தை, திரும்பத்திரும்ப வரும் சில நடை, சில சிறப்பான கருக்கள் என்ற முறையில் ஆண் எழுத்திலிருந்து வேறுபடுத்திக் காணலாம் என்றாலும், இந்தக் குணத்தை உண்மையான பெண்ணின் பண்பாகவே நிலைநிறுத்திவிட முடியாது என்கிறார். இதன் பொருள், கிறிஸ்தெவா பெண்மை குறித்த எந்தவிதமான கோட்பாட்டையும் கொண்டிருக்கவில்லை என்பதுதான். அவர் கொண்டிருக்கிற கோட்பாடு விளிம்புநிலை, தலைகீழாக்கம், மாறுபடுதல்-என்பவை மட்டுமே. இந்நிலையில் பெண்களின் போராட்டம் என்பது, மையப்படுத்தப்பட்ட அதிகார அமைப்பிற்கு எதிரான எல்லாப் போராட்டங்களையும் போலவே ஒரு போராட்டம் என்ற முறையில் தான் அமைகிறது.

 கிறிஸ்தெவாவின் இத்தகைய சாராம்சப்படுத்துவதற்கு எதிரான அணுகுமுறைதான் பாலின வேறுபாடுகள் குறித்த அவருடைய கோட்பாட்டிலும் வெளிப்படுகிறது. “தன்னிலை” உருவாக்கம் மற்றும் அர்த்த உருவாக்கம் குறித்த அவருடைய கோப்பாடுகள் பெரிதும் பாலின வேறுபாடு அற்;ற ஒடிபஸ் பருவத்திற்கு முந்திய நிலையோடு தொடர்புடையவையாகும். வேறுபாடுகள் குறித்த பிரச்சனை எப்பொழுது உருவாகிறதென்றால், மொழி என்னும் குறியீட்டு உலகிற்குள் நுழையத் தொடங்கும்போதுதான்.கிறிஸ்தெவா இந்தச் சூழல் ஒரு சிறு பெண் குழந்தைக்குள் எவ்வாறு நிகழ்கிறது என்பதை “சீனப் பெண்களைப் பற்றி”-என்ற தன் நூலில் விவாதிக்கிறார். அதில் அவர், சொற்பொருள் உருவாக்கத்திற்கு மூலமாக இருக்கும் கருப்பை ஒடிபஸ் நிலைக்கு முந்தியது. அது தாயோடு தொடர்புடையது. அதே நேரத்தில் சொற்பொருள் வித்தியாசங்களுக்குக் காரணமாக அமையும் குறியீட்டு உலகம,. தந்தை விதிகளின் செல்வாக்கிற்கு உட்பட்டது. இந்தச் சூழலை எதிர்கொள்ளும் அந்தச் சிறுபெண், முதலில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற சிக்கலை எதிர்கொள்ளுகிறாள். அதாவது தாயோடு தன்னை அடையாளப்படுத்துவதா அல்லது, குறியீட்டுக் குணம் உள்ள தந்தையோடு அடையாளப்படுத்திக் கொள்வதா?. ஓடிபஸ் நிலைக்கு முந்திய பருவம் தீவிரப்படும் போது தாயோடு அடையாளப்படுத்தும்குழந்தை, குறியீட்டு உலகத்தின் செல்வாக்கிற்கு உட்பட நேர்ந்த போது, தாயின் உடலைச் சார்ந்திருக்கும் நிலையிலிருந்து அதன் தடம் தெரியாமல் தன்னை விடுவித்துக்கொள்கிறது.

 இவ்வாறு கிறிஸ்தெவா வேறுபட்ட இரண்டு வாய்ப்புகளைப் பெண்களுக்கு வரைந்து காட்டுகிறார்.ஒன்று தாய் அடையாளம்.இது ஒடிபஸ் பருவத்திற்கு முந்தியகூறுகளோடு அடர்த்தியாய்ச் சார்ந்திருப்பது. குறியீட்டு ஒழுங்கிற்கு வெளியே விளிம்பு நிலையில் இருப்பது. மற்றொன்று தந்தை அடையாளம். இது பெண்களைக் குறியீட்டு ஒழுங்கிற்குள் தனது அடையாளத்தைத்தேடி அடையத் தூண்டுவது.இதன் முலம் கிறிஸ்தெவா கூறவருவது என்னவென்றால் பெண்ணைச் சாராம்சம் கொண்டவள் என வரையறை செய்ய முடியாது: ஏனென்றால் ஒடிபஸ் பருவத்திற்கு முந்தியநிலையில் ஆண்-பெண் என்கிற வித்தியாசம் இல்லை என்பதுதான்.அதேநேரத்தில் பெண் என்பது எப்பொழுதும் பல வாய்ப்புகளுக்கான திறந்த வெளியாக விளங்குகிறது.அதாவது ~பெண்-அப்படியென ஒன்று இல்லை என்பதுதான். எனவே கிறிஸ்தெவா ~மாறாத முழுமையான அடையாளம்~எனக்கூறும் அரசியல் அடிப்படையிலான எந்தக் கோட்பாட்டையும் மறுத்து ஒதுக்கி விடுகிறார். ஆனாலும் மொழியியலில் எவ்வாறு சொற்பொருள்மாற்றக்கோட்பாடு விளிம்பு நிலையில் நிற்கிறதோ அதேபோல் தந்தை வழிச்சமுகத்தில் பெண் விளிம்பு நிலையில் நிறுத்தப்பட்டுள்ளாள் எனபதை மட்டும் மீண்டும்மீண்டும் வலியுறுத்துகிறார். ஆனாலும் அவரை ஒரு சாராம்சவாதியென உறுதிபடக்கூறிவிடவும் முடியாது.

 கிறிஸ்தெவா, ‘தன்னிலையை’ வடிவமைப்பதில் ‘உடலின் வடிவம்’ புறப்பொருளாக வினைபுரிகிறது என்ற பிராய்டினுடைய கருத்தின் மேல் நம்பிக்கையுடையவராக விளங்குகிறார் என்பது உண்மை. ஆனாலும், சிலர் செய்வது போல உடலின் ஆசையோடு இணைத்துப் பெண்ணின் அடையாளங்களை வடிவமைத்துவிட முடியாது. கிறிஸ்தெவா, தந்தைவழிச் சமூகத்தின் குறியீட்டு ஒழுங்கில் பெண் விளிம்புநிலையில் நிறுத்தப்பட்டுள்ளாhள் என்ற தன் வாதத்தை, ஆண்களுக்கும் நீட்டித்துப் பேசுகிறார். அதாவது இந்தக் குறியீட்டு உலகத்தில் ஆணும் விளிம்புநிலையில்தான் நிறுத்தப்பட்டுள்ளான் என வாதிட முடியும் என்கிறார். ஆண் கலைஞர்களான அவந்த்-கார்டு எழுத்தாளர்களைப் பகுத்தாராயும் போது (ஜாய்ஸ், ஆர்த்தோ, மல்லார்மே, சேலைன், லௌத்ராமோண்ட்) மேற்கண்டவாறு அவர்களையும் விளிம்புநிலைவாதிகளாக விளக்குகிறார். ஆர்த்தோ கூறிய கூற்றை எடுத்துக்காட்டுகிறார். அதாவது, ஒரே நேரத்தில் எழுத்தாளர் தந்தையாகவும் இருக்கிறார். தாயாகவும் இருக்கிறார். தானாகவும் இருக்கிறார்” என்கிறார் ஆர்த்தோ. மேலும் கிறிஸ்தெவா, ஹெலன் சீக்சு, இரிக்கேரே போன்றோர் ஆண்மையச் சமூகத்தில் பெண் என்பவள் குறையுடையவளாக, எதிர்மறையானவளாக, அர்த்தமில்லாதவளாக, காரண-காரியத்திற்கு அப்பாற்பட்டவளாக, குழப்பமானவளாக, இருண்மை கொண்டவளாக மொத்தத்தில்; ‘இல்லாதவளாக’ வரையறை செய்வதை எல்லாம் அடுக்கி, பெண் விளிம்புநிலையில் நிறுத்தப்பட்டுள்ளாள் என விளக்குகிறார். இவ்வாறு விளிம்புநிலை என்று வரும்போது, பெண் எல்லைக்கு உட்படுத்தப்பட்டு சமூக ஒழுங்கின் எல்லைப்புறத்தில் நிறுத்தப்பட்டுள்ளாள் என்றாகிறது. இந்நிலையில் ‘பெண்’ என்பவள் உள்ளேயும் இல்லை வெளியேயும் இல்லை. அறிந்து கொள்ளுகிற ஒன்றாகவும் இல்லை. அறிய முடியாத ஒன்றாகவும் இல்லை. இதுதான் ஆண்மையச் சமூகத்தில் பெண்ணின் நிலையாக இருக்கிறது. ஆனால் இந்தப் பெண் தூய்மையான இயற்கையின் வடிவமாகவும், தாய்க்கடவுளாகவும் சில இடங்களில் சில நேரங்களில் இச்சமூகத்தில் உயர்த்தி வைக்கப்படுவதும் நிகழ்கிறது. தந்தைவழிச் சமூகத்தின் அதிகாரம், அது பெண்ணை என்னவாக நம்புகிறதோ அதுவகைச் செய்து காட்டுகிறது.

பெண்ணியம், மார்க்சியம், அதிகார நிறுவனங்களுக்கு எதிரான நிலை

 கிறிஸ்தெவாவின் எழுத்துக்கள், எந்தவிதத்திலும் ஒரு பெண்ணியவாதியியன் எழுத்துக்குரிய குணத்தோடு விளங்குவதில்லை. அதன் அணுகுமுறை ஓர் அரசியல் பண்பைக் கூடக் கொண்டிருப்பதில்லை. 1960-களில் ஒரு மொழியியல்வாதியாகத் தொடங்கி, 1974-இல் முதன்முதலில் பெண் மற்றும் பெண்ணியம் தொடர்பான தலைப்புகளில் கட்டுரை எழுதத் தொடங்கினார். ஏறத்தாழ அதே காலகட்டத்தில் உளவியல் பகுப்பாய்விலும் பயிற்சி பெறத் தொடங்கினார். 1970-களின் இறுதியில் அவருடைய எழுத்துக்கள் ; உளப்பகுப்பாய்வு தொடர்பான பிரச்சனைகளிலும், பாலியல் தொடர்பான சிக்கல்களிலும், பெண் மற்றும் காதல் தொடர்பானவைகளிலும் குறிப்பிடத்தக்க அளவிற்கு அமைந்தன. பெண்ணியல்வாதிகள் அந்த எழுத்துக்களைப் பெரிதும் மதித்துப் போற்றினர். குறிப்பாக, தாய்மை குறித்த பிரச்சினை பற்றிய அவருடைய அணுகுமுறை பெரிதும் மத்pக்கப்பட்டது. தந்தைவழிச் சமூகத்தில் “பெண்” நசுக்கப்படுகிறாள் என்பதைவிடத் தாய்மைதான் அதிகமாக ஒடுக்கப்படுகிறது என்ற வாதத்தை தீவிரமாக முன்வைத்தார். லக்கான கூறுவது போலப் பிரச்சினை பெண்ணினுடைய காம உச்சத்தில் மட்டும் இல்லை. மாறாக அவருடைய உற்பத்திக்கும் காம உச்சத்திற்குமான உறவில் இருக்கிறது என விளக்கினார். கிறிஸ்தெவா-வினுடைய இந்தப் பார்வை, பெண்ணியல்வாதிகளுக்கு ஆர்வம்தரத்தக்க ஒரு பகுதியைத் திறந்து விட்டது. மற்றும் கிறிஸ்தெவா-வே ஐரோப்பிய நாகரித்தில் நிலவும் ‘மடோன்னா’ போன்ற தாய்மை குறித்த கருத்தாக்;கங்களைக் குறித்துப் பெரிய அளவில் பகுத்தாராய்ந்தார். இந்தப் பார்வையில் பிறந்த அவருடைய எழுத்துக்கள் குறிப்பாக அச்சத்தின் அதிகாரங்கள் ( 1982,) மற்றும் காதல் கதைகள்-1983-ஆகிய நூல்கள் பெண்ணியல்வாதிகளால் பெரிதும் பொருத்தமான நூல்களாகக் கருதப்பட்டன.

 தொடக்க காலத்தில் மார்க்சியவாதியாகத் தன்னை அடையாளப்படுத்திக கொண்டதில் இரகசியம் ஏதும் இல்லை. இந்த மார்க்சியம் மற்றும் வேறுபட்ட மாவோ-வாதிகளோடும் அரசு அமைப்புக்கு எதிரான சக்திகளோடும்கொண்ட இந்தத் தொடர்புதான் அவருடைய அணுகுமுறையில் ஒருவகையான எதையும் சந்தேகிக்கும் பார்வையை வழங்கியது. 1970-களின் இறுதியில் தனது தொடக்ககால சீன மாவோ-ஸ்டுகளின் கொள்கைகளிலிருந்து விலகி, அமெரிக்க முறையிலான மனித உரிமையை முதலிடத்தில் வைக்கும். பின் முதலாளித்துவச் சிந்தனைப் போக்கிற்குள் வந்து சேர்ந்தார். இதனால் பெரிதும் தனது வாசகர்களாலேயே விமர்சனத்திற்கு உள்ளான கிறிஸ்தெவா இப்படி அறிக்கை இட்டார். “குழுக்களின் மேல் எனக்கு ஆர்வம் இல்லை. தனிமனிதர்களின் மேல்தான் பெரிதும் ஆர்வம் கொண்டிருக்கிறேன்". இவ்வாறு மார்க்சியம், பெண்ணியம் என்பதிலிருந்து அவர் தூரமாகச் சென்றுவிட்டார்; என்பது போல மேல் பார்வையில் தோன்றினாலும், அவருடைய ஆரம்பகால மார்க்சிய மற்றும் பெண்ணிய எழுத்துக்களுக்கும், தனிநபர் உரிமை கோரும் பிற்கால எழுத்துக்களுக்கமான இடைவெளியை நிரப்பிக் கொள்வதில் பெரிய சிக்கல் ஏதும் இருக்கவில்லை. தனது ஆரம்பகாலப் பெண்ணியல் எழுத்துக்களில் கூட, கிறிஸ்தெவா ‘பெண்’ என்ற நிலையிலிருந்தோ அல்லது பெண்ணுக்காகவோ எழுத முயற்சிக்கவில்லை. அவரைப் பொறுத்தவரை “ பெண் போல பேசுவது” என்பது மாதிரியான கூற்றுக்கள் அர்த்தமற்றவைகளாகும். ஏனென்றால் ஏற்கனவே நாம் அறிந்தது போல அவருடைய வாதப்படி, “பெண்- அப்படியென ஒன்று இல்லை” என்பதுதான். அவருடைய வாதப்படி ‘பெண்’பன்முகப்பட்டது. வரையறைக்குள் அடங்காதது.

 மொழிவழிப்பட்ட ஆண்மைய ஒழுங்கிற்குள் வளரும் போதே திணிக்கப்பட்டுவிடும் பெண், அதிலிருந்து வேறான ஒரு ‘வெளியை’ எப்படி அடையாளம் காணமுடியம். அப்படியொரு வெளியிலிருந்து, வேறான ஒரு மொழியில் எப்படிப் பேசிவிட முடியும்? என்ற பிரச்சினைகளுக்குக் கிறிஸ்தெவா விளக்கம் அளிக்கிறார். புரட்சிகரமான ஒரு தன்னிலை, தன்னுடைய புரட்சிகரமான நடவடிக்கைமூலம் காம உச்சநிலை போன்ற ஒருவிதமான கட்டுப்பாடற்ற பல்வேறு பொருள் மாறுபாட்டிற்குள்ளாகும் மொழியைக் கைப்பற்றுதன் மூலம் பெண் தனக்கென ஒரு வெளியை உருவாக்க முடியும் எனக் கருதுகிறார். இத்தகைய புரட்சிகரமான நடவடிக்கையை 19-ஆம் நூற்றாண்டு இறுதிக்கால அவந்த்-கார்டு கவிஞரான லௌத்திரா மோண்டு, மல்லார்மே,ஆகியோரும், நவீனத்துவ எழுத்தாளரான ஜாய்ஸ் போன்றோரும் சாதித்துள்ளனர். ஆண்மையச் சமூகம் வடிவமைத்த மொழி ஒழுங்கைத் தாண்டி, ஆண்-பெண் என்ற பேதமற்ற ஒரு மொழி வெளியில் இயங்கியுள்ளனர்.

 கிறிஸ்தெவா தன்னிலைக்கும் சமூகத்திற்குமென உறவுநிலை குறித்துச் சரியான முறையில் கணக்கில் கொள்ளவில்லை என்றும், விளிம்புநிலை குறித்த அவரது கருத்தாக்கத்திலும் சமூகத்திற்கும் அதற்குமான இயங்கியல் உறவு குறித்த விளக்கம் இல்லை என்றும் சில விமாசனங்களைப் பல பெண்ணியல்வாதிகள் முன் வைத்தாலும், அவருடைய எழுத்தின் ஆழத்தில் புலப்படும் பெண்ணியத்திற்கான உடன்பாடான கூறுகளை யாரும் புறந்தள்ளிவிட முடியாது. விளிம்புநிலை மற்றும் தலைகீழாக்கம் குறித்த அவருடைய கோட்பாட்டு ஆராய்ச்சிகள், தன்னிலையின் அடையாளச் சிக்கல் குறித்த அவருடைய புரட்சிகரமான கட்டுடைப்பு அணுகுமுறை, ஒரு கலைப்படைப்பின் இயங்கியல் மற்றும் வரலாற்றுச் சூழலை ஆராய்வதில் அவர் எடுத்துக் கொள்ளும் ஆழமான அக்கறை எல்லாம், பெண்ணியம் குறித்த தேடலில் புதிய தளங்களை நோக்கி நகர்வதற்குத் துணைபோகியுள்ளன. அவருடைய மொழிக் கோட்பாடு, மற்றும் குழப்பமான தன்னிலை குறித்த சிந்தனைகள் எல்லாம் பெண்கள் மற்றும் ஆண்களின் எழுத்துக்களை சாராம்சப்படுத்துவதற்கு எதிரான ஒருமுறையில் அணுகி ஆராய்வதற்குப் பயன்பட்டுள்ளன. கிறிஸதெவா-வின் எழுத்துக்களை, அடிப்படையில் பெண்ணியல்வாதி ஒருவரின் எழுத்துக்களாகக் கொள்ள முடியாது என்றாலும், அர்த்த்ப்படுத்துவதிலும் மொழியிலும திணிக்கப்பட்டுள்ள மூடுண்ட அதிகாரத்துவத்தை உடைத்து, திறந்த ஒரு விளையாட்டுக்களமாக மொழியை மாற்றிக் காட்டியுள்ளது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. பெண்ணியத்திற்கு அவர் வழங்கிய கொடையாக இவை கொள்ளத் தக்கவைகளாகும்.

(TORIL MOI, Sexual/Textual Politics: Feminist literary Theory ஏன்ற புத்தகத்தில் உள்ள Marginality and subversion: -Julia Kristeva என்ற கட்டுரையின் தமிழாக்கம்- க.பஞ்சாங்கம், புதுச்சேரி.)

நன்றி - கீற்று

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்