/* up Facebook

Apr 15, 2014

தமிழ் சூழலில் வல்லுறவுச் சம்பவங்கள் - சாலையூரான்


கடந்த 5 ஆண்டுகளில் இடம்பெற்ற 6467 பாலியல் வல்லுறவுச் சம்பவங்களில் 6195 சம்பவங்கள் 18யதுக்கு குறைந்தோர் மீது இடம்பெற்றிருப்பதாக சிறுவர், மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த நேற்று நாடாளுமன்றில் ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறார்.

இந்த வல்லுறவுச் சம்பவங்களை முன்னிறுத்தி 2008ஆம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஆண்டுதோறும் இச்சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துச் செல்வதும்  இதற்காக மேற்கொண்ட ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த முறைகேடான போக்குக்கு எதிராக கடந்த வியாளனன்று இடம்பெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் இக்குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபட்ட அரசியல்வாதிகளைப் பற்றிய கேள்விகள் இவ்விடத்தில் பொருத்தமற்றதென்ற ஒரு கருத்தையும் அமைச்சர் திஸ்ஸ கரலியத்த குறிப்பிட்டிருக்கிறார்.

இதுபற்றி கேள்வி எழுப்பிய ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஷி சேனநாயக்காவுக்கு பதிலளித்த அமைச்சர் தனக்கு தரப்படும் குறிப்பில் இச்சம்பவங்கள் பற்றிய எண்ணிக்கை விபரம் இருக்குமே தவிர பெயர் விபரங்கள் எதுவும் இருக்காதென்ற ஒரு கருத்தையும் அவர் முன்வைத்திருக்கிறார்.

நிற்க, போருக்குப் பிந்திய அவதானிப்பில் பெண்களில் இளவயதினர் இவ்வாறான நெருக்கடிக்கு கூடுதலாக முகம்கொடுக்கும் நிலை ஏன் ஏற்பட்டிருக்கிறது என்பது இவ்விடத்தில் பிரதானமான ஒரு கேள்வியாக முன்வந்து நிற்கிறது.

நடந்து முடிந்த யுத்தத்தின் ஒரு பக்க விளைவாக உறவுகளை இழந்த இந்த வயதினர் பெற்றோரின் அல்லது பராமரிப்பாளரின் நேரடிக் கவனிப்பிலிருந்து; அந்நியப்பட்டிருக்கும் நிலையொன்று பிந்தியதாக சமுகத்தில் உருவாகி இருப்பதை இந்த சம்பவங்கள் முன்னறிவிக்கின்றன.

இதில் இவ்வாறான சிறார்களை பராமரிக்கும் நிலையங்களில் பெற்றோரால் கைவிடப்பட்ட நிலையில் அல்லது பெற்றோர் இல்லாத நிலையில் இணைந்து கொள்ளும்  பெண்பிள்ளைகளின் எண்ணிக்கை கடந்த நான்காண்டுகளில் தொடர்ந்து அதிகரித்து செல்லும் ஒரு போக்கை கொண்டிருப்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

அவ்வாறே இந்த பராமரிப்பு நிலையங்களை நிர்வகிக்கும் பணியாளர்களாலேயே அங்கு பராமரிக்கப்படும் சிறுவர் சிறுமியர் துஷ்பிரயோகம் செய்யப்படும் சம்பவங்களும் அண்மைக் காலத்தில் பதிவாகியிருக்கின்றன. இதனைவிட அண்மைக் காலத்தில் கூடுதலான சம்பவங்கள் தனித்து விடப்பட்ட சூழலில் உறவினர்களாலேயே வல்லுறவுக்குள்ளாகும் சம்பவங்களும் அவதானிக்கப் பட்டுள்ளன.

கைத்தொலைபேசி பாவனையும் கூடவே இணையத்தள பயன்பாடும் கட்டுமீறியிருக்கும் இந்த யுகத்தில் இந்த இளவயதினர் இவற்றின் பாவனையால் தாம் எவ்வாறான சூழலுக்குள் தள்ளப்படுவோம் என்பதை நிதானிப்பதற்கு முன்பதாகவே அதற்குள் வீழ்ந்து தத்தளிக்கும் சம்பவங்;களும் பதிவாகியிருக்கின்றன.

இவ்வாறான பாலியல் வன்முறைகளுக் கெதிராக குரல் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதற்கும் தாம் இருப்பதாக கூறிக்கொள்ளும் சிறுவர் மற்றும் பெண்களின் உரிமைக்கான அமைப்புக்கள் இதுவிடயத்தில் எவ்வாறான செயற்பாட்டை கொண்டிருக்கின்றன என்பதையும் கேட்டுக்கொள்ள வேண்டி இருக்கிறது.

இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதும் ஒரு கண்டன அறிக்கை வெளியிடுவதுடன்  அல்லது இதுபற்றிய ஒரு கவன ஈர்ப்பு நடவடிக்கையுடன் இந்த அமைப்புக்கள் தமது செயற்பாட்டை மட்டுப்படுத்திக் கொள்கின்றன. நீண்ட காலத்தில் இந்த முறைகேடுகளை மட்டுப்படுத்திக் கொள்வதற்கான தொடர்ச்சியான வேலைத்திட்டத்திற்கு பதில்  இந்த அமைப்புக்களது செயல்பாடுகளும் வெறும் சம்பவங்களாகவே அமைந்துவிட்டிருப்பது கவலை தரும்  செய்தியாகும்.

உண்மையில் இவ்வாறான சம்பவங்கள் சட்ட நடவடிக்கைக்கு உட்படும் சூழல் உருவாகும் போது அதற்கான செயற்பாடுகளை இறுதிவரை  முன்னெடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதில் இந்த அமைப்புக்கள் எதுவரை உண்மையாக உழைக்கின்றன என்பதையும் கேட்டுக்கொள்ள வேண்டி இருக்கிறது.

எந்த வயதினராக இருந்தாலும் சரி குறித்த சமுகத்தில் பெண்கள் தமது வாழ்க்கைக்கான சூழலில் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்படுவதென்பது அது அந்த சமுகத்தினது இயங்கு தளத்தின் தரநிலையை வெளிப்;படுத்தும் முக்கியமான ஒரு குறிகாட்டியாகும்.

கூடவே அந்த மக்கள் சமுகமாக தம்மை உணரும் நிலையிலிருந்து விடுபட்டு வெறுமனே ஒரு உதிரிகள் அணியாக தன்னை தரம் தாழ்த்திக் கொள்ளும் நிலைக்கு அவர்கள் சென்று கொண்டிருப்பதையும் அது சுட்டிநிற்கிறது.

இனத் தேசியத்தின் பெயரால் வலிந்து ஒருமுகப்பட முனையும் எமது தமிழ்ச்சூழல் ஒருங்கிணைய முடியாத படிநிலை முரண்பாடுகளை பெருமளவுக்கு தன்னகத்தே கொண்டிருப்பதும் பெண்கள் எதிர்கொள்ளும் இந்த பாதுகாப்பற்ற நிலைக்காக ஒருமுகப்பட முடியாதிருப்பதற்கு ஒரு பிரதான காரணி என்பதை இவ்விடத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
நன்றி - தேனீ

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்