/* up Facebook

Apr 7, 2014

பச்சைக் கண் பூதம் - நிர்மலா கொற்றவை


இப்போதிருக்கும் ‘சில’ ‘புரட்சிகர’ அமைப்புகள் மற்றும் கட்சிகளை ‘Green-Eyed Monster’ எனும் ஒரு கொடிய பூதம் பிடித்தாட்டுகிறது. தம்முடைய இருப்பு பற்றிய கேள்வி எழும்போது, இந்த பூதம் மற்றவருடைய அடையாளத்தை ‘அறுவடை’ செய்யக் கிளம்புகின்றது. அடையாள அரசியல் எதிர்ப்பு என்கிற பெயரில் இவ்வமைப்புகள் கையெடுக்கும் அவதூறு அரசியலின் பின்னணியில் செயல்படுவது இவர்கள் அமைப்புபற்றிய ஒரு நம்பிக்கையின்மையே. இதுவும் ஒருவகையில் அடையாளப் பிரச்சனையே. இதனோடு பிறர் நலன் கண்டு பொறாமை எனும் பிரச்சனையும் கைகோர்த்துக் கொள்கிறது. அதாவது மற்றவரால் தமது இருப்பு காலியாகிவிடுமோ என்ற அச்சத்தின் விளைவாக தம் அமைப்புக்கு மட்டுமே ஒரு தனிச்சிறப்புடைய விசுவாசத்தைக் கோரும் ஒரு அற்பவாத எண்ணத்தோடு அடுத்தவரின் அடையாளத்தை அழிக்கும் முயற்சியில் இவர்கள் ஈடுபடத் தொடங்குகின்றனர் – இதுபோன்ற Green-Eyed Monster களிடம் நாம் எச்சரிக்கையோடிருப்போம்….அதேவேளை இவர்களுக்கு நாம் நமது பரிதாபத்தையும் உரித்தாக்குவோம்…..

அடையாள அரசியலை வெறுக்கும் ’சில’ ’புரட்சிகர’ அமைப்புகள், (தனிநபர்கள்) அதேவேளை சொந்த ஆர்வத்தின் பேரில் மார்க்சியத்தைக் கற்று சமூக மாற்றத்திற்கு தன்னால் இயன்ற பங்களிப்பு செய்ய நினைக்கும் தனிநபரின் அடையாளத்தை தம் அமைப்பின் பிரபல்யத்திற்காக அறுவடை செய்ய தன்முனைப்போடு செயல்படுகிறது. அதுமுடியாத போது (அதாவது அவர்களை வென்றெடுக்க முடியாதபோது) அவர்கள் மீதான வன்மத்தை வளர்த்துக் கொண்டு தம்முன் இருக்கும் செயலூக்கமான பணிகளைக் கூட மறந்து அவதூறு அரசியல் பாதையைத் தேர்ந்தெடுக்கிறது. இந்த அவதூறு அரசியல் அவர்களுக்கு தற்காலிக மகிழ்வையும், பெறுமையையும் தரலாம்….ஆனால் தோழர்களே அவர்கள் அம்பலப்பட்டுப்போகும் காலத்தில், அதுவரை அவர்கள் அமைப்பு ஆற்றிய பணியும்கூட தன் மதிப்பை இழந்து போகும்…. இந்தப் போக்கின் விளைவாக அடிப்படையில் வீணாவது அவ்வமைப்புகளில் உள்ள அடிமட்டத் தொண்டர்களின் கடும் உழைப்பும், பொதுமக்கள் மத்தியில் மார்க்சியத்தின் மீதான நம்பிக்கை இழப்பும் என்பதே நமது கவலையாக இருக்கிறது.


இறுதியாக தோழர்களே,

ஒரு புரட்சிகர அமைப்பு தன்னுடைய விரைப்புவாத போக்கின் மூலம், ஒருவேளை பிரபலமாகலாம், ‘வீரத்தின்’ அடையாளச் சின்னமாகலாம், கவர்ச்சிகரமான சொற்கள் சிலவற்றை உருவேற்றலாம், தன்னைச் சுற்றி கண்மூடித்தனமான ஆதரவு தரும் சில அடிமைகளைப் பெறலாம், ஆனால் தம்முடைய சுருக்கவாத அனுகுமுறையால் ஒருபோதும் அது புரட்சியின் தீர்மானகரமான சக்தியான மக்களிடம் சென்றடையாது. மேலும் பலவித அவசியமற்ற கவனச்சிதறல்கள் காரணமாக இவ்வமைப்புகள் பொதுவுடைமை சமுதாயத்தையும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும் நிறுவுவதற்கான வேலை திட்டத்தில் ஈடுபடுவதற்குப் பதில், மெல்ல மெல்ல மையப் பிரச்சனையிலிருந்து விலகிச் சென்று, தம் அராஜகவாத போக்கினால் நாளைடைவில் அவ்வமைப்பு ஒரு பாசிச அமைப்பாக மாறும் ஆபத்தும் இருக்கிறது.

- அவர்களின் ஆதாரமற்ற அவதூறுகளை நீக்குவதன் மூலமும், அவர்களின் அவதூறுகளுக்கு மௌனம் காப்பதன் மூலமும் நம்மால் செய்ய முடிவதெல்லாம் மானுட விடுதலைக்கும், சமத்துவ உறவுகளை நிலைநாட்டுவதற்கும் விஞ்ஞான பூர்வ வழிமுறைகளை படைத்தருளியிருக்கிற ஒரு சித்தாந்தத்திற்கு ”மேலும் அவமானத்தை தேடித் தராமல் இருப்பதே” - நன்றி, கொற்றவை.

நன்றி - சாவின் உதடுகள்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்