/* up Facebook

Apr 24, 2014

பெண்களும் சமூகமும் - லரீனா அப்துல் ஹக்


"எப்போது பார்த்தாலும் சமையல் குறிப்புக்களையும் அழகுக் குறிப்புக்களையும் சினிமா செய்திகளையும் தேடிச் செல்வதற்கு அப்பால் பொது அறிவை வளர்க்கும் சமூக, அரசியல், கல்வி மற்றும் சமயம் சார்ந்த துறைகளில் நமது அறிவுத் தேடலை அதிகரிப்பது அதிகப் பயனுடையதாகும்."
_______________________________________________________

இலங்கையரான நாம் பல்லின, பன்மொழி, பல்கலாசாரச் சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், ஊழலும் மோசடிகளும் மலிந்துள்ள நிலை, அரசியல் அராஜகங்கள், மனித உரிமை மீறல்கள் என்பவற்றோடு அண்மைக்காலமாகத் திட்டமிட்டு வளர்க்கப்படும் இன, மதத் துவேஷங்கள் என நாம் பன்முகப்பட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கியவர்களாக இருக்கின்றோம். இந்நிலையில், பெண்களாகிய நம்மில் எத்தனை பேருக்கு நாட்டில் தற்போது நிலவிவரும் பதட்டமான சூழல், நெருக்கடியான நிலை குறித்த புரிதல் இருக்கிறது என்ற கேள்வி மிகமுக்கியமானது.

ஒரு குடும்பமோ சமூகமோ ஆண்கள் - பெண்கள் எனும் இரு தரப்பினரையும் கொண்டே அமைந்துள்ளது. ஆகவே, அது தொடர்பான பொறுப்பும் பங்குபற்றுதலும் இருதரப்பினருக்கும் பொதுவானதாகும் என்பதை நாம் நினைவிற்கொள்ளவேண்டும். கல்வியைப் பொறுத்தளவில் ஆண்களை விட இன்று பெண்கள் அதிக அக்கறை உடையவர்களாய் இருக்கிறார்கள். என்றாலும், திருமணத்தின் பின்னர் அல்லது அதற்குச் சற்று முன்பு வேலைக்குப் போவோர் தவிர, நம்முடைய பெண்கள் பெரும்பாலும் பொதுச் சமூக ஊடாட்டத்தைப் படிப்படியாகக் குறைத்துக் கொள்கின்றனர். புத்தகவாசிப்பு, உலக, நாட்டு நடப்புகளை அக்கறையோடு அறிந்துகொள்ளுதல் என்பன அவர்களிடம் அறவே இல்லாமலாகிவிடுகின்றன. பெரும்பாலான பெண்கள் டிவி சீரியல்களுடனேயே தம்முடைய வாழ்வின் அல்லது ஓய்வின் பெரும் பகுதியைச் செலவழிப்பதைக் காண்கின்றோம். தமது வீடு, குடும்பம், கணவன், பிள்ளைகள் என்பதற்கு அப்பால் இவர்களுக்கு ஓர் உலகமே இல்லை என்றாகிவிடுகின்றது. இது சரியான போக்குத்தானா என்பதைப் பற்றி நாம் யாரும் அவ்வளவு அலட்டிக் கொள்வதாய்த் தெரியவில்லை.

சமூக உருவாக்கம், சமூகமாற்றம் என்பன தனித்து ஒரு கை ஓசை எழுப்பி உருவாகக் கூடியவை அல்ல. அவை கூட்டுப் பொறுப்புணர்வினாலும் கூட்டு உழைப்பினாலும் தோற்றம் பெறுவதாகும். இன்று நமது பெண்களுக்கு அது பற்றிய பிரக்ஞை இல்லாமல் போய்விட்டமைக்கு அவர்களை மட்டும் நாம் குற்றஞ்சொல்லிவிட முடியாது. காரணம், நம்முடைய சமூகத்தில் பெண்களுடைய வகிபாகம் மிகவும் குறுகியதாய், மிகுந்த வரையறைகளுடன் கூடியதாய்த்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது. காலங் காலமாக நிலவிவரும் இந்த நிலை மாறுவதற்கு நீண்ட நெடுங்கால உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவை என்பது மறுக்க முடியாத உண்மையே! ஆயினும், அதற்கான முன்னெடுப்பை நம் சார்பில் யாராவது வந்து செய்து தரும்வரை காத்திருக்காமல் பெண்களாகிய நாமும் அதைநோக்கி நகர வேண்டி இருக்கின்றது. அதற்கான அடிப்படை நமது கல்வி நிலையை உயர்த்தி, ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்வதாகும். வாசிப்பின் மூலமும் தேடலின் மூலமும் நமது சமூகப் பார்வையை, உலகப் பார்வையை ஆழ அகலப்படுத்திக் கொள்வதாகும்.

கல்வியைத் தொடர்தல்

இன்று கல்வித்துறைகள் பல்கிப் பெருகியுள்ளன. க.பொ.த. (சா.த), (உ.த) கற்றிருந்தாலும், பல்கலைக்கழகக் கல்விகற்றிருந்தாலும் அதையடுத்த படிமுறையை நோக்கி நகர்வதற்கான ஆர்வமும் உந்துதலும் முதலில் பெண்களாகிய நம்மிடம் இருக்க வேண்டும். அதன் பின்னர் தான் நமது உறவினர்களை, பொறுப்புதாரிகளை அணுகி அவர்களை அது தொடர்பில் "கன்வின்ஸ்" பண்ணக் கூடியதாக இருக்கும் உரியதுறையைத் தெரிவு செய்வதில் அவர்களுடைய ஆலோசனையையும் வழிகாட்டலையும் கூடப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். அவர்கள் அத்துறையில் போதிய தெளிவற்றோராக இருக்கும்பட்சத்தில், நாம் நம்முடைய ஆசிரியர்களை அணுகி உரிய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

நாட்டு நடப்பையும் உலக நடப்பையும் தெரிந்து கொள்ளுதல்

இன்று வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை என்பவற்றுக்கு அப்பால் "பேஸ்புக்" - முகநூல் முதலான சமூக வலைதளங்களின் பாவனை பரவலாக அதிகரித்துவருகின்றது. இணையவெளி எங்கும் அறிவின் கருவூலம் கொட்டிக் கிடக்கின்றது. இந்நிலையில், நம்முடைய வெளியுலக அறிவை வளர்த்துக் கொள்வதற்கு அவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். எப்போது பார்த்தாலும் சமையல் குறிப்புக்களையும் அழகுக் குறிப்புக்களையும் சினிமா செய்திகளையும் தேடிச் செல்வதற்கு அப்பால் பொது அறிவை வளர்க்கும் சமூக, அரசியல், கல்வி மற்றும் சமயம் சார்ந்த துறைகளில் நமது அறிவுத் தேடலை அதிகரிப்பது அதிகப் பயனுடையதாகும்.

பயன்பாடுகள்

சமூகத்தில் அரைப் பங்கினராக இருந்து மிகுதி அரைப்பங்கினரையும் உருவாக்குபவர்கள் பெண்களே. எனவே, அவர்கள் அறிவும் ஆளுமையும் உடையோராய் உருவாதலே சமூகத்தில் நல்லமாற்றங்கள் பிறக்க வழிவகுக்கும் என்பதை நாம் ஒரு போதும் மறந்துவிடக்கூடாது. இன்று பெண் வைத்தியர்கள், ஆசிரியைகள், பெண் விரிவுரையாளர்கள், பெண் அதிபர்கள், பெண் உளவள ஆலோசகர்களின் தேவை முன்னர் எப்போதையும் விட அதிகரித்துள்ளமையை நாம் அறிவோம். இந்தச் சமூகத் தேவைப்பாட்டை யாரோ இட்டு நிரப்பும் வரை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பது அறிவுடைமையாகாது. நம்முடைய பெண்களில் இருந்து அத்தகையவர்கள் உருவாவதும் உருவாக்கப்படுவதும் இன்றியமையாததாகும்.

தொழில்வாய்ப்பைத் தேடிச் செல்லாவிட்டாலும் கூட பெண்கள் தம்மளவில் தமது ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்வது மிக முக்கியமானதாகும். காரணம், "ஓர் அடிமைப்பெண் தலைவனை உருவாக்க முடியாது" என்ற வெளிநாட்டுப் பழமொழிக்கு அமைய, அறிவும் ஆளுமைத் திறனும் அற்ற பெண்களிடம் இருந்து சிறப்பான எதிர்காலத் தலைமுறை உருவாக்கத்தை நாம் எதிர்பார்க்க முடியாது. ஆகவே, சமூகத்தில் பணியாற்றுவதனாலும், வீட்டிலே இல்லத்தரசியாய் இருப்பதனாலும் சரி, பெண்கள் தம்முடைய அறிவுத் தேட்டத்தைக் கைவிட்டுவிடக் கூடாது. பொது அறிவை, வாசிப்பை மேம்படுத்துவதன் மூலம் வெளியுலகுடனான நமது தொடர்பு விரிவடைகின்றது. அது நமது தன்னம்பிக்கையையும் சுய சிந்தனையையும் வளர்க்கவும், பலதரப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் நமது பார்வையை விசாலப்படுத்தவும் பெரிதும் உதவக்கூடும்.

முடிவுரை

ஏலவே சுட்டிக்காட்டியது போல, பெண்களை அறிவுசார்ந்தும் ஆற்றல் சார்ந்தும் வளப்படுத்துவது என்பது முழு மொத்த சமூகத்தையும் வளப்படுத்துவதாகும். ஆகவே, திறமையுள்ள பெண்கள் துறைசார்ந்த நிபுணர்களாய் உருவாக்கப்படுவதில் பெற்றோர், ஆசிரியர், சமூக நலன்விரும்பிகள், மார்க்க அறிஞர்கள் ஆகிய அனைத்துத் தரப்பினரும் பூரண ஒத்துழைப்பை வழங்குவதும், அது தொடர்பான விழிப்புணர்வைத் தொடர்ந்து ஊட்டுவதும் மிக இன்றியமையாத சமூகப் பணியாகும். இதன் மூலம் ஆரோக்கியமான சமூகமொன்று உருவாவதற்கு நாம் வழிவகுக்கின்றோம் என்பதை ஒருபோதும் மறந்துவிடலாகாது. வீட்டில் உள்ள பெண்களுக்கு சிறந்த வாசிப்புப் பழக்கத்தையும் நல்ல பொழுது போக்குகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் அவர்களின் ஆளுமைத் திறன் வளர்வது மட்டுமல்ல, ஒழுக்க மேம்பாட்டுக்கும் அது வழிவகுக்கும். தவறான போக்குகளில் இருந்து விலகிக் கொள்ளவும் தேவையற்ற பிரச்சினைகளில் இருந்து தம்மைத் தாமே தற்காத்துக்கொள்ளவும் அந்த அறிவும் ஆளுமையும் அவர்களுக்குக் கைகொடுக்கும்.

எனவே, அறிவுத் தேட்டம் உடைய, பல்துறைசார்ந்தும் தமது ஆளுமையை வளர்த்துக் கொள்ளும் ஆர்வம் உடைய இந்த மனப்பாங்கு மிகத் திட்டமிட்ட அடிப்படையிலும் நேர்த்தியாகவும் நமது பெண்கள் மத்தியில் ஊன்றி வளர்க்கப்படல் வேண்டும். அப்படி இல்லாமல், "அவர்களுக்கு உலகமே தெரியாது, தொலைக்காட்சி சீரியல்களிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள், ஆஸ்பத்திரி, வங்கி முதலான பொது இடங்களில் சரியாகப் புழங்கத் தெரியவில்லை" என்றெல்லாம் புலம்பிக்கொண்டு இருப்பதால் எந்தப் பயனும் இல்லை.

இது நம்முடைய சமூகம். நாம் இதன் பங்காளிகள். ஆகவே, இச்சமூகத்தை நாளைய சவால்களை எதிர்கொள்ளும் வகையில் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் கட்டமைக்க வேண்டிய மாபெரும் பொறுப்பு நம் ஒவ்வொருவர் கையிலும் உண்டு என்பதை எப்போதும் நினைவிற் கொள்வோம்.

லரீனா அப்துல் ஹக் அவர்களின் முகநூலிலிருந்து நன்றியுடன் மீள்பதிவிடப்படுகிறது

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்