/* up Facebook

Apr 3, 2014

அந்த மூன்று நாட்கள் - கேஷாயினி எட்மண்ட்


(என் நாட்குறிப்பின் சில பக்கங்களிலான கிறுக்கல்களே இவை)
அப்போது நான் பாடசாலையில் தரம் ஒன்பதில் படித்துக்கொண்டிருந்தேன். எங்களுக்கான சுகாதார புத்தகத்தில் “பூப்படைதல்” பற்றிய பாடம் இருந்தது. ஆனால் எங்கள் சுகாதார ஆசிரியர் அதைப்பற்றி படிப்பித்தில்லை. அந்தப்பாடத்தி;ல் இருந்த படங்களை யாருமில்லா நேரத்தில் புரட்டிப்பார்த்துக்கொள்வதுண்டு. வகுப்பு நண்பிகள் யாரும் கண்டால் என்னை பகிடிபண்ணுவார்கள் என்பதே இந்த இரசிய புரட்டல்களுக்கான காரணம்.

என்னுடைய சக தோழிகள் அனேகர் தரம் ஒன்பதற்கு வரும் முன்னரே பெரியபிள்ளைகளாகிவிட்டனர். வகுப்பாசிரியர் இடாப்பு மார்க் பண்ணும் போது எமது பெயர்களை சத்தமாக தான் வாசிப்பார். ஆந்த நேரங்களில் பெரியபிள்ளையாகியதால் பாடசாலை வராமல் இருக்கும் பிள்ளைகளின் பெயர் வரும் போது “அவ ஏஜிடன்ட் பண்ணிட்டா” என்று சொல்லிக்கொள்வார். அப்படியான நாட்களில் வீட்டுக்கு வந்ததும் என் அம்மம்மாவிடம் அதைப்பற்றி கேட்பதுண்டு. “நீங்க இன்னம் வளரனும்” என்று மழுப்பிவிடுவார். பின்னேரம் அம்மா வேலைவிட்டு வந்ததும் அவவிடமும் கேட்பன். “பிறகு சொல்றன் மகள்” என்டு சொல்லுவா… ஆனால் ஒரே பார்த்திருக்கின்றேன் இதை சொல்லும் போது அம்மாவின் கொஞ்சம் வாடிடும். ஏன் என எனக்கு அப்போது புரியவில்லை. 
இப்படியிருக்கும் போது ஒரு நாள் குட்டிப்பெண்ணாக வலம் வந்த நான் எல்லாப்பெண்களையும் போன்று ஒரு நாள் “பெரிய பிள்ளை” ஆகிட்டன். நான் பாடசாலையில் வைத்துத்தான் பெரிய பிள்ளையாகினன். காலையில் விளையாட்டுப்பயிற்சி முடிந்து வகுப்பறைக்குள்ள போன போது என்னுடைய நண்பி ஒருத்தி என்னை அருகில் அழைத்து என்னை பின்னால் திரும்ப சொன்னாhள். நானும் என்னவென்று யூனிபோமை பார்த்தேன். அதில் கசறு போல ஏதோ சிகப்பாக பட்டிருந்தது. ஆவள் உடனேயே வகுப்பாசிரியரிடம் சொல்லிவிவிட்டாள். வகுப்பாசிரியரும் என்னை பாடசாலை Sick Room க்கு கூட்டிப்போனார். என்னிடம் அம்மாவின் போன் நம்பர் வாங்கி அவருக்கு கோல் பண்ணி வரவழைத்தார். பதினைந்து நிமிஷத்தில் அம்மாவும் பாடசாலைக்கு வந்துவிட்டார். வந்ததும் வராததுமாக என் நெற்றியில் முத்தமிட்டு கொஞ்சம் அழுதாங்க. எனக்கு ஏன் இப்படியெல்லாம் செய்றாங்க என்பது புரியவேயில்லை. என் வயிற்றிலும் சற்று வலியை உணர்ந்தேன். 
கொஞ்ச நேரத்தில் என்னுடைய முழுக்குடும்பமுமே பாடசாலைக்கு வந்திட்டுது. என்னை வெள்ளைத்துணியால் மூடி கையில் இரும்புத்துண்டு தந்து வாகனத்தில் வீட்டுக்கு கூட்டிப்போனார்கள். நான் என்னுடைய அறைக்குள் போவதற்கு முன்னரே பல மாற்றங்கள் அதனுள் ஏற்பட்டிருந்தது. ஏன் படுக்கை விரிப்புக்கள், ஜன்னல் திரைச்சீலைகள் மாற்றப்பட்டிருந்தன. அறை வாசலில் ஒரு கத்தி வைக்கப்பட்டிருந்தது. அம்மா என்னை Wash Room  க்குள் கூட்டிப்போய் Pad வைக்கச்சொல்லித்தந்தாங்க.

இன்று பின்னேரம் பக்கத்து வீட்டாக்கள், நெருங்கிய உறவுகள் எல்லோரும் வீட்டிற்கு வந்திருந்தார்கள். புடைவையால் சதுரமாக மறிப்பு கட்டி நடுவில் விளக்குமாறும் அதற்கு மேல் குப்பையும் வைக்கப்பட்டிருந்தது. என்னை அதற்கு மேல் இருத்தினார்கள். பக்கத்தில் தண்ணீர்த்தொட்டியில் மல்லிகைப்பூ போட்டு வைக்கப்பட்டிருந்தது. உறவுக்காரப் பொம்பளைகள் எல்லாம் அந்த தண்ணியல் அள்ளி எனக்கு ஊற்றினார்கள். பிறகு என்னை மீண்டும் வெள்ளைச்சீலையால் மூடி என்னுடைய அறைக்கு கூட்டிப்போனார்கள். அவர்கள் பேசியதை வைத்து இச்சடங்கிற்கு பெயர் “கண்ட தண்ணீர் வார்த்தல்” என்று புரிந்துகொண்டேன்.

என்னுடைய அப்பாவின் தங்கை “முறை மாமி” என்று சொல்லி எனக்கு பச்சை முட்டையும் வேப்பண்ணையும் பருக்கினா. எனக்கு அப்போதிருந்த நிலையில் குமட்டலும் அழுகையும் தான் வந்தது. வந்தவர்கள் எல்லாம் போன பிறகு என்னுடைய அம்மம்மா வந்து “ இனி வெளிய வரக்கூடாது. ஏதும் அவசரம் என்டால் இந்த கத்தியுடன்தான் வரவேண்டும்” என்று சொல்லி ஒரு கத்தியை கையில் தந்திட்டு போய்விட்டாங்க.

என்னுடைய அண்ணா, தம்பிக்கு கூட நானிருந்த அறைக்குள் போகக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அண்ணா முகத்தில் ஒருவித எச்சரிக்கை உணர்வையும் தம்பி முகத்தில் இனம்புரியாத ஒரு சிரிப்பையும் நான் பார்த்தன். பிறகு அண்ணா என்னுடைய அறைக்கு வரவேயில்லை. தம்பி தான் சிலவேளை யாருமில்லாத நேரம் பார்த்து அறை வாசலில் நின்று எட்டிப்பார்ப்பான். அன்றிலிருந்து பலர் என்னை பார்க்கவென்று வந்தார்கள். ஆனால் அவர்களுள் பெண்கள் மட்டும் தான் என் அறைக்குள் வருவார்கள். எள்ளு,வேப்பபெண்ணை, உளுந்து, நல்லெண்ணெய் போத்தல், நாட்டு கோழி முட்டை என்று இந்த பட்டியலில் ஏதோவொன்றினை கொண்டு வருவார்கள்.
காலையும் மாலையும் என் முறை மாமி வந்து பச்சை முட்டை, வேப்பெண்ணெய் பருக்கிட்டு போவார். மூவேளையும் நல்லெண்ணெய்யில் பொரித்த முட்டை, கத்தரிக்காய் என்பன சாப்பாடாக தரப்படும். தினமும் அம்மம்மா உழுந்து மா புட்டுக்குள் நல்லெண்ணெய் ஊற்றி ஒரு சீலையில் கட்டி சூடாக இடுப்பிற்கு ஒத்தடம் தருவா. பிறகு அதையே முடிச்சினை அவிழ்த்து என்னை சாப்பிட வைப்பாங்க. அடிக்கடி வெள்ளை உழுந்து கஞ்சி, எள்ளுருண்டை எனக்கு கட்டாயப்படுத்தி உண்ணுவதற்கு தருவாங்க. தினமும் மஞ்சள் பூசித்தான் என்னை குளிக்கவிடுவார்கள்.

மூன்று கிழமை இப்படித்தான் என் நாட்கள் நகர்ந்தன. அதுக்குப்பிறகு என் ருதுவான நேரத்தினை சாத்திரியிடம் கொடுத்து சடங்கு செய்ய நாள் குறித்தாங்க. அவர் சொன்னதன் படி குறிப்பிட்ட நிறத்தில் தான் எனக்கு புடவை எடுத்தாங்க. சடங்கு நாளன்றும் கண்ட தண்ணி நிகழ்வு போலவே நடந்தது. ஆனால் இம்முறை குளிப்பாட்டி முடித்தவுடன் சாமியறைக்கு அழைத்துப்போய் விளக்கேற்ற வைத்தார்கள். அதுக்கு பிறகு புடவை கட்டி தலையலங்காரம் முகவலங்காரம் எல்லாம் செய்து மண்டபத்தில் சோடிக்கப்பட்ட கதிரையில் இருக்க வைத்தாங்க.

வீடு முழுவதும் விருந்தினர்கள். சாப்பாடெல்லாம் தடபுடலாக இருந்தது. என் அம்மாவின் அண்ணன் , தம்பி இருவரும் வேட்டி கட்டி தலைப்பாகை அணிந்து எனக்கு நகை அணிவித்தார்கள். இதனை “தாய் மாமன் சடங்கு” என்பார்களாம். என் முறைமாமி ஆராத்தி எடுத்தார்கள். இவ்வாறு பல்வேறு சடங்குகளுக்கு பின் அருட்சகோதரர் ஒருவர் என்னை ஆசீர்வதித்து ஜெபம் செய்தார். பிறகு மதிய உணவு சாப்பிட்டார்கள். அதற்கு பின்னர் ஒவ்வொருவரும் குடும்பத்துடன் வந்து பரிசுகள் தந்து என்னுடன் நின்று புகைப்படம் பிடித்தார்கள்.என்னையும் தனியே பல கோணங்களில் அலங்காரங்களில் படம்பிடித்துக்கொண்டார்கள்

ஒருவாறு இதெல்லாம் முடிந்த பிறகு நான் இனி வெளியில் போகலாம் என்று அம்மா சொன்னாங்க. எனக்கு இப்படி அவர் சொன்னது ஏதோவொரு விடுதலை உணர்வினைத்தான் மனதளவில் கொடுத்தது. இரு நாட்கள் கழித்து பாடசாலைக்கு அனுப்பப்பட்டன். வகுப்பு மாணவிகளுக்கு கொடுக்க சொக்லட்டுக்களும் தந்து தான் அனுப்பினார்கள். இன்று வகுப்பிற்கு வந்த பாட ஆசிரியர்கள் எனது முகத்தோற்றம் மாறி சற்று வளர்ந்திருப்பதாக சொன்னார்கள். அன்றிரவு என் படுக்கையில் விழுந்தவுடன் “பெரிய பிள்ளை” ஆவது இனி எனக்கு வரக்கூடாது என்று தான் நினைத்துக்கொண்டேன்.
இப்படி நினைத்து ஐந்தாறு நாட்களில் எனக்கு திடீரென வயிற்றுவலி வந்தது. பாடசாலை விட்டு வீட்டுக்கு வந்த பிறகு உடைமாற்றும் போது தான் பார்த்தேன். என் சட்டையின் பின்பக்கம் இரத்த கறை படிந்திருந்தது. எனக்கு உடல் வலியுடன் கூடவே சொல்ல முடியாத மன உளைச்சலும் ஏற்பட தொடங்கியது.

அம்மாட்ட ஓடிப்போய்  சொன்னன். ஒவ்வொரு மாதமும் இப்படி வரும் என்று சிரித்தவாறு சொன்னார். அன்றிலிருந்து மாதம் தோறும் இதனை எதிர்பார்க்க ஆரம்பித்தேன். அந்த மூன்று நாட்களில் எனக்குள் ஒருவித விரக்தியும், வயிற்று வலியும் பரவியிருக்கும். இள நிற உடைகளை இந்நாட்களில் வெறுத்தொதுக்க ஆரம்பித்தேன். ஏன் இப்படியெல்லாம் இரத்தம் வருகிறது? எங்கிருந்து வருகிறது என்று எனக்கு யாரும் சொல்லித்தரவும் இல்லை….

இன்று பல்கலைகழக மாணவியாக “மாதவிடாய்” என்பது பற்றியும் “பூப்படைதல்” குறித்தும் எனக்கு நிறைய விடயங்கள் தெரியும். நாளை நான் தாயாகும் போது நிச்சயம் என் மகளுக்கு இவை குறித்த அறிவை முன்னரே கொடுத்து அவளை “அந்த மூன்று நாட்களுக்கு” தயார்படுத்த வேண்டும் என்று இப்போதெல்லாம் நினைத்துக்கொள்கின்றேன். நான் அனுபவித்த “மன உளைச்சல்” அவளுக்கும் வரக்கூடாது என்பதில் நான் மிகவும் தெளிவாக இருக்கின்றேன். ஒரு வேளை அவளும் என்னைப்போன்று “சடங்குகள்” தான் “பெரிய பிள்ளை” ஆதல் என்று புரிந்துகொள்ளக்கூடாது! 
அவளுக்குள் ஏற்படவுள்ள உடல், உள மாற்றங்களை அவள் உணர்ந்து அந்த மூன்று நாட்களுக்கு தன்னை தயாராக்கிக்கொள்ளவேண்டும்.

 வீணாகானம்

1 comments:

Tulasidass said...

படித்ததில் பிடித்தது. அருமையான கட்டுரை. கேஷாயினி எட்மண்ட் நன்றி. வாழ்த்துகள்.
-
சு. துளசிதாஸ்,
மலேசியா தேசிய பல்கலைகழகம் ,
மலேசியா.

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்