/* up Facebook

Apr 18, 2014

பேசியே ஆகவேண்டிய விஷயங்கள் - நிகோலஸ் டி கிறிஸ்டாப்

அவளது பெயர் ப்ளேவியன். கென்யாவைச் சேர்ந்த அந்தச் சிறுமிக்கு 11 வயது. அவளது தாத்தா, அவளிடம் தினமும் தவறாக நடந்துகொண்டதாகக் கூறுகிறாள். அவளது முதல்கிரேட் வகுப்பிலிருந்து இந்தக் கொடுமை தொடர்கிறதாம். தொடர்ந்து நடந்த சித்திரவதை மற்றும் அச்சம் நிறைந்த அன்றாடச் சூழலிலும் அவள் பள்ளிப்படிப்பில் சூட்டிகையாகவே விளங்கினாள். நூறு பேர் உள்ள வகுப்பில் முதல் அல்லது இரண்டாவது ரேங்கை அவள் தாண்டுவதேயில்லை. தான் தினசரி துன்புறுத்தப்படுவதை வெளியில் சொன்னால் தொண்டையை அறுத்துவிடுவதாகவும் அவளுடைய தாத்தா மிரட்டியிருந்தார். அந்த அச்சுறுத்தல் மட்டும் இல்லாவிடில், இன்னும் அதிக உற்சாகத்துடன் படிப்பில் ஈடுபட முடியும் என்கிறாள் பிளேவியன்.

பிளேவியனின் குடும்பத்தினரோ, சமூகத்தினரோ இந்தப் பிரச்சினையைப் பெரிதாகவே எடுத்துக்கொள்ளவில்லை. கென்ய காவல்துறையினரும் பாலியல் வன்முறை என்பதைத் தீவிரமான பிரச்னையாகக் கருதவேயில்லை.
உலகில் உள்ள ஆயிரக்கணக்கான சிறுமிகள் பிளேவியனைப் போலவே தினசரி வன்முறைக்குள்ளாகின்றனர். உலக சுகாதார அமைப்பு, வீட்டு வன்முறையால் 35 சதவீதப் பெண்கள் பாதிக்கப்படுவதாக மதிப்பிட்டுள்ளது. ப்ளேவியன் வாழும் நைரோபியில் உள்ள கைபரா குடிசைப்பகுதிப் பெண்களிடம் விசாரித்த போது, தங்களது முதல் பாலுறவு அனுபவமே வல்லுறவினால் ஏற்பட்டதாகக் கூறுகின்றனர். பாலியல் வல்லுறவுச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்குக் காரணம் அக்குற்றச்சாட்டைக் கூறும் பெண்களை சமூகம் இழிவாக நடத்தி, குற்றம்சாட்டுவதுதான். இந்தியாவில் நடத்தப்பட்ட கருத்தாய்வில், 68 சதவீத நீதிபதிகள் பாலியல் அத்துமீறல்களுக்குப் பெண்களின் உடையணியும் பாங்கே காரணமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். 

அதுகுறித்துப் பேசுவதே விலக்கப்பட்டது என்று கருதுவதால்தான் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. ஆனாலும் நம்பிக்கைக் கீற்று தெரிகிறது. இந்தியா, கென்யா, அமெரிக்கா என்று எல்லா நாடுகளிலும் தற்போது ஆண்களும் பெண்களும் வெளிப்படையாக இந்த விஷயம் குறித்துப் பேசத் தொடங்கியுள்ளனர். நைரோபியில் கடந்த ஆண்டு 16 வயதுப்பெண் மீது ஒரு கும்பல் நடத்திய வல்லுறவுக் குற்றத்துக்குத் தண்டனையாக அவர்களைக் காவல் நிலையத்தில் புல்வெட்டச் சொன்னார்கள். இதைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. 

ஒளிரும் நம்பிக்கை
 
சைனிங் ஹோப் பார் கம்யூனிட்டிஸ் என்ற அமைப்பு கைபராவில் பணியாற்றி வருகிறது. பாலியல் வல்லுறவு வழக்குகளை சரியான முறையில் விசாரிக்க அந்த அமைப்பு தொடர்ந்து முயன்று வருகிறது. பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்குப் போதிய உதவிகளையும் அந்த அமைப்பின் சார்பில் செய்துவரும் 25 வயதுப் பெண் எடிட்டர் ஆதியாம்போ, தான் 6 வயதிலும், 15 வயதிலும் பலாத்காரத்திற்கு உள்ளானதாகச் சொல்கிறார். அவரும் அவரது அமைப்பினரும் சேர்ந்துதான் சிறுமி ப்ளேவியனுக்கு நேர்ந்த அவலத்தை வெளியுலகுக்குக் கொண்டுவந்தனர். கடும் வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த அந்தச் சிறுமியை காவல் நிலையத்துக்கு அவர்கள் அழைத்துச் சென்றனர். இந்த வழக்கைப் பொருத்தவரை விசாரணை வேகமாக நடந்தது. குற்றவாளியான அவளுடைய தாத்தா கைது செய்யப்பட்டார். அவர் சிறையிலிருந்து பிணையில் வருவதற்காக 4 ஆயிரத்து 700 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. பாலியல் வல்லுறவுக் குற்றத்துக்காக விதிக்கப்படும் அதிகபட்ச அபராதம் அது. ஒரு பாலியல் வல்லுறவுக்காக செய்யப்பட்ட அந்தக் கைது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

தன்னிறைவு தேவை
 
நான்கே வயதான கென்யச் சிறுமியான இடா, அவளது பக்கத்துவீட்டு ஆணால் வல்லுறவுக்குள்ளானாள். இடாவின் பெற்றோர் தொடர்ந்து காவல்நிலையத்தை நாடியும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சைனிங் ஹோப் அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் இடாவிற்கும் நீதி கிடைப்பதற்குக் காரணமாக இருந்தனர். அந்தச் சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞன் தனது வயது 12 என்று காவல்துறையிடம் கூறினான். அவனைக் கையும் களவுமாகப் பிடித்த அண்டைவீட்டுப் பெண் ரோஸ்மேரி, பெற்றோர்கள் மகன்களிடம் கவனமாக இருக்கச் சொல்லி எச்சரிப்பதாகக் கூறியுள்ளார். ஆண் பாலியல் வல்லுறவு செய்வதற்கு உரிமையானவள்தான் பெண் என்னும் எண்ணத்தைப் போக்கவேண்டும். பெண்களின் தன்னிறைவை வலுப்படுத்த வேண்டும். அப்போதுதான் பாலியல் வல்லுறவுக் குற்றத்தைச் செய்துவிட்டு யாரும் தப்பிக்க முடியாது. 

தி இந்து ஆங்கில நாளிதழ், 17-01-2014
தமிழில்: ஷங்கர்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்