/* up Facebook

Apr 16, 2014

தங்கம்: திருமணத்துக்கான தகுதிகளில் ஒன்றா ? - ஏ. சம்ஷாத்

நாகரிகம் வளர்ந்து விட்டதாகச் சொல்லிக்கொள்ளும் இக்காலத்திலும் தங்கத்தைத் திருமணத்திற்கு ஒரு தகுதியாகக் கருதுவது வெட்கப்பட வேண்டிய விஷயம். பெண்களுக்குத் திருமணமாகும்போது சீதனமாகக் கொடுக்கும் சீர் வகையறாக்கள் போதாதென்று அவளுக்குப் பிடிக்கிறதோ இல்லயோ தங்க நகைகளும் கொடுத்தாக வேண்டுமென்பது தலைமுறை தலைமுறையாக எழுதாத சட்டமாகக் கடைபிடிக்கப்படுகிறது. இதற்காக பெண்ணைப் பெற்றோர் காலம் முழுதும் சிக்கனமாக இருந்து சேமிக்க வேண்டியிருக்கிறது. எத்தனையோ தியாகங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. இருக்கும் கொஞ்ச, நஞ்ச சொத்துக்களையும் விற்று அல்லது கடன் பட்டாவது திருமணத்துக்காக தங்கம் வாங்குகிறார்கள். இது நியாயமா என்று எப்போதாவது சிந்தித்துப் பார்த்தோமா?

பெண்களை லட்சக்கணக்கில் செலவழித்துப் படிக்க வைத்து, அவர்களுக்கு கைநிறைய சம்பாதிக்கும் தகுதியையும் கொடுத்த பின்னும் இந்நிலை மாறவில்லை. நம் பெண்கள் என்ன மாடுகளை விடக் கேவலமானவர்களா? சந்தையில் மாடு விற்பவன் மாட்டைக் கொடுத்து விட்டு, பணத்தை வாங்கி வருவான். ஆனால், பெண்ணைப் பெற்றவனோ, பெண்ணையும் கொடுத்து, பொன்னையும், பொருளையும் கொடுத்து கடனாளியாகவல்லவா நிற்கிறான்? இந்நிலை மாற வேண்டுமென்றால், திருமணம் பேசும்போது ‘எத்தனை சவரன்?’ என்ற கேள்விக்கே இடம் இருக்கக்கூடாது. 

தங்கம் ஒரு முதலீடா?
 
தங்கம் வாங்குவதை நியாயப்படுத்துவோர், அது ஒரு முதலீடு என்று சொல்கிறார்கள். நம் நாட்டைப் பொறுத்தவரை, நகை வாங்கும்போது அது ஒரு ஆபரணமாகத்தான் கருதப்படும். பெண்களுக்கு அதில் ஒரு உணர்வு சார்ந்த இணைப்பு இருக்கும். அவசியத்திற்காக அதை விற்க நினைத்தால், கண் கலங்கும். பிறகு சரி, அதை விற்க வேண்டாம் எப்படியாவது சமாளித்துக் கொள்ளலாம் என முடிவெடுக்கப்படும். லாக்கரிலோ, நம் வீட்டு பீரோவிலோ உள்ள நகையிலிருந்து ஏதாவது வருமானம் வருகிறதா? வருடக்கணக்காக அதில் முடக்கப்படும் பணத்திலிருந்து எந்த வருமானமும் வருவதில்லை. அதை விற்றால் தான் பணம், விற்பதற்கும் மனம் வருவதில்லை என்றால், அதை ஒரு முதலீடு என்று கருத முடியுமா? அப்படியே விற்றாலும், எத்தனை நஷ்டம்! வாங்கும்போது சேதாரம், கூலி, வரி என கண்ணுக்குத் தெரியாமல் பணம் கை மாறுகிறது. ஆனால் விற்கும்போது, வெறும் தங்கம் விலைதான் அதுவும் முழுதாகக் கிடைக்காது. புத்தம்புதிதாக இருந்தாலும், கழித்துக் கொண்டுதான் தருவார்கள். அதுவும் எல்லாக் கடைகளிலும் பணம் தருவதில்லை, மாற்றி வேண்டுமானால் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்வார்கள். இந்த விஷயத்தைச் சற்று ஆழமாக யோசித்தால் புரியும். 

வியாபாரத் தந்திரம்
 
நுகர்வு கலாச்சாரம் இப்போது உச்சகட்டத்தில் உள்ளது. இருந்த இடத்திலிருந்தே இணையத்தின் மூலமாக பொருட்கள் வாங்க முடிகிறது. கண்ணைக் கவரும் வண்ணப் படங்கள் முற்றும் துறந்தவர்களுக்குக்கூட ஆசையைத் தூண்டும்! நம் பெண்களும், இந்த வியாபாரத் தந்திரத்தில் மிக எளிதாக வீழ்ந்து விடுகிறார்கள். ஏதோ மணப்பெண் என்றாலே உள்ளங்கழுத்தில் தொடங்கி அடுக்கடுக்காக நகைகள், அது போதாதென்று ஒரு பெரிய ஹாரம், காதே அறுந்துவிடுவது போல் தொங்கட்டான், கார் சக்கரம் போல் வளையல்கள், இத்தியாதிகளோடு தான் இருக்க வேண்டும் என்பது போல் ஓடி ஓடி நகை சேர்க்கிறார்கள்! இல்லாதவர்கள்கூட வாடகைக்கு நகை எடுத்து போட்டுக்கொள்கிறார்கள். முன்பெல்லாம், ஒரு தாலிச் சங்கிலியும், கல் தோடு, நெக்லஸ் மெல்லிய கைவளையல்கள் போட்டுக்கொண்டு கழுத்து நிறைய பூமாலையோடு மணப்பெண்கள் இருப்பார்கள், அழகாகத் தான் இருந்தது! 

மனநிலை மாற்றம் தேவை
 
ஆண்களுக்கு இணையாகப் பெண்கள் படிக்கிறார்கள், சம்பாதிக்கிறார்கள். ஆனாலும், தங்கம் திருமணத்தில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. இம்மனநிலையை மாற்ற பெண்ணைப் பெற்றவர்களுக்கும், பெண்களுக்கும் தைரியம் வர வேண்டும். ஆண்களும், அவர்களைப் பெற்றவர்களும் பெண் பேசும்போது, எத்தனை பவுன் போடுவார்கள் என்பதைப் பற்றிக் கேட்பதை விட வேண்டும். அப்போதுதான் தங்கத்தின் பின்னால் மக்கள் அலைவதை ஓரளவுக்காவது கட்டுக்குள் வைக்கமுடியும்.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்