/* up Facebook

Apr 30, 2014

ஆணுக்கு எதிரானதா பெண்ணியம்? - எம்.ஆர். ஷோபனா


பொதுவெளிகளிலும் ஊடகங்களிலும் பெண்ணியம் பற்றிய விவாதம் நடக்கும்போது ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. பெண்ணியம் என்றாலே ஆணுக்கு எதிரானது, ஆண்களை அடக்கியாள நினைப்பது அல்லது ஆண்களை முழுவதுமாக வெறுத்து ஒதுக்குவது என்ற கருத்து பரவலாக உள்ளது. குறிப்பாக இது ஆண்களிடமும், அவர்களே பெண்களுக்கான கருத்தையும் உருவாக்கும் அதிகாரத்தில் உள்ளதால் பெண்கள் பலரிடமும் உள்ளது. ஆண்களை எதிரிகளாகக் கருதுபவர்களாகவே பெண்ணியவாதிகளைப் பொதுச் சமூகம் அடையாளப்படுத்திவைத்திருக்கிறது.

பெண்ணியம் என்பது என்ன? முதலில் நடைமுறை சார்ந்து அதை அணுகிப் பார்க்கலாம். இன்று ஒரு பெண் படித்து முடித்துவிட்டு வேலைக்குச் செல்கிறாள் என்றால், அதில்கூடப் பெண்ணியம் இருக்கிறது. ஏனென்றால் அந்த உரிமைகூடத் தொடர்ச்சியான சமூக சீர்திருத்தச் செயல்பாடுகளின் விளைவே.

நடைமுறை வாழ்க்கையில் பேருந்தில் தன்னை உரசிக்கொண்டே வரும் வக்கிர புத்திக்காரனை எதிர்கொள்ளும் நிலையில் அவளுக்குப் பெண்ணியம் உதவிக்கு வருகிறது. இன்றளவும் அவள் நள்ளிரவில் தனியாகச் செல்ல முடியாத நிலை நீடிக்கிறதெனில், 'காந்தி தேசத்தில்' பெண்ணுக்குச் சுதந்திரம் கிடைக்கவில்லை என்றுதான் பொருள்.

அந்த நிலையில் பெண்ணைத் தாயாக, தெய்வமாகப் போற்றுவதான வெற்றுக் கூச்சல்களைப் புறந்தள்ளி நிஜத்தை உணரக் கோருகிறது பெண்ணியம். இப்படி அன்றாட யதார்த்தங்கள், புத்தகங்களில் இருக்கும் பெண்ணியத்திற்கான வரையறைகள், சட்டப் புத்தகங்கள் பேசும் சமநீதி ஆகியவற்றைப் புறக்கணிக்கும் அல்லது கேலி செய்யும் நிலை சமூகத்தில் பலரிடம் உள்ளது.

மறுபுறம் அப்பாவின் 'அரவணைப்பில்' வளர்ந்து, அண்ணணின் 'பாசத்தில்' நனைந்து, கணவனின் 'காதலில்' திளைத்து வாழும் பெண்கள் பெண்ணியமே தேவையில்லை என்கின்றனர். இத்தகைய பெண்கள் பெரும்பாலும் நடு்த்தர வர்கத்தினர். இவர்கள் அனைவரும் ஆண்கள் 'கொடுத்த' சுதந்திரத்தைக் கொண்டு நன்றியோடு வாழ்பவர்கள். இவர்கள் வாழ்க்கையைச் சிக்கலாக்கிக்கொள்ள விரும்பாதவர்கள். ஆனால் 'அரவணைக்கும்' அப்பாவும், 'பாசம்' பொழியும் சகோதரனும், 'காதல்' கணவனும் எடுத்துக் கொடுக்கப் பெண்ணுரிமை என்பதும் சுதந்திரம் என்பதும் சமத்துவம் என்பதும் சுக்கோ மிளகோ இல்லை என்கிற புரிதலில் முகிழ்ப்பதுதான் பெண்ணியம்.

ஓர் ஆண் சினிமா பார்க்க இரவு நேரக் காட்சிக்குத் தன் நண்பர்களுடன் செல்ல முடியும். ஆனால் இன்றைய சூழலில் ஒரு பெண்ணால் அது முடியாது. ஓர் இளைஞன் தன் நண்பர்களுடன் வெளியூர் சென்று எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தங்கிவிட்டு வரலாம். ஆனால், ஓர் இளம் பெண் அவ்வாறு செய்ய முடியாது. வேலை நிமித்தமாகவோ கல்லூரிச் சுற்றுலாவுக்கோ சென்றாலும்கூட அதற்கான பயண அட்டவணை, அவள் உடன் செல்பவர்கள் குறித்த விவரங்கள் ஆகியவை அவளின் பெற்றோர் கையில் இருக்கும். இது என்ன சின்ன விஷயம்தானே என்று புறக்கணித்துவிடலாம். ஆனால் இதில் நுட்பமான உடல் அரசியல் அடங்கியுள்ளது.

ஒரு பெண்ணின் உடலானது குடிப்பெருமை, குலப்பெருமை, சமயம், சமுதாயம் ஆகியவற்றின் பெருமை அனைத்தையும் சுமந்து திரியும் தெய்வீக வஸ்து. அப்படி எல்லாம் எந்தக் கடமையும் ஆணுக்கு விதிக்கப்படவில்லை, அல்லது அந்த விதிக்கு விசுவாசமாக ஒரு ஆண் இருக்கவும் தேவை இல்லை.

சொத்துடமைச் சமுதாயம் தோன்றிய காலத்தில் 'கற்பு எனும் திண்மை' முதன் முதலாக ஆண் வாரிசு முறையை உத்திரவாதப்படுத்த உருவாகி நிலைபெற்றதாகச் சமூக அறிவியல் தெரிவிக்கிறது. தனக்குப் பிறகு தன் சொத்துக்கள் யாருக்குப் போய்ச் சேருமோ அவர்கள் தன் குழந்தைகளாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்துகொள்ளவே பெண்ணுக்குக் கற்பொழுக்கம் வலியுறுத்தப்பட்டது. அதோடு இன்னொரு விஷயமும் நடந்தது.

திருமணம் செய்துகொண்டு 'வேறு வீட்டுக்கு'ச் சென்றுவிடும் பெண்ணுக்குச் சொத்துரிமை கிடையாது என்ற விதியும் ஏற்படுத்தப்பட்டது. பெண்ணுக்குச் சொத்தில் பங்கு கிடையாது. அவள் ஆணின் சொத்து. அவளைப் பணம் கொடுத்து, வாங்கிக் கைமாற்றிக்கொள்லலாம்.

பொருளாதார ரீதியில் குடும்பத்தைக் காக்க ஒர் ஆண் மகன் வேலைக்குச் சென்றால், அந்தக் குடும்பம் தலையெடுத்துவிட்டது என்கிறது சமுதாயம். அதே குடும்பப் பொருளாதார நிலையைச் சமாளிக்க ஒரு பெண் வேலைக்குச் சென்றால், அது சமுதாயத்தால் 'பரிதாபத்திற்குரிய' நிலையாகப் பார்க்கப்படுகிறது. சமயத் தலைவர்கள் சிலர் ஒரு படி மேலே போய் 'வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள்' என விஷம் கக்குகின்றனர்.

19ஆம் நூற்றாண்டுவரை பெண்கள் கல்வி கற்பதே மிகப் பெரிய விஷயமாக இருந்தது. மகாத்மா ஃபுலே, ராம் மோஹன் ராய், காந்தியடிகள், தந்தை பெரியார் போன்றோரின் செயல்பாடுகளால் இன்று மாற்றங்கள் சாத்தியமாகியுள்ளன. இன்று ஓரளவு கல்வியும் வேலைவாய்ப்பும் பெண்களுக்குக் கிடைத்துள்ளன. இந்த மாற்றங்களைப் பலர் எரிச்சலோடும், சிலர் நிறைவோடும் பார்க்கிறார்கள். ஆனால் பெண்கள் போக வேண்டிய தூரமோ ஒளி வேகப் பயணத்தைக் கோருகிறது.

பெண்ணுரிமை பேசும் சில பெண்கள், ஆண்களுக்கும் பொதுச் சமூகத்துக்கும் எதிராக முன்வைக்கும் விமர்சனங்களில் சமநிலை தவறியிருக்கலாம். அதை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த பெண்ணுரிமைக் கோரிக்கைகளையும் சிறுமைப்படுத்த முயல்வதும் பெண்ணை அடிமைப்படுத்தும் செயலாகவே அமையும்.

பெண்ணுரிமை, பெண்நிலைவாதம், பெண்ணியம் என்பவை அடிப்படையில் சம உரிமைக்கான குரல்கள்தான். இதைப் பெண்கள் மட்டும்தான் எழுப்ப வேண்டும் என்பதில்லை. கல்வி, வேலை, லட்சியம், பொழுதுபோக்கு, திருமணம், பாதுகாப்பு, நடமாட்டம் என அனைத்திலும் ஆணுக்குக் கிடைக்கும் உரிமைகளும் சுதந்திரமும் பெண்ணுக்கும் கிடைக்க வேண்டும். இது ஆண்களின் உரிமையைப் பறிக்கும் நோக்கம் கொண்டதல்ல. ஆணுக்கு எதிரானதுமல்ல.

பெண்கள் தங்கள் உரிமையை உணர்ந்து, சமுதாயத்தில் அதனைத் தக்க வைத்துக்கொள்ளவும், பால் சமத்துவத்திற்குப் போராடவும் உதவும் ஒரு வழிகாட்டியே பெண்ணியம். நியாய உணர்வும் சமத்துவத்தில் நம்பிக்கையும் கொண்ட ஆண்களும் இணைந்து பாடுபட வேண்டிய லட்சியம் இது.

நன்றி - தி ஹிந்து
...மேலும்

Apr 29, 2014

பெண் வரலாறு: தேவதாசிகள் சமூக சேவகிகள் - பிருந்தாபெண்கள் சார்ந்தும், பெண்ணியம் சார்ந்தும் எத்தனையோ புத்தகங்கள் வெளிவந்தாலும் அவற்றில் சில மட்டுமே முழுமைபெற்றவையாக இருக்கின்றன. ஆனால் முனைவர் கே. சதாசிவன் எழுதி, கமலாலயன் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் ‘தமிழகத்தில் தேவதாசிகள்’ என்ற புத்தகம், தன் இலக்கைக் கச்சிதமாக நிறைவேற்றியிருக்கிறது. பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்துவந்த தேவதாசி நடைமுறையைப் பற்றி விரிவாகப் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.

கோயில் திருப்பணிக்காகவும் சேவைக்காகவும் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்கள்தான் தேவதாசிகள் என்றழைக்கப்படும் தேவரடியார்கள். பக்தி இலக்கியம் கோலோச்சிய ஆறாம் நூற்றாண்டு வாக்கில் இவர்கள் சமூகத்தினரால் மரியாதையாகப் பார்க்கப்பட்டனர். காலப்போக்கில் அந்த மரபின் வழி வந்தவர்களுக்குப் போதிய அங்கீகாரமும் கவனிப்பும் இல்லாமல், தேவதாசிகள் என்பவர்கள் மிகக்கீழ்த்தரமாகச் சித்தரிக்கப்பட்டனர்.

தமிழ்க் கலாச்சாரத்துக்குச் செழுமை சேர்த்த ஒரு சமூக மரபு தன் சொந்த மண்ணில் இருந்து முற்றிலுமாக அழிந்து போனதன் பின்னணியைக் கவனத்துடன் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். ‘எந்த ஒரு உன்னதமான நிறுவனமும் கூட, சமூக விரோதிகள் அதனுள் சுதந்திரமாக ஊடாட அனுமதிக்கப்படும் பட்சத்தில் உருச்சிதைந்து, மிக மோசமான ஒரு நிறுவனமாகச் சீரழிந்து போய்விடும்’ என்ற உண்மையை தேவதாசி முறையின் அழிவு உணர்த்துவதாகக் குறிப்பிடுகிறார் இவர். நூல் முழுவதும் வியாபித்திருக்கும் அரிய தகவல்களும் அவற்றுக்கான ஆதாரங்களும் ஆசிரியரின் ஆழமான களப்பணியையும் வாசிப்பையும் பறைசாற்றுகின்றன.

புத்தகத்தில் இருந்து சில பகுதிகள்:

ஒரு தேவதாசியின் வாழ்க்கை என்பது மிக ஆர்வம் நிறைந்த சுவையான கதை. தேவதாசியாக வேண்டுமென்றால், எந்த ஓர் இளம் பெண்ணும் சில சம்ஸ்காரங்கள் அல்லது வழிச்சடங்குகள் (சிலவற்றின்) ஊடாகப் பயணித்து வர வேண்டும்; அவையாவன:

1. சடங்குபூர்வமான திருமணம்

2. அடையாளப்படுத்தும் புனித நிகழ்வு

3. நிகழ்த்துகலைகளில் ஈடுபடுத்த முன்முயற்சி எடுத்தல்

4. அரங்கேற்றம்

5. கடமைகள் மற்றும்

6. இறுதிச் சடங்காசாரக் கௌரவங்கள்

இவை ஒரு ‘சாதாரண’ இளம் பெண்ணை ‘என்றைக்கும் புனிதமான பெண்’ணாகப் பரிணாம மாற்றமடையச் செய்பவளாக அமைகின்றன. இந்த அடுத்தடுத்த படிநிலைகளையும், இவை உள்ளடங்கிய மற்ற பிற சடங்குகளையும் விவாதிப்பதில் கி.பி ஆறாம் நூற்றாண்டு தொடங்கி 18-ம் நூற்றாண்டு வரையிலான தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கடமைகள்

பாடல்கள் இசைப்பதும், நடனமாடுவதும்தான் கோயில்களில் அவர்களின் பொதுவான கடமைகளாக இருந்தன. இந்த ஓர் அம்சத்தில் மட்டுமே இராஜராஜேஸ்வரம் கோயிலின் தேவதாசிகளுடைய கடமைகள், இதர கோயில்களில் இணைந்திருந்த இவர்களுடைய சக தேவதாசிகளுடைய கடமைகளோடு ஒரே தன்மையுடையவையாக இருந்தன.

அரசின் உறுதுணை

தேவதாசி முறையை முன்னெடுத்துச் சென்றது அரசின் உறுதுணையாகும். காரணம், அரசுக்கு இது வருவாய் அளிக்கக்கூடிய ஒரு வழி; தேவதாசிகள், நுண்கலைகளின் பாதுகாவலகர்ளாக இருந்திருக்கின்றனர்; மேலும் அரசர்களுக்கும், புரோகிதர்களுக்கும் இன்பம் பெறுவதற்கான ஒரு வழிவகையாக இது இருந்துள்ளது.

சமூக சேவை

தேவதாசிகள், பொதுமக்களுக்கான சமூக சேவைகளை மேற்கொண்டனர் என்று சாசனங்கள் பதிவு செய்துள்ளன. விண்ணமங்கலம் என்ற கிராமத்தின் நீர்த்தேக்கம் ஆண்டுதோறும் ஆழப்படுத்தப்பட்டு மராமத்துப் பணிகளும் செய்து வரப்பட்டன. இரண்டு தேவதாசிகளான நாற்பத்தி எண்ணாயிரம் பிள்ளை மற்றும் அவருடைய சகோதரி மங்கையர்க்கரசி ஆகியோர் ஏரி நீரில் மூழ்கியிருந்த நிலங்களைத் தங்களின் செலவில் மறுபயன்பாட்டிற்குக் கொணர்ந்துள்ளனர். அன்னநாடு என்ற இடத்தில் அவர்கள் திருந்திகை நதியை மூடச்செய்து, நீர்த்தேக்கத்தைத் தோண்டி ஆழப்படுத்தி, கால்வாய் அமைத்து பின் நிலத்தை மீட்டெடுத்தனர்.
நன்றி - தி ஹிந்து
...மேலும்

Apr 28, 2014

பிரித்தானியாவில் பெண் எழுத்தாளர்கள்! நவஜோதி ஜோகரட்னம்

“கோயில்களில் பாட்டுக்கள் பாடி நாட்டியம் ஆடுகின்ற நாட்டியப் பெண்களைத் தவிர, மற்றையோரில் தமிழை எழுத வாசிக்கத் தெரிந்த இரு பெண்களை மாத்திரம் யாழ்ப்பாணத்தில் காணக்கூடியதாக இருக்கின்றது. இவர்களுள் ஒருத்தி அளவெட்டியிலும் மற்றவள் உடுப்பிட்டியிலும் இருக்கிறாள். வேறும் ஒருத்தி இருப்பதாக கேள்விப்படுகிறேன். இன்னமும் அவளைச் சந்திக்கவில்லை” என்று 1816 ஆம்; ஆண்டில் அமெரிக்க சமயக் குழுவின் பாதிரியார் வண.மெயிக் எழுதிய குறிப்புகள் ( “யாழ்ப்பாணத்துச் சமூகத்தில் பெண்கல்வி, வள்ளிநாயகி இராமலிங்கம்”) யாழ்ப்பாணத்தில் நிலவிய பெண்கல்வி நிலைமையைச் சுட்டிக்காட்டுகின்றது. ஆனால் உடுவில், வேம்படி, உடுப்பிட்டி, பருத்தித்துறை, சுண்டுக்குளி, இளவாலை ஆகிய இடங்களில் தோன்றிய பெண் பாடசாலைகள் யாழ்ப்பாணத்துப் பெண்களின் கல்வி வளாச்சியை மிக உன்னத நிலைக்கு எடுத்துச் சென்றிருக்கின்றது. இன்று மருத்துவர்களாகவும், வழக்கறிஞர்களாகவும், பத்திரிகை ஆசிரியர்களாகவும், விரிவுரையாளர்களாவும், பொறியியலாளர்களாகவும், பல்கலைக்கழக உபவேந்தர்களாகவும், வங்கி அதிகாரிகளாகவும், வருமானவரி மதிப்பீட்டாளர்களாகவும் என்று சமூக வாழ்வின் எல்லாத் தளங்களிலும் பெண்கள் உயர்ந்த நிலையில் உள்ளனர். இந்த உயர்ந்த கல்வியின் ஒரு வெளிப்பாடாக வெளிநாடுகளுக்குச் சென்று தொழில்புரியும் சாத்தியங்களையும் யாழ்ப்பாணப் பெண்கள் கொண்டிருந்தனர். இங்கிலாந்திற்கும் இலங்கைக்குமான தொடர்பு ஒரு காலனித்துவ தொடர்பாக ஒரு நீண்ட சரித்திரத்தைக் கொண்டிருக்கிறது. உயர் கல்வி கற்ற ஈழத்துப் பெண்மணிகள் இங்கிலாந்திலேயே திருமண தொடர்புகள் மூலமாக புலம்பெயர ஆரம்பித்து இங்கிலாந்திலும் சிறந்த தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொண்டனர். அந்த வகையில் சுதந்திரத்திற்குப் பின்னர் இங்கிலாந்தை நோக்கிய ஈழத்தின் புலப்பெயர்வு எண்பதுகளை அடுத்த காலப்பகுதியில் மிக வேகமாக அதிகரிக்கலாயிற்று. இந்நிலையில் எழுத்து, இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட பெண்மணிகள் இங்கிலாந்தில் கணிசமான அளவில் சாதனைகள் புரிந்திருக்கிறார்கள்.
1923 இல் மங்களம்மாள் ஆரம்பித்த ‘தமிழ் மகள்’ என்ற பத்திரிகையில் இருந்து பெண்களின் அரசியல் குறித்த எழுத்துக்கள் அரும்பத் தொடங்கின. இதே போன்று மலையகத்திலும் மீனாட்சியம்மாள், கோகிலம் சுப்பையா ஆகியோர் மலையக மக்களின் அரசியல் குறித்துப் போராடிய பெண்மணிகளாவார். எனினும் எண்பதுகளுக்குப்; பிறகு ஈழத்துப் பெண்களின் எழுத்துக்கள் புதிய உத்வேகத்தோடு  இலக்கியப் பரப்பில் தடம் பதிக்கத் தொடங்கின.
இந்த ஆய்வு இங்கிலாந்தில் எழுத்துப் பணியில் ஈடுபட்டுள்ள பெண் எழுத்தாளர்களைப் பற்றியதாகும். சில பெண் எழுத்தாளர்களைத் தொடர்பு கொள்வது சிரமமாக இருந்திருக்கிறது. மிகச் சில பெண் எழுத்தாளர்களே நான் தொடர்பு கொண்டபோது உற்சாகத்தோடு தமது விபரங்களைத் தந்துதவினார்கள். இதில் பெருமளவில் அனைத்துப் பெண் எழுத்தாளர்களையும் இக்கட்டுரையில் தர முயன்றிருக்கிறேன். என்னுடைய கவனிப்புக்குள் வராத எழுத்தாளர்கள் ஓரிருவர் தவற விடப்பட்டிருக்கக் கூடும் என்பதையும் கூறிவைக்க விரும்புகிறேன். பவானி ஆழ்வாப்பிள்ளை முதல் மைத்ரேயி ராஜேஸ்குமார் வரை 31 பெண்மணிகள் இவ்வாய்வில்அடங்குகின்றனர்.
பவானி ஆழ்வாப்பிள்ளை
‘பவானியின் சிறுகதைகளைத் தொகுத்துக் கணித்தால் அவற்றில் இழையோடும் முக்கியமான கருத்தோட்டம் சமுதாய அவலங்களும், அர்த்தமற்ற சில பண்பாட்டுக் கொள்கைகளும் எப்படி ஆணையும் பெண்ணையும் அலைக்கழிக்கின்றன, அவர்கள் எப்படி அவற்றில் பாரிய தாக்கத்திற்கு உட்படுகிறார்கள் என்பதே! அவர் கதைகூறும் பாணியும், கதை முடிக்கும் பாணியும் கதாபாத்திரங்களை பரிதாபத்திற்கு ஆளாக்கவில்லை. அவர்கள் பண்பாட்டில் இருந்து இறங்கிய நிலையிலும் தங்கள் உரிமைகளைப் பேசுவதுபோலவே அக்கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. முடிவுகள் வாசகர்களைச் சிந்திக்க வைக்கின்றன’ என்று கலாநிதி செல்வி திருச்சந்திரன் ‘கடவுளரும் மனிதரும்’ என்ற நூலின் இரண்டாவது பதிப்புரையின் முன்னுரையில் குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கதாகும். 
       
பிரித்தானியாவில் வாழ்ந்துகொண்டிருக்கும் பவானி அழ்வாப்பிள்ளை 1960 களிலேயே ஈழத்து வரலாற்றில் பெண்ணியக் கருத்துக்களை துணிச்சலோடு முன்வைத்த முதல் பெண் எழுத்தாளர் ஆவார். கற்பு. ஒழுக்கம் போன்ற கருத்தியல்களை புரட்சிகரமாக அணுகிய பவானி ஆழ்வாப்பிள்ளையின் சிறுகதைகள் ‘கடவுளரும் மனிதரும்’ என்ற சிறுகதைத் தொகுப்பாக வெளிவந்துள்ளது. பேராதனைப் பல்கலைக் கழகப் பட்டதாரியான பவானி ஆழ்வாப்பிள்ளை, தனது எழுத்துக்களை தன்னை அறிதலான சுயநிர்ணயம் என்று கூறுகின்றார். கலைச்செல்வியில் அவர் எழுதிய ‘மன்னிப்பாரா ; என்ற சிறுகதை சர்ச்சைக்குள்ளான பெண்ணியல்வாதக் கதையாகும்.
      
‘மன்னிப்பாரா’ என்ற சிறுகதையில் மூர்த்தி, சுசீலா ஆகியோருக்கிடையிலான காதல் சாதிய ஏற்றத்தாழ்வினால் நிறைவேறாமல் போய்விடுகிறது. பேற்றோரின் ஆதங்கத்தை மீற முடியாதவராகின்றார் மூர்த்தி. இதற்கிடையில் சுசீலாவிற்கு வேறொரு இடத்தில் திருமணம் முற்றாகிவிடுகிறது. தனது திருமணத்திற்கு முதல்நாள் சுசீலா மூர்த்தியைத் தேடி அவரது வீட்டிற்குச் செல்கிறார். ‘காதலித்தவனையே கணவனாகக் கொள்வதுதான் கற்பெனில் இந்த என் முடிவு என் கற்பு நெறிக்குச் சிறிதும் புறம்பானது அல்ல. உங்கள் உரிமையை இப்பொழுதே எற்றுக் கொள்ளுங்கள். நமது வாழ்வை இக்கணமே வாழ்ந்து முடித்துவிடுவோம்’ என்கிறாள் சுசீலா. பழைமைவாதம் வேருன்றிய அக்கால கட்டத்தில் சுசீலாவின் இந்த முடிவு ஈழத்து இலக்கிய உலகில் பெரும் கண்டனத்துக்கு இலக்காகியது. இந்தக் கதாநாயகியின் முடிவை எதிர்த்து கதையை வேறு விதமாக மாற்றி கவிஞர் எஸ்.எம். சவுந்தரநாயகம் எழுதிய கதையும், அவளுடைய முடிவை ஆதரித்து அவளைப் புரட்சிப் பெண்ணாகக் கொண்டு செந்தாரகை எழுதிய கதையும் ‘மன்னிப்பாரா’ என்ற அதே தலைப்பிலேயே கலைச்செல்வியின் அடுத்த இதழ்களில் வெளியாகின என்று கலாநிதி குணராசா ‘ஈழத்துச் சிறுகதை வரலாறு’ என்ற நூலிலே குறிப்பிடுகின்றார்.

திருமதி தனபாக்கியம் குணபாலசிங்கம்
ஏழாலையைச் சேர்ந்த தனபாக்கியம் குணபாலசிங்கம் தமிழகத்தில் தொல்லியலை சிறப்புத்துறையாகப் பயின்று, வடமொழியில் பி.ஏ சிறப்புப் பட்டத்தையும், தொல்லியல் முதுகலைமானிப் பட்டத்தையும் பெற்று, கொழும்புப் பல்கலைக்கழகத்தில் இந்துநாகரிகத் துறையில் விரிவுரையாளராளராகப் பணியாற்றியவராவார். ஈழத்தின் தொல்லியல் வரலாறு பற்றி குறிப்பிடத்தக்க பல ஆய்வு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். 
    
‘பழையகால மனிதன் வாழ்ந்திருந்த களங்களுக்கு நேரடியாகச் சென்று அவர்கள் விட்டுச் சென்ற தடயங்களை ஆராய்ந்து உண்மைகளைத் துணைகொண்டு வரலாற்றுக்கு முற்பட்டகால மனித வரலாறுகளை மீளவும் கட்டியெழுப்பும் பணியில் ஈடுபடுபவர்களே தொல்லியலாளர்கள்’ என்று கூறும் தனபாக்கியம் குணபாலசிங்கம் ஈழத்தில் கிடைக்கப்பெற்ற ஈமத்தாழிகளுக்கும், தமிழகத்தில் கிடைக்கப்பெற்ற ஈமத்தாழிகளுக்கும் இடையிலான ஒற்றுமைகளை ஆராய்ந்து எழுதிய ‘ இலங்கையில் தொல்லியல் ஆய்வுகளும் திராவிட கலாச்சாரமும்’ என்னும் நூல் மிக முக்கிய வரலாற்று ஆய்வு நூலாகும்.  
    
இதனைத் தொடர்ந்து அவர் எழுதிய ‘தமிழகப் பூர்வீக வரலாறும் அரிய செய்திகளும்’ என்ற நூலில் கடற்கோள்களினால்; மூழ்கிப்போன தமிழக வரலாறுகளை தொல்லியல் அகழாய்வுகள், பழந்தமிழ் இலக்கியங்கள் ஆகியவற்றின் துணை கொண்டு தமிழகத்தின் ப10ர்வீக வரலாற்றினை வெளிக்கொண்டு வந்துள்ளார்.  இதனையடுத்து ‘மட்டக்களப்பு மான்மியம் ஓர் ஆராய்ச்சி’ என்ற தலைப்பில் இவர் வெளியிட்ட நூல் மட்டக்களப்பு தமிழர்களின் வரலாற்றை பொதுமக்களும் விளங்கிக்கொள்ளும் வகையில் எளிமையாக எழுதப்பட்டுள்ளது.
   
அடுத்ததாக இவர் எழுதி வெளியிட்ட  ‘வங்க இளவரசர் விஜயன் வரலாறும், இலங்கையில் சிங்கள் இன, மொழி, எழுத்துத்தோற்ற, வளர்ச்சி நிலைகளும்’ என்ற நூல் ‘இப்பண்கடுவ’ என்னும் இடத்தில் அகழ்வு செய்யப்பட்ட பெருங்கற்பண்பாட்டுத் தொல்லியல் களங்களிலிருந்து கிடைத்த தடையங்களை அடிப்படையாகக் கொண்ட குறிப்பிடத்தக்க சிறந்த ஆய்வு நூலாகும். 
    
சைவசமய வரலாறுகளையும், சைவ சித்தாந்தக் கோட்பாடுகளையும் எளிமைப்படுத்திய வகையில் இவர் எழுதிய ‘சைவ சித்தாந்தமும் விஞ்ஞான உலகமும்’ என்ற நூலும் ‘பின்பற்றப்பட வேண்டிய சைவ தத்துவங்கள்’ என்ற நூலும் ஈழத்து சைவ சித்தாந்த வரலாற்றைத் தொகுக்கும் சிறந்த முயற்சிகளாகும் 
    
அடுத்ததாக ஆசிய, ஆபிரிக்க, ஐரோப்பிய இனங்களின் ‘மானிட வரலாறு’ என்ற நூல் தனித்துவமானது. இந்த நூல்; இரண்டு தொகுதிகளாக அமைந்து மூன்று கண்டங்களின் மனிதகுல வரலாற்றை எடுத்து விளக்குகிறது. ‘குமரிக்கண்டம் முதல் சுமேரியாவரை தமிழர் வரலாறு’ என்ற அவரது மற்றுமொரு நூல் விவிலிய வேதத்தோடு தமிழர்களைத் தொடர்புபடுத்தி ஆராயும் நூலாக முகிழ்த்;துள்ளது. இதைவிட தமிழரின் சமயத் தத்துவக் கோட்பாடுகளை புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் ‘பிராணிகள் கூறும் அறிவியல் கதைகள்’ என்னும் நூலும் ‘The stories of Moral Teachings’  என்ற நூலும் முக்கிய நூல்களாகும்.

ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்

ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்
மட்டக்களப்பில் கோளாவில் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் யாழ்ப்பாணத்தில் தாதிப்படிப்பை மேற்கொண்டிருந்தபோது உடற்கூற்றியல் விரிவுரையாளராக இருந்த எழுத்தாளர் நந்தியின் மீதுள்ள அபிமானத்தால் ‘எழில் நந்தி’ என்ற புனைபெயரில் ஆரம்பத்தில் எழுதிக்கொண்டிருந்தார். செ.யோகநாதன் நடத்திய ‘வசந்தம'  என்ற பத்திரிகையில் வெளியான ‘சித்திரத்தில் பெண் எழுதி’ என்ற இவரது சிறுகதை முற்போக்கு வட்டாரத்தில் பாராட்டுப் பெற்ற கதையாகும் . 
    
1970 ஆம் ஆண்டு லண்டனுக்குக் குடிபெயர்ந்த ராஜேஸ்பாலாவின் எழுத்துலகப் பயணம் நீண்டதாகும். அலை வெளியீடாக வந்த ‘ஒரு கோடை விடுமுறை’ என்ற நாவல் அது வெளியான காலத்தில் அரசியல் கவனத்தை ஈர்த்த நாவலாகும். அதன்பின் தேம்ஸ் நதிக்கரையில், தில்லை ஆற்றங்கரை, உலகமெல்லாம் வியாபாரிகள், அவனும் சில வருடங்களும், பனி பெய்யும் இரவுகள், வசந்தம் வந்து போய்விட்டது, நாளைய மனிதர்கள் ஆகிய எட்டு நாவல்களைப் படைத்ததின் மூலம் லண்டனில் மிகப் பெரும் நாவல் ஆசிரியராக அவர் பரிணமித்துள்ளார்.
     
மட்டக்களப்பு மக்களின் வாழ்க்கை முறை, லண்டன் மத்தியதர வாழ்க்கை முறையிலும், பிரித்தானிய வாழ்க்கை முறையிலும் தோய்ந்து எழுந்த கதா பாத்திரங்கள் இவரது நாவல்களுக்கு மெருகூட்டுகிறார்கள். லண்டனில் வெளியான லண்டன் முரசு பத்திரிகை இவரது நாவலுக்கு விரிவான களம் அமைத்துக் கொடுத்தது. 
    
ஈழத்து ஏடுகளிலும் புலம்பெயர்ந்த சஞ்சிகைகளிலும் நிறையவே எழுதியுள்ள ராஜேஸ்வரி பாலசுப்ரமணியத்தின் சிறுகதைகள்;  இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம், அரைகுறையடிமைகள், ஏக்கம், நாளைக்கு இன்னொருத்தன், அம்மா என்றொரு பெண் ஆகிய  சிறுகதைத் தொகுதிகளாக வெளிவந்துள்ளன. 
    
லண்டனில் தொழில்ரீதியான தாதியாக சிறப்புப் பயிற்சிகளை மேற்கொண்ட ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் திரைப்படத் துறையிலும் பி. ஏ சிறப்புப் பட்டத்தைப் பெற்றிருந்தார்.  ‘Escape of Genocide’ (இன அழிப்பிலிருந்து தப்பி) என்ற இலங்கை இன வன்முறை பற்றிய இவரது விவரணப் திரைப்படம்; குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஆனால் திரைப்படத்துறையில் துரதிஷ்டவசமாக காலூன்ற முடியாது போய்விட்டது என்கிறார் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்.
    
இதைவிட மருத்துவ மானிடவியல் துறையில் எம்.ஏ பட்டத்தை லண்டன் பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்டார். லண்டனில் நீண்டகாலமாக குழந்தைகள் நல அதிகாரியாக பணிபுரிந்த ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்  ‘உங்கள் உடல் உள பாலியல் நலம்’, ‘தாயும் சேயும்’ என்ற இரு மருத்துவ நூல்களைச் சிறப்பாக எழுதி வெளியிட்டுள்ளார். தமிழில் வெளிவந்த மருத்துவ நூல்களில் இந்த நூல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இதனைவிட ‘தமிழ்க் கடவுள் முருகன் வரலாறும் தத்துவமும்’ என்ற இவரது ஆய்வு நூலும் தமிழகத்தில் பாராட்டைப் பெற்ற நூலாகும்.
      
‘சாதிக் கொடுமைகளை எதிர்த்து எழுதுகிறேன், இறக்கும்வரை எழுதுவேன், சுயநலத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த பிராமணியத்தின் தத்துவங்களை உடைத்து எறியாதவரை எந்த சமூகமும் முன்னேறாது’ என்று துணிச்சலோடு கூறுபவர் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம். அரசியல் அபிப்பிராய பேதங்களால் நடக்கும் உயிர்ப் பலிகள் அநியாயமானவை. இவைகளைக் கண்டிப்பது மனித உரிமைக்காகப் போராடும் பலரின் கடமையாகும் என்று துணிவோடு செயற்படும் எழுத்தாளராக ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் திகழ்கிறார். 

திருமதி தமிழரசி சிவபாதசுந்தரம்
திருமதி தமிழரசி சிவபாதசுந்தரம்
திருமதி தமிழரசி சிவபாதசுந்தரம் ஈழத்தில் புங்குடுதீவைச் சேர்ந்தவர். ‘சாலினி’ என்ற பெயரில் சிறுவயதிலேயே எழுதத் தொடங்கிய இவர் தனது பதினைந்தாவது வயதில் ‘திருவாசகத்தில் பெண்கள்’ என்ற தலைப்பில் எழுதிய ஆய்வுக்கட்டுரை ஈழத்து அறிஞர்களால் அன்று பாராட்டப்பட்டது. உலகநாடுகளில் வெளிவரும் இதழ்களில் பல புனைபெயர்களில் எழுதிவரும் தமிழரசி சங்கத்தமிழ், ஈழவரலாறு, சமயம், இசை, நாட்டியம், ஓவியம், சிற்பம் பற்றிய நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். தாயகப் பற்றும், மொழிப்பற்றுமிக்க தமிழ்ப்பண்டிதையான இவர் 2007 இல் ‘திருக்குறளில் கேள்வியால் ஒரு வேள்வி’ என்ற நூலை எழுதி வெளியிட்டவர். கவிதைகள், எழுச்சிப் பாடல்கள், பக்திப்பாடல்கள், நாட்டிய நாடகங்களையும் இயற்றியுள்ளார்.
சந்திரா இரவீந்திரன்
சந்திரா இரவீந்திரன்
இலங்கையின் வடமராட்சி – பருத்தித்துறையில் மேலைப்புலோலியூர், ஆத்தியடியைப் பிறப்பிடமாகக் கொண்ட சந்திரா இரவீந்திரன் 1991இல் பித்தானியாவிற்கு இடம்பெயர்ந்து இலண்டனில் வசித்து வருகின்றார். ‘ஒரு கல் விக்கிரகமாகிறது’ 1981இல் வெளியான இவரது முதற் சிறுகதையாகும். 1988இல் பருத்தித்துறை –யதார்த்த இலக்கிய வட்டத்தினால் ‘நிழல்கள்’ என்ற முதல் சிறுகதைத் தொகுதி வெளியிடப்பட்டது. 2011 இல் ‘நிலவுக்குத் தெரியும்’ என்ற சிறுகதைத் தொகுப்பை எழுதி வெயிட்டவர். இலண்டனில் 2007 ஆம் ஆண்டுவரை ஏழு வருடங்கள் அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் குறிப்பிடத்தக்க இலக்கிய நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கி வந்தவர்.
மாதவி சிவலீலன்
மாதவி சிவலீலன்
யாழ் வேம்படி மகளிர் கல்லூரியின் பழைய மாணவியான மாதவி சிவலீலன் யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புக்கலை பயின்று, முதுகலைமாணிப் பட்டத்தையும் பெற்றவர். ‘பொன்னாலைக் கிருஷ்ணப்பிள்ளையின் பாடல்கள் - ஓர் ஆய்வு’ என்னும் நூலை எழுதி வெளியிட்டுள்ளார். முதுகலைமாணிப் பட்டதிற்காகக் ‘கம்பராமாயணக் கதையமைப்பும் கட்டமைப்பும்’ என்னும் ஆய்வேட்டை  யாழ் பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பித்திருக்கின்றார்.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்த பிரபல நாட்டுக்கூத்துக் கலைஞரான பொன்னாலைக் கிருஷ்ணபிள்ளை அவரது காலத்து அரசியல் பொருளாதாரம் சமூகம், சமயம் போன்ற அனைத்து விடயங்களையும் கொண்டப hடல்களை ஆக்கியவர். இவர் கூறும் சமூகச் சீர்திருத்தக் கருத்துக்கள் இன்றைய சமூகத்திற்கும் பொருந்துவதாக உள்ளதே அவரது பாடல்களின் சிறப்பு எனக் கூறும் மாதவி சிவலீலன் ஈழத்தில் பல எழுத்தாளர்களும், கலைஞர்களும் இலக்கிய ஆர்வலர்களால் வெளிக்கொணரப்படாது மறைந்திருக்கின்றனர் என்று கூறுகின்றார். அந்நாட்களில்; கிராமங்களில்; இடம்பெறும் நாடக இடைவேளைகளின் போது சமூகச்சுற்றாடலின் பனை போன்ற இயற்கை வளங்களின் நன்மைகள் குறித்தும், சமூகத்திற்குத் தேவையான பல நல்ல கருத்துக்களையும் வெளிப்படுத்தி சமூகத்தை சிந்திக்க வைத்து நெறிப்படுத்தியவர்களில் முக்கியமாத் திகழ்ந்தவர் பொன்னாலைக் கிருஷ்ணபிள்ளை அவர்கள்;. இத்தகைய சமூக அக்கறையோடு; சிறந்த நாடகக் கலைஞராகவும் செயற்பட்டவரை வெளிக்கொண்டுவரும் நோக்கில்தான் அத்தகைய ஒரு ஆய்வு நூலை மேற்கொண்டதாகக் கூறுகின்றார் மாதவி;. 
1957 ஆம் ஆண்டு பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோயிலில் நடைபெறும் 12 ஆம் திருவிழா பொன்னாலைக் கிருஷ்ணபிள்ளையின் குடும்பத்தினரால் பரம்பரையாக இடம்பெறும் திருவிழா. அன்றைய தினம் ‘கிருஷ்ண லீலா’ நாடகத்தை மேடையேற்றினா.;; இவரது மகன் சகடாசுரனாக நடித்தபோது இறக்கும் காட்சியில் உண்மையாகவே இறந்துபோய்விட்டார். இந்த துன்பகரமான நிகழ்வின் பின்னர் கோயில்களில் அந்த நாடகத்தை அரங்கேற்றுவதை நிறுத்தினார் என்று அவரது மருமகனான சங்கீத பூஷணம் சு.கணபதிப்பிள்ளை கூறியதாக அந்த நூலில் குறிப்பிடுகிறார் மாதவி சிவலீலன்.
தற்போது லண்டன் தமிழ் நிலையத்தில்; தமிழ் ஆசிரியராகப் பணியாற்றும் இவர் கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம் என்பவற்றிலும் ஆர்வமுடையவர்.
அங்கயற்கண்ணி
காங்கேசன்துறையைச் சேர்ந்த அங்கயற்கண்ணி தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட பெண்மணியாகத் திகழ்ந்தவர். தமிழரசுக் கட்சியின் அரசியல் மேடைகளில் நன்கு அறியப்பட்ட  அங்கையற்கண்ணி தமிழகத்தில் புலம்பெயர்ந்தபோது எழுதிய கவிதைகள் தொகுப்பாக வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. கலைஞர் மு.கருணாநிதியின் முன்னுரையுடன் வெளியான கவிதைத் தொகுப்பு ஈழத்தின் விடுதலைப் போராட்ட கவிதைகளாக மலர்ந்திருந்தன. லண்டன் கவியரங்குகளில் அடிக்கடி பங்குகொள்ளும் அங்கயற்கண்ணி சமூக சேவகியாகச் செயற்பட்டு வந்துள்ளார். 
திருமதி றீற்றா பற்றிமாகரன்   
எழுத்தாளராகவும், ஆசிரியையாகவும், நூலாசிரியராகவும், ஊடகவியலாளராகவும் பணியாற்றிவரும் திருமதி றீற்றா பற்றிமாகரன் 1984 ஆம் ஆண்டிற்கான அகில இலங்கைச் சாகித்திய மண்டல இளம் எழுத்தாளருக்கான கட்டுரைப் போட்டியில் முதல் இடத்தைப் பெற்றுக்கொண்டவர்.
    
இளங்கலைமாணி(B.A)பட்டத்தைப் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும், இள விஞ்ஞானமாணி பட்டத்தை (BSC> PC Dip (social policy), PG Dip (Housing) பட்டங்களை  ஒக்ஸ்வேர்ட் புரூக்ஸ் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டவர்.
    
சன்றைஸ் வானொலியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக திகழ்ந்த றீற்றா பற்றிமாகரன் வானொலி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து சிறப்பித்து வருகின்றார். ‘நவீன காதல்’ (2011)இ ‘நாடொன்று மீளப்பிறந்தது’ (2012)  போன்ற சிறுகதைகள்  தமிழகத்தின் தினமணியில் வெளியாகின. 
  
   1. புதியமுறையில் தமிழ் எழுதுதல் (1992) 
   2. சிறுவர்க்கான தமிழ் மழலையர் பாடல்கள் கதைகள் ஒலிநாடா (1996).
   3. பம்பி சிறுவர் வாசிப்பு நூல் (1996)
   4. தமிழ் செய்முறைப் பயிற்சி (1998)
   5. தமிழ் பயிற்சி நூல்  (1999)
   6. இலங்கைத் தமிழர்கள் வரலாறு கலாச்சாரம் பாரம்பரியம்(2005)
   7. இலக்கணத் தொகுப்பு (2008)
   8. சங்ககாலத் தமிழர் வாழ்வும் கலைகளும் (2011)

   போன்ற நூல்களை எழுதி வெளியிட்டவர்.
2009இல் இடம்பெற்ற முதலாவது பன்னாட்டுச் செவ்வியல் மொழி மாநாட்டில் ‘தமிழைச் செம்மொழியாக்கலில் தொல்காப்பியத்தின் பங்களிப்பின் சிறப்பு’ பற்றிய ஆய்வு, 2010 இல் இடம்பெற்ற உலகச் செம்மொழி மாநாட்டில் ‘தேச உருவாக்கத்தில் சங்ககாலப் பெண்களின் பங்களிப்பு’ என்ற ஆய்வுக்கட்டுரை, 2011இல் செம்மொழி மத்திய ஆய்வு இந்தியத் திணைக்கள சங்கமகளிர் பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் ‘சங்க காலச் சமூகத்தில் பெண் மாந்தர்கள் நிலை: தலைவி தோழி செவிலித்தாய்  நற்றாய் பரத்தையர்’ என்ற ஆய்வுக்கட்டுரை, 2012இல் நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் ‘சங்க இலக்கியங்களில் நேரம் மற்றம் மனஅழுத்த மேலாண்மைக் கோட்பாடுகள் என்ற’ கருத்தரங்கில் ‘சங்க இலக்கியத்தில் மனஅழுத்த முகாமைத்துவம்’ என்னும் ஆய்வுக்கட்டுரை, சிதம்பரத்தில் இடம்பெற்ற 12 ஆவது உலக சைவ மகாநாட்டில் ‘திருமந்திரத்தில் பதிபசுபாசம்’ என்ற ஆய்வுக் கட்டுரை, 2011 இல் 13வது இலண்டன் சைவ மாநாட்டில் ‘பெண்கள் விளையாட்டுக்களில் சைவநெறியும் உலக அமைதியும்’ என்ற ஆய்வும், 2012 இல் பிரித்தானிய திருக்கோயில்கள் ஒன்றிய 14வது மகாநாட்டில் ‘தமிழ் படிப்பித்தலில் சைவஅறிவின் அவசியம்’  போன்ற ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர்.
     
யாழ் திருக்குடும்பக் கன்னியர் மடத்தின் பழைய மாணவியான றீற்றா பற்றிமாகரன் விளையாட்டு, நாடகக்கலை, சிறுவர் நிகழ்ச்சித் தயாரிப்புகளில் ஆர்வம் உள்ளவர். மாட்டின் டி பொரஸ் ஹொரணை, சென் யோசப் கல்லூரி கொழும்பு போன்றவற்றில் ஆசிரியராகப் பணியாற்றிய றீற்றா பற்றிமாகரன் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தின் அனைத்துலகத் தமிழ் உயர்தரத் தேர்வுக்கான வினாத்தாள் தயாரிப்பாளராகப் பணியாற்றிய  அனுபவம் கொண்டவர்;.

நிர்மலா ராஜசிங்கம் 
நிர்மலா ராஜசிங்கம்
அமெரிக்காவின் 'பொஸ்ரன் வீட்டன்' கல்லூரியில் அரசியலை சிறப்புக் கற்கை நெறியாகப் பயின்று கலைமானிப்பட்டத்தைப் பெற்ற இவர் யாழ் பல்கலைக கழகத்தில்  ஆங்கில போதனாசிரியராகவும் பின்னர் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் ஆசிரியையாகவும் பணியாற்றியவராவார். யாழ்ப்பாணத்திலிந்து வெளியான Saturday Review என்ற பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றினார்.ராஜசிங்கம் Tennessee Williams எழுதிய The Glass  Menagerie என்ற நாடகத்தை ‘கண்ணாடி வார்ப்புகள்’ என்ற பெயரிலும், ரஷ்ய நாடக ஆசிரியர் Aleksei Arbuzov எழுதிய  Old World என்ற நாடகத்தை ‘பழைய உலகம் புதிய இருவர்’ என்ற தலைப்பிலும், Federico Garcia Lorca எழுதிய The House of Bernarda Alba என்ற நாடகத்தை ‘ஒரு பாலை வீடு’ என்ற பெயரிலும்,Bertolt Brecht எழுதிய The  Exception and the Rule  என்ற நாடகத்தை ‘யுகதர்மம்’  என்ற பெயரிலும் சிறந்த மொழிபெயர்ப்புக்களைச் செய்தவராவார்.
     
சிறந்த நடிகையாகவும் திகழ்ந்த இவர் மேற்கத்தைய இசையிலும் தேர்ச்சி மிக்கவர் ஆவார். தமிழகத்திலிருந்து வெங்கட்சாமிநாதன் எழுதிய ஹிட்லரும் றிச்சேட் வாக்னரும் (Hitler Richard  Wagner) என்ற கட்டுரைக்கு எதிராக மேற்கத்தைய இசை குறித்து மிக விரிவாக இவர் எழுதிய விமர்சனக் கட்டுரை தமிழில் மேற்கத்தைய இசை குறித்து வெளிவந்த ஆழமான கட்டுரையாகும்.
    
மறைந்த சிவரமணியின் கவிதைகளை ஆங்கிலத்தில் அழகான மொழிபெயர்ப்புக்களையும் செய்திருக்கின்றார். மனித உரிமை மீறல்களுக்கெதிரான அரசியல் கட்டுரைகளை இங்கிலாந்துப் பத்திரிகைகளில் ஆங்கிலத்தில் எழுதி வருகின்றார்.

அடேல் பாலசிங்கம்
அடேல் பாலசிங்கம்
அடேல் பாலசிங்கம் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிக முக்கிய பங்கு வகித்த பெண்மணியாவார். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த அடேல் பாலசிங்கம் லண்டனில் வாழ்ந்து பின்னர் தமிழகத்திலும், ஈழத்திலும் வாழ்ந்து தமிழ் சமூகம் குறித்த சிந்தனை கொண்டவராவார். ‘விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள்’ (women fighters of liberation Tigers) என்ற தலைப்பில் அவர் எழுதிய நூல் பெண் போராளிகளின் போராட்ட வரலாற்றை தொகுத்துத் தரும் சிறந்த நூலாகும். ‘சுதந்திர வேட்கை’ ( The Will to Freedom) என்ற இவரது நூல் சுயசரிதை விவரணமாகவும், வரலாற்று நோக்குடனும் எழுதப்பட்ட நூலாகும். இருபது ஆண்டுகால தமிழீழ சுதந்திரப் போராட்டத்தின் படிநிலை வளாச்சியில் நிகழ்ந்த முக்கிய வரலாற்று நிகழ்வுகளையும், திருப்பங்களையும் இந்த நூல் துல்லியமாக எடுத்துக் கூறுகின்றது. மிகவும் கொந்தளிப்பான கால கட்டங்களையும் அக்கால கட்டங்களில் கட்விழ்ந்த அவலமான நிகழ்வுகளையும் சுதந்திரம் வேண்டி நிற்கும் போராளிகளினதும், பொதுமக்களினதும் ஆழமான உணர்வலைகளையும் உறுதிப்பாட்டினையும் இந்த நூல் வெளிப்படுத்துகின்றது.
      
யாழ்ப்பாணத்து சீதண முறைமை பண்டைய தாய்வழிச் சொத்துடமை உறவு முறையுடன் தொடர்பு உடையது என்பதை நிறுவும் ஆய்வாக இவரது ‘உடையாத விலங்குகள்’ (Unbroken Chain) என்ற நூல் திகழ்கின்றது. ஆங்கிலத்தில் இவர் எழுதிய இந்த மூன்று நூல்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு மிகச் சிறந்த வரவற்பைப் பெற்றன.

உதயகுமாரி பரமலிங்கம்
உதயகுமாரி பரமலிங்கம்
லண்டன் மிடில்செக்ஸ் பல்கழகத்தின் இளநிலைப்  பொறியியல் பட்டதாரியான உதயகுமாரி பரமலிங்கம், அரியாலையூர் அம்புயம், நிலா போன்ற புனைபெயர்களில் கவிதை, கட்டுரை, நாடகம் போன்றவற்றைப் படைத்து வருகின்றார்.
       1. ‘எந்தையும் யானும்’  (நிலாவினதும் அவரது தந்தை சிவம் பரமலிங்கத்தினதும் கவிதைகள்)         
       2.  ‘எழுத எழுத’  (சக்கர நாற்காலியில் தன் வாழ்வை நகர்த்தும் நிலாவின் சுயசரிதம்)
       3. ‘நிலாவின் இந்திய உலா’ 2003,2009 களில் இந்தியா சென்ற நிலாவின் அனுபவங்களின் கோர்ப்பு.  2010 இல் வெளிவந்த சிறந்த பயணக்கட்டுரைக்கான தமிழியல் விருதினை 2011இல் பெற்றது.
       4. ‘உறைக்கும் உண்மைகள்’ ஐரோப்பிய வாழ்வியலை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட குறுநாவல். அக்டோபர் 2010 திருநெல்வேலி, தமிழகம்.
        5. ‘அம்மா வாழ்க!’ பலவிதமான ஆக்கங்களின் தொகுப்பு. ஜனவரி 2012, லண்டன்.
நாடகங்கள்  பதினைந்திற்கும் மேற்பட்டவை (யாழ்ப்பாணம்)
இலண்டனில் மூன்று நாடகங்கள்.

திருமதி சீதாதேவி மகாதேவா
லண்டன் ஹரோவில் வசித்து வரும் சீதாதேவி 1998இல் இளைப்பாறிய ஒரு மூத்த ஆங்கில வைத்தியை. குழந்தை வைத்தியம், மனநோய் சிகிச்சை முறை, வெப்பவலய நோய்கள், குடும்பக் கட்டுப்பாடு, குடிசார் வைத்தியச் சேவை போன்ற துறைகளில் பயிற்சி  பெற்று பிரித்தானிய தேசிய சுகாதாரச் சேவையில் 27 ஆண்டுகளும், இலங்கையில் 12 ஆண்டுகளும் சேவையாற்றியவர்.
பெண்ணுரிமை, இலட்சிய உள்ளம், இலட்சியத் திருமணம், வைத்திய விஞ்ஞான அபிவிருத்தி, நாளாந்த சுகாதாரம், பிரித்தானியா, காந்தி-கியூரி – கண்ணதாசன் - பாரதி போன்ற பல்துறை முன்னோடிப் பெரியார்கள், சைவம், தமிழர் கலாச்சாரம், வாழ்க்கை அனுபவங்கள், தனது குடும்பத்தார், அண்மையும் பெண்மையும் போன்ற கருப்பொருட்களில் ஐம்பதிற்கும் மேற்பட்ட கட்டுரைகளை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதி வெளியிட்டுள்ளார். பூந்துணர் -2007, பூந்துணர் - 2010, பூந்துணர் - 2012 தொகுப்பு நூல்களிலும் இவரது கட்டுரைகள் வெளிவந்துள்ளன.   
        

மீனாள் நித்தியானந்தன்

மீனாள் நித்தியானந்தன்
லண்டனில் 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற பெண்கள் சந்திப்பில் இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பற்றி வாசித்த கட்டுரையின் மூலம் இலக்கிய உலகிற்கு அறிமுகமான மீனாள் நித்தியானந்தன் அனுபவம் மிகுந்த மருத்துவத் தாதி ஆவார். அரபு நாடுகளில் வேலை செய்த அவரது அனுபவங்களைப்பற்றி அவர் எழுதிய கட்டுரைகள் குறிப்பிடத்தக்கன. அரபுமொழி, மலையாளம் ஆகிய மொழிகளில் தேர்ச்சியும் கொண்ட அவர் லண்டன் விமர்சனக் கூட்டங்களில் நூல் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார். ராஜேஸ்வரி பாலசுப்ரமணியத்தின் ‘தாயும் சேயும்’ மருத்துவ நூல் குறித்த நுட்பமான விமர்சனமொன்றினை இவர் முன்வைத்துள்ளமை விதந்துரைக்கப்பட்டது.
2009 ஆம் ஆண்டு லண்டன் ஏர்ல்ஸ் கோர்ட்;டில் நடைபெற்ற நூல் கண்காட்சியில் நேரில் பார்த்து, இந்திய ஆங்கில எழுத்தாளர்களைச் சந்தித்து இவர் எழுதிய ‘லண்டன் நூல் கண்காட்சி சில மனப்பதிவுகள்’ என்ற கட்டுரை மிகச் சிறந்த விவரணக் கட்டுரையாகும்.
புனிதம் பேரின்பராஜா
புனிதம் பேரின்பராஜா
இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான புனிதா பேரின்பராஜா இலங்கையில் ஆசிரியராகப் பத்தாண்டுகளுக்கு மேலாகக் கடமையாற்றியவர். புலம்பெயர்ந்து பிரித்தானியாவுக்கு வந்து லண்டன் பல்கலைக்கழகத்தில் ‘பல்கலாச்சார’த் துறையில் பல ஆய்வுகளை மேற்கொண்ட புனிதா பேரின்பராஜா லண்டன் ஆங்கிலப் பாடசாலைகளில் மொழியியல் வல்லுநராகக் கடமையாற்றியதோடு, ஆங்கில ஆசிரியர்களுக்கு விரிவுரையாளராகவும், செயலாளராகவும் செயலாற்றியவர்.
1987 ஆம் ஆண்டு ஹரோவில் தமிழ் பாடசாலை ஒன்றை ஆரம்பிக்க உதவிய புனிதா பேரின்பராஜா ‘பாடல் மூலம் தமிழ்’ என்ற நூலினை எழுதி வெளியிட்டவர். இதன் பாடற்தொகுப்பு தற்பொழுது இறுவெட்டாக வெளிவந்துள்ளது. நான்கு தசாப்தங்களுக்கு மேலாக லண்டனில் வாழ்ந்துவரும் புனிதா பேரின்பராஜாவின் பாடல்கள் 2004 ஆம் ஆண்டு பிரித்தானிய மகாராணியாரின் முன்னிலையில் மேடையேற்றம் கண்டது. இவரது சமூக சேவைகள் குறித்து 2004ஆம், 2012 ஆம் ஆண்டுகளில் மாநகர மேயரின் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு  தமிழ்சமூகத்திற்கு மிகுந்த பெருமையைத் தேடித்தந்தவர்.
திருமதி விஜயலட்சுமி ஆறுமுகசாமி 
38 வருட கால சங்கீத ஆசிரியத் தொழிலில் ஆனுபவம் கொண்ட ஸ்ரீமதி விஜயலட்சுமி ஆறுமுகசாமி கர்நாடக சங்கீத பரீட்சைக்குரிய பாடத்திட்டத்திற்கமைய வழிகாட்டி நூலை எழுதி 2011 ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளார். இசைக் கலையை பயி;ல்வோர் மட்டுமன்றி சாதாரண மக்களும் வாசித்து அறிந்து உணர்ந்திடும் வகையில் எளிமையும் இனிமையும் நிறைத்து இதனை வெளியிட்டுள்ளார்.
சிவகாமி மகாலிங்கம்
1947 இல் கொழும்பில் பிறந்த சிவகாமி மகாலிங்கம் தனது கணவருடன் பிரித்தானியாவுக்கு வந்து பிரித்தானியாவின் வருமான மற்றும் சுங்க திணைக்களத்தில் முழுநேர ஊழியையாகப் பணியாற்றியவர். நமது நாளாந்த சமையல் கலை திறமைகள் புலம்பெயாந்து வாழும் நமது சந்ததியினருக்குத் தெரிய வேண்டும் என்னும் நோக்கில், மேற்கு நாடுகளின் நவீன வாழ்வுக்கேற்ப இசைவு படுத்தப்பட்ட இலங்கை மற்றும் ஆசிய நாட்டு பாரம்பரிய சமையல் என்னும் ஒரு புத்தகத்தை இவர் எழுதியுள்ளார். Rice and Curry (Kari) என்ற தலைப்பில் 400 உணவுகள் தயாரிக்கும் முறைகளின் விபரங்கள் அதில் அடங்கியுள்ளன. தொண்டு அடிப்படையில் சமையல் கலை விளக்கங்களை சொல்லிக் கொடுப்பதன் மூலமும் பல்வேறு தர்ம ஸ்தாபன நிகழ்வுகளுக்கு உதவி இருப்பதுடன் சுனாமி அனர்த்த நிதி சேகரிப்பு உட்பட பல்வேறு நிதி சேகரிப்பு நிகழ்வுகளுக்கும் இவர் உதவி புரிந்துள்ளார்.


ராஜேஸ்வரி ஈஸ்வரஞானம் 

              
ஆண் ஆதிக்கத்திற்கு எதிரான தீர்க்கமான கருத்துக்கள் கொண்ட ராஜேஸ்வரி ஈஸ்வரஞானம் 1975 இல் கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியின்; வர்த்தகவியல் ஆசிரியராகக் கடமை புரிந்தவர். நீண்ட காலமாக லண்டனில் வாழ்ந்துவரும் ராஜேஸ்வரி லண்டனில் விக்னேஸ்வராக் கல்லூரியின் பழைய மாணவர்சங்கத்தினை அமைத்து இன்றுவரை திறம்பட நடாத்திவருகின்றார். 1980 முதல் தமிழ் சமுதாயத்தில் அக்கறை கொண்டு பல சமூகவேலைகளை முன்னெடுத்து வருவதோடு அங்குள்ள பல மாணவர்களை தத்தெடுத்து சகல செலவீனங்களையும் தனியொருவராக நின்று செய்து வருகின்றார்.

‘இயற்கையோடு இயைந்த வாழ்வு’ என்ற நூலை 2010 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட ராஜேஸ்வரி ஈஸ்வரஞானம் 2012 ஆம் ஆண்டில் ‘மூச்சுப் பயிற்சி’ என்ற இறுவெட்டொன்றை வெளியிட்டுள்ளார். ஆரோக்கியமாக மக்கள் வாழ்வதில் அக்கறை கொண்டு இத்தகைய நூல்களை எழுதி வரும் ராஜேஸ்வரி ஈஸ்வரஞானம் தற்பொழுது ‘பிரதிபலிப்பு முறை’ என்ற தலைப்பில் நோய்களைத் தடுக்கும் நூல் ஒன்றினை எழுதிக்கொண்டிருக்கிறார். 
சி.மாதுமை 
யாழ்ப்பாணத்தில் பிறந்து திருகோணமலையைப் புகலிடமாகக் கொண்டு தற்போது லண்டனில் வசித்து வருகின்றார். கொழும்புப் பல்கலைக் கழகத்தில் பி.ஏ பொருளியல் முதலாம் தரப்பட்டதாரியான சி. மாதுமை பீ.எஸ்.பீ நிறுவனத்தில் திட்டமிடல் உதவியாளராகப் பணிபுரிந்தவர். தனது சிறுவயது முதல் எழுதுவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்த மாதுமை பல பரிசில்களைப் பெற்று இளம் எழுத்தாளராக அங்கீகாரம் பெற்றிருந்தார். தனது இருபத்தாறாம் வயதில் ‘தூரத்துக் கோடை இடிகள்’ (2005) என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டவர்.
மாதுமையிடம் இலக்கிய நடையும்,யாழ்ப்பாணத்துப் பேச்சு நடையை லாவகமாகக் கொண்டு எழுதும்; பாங்கும் நிறையவே காணப்படுவது அவர் திறமைக்குச் சான்று என்று முதுபெரும் விமர்சகரும், எழுத்தாளருமாகிய கே.எஸ்.சிவகுமாரன் கூறுகின்றார்.  முதுமை, தனிமை, அனாதரவு, சூழல் இணக்கமாக அமையாமை, மத்தியதர மக்கள் வாழ்க்கைப் பிரச்சனைகள், இனவேறுபாடுகளுக்கு அப்பால் மனித உறவுகளின் அந்நியோன்யம், வெளிநாடுகளில் இலங்கைத்தமிழர் சிலரின் கேவலமான நடத்தைகள், ஏமாற்றுச் செயல்கள், திருகோணமலையில் குடியேறிய அகதிகளின் அந்தரங்கம், மாற்று இனப் பெண் வயோதிபருக்கும் , அனாதைப் பிள்ளைகளுக்கும் உதவ முன்வருதல், கணநேரக் காதலை வெளிப்படுத்த முடியாத அங்கலாய்ப்பு, பெற்றோரை அவமரியாதைக்குரியவர்களாக ஆக்கும் மகனின் உதாசீனம், குருவை உதாசீனம் செய்து கலையை விலையாக்கும் இளம் பாடகி, மணவாழ்வில் ஏமாற்றம், கணவன் துரோகம் கண்டு தற்கொலை செய்யும் மனைவி, தோல்விகளுக்கும் மத்தியில் நம்பிக்கையுடன் வளரும் இளைஞன் - இப்படிப் பலவிதமான நிகழ்;ச்சிகள் அவர் கதைகளின் அடிநாதமாக ஒலிப்பதை இனங்காணமுடிகிறது என்று சிவகுமாரன் கூறுகின்றார்.  
ஷாரிகா திராணகம  
மறைந்த யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் உடற்கூற்றியல் பேராசிரியை டாக்டர் ரஜனி திராணகமவின் மகளான ஷாரிகா சமூக மானிடவியலில் கலாநிதிப்பட்டம் பெற்றவராவர். ‘ ‘In My Mother’s House – civil war in Srilanka’  என்று பென்சில்லேனியா பல்கலைக்கழக வெளியீடாக வெளிவந்திருக்கும்  இவரது ஆராய்ச்சி நூல் இலங்கைக்குள்ளேயே அகதிகளாக இடம்பெயர்ந்த வடபுலத்துத் தமிழர்களதும். முஸ்லிம்களதும் சமூக ஊடாட்டங்களைப்பற்றிய மிக ஆழமான ஆய்வாகப் பரிணமித்திருக்கின்றது. 
     
இலங்கையின் தலைசிறந்த சமூகவியல் அறிஞரான கணத் ஒபேசேகர யுத்தத்தின் நிழலில் சாதாரண மக்கள் எத்தகைய உறுதியோடு வாழ்க்கையை எதிர்கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்த நூல் நேர்த்தியாகச் சித்தரிக்கின்றது என்று கூறியிருக்கிறார். அமெரிக்காவின் ஸ்ரான்போஃர்ட் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராகப் பணியாற்றும் சாரிகா ‘Traitors'  என்ற மற்றுமொரு ஆங்கில நூலின் இணை ஆசிரியராகத் திகழ்கின்றார்.

சுகதினி பானுகோபன்
யாழ். வலிகாமம் இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட சுகதினி பானுகோபன் தற்பொழுது பிரித்தானியாவில் வாழ்ந்து வருகின்றார். இணுவில் மத்திய கல்லூரி, கொக்குவில் இந்துக்கல்லூரி போன்ற கல்லூரிகளில் கல்வியைத் தொடர்ந்த சுகதினி பானுகோபன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனது பி.ஏ பட்டப்படிப்பை மேற்கொண்டவர். கல்வி பயிலும் காலம் தொட்டே கவிதை எழுதுவதில் ஈடுபாடு கொண்ட சுகதினி ஐம்பதிற்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ளார். இலங்கைப் பத்திரிகைகளில் அவரது கவிதைகள் வெளிவந்துள்ளன.
மைத்ரேயி ராஜேஸ்குமார்
மன்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தையும், மேற்கத்தைய மெய்யியலையும் சிறப்புக் கற்கை நெறியாகப் பயின்றவர் மைத்ரேயி ராஜேஸ்குமார். பென் பவிங் என்ற டச்சுப் பாதிரியார் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆசிரியராகவும் பின் புணர் வாழ்வு செயற்பாட்டாளராகவும், யுத்த காலப் பகுதியில் பணியாற்றிய காலத்தில் எழுதிய டயறிக் குறிப்புகளை அழகாகப் பதித்து வெளியிட்டிருக்கிறார். 
    
Of Tamils and Tigers : A Journey Through Sri Lnaka’s  War  Years  என்ற தலைப்பில் வெளியான இந்த நூல் மைத்ரேயின் ஆங்கிலப் பிரதியைச் செப்பனிடும் நுட்பமான ஆற்றலை வெளிப்படுத்தி நிற்கிறது. இந்த ஆவணத்தை  ஆழந்த ஈடுபாட்டுடனும் பெரும் கரிசனையுடனும் செம்மைப்படுத்தி தந்திருப்பதை பென் பவிங் நன்றியோடு நினைவு கூர்ந்ததை குறிப்பிடுவது பொருத்தமானதாகும். ஆங்கில நாடக மேடையேற்றங்கள் குறித்து இவர் எழுதிய விமர்சனங்கள் ஆங்கில ஏடுகளில் வெளியாகியுள்ளன.

பொன்னையா ஜெயஅழகி அருணகிரிநாதன்
பொன்னையா ஜெயஅழகி அருணகிரிநாதன்
கர்நாடக சங்கீதம் குறித்தும், சைவத் திருமுறைகள் குறித்தும் லண்டனில் ஆய்வுகளை மேற்கொண்டுவரும் ஜெயஅழகி அருணகிரிநாதன் ‘The Tevaram Contribution to Saivism and Indian Music’ என்ற ஆராய்ச்சி நூலை எழுதி வெயிட்டவர். இலங்கையிலும், இந்தியாவிலும் சங்கீத ரத்தினம், சங்கீத வித்துவான் போன்ற பட்டங்களைப் பெற்ற ஜெயஅழகி அருணகிரிநாதன் லண்டன்  SOAS, University of London இல் சங்கீத இசையைக் கற்பித்துவருகின்றார். London Oriental Fine arts Academy  இன் வருடாந்த பரீட்சையின் பிரதம பரீட்சையாளராகவும் கடமைபுரிந்து வருகின்றார்.
பிறேமளாதேவி ரவீந்திரன்
யாழ் பல்கலைக்கழக நுண்கலைத்துறைப் பீடத்தில் கற்று ‘நாட்டியக் கலைமணி’ பட்டம் பெற்ற ஸ்ரீமதி பிறேமளாதேவி ரவீந்திரன் நாட்டியக் கலைஞராகவும், ஆசிரியராகவும், பரீட்சகராகவும் இலங்கை , லண்டன், ஐரோப்பிய நாடுகள் என்று பலவிடங்களிலும் பலகால அனுபவம் கொண்டவர். லண்டன் சங்கீத சபையில் பங்கேற்றுப் பணியாற்றிவரும் பிறேமளா இறைய தலைமுறையினருக்கு அறிவு நோக்கமாகவும், பரீட்சை நோக்கமாகவும் ‘பரதநாட்டியம்’ குறித்த நூல்களை இரண்டு பிரிவுகளாக்கி நூல் வடிவில் தந்துள்ளார்.நடனம் பற்றிய இவரது பல கட்டுரைகள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.
     
நாட்டியம் மட்டுமன்றி கர்நாடக இசை வாய்ப்பாட்டிலும், வடமொழி, இந்துப்பண்பாடு போன்றவற்றிலும் தேர்ச்சி பெற்ற பிறேமளா ரவீந்திரன் தொடர்ந்தும் கலை முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்.

சாரங்கா
எழுத்துலகில் சாரங்கா என எல்லோராலும் அறியப்பட்ட குணாளினி தயானந்தன் ஒரு ஆங்கிலப் பட்டதாரியாவார். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் பழைய மாணவியான சாரங்கா தற்போது லண்டனில் வசித்து வருகின்றார். 1992 ஆம் ஆண்டு ஈழநாதத்தில்  ‘ஓன்றரைக்கால்’ என்ற சிறுகதை மூலம் எழுத்துலகில் பிரவேசித்த சாரங்கா யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த ‘ஸ்கிறிப்ட் நெற்’ திரைக்கதை எழுத்தாளர்  தெரிவில் இறுதிச் சுற்றுவரை தேறிச் சான்றிதழ் பெற்றவர்.
‘தரமான சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் படைத்து ஈழத்து இலக்கிய உலகிற்கு வளம் சேர்க்க வேண்டும். மேல் நாட்டு நல்லறிஞர் இலக்கியங்களை தமிழில் மீள் கூறவேண்டும்’ என்ற இலக்கிய வேட்கையோடு திகழும் சாரங்கா கவிதை, கட்டுரை, சிறுகதைப் போட்டிகளில் பங்குபற்றி பல்வேறு பரிசில்களைத் தட்டிக்கொண்டவர்.
குரும்பசிட்டி சன்மார்க்க சங்கம் நடாத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு, வலம்புரி நடாத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு, கவிதைப் போட்டியில் முதற்பரிசு, பாரீசில் தமிழ் சங்கம் நடாத்திய சிறுகதைப் போட்டியில் தங்கப் பதக்கம். விபவி கவிதைப் போட்டியில் பரிசு. அமுது சிறுகதைப் பரிசு. திருமறைக் கலாமன்றம் நடாத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு, ‘சுகவாழ்வு நிலையம்@ நடாத்திய சிறுகதைப்போட்டியில் பரிசு, சதாவதானி கதிரவேற்பிள்ளை கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு. ஞானம் நடாத்திய புதிய பரம்பரை எழுத்தாளர்களுக்கான சிறுகதைத் தொகுதிப் போட்டியில் அதி சிறந்த படைப்புக்கான ஞானம் விருது (2003)எ;று பல பரிசில்களைப் பெற்றவர்.
ஞானம் வெளியீடாக 2004 இல் வெளியான ‘ஏன் பெண்ணென்று...’ என்ற இவரது சிறுகதைத் தொகுதி 2003இல் ஞானம் விருது பெற்ற நூலாகத் தெரிவுசெய்யப்பட்டது.
‘நவீனத்துவ உள்ளியல்புகளை நேர்த்தியாக உள்வாங்கி, இயற் பண்பியலின் நல்ல அம்சங்களையும் மனதிலிருத்தித் தனக்கென ஒரு தனிப்பாணியை அமைத்த ஆக்க ஆளுமையுடைய படைப்பாளி.  அவரது படைப்புக்களில் நாம் வாழும் சமூகத்தின் எரியும் பிரச்சனைகள், சமகாலப் போர்ச்சூழலின் அவலங்கள், பெண்ணியம் ஆகியவற்றை அழகாகக் கையாண்டுள்ளார். விடுதலை வேண்டி நிற்கும் அமுக்கப்பட்ட குரலின் விழிப்பு ஓசை கேட்கிறது. அது இன விடுதலையிலிருந்து பெண் விடுதலை வேண்டி நிற்கும் பெரும் பரப்பில் எதிரொலிக்கின்றது. ஆக்க அமைதியுடன் படைக்கப்பட்ட இவரது ஆக்கங்கள் உருவச் செழுமையுடன் கலா நுட்பமும் கொண்டவையாக அமைந்துள்ளன. உணர்ச்சிகளின் மென்மையான வெளிப்பாடு இவரது கதைகளின் உயிர்நாடி. வாழ்க்கைக் கோலத்தின் முரண்பாடுகளை இவர் அணுகும் முறை அற்புதமானது. சொற்சிக்கனம் கவிதை நடையின் சாயல், குறியீடுகளின் பயன்பாடு, சொல்லாமல் சொல்லும் உத்தி, ஆகிய சிறப்புக்களுடன், சிறுகதைப் பிரக்ஞையுடன் சாரங்காவின் படைப்புக்கள் அமைந்துள்ளன’ என்று புலோலியூர் க. சதாசிவம் அவரது சிறுகதைகள் குறித்துக் கூறுகின்றார்.
தஷந்தி சங்கர்
தஷந்தி சங்கர்
கொழும்பு திருக்குடும்பக் கன்னியர் மடத்தில் தனது கல்வியை மேற்கொண்ட தஷந்தி சங்கர் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பட்டதாரி ஆவார். தமிழ்மொழியில் மிகுந்த பற்றும் தமிழ் படைப்புக்களை வியந்து ரசிக்கும் மனமும் கொண்ட தஷந்தி சங்கர் இளவயது முதல் கவிதை நிகழ்வுகளில் தன் திறனால் அங்கீகாரம் பெற்றவராவார். இலகு தமிழில் இனிய மொழி நடையில் பலவேறு பார்வைகளில் ஆழமான கருத்துக்களோடு ‘என் விரல்களின் தவம்’ என்னும் தனது முதலாவது கவிதைத் தொகுப்பை 2008இல் வெளியிட்டவர். 
   
கவிச்சுவை குன்றாமல் புதிய பரிமாணங்களைப் புகுத்தி, கவிதைகளில் புதுமை படைக்கும் முயற்சியில் இவர் தொடர்ந்தும் தனது தமிழ்ப் பணியை ஆற்றி வருகின்றார்.

ரோகினி சிவபாலன்  
தொலைக்காட்சி நாடகமான ‘சித்திரா’ என்ற தொடர் நாடகத்தின் மூலம் மக்களிடையே அறிமுகமான ரோகினி சிவபாலன் அந்நாடகத்தின் சிறந்த நடிகையாகப் பேசப்பட்டவர். சமய யாத்திரைகளை மேற்கொண்டு ‘கடவுளும் குருவும் என் கண்ணோட்டத்தில்’ , காஷ்மியரில் இருந்து கன்னியா குமரிவரை’ ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டவர். தொடர்ந்தும் சமய யாத்திரைகளை மேற்கொள்வதிலும், சமய நூல்களை எழுதுவதிலும் முனைப்பாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்.
பிறேமலதா பஞ்சாட்சரம்
லண்டனில் ஹரோவில் வாழ்ந்துவரும் பிறேமலதா பஞ்சாட்சரம் ஈழத்தின் யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பதியில் அமைந்த சப்பச்சிமாவடி சாவகச்சேரி என்னும் இடத்தைச் சேர்ந்தவர். 
   
கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சட்டத் துறையில் மேற்படிப்பை மேற்கொண்ட பிறேமலதா லண்டனில் சட்ட நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகின்றார். புதுக்கவிதைகளை எழுதுவதில் நிறைந்த ஆர்வம் கொண்ட பிறேமலதா ‘தாய்மேல் ஆணை’ என்னும் கவிதைத் தொகுப்பை 2004ம் ஆண்டில் வெளியிட்டவர்.

நிதர்சனா ஜெகநாதன்
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட நிதர்சனா ஜெகநாதன் 2000ஆம் ஆண்டு புலம்பெயர்ந்து லண்டனில் வசித்து வருகின்றார். ‘லண்டன் தமிழ் நிலையத்தின்’ மாணவியான நிதர்சனாவின் இளமனதில் தாய்நாட்டு நினைவுகளும் அன்றைய வாழ்வும் நெஞ்சில் உதிர்த்தபோது கவிதை மழையாகி நெஞ்சை நனைத்தது என்கின்றார். லண்டன் தமிழ் நிலையத்தின் அதிபராகச் செயற்பட்ட கலாநிதி நித்தியானந்தன் அவர்களால் ‘இளம் நினைவுகள்’ என்ற இவரது முதல் கவிதைத் தொகுப்பு 2004 ல் வெளியிடப்பட்டது.
சமிஸ்ரா சிவக்குமார்
லண்டன் கிறீன்விச் பல்கலைக்கழகத்தின் Business  Administration  துறைப் பட்டதாரியான சமிஸ்ரா சிவக்குமார் ‘லண்டன் ஸ்ரீ மீனாட்சி நடனப் பள்ளியில்’ ஸ்ரீமதி சாந்தா அன்னபபூரணி அவர்களிடம் பரதநாட்டியக் கலையைப் பயின்று அரங்கேற்றம் கண்டுகொண்டவர். ஸ்ரீ பிரகாஷ் ஜலகுடி, சித்ரா விஸ்வேஸ்வரன் போன்ற பிரபல நாட்டிய ஆசிரியர்களிடம் மேலும் பயின்று நாட்டியத்தின் நுணுக்கங்களைப் புடம்போட்ட சமிஸ்ரா சிவக்குமார் மிருதங்க மேதை காரைக்குடி கிருஷ்ணமூர்த்தியிடம் நட்டுவாங்கத்தைக் கற்றுக்கொண்டவர். 2012 ஆம் ஆண்டில் ‘நாட்டிய அலங்காரம்’ என்ற நாட்டிய நூலை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டுள்ளார். பந்த நல்லூர் பாணியில் தனது நாட்டிய வெளிப்பாடுகளை மேற்கொண்ட சமிஸ்ரா சிவக்குமார் லண்டன் மேடைகளில் தனது நாட்டியத் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடவேண்டியதொன்றாகும்.
ஜெயந்தி யோகராஜா
ஜெயந்தி யோகராஜா
பரதநாட்டியக் கலையை இலங்கையில் புகழ்பெற்ற ஸ்ரீமதி லிலா நாராயணனிடமும், பின் கலாஷேத்திரா, அடையாறு லட்சுமணனிடமும் கற்றுத் தேறிய ஸ்ரீமதி ஜெயந்தி யோகராஜா 1982 ம் ஆண்டு அனைத்து இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட தனிநடனப் போட்டியில் முதலிடத்தைப் பெற்றவராவார். ‘பரத இலக்கணம்’ , ‘நாட்டிய விலாசம்’ ஆகிய இரு நாட்டிய நுணுக்கங்கள் பற்றிய நூல்களை  எழுதி வெளியிட்ட   இவர் ‘நாட்டியக் கிரியா’ இறுவெட்டையும் வெளியிட்டவர். தற்போது நெதர்லாந்து லண்டன் போன்ற நாடுகளில் நாட்டிய ஆசிரியையாகப் பணிபுரிந்துகொண்டிருக்கிறார். 
நவஜோதி ஜோகரட்னம்
நவஜோதி ஜோகரட்னம்
ஜோகினி, மாஜிதா ஆகிய புனைபெயர்களில் எழுதிவரும் நவஜோதி ஜோகரட்னம் யாழ்ப்பாணம் இளவாலைக் கொன்வென்டின் வார்ப்பு. ‘எனக்கு மட்டும் உதிக்கும் சூரியன்’ என்ற 2005ல் வெளிவந்த இவரது கவிதைத் தொகுப்பு லண்டனில் ஒரு ஈழத்துப் பெண்படைப்பாளி எழுதி வெளியிட்ட முதலாவது தமிழ் கவிதைத் தொகுப்பு எனப் பலரது பாராட்டைப் பெற்றது. லண்டனில் வெளிவரும் பத்திரிகைகள், சஞ்சிகைகள், இலங்கையில் வெளிவரும் வீரகேசரி, தினகரன், தினக்குரல் போன்ற பத்திரிகைகள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள் போன்றவற்றில் இவரது ஆக்கங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. சர்வதேச சிறுகதைப் போட்டிகளில் நான்கு சிறுகதைகளுக்குப் பரிசில்கள் கிடைத்துள்ளன. CeeI TV  தரிசனம், ஜி.ரி.வி போன்ற தொலைக்காட்சிகளிலும், ETBC, Sunrise, Kishmath, Lonldon tamil Radio போன்ற வானொலிகளிலும் அறிவிப்பாளராகவும், நிகழ்ச்சித்தொகுப்பாளராகவும் கடமை புரிந்த அனுபவம் கொண்டவர். தற்பொழுது குயு வுஎ (இணையத் தொலைக்காட்சியில்) தொடர்ந்தும் தனது பங்களிப்பை வழங்கிக்கொண்டிருக்கிறார். கலை, இலக்கியம், அரசியல்போன்ற பல துறைகளில் 275 இற்கும் மேற்பட்ட நேர்காணல்களைச் செய்துள்ளார். 

நன்றி - பதிவுகள்
...மேலும்

Apr 27, 2014

பெண்கள் விவகார அமைச்சர், வெண்கலக்கடையில் புகுந்த யானையா? - சாந்தி சச்சிதானந்தம்


ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் பெண்களுக்கெதிரான சகலவித பாகுபாடுகளையும் களையும் சமவாயத்தினை கொண்டு வந்த பொழுது எமது இலங்கை அரசு அதற்குக் கையொப்பமிட்ட அரசுகளில் முன்னணியில் திகழ்ந்தது. சீடோ எனப்படும் இந்த சமவாயத்தில் 1981ஆம் ஆண்டு கையொப்பமிட்டதோடு, அதன் எதிரொலியாக 1984ஆம் ஆண்டு இலங்கையில்பெண்கள் விவகாரங்களுக்கென ஒரு விசேட அமைச்சு முதன் முதலாக ஸ்தாபிக்கப்பட்டது. இவ்வமைச்சுக்கு பெரியளவில் நிதிகள் ஒதுக்கப்படாவிட்டாலும் அது வருடந்தோறும் ஏதோ தனக்கு முடிந்தளவில் பெண்களின் உரிமைகளின் முன்னேற்றம் குறித்து சில செயற்பாடுகளை மேற்கொண்டது என்று கருதலாம்.

இதன் தலைமையின் கீழ் 1993ஆம் ஆண்டு இலங்கையில் முதன் முதலாக பெண்களின் உரிமைப் பிரகடனங்களை வெளிப்படுத்தும் பெண்கள் பட்டயம் எங்கள் அரசினால் அங்கீகரிக்கப்பட்டது. இப்பட்டயத்தினால் ஏற்பட்ட நன்மைகளோ அளப்பரியன. அதுவரை பெண்களுக்கு பாரபட்சமான குடியுரிமைச் சட்டங்களே வழக்கில் இருந்து வந்தன. உதாரணமாக, ஒரு இலங்கைப் பிரஜையான ஆண் வெளிநாட்டுப் பெண்ணொருத்தியை மணம் முடித்தால் அப்பெண்ணுக்கு இலங்கைக் குடியுரிமை உடனடியாக வழங்கப்பட்ட அதேநேரத்தில், ஒரு இலங்கைப் பிரஜையான பெண் வெளிநாட்டைச் சேர்ந்த ஆணை மணம் முடித்தாலோ அந்த ஆணுக்கு பிரஜாவுரிமை வழங்கப்படவில்லை. அதாவது, பெண்களின் பிரஜாவுரிமை ஒரு ஆணின் மூலமாகவே கிடைக்கப் பெறுகின்றது என்னும் தந்தையுரிமைவாத சித்தாந்தத்தின் அடிப்படையில் உருவான சட்டம் இது. இந்தச் சட்டம் அன்று அரசின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டு மாற்றப்பட்டது. இதன் பயனாகவே இன்று நூற்றுக்கணக்கான பெண்கள் தங்கள் வெளிநாட்டுக் கண்வன்மார்களுக்கு பிரஜாவுரிமை பெற்றுக்கொடுக்க முடிகின்றது. அது மட்டுமல்லாது, 1995ஆம் ஆண்டு எங்கள் பழமையான பாலியல் வன்முறை தொடர்பான சட்டங்கள் சீர்திருத்தப்பட்டு குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்கும் வகையில் மாற்றப்பட்டதும் இப்பட்டயத்தின் உதவியினாலேயே. இப்படியே 2004ஆம் ஆண்டும், 2005ஆம் ஆண்டும் குடும்ப வன்முறைத் தடைச்சட்டமும், தொடர்ந்து பொதுவிடங்களில் பாலியல் தொந்தரவுத் தடைச்சட்டமும் கொண்டு வரப்பட்டன. இவற்றைத் தொடர்ந்து பல வருடகாலம் முயன்று, (ஏனெனில் இக்காலகட்டத்திற்குப் பின் தற்போதைய மஹிந்த ராஜபக்‌ஷ அரசு ஆட்சிக்கு வந்து விட்டது) இலங்கையின் தேசிய மனித உரிமைகள் செயற்திட்டம் தயாரிக்கப்பட்டபொழுது அதற்குள்ளும் பெண்கள் உரிமைகள் தொடர்பான சில செயற்திட்டங்களை பெண்கள் அமைச்சு உட்புகுத்தியது.

இவ்வாறுரேணுகா ஹேரத், காலஞ்சென்ற ஸ்ரீமணி அத்துலத் முதலி, அமரா பியசீலி இரத்நாயக போன்ற பெண் அரசியல்வாதிகள் பெண்கள் விவசார அமைச்சர்களாக நியமிக்கப்பட்டதன் பயனாக இத்தனை நன்மைகளும் எம்மை வந்தடைந்தன எனக் கூறலாம். இப்படியிருக்கும் காலத்தில் கடந்த தேர்தலின் பின்னர்தான் முதன் முதலாக ஒரு ஆண் அரசியல்வாதி திஸ்ஸ கரலியத்த பெண்கள் விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார். பெண்கள் அமைச்சர் ஓர் ஆணா என்று எம்மில் பலர் புருவம் உயர்த்தினாலும், பெண்கள் உரிமைகளை பெண்கள் மட்டும்தான் முன்னேற்ற வேண்டும் என்றில்லையே என்பதனால் அதனை ஏற்றுக்கொண்டோம். அன்று ஆரம்பித்தது கலம்பகம்.

தனக்கு ஆறு சகோதரிகளும் ஒரு மனைவியும் இரண்டு மகள்மாரும் இருப்பதனால் பெண்கள் விவகார அமைச்சராக சகல தகுதிகளும் தனக்கு இருப்பதாக கூறிக்கொண்டு வந்தார் இவர். போச்சடா என நாம் தலையில் கைவைக்க முதலேயே “பெண்களை உயர் பதவிகளில் அமர்த்தக்கூடாது. ஏனெனில், அவர்கள் பொறாமை பிடித்தவர்கள் என்பதனால் தமக்கு அடுத்தவர்களை ஒருபோதும் முன்னேற விட மாட்டார்கள்” என்று திருவாய் மொழிந்தார். உடனேயே இலங்கையின் முன்னணி பெண்கள் அமைப்புக்களெல்லாம் இக்கூற்றுக்கு ஆட்சேபணை தெரிவித்து அறிக்கைகள் இட்டன. இவ்வறிக்கைக்கு ஒருவித பதிலும் இன்றிப் போகும் காலத்தில் திரும்ப “சீடோ சமவாயத்தையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், அதன் பல அம்சங்கள் எங்கள் நாட்டின் கலாசாரத்திற்கும் மதக்கொள்கைகளுக்கும் எதிராகவுள்ளன” என்று போட்டார் ஒரு போடு. இதற்கும் பெண்கள் அமைப்புக்கள் கிளர்ந்தெழுந்து சகல நாடுகளும் ஏற்றுக்கொண்டிருக்கும் இப்பட்டயத்தினை எங்கள் அரசு இத்தனை வருடங்களுக்குப் பின்பு விமர்சிப்பதன் காரணங்களைக் கோரின. அதற்கும் ஒரு பதிலுமில்லை. ஆனால், அதற்காக எங்கள் அமைச்சருடைய வாயும்ஓய்ந்தபாடில்லை. “பெண்கள் உரிமைகள் பற்றிப் பேசுகின்ற என்.ஜி.ஓ. பெண்கள் எல்லோரும் பத்தினிகளல்ல” (அதாவது தமது கணவர்களுக்கு விசுவாசமாக இருக்கும் பெண்களல்ல)என்று ஒரு பகிரங்க செவ்வியில் சொன்னார். கடந்த நவம்பர் மாதம் இதற்கு ஆட்சேபணை தெரிவித்து பெண்கள் அமைப்புக்கள் ஒன்று கூடி 168 பேர் கையொப்பமிட்ட ஒரு அறிக்கையினை ஒரு பத்திரிகையாளர் மாநாட்டினூடாக வெளியிட்டன. இந்த அறிக்கையில் திஸ்ஸ கரலியத்தவின் இராஜிநாமாவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கும் அரச தரப்பில் இருந்து ஒரு பதிலோ நடவடிக்கையோ இல்லை. இதைக்கொண்டு இவருடைய கூற்றுக்களை அரசு ஆதரிக்கின்றது என்றே நாம் அனுமானித்தோம். இக்காரணத்தினால் இவருடைய ஆட்டம் இன்னமும் தொடரப்போகின்றது என்பது தெளிவாகியது.

நாம் பயந்தபடியே அடுத்த கணையுடன் இப்பொழுது வந்திருக்கிறார் அமைச்சர். இலங்கையில் பெண்கள் மீதான வன்முறைகள் சகல பிரதேசங்களிலும் அதிகரித்திருக்கின்றன என்பது வெள்ளிடை மலை. இதற்கெதிராக காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்கின்ற கோரிக்கைகள் அரசின் மீதான அழுத்தங்களாயின. இதன் பிரதிபலிப்பாக தன்னால் உருவாக்கப்பட்ட புதிய பாலியல் வன்முறைத் தடைச் சட்டத்தினை அமைச்சர் இப்பொழுது அறிவித்திருக்கின்றார். எனக்கு அதிகாரம் தரப்பட்டால் ஒவ்வொரு பாலியல் வன்முறைக் குற்றவாளியையும் தூக்கில் தொங்கவிடுவேன் என்னும் அறிமுகத்துடன் தனது சட்டத்தின் அம்சங்களை நாட்டுக்கு முன்வைத்தபொழுது உண்மையில் அதிர்ச்சியடைந்தோம். பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றவாளியை விரும்பினால் மணம் முடிக்கும் தெரிவு பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வழங்கப்பட வேண்டும் என்றும் – அப்பெண் 18 வயதுக்குக் குறைவானால் அவள் அவ்வயது எட்டும் வரையில் குற்றவாளி காத்திருக்கவேண்டும் என்றும் – இச்சட்ட வரைபில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அமைச்சு முழுமையாக வரைந்த பின்னர் அமைச்சரவைக்கும் நாடாளுமன்றத்துக்கும் அவற்றின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படுமாம். அதன் பின்பு சட்டமாக்கப்படுமாம்.

1980களின் ஆரம்பக் கட்டம் வரை எமது தமிழ் சினிமாவிலும் பாலியல் வன்முறை புரிந்த குற்றவாளியை பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மணம் முடித்து வைக்கும் அபத்தம் நிகழ்ந்து கொண்டிருந்தது. ஆனால், அந்தக் கதையைத் துணிந்து இப்பொழுது 21ஆம் நூற்றாண்டில் சொல்வார்களா என்பது சந்தேகம். இப்படி தமிழ் சினிமாவே நிராகரிக்கத் தொடங்கியிருக்கின்ற விடயத்தை எமது அமைச்சர் அனாயாசமாகக் கூறிவிட்டார். இங்கு பல கேள்விகள் எழுகின்றன. பாலியல் வன்முறைக் குற்றவாளி தன்னால் குற்றமிழைக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளலாமென்றால் அவன் இழைத்தது குற்றமேயில்லையென்றல்லவா ஆகின்றது? இது ஆண்களின் பண்பாடு என்பது போல அதற்கு சமூக அங்கீகாரம் வழங்கும் செயலாகவல்லவா இருக்கின்றது? இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் இருக்கிறார்கள். அவர்களின் கதி என்ன? ஒரு பண்பாடற்ற பயங்கரக் குற்றவாளியை மணம் செய்துகொள் என எந்தப்பெண்ணுக்கும் நாம் கூற இயலுமா? இலங்கையில் பாலியல் வன்முறைகள் பெருகுவதற்கு முக்கிய காரணம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை என்பதாலாகும். நீதிமன்றங்களில் எங்களுடைய வழக்குகளை எடுத்து ஆராய்ந்து பார்த்தால் இந்த உண்மைகள் விளங்கும். இப்பொழுதே சட்டத்தில் காணப்படுகின்ற ஓட்டைகளினாலும், அரசியல் தலையீடுகளினாலும் குற்றவாளிகள் தப்பித்துப் போக, அவற்றிற்கு மேலதிகமாக பாதிக்கப்பட்ட பெண்ணை மணம் முடிக்கும் சலுகையும் குற்றவாளிக்கு வழங்கப்படவிருக்கின்றது. பாலியல் வன்முறை புரிந்த ஒருவன் எமது சமூகத்தால் விலக்கப்பட்ட குற்றவாளியாக மாற்றப்பட்டால் மட்டுமே இக்குற்றத்தினை இல்லாதொழிக்கலாம். அவ்வகையான சட்டங்களைக் கொண்டு வருவதற்கு இந்த அரசு தயாரில்லை என்பதைத்தான் இது எமக்கு உணர்த்தியது.

பௌத்த மதகுருமார், கிராமிய முதலாளித்துவ வர்க்கம் என ஒரு நிலப்பிரபுத்துவ பண்பாடு கொண்ட ஆதரவுத் தளத்தில் உருவான கட்சி ஸ்ரீலங்கா சதந்திரக் கட்சியாகும். அதிகாரப்பரவலின் அடிப்படையிலான நவீன ஜனநாயகக் கோட்பாடுகளைக் குறைந்தபட்சம் புரிந்து கொள்ளவேனும் முடியாமல்மனித உரிமைகள் கோட்பாடுகளை பரணில் ஏற்றி வைத்தும், இதுகாலவரையும் கட்டிக் காத்து வந்த பெண்கள் உரிமைகளுக்கு வேட்டு வைத்தும் அது தனது குணாம்சங்களைத் தெளிவாகக் காட்டிக்கொண்டு வருகின்றது. இந்த அரசின் தன்மைகளை உணர்ந்து, பெண்கள் தங்களது போராட்டங்களை தனியே பெண்களின் உரிமைப் போராட்டமாக மட்டும் பார்க்காது இந்நிலப்பிரபுத்துவ ஆட்சிக்கெதிரான பொதுப் போராட்டமாக மாற்றாத வரையில் இப்படியே பெண்களின் உரிமைகளும் படிப்படியாக வேரறுக்கப்படும் என்பது நிச்சயம்.

அடி என்னடி உலகம், இதில் எத்தனை கலகம்

தினக்குரல் பத்திரிகைக்காக சாந்தி சச்சிதானந்தம் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.
...மேலும்

Apr 26, 2014

மணற்குன்று பெண் - ச.மதுசுதன்


கோபோ ஏப் | தமிழில் ஜி.விஜயபத்மா | பக்:351 | விலை: 220/- |
வெளியீடு: எதிர் வெளியீடு

பூச்சிகளை உணவுப் பொருளாக பயன்படுத்தும் ஜப்பான் சமூகம் அவைகளை வெறும் உணவுப் பொருளாக சுருக்கி விடாமல் மனித வாழ்வினூடாக அவைகளின் குணநலங்களை மனித நடவடிக்கைகளுக்கு பொருத்தி பார்க்கும் உளவியல் பழக்கம் ஜப்பான் இலக்கியத்துகுண்டான தனிச்சிறப்பாகும். சிக்மன்ட் பிராய்டின் உளவியல் ஆய்வுகளில் மிகமுக்கியமாக கருதப்படும் இடிபஸ் காம்ப்ளக்ஸ் (Oedipus) எனும் உளவியல் சிக்கலுக்கான மனோநிலைக்குல் அகப்பட்ட பூச்சி ஆராய்ச்சியாளன் தனது ஆராய்ச்சிக்காக மணல் பகுதிக்கு பயணிக்கிறான். ஒரு பூச்சி ஆராய்ச்சியாளன் தனது ஆராய்ச்சிக்காகவும் எதிர்வரும் பூச்சிகளை பற்றிய மாநாட்டில் புதியவகை பூச்சிகளை கண்டுபிடித்து பெயர் பெற வேண்டும் என்ற வேட்கையினாலும்  தன் குடும்பத்தை விட்டு ஒரு கடல் கரை கிராமத்திற்கு பயணிக்கிறான். அங்கே அவனுக்கு ஏற்படும் எதிர்பாரா சம்பவங்களினால் ஒரு விதவை பெண்ணிடம் சேர்க்கப்படுகிறான். அவர்களுக்குள் நடைபெறும் விவாதங்கள், உடலியல் சார்பான ஈர்ப்பு, தப்ப நினைக்கும் அவனின் முயற்சி என சுவாரஸ்யங்களினூடாக பயணிக்கிறது நாவலின் கதைக்களம்.

கடற்கரையின்  மணற்பரப்பில் புதியவகை பூச்சிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கடல் கரை கிராமத்திற்கு வரும் பூச்சி ஆராய்ச்சியாளன் இரவானதால் அங்கேயே தாங்கியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் கிராம பெரியவர்களின் ஏற்பாட்டில் மணல் புயலில் இருந்து தப்பிக்க குன்றுகளாய் கட்டமைக்கப்பட்டிருக்கும் குன்றிக்குள் கயிற்றின் வழியே அனுப்பப்படுகிறான்.அங்கே கணவனையும் பெற்ற பிள்ளைகளையும் மனற்புயலுக்கு கொடுத்துவிட்ட இளம் விதவை பெண்ணான ‘நிக்கி’ ஒற்றை ஆளாக தனிமையில் வசித்து  வருவது கண்டு அதிர்ச்சியுறும்  அவன் இனி அவளோடுதான் நாட்களை கழிக்க வேண்டும் என்பதை எண்ணி சலிப்புறும் நிலையில் தனக்கொரு துணை வந்துவிட்ட உற்சாகத்தில் முன்பைவிட ஈடுபாட்டுடன் அவளின் அன்றாட பணிகளை குன்றுகளுக்குல்லேயே செய்யத் துவங்குகிறாள் நிக்கி.

கிட்டத்தட்ட தாம் சிறைபடுத்தப்பட்டுள்ளோம் என்பதை தாமாக உணரும் இவன் ஏன்  தன்னை சிறை வைத்திருக்கிறீர்கள் என்ற கேள்வியில் துவங்கி தன்னைப்போல் எத்தனைபேர் இங்கே சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அவளிடம் கேட்டு தெரிந்து  கொள்வதோடு அந்த   கிராமத்தை நினைத்து அச்சமுறும் அதே வேளையில் கிராமவாசிகளின் செயல்களை நினைத்து வருத்தப்படவும் செய்கிறான்.

துவக்கத்தில் விதவையாக பார்த்த நிக்கிக்கும் அவனுக்குமான இடைவெளி விவாதங்களினால் நெருக்கமாகி உடலால் சங்கமிக்கும் நிலை வரை கடந்து ஆஸ்பரின் மாத்திரையால் அவளை மயக்கமுற செய்து கயிற்றால் கட்டிபோட்டுவிட்டு தப்பித்து செல்லும்போது எதிர்பாராவிதமாக புதைகுழியில் அகப்பட்டு  மீட்கப்படும் அவன் எந்தவித தண்டனையுமில்லாமல் மீண்டும் கிராம நிர்வாகத்தால் அதே குன்றிர்க்குள் அனுப்பப்டுகிறான். எவ்வித கோவத்தையும் வெளிக்காட்டாமல் அப்போதும் அவனிடம் முன்பைப்போல் பழகும் அவள் அவனை தன் துனையாக்கியதில் வெற்றி  கொண்ட களிப்பில் திளைத்திருக்க  இவனோ சமயம் பார்த்து மீண்டும் தப்பிக்க முயற்சி செய்து வருகிறான். அப்படியொரு  முயற்சியின்போது தான் மணற்பரப்பில் தண்ணீர் சேகரிக்கும் முறையை கண்டுபிடிக்கிறான்.

தன்னுடைய இந்த கண்டுபிடிப்பு மணல்  கிராமத்தின் தண்ணீர் பஞ்சத்தை போக்கும் என்று நினைத்து கொண்டிருக்கையில் இவனால் கர்ப்பமான அவள் பிரசவத்திற்காக ஆழ்துளையின் வழியே கயிற்றின் உதவியோடு மேல் நோக்கி சென்று கொண்டிருக்க……  இவனோ  தனிமையின் தவிப்பிலும் அவளை பிரிந்த ஏக்கத்திலும் அவளையே பார்த்துகொண்டிருக்க இருவரின் ஆசையும் எதிர்புறமாக நடந்தேறி கனத்த பாரத்தையும் மௌனத்தையும் நமக்குள்  விட்டு சென்று நிறைவடைகிறது நாவல்.

தனது நிரந்தர வசிப்பிடத்தை விட்டு பூச்சிகள் பற்றிய ஆய்வுக்காக புதியதொரு மனற்பகுதிக்கு செல்லும்  ‘நிகில் ஜேம்பி’  எதிர்பாரா விதமாக குழப்பமான சூழலுக்குள் தள்ளப்படுகிறான். அங்கே அவனின் இருப்பு கேள்விக்குள்ளாகி அவனது சுதந்திரம் பறிக்கப்பட்டு  ஒரு குறிப்பிட்ட சூழலுக்குள் அவன் விருப்பமில்லாமல் வாழ நிற்பந்திக்கப்படுகிறான். இருப்பின் மீதான வெறுப்பு அவநம்பிக்கை தோல்வி மனப்பான்மை என எல்லாம் சேர்ந்து அவனை சூழ்நிலை கைதியாக்கிவிடுகிறது. இதுவே இருத்தலியல் கோட்பாடு (Existentialism) எனப்படுவதால்  இது ஒரு பின்நவீனத்துவ நாவலாக அடையாளப்படுத்தப்படுகிறது.

அவர்களின் அன்றாட வாழ்விலும் இரவுநேர மனலப்புரப்படுத்தும் பணிகளின் போதும் உரையாடல்களின் போதும் தன்னைமறந்து உடல் சார்ந்த வேட்கையில் கிளைத்திருக்கும் போதும் கடற்கரை மணலால் சூழப்பட்ட குன்றுகளுக்கான வாழ்க்கை முறை தான் அவர்களின் அன்றாட பனி என்பதால் உஷ்ணத்தின் தாக்கம் உடல் வியர்வையை உற்பத்தி செய்து அவர்களை தினமும் குளிப்பாட்டுவதும் இரவு நேரங்களின் போது நிர்வாணமாக உறங்கும் அவர்களின் பழக்கம் மணலோடு தொடர்பு கொண்டிருப்பதால் நாவலெங்கும் தவிர்க்க இயலாதவாறு வியர்வையும் மணலும் பரவிக்கிடக்கிறது.

1962ல் வெளியான இந்நாவல் ‘ஹிரோஷி தோரிகாஹா’ எனும் ஜப்பானிய திரைப்பட இயக்குனரால்  படமாக எடுக்கப்பட்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான  விருதை பெற்றுள்ளது.20 மொழிகளுக்கும் மேல் மொழிபெயர்க்கப்பட்டுள்ள  இந்நாவல்  பென்சில்வேனிய பல்கலைகழகத்தின்  ஜப்பானிய மொழி ஆராய்ச்சித் துறைக்கான பேராசிரியர் ‘ஈடேல் சாண்டர்ஸ்’ சால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அமரிக்காவில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. முதல் மொழிபெயர்ப்பு ன்பது தெரியாதவாறு மிகைபடுத்தப்படாத  வார்த்தைகள்  கொண்டு கதையின் சூழலை விஞ்சிடாதவாறு நர்த்தகி திரைப்பட இயக்குனர் ஜி.விஜயபத்மா அவர்களால் இந்நாவல் தமிழில் மொழியாக்கம் பெற்றிருக்கிறது.

நன்றி - மாற்று
...மேலும்

Apr 25, 2014

பார்ப்பன உளவியல் கட்டமைக்கும் பெண்ணடிமை - விடுதலை இராசேந்திரன்


பார்ப்பனியம் - மதத்தின் பெயரால் கட்டமைத்த சமூக உளவியல்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்களை பெண்ணடிமைக் கண்ணோட்டத்திலேயே பார்க்கச் சொல்கிறது. மேலை நாடுகளில் பெண்கள் மீதான குற்றங்கள் மீதான பார்வையிலிருந்து இது வேறுபடும் புள்ளியாக இருப்பதை ஆழமாக பதிவு செய்கிறது, இக்கட்டுரை.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள், குறிப்பாக பாலியல் வன்முறைகள் குறித்து இன்று அதிகம் விவாதிக்கப்படுகிறது. பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளும், வன்புணர்வுகளும் இந்தியாவில் மட்டும் நடக்கவில்லை. ஆனால் பிற நாடுகளில் நடப்பதற்கும் இந்தியாவில் நடப்பதற்கும் அடிப்படையிலேயே பெரிய வேறுபாடு உள்ளது.

இன்று இந்தியாவெங்கும் முதன்முதலாக வன் புணர்வை ஒரு விவாதப் பொருளாக மாற்றியிருக்கும் தில்லி கொடுமையையே எடுத்துக் கொள்வோம். அந்த கொடூரச் செயலில் ஈடுபட்டவர்கள், பாதிக்கப்பட்ட பெண் அழகாக இருந்தாள்; அவள் அழகில் தூண்டப்பட்டு அவளை வன்புணர்வு செய்தோம் என்று சொல்லவில்லை. அல்லது அவள் கவர்ச்சிகரமாக ஆடை அணிந்திருந்தாள்; அதனால் தூண்டப்பட்டோம் என்றுகூட சொல்லவில்லை. மணமாகாத அப்பெண் இரவு நேரத்தில் தனியாக ஒரு ஆணுடன் எப்படி நடமாடலாம்? அவளுக்கு பாடம் புகட்டவே அவளை வன்புணர்வு செய்தோம் என்று கூறினர். அண்மையில் சென்னையில் பலியான உமா மகேஸ்வரி விசயத்திலும் அதுவே நடந்துள்ளது. இரவில் தனியாக நடமாடினார்; கேலிசெய்யப்பட்ட போது, துணிச்சலுடன் அந்த ஆண்களை செருப்பால் அடித்திருக்கிறார். அதற்கு பழி வாங்கவே அவர் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூறியுள்ளனர். இப்படியான காரணங்களை எந்த நாட்டிலும் கேட்க முடியாது.

கயர்லாஞ்சியில் சுனிதா வன்புணர்வு செய்யப் பட்டது குடிபோதையிலோ அல்லது நொடிநேர வெறியிலோ அல்ல. அது ஒரு பெருங்கூட்டத்தால், ஊரின் பொது வெளியில் திட்டமிட்டு நடத்தப்பட்ட வெறியாட்டம். அந்த வெறியை ஊட்டியது ஜாதி. ஆதிக்க ஜாதி ஆண்கள் பாலியல் வன்முறையில் ஈடுபட, ஆதிக்க ஜாதிப் பெண்கள் சுற்றி நின்று தூண்டிவிட நடத்தப்பட்ட அந்த குற்றச் செயலை செய்வதற்கான துணிவை அவர்களுக்கு அளித்தது இந்த சமூகத்தின் ஜாதிய கட்டமைப்பும் அதை காத்து நிற்கும் அரசமைப்பும். இப்படியான ஒன்றையும் நீங்கள் வேறு எந்த நாட்டிலும் கேட்கவோ பார்க்கவோ முடியாது.

வாசாத்தியிலும், அந்தியூரிலும், சத்தியமங்கலம் காடுகளிலும் கேட்ட பெண்களின் ஓலம், அதிகாரத்தின் அடக்குமுறை வன்முறையாலேதான். அதிகார அத்துமீறல்களும், சீருடை ரவுடிகளின் பாலியல் வன்கொடுமைகளும்கூட பிற நாடுகளில் நடக்கக்கூடும். ஆனால், இங்கு நிகழ்ந்தவற்றில் பாதிக்கப்பட்டப் பெண்கள் அனைவரும் பழங்குடியின, ஒடுக்கப்பட்ட பெண்கள் என்பது தற்செயலானது அல்ல. மணிப்பூரிலும், பிற வட கிழக்கு மாநிலங்களிலும்கூட அதிகாரத்தின் கொடிய கரங்கள் நெறிப்பது பழங்குடியினப் பெண்களையே.

இங்கு மட்டும்தான் குற்றவாளியைவிட பாதிக்கப் பட்டவர்களுக்கு குற்ற உணர்ச்சி ஊட்டப்படுகிறது. தான் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதை வெளியேச் சொல்வது தனக்குத்தான் அவமானம் என்ற சிந்தனை ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஆழ விதைக்கப்பட்டுள்ளது. அப்படி ஒரு வேளை துணிந்து அப்பெண் வெளியே சொன்னால், சமூகம் அவளை விலக்கி வைக்கிறது. வசை பாடுகிறது. குற்றத்தை அவள் மீதே சுமத்துகிறது.

“தன்னை வன்புணர்வு செய்ய வந்தவர்களிடம் அப்பெண் அண்ணா என்று கெஞ்சியிருந்தால் அவள் தப்பித்திருக்கலாம்” - அசராம் பாபு, சாமியார்.

“இருபாலர் கல்வி நிறுவனங்கள் மூடப்பட வேண்டும். திருமணத்திற்கு முன்னால் உடலுறவு வைத்துக் கொள்வது தடை செய்யப்பட வேண்டும்., பெண்கள் சரியான முறையில் உடை அணிய வேண்டும்.” - ஜமாத்-ஈ-இஸ்லாம்-ஹிந்த் தலைவர்.

“பாரதத்தைவிட இந்தியாவில்தான் அதிக வன்புணர்வுகள் நடக்கின்றன” - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்.

“ஜாதகம் சரியில்லாததால்தான் வன்புணர்வுக்கு ஆளாகிறார்கள்” - சட்டிஷ்கர் உள்துறை அமைச்சர்.

மேலே உள்ளவை தனி மனிதர்களின் கருத்துகள் அல்ல. இச்சமூகத்தின் எண்ணவோட்டம். ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் இந்த எண்ணவோட்டத் திற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல. இந்த எண்ணவோட்டத்திலிருந்து அவர்கள் விலகாதவாறு இந்த சமூகமும் அதன் அங்கமாய் இருக்கிற ஊடகங் களும் மிக கவனமாக பார்த்துக்b காள்கின்றன.

1980களில் ‘புதிய பாதை’ என்றொரு படம் வெளியாகி சக்கை போடு போட்டது. அது அந்த இயக்குநரின் முதல் படமாக இருந்த போதும் பெரும் வெற்றி வாய்ப்பை பெற்றது. அதிலும் அதற்கான விளம்பரங்களில் “பெண்கள் கூட்டம் கூட்டமாக காண வரும் படம்” என்று பெருமையுடன் போட் டனர். அந்த படத்தின் கதை இதுதான். “ஒரு ரவுடி, ஒரு பெண்ணை அவளது திருமணத்திற்கு முதல் நாள் வன்புணர்வு செய்கிறான். இந்த செய்தியை அறிந்த மணமகன், இதை ஒரு விபத்தாக எடுத்துக் கொள்கிறேன். நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறுகிறான். ஆனால், அப்பெண் அதை மறுத்து அந்த ரவுடியை தேடிச் சென்று அவனையே திருமணம் செய்து, அவனை திருத்தி அவனுக்கு ஒரு குழந்தையை பெற்றுக்கொடுத்துவிட்டு இறந்து போகிறாள்.”

இக்கதை எண்பதுகளில் வந்ததுதானே என்பவர்களுக்கு..... 2004இல் வந்த படம் ‘தென்றல்’. அக்கதையின் நாயகி, தன்னைவிட வயதில் மிகவும் மூத்த ஒரு எழுத்தாளனை அவனுக்குத் தெரியா மலேயே விரும்புவாள். ஒரு கட்டத்தில், அவளை ஒரு பாலியல் தொழிலாளி என்று நினைத்து அந்த எழுத்தாளன் அவளிடம் உடலுறவு வைத்துக் கொள்வான். நாயகி அதை தனக்கு கிடைத்த பெரும் பேறாகக் கருதி, அவன் மூலம் உண்டான குழந்தையை பெற்று, வளர்த்து, அவனிடம் ஒப்படைத்துவிட்டு இறந்து போவாள்.” இரண்டு படத்திற்கும் பெரிய வேறுபாடு இல்லை.

வன்புணர்வு பற்றிய திரைப்படங்களின் சித்தரிப்பு மூன்றே விதம்தான். ஒன்று வன்புணர்வுக்கான முயற்சியின் இறுதிக் கட்டத்தில் நாயகன் வந்து காப்பாற்றி விடுவான். (ஆனால் நெடுநேரம் நடக்கும் அந்த முயற்சியின் அந்த இறுதிக் கட்டம் வருவதற்கு முன் காமிராவால் அப்பெண்ணை எவ்வளவு முடியுமோ அவ்வளவு வன்கொடுமை செய்து விடுவார்கள்) இரண்டாவது, வன்புணர்வு ஒருவேளை நடந்துவிட்டால், அப்பெண் இறந்து போவாள். நாயகன் பழிவாங்குவான். அல்லது திருந்துவன். மூன்றாவதுதான் மிக சிறப்பானது. வன்புணர்வு செய்தவனையே அப்பெண் ‘வெற்றிகரமாக’ மணம் முடிப்பாள்.

இந்த மூன்றாவது சித்தரிப்புக்குப் பொருள் வெகு எளிமையானது. ஒருவன் உங்களை அடித்து அவமானப்படுத்தி விட்டால், “ஒரு முதலாளிக்கு தான் அடிப்பதற்கும் அவமானப்படுத்துவதற்கும் உரிமை உள்ளது. அவன் உன்னை அடித்து விட்டதால் இனி அவன்தான் உன் முதலாளி. அவனிடம் வாழ்நாள் முழுவதும் அடிமையாக இரு” என்பதுதான்.

இப்படியான சித்தரிப்பும் வேறு எந்த நாட்டிலும் காண கிடைக்காத அற்புதம்.

இந்த சித்தரிப்புக்கு பண்பாடு என்று பெயராம். இருக்கட்டும். பண்பாடு என்றால் யாருடைய பண்பாடு? எதன் பண்பாடு? என்ற கேள்வி எழுகிறது.

ண்பாட்டை காப்பதற்காகவே வன்புணர்வு செய்ததாக தில்லி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவன் கொடுத்திருக்கும் வாக்குமூலம் எதிலிருந்து வருகிறது?
மநு சாஸ்திரம் அத்தியாயம் - 9

14. மாதர் ஆடவரிடத்தில் அழகையும், பருவத்தையும் விரும்பாமலே ஆண் தன்மையை மாத்திரம் முக்கியமாக எண்ணி அவர்களை புணரு கிறார்கள்.

15. மாதர்கள் கற்பு நிலையின்மையும், நிலையா மனமும், நண்பன்மையும் இயற்கையாக வுடையவர்கள்.

16. மாதர்களுக்கு இந்த சுபாவம் பிரமன் சிருட்டித்த போதே உண்டானதென்று அறிந்து ஆடவர்கள் அவர்கள் கேடுறாமல் நடப்பதற்கான மேலான முயற்சி செய்ய வேண்டியது.

17. படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனு கற்பித்தார்.

19. மாதர்கள் பெரும்பாலும் விபசார தோஷ முள்ளவர்களென்று அநேக சுருதிகளிலும், சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றன.

ஆக, கெட்டுப் போகும் தன்மையுள்ள பெண்களை காப்பதற்கான பெரும் பொறுப்பை ஏற்றே அவர்கள் மணமாகாமல் ஒரு ஆணுடன் இரவு நேரத்தில் தனியே சென்ற பெண்ணிற்கு தண்டனை கொடுத்துள்ளனர். இந்த தண்டனையின் மூலம் அவர்கள் சொல்ல நினைத்த செய்தி நேரடியானது. இனி பெண்கள் இரவில் வெளியே செல்லாதீர்கள். அதிலும் தந்தை, கணவர், சகோதரர், மகன் அல்லாத யாருடனும் செல்லாதீர்கள். அதிலும் மணமாகாத பெண்கள் செல்லவே செல்லாதீர்கள். சென்றால் இந்த கதிதான் உங்களுக்கும். இதுதான் அவர்கள் சொல்ல விரும்பிய செய்தி. அந்த செய்தி, ஊடகங்கள் மூலமாக மிக நன்றாகவே மக்களிடம் போய் சேர்ந்திருக்கிறது. சாதாரணமாகவே பெண்கள் தனியே பயணிப்பதை அச்சத்துடன் தவிர்க்கும் சமூகம், இதற்கு பின் அச்சம் அதிகமாகிப் போய் நிற்கிறது.

பொருளாதார அடிப்படையிலும், கல்வியிலும் முன்னேறிய போட்மாங்கே குடும்பத்தின் பெண்களை வன்புணர்வு செய்த ஆதிக்கசாதியினர் விடுத்த செய்தி, “தாழ்த்தப்பட்டவர்கள் தாழ்த்தப் பட்டவர்களாகவே இருக்க வேண்டும். முனனேற முயன்றால் இந்த கதிதான்” என்பதே.
பல ஆண்டுகாலம், அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்கள் மிகவும் போராடி சில அடிகள் முன் நகர்த்திய சமூகத்தை, ஒரே வன்முறையில் பல அடிகள் பின்னோக்கி நகர்த்துவதில் ஆதிக்க சக்திகள் வெற்றி பெற்று வருகின்றனர்.

இன்று ஜாதியை முன் வைத்து காதல் திருமணங் களுக்கு எதிரான கடுமையான பிரச்சாரத்தை ஆதிக்க ஜாதி அமைப்புகள் முன்னெடுத்து வருகின்றன. இதுவும் அடிப்படையில் பெண்களுக்கு எதிரான வன்முறையே. ஒரு பெண் எந்த ஜாதியை சேர்ந்த வளாக இருந்தாலும், தன் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் உரிமையை அவளிடமிருந்து பறிப்பதாகவே இவர்களின் முன்னெடுப்புகள் உள்ளன. பெண்களின் அந்த உரிமையை மிகவும் மலினப்படுத்தி, ஜீன்ஸ் பேண்டுக்கும், கூலிங் கிளாசுக்கும் மயங்கி போகிறார்கள் என்பது ஆணாதிக்கத்தின் உச்சம்.

ஒரு மனிதனின் வாழ்க்கையின் வளத்தை காட்டும் அடையாளங்களாக சொத்தும், நகைகளும் இருப்பது போலவே அவன் குடும்பத்து பெண்களும் அவனது ‘கவுரவத்தின்’ அடையாளமாகவே உணரப் பட்டுள்ளது. பெண்ணும் ஒரு உடைமை. அதனால் அவளது வாழ்வின் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் உரிமை அவளது குடும்பத்தின் ஆணுக்கே உள்ளது. அதை மீறி அவள் முடிவெடுத்தால், அது கொடுங்குற்றம். இந்த மனநிலையிலிருந்தே காதல் திருமணங்கள் எதிர்க்கப்படுகின்றன. ஜாதி வெறியும் ஆணாதிக்கமும் இணைந்து நின்று பெண்களின் உரிமைகளை பறிப்பதில் முனைப்பே காட்டுகின்றன. அதற்கு அடிப்படையாக இந்து மத இந்திய உளவியல் உள்ளது. இந்து மத உளவியலிருந்து விடுபடாமல் பெண்களுக்கு எதிரான இந்த வன்முறைகளுக்கு முடிவு ஏற்படாது.

பெரியார் முழக்கம் - மார்ச் 2014

நன்றி - கீற்று
...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்