/* up Facebook

Mar 9, 2014

"கௌரவத் தாய்" விருதில் சந்தியாவின் மகத்தான உரை - என்.சரவணன்


சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி சந்தியா எக்னலிகொடவுக்கு ஐக்கிய பெண்கள் முன்னணி இம்முறை “கௌரவத் தாய்” (அபிமான் மாத்தா) என்கிற விருதை இன்று மார்ச் 8 அளித்தது.

“இனங்களுக்கு இடையிலான விரிசல்கள் எல்லைதாண்டி நீளும் இக்காலகட்டத்தில் மகத்தான மானிடத் தலைவிதியைக் கருத்திற்கொண்டு, பாதிப்புக்குள்ளாகி இருக்கும் சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களை ஒன்றிணைத்து, மனிதத்துக்கு எதிரான குற்றச்செயல்கள் தொடர்பில் உலகெங்கிலும் உள்ள நீதிமான்களின் மனசாட்சிகளைத் தட்டியெழுப்பும் வகையில், மானிட தர்மத்தினதும் சமூகச் சகோதரத்துவத்தினதும் கொடியை இலட்சிய தாகத்துடன் கரமேந்தி, அபரிமிதமான துணிவோடு முன்னெடுத்துச் செல்லும் தனிச்சிறப்பு வாய்ந்த போராட்டத்துக்காய் சந்தியா எக்னலிகொட அவர்களுக்கு ஐக்கிய மகளிர் முன்னணி 2014 ஆம் வருடத்திற்கான "கௌரவத் தாய்" விருதினை மிகுந்த பெருமிதத்தோடு வழங்கி மகிழ்கின்றது.”

அன்று அந்த மண்டபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த விருதினை எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க வழங்கி கௌரவித்தார். எப்போதும் போல சந்தியா எக்னலிகொட அவர்கள் தனது கையில் பிரகீத் எக்னலிகொடவின் புகைப்படத்தை தாங்கியபடியே இருந்தார்.

“சந்தியா எக்னலிகொட அவர்கள் போராடியது தனது கணவருக்காகவோ அல்லது தனது பிள்ளையின் தந்தைக்காகவோ மட்டுமல்ல அல்ல. காணாமல் போன அனைத்து கணவன்மார்களுக்காகவும் அவர் போராடி வருகிறார். காணாமல் போன அத்தனை தந்தைமார்களுக்காகவும் அவர் போராடிவருகிறார். சந்தியா எக்னலிகொடவுக்கு இந்த விருதை வழங்க அந்த வலுவான காரணம் ஒன்றே போதும்.” என ஐக்கிய பெண்கள் முன்னணியின் தலைவி டயனா கமகே அவர்கள், “கௌரவத் தாய்” என்கிற விருதை சந்தியா எக்னலிகொடவுக்கு வழங்கும் வைபவத்தில் உரையாற்றும் போது கூறினார். 
அவர் மேலும் குறிப்பிடுகையில் இந்த “கௌரவத்தாய்” விருது வழங்கும் விழாவை நாங்கள் ஏற்பாடு செய்ததே ஒடுக்கப்படும் பெண்களின் போராட்டங்களுகெல்லாம் வலு சேர்ப்பதற்காகவே..
இந்த முறை இந்த விருதுக்கு உரிய ஒருவர் யார் என்பதை நாங்கள் தேடிக்கொண்டிருந்தபோது தான் எங்களுக்கு சந்தியா எக்னலிகொட உடன் நினைவுக்கு வந்தார். 
அவர் யாரையும் சபிக்காமல், எவரையும் துவேஷிக்காமல் கடந்த நான்கு வருடங்களாக காணாமல் போன கணவர்மார்களுக்காகவும், பிள்ளைகளுக்காகவும் இடைவிடாத போராட்டத்தை தொடர்ந்து வருகிறார். 
தனது கணவர், தனது பிள்ளையின் தந்தை இன்னமும் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பது கூட அவர் அறிய மாட்டார். ஆனால் தேடிக்கொண்டிருக்கிறார். எங்களுக்கு தெரியும் அவர் தேடியலைவது அவரது கணவரை மட்டுமல்ல, காணாமல் போன அத்தனை தந்தைமார், கணவர்மார், பிள்ளைகள், சகோதரர்கள் அனைவருக்காகவுமே. நலிந்து சோர்வுற்றிருக்கும் அனைத்து பெண்களையும் அவர் பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறார். அந்த முன்னுதாரணத்திற்காகவே இந்த விருது அவருக்கு வழங்கப்பட வேண்டும்.” என்றார்.

சந்தியா எக்னலிகொட உரையாற்றும் போது...
“இந்த விருது பிரகீத்தின் பேரால் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இது எனக்கு மட்டுமல்ல வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என இந்தத் தீவின் அனைத்து பிரதேசங்களிலும் காணாமல் போனோருக்காக போராடி நலிந்துபோன அனைவருக்கும் சொந்தமானது. எனவே இந்த தேசத்தில் காணாமல் ஆக்கப்பட்ட அனைத்து கணவர்மார், தந்தைமார், சகோதரர்கள் அனைவருக்கும் அர்ப்பணிக்கிறேன்.
இந்த நேரத்தில் இன்னொருவரையும் நினைவுகொள்கிறேன். சகோதர பத்திரிகையாளர் ரிச்சர்ட் டி சொய்சா அவர்களின் தாயார் மனோராணி சரவணமுத்து அவர்கள். அவரின் துணிச்சல் பற்றி முக்கியமாக நாம் நினைவுறுத்த வேண்டும். ரிச்சர்ட் டி சில்வா காணாமல் ஆக்கப்பட்டவரல்ல. அன்று மிகவும் கொடூரமான ஆட்சி நிலவியபோது போது “அன்னையர் முன்னணி” அமைப்பை கட்டி எழுப்புவதற்கான பணிகளை மேற்கொண்டிருந்தபோது மனோராணி  என்கிற அந்தத் தாய் தனது பிள்ளையை உயிர் போன சடலமாக கண்டெடுத்தார். 
இத்தனைக்குப் பின்னும் அவர் துணிச்சலாக, சமூக பலமற்ற நிலையில் பல தாய்மாரை இணைத்துக்கொண்டு அன்னையர் முன்னணியைக் கட்டி எழுப்பினார். அவர் அனைத்துப் பிள்ளைகளுக்காகவும் போராடியவர். பலரை காணாமல்போகச்செய்யும் அந்த கொடூர நிலைக்கு எதிராகப் போராடும் ஒரு பயணத்தை தோற்றுவித்து, அனைவருக்கும் முன்னோடியாக இருப்பவர்  அவர். அது போல அதற்கு நிகராக 80களின் நடுப்பகுதியிலிருந்து யாழ்ப்பணத்தில் பல தாய்மார் “அன்னையர் முன்னணி”யை தோற்றுவித்து போராடியதையும் நினைவுறுத்த விரும்புகிறேன். 
இந்த நாட்டில் காணாமலாக்கப்படும் கலாசாரத்துக்கு நீண்ட வரலாறு உண்டு. அதிகாரம் எப்படி வேறுபட்டாலும் யார் கைகளுக்கு மாறினாலும் “காணாமலாக்கப்படும் கலாசாரம்” வேறுபட்டதில்லை. அன்று அன்னையர் முன்னணி மூலம் அரசியல் லாபமடைந்து அதிகாரத்துக்கு வந்தவர்களே இன்று ஏனையோரை காணாமல் போகச்செய்கின்றனர். 
எனவே காணாமல் போவோர் அற்ற ஒரு நாட்டை கட்டியெழுப்ப மக்கள் ஒன்றுபடவேண்டும். பெண்களோ, ஆண்களோ, சிங்களமோ, தமிழோ, முஸ்லிமோ, பரங்கியோ என்று பிளவுபட தேவையில்லை. நீதிக்காக போராட எந்த எல்லையும் அவசியமில்லை. அந்த நீதி நிலைநாட்டப்படும் வரை ஓயாமல் இருப்பதற்கு திடசங்கற்பம் கொள்வோம். இது தனிப்பட்ட பிரச்சினைகளுக்கான போராட்டமல்ல. ஒவ்வொரு குடும்பத்திலும் காணாமல் போகும்வரை காத்திருக்கவும் தேவையில்லை. இது மனித நேயத்துக்கான போராட்டம். காணாமல் போனோர் பற்றியும், கொல்லப்பட்டவர்கள் பற்றியும் உண்மையை எடுத்துரைக்க சக்தியற்ற இந்த சமூகத்திற்கு உயிருடன் இருப்பவர்களுக்கான நீதியை ஏற்படுத்தும் பலம் மட்டும் எங்கிருந்து வரும். இந்த விருது அப்பேர்பட்டவர்களுக்கு நம்பிக்கையூட்டுவதில் முக்கியமானது. 
நாமெல்லோரும் ஒன்றிணைந்து, ஐக்கியப்பட்டு உழைத்தால் மட்டுமே இந்த நாட்டில் காணாமல் போவோர் அற்ற ஒரு சமூகத்தை உருவாக்க முடியும்.”

இங்கை அரசாங்கத்தை விமர்சித்து எழுதி வந்த பத்திரிகையாளரும் கார்ட்டூன் ஓவியருமான பிரகீத் எக்னலிகொட 2010ஆம் ஆண்டு ஜனவரி  24 காணாமல் போனது தொடக்கம் அவரை தேடியலைந்து, உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் முறைப்பாடுகளுக்கு மேல் முறைப்பாடு செய்தும், அமைதி ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும், கண்காட்சிகள் நடத்தியும் தனது போராட்டத்தை தொடர்ந்து வருபவர்.

அது மட்டுமல்லாது இலங்கையில் சமீப காலமாக தொடரும் ஜனநாயகத்துக்காக போராடும் சக்திகளுடன் கைகோர்த்து பணிபுரிபவர். பெண்கள் அமைப்புகள், மனித உரிமைகள் அமைப்புகள், ஊடக உரிமை போராட்டங்கள் என அனைத்திலும் கலந்துகொண்டு தனது பங்களிப்பை வழங்கி வருபவர்.

சமீபத்தில் விலைவாசியுயர்வுக்கு எதிராக பெண்களை ஒன்று சேர்த்து அமைப்பொன்றை உருவாக்கிய சந்தியா, ஜனாதிபதியின் மனைவியையும் அதில் இணையுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

விருது வழங்கும் நிகழ்வின் பின் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், காணாமல் போன தனது கணவர் குறித்து ஜனாதிபதியிடம் பலமுறை முறையிட்டும் தகுந்த பதிலில்லாத நிலையிலேயே தான் ஐ.நா வரை செல்ல நேரிட்டது என்றும் குறிப்பிட்டார். இந்த நிகழ்வை முடித்துக்கொண்டு இன்றிரவே ஐ.நா மனித உரிமைகள் தொடர் கூட்டத்தோடு தொடர்புடைய கூட்டங்களுக்கு சமூகமளிப்பதற்காக அவர் ஜெனீவா நோக்கி பிரயாணமாகிறார்.

இந்த விருதினை எதிர்கட்சி ஏற்பாடு செய்திருந்தாலும் சந்தியா எக்னலிகொட தகுந்த முறையில் மேடையை பாவித்தார் என்றே கூற வேண்டும். அவரின் பேச்சு மிகவும் துல்லியமான, அரசியல் ஆழமிக்க ஒரு பேச்சு. எந்த கட்சி ஆட்சி வந்தாலும் மனிதர்கள் காணாமல் போவதில் மாற்றமில்லை என்பதை எடுத்துரைத்ததுடன், ஐ,தே.க. காலத்தில் ரிச்சர்ட் டி சில்வா காணாமல் போனதன் பின்னணியையும் அவரது தாயாரின் வரலாற்றுப் பணியையும் கூறத்தவறவில்லை.

(என்னுடன் மொழிபெயர்ப்பில் இணைந்துகொண்ட சகோதரி லறீனா அவர்களுக்கு நன்றி - என்.சரவணன்)


0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்