/* up Facebook

Nov 25, 2013

பெண் நிழலில் வாழ்ந்து போ… (குமரி மாவட்ட பெண்ணுரிமை போராட்டம் சின்னக் குறிப்பு…..)


கடந்த மூன்று வருடங்களாக எழுத நினைத்த கட்டுரை இந்த நிமிடம் வரை கைகூடி வரவில்லை. இது தொடர்பான ஏராளமான ஆவணங்களும் நூல்களையும் தேடித் தேடி வாங்கியதோடு வாசித்து பிரமித்துப் போயிருந்தாலும் கூட அதை குறிப்பெடுத்து இந்த நூலில் இது உள்ளது என்று என்னால் எழுத முடியாமல் போன நிலையில் நினைவில் உள்ளதை வைத்து மட்டும் எழுதுகிறேன். அரிதினும் அரிதாகவே வாழ்த்துகிறவன் நான். பெண்கள் தினத்திற்கும் கூட, வெறும் சம்பிரதாயமாக வாழ்த்தும் நான் . ஒரு ஆணாதிக்கவாதியாகவே வாழ்கிறேன் என் மனைவி, மகளிடமும். பெண் நண்பர்களிடமும். இந்த குற்ற உணர்ச்சியோடு ஆணாதிக்கத்தை நடைமுறை வாழ்வில் பழக்கப்படுத்திக் கொண்ட ஒரு ஆணாகவே நான் வாழ்கிறேன் என்பதை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.

வரலாற்றின் பக்கங்களில் வடிந்து கொண்டிருக்கும் ரத்தம். இன்றும் தொடரும் நிலையில் பெண்கள் எப்போது தங்களின் எதிர்ப்பைத் துவங்கியிருக்க வேண்டும். எல்லா பகுதிகளிலும் விசும்பலும், கேவலும், கண்ணீரும் பெண்ணுக்கே சொந்தமாகி அவள் தன்னை அழித்துக் கொள்ளவோ அல்லது எதிர்ப்பில் ஈடுபடவோ இயக்க நடவடிக்கையில் ஈடுபடவோ துவங்கியிருக்கலாம். ஆனால் தமிழகத்தால் கண்டு கொள்ளப்படாத ஒரு வரலாறு குமரி மாவட்ட பெண்களின் வரலாறு. அது அப்போது திருவிதாங்கூர் சமஸ்தானின் ஆளுகையில் இருந்தது. பரசுராமனால் நம்பூதிரிகளுக்கு நேரடியாக கையளிக்கப்பட்ட நிலம் (கடவுளின் தேசம்) என்று மிகச் சிறிய பிரிவினரால் நம்பிக்கையாக உருவாக்கப்பட்டு இன்று பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையாக மாறி விட்ட திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் 1150 அடிமைசாதிகள். இந்தியாவில் வேறு எந்த பகுதியிலும் இல்லாதவாறு. சாதியும் அதன் கொடூர தண்டனைகளையும் அனுபவித்தவர்கள் திருவிதாங்கூர் சமஸ்தான மக்கள். பலரும் திருவிதாங்கூரில் ஏதோ நாடார் இனப் பெண்கள் மட்டுமே மேலாடை அணியும் உரிமை மறுக்கப்பட்டு வாழ்ந்தது போல எழுதுவார்கள் அது உண்மையல்ல அந்த உரிமை 1150 சாதிகளுக்கு மறுக்கப்பட்டிருந்தது. அடிமை வணிகத்தில் கொடிகட்டிப் பற்ந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் சர்வாதிகாரம் ஒவ்வொரு சாதிக்கும் அதனதன் அந்தஸ்திற்கு ஏற்ற மாதிரி சட்டங்களை வகுத்தது.

சமஸ்தானத்தின் ஆட்சியின் கொடூரங்கள் உண்மையில் நாயர் இன பெண்கள் மீதுதான் முதன் முதலாக ஏவப்படுகிறது. நம்பூதியிரிகளின் பாலியல் தேவைகளுக்காக அவர்கள் நாயர் இனப்பெண்களை அடிமையாக்கியிருந்தார்கள். ஒரு நாயர் இனப்பெண்ணின் மீதான முதல் உரிமை நம்பூதிரிக்கே. இதனால் தாய் என்று தெரிந்த தகப்பன் யார் என்றே தெரியாத ஏராளமான குழந்தைகள் திருவிதாங்கூரில் இருந்தார்கள். ஒடுக்கப்பட்ட அந்த நாயர் இனப்பெண்கள் நம்பூதிரிகள் நடந்து வரும் போது திறந்த மார்போடு நிற்க வேண்டும். இதில் பல்வேறு வகைப்பட்ட மாதிரிகள் இருந்தன. இதெல்லாம் விரிவாக எழுத வேண்டும். ஆனால் இந்த இழி நிலை ‘‘மருமக்கள் தாயம்’ என்ற பெண் வழித் தலைமையேற்ற குடும்ப அமைப்பை நமக்கு வழங்கியது. பெரும்பாலும் இடதுசாரிகளும் பொன்னீலன் போன்ற நமது எழுத்தாளர்களும் கூட இதை முற்போக்கான அம்சம் என்று கருதினார்கள். இது பற்றி விரிவாக வாசித்த போது இந்த அமைப்பின் பண்பில் சில முற்போக்கான கூறுகள் இருக்கிறதே தவிற மருமக்கள் தாயம் உருவானது மிகக் கொடூரமான பாலியல் சித்திரவதையிலிருந்து துவங்கியதாகும்.

நாடார்கள், முக்குவர்கள், வேளாளர், ஈழவர் உள்ளிட்ட பல சமூகங்களில் மருமக்கள் தாயம் உள்ளது. ஆனால் இவர்கள் மிகச் சிறிய பிரிவினர். அதிசயிக்கதக்க வகையில் மீனவச் சமூகமான முக்குவர்கள் மருமக்கள் தாய முறையை பின்பற்றியவர்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் வாழும் முக்குவர்களிடையே ‘‘ ஆண் நிழலில் நின்று போ, பெண் நிழலில் இருந்து போ’ என்ற சொலவடை உள்ளது. (இப்போது இருக்கிறதா எனத் தெரியவில்லை.) . பிற சமூகங்களிலும் மருமக்கள் தாய முறை இருந்தாலும் மீனவச் சமூகங்களிடையே எஞ்சியிருப்பது போல வேறு எவரிடமும் இல்லை.

நிற்க,
குமரி மாவட்டத்தில் ஒரு பேச்சு மொழி உண்டு. ‘‘அவன ஒடப்புல போட்டு மூடுல’ என்று சாதாரணமாகச் சொல்வார்கள். அதாவது இந்த வழக்கு கொடூரமான திருவிதாங்கூர் சமஸ்தான ஆட்சியில் இருந்து உருவானதாக குமரி எழுத்தாளர் ஒருவர் எழுதி வாசித்தேன். அதாவது விதித்த வரியை கொடுக்க முடியாதவனை ஒடப்பில் போட்டு மூடுவார்கள். அது அப்போதைய தண்டனை முறை. ஒடப்பு என்பது சின்ன நீரோடை அதாவது. தோப்புக்கு தண்ணீர் பாய்ச்ச சின்ன கால்வாய் மாதிரி வெட்டுவார்கள். அதை ‘ஒடப்பு’ என்று வட்டார வழக்கில் சொல்வார்கள். முடிக்குவரி, சீலைக்கு வரி, என்றுதான் வாசித்திருக்கிறோம். அதன் தண்டனை முறைகளை வாசிக்கும் போது கொடூரமாக இருக்கிறது. வயலில் உழும் ஏர்கலப்பையில் பெண்ணின் தலைமுடியைக் கட்டி அப்படியே உழுது விடுவார்கள். அவள் சாகும் வரை நிலத்தில் உழுவார்கள். ஒரு கர்ப்பிணி பெண் இப்படி கலப்பையில் உழுது கொல்லப்பட்ட வரலாற்று நிகழ்வை ஜாய் ஞானதாசன் மிக அருமையாக சித்தரித்திருப்பார். இத்துதான் வாழ்வு, இதுதான் தலையெழுத்து என்று இருந்ததை மாற்றியவர்கள் நாடார் இனப் பெண்கள். தங்களிடம் வரிவாங்க வந்தவர்களுக்கு எதிராக அவர்கள் போராடினார்கள். திங்கள்சந்தை, பாறசாலை, போன்ற இடங்களில் சில இடங்களில் பெயரெ அதாவது நான் நினைக்கிறேன் முலையறுத்தான் சந்தை என்ற ஒன்று இந்தப் பகுதியில் உள்ளது. அது திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஒரு பெண் தன் முலையை அறுத்தெரிந்தாள் என்பதுதான் அந்த வரலாறு. எவ்வளவு பெரிய வீரஞ்செறிந்த போராட்டம். அவர்கள் தங்களின் ஆட்சி நீடித்திருக்க ஒரு பவுர்ணமி நாளில் நாடார், முக்குவர் குழந்தைகளை பிடித்துச் சென்று சமஸ்தானத்தின் நான்கு மூலைகளிலும் பிடித்து வரப்பட்ட குழந்தைகளின் உடலில் செம்புப் பட்டயத்தை பதிந்து புதைத்தார்கள். இதுதான் திருவிதாங்கூர் நம்பூதிரிகளின் ஆட்சி முறை. அதே சமஸ்தானத்தில் அரசரின் கணக்குப் பிள்ளைகளாக இருந்த பிள்ளைமாருக்கும் சமஸ்தானத்திற்கும் எழுந்த மோதலில் பலியிடப்பட்டவர்கள் வெள்ளாள இனத்து பெண்களே. அவர்கள் பிடித்துச் செல்லப்பட்டு பொது ஏலத்தில் விடப்பட்டு அடிமைகளாக்கப்பட்டார்கள்.

நீண்டகாலமாக எதிர்ப்புகள் இருந்தாலும், சீர்திருத்தக் கிரிஸ்தவத்தின் வரவு மிகப்பெரிய சமூக மாற்றத்தை குமரி மாவட்டத்தில் உருவாக்கியது. தமிழகத்திலிருந்து குமரி மாவட்டம் வேறு பட்ட காலாச்சாரத்தைக் கொண்டிருக்க இதுவே காரணம். 16 &ம் நூற்றாண்டிலேயே போர்ச்சுக்கீசியர்கள் கடலோரங்களில் கல்லூரி, மருத்துவமனைகளை நிறுவினாலும் கூட வடுகர் படைகள் அவைகளை விட்டு வைக்கவில்லை. ஆனால் 19 &ம் நூற்றாண்டில் தாமதமாக சீர்திருத்தக் கிறிஸ்தவம் நாடார்களிடையே வந்த போதிலும் அது கணிசமான அளவு பண்பாட்டு மாற்றத்தை பெண்களிடையே உருவாக்கியது. பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி. டதி மேல் நிலைப்பள்ளி போன்றவை எல்லாம் தமிழ் சமூகத்தின் பெண்கள் கண்ட முதல் கல்லூரிகள்.

விரிவாக எழுத முடியாமைக்கு வருந்துகிறேன். அன்றைக்கிருந்த முற்போக்கான அம்சங்கள் இன்று இல்லை. மிக இறுக்கமான சொத்துடமைச் சமூகமாக நாடார்கள் மாறிய பின்பு அதன் முற்போக்கு அம்சங்கள் அனைத்தையும் தொலைத்தார்கள். சீர்திருத்தக் கிறிஸ்தவம் சாதியை இறுக்கிச் சென்றதே தவிற அதை நெகிழ்வுக்குள்ளாக்க வில்லை. கத்தோலிக்கமும், சீர்திருத்தக் கிறிஸ்தவமும் அந்த வகையில் தோல்வியடைந்த சமூகங்களே. தங்களின் சுதந்திரத்திற்காக மதம் மாறிய நாடார்களிடம் இருந்து தலித்துக்கள் சுதந்திரம் கேட்டு துவங்கியதுதான் சல்வேஷன் ஆர்மி ‘‘இரட்சணிய சேனை’ என்ற தனி மதம். மத மாற்றத்தை தடுக்கும் நோக்கிலும், தங்கள் சமூகத்திற்கு விடிவு வேண்டும் என்றும் ஆன்மீக வழி போராடிய வைகுண்டசாமியின் போராட்டங்கள் தேக்க நிலையை இன்று அடைந்து விட்டன.

சரி இதில் இயல்பாகவே ஒரு கேள்வி வருகிறது இந்த சாதிக் கொடுமைகள் மீனவர்களுக்கு இல்லையா? என்பதுதான் கேள்வி. பேரா. சிவசு எழுதுவார். சாதி என்னும் பரப்பிற்கு அப்பால் நிறுத்தப்பட்டவர்கள் மீனவர்கள் என்பார். அதாவது சாதி என்னும் பரப்பினுள் இருக்கும் மீனவர்கள் புவியியல் ரீதியாக கரையோரங்களில் வாழ்ந்ததால் நேரடியான சாதிக் கொடுமைகளை அனுபவிக்கவில்லை. ஆனால் அவர்களுக்கும் இந்த சாதிகளைப் போல சாஸ்திரங்களை, ஓதும் உரிமை மறுக்கப்பட்டுத்தான் இருந்தது. முக்குவர்கள், பரதவர்கள் யாரும் இதற்கு விதிவிலக்கு அல்ல. மருமக்கள் தாயத்தின் மிச்சங்கள் மீனவ மக்களிடையே குறிப்பாக முக்குவர்களிடம் எஞ்சியிருப்பது அது ஒரு சொத்துடமை சமூகம் இல்லை என்பதால்தான். தவிறவும் கடலோரங்களில் இயல்பாகவே பெண் தலைமை ஏற்கும் மரபு மீனவக் குடும்பங்களிடையே உண்டு. கடற் தொழில் பண்பாட்டு மரபு அது. இன்றைக்கு கடல் தொழிலும் நசிந்து வரும் நிலையில் இந்த பண்பாடு வேகமாக மறைந்து வருவதை நீங்கள் காண முடியும்.

காலந்தோறும் பெண் சிந்திய ரத்தங்கள்தான் ஆண் சொத்துடமைச் சமூகமாக உருவாகியிருப்பதை நாம் காண முடியும். சமூகப் பொருளாதார நிலைகள் பெண்ணைக்கும் வெளியில் சென்று உழைக்கும் நிர்பந்தத்தை உருவாக்கி விட்ட போதிலும் குடும்பம் என்னும் ஜனநாயகமற்ற சொத்துடமை அமைப்பு. காலந்தோறும் அவளை சம்பள நாள் அல்வாவோடு எதிர்பார்த்து காத்திருக்கிறது.

( பெண்ணுரிமை விஷயங்களில் ஆர்வம் உள்ளவர்கள்.ஜாய் ஞானதாசனின் மறைக்கப்பட்ட வரலாறு என்னும் நூலை வாசிக்கவும், மேலும் திருவாங்கூர் மேனுவல், மற்றும் சீர்திருத்தக் கிறிஸ்தவ மையத்தில் நூல் நிலையல் ஒன்று கிறிஸ்தவ மகளிர் கல்லூரி செல்லும் சாலையில் உள்ளது அதற்கு சென்று தேடிப் பாருங்கள் பல அருமையான நூல்கள் உள்ளன.)

-அருள் எழிலன்


0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்