/* up Facebook

Dec 8, 2013

பெண்கள் சமூகத்திடம் எதிர்பார்பது என்ன? - தசோனியா துரைராஜா


சமூகத்தின் பகுத்தறிவுடைய மக்கள் இனங்களாக ஆண்,பெண் வகையினா் காணப்படுகின்றனா். பெண்களின் பகுத்தறிவு பல்வேறு கிராமங்களில் மதிக்கப்படுவதில்லை என்பது உறுதி. தொன்றுதொட்டு சில பண்பாட்டு நடைமுறைகள் மேலும் மேலும் அவ்வம்சங்களை பெண்கள் மீது திணிக்கின்றன. பெண் என்றால் அடக்கமானவள், பதுமைபோன்றவள்,எதிர்த்துபேசக்கூடாதவள், தன் கருத்துக்களை கூறஇயலாதவள் என மனப்பாங்கை வளா்த்து பெண்களை பல இடங்களில் பேசவிடாது தடுத்துவிடுகின்றனா். பண்பாட்டின் மீது பழிபோட்டு அதிகாரங்களை பல்வேறு மக்கள் தரப்பினா் பெண்கள் மீது திணிக்கின்றனா்.இந்த அடக்குமுறையானது கணவன்-மனைவி, பெற்றோர்- பிள்ளைகள், சகோதரன்-சகோதரி மீதும் என அமைகிறது. இவ் ஆதிக்கச்செயற்ப்பாட்டில் பால்நிலைப்பாரபட்சம் மிகுதியாக காணப்படுகிறது.

பெண்கள் தொடர்பான சமூகப்பார்வை
        
இன்றைய சமூகத்தினர் பெண்களை பார்க்கும் பார்வையானது மீண்டுமோர் புரட்சிக்கு வித்திடலாம். இன்றைய சமூகமாற்றமானது நடை,உடை, பாவனையும் மாற்றியுள்ளது. ஜீன்ஸ் ரொப் போட்டு மோட்டார் சைக்கிளில் சென்றால் ”இது ஒரு ஆட்டம்”, ”உடுப்பா போட்டிருக்கு” , ”அந்தக்காலத்தில இருந்த அடக்கம் இந்தக்காலத்து பொம்பிளையளிட்ட இருக்கோ” ,”உதுகள் எங்கபோகுதுகளோ” என்ற எண்ணப்பாங்குகள்தான் சமுதாயபார்வையின் வெளிப்பாடு ஆகின்றது.

உடை என்பது சுதந்திரமான ஒன்று. எவ் உடை அணிவது என்பதிலும், நாம் என்ன செய்யவேண்டும் என்பதிலும் அபிப்பிராயம் கேட்கவேண்டுமெனின் பெண்களின் சுதந்திரம் அங்கேயே அடிப்பட்டுபோகிறது. பண்பாட்டை பிரதிபலிக்க பெண்களால் முடியும் ஆனால் அது அடக்குமுறைகளின் மூலமும் அடிமைப்படுத்துவதாகவும் இருப்பின் அப்பண்பாட்டை ஏற்கவேண்டிய அவசியமில்லை. சமூகமாற்றங்கள் ஏற்படும்போது அம்மாற்றங்களுக்கேற்ப நம்மையும் நாம் மாற்றிக்கொள்ளவேண்டும். இன்றைய கல்விச்சூழல் உலகளாவிய அளவில் போட்டிபோடவேண்டிய நிலையில் உள்ளது. எம்மையும் நாம் உயா்த்திக்கொள்ளவேண்டிய தேவைப்பாடு உள்ளது. ”பொம்பிளபிள்ளை படிச்சு நீ என்னத்தை செய்யப்போறாய்? படிச்சது காணும் நீ ஒண்டும் வெளில போய் படிக்கவேண்டாம்” என்று கூறும் பெற்றோர்கள் இருக்கிறார்கள். திருமணம் முடிந்தால் பெண்கள் படிக்கப்போவார்கள் படிக்கமுடியும் என்ற கருத்து ஐந்து சதவீதத்திற்கும் குறைந்தளவே உண்மையானது. எத்தனை கணவன்மார்கள் தம் மனைவியை படிக்க வைக்கவேண்டும் என்ற உணா்வுடையவா்கள்? பெண்களை வெளியில் விட்டால் மற்ற ஆண்கள் பிழையாக பாவித்துவிடுவார்கள் என்ற பயம் எமக்குள் உண்டு என கூறும் கருத்து எவ்வளவு பிழையான ஒரு கருத்து. பெண்கள் பாலியல் பொருட்கள், பாவிக்கப்படும் ஒரு பொருள் என எண்ணும் பிற்போக்கான சிந்தனையாளா்கள் வாழ்கின்றனா். கல்வியறிவானது மாற்றங்களை கொண்டுவரவேண்டும். சிந்தனை, செயல் யாவற்றிலும் எல்லோரிடத்திலும் மாற்றங்கள் கொண்டுவரவேண்டும். இம்மாற்றங்கள் ஆரோக்கியமானவையாகவும், சமூகத்திற்கு நன்மையளிப்பதாகவும் அமையவேண்டும்.

பெண்கள் மீதானவன்முறைகள்
பெண்கள் மீதான வன்முறைகள் குடும்பவன்முறை, சமூகவன்முறைகள் என அமைகின்றன. குடும்பவன்முறைகளின் போது உடல்ரீதியாக உளரீதியாக வன்முறைக்கள்ளாக்கப்படுகின்றனா். பண்பாட்டு தளத்தில் எத்தனைதவறுகள் கணவன் இழைத்தாலும் பெண் கணவனை அடிக்கமுடியாது. ஆனால் மனைவி எதிர்த்து கதைத்தாலே அடிக்கும் பண்பாட்டு நிலைமைகள்தான் சமுதாயப்பண்பாட்டுத்தளத்தின் அம்சம். பருவவயதில் ஏற்படும் காதல் தோல்வியானது திருமணத்தில் பாரியபிரச்சனைகளை உருவாக்கி பெண்களை மட்டும் பாதிப்பதாக அமைகிறது.அன்பு, பாசம் என்று பொய் கூறி பெண்களை ஏமாற்றி செல்லும் ஆண்கள் சமூகத்தில் பல இலட்சம் சீதனத்திற்கு விலை போகின்றார். பெண் தன் திருமணவாழ்வில் அக் காதல் விவகாரத்தால் உடல்,உளரீதியாக பிரச்சனைகளை சந்திக்கிறாள்.

சமூகவன்முறைகளில் கலாச்சாரநிகழ்வுகள், சமூகத்தின் உயர்ச்சிக்கான படிகளில் பெண்களின் நகா்வுகள் தடைப்படுகின்றன. விதவைப்பெண்ணால் கலாச்சாரத்தின் மங்களநிகழ்வுகளில் பங்குபற்றமுடியாது,  குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத ஒரு பெண் வெற்றுநிலம், காய்ந்தநிலம் எனக் கூறப்படும் தன்மைகள் பெண்களை வெறும் இயந்திரங்களாகவே பார்க்கும் மனோபாவங்களை சுட்டுகிறது. இன்று பல்வேறு இடங்களிலும் , நாடுகளிலும் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் பலாத்காரம், கொலை என்பனவும் இதற்குள் அடங்குகின்றன. தற்போதைய சூழ்நிலையில் சீதனம் ஒரு பெரும் சமூகப்பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

பெண்கள் சமூகத்திடம் எதிர்பார்ப்பவை
 எத்தனை போராட்டங்கள், புரட்சிகளின் பின்பும் இன்றுவரை பெண் ஆனவள் சமூகத்திடம் பலதரப்பட்ட விடயங்களை எதிர்பார்த்து நிற்க்கிறாள். பெண்ணியம் என்றால் என்ன என  ஒரு ஆண்மகனைக்கேட்டால் ”அடக்கமில்லாத, திமிர்பிடித்த ஒருத்தி பெண்ணியவாதி” என்று பதில் தருகிறான்.

அடக்கம் பணிவு பெண்களுக்கு மட்டும் தானா? கற்புநிலைக்கோட்பாடு பெண்களிற்கு மட்டும் தானா?

சுதந்திரமான பயணம், சுதந்திரமானகல்வி, கருத்துசுதந்திரம், சுதந்திரமான ஆடைத்தெரிவு, பக்கபலமான வாழ்கைத்துணை, மரியாதையாக பார்க்கும் சமூகபார்வை இவற்றை பெண்கள் பெற்றுக்கொள்ளவேண்டும். மேலதிகாரிகளாக எத்தனை பெண்கள் உள்ளனா்? அவ்வாறு மேலதிகாரியான பெண்ணிற்கு கீழ்வேலைசெய்யும் ஆண்கள் ”யாரோட வேலை செய்தாலும் இந்த பொம்பிளையளுக்கு கீழ வேலை செய்யேலாது” என்று கூறும் தன்மை மேலதிகாரி பெண் என்ற காரணமே.

பெண்கள் மீதான வன்முறைகளை தடுத்துவிடுங்கள், பாலியல் பொருட்கள் எனவும் பொம்மைகளாகவும் சிந்திக்கும் செயலை நிறுத்திவிடுங்கள். பெண்கள் உணர்வுடையவா்கள் உரிமைகள் அவர்களுக்கும் உண்டு. பெண்கள் மீது அசிட் வீசுதல், பெண்களை கடத்தி சென்று பலாத்காரம் புரிதல் கொலைசெய்தல், வீதிகளில் தொந்தரவு செய்தல் போன்ற நடவடிக்கைகள் நாகரீகமான மனித சமூகத்தின் ஆரோக்கியமான நடவடிக்கைதானா? எனக்கு என்ன என்னநடந்தாலும் என்று பார்த்து செல்லும் சுயநலத்தை போக்குங்கள்.

சமுதாயம் நிலைபெற ஆண்-பெண் உறவு நிலை இன்றியமையாததே. ஆண்களின் துணை பெண்களுக்கும் பெண்களின் துணை ஆண்களுக்கும் அவசியமானது. ஐம்பதிற்கு ஐம்பது என்ற கோட்பாடும், WIN – WIN கோட்பாட்டு தத்துவமுமே இவ்வுறவு நிலையை சரியமைக்கும். திருமணத்தின் பின் ஆண் கூறுவதை மட்டும் தான் பெண் புரியவேண்டும் என்றால் அங்கே உண்மையான உறவுநிலைக்கு அா்த்தமில்லை. இருவரது கருத்தும் ஒருமித்து வாழவேண்டும்.
உணா்வுகளாலும் உரிமைகளாலும் பெண்கள் மதிக்கப்படவேண்டும், அடிமைகளாகவும் இரண்டாம் நிலைக்குரியவா்களாகவும் பார்க்கும் தன்மைகள் மாற்றப்படவேண்டும்.சமுதாயத்தில் சமத்துவமாக நடத்தப்படவேண்டும். பெண்கள் வெறும் பாலியல் பொருட்களல்ல என்பதை சாதனைப் பெண்கள் சாதித்துக்காட்டியுள்ளனா். இன்னும் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு வாழும் பெண்களும் சாதனைகள் படைக்கவேண்டும்.
“ஒடுக்கப்படும் பொருட்கள் நாங்களல்ல
உன்னத சக்தி கொண்டவா்கள்”

தசோனியா துரைராஜா(அச்சுவேலி)

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்