/* up Facebook

Mar 27, 2014

பூப்படைதல் - ஆர்த்திவேந்தன்


இந்தியாவில் கடந்த ஆண்டுகளில் பூப்படைதலின் சராசரி வயது 1860 -16.6, 1920 -14.6, 1950 - 13.1, 1980 - 12.5, 2010 - 10.5 வயதிற்கும் கீழ் என்று ‘The Journal of Bio Technology’யின் ஆய்வு குறிப்பிடுகிறது. சிறுமிகள் பத்து வயதிற்குள் பருவமெய்துவது இன்று சாதாரணமாகி விட்டது. உடலும், உள்ளமும் வளர்ச்சியடையும் குறிப்பிட்ட வயதிற்கு முன்பே பருவமெய்துவதை முன்பூப்படைதல்( Early Puberty) என்று குறிப்பிடுகிறது மருத்துவம்.

ஏழு வயது மகள் பருவம் அடைந்துவிட்டாள் என்பதை ஏற்றுகொள்வது கடினமாக தான் இருக்கும். ஏழு வயது குழந்தைக்கு எப்படி புரியவைப்பது, எதை சொல்லி தருவது என்ற குழப்பம் வரும். நாம் கற்று தரும் இந்த அடிப்படையான பாலியல் கல்வி தான் நம் குழந்தையின் எதிர்காலத்தை கட்டமைக்கிறது என்பதை நாம் மறந்து விட கூடாது. இந்த சூழ்நிலையை எப்படி கையாளுவது, இது எதனால் நிகழ்கிறது என்பதை தெரிந்து கொள்வது நம் கடமையாகும்.

எதனால் நிகழ்கிறது?
மூளையில் உள்ள ஹைப்போதாலமஸ் -பிட்யூட்டரி பால் தூண்டல் அச்சுதான் இனப்பெருக்க அமைப்பின் வளர்ச்சிக்கும் செயல்பாட்டுக்கும் அடிப்படையாக இருக்கிறது. இப்பகுதியில் தொடங்கும் ஹார்மோன் உற்பத்தி சுழற்சி, இயல்பை விட முன்பாகவே செயல்பட தொடங்கி விடுவதன் விளைவாக பருவமெய்துதல் முன்பே நிகழ்கிறது. இவ்வாறு நிகழ்வதற்கு பல காரணங்கள் உள்ளன.

DDE (டைகுளோரோ டைஃபினைல் டைகுளோரோ எத்திலின்) PCB (பாலி குளோரினேட்டட் பைஸ் பினைல்) போன்ற பூச்சிக் கொல்லிகளில் உள்ள வேதிப் பொருள்கள் ஹார் மோன்களை தூண்டு கின்றன. தடை செய்யப்பட்ட இந்தப் பூச்சிகொல்லிகள் பயிர்களில் அதிகம் தெளிக்கப்பட்டு, உணவில் கலக்கின்றன. பிளாஸ்டிக்கில் உள்ள Phthalates என்ற வேதிப்பொருளும் முன்பூப்படை தலை துரிதப்படுத்துகிறது. மாமிசம், பால் போன்றவற்றில் உள்ள வளர்ச்சி ஹார்மோன் களும் பூப்படைதலைத் தூண்டுகின்றன. அதோடு அழகு சாதனப் பொருட்கள் மற்றும் மருந்துகளில் உள்ள வேதிப்பொருட்களும் பூப்படைதலை வேகப்படுத்துகின்றன.

உடலில் கொழுப்பு அதிகம் சேர்ந்தால், லெப்டின் என்ற ஹார்மோனின் அளவும் அதிகரிக்கிறது. இது பூப்படைதலை விரைவு படுத்துகிறது. இதனாலேயே உடல் பருமனான குழந்தைகள் முன்பூப்படையும் விழுக்காடு அதிகமாக உள்ளது.

உடலில் சூரிய ஒளி படாமல் வளரும் குழந்தை களுக்கு விட்டமின் D சத்து குறைபாடு இருக்கும். இவர்கள் விரைவாக பருவமெய்து கின்றனர்.

ஓடியாடி விளையாடாமல் இருப்பது கூட முன்பூப்புக்கு காரணமாகலாம். போதுமான அளவு உடலுக்கு வேலை கொடுப்பதால் வளர்ச்சி ஹார்மோன்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இந்தப் பிரச்னையை எதிர்கொள்கின்றன.

ஒரு சிலர், உடலில் உள்ள குறைபாடுகளால் இளம் வயதிலே பூப்படைந்துவிடுவர். எடுத்துக்காட்டாக மூளை, தண்டுவடப் பகுதியில் கட்டி, நோய் தொற்றுகள் ஏற்பட்டா லும், உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் தவறாகத் தூண்டப்பட்டு, முன்பூப்படைதலுக்கு வழிவகுக்கும். இது அரிதாகவே நிகழக்கூடியது.

பெற்றோர் எப்படி தெரிந்து கொள்வது?
முன்பூப்படைவதற்கான முதல் அடையாளம் மார்பகங்கள் வளர்வது. ஒரு மார்பைவிட மற்றொன்று விரைவாக வளரும். இதை தொடர்ந்து பிறப்புறுப்பில் முடி வளரத் தொடங்கும். ஒரு சிலருக்கு முகப்பரு தோன்றக் கூடும். பூப்படையும் காலகட்டத்தில் சிறுமியின் இடுப்புப் பகுதி அகன்றும், இடை மெலிந்தும் தோற்றமளிக்கும்.
குழந்தைகள் அடிக்கடி எரிச்சலடைவார்கள். பிறப்புறுப்பில் இருந்து வெள்ளை அல்லது மஞ்சள் திரவம் வெளிவரும். அக்குள்களில் முடி வளரத் தொடங்கும். முடி வளர்வது இயல்பானதாக இருப்பினும் 7 வயதுக்கு முன்பே இந்த அடையாளங்கள் தோன்றினால் குழந்தையை மருத்துவரிடம் கூட்டிச் செல்வது நல்லது. உடலில் ஏற்படக் கூடிய மாற்றங்கள் இயல்பானதுதானா என்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இதன்மூலம் உடல் குறித்தான சந்தேகங்களை மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பையும் மகளுக்கு ஏற்படுத்தித் தரமுடியும்.

மருத்துவர் என்ன செய்வார்?
உடலின் மாற்றத்தை மதிப்பிடுவதற்கு உடல் பரிசோதனை செய்வார்.
குடும்பத்தில் இது இயல்பான ஒன்றா என்று தெரிந்து கொள்வதற்கு குடும்ப வரலாறை (மருத்துவ ரீதியாக) தெரிந்துகொள்வார்.

குழந்தையின் ஹார்மோன் அளவை தெரிந்துகொள்ள ரத்தப் பரிசோதனை மேற்கொள்வார்.

குழந்தையுடைய எலும்பின் வயதை கண்டறிய, கை மற்றும் மணிக்கட்டு பகுதியில் எக்ஸ்ரே எடுப்பார். உடல் வளர்ச்சியின் வேகத்தை கண்டறிய இது உதவும்.

மூளையில் பிரச்னை இருந்தால் அதை கண்டறிவதற்கு எம்.ஆர்.ஐ சோதனை செய்வார்.

பெற்றோர்கள் எப்படி கையாள வேண்டும்?
எல்லாவற்றையும் தோழிகளிடம் தெரிந்து கொள்வார்கள் என்று விட்டுவிடக் கூடாது. பிறப்புறுப்பில் ரத்தம் வந்தால் பயந்து விடாமல், உடனே உங்களிடம் தெரிவிக்கச் சொல்லுங்கள். இனி ஒவ்வொரு மாதமும், மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு இப்படி ரத்தப் போக்கு வரும் என்பதையும், மாதவிடாய் சுழற்சி பற்றியும் சொல்லித் தரவேண்டும்.

உடலை சுத்தமாக வைத்திருக்கவும், சுகாதாரத்தைக் கடைபிடிக்கவும் பெற்றோர், குறிப்பாக தாய் உதவ வேண்டும். சுத்தமான, சரியான அளவில் உள்ளாடை அணிவது, நாப்கின் மாற்றுவது போன்றவற்றை அதிகம் சொல்லித் தாருங்கள்.

மாதவிடாயின் போது வயிறு வலிப்பது, வெள்ளைப்படுதல், பிறப்புறுப்பு தூய்மை என எல்லாவற்றிற்கும் அறிவியல் ரீதியாக விளக்கமளியுங்கள்.

மகளின் உடலில் ஏற்படும் மாற்றத்தை உண்மையாகவும், வெளிப்படையாகவும் பேசுங்கள். இது இயல்பான வளர்ச்சிதான், நோய் அல்ல என்பதை தெளிவு படுத்துங்கள். உனக்கு சீக்கிரமாக நிகழ்ந்து விட்டது. இந்த மாற்றங்கள் உன் தோழிகளுக்கும் ஏற்படும் என்பதை விளக்குங்கள்.

மகளை சிலர் கிண்டல் செய்யக் கூடும். அதனால் ஆசிரியரிடமும், தோழிகளிடமும் தொடர்பில் இருங்கள். யாரிடமாவது பேசாமல் ஒதுங்கினால் அதற்கான காரணத் தைத் தெரிந்து கொள்ளுங்கள். விளையாட்டு, இசை போன்றவற்றில் ஈடுபடச் செய்யுங்கள்.

எளிமையான செய்திகளை மட்டும் தெரியப்படுத்துங்கள். 
மகள் பூப்படைந்துவிட்டாள் என்பதற்காகவே முதிர்ந்த செயல்பாடுகளை எதிர்பார்க்கக்கூடாது. 18 வயது வரை அவள் குழந்தைதான் என்பதை புரிந்து கொண்டு கையாளுங்கள்.

பூப்படைதல் குறித்து ஏராளமான புத்தகங்கள் உள்ளன. அவற்றை மகளுடன் உட்கார்ந்து படியுங்கள். உடல் குறித்தான எல்லா சந்தேகங்களையும் தெளிவுபடுத்திக் கொள்ள, இது சிறந்த வாய்ப்பாக அமையும்.

மகளுக்கு கட்டாயம் சொல்லித்தர வேண்டியவை :
உடல் உனக்கானது: விருப்பம் இல்லாமல் யாரும் தொடக் கூடாது என்பதை உணர வையுங்கள். கையைப் பிடிப்பது, முத்தம் கொடுப்பது, கட்டி அணைப்பது போன்ற செயல்களை நண்பர்களாக இருந்தாலும் அனுமதிக்கக் கூடாது என்று சொல்லுங்கள். பிறப்புறுப்பு, மார்பகங்களை யாரும் தொட அனுமதிக்கக் கூடாது என்பதை புரிய வையுங்கள்

சரியான மொழியை பயன்படுத்துங்கள்: குழந்தையை குளிக்க வைக்கும்போது, அவர்களுக்கு தன் உடல் உறுப்புகள் குறித்து எழும் கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளியுங்கள். உடல் உறுப்புகளுக்கு சரியான பெயரை சொல்லுங்கள்.

நல்ல தொடுதலை விளக்குங்கள்: உடல் குறித்து எந்த இடத்தில், எந்த நேரத்தில் கேட்டாலும் பொறுமையாக பதில் அளியுங்கள். கெட்ட தொடுதலைப் பற்றிச் சொல்லித் தருவது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் நல்ல தொடுதல் என்றால் என்னவென்று விளக்குவதும். உடல் குறித்த பயத்தை இது போக்கும்.

மறுப்பு தெரிவிக்கப் பழக்கப்படுத்துங்கள்: தனக்கு விருப்பம் இல்லாமல் யாராவது தொட்டாலோ அதற்கான அறிகுறிகள் தெரிந்தாலோ, தைரியமாக மறுப்பு தெரிவிக்கப் பழக்கப்படுத்துங்கள். தொடுதல் பற்றிய புத்தகத்தை அறிமுகம் செய்யுங்கள். உடல் குறித்த புரிதலுக்கு உடல் பாகங்களின் செயல்பாடுகளை விளக்கும் புத்தகத்தை வாங்கி தாருங்கள். தொடுதலை பற்றி விளக்குவதற்கு புகைப்படங்கள் நிறைந்த புத்தகங் கள் உள்ளன. அவற்றை பயன்படுத்துங்கள்.

பொய்யான அன்பை வெளிப்படுத்த கட்டாயப் படுத்தாதீர்கள்: உங்களின் உறவினர், நண்பர், நம்பிக்கைக்கு உரியவர் என்பதாலேயே யாரிடமும் அன்பு செலுத்த சொல்லிக் கட்டாயப் படுத்தாதீர்கள். அந்த உரிமையில் யார் அத்துமீறி நடந்து கொண்டாலும் உடனே உங்களிடம் தெரிவிக்கச் சொல்லுங்கள். ஏனென்றால் பெரும்பாலான பாலியல் துன்புறுத்தல்கள் நன்கு தெரிந்தவர்களாலேயே நிகழ்த்தப்படுகிறது.

தன் உணர்வு சரியே என நம்ப உதவுங்கள்: நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து தனக்கு ஏற்படும் உணர்வு சரியானதே என்று குழந்தை நம்ப வேண்டும். ஒருவர் தவறாக தொட்டால் அது தவறுதான் என்பதில் அவர்கள் குழப்பமடையக் கூடாது. பெற்றோராக நீங்கள் உடனே அதை அங்கீகரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆர்திவேந்தனின் முகநூல் பதிவிலிருந்து நன்றியுடன் மீள்பதிவிடுகிறோம்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்