/* up Facebook

Mar 30, 2014

ஒவ்வொரு புள்ளியிலும் தொடங்கி… - லறீனா அப்துல் ஹக்


அறிமுகம்
"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக்கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை." (ஸூரத்துர் ரஃது:11).

அண்மைக் காலமாக பொதுத்தளங்களில் ‘சமூக மாற்றம்’, ‘சமூக மேம்பாடு’, ‘சமூகப் புனரமைப்பு’ முதலான சொல்லாடல்கள் அதிகம் மேலெழுந்தவண்ணம் உள்ளன. இன்னொரு வகையில் சொல்வதானால், நமது சமூகம் பல்வேறு சவால்களையும் போராட்டங்களையும் எதிர்கொண்டு வருவதை முன்னர் எப்பொழுதையும்விட சமகாலத்தில் அதிகளவில் உணரத் தலைப்பட்டுள்ளது; ஒருவகையான நெருக்கடி நிலைமையை, தேக்கமுற்றுப் போனதான உணர்தலை தனிப்பட்ட முறையிலும் சமூகமாகவும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றது எனலாம். எனினும், அதற்கான காரணங்களை முன்வைக்கும்போது, அடுத்தவரை நோக்கிச் சுட்டுவிரலை நீட்டி, ஒருவித இயலாமையை, பாதிக்கப்பட்ட மனோபாவத்தை வெளிப்படுத்துவதன் மூலம் அந்த நிலைமைக்கான பொறுப்புக்கோரலை விட்டும் நம்மில் யாரும் தப்பித்துவிட முடியாது. அதாவது, சமூகத்தின் நெருக்கடி நிலைமைக்கும் அதன் தேக்கநிலைமைக்கும் புறக்காரணிகளை மட்டுமே சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கும் அணுகுமுறையில் இருந்து விலகி, அவற்றுக்கான உண்மையான, பன்முகப்பட்ட அகக் காரணங்களை ஆய்வுகள் மூலம் கண்டறியவும், துறைசார்ந்த பங்களிப்புகளின் வாயிலாக ஒவ்வொரு துறையிலும் உள்ள இடைவெளிகளை இட்டுநிரப்பவும், இருக்கின்ற நிலைமையைச் செப்பனிட்டுச் சீர்செய்யவும் வேண்டிய கடப்பாடு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஏனெனில்,   
"உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளாராவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார்." (ஸஹீஹ் புஹாரி) 
என்ற நபிமொழி, அதனையே நமக்குச் சுட்டிக்காட்டுகின்றது.

சமூகம் என்பது ஒரு பரந்த கட்டமைப்பு. அதனை மேம்படுத்தி முன்னேற்றுதல் என்பது தனியே ஒருவரால், இருவரால் மட்டும் செய்துமுடிக்கக்கூடிய பணியல்ல. சமூகத்தின் ஒவ்வோர் உறுப்பினரும் தமது அறிவுக்கும் ஆற்றலுக்கும் துறைசார் நிபுணத்துவத்துக்கும் ஏற்பத் தமது பங்குப் பணியை செவ்வனே செய்வதற்கு முன்வருவதன் மூலமே ஆரோக்கியமான சமூக மாற்றத்தை, ஒரு புத்துயிர்ப்பைப் பெரிதும் சாத்தியப்படுத்தலாம் என்பது தெளிவு. அந்தவகையில், சட்டத்துறை எனும் மிக முக்கியமான   கற்கையைத் தெரிவுசெய்துள்ளவர்கள், தமது துறைசார்ந்த நிபுணத்துவம் மூலம் செய்யக்கூடிய சமூகப் பங்களிப்பு மகத்தானதாகும். 

சட்டத்தின் அடிப்படை நோக்கம் சமூக நீதியை, ஒழுங்கை நிலைநாட்டுவதாகும். அது, வாழ்வியலின் சகல துறைகளுக்குள்ளும் செல்வாக்குச் செலுத்தி, அவற்றைச் சிறப்பாகக் கட்டமைக்கக்கூடிய சக்திவாய்ந்த ஒரு கருவியாகும். அரசாக இருந்தாலும் நிறுவனமாக இருந்தாலும் குடும்பமாக இருந்தாலும், அதனை நீதியானதாக வடிவமைப்பதிலும் அறம் சார்ந்ததாக நிலைநிறுத்துவதிலும் சட்டத்துறையின் பங்கு அளப்பரியது. இந்நிலையில், இலங்கையில் சட்டத்துறையில் கற்கையை மேற்கொண்டிருப்போர் தமது துறைசார்ந்த சிறப்புத் தேர்ச்சி மூலம் ஆற்றக்கூடிய பல பணிகளில், சமூகத்தின் சிற்றலகான (small unit) குடும்பக் கட்டமைப்பை மேம்படுத்துவதில் உள்ள சவால்களை இனங்கண்டு அவற்றைச் சீர்படுத்துவது தொடர்பில் கவனத்தைக் குவிமையப்படுத்துவதன் இன்றியமையாமையை வலியுறுத்துவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.

குடும்ப வன்முறையின் பரவலாக்கம்
குடும்ப அமைப்புக்குள் இடம்பெறும் உளவியல் ரீதியானதும் பௌதீக ரீதியானதுமான சகல வன்முறைகளும் குடும்ப வன்முறை எனப்படும். இது, உலக அளவில் மிகப் பரவலாக இடம்பெற்றுவரும் ஓர் அநீதியான நடைமுறையாகும். இத்துறை சார்ந்து உலகெங்கிலும் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கையிலும் அத்தகைய ஆய்வுகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், 1990 ஆம் ஆண்டு 27% (பெரேரா) ஆகவும், 1991 ஆம் ஆண்டு 32% (சமரசிங்ஹே) ஆகவும், 1992 ஆம் ஆண்டு 60% (தெரணியகல) ஆகவும் இலங்கையிலே குடும்ப வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. இந்தச் சதவீதக் கணிப்பீட்டின்படி இலங்கையில் இக்குற்றச்செயலின் வேகமான பரவலாக்கத்தைப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது. 

அவ்வாறே, Women’s Rights Watch (Sri Lanka) 1998 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், முழுமொத்தக் குடும்ப வன்முறைகளில் 26% ஆனவை தனித்துப் பெண்களுக்கு எதிரானவை என்றும் அவற்றுள் 85% ஆனவை தனிப்பட்ட முறையில் இடம்பெற்றவையாகவும், 46% முதல் 54% வரையான வன்முறைத் தாக்குதல்கள் கணவன்மாரினால் மேற்கொள்ளப்பட்டவையே என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதுபோன்ற குடும்ப வன்முறைகள் முஸ்லிம் குடும்பங்களிலும் பரவலாக இடம்பெற்று வருவதை சில ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. 2004 ஆம் ஆண்டு வட அமெரிக்காவில் வாழும் தென்னாசியாவைச் சேர்ந்த முஸ்லிம் குடும்பங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி 1999-2004 வரையான காலகட்டத்தில் அங்குள்ள முஸ்லிம் கணவன்மாரினால் பெண்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்கள் 24% ஆகும் (Ahmad, Riaz, Barata, & Stewart, 2004). அமெரிக்காவின் இல்லினொய்ஸில் உள்ள இந்திய மற்றும் பாகிஸ்தானிய முஸ்லிம் பெண்கள் மத்தியில் 2007 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின்படி, குடும்ப வன்முறையால் பாதிப்புக்கு உள்ளான 18-35 வயதுக்குட்பட்ட படித்த, வேலைபார்க்கும் முஸ்லிம் பெண்களின் சதவீதம் 77% ஆகும் (Adam & Schewe,2007). இப்படியாக, மனிதர்களிடையே பரஸ்பர அன்புப் பிணைப்பையும் புரிந்துணர்வையும் மேம்படுத்தும் நோக்குடன் அமைந்த குடும்பம் என்ற அமைப்பு, தன் இலக்கில் இருந்து விலகி, வன்முறையான போர்க்களமாக மாறிவருவது  மிகுந்த கவலைக்குரியதாகும்.

இஸ்லாமியக் குடும்ப அமைப்பின் ஸ்திரத்தன்மை: சவால்களும் செய்யக்கூடிய சீர்திருத்தங்களும்

அல்லாஹ் த ஆலா அல்குர் ஆனிலே,
“உங்கள் வீடுகளை அல்லாஹ் உங்களுக்கு நிம்மதி தருவதாக அமைத்தான்.” (ஸூரத்துந் நஹ்ல்:80) 

என்று கூறுகின்றான். ஆகவே, வீடும் அதில் வாழும் குடும்பமும்  வெளியுலக அழுத்தங்களில் இருந்து ஒரு மனிதனை விடுவித்து மனநிம்மதியைத் தரக்கூடியதாக அமைதல் வேண்டும். இதுவே குடும்ப அமைப்பின் மூலம் எதிர்பார்க்கப்படும் உயரிய, உன்னதமான இலக்காகும். 

எனினும், இன்று குடும்பங்களில் பல்வேறு பிரச்சினைகள், பிரிவினைகள் அதிகளவில் நிலவுவதையும், சிலபோது குடும்ப வாழ்வில் ஏற்படக்கூடிய மனமுறிவுகள் தம்பதியரை மணமுறிவு வரை இட்டுச் செல்வதையும், அதனால் முழுக் குடும்பமும் அல்லலுற்றுத் தவிப்பதையும் காணக்கூடியதாக உள்ளது. பூரண வாழ்க்கைத் திட்டமான இஸ்லாத்தின் அழகிய வழிகாட்டல்களின் உண்மையான அடிப்படைகள் பற்றிய தெளிவின்மைகள், சுயநல அடிப்படையிலான துஷ்பிரயோகங்கள் என்பன குடும்பக் கட்டமைப்பைச் சிறப்பாகப் பேணிப் பாதுகாத்தல் என்ற இஸ்லாத்தின் நோக்கத்தையே சீர்குலைப்பனவாக அமைந்துள்ளன. இத்துரதிருஷ்டவசமான நிலை பரவலடைவதற்கான காரணங்களைக் கண்டறிந்து, உரிய தீர்வுகளை நோக்கி நகர்வதற்கான முன்னெடுப்புக்களைத் தூண்டுவது காலத்தின் தேவையாகும்.  

இதுதொடர்பில் ஆழமாக நோக்குமுன், விவாகம் – விவாகரத்து தொடர்பான மூன்று உண்மைச் சம்பவங்களையும் அவற்றின் அடியாக இவை போன்ற பிரச்சினைகள் முளைவிடாமல் தடுக்க எத்தகைய முன்னெடுப்புகளைச் செய்யலாம் என்பதையும் ஆராய்வது பயனுடையதாக அமையும்.  

சம்பவம் 1:
தமது குடும்ப அந்தஸ்து, தொழில்ரீதியான பிணைப்பை உறுதிப்படுத்துதல் என்ற நோக்கத்தில் மணப்பெண்ணின் விருப்பத்துக்கு மாறாக வற்புறுத்திச் செய்துவைக்கப்பட்ட திருமணம் விவாகரத்தில் முடிதல்.

நம்முடைய சமூக வாழ்வொழுங்கில் இஸ்லாத்தின் வழிகாட்டல்களும் சமூகத்தின் கலாசாரப் பழக்க வழக்கங்களும் இணைந்தே பேணப்பட்டுவருகின்றன. இவை இரண்டும் ஒரு சமூகத்தின் கட்டுக்கோப்பையும் ஒழுங்கையும் நிர்ணயிக்கும் நோக்கிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளன என்பது தெளிவு. உதாரணமாக, பாரம்பரியமான சமூக மரபில், பொதுவான சபைகளில் பெண்களின் பிரசன்னம் அல்லது பெண்ணின் பங்குபற்றுதல் பெரியளவில் ஊக்குவிக்கப்படுவதில்லை. திருமண வழக்கிலும் இதுவே மரபாக இருந்துவருகிறது. 

இலங்கையில் முஸ்லிம் திருமணத்தின்போது பொதுச் சட்டப்பிரகாரம் உள்ள விண்ணப்படிவம் உரிய முறைப்படி பூர்த்திசெய்யப்படுவதன் மூலமே அத்திருமணம் சட்டபூர்வமாக உறுதிப்படுத்தப்படுகிறது. ஆனாலும், திருமண நிகழ்வு சம்பிரதாயபூர்வமாக காதியார் உள்ளிட்ட பிரமுகர்கள் ஒன்றுகூடி நடத்தும் நிகழ்வாகவே மரபார்ந்து இடம்பெற்று வருகின்றது. பின்னர் தனிப்பட்ட முறையில் மணப்பெண்ணின் கையொப்பம் உரிய விண்ணப்பப் படிவத்தில் பெறப்படுகின்றது. 

இந்த ஒழுங்கு சமூகரீதியில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றே. என்றாலும், சிலபோது இந்த முறைமை துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படக்கூடிய வாய்ப்பாகவும் பயன்படுத்தப்படுகின்றது என்பதையே மேற்படி முதலாவது சம்பவம் நமக்கு உணர்த்துகின்றது. சட்டதிட்டங்கள் எவ்வளவுதான் காத்திரமானவையாக இருந்தபோதிலும், ஆங்காங்கே துஷ்பிரயோகங்கள் நடப்பதுண்டுதான். என்றாலும், அந்த வாய்ப்பையும் இயன்றளவு இல்லாமலாக்கப்பட வழிவகை செய்ய முயற்சிப்பதே சிறந்ததாகும். 

அந்தவகையில், பெண்ணுடைய சம்மதம் உரிய முறையில் பெறப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் சட்ட ரீதியாக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்தும், திருமண நிகழ்வு எழுத்துபூர்வ உடன்படிக்கையாகக் கைச்சாத்தாகும் தருணத்தில் மணப்பெண்ணினது பிரசன்னமும் பலர் முன்னிலையில் அவளது விருப்பமும் அறியப்படுதல், கையொப்பம் பெறப்படுதல் என்பவற்றுக்கான சாத்தியப்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்படுவது வரவேற்கப்படத்தக்கது. இதன் மூலம் வெளிப்படைத்தன்மை பேணப்படுவதற்கும்  துஷ்பிரயோகத்தின் அளவு குறைக்கப்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே எண்ணத் தோன்றுகின்றது.

சம்பவம் 2:
ஒரே ஊரில் ஒரே பள்ளிக்கூடத்தில் படித்த இருவருக்கு ஒருவரை ஒருவர் பிடித்துப்போய் இரு குடும்பங்களினதும் சம்மதத்துடன் மிக இளம் வயதிலேயே திருமணம் நடக்கிறது. தாம்பத்தியம் பற்றிய எந்த அறிவூட்டலும் அற்ற நிலையில் மனைவியை மென்மையாகக் கையாளத் தெரியாத இளம் கணவன். முதலிரு “பயங்கரமான” அனுபவங்களினால் கணவனின் அருகாமையைக் கண்டு அஞ்சி ஒதுங்கும் மனைவி. திருமண உறவு நீடித்தால் அந்தப் “பயங்கர அனுபவம்” தொடரவே செய்யும் என்று அஞ்சி, கணவனே வேண்டாம் என்ற முடிவுக்கு வருகிறாள் அந்த இளம்பெண். காதி நீதிமன்றத்தில் தன்னுடைய நிலையை எடுத்துச் சொல்ல வெட்கப்பட்டு, வாய்க்கு வந்த ஒரு காரணத்தைச் சொல்லி விவாகரத்துக் கோருகின்றாள். திருமணம் நடந்து மூன்றே மாதங்களுக்குள் முடிவுக்கு வந்துவிட்டது, அந்தத் திருமண பந்தம்.

இந்தச் சம்பவத்தில் இரண்டு முக்கியமான விடயங்கள் கவனத்தில் கொள்ளத்தக்கது:

1) குடும்பவாழ்வு குறித்த அறிவூட்டல் அற்ற நிலை 
திருமணம், தாம்பத்தியம், திருமண வாழ்வின் விழுமிய பண்புகள்/நடைமுறைகள் என்பன குறித்த முறையான அறிவூட்டல் இன்மையால்  முறிவுக்கு உள்ளாகும் திருமணங்கள் தற்போது அதிகரித்துவருகின்றன என்றால், அது மிகையல்ல. இந்த நிலையை இல்லாமலாக்கவோ இயன்றளவு குறைக்கவோ என்ன செய்யலாம் என்ற கேள்வி மிக முக்கியமானது. ஊர்தோறும் திருமணத்தால் இணையும் தம்பதிகள் குறிப்பிட்ட காலம்வரை குடும்ப வாழ்வு தொடர்பான கற்கையை மேற்கொள்வது கட்டாயமானது என்ற ஷரத்து காதி நீதிமன்றங்களில் இணைக்கப்பட்டு, மார்க்க அறிஞர்+வைத்தியர்கள் இணைந்த ஒரு குழுவினரால் அக்கல்விப் போதனை முறைப்படி நடைமுறைப்படுத்தப்படுவதற்கு உரிய ஒழுங்குகள் செய்யப்படுவது சிறப்பான பலனைத் தரக்கூடும்.

2) காதி நீதிமன்றங்களில் முஸ்லிம் பெண் வழக்கறிஞர்கள் போதிய அளவில் உள்ளீர்க்கப்படுவதன் அவசியம்
குடும்பப் பிரச்சினைகளின்போது, குறிப்பாக விவாகரத்து வழக்குகளில் பெண்களால் வெளிப்படையாகச் சொல்ல முடியாத, குறிப்பாக ஆண்களின் முன்னிலையில் சொல்லத் தயங்கும் விவகாரங்களும் இருக்கவே செய்யும் என்பதை மறுக்க முடியாது. மேலே குறிப்பிட்ட உண்மைச் சம்பவம் இதற்கு நல்லதோர் உதாரணமாகும். ஆகவே, பெண் வழக்கறிஞர்களும் காதி நீதிமன்றங்களில் பங்குபற்றும் நிலை பரவலாகக் காணப்படுமானால், இதுபோன்ற பிரச்சினைகளை முற்றிலும் இல்லாமலாக்க முடியாவிட்டாலும்கூட, கணிசமான அளவு குறைக்கக்கூடிய வாய்ப்பு அமையும் என்பது வெளிப்படை. தாம்பத்தியத்தில் காட்டப்படும் முரட்டுத்தனம், துஷ்பிரயோகம் (மனைவியை திருப்திப்படுத்தாத நிலை) என்பவற்றை ஆணான ஒரு காதியாரிடமோ வழக்கறிஞரிடமோ சொல்லத் தயங்கும்/வெட்கப்படும் ஒரு பெண், மற்றொரு பெண் வழக்கறிஞரிடம் அதேயளவு தயங்கும்/வெட்கப்படும் நிலை இருக்காது. அதுவே இயல்பும்கூட! 
தவிர, மேலது போன்ற ஒரு வழக்கில் மேம்போக்கான ஒரு காரணத்தைக் கூறி விவாகரத்துக்கோரும் மணப்பெண்ணிடம், தானும் பெண் என்ற வகையில் நெருங்கி, உண்மையான காரணத்தைத் தனிப்பட்ட முறையில் கேள்விகள் மூலம் துருவி ஆராய்ந்து வெளிக்கொணரும் வாய்ப்பு ஒரு பெண் வழக்கறிஞருக்கு இருக்கக்கூடிய சாதகமான நிலைமையாகும் என்பதும் கவனத்திற் கொள்ளத்தக்கது. இதன்போது, ஆணோ, பெண்ணோ மற்றவரின் உரிமையைத் துஷ்பிரயோகம் செய்யுமிடத்து உரிய தண்டனை வழங்கவோ, அறிவீனமான நிலையில் இழைக்கப்படும் தவறு எனில், அதனைச் சீர்திருத்திக் கொள்வதற்கான உரிய ஆலோசனைகளை வழங்கவும் இயலுமாக இருக்கும். அதைவிட, விவாகரத்து என்ற இறுதி முடிவில் இருந்து குறித்த தம்பதியரை மீட்டு, இணைந்து வாழ்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கவும் ஏதுவாகும். இதன்மூலம், விவாகரத்து எண்ணிக்கையைக் கணிசமானளவு குறைத்து, குடும்பக் கட்டமைப்பைச் சீராகவும் சிறப்பாகவும் பேணிப்பாதுகாத்தல் என்ற இஸ்லாத்தின் அடிப்படையான நோக்கத்தை நிலைநாட்டுவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கச் செய்யலாம். 

சம்பவம் 3:
மனைவியை அடிப்பதற்கான அனுமதி அல்குர்ஆனில் வழங்கப்பட்டு உள்ளது என்று சொல்லிக்கொண்டு சின்னச் சின்ன விடயங்களுக்கெல்லாம் மனைவியை அடித்துத் துன்புறுத்தும் கணவன். தினசரி வீட்டில் நடக்கும் இந்த வன்முறைத் தாக்குதல்களைக் கண்டு கண்டு உளவியல் ரீதியாகப் பாதிப்புக்குள்ளான இரு குழந்தைகளின் பிறழ்வான நடத்தையும் பின்தங்கிப்போன பள்ளிப்படிப்பும்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் ஆராயுமுன், “மனைவியை அடிக்க இஸ்லாத்தில் அனுமதி உண்டு” என்று சொல்லப்படும் அல்குர்ஆன் வசனத்தின் மொழிபெயர்ப்பைப் பார்ப்போம்:

"...எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தா விட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தா விட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான். (கணவன்-மனைவி ஆகிய) அவ்விருவரிடையே (பிணக்குண்டாகி) பிரிவினை ஏற்பட்டுவிடும் என்று நீங்கள் அஞ்சினால் கணவனின் உறவினர்களில் இருந்து ஒருவரையும் மனைவியின் உறவினர்களில் இருந்து ஒருவரையும் மத்தியஸ்தர்களாக ஏற்படுத்துங்கள்; அவ்விருவரும் சமாதானத்தை விரும்பினால், அல்லாஹ் அவ்விருவரிடையே ஒற்றுமை ஏற்படும்படி செய்து விடுவான் - நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாகவும், நன்குணர்கிறவனாகவும் இருக்கின்றான்." (அந்நிஸா:34,35) 

இஸ்லாம், திருமணத்தை ஒரு புனிதமான ஒப்பந்தமாகக் கருதுகிறது. குடும்பக் கட்டமைப்பைப் பேணுவதில் அது மிகுந்த கரிசனை கொண்டுள்ளது. எல்லாக் குடும்பத்திலும் முரண்பாடுகள் எழுவது இயற்கையே. அந்த முரண்பாடுகள், முறுகல்நிலைகள், சிக்கல்களைத் தீர்க்க முனைகையில் குடும்ப உறவுகளிடையேயான அகவயப்பட்ட உணர்வுகள், பரஸ்பரப் பொறுப்புணர்வு, அன்னியோன்னியம், பரஸ்பர உரிமைகள், கண்ணியம், தன்மானம் முதலான அனைத்து விடயங்களையும் அது கருத்திற் கொள்கிறது. மேற்படி அல்குர்ஆன் வசனத்தில் பொருள் கூறப்பட்டுள்ளதன்படி, தனக்குக் கட்டுப்படாத மனைவிக்கு,

1) நல்லுபதேசம் செய்தல்
2) படுக்கையில் இருந்து விலகிவைத்தல்
3) இலேசாக அடித்தல்
4) கணவனின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மனைவியின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மத்தியஸ்தர்களை ஏற்படுத்துதல்

என்பன தீர்வுக்கான படிமுறைகளாகக் காட்டப்படுகின்றன. எனினும், இந்தப் படிமுறைகள் தொடர்பில், குறிப்பாக மூன்றாவது படிமுறையாகக் காட்டப்பட்டுள்ள மனைவியை “இலேசாக அடித்தல்” என்ற படிமுறை தொடர்பில் அடிப்படையான சில கேள்விகள் எழுகின்றன. அவை வருமாறு:

1) கோபத்திலும் வெறுப்பிலும் இருக்கும் ஒரு கணவனுக்கு மனைவியை “இலேசாக மட்டுமே அடிப்பது” நடைமுறைச் சாத்தியமா?

2) தனக்குக் கட்டுப்படாமல் வீண் வீம்போடு இருக்கும் மனைவிக்கு உபதேசம் செய்தல், எப்படியும் தாம்பத்திய உறவை நாடித் தன்னை நெருங்கும் கணவனை வசப்படுத்தி அடக்கி விடலாம் என்ற நிலையை/வாய்ப்பை இல்லாமலாக்கி விடும் வகையில் படுக்கையில் இருந்து அவளை விலக்கி வைத்தல் என்ற இரண்டு படிமுறைகளின் பின்னும் திருந்தாத ஒரு மனைவியை அடிப்பதன் மூலம் பிணக்கு மேலும் அதிகரிக்குமா, குறையுமா? அப்படி வெறுப்பு மேலும் தூண்டப்பட்ட நிலையில் சமாதானத்துக்கான இருதரப்பு மத்தியஸ்தம் பூரண வெற்றியளிக்குமா? அந்த வகையில், குடும்பக் கட்டமைப்பை இறுக்கமாகப் பேண விழையும் இஸ்லாம், குடும்ப இணக்கத்துக்கான வெற்றிவாய்ப்பைக் குறைக்கச் செய்யும் வகையில் இப்படியான ஓர் அணுகுமுறையை உண்மையாகவே பரிந்துரை செய்திருக்குமா?

3) நபி (ஸல்) அவர்கள்  தமது மனைவியரோடு பிணக்கு ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் ஒரே ஒரு தடவையாவது எந்த ஒரு மனைவியையாவது அடித்துத் தண்டித்து இருக்கிறார்களா, அப்படிச் செய்யாமல் சிலகாலம் பிரிந்து இருந்தார்களா?  அல்குர்ஆனுக்கு பரிபூரண விளக்க உரையாகவே வாழ்ந்துகாட்டிய அண்ணலாரின் ஸீரா இந்த இரண்டு நடைமுறைகளில் நமக்கு எதனைப் பரிந்துரைக்கிறது?

இந்தக் கேள்விகளுக்கான விடையைக் காண்பதற்கு முனையும்போது கலாநிதி அப்துல் ஹமீத் அபூ சுலைமான் அவர்களின் ஆய்வுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. அதன்படி, குறித்த இறை வசனத்தில் வரும் இலேசாக அடித்துத் 'தண்டித்தல்' என்று கருத்துக் கொள்ளப்பட்டுள்ள அரபு மூலச் சொல் "ளரப" என்பதாகும். இச்சொல் தெளிவாக வேறுபடுத்திப் பார்க்கத்தக்க சுமார் 17 வேறுபட்ட பொருள்களைத் தருகின்றது. தனிமைப்படுத்தல், பிரிந்து செல்லுதல், பிரித்தமைத்தல், சேய்மைப்படுத்துதல், வெளியேற்றுதல் முதலான பல பொருள்களையும் அது தருகின்றது:

நிலத்தைப் பொறுத்து - பயணம், நீங்கிச் செல்லுதல்
காதுகளைப் பொறுத்து - கேட்பதிலிருந்து தடுத்தல்
குர் ஆனைப் பொறுத்து - புறக்கணித்தல், பொருட்படுத்தாதுவிடல், கைவிட்டு விடுதல்
உண்மையையும் பொய்ம்மையும் பொறுத்து - இரண்டில் ஒன்றை வெளிப்படுத்தி, ஒன்றிலிருந்து மற்றொன்றை வேறுபடுத்திக் காட்டுதல்
திரையைப் பொறுத்து - தலையை மூடும் திரையை மார்புக்கு மேலாக இழுத்து விடுவது
கடல்கள், ஆறுகளைப் பொறுத்து - தண்ணீரை விலக்கி அதனூடே ஒரு பாதையை அமைத்தல்
சுவரொன்று எழுப்புவதைப் பொறுத்து - பிரித்தமைத்தல், வேறுபடுத்தல்
மக்களைப் பொறுத்து - கேடுகளினால் சூழப்பட்டு இருத்தல்
பாதங்கள், கழுத்து, முகம், முதுகு என்பவற்றைப் பொறுத்து - வெட்டுதல், தாக்குதல்
ஏனைய வசனங்களைப் பொறுத்து - உந்துதல், அதிர்ச்சி தரல், அறைதல், பங்கம் விளைத்தல் 
முதலான பல பொருள்களை "ளரப" எனும் அரபு வேர்ச் சொல் தருகிறது.    
ஆகவே, இதனை அடிப்படையாக வைத்து நோக்குகையில் நாம் பின்வரும் முடிவுகளைப் பெறலாம்:
·“மனைவியை அடித்தல்” என்ற வன்முறை சார்ந்த நடைமுறை கணவன் – மனைவி இடையே மேலும் வெறுப்பையும் பகைமையையும் தூண்டி, குடும்ப வாழ்வில் இணக்கத்தை ஏற்படுத்துதல் என்ற இஸ்லாத்தின் நோக்கத்துக்குப் பெரிதும் பாதகமாகவே அமையும் 
·இச்செயல், அல்குர்ஆன் காட்டித்தரும் நான்காவது படிமுறையான இருதரப்புக் குடும்பத்தினர் முன்வந்து மத்தியஸ்தம் செய்து தம்பதியைச் சமாதானப்படுத்திச் சேர்த்துவைப்பதற்கான சாத்தியப்பாட்டைக் குறைக்கும் 
மேலும், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியருடன் பிணக்கு ஏற்பட்டபோது அம்மனைவியர் தமது தவறை உணர்ந்து திருந்த வாய்ப்பளிக்கும் வகையிலும், குறித்த பிரச்சினை அப்பெண்களின் குடும்பத்தவர்களது கவனத்தை ஈர்த்து இருதரப்பாருக்கு இடையில் மத்தியஸ்தம் பேசி சமாதானம் செய்துவைக்கக்கூடிய வெளியை (space) ஏற்படுத்துமுகமாகவும் அம் மனைவியரை விட்டும் சிலகாலம் பிரிந்திருந்த முன்மாதிரியே காணப்படுகின்றது. 

எனவே, மேற்படி இறைவசனத்தில் “ளரப” என்ற சொல்லுக்குப் பொருள் கொள்வதாயின், "வீட்டை விட்டுப் 'பிரிதல்', மனைவியிடமிருந்து 'விலகியிருத்தல்', 'பிரிந்து செல்லல்' என்றே பொருள் கொள்ளப்பட வேண்டும். இதுவே, தத்தமது குடும்பத்துப் பெரியவர்கள்/ நடுவர்கள் முன்வந்து இருவரையும் சமாதானப்படுத்திச் சேர்த்துவைத்தல் என்ற நான்காவது படிமுறையோடு தர்க்க ரீதியாகப் பொருந்திப் போகக்கூடிய அணுகுமுறையாகக் காணப்படுகின்றது. 

மேலும், இஸ்லாம் அல்குர்ஆனின் 2:187, 2:229-237, 4:19, 4:25, 9:71, 30:21 ஆகிய வசனங்களில் திருமணம் என்பதை கண்ணியம், பாதுகாப்பு, ஊக்கம், அமைதி, இரக்கம், ஆறுதல், நீதி, கருணை, காதல் என்பவற்றோடு தொடர்புபடுத்திப் பேசுகின்றது. இந்த முழுமொத்த அல்குர்ஆனிய அணுகுமுறையை ஒப்புநோக்கிப் பார்க்கும்போது, Domestic violence எனப்படும் குடும்ப வன்முறைக்கு இஸ்லாத்தில் எந்தவித அங்கீகாரமோ அனுமதியோ இல்லை என்பது மிகவும் தெளிவாகப் புலப்படுகின்றது. ஆகவே, குடும்பவாழ்வு தொடர்பான  இந்த இஸ்லாத்தின் நிலைப்பாடு தொடர்பிலும் மேலே சொன்னவாறு தம்பதியருக்கான குடும்பவாழ்வு தொடர்பான கல்வித் திட்டத்தில் தெளிவாக அறிவூட்டப்படுதல் வேண்டும். அத்தோடு, அதனைப் பொருட்படுத்தாமல் மனைவியைக் கொடுமைப்படுத்துவோருக்கு எதிராக 2005 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்ட மூலப்படி நடவடிக்கை எடுப்பது தொடர்பில் உரிய முன்னெடுப்புகளை மேற்கொள்வது குறித்தும் காதி நீதிமன்றங்கள் செயற்படுவது வரவேற்கத்தக்கதாகும்.

முடிவுரை
இஸ்லாம் ஓர் அழகிய வாழ்வொழுங்கைக் கட்டமைப்பதை வலியுறுத்தும் ஒரு மார்க்கம் என்ற வகையில் சிறப்பானதும் ஆரோக்கியமானதுமான குடும்பக் கட்டமைப்பை உருவாக்குவதில் அழகிய பல வழிகாட்டல்களை அது வழங்கி உள்ளது. மிகச்சிறப்பானதும் அன்னியோன்னியமானதுமான குடும்பமொன்றை ஸ்தாபித்தல் எனும் இஸ்லாத்தின் உன்னத நோக்கை அடைவதற்கும் அதனை உறுதிப்படுத்துவதற்கும் சட்டத்துறையின் பங்களிப்பு நேர்த்தியாகவும் காத்திரமானதாகவும் அமைதல் இன்றியமையாததாகும். அந்த வகையில், 

·‘வலி’ உரிமை துஷ்பிரயோகம் செய்யப்படாமையை உறுதிப்படுத்தும் வெளிப்படைத்தன்மையைச் சட்டரீதியாகக் கட்டியெழுப்புதல்

·மணமக்களுக்கு மத்தியில் பரஸ்பரப் புரிந்துணர்வை மேம்படுத்தி, மணவாழ்வின் மகத்துவத்தை உணர்த்தும் வகையில் இஸ்லாத்தின் வழிகாட்டல்களை உள்ளடக்கிய முறையான குடும்பக்கல்வி (family education) வழங்கப்படுதல். இதன்போது பாரம்பரியமான மூட நம்பிக்கைகள், பிழையான நடைமுறைகள் தொடர்பான மனப்பாங்கை மாற்றியமைத்தலுக்கு முன்னுரிமை வழங்குதல் 

·விவாகரத்துக்காக வரும் வழக்குகளை விசாரிக்கும் காதி நீதிமன்றங்களில் முஸ்லிம் பெண் வழக்கறிஞர்களின் பங்களிப்பையும் போதியளவு உள்ளீர்த்தல்  

·காதி நீதிமன்றங்கள் குடும்பப் பிரச்சினைகள் தொடர்பான வழக்குகளைத் திறம்படக் கையாளும் வகையில், மருத்துவர்கள், உளவள ஆலோசகர்கள், காவல்துறையினர் முதலானோரின் பங்களிப்பும் உரிய வகையில் உள்ளீர்க்கப்பட்ட ஒரு குழுவாக மறுசீரமைப்பு செய்யப்படுவதில் உள்ள சாத்தியப்பாடுகள் குறித்து ஆலோசித்தல்
என, சட்டத்துறையில் பயின்று நிபுணத்துவத் தேர்ச்சி அடையும் முஸ்லிம் இளைஞர் - யுவதிகள் தமது துறைசார்ந்து சமூகத்துக்குச் செய்யக்கூடிய மறுசீரமைப்புப் பணிகள் குறித்து சமகால நிலைமைகளை அறிவுபூர்வமாகவும் சிறப்பாகவும் கவனத்திற்கொண்டு, சிந்தித்துச் செயலாற்றவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

உசாத்துணைகள்:
தாஹா ஜாபிர் அல் அல்வானீ, அப்துல் ஹமீத் அபூ சுலைமான் "இஸ்லாமியச் சட்டவியலில் பெண்கள்" (மொழிபெயர்ப்பு, 2009)  "மாற்றுப் பிரதிகள்" வெளியீடு.
Abdul Hamid Abu Sulayman, (2002) Chastising Wives: Quranic Verse Re-Interpreted : Women Sic Dignity Reconsidered, London: IIT

Abdul Hamid Abu Sulayman, (2003) Marital Discord: Recapturing the Full Islamic Spirit of Human Dignity, London: IIT
Adam, M.N. & Schewe, P.A. (2007) A Multilevel Framework Exploring Domestic Violence Against Immigrant Indian and Pakistani Women in the United States, Journal of Muslim Mental Health Volume 2, Issue 1, 2007, pp.5-20
Ahmad, F., Riaz, S., Barata, P. and Stewart, D.E. 2004, ‘Patriarchal beliefs and perceptions of abuse among South Asian immigrant women’, Violence against Women, 10, pp. 262-282.
http://www98.griffith.edu.au/dspace/bitstream/handle/10072/38916/69246_1.pdf?sequence=1
http://www.whosrilanka.org/linkfiles/who_sri_lanka_home_page_gbv_country_factsheet.pdf
http://www.omct.org/files/2002/01/2178/srilankaeng2002.pdf
http://www.rc.vt.edu/pubs/Scott_Muslim_World.pdf

நன்றி: மீஸான் (2014) - இலங்கை சட்டக்கல்லூரி முஸ்லிம் மஜ்லிஸின் வருடாந்த இதழ்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்