/* up Facebook

Mar 4, 2014

குழந்தை வளர்ப்பில் அப்பாக்களின் பங்கு என்ன? - கேஷாயினி எட்மண்ட்


முகநூலில் அண்மையில் நண்பனொருவன் பகிர்ந்திருந்திருந்த ஒரு விடயம் “தாய் ஒரு குழந்தையை வெறும் பத்து மாதம் மட்டுமே சுமக்கிறாள் தந்தை வாழ்நாள் எல்லாம் சுமக்கிறார்” இங்கு இந்த நண்பன் “சுமை” என்பதை எவ்வாறு ஒப்பிடுகின்றார் என்பது ஒரு பெரிய கேள்விக்குறியே……

ஒரு தாய் குழந்தையை சுமப்பது என்பது உடல், உள ரீதியானதொரு விடயம். இந்த பத்து மாதங்களும் அவளுக்கு மாதவிடாய் என்ற வலியிருந்து தற்காலிக விடுதலை கிடைத்தாலும் ஒவ்வொரு நிமிடத்திலும் கருப்பையிலான வலியை சுமந்துகொண்டு தானிருக்கின்றாள். உளரீதியாக பிரசவத்தில் சிக்கலும் வந்திடுமோ என்கின்ற மன உளைச்சல், ஆரோக்கியமான குழந்தை கிடைக்க வேண்டும் என்கின்ற பதைபதைப்பு, வயிற்றிலிருக்கும் குழந்தையின் வளர்ச்சிப்படிநிலை குறித்த பயம் போன்ற உள பிரச்சினைகளுக்கும் உள்ளாகின்றாள்.

ஒரு பெண் குழந்தையை சுமக்க ஆரம்பிப்பது கூட அவள் தாய்மையை தாண்டியும் தன் பெண்மையை சமூகத்திற்கு நிரூபிப்பதற்காக கூட கருத்தரிக்கின்ற நிலைமையும் உண்டு. எங்கே திருமணமாகிய பத்து மாதங்களுள் தான் கருத்தரியாமல் விட்டால் “மலடி” என்ற முத்திரை குத்தப்பட்டுவிடுமோ என்ற பயம், இதன் நீட்ச்சியாக தன் கணவருக்கு மறுமணம் செய்துகொடுத்திடுவார்களோ என்ற பயம், தன் தந்தை கொடுத்த சீதனத்திற்கும் தன் கீழுள்ள ஏனைய சகோதரங்களின் வாழ்வும் பழுதாகிடுமோ என்ற சமூகம் குறித்தான பயம் போன்றனவும் கூட அவள் தாய்மையடைய உந்துகின்றன. எந்த மாமியாராவது தன் மகனில் குறையுண்டு என்று மருமகளுக்கு மறுமணம் செய்துவைத்ததுண்டா? அல்லது புகுந்த வீட்டவர் வாங்கிய வரதட்சணையை திருப்பி அனுப்பியதுண்டா? ஆக பிரசவம் என்பது பெண்ணுக்கு உடலளவிலான வலி மட்டுமல்ல சமூக. பொருளாதார உந்துதலும் கூட.. ஆக அவளுக்கு சுமை என்பது வயிற்றில் மட்டுமல்ல!!

பிரசவத்தின் பின் கூட அவள் சுமை குறைந்து விட்டுடாது. “குழந்தை நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே” என்று அன்றே பெண் தலையில் இந்த சுமையும் சுமத்தப்பட்டு விட்டதற்;கமைய பிள்ளையின் செயல் ஒவ்வொன்றுக்கும் தாயை நோக்கியே சுட்டுவிரல்கள் நீள்கின்றன. ஏன் பிள்ளை தவறுசெய்தால் “எல்லாம் உன் வளர்ப்பு தான்” என்று மனைவியை திட்டுகின்ற பெரும்பான்மை கணவன்கள் எம்மிடையே இருக்கின்றார்கள்.

ஆணென்பவன் இங்கு “பொருளாதாரம்” என்கின்ற சுமையை தான் பெரும்பான்மையாக தாங்குகின்றான். (இது மனைவி வேலைக்கு செல்லும் போது குறைவதுமுண்டு). நள்ளிரவில் அழும் குழந்தைக்கு தாலாட்டு பாடிய ஆண்கள் எத்தனை பேருண்டு? சிறுநீர் கழித்த குழந்தைக்கு துணி மாற்றிய அப்பாக்கள் எத்தனை உண்டு?

இலங்கையினை பொறுத்தளவில் குழந்தை பெற்ற தாய்க்கு 84 வேலை தினங்கள் விடுமுறை கொடுக்கப்படுகிறது. தந்தைக்கு 03 நாட்கள் மட்டுமே கொடுக்கப்படுகின்றன. இது குழந்தைக்கான பெயர் தெரிவிற்கும், வைத்தியசாலையிலிருந்து மனைவி குழந்தையை வீட்டுக்கு கூட்டிவருவதற்கும் மட்டுமே போதுமானதாக அமைகின்றது. ஆக சட்ட சலுகைகளும் ஆண்களை பொறுப்பிலிருந்து விலக்குவதற்கே ஏதுவாக வழிசமைக்கின்றன.

பொறுப்புங்களும், கடமைகளும் ஆண் - பெண் இருவருக்கும் பொதுவானது என்பதை என்று எம் சமூகமும் சட்டங்களும் அதன் சலுகைகளும் உணர்கின்றதோ அல்லது உணர்த்துகின்றதோ அன்று தான் சமூகத்தில ஆண் - பெண் சமநிலையும் உருவாகும்.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்