/* up Facebook

Dec 6, 2013

பெண்ணின் பெருமை பேசும் பெண்ணியத்தை காப்போம் - பிருந்தா தாஸ்

சர்வதேசபென்கள் தினத்தையொட்டி

காலாகாலமாக பெண் அடிமைப்படுத்தப்பட்டும் குறிப்பிட்ட துறைசார்ந்த இடத்தில் ஆண்களிடமிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டும் வைக்கப்படமையை நாமறிந்ததே. நவீனமடைந்து வரும் காலத்தில் கூட பெண் அடிமைப்படுத்தப்பட்டு வருகின்றாள் என்றால் அது மறுப்பதற்கில்லை. பெண்ணினத்துக்கு இன்னும் முழுமையான சுதந்திரம் கிடைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.

இந்த அடிமை நிலையைப்போக்க எத்தனையோ பெண் விடுதலை வீரர்களும், சமுதாயச் சிற்பிகளும், சிந்தனாவாதிகளும், கவிஞர்களும், அரசியல் தலைவர்களும், பல காலம் போராடி வருகின்றனர். ஆனால் இன்றும் இந்த அடிமைத்தனம் தொடர்கிறது என்பது வேதனைக்குரிய விடயமாகும். பாரதியார் கூட நாட்டின் ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்களின் நிலையையும், வேதனையையும் கண்டு பெண் விடுதலைக்காக எழுச்சி மிகுந்த பாடல்களையும் பாடியுள்ளார். அப்பாடல்கள் இன்றும் பெண்களின் முழு உரிமையைப் பறைசாற்றும் வண்ணம் அமைந்துள்ளன. அவை மனித உள்ளங்களைத் தொட்டன. ஆனால், பெண்ணின் அடிமைத்தனம் இன்றும் நிலைகொண்டு தான் இருக்கின்றது. இதற்குப் பெண்கள் தொடர்பான தவறான புரிதல், மூட நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் என்பனவே காரணமாயிருக்கின்றன. நம் முன்னோர்கள் பாரம்பரியம், பண்பாடு என்கிற பெயரில் பெண்கள் இப்படித் தான் இருக்க வேண்டும, இப்படி இருந்தால் தான் அவள் பெண் என்று பெண்களை மிகைப்படுத்தி சித்திரித்துள்ளனர். புராணங்களில் கூட பெண் என்பவள் தன் சுய உணர்வுகளை விட தன் குடும்பம் குழந்தைகள் என தியாக உணர்வோடு வாழும் புனிதர்கள் போல காட்டப்பட்டு இருக்கின்றாள். பெண்கள் என்றுமே தவறு செய்துவிடக் கூடாது என்று அவர்களுக்கு கற்பு என்ற ஒன்றை திணித்துள்ளனர். இன்றைய காலத்தை எடுத்துக் கொண்டால், பெண்கள் உரிமை மற்றும் அவர்களின் பாதுகாப்பு எனப் பல விடயம் தொடர்பில் பலரால் பேசப்பட்டாலும் பெண்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் அடக்கப்படுவதும் ஆபாச பொருளாக பார்க்கப்படுவதும் பலர் வீடுகளிலும் பலர் பொது இடங்களிலும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவதும் நடந்த வண்ணமே இருக்கிறது. ஒரு பெண் எவ்வளவு தைரியமானவள் என்றாலும் ஏதாவது ஒரு காரணத்தால் அவள் பின் தள்ளப்பட்டுக் கொண்டே இருக்கின்றாள். பெரும்பாலும் குறிப்பிட்ட ஆண்களாலும் துன்புறுத்தப்படுகிறாள். அல்லது ஒரே பாலினமே அவளை இழிவு படுத்தும் நிலை. இதன் காரணமாக மனமுடைந்து தனது தைரியத்தையும் இழக்கும் பெண்கள் பலர் இருக்கின்றார்கள்.

மகாத்மா காந்தி கூட ‘எப்போது எமது நாட்டில் பெண்கள் நள்ளரவிலும் நடமாடக்கூடிய சூழ்நிலை உருவாகின்றதோ அப்போதே உண்மையான சுதந்திரம் உருவாகும்’ என்றார். ஆனால் அதற்கு இன்னும் காலம் இருக்கிறது அல்லது கிடைக்காது என்ற நிலையில் இருக்கின்றோம். இன்றைய சமூகத்தில் பெண்ணின் பெருமைகளை மதிக்கின்ற பண்பு ஓரளவு இருப்பினும் பெரும்பாலும் பெண்களை அடக்கி, ஒடுக்கி அதிகாரப் பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படும் நிலை கூடுதலாக காணப்படுகின்றது என்பதை மறுப்பதற்கில்லை.
பெண்களுக்கு என்று சில குணாம்சங்கள் இருக்கின்றன. அதை நம் கலாசாரத்துடன் ஒப்பு நோக்கும் போது அவற்றை நாம் சரிவர கடைபிடிக்க வேண்டும். அதை எப்பொழுதும் பெண்களின் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். பெண் அடிமை, பெண் சுதந்திரம், பெண் உரிமை, பெண் சார்ந்த பல்வேறு மாற்றங்கள் உருவாகட்டும். ஆனால், பெண் என்பவள் ஆணாதிக்கத்தில் இருந்து விடுபட வேண்டும் என்பதற்காக எமது தனிப்பட்ட கலாசார பண்புகளை இழக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதும் அவசியமே. 

பெண் மீதான அடிமைத்தனம், பிரச்சினைகள் மற்றும் பல்வேறு குற்றச்செயல்கள் அனைத்திற்கும் பரம்பரையாக பெண்கள் மீது திணிக்கபட்ட சில வழிமுறைகள் தான் காரணம் என மேலே குறிப்பிட்டிருந்தேன். எனவே பாரம்பரியம் என்று சொல்லிக் கொண்டு பெண்களை ஒதுக்குவதும் அவர்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்குவதும் விட்டெறியப்பட வேண்டிய விடயங்களாகும். பெண்களும் நம்மை போன்ற மனிதர்கள் தான் என்று ஆண்கள் யோசிக்க வேண்டும். அவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து அவர்களுக்கும் உரிமைகள் உண்டு என உணர்ந்து உரிமைகளை வழங்க முன்வரவேண்டும். அத்துடன் பெண்களை மதிக்க தெரிந்திருக்க வேண்டும். நல்ல குடும்பம், நல்ல சமுதாயம், சிறந்த தலைவன், தலைவி, பொருளாதாரம், ஏன் நாட்டின் வளர்ச்சிக்கே பெண் உரிமையானவள். நல்ல சமுதாயத்தை உருவாக்குவதில் தலைவியாக விளங்கக் கூடியவள். அவளை நாம் எப்பொழுதும் மதிக்க வேண்டும். பெண் அடிமை சின்னமல்ல, நாட்டின் சின்னம். வளர்ச்சியின் சின்னம். பெண் என்பவள் கடவுள் இல்லை. அதற்காக அடிமையும் இல்லை. தனப் போன்று அவளும் ஓர் உயிர் என்பதை ஆண்கள் உணர வேண்டும்.

மனித வரலாற்று விருத்தியில் ஆண்-பெண் சாதி முறை பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். ஆரோக்கியமான சமூக விருத்தியில் பெண்களின் இருப்பு அவர்களின் தலைமைத்துவம் அவர்களின் சேவை என்பன அபிவிருத்தி சுட்டியில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அத்துடன் பெண்கள் தமது இருப்பு, பாதுகாப்பு சுதந்திரம் தொடர்பில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதிலும் எமது நாட்டில் (இலங்கை) வாழும் பெண்கள் தினமும் சவால்கள் நிறைந்த வாழ்வையே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்ற பெண்கள் மற்றும் தொழில் இன்றியும் பொருளாதார வசதியின்றியும் உள்ள பெண்கள் எனப் பலர் வாழ்வதற்காக வாழக்;கைப் போராட்டத்தை தினமும் எதிர்கொண்டவர்களாகவே வாழ்கின்றனர். இவர்களின் வாழ்வு வளம் பெற வேண்டுமாயின், மனித மனங்களில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வதோடு எதிர்கால சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய வகையில் தம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டியதும் காலத்தின் தேவையாக உள்ளது.

இவ்வாறு பெண்கள் இன்று பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர். பெண்கள் மீதான கொலை, கொள்ளை, பாலியல் ரீதியான துன்பங்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இதை பார்க்கின்ற போது பெண்களுக்கான பாதுகாப்பு என்பது முற்றிலும் இல்லை என்பது தான் எனது கருத்து. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இப்பிரச்சினைகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். விழிப்புணர்வு என்று சொல்லிக் கொண்டு பலர் வாதாடி வருகின்றனர். அத்துடன் எத்தனை நிகழ்வுகள் நடந்து முடிந்துள்ளன. அவையனைத்தையும் விட்டு விட்டு பெண்கள் மீதான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும். அதுவும் கடுமையானத் தண்டனை வழங்க வேண்டும். அப்போது தான் பெண்கள் மீதான குற்றச் செயல்களைப் புரிவது குறையும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தண்டனை என்ற பேரில் ஒரு பத்து இருபது நாட்கள் சிறையில் தள்ளி விட்டு பின் பிணையில் அவர்கள் வெளியில் வந்து விடுகின்றனர். மீண்டும் அதை அவர்கள் செய்யமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்! எனவே அதற்கு தகுந்த தண்டனை வழங்கி நாட்டின் பொக்கிஷங்களான பெண் செல்வங்களைக் காப்பாற்றுங்கள். அதுவே அவர்களுக்கு கொடுக்கும் உரிமையும் சுதந்திரமுமாகும். அதற்கு பெண் சங்கங்கள் ஆதரவு வழங்க முன் வரவேண்டும். சம்பந்தப்பட்டவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். பெண் சங்கங்கள் அனைத்தும் பிரச்சினைகளை மட்டுமே பேசி வருகின்றன. அதில் ஒரு முன்னேற்றமும் இல்லை. செயல்களிலே காட்டுங்கள். பலன் கிடைக்கும் என்றும் பெண்ணின் பெருமை பேசும் பெண்ணியத்தைக் காப்பாற்றுவோம்.

2 comments:

Manikandan said...

கண்டிப்பாக, கடுமையான தண்டனை இருக்க வேண்டும்.

Divya said...

முதலில் அரசாங்கம், பெண்களின் வசப்பட வேண்டும். 100% பெண்கள் மட்டுமே பாராளுமன்றம், சட்டமன்ற உறுப்பினர் ஆக பெண்கள் மட்டுமே இருக்க வேண்டும். ஒரு ஐம்பது ஆண்டுகள் வரை ஆண்களின் அனைத்து உரிமைகள் பறிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் அலுவலகத்தில் 90% பெண்கள், 10% ஆண்கள் என இருக்க வேண்டும். அதிலும் தலைமை பணிகள் அனைத்தும் பெண்கள் மட்டுமே இருக்க வேண்டும். பள்ளி படிப்புடன் ஆண்களின் கல்வி நிறுத்த வேண்டும். உயர்கல்வியை பெண்களுக்கு மட்டுமே அளிக்க வேண்டும். அப்போது பெண்களுக்கு அனைத்து துறை மற்றும் பணிகள் அனைத்தும் வந்து விடும். சட்டங்களை மாற்றி, புதிய சட்டங்களை உருவாக்கி அதனை கடுமையாக செயல்படுத்தி வந்தால், கொலை, கொள்ளை, கற்பழிப்பு அனைத்தையும் ஒழித்து விடலாம். சிறைத்துறை பெண்களின் முழு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். ஆண் கைதிகளை பெண்கள் தான் கட்டுப்பாடுகளுடன் திருத்த வேண்டும். சிறை என்றால் ஆண்கள் நடுங்கும் அளவு கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும்.

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்