/* up Facebook

Dec 4, 2013

பார்பி பொம்மைகள்: அழகில் ஒளிந்திருக்கும் ஆபத்து - வி. சாரதா


பார்பி பொம்மையைப் பார்த்து ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. நீண்ட கூந்தலும், ஒடுங்கிய இடையும், மெல்லிய கால்களும் கொண்ட அந்தப் பொம்மையைப் பார்த்துப் பெண்கள் பலரும் பொறாமைப்படலாம். அது போன்ற உடலையும், அழகையும் பெறப் பலர் ஆசைப்படலாம். ஆனால் உண்மையில் பார்பி பொம்மை நாம் பொறாமைப்படும் அளவுக்கு அழகானதா? அந்த அழகு உண்மையில் சாத்தியம்தானா?

உண்மையில் பார்பி பொம்மையைப் போல் உலகில் எவருமே இருக்க முடியாது என்று உடற்கூறு வல்லுநர்கள் கூறுகிறார்கள். பார்பி பொம்மையை வைத்துச் செய்யப்பட்ட சில ஆராய்ச்சிகள் இதை நிரூபிக்கின்றன. பார்பியை ஒத்த உடலமைப்பு கொண்ட ஒரு நிஜப் பெண்னின் அளவுகள் இப்படி இருக்கும்: உயரம் 5.9 அடி, மார்பு 36 அங்குலம், இடை 18, இடுப்பு 33. எடை 49.90 கிலோ.

5.9 அடி உயரம் கொண்ட பெண்ணுக்கு இருக்க வேண்டிய குறைந்தபட்ச எடை 56.24. எனவே கிட்டத்தட்ட 50 கிலோ என்பது அபாயகரமான அளவு என்பது வெளிப்படை. 18 அங்குல இடுப்பு என்பது சாத்தியமே இல்லை. அதுவும் 5.9 அடி உயரம் கொண்ட பெண்ணுக்கு. அப்படி இருந்தால் அந்தப் பெண்ணுக்கு வயிற்றுப் பகுதியில் இருக்க வேண்டிய உள் உறுப்புகளுக்குப் போதிய இடம் இருக்காது. உடலைத் தாங்கும் திறன், மெல்லிய கால்களுக்கு இருக்காது. இத்தகைய உடலையும் கால்களையும் கொண்ட பெண் கால்நடைகளைப் போல நான்கு கால்களில்தான் நடமாட முடியும். கால்களால் மட்டும் நடந்தால் மிஞ்சுவது இடுப்பு வலியாகத்தான் இருக்கும்.

சாத்தியமே இல்லாத இத்தகைய ‘அழகு’ உலகம் முழுவதிலும் பெண்களையும் குழந்தைகளையும் கவர்வது ஏன்?

பார்பி பிறந்த கதை

1959ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ருத் ஆண்ட்லர் என்பவரால் அறிமுகப் படுத்தப்பட்டது பார்பி. ருத் ஆண்ட்லர் தனது பெண் குழந்தை பார்பரா, காகிதங்களை வைத்து இளம் பெண்களின் பொம்மைகளை உருவாக்குவதையும், அதை தன் நண்பர் களோடு கூடி விளையாடுவதையும் பார்த்திருக்கிறார். அது போன்ற ஒரு பொம்மையை உருவாக்க வேண்டும் என்று நினைத்திருந்த ஆண்ட்லர், ஜெர்மனியில் நடந்த ஒரு கண்காட்சியில் பில்ட் லிலி என்ற பொம்மையைப் பார்த்து, பார்பியை உருவாக்கினார்.

ஒரு இளம் பெண்ணின் மாதிரியாக உருவாக்கப்பட்ட பார்பி, இன்று 100க்கும் மேற்பட்ட வடிவங்களில் 150 நாடுகளில் உருவெடுத்துள்ளது. தயாரிக்கப்பட்ட முதல் ஆண்டு 3 லட்சம் பார்பிகள் 3 டாலருக்கு விற்கப்பட்டன. இன்று சராசரியாக மூன்று நொடிகளுக்கு ஒரு பார்பி பொம்மை விற்கப்படுகிறதாம்.

பார்பி ஏற்படுத்தும் தாக்கம்

அழகு இதுதான் என்று ஒரு வரை யறையைத் தருகிறது பார்பி. ‘உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு’ என்ற பிற்போக்கான கருத்தியலுக்கு உருவம் அளித்திருக்கிறது பார்பி. பெண் எப்படியான உடல் அமைப்புகளுடன் இருக்க வேண்டும் என்று இந்த ஆணாதிக்கச் சமூகம் எதிர்பார்க்கிறது என்பது பார்பியின் வழியாகக் குழந்தைப் பருவத்திலிருந்தே சொல்லித் தரப்படுகிறது.

ஒவ்வொருவர் உடலும் முகமும் வேறுபட்டது என்ற நிதர்சனமான உண்மையையும் அந்த வித்தியாசத்தைக் கொண்டாட வேண்டிய அவசியத்தையும் பார்பி முன்வைக்கும் ஆதர்ச பிம்பம் மறுத்து விடுகிறது. நான் நானாக இருப்பது அழகு, ஆரோக்கியமே அழகு என்பதையெல்லாம் விட்டு யாரோ ஒருவர் கூறும் அறிவியல்பூர்வமற்ற, அடைய முடியாத அழகின் இலக்கணத்தை அடையப் பெண்களை இது நிர்பந்திக்கிறது.

பார்பியின் சந்தை வலிமைதான் இதற்குக் காரணம். பார்பியை உருவாக்கி விற்பவர்கள், மக்கள் மத்தியில் பார்பிக்கு ஈர்ப்பை ஏற் படுத்தப் பல விதமான உத்திகளைக் கையாள்கிறார்கள். ஜெர்மனியின் பெர்லின் நகரில் கடந்த மே மாதம் பார்பி டிரீம் ஹவுஸ் (கனவு இல்லம்) என்ற பிரம்மாண்ட அரங்கு வடிவமைக்கப்பட்டது. அதில் பிங்க் நிறத்தில் ஒரு சமையலறை, பார்பி பயன்படுத்தும் பொருட்கள், உடைகள், உள்ளிட்டவைகள் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. விருப்பப்பட்டவர்கள் அந்தச் சமைய லறையில் டச் ஸ்கீரீன் மூலம் கேக் தயாரிக்கலாம், பார்பியின் உடைகளை அணிந்து பார்க்கலாம். 25000 சதுர அடி பரப்பளவில் வடிவமைக்கப்பட்ட அந்த அரங்கு, பெண்ணை ஒரு சிறிய வட்டத்துக்குள் அடைக்கப் பார்க்கிறது. அமெரிக்காவாக இருந்தாலும், ஐரோப்பாவாக இருந்தாலும் பெண்ணையும் சமையலையும் பிரிக்க இயலவில்லை! பார்பியின் கனவு இல்லத்துக்கு இடதுசாரிகளிடமிருந்தும் பெண்கள் அமைப்புகளிடமிருந்தும் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது.

உலகில் உள்ள வெவ்வேறு கலாச் சாரத்தைச் சேர்ந்த பெண்கள் மீது ஒரே கலாச்சாரத்தைத் திணிக்கிறது பார்பி. இதுவும் உலகமயமாக்கலின் விளைவே. நமது தஞ்சாவூர் தலை யாட்டி பொம்மைகள் அழகு இல்லையா?அவரவர் மண்ணுக்கான அழகியல் வேறுபட்டதாக இருக்கும் என்பதை ஏற்றுக்கொள்ள விடாமல் செய்கிறது பார்பி முன்வைக்கும் ஒற்றை அழகியல். பார்பி பொம்மைக்கு சீனாவிலும் ஆப்ரிக்காவிலும்கூடப் பெரும் சந்தைகள் உள்ளன. ஷாங்காய் நகரத்தில் பார்பி பொம்மைக்கென்றே தனிக் கடை திறக்கப்பட்டுள்ளது.

புற அழகு என்பது மாறக்கூடியது, உண்மையான அழகு என்பது அகத்தில் உள்ளது. ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான இந்த உண்மையை உணரும்வரை பார்பிகளின் ஆதிக்கம் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

நன்றி - திஹிந்து

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்