/* up Facebook

Mar 13, 2014

இணைந்து பயணிப்போம், வாருங்கள்... - லறீனா அப்துல் ஹக்


இலங்கை ஒரு பல்லின, பன்மொழி, பல்சமய மக்கள் வாழும் ஒரு நாடாகும். சுமார் மூன்று தசாப்த காலமாய்த் தொடர்ந்த கொடிய யுத்தம் முடிந்து சில வருடங்கள் கடந்துபோய்விட்ட நிலையிலும், யுத்தத்தின் சிதைவுகளில் இருந்து பௌதீக ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் இன்னுமே நம் மக்கள் முற்றாக மீண்டெழுந்துவரவில்லை. உள்ளும் புறமும் சீராக்கிச் செப்பனிட்டுக் கட்டியெழுப்பப்பட வேண்டிய நூற்றுக்கணக்கான அம்சங்கள் நம்முன் சிதிலங்களாய்ச் சிதறிக் கிடக்கின்றன. 

செங்குருதி தோய்ந்த இலங்கை வரலாற்றின் அவலம் நிறைந்த பக்கங்கள், காலத்தின் கன்னத்தில் மாறாத வடுக்களாய் நிலைகொள்ளப் போகின்றன. எல்லாத் தரப்பிலும் இழப்புகளின் வலி புரையோடிப்போய்க் கிடக்கின்றது. நாளை பற்றிய நம்பிக்கைகளைத் தொலைத்துவிட்டு, சமகால வாழ்வில் சுமையாய் அழுத்தும் பிரச்சினைகளில் இருந்து வெளிவரத் தவித்தபடி மக்கள் ஒவ்வொரு நாளையும் நெட்டித் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். இதுவே கசப்பான யதார்த்தம். 

இதையெல்லாம் கடந்து, மூவின மக்களும் சமத்துவமாய், சுதந்திரமாய், மகிழ்ச்சியோடு வாழத்தக்க சகவாழ்வைக் கட்டியெழுப்பும் மகத்தான பெரும் பணி நம் முன் காத்திருக்கிறது என்பதை சமூகத்தின் அங்கத்தினரான நாம் ஒவ்வொருவரும் உணர்தல் மிக முக்கியமானது.

"சமாதானம் என்பது பலவந்தத்தால் அல்ல, புரிந்துணர்வின் மூலமே கட்டியெழுப்பப்படக் கூடியது" என்கிறார், மாமேதை அல்பர்ட் ஐன்ஸ்ட்டீன். அவ்வாறே, "நாம் அனைவரும் சமாதானமாக வாழவேண்டுமெனில், நாம் ஒருவரை ஒருவர் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்" என்கிறார், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகளுள் ஒருவரான லின்டன் பி. ஜோன்ஸன். 

ஆகவே, சமூகங்களுக்கும் அதன் அங்கத்தவர்களாகிய சக மனிதர்களுக்கும் இடையிலான இத்தகைய புரிந்துணர்வு எல்லாத் தரப்பில் இருந்தும் பரஸ்பரம் முன்னெடுக்கப்பட வேண்டியிருக்கிறது. அதற்காக நாம் நம்முடைய உள்ளங்களைத் தயார்படுத்த வேண்டியிருக்கிறது. யார் முதலில் தொடங்குவது என்ற கேள்விக்கு அப்பால், சமாதான சகவாழ்வுக்கான முதலடியை முன்னோக்கி வைக்க நாம் ஒவ்வொருவருமே முன்வரவேண்டும். இதன்போது, நம்முன் பூதாகரமாய் எழுந்துநிற்கும் கேள்வி, "எங்கிருந்து தொடங்குவது?" என்பதே!

நம் உள்ளத்திலும் நம் பொறுப்பில் இருக்கும் அடுத்த தலைமுறையினரின் உள்ளத்திலும் "நாம் - பிறர்" என்ற மனப்பாங்கில் இருந்தே இது தொடங்கப்படுதல் மிகப் பொருத்தமானது. நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சமூகத்தை, மொழியை, சமயத்தை, கலாசாரத்தை, பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடும். இவை தொடர்பில் நமக்குள் ஆயிரம் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அவை அனைத்தையும் கடந்து, நாம் யாவரும் இலங்கையர், மனிதர்கள் என்ற பொதுப்புள்ளியில் ஒன்றிணைகின்றோம் என்பதை ஆழமாய் மனதிற் கொள்வோம். 

தம்முடைய மொழியோ, சமயமோ, இனமோ சிறப்பானது என்ற பெருமித உணர்விருப்பது மனிதர்கள் என்ற வகையில் வெகு இயல்பானதுதான். அதேநேரம், மற்றவரின் மொழியும் சமயமும் இனமும் அவர்களுக்கும் அவ்வாறானதே என்ற புரிந்துணர்வும், அதனை மதிக்கும் பெருந்தன்மையும் இருக்கவேண்டியதும் அத்தியாவசியமானது. ஒன்றின் மீதான பற்றுக்கும், கண்மூடித்தனமான வெறிக்கும் இடையில் உள்ள பிரிகோடு இதுவே. நமக்குரியதாய் ஒன்றை ஏற்றுக்கொண்டு "மற்றமை"களை முற்றாக மறுதலிக்கும் பாசிசப் போக்கு சமாதானமான சகவாழ்வுக்கு நிரந்தரமான எதிரியாகும். இத்தகைய மோசமான சுயநலப் போக்கு ஒரே ஒரு தரப்பினரால் முன்கொண்டு செல்லப்பாட்டாலும்கூட பாதிப்பு எல்லோருக்குமானதாகவே இருக்கும். அத்தகைய போக்கின் எதிர்விளைவையே சுமார் மூன்று தசாப்தகாலம் நாம் யாவரும் அனுபவித்தோம். அளவுகள் வேறுபட்டாலும், இலங்கையர் அனைவரும் ஏதோ ஒருவகையில் அதற்கான விலையைச் செலுத்தவேண்டி இருந்தது. அந்த அவலநிலை இனி ஒருபோதும் தோன்றாதிருக்க வேண்டுமெனில், "என்னுடைய தெரிவை/பாரம்பரிய அடையாளத்தை நான் மிகவும் நேசிக்கும் அதேவேளை, உன்னுடைய தெரிவை, உரிமையை, சுதந்திரத்தையும் மிக மதிக்கிறேன்" என்ற தாரக மந்திரம் நமக்குள் கல்லில் எழுத்துப்போல் பதியவேண்டும்; நம்முடைய சொல்லிலும் செயலிலும் அது வெளிப்பட வேண்டும்.

பல சமூகத்தவரும் கலந்துவாழும் ஓர் ஊரிலோ, இணைந்து படிக்கும் பள்ளிக்கூடத்திலோ தம்மைப் போலவே பிறரையும் கருதி மதித்துவாழும் பண்பு இயல்பான ஒன்றாக மாறிவிடும் சாத்தியக் கூறுகள் அதிகம். எனினும், துரதிருஷ்டவசமாக நாம் தனித்தனி சமூகம் என்ற வகையிலும், அடையாளத்தைப் பாதுகாத்தல் என்ற தீவிர எண்ணத்திலும், ஊர்வாரியாகவும், பள்ளிக்கூடம் வாயிலாகவும் மட்டுமன்றி பல்கலைக்கழக மட்டத்திலும் ஏதோ ஒருவகையில் நம்மைச் சுற்றி நாமே வட்டங்களைப் போட்டுக்கொண்டு தனித்துப் போய் நிற்கின்றோம். பெரும்பாலும் சமய அடிப்படையிலும் இன அடிப்படையிலும் இது நடந்தேறி வந்திருக்கிறது. இந்து-முஸ்லிம்-பௌத்த-கிறிஸ்தவ பாடசாலை என்றோ,  இந்துக்கலாசார- இஸ்லாமியக் கலாசார- பௌத்தக் கலாசாரத் துறைகள் என்றோ கல்வித்துறையில்கூட நாம் தனித்தனியே நிற்கின்றோம். "எல்லோரும் இலங்கையர்" என்ற உணர்வைவிட இன்ன மதத்தவர், இன்ன இனத்தவர், இன்ன மொழியினர் என்ற அடையாளத்துக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் அபரிமிதமானதாக இருக்கின்றது. அது தவறல்ல என்றாலும், நாம் நமக்குள் உள்ள "பொதுமை"யைக் கண்டடைவதில்  தடையாக நிற்பதில் இதற்கும் ஒரு பங்குண்டு என்பதையும் நாம் மறுக்க முடியாது. 

ஆகக் குறைந்தது, பல்கலைக்கழக மட்டத்திலேனும், எல்லாச் சமயக் கலாசாரங்களும் தத்துவவியலும் (Departments of cultures and Philosophy) ஒரே துறையின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டு, எல்லோரும் எல்லாச் சமயக் கலாசாரங்களையும் கற்றுக்கொள்ளும் வாய்ப்புள்ள ஒருநிலை இன்று இல்லை. அவரவர் சமயத்தை, நாகரிகத்தை அவரவரே கற்று மெச்சிக்கொள்ளும் நிலையே மேலோங்கிக் காணப்படுகின்றது. அந்தவகையில், இலங்கைப் பல்கலைக்கழகங்களைப் பொருத்தவரையில், சமய ஒப்பீட்டாய்வுத் துறைக்கான மாபெரும் வெற்றிடம்  இன்றும் நின்று நிலவுகின்றது. குறிப்பிடத்தக்க சில மாற்றங்களைத் தவிர நமது மொழிக்கல்வியும் அவ்வாறானதே! 

என்றாலும், நம் நாட்டு வரலாற்றை நாம் திரும்பிப் பார்ப்போமாயின், அங்கு நிலைமை வேறு. தம்பதெனிய யுகத்தில் ஆட்சி செய்த சிங்கள அரசரான  'கலிகால சாகித்திய சர்வக்ஞ பண்டித' எனும் இரண்டாம் பராக்கிரமபாகுவின் அரச சபையிலேயே இலங்கையின் முதல் தமிழ் நூலான "சரசோதிமாலை" அரங்கேற்றப்பட்டது. அந்த அரசனும் அவனது அரசவையினரும் தமிழ், பாளி, சிங்களம் முதலான பல மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றிருந்தனர்; பண்டைய சிங்கள இலக்கியங்களில் தமிழும், தமிழ் இலக்கியங்களில் சிங்களமும் பரஸ்பரக் கொடுக்கல்வாங்கல்கள் செய்து தம்மை வளப்படுத்திக்கொண்டுள்ளன என்பதையெல்லாம் இலங்கை இலக்கிய வரலாறு நமக்குக் கற்றுத்தருகின்றது. பல்வேறு அரசியல், சமூக நிலைமைகள் காரணமாக இந்த நிலைமை படிப்படியாக மாறியமை துரதிருஷ்டவசமானதே! எனினும், நம்முடைய சமூகங்களுக்கிடையில் காணப்பட்ட அந்நியோன்னியத்தையும் புரிந்துணர்வையும் மீளக் கட்டியெழுப்பும் வரலாற்றுக் கடமையை இன்று நாம் சுமந்துள்ளோம். 

மொழி ரீதியாகவும் சமய ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் நமக்குள்ள சிறப்படையாளங்களைப் பேணும் அதேவேளை, "இலங்கையர்" என்ற வகையிலும் சக மனிதர்கள் என்ற வகையிலும் நாம் அன்றாட வாழ்வில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கல்வி வளர்ச்சி, சுகாதார மேம்பாடு, மது-போதை ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு, வறுமை ஒழிப்பு, ஊடக சுதந்திரத்தையும் இன்னபிற உரிமைகளையும் பாதுகாத்தல் முதலான இன்னோரன்ன சமூகப் பணிகளின்போது ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கான களம் நம்முன் இருக்கிறது. சுனாமியின் போது இன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் ஒருவருக்கொருவர் துயர் துடைத்துத் தோள் கொடுத்தது போல, இன்றும் நாட்டைக் கட்டியெழுப்பும் பணிகளில் நாம் ஒன்றிணைந்து பணியாற்ற முன்வருதல் வேண்டும்.  பேரளவு விளம்பரங்களுக்கு அப்பால் சாதாரண மனிதர்கள் மத்தியில் இத்தகைய ஒருமைப்பாடும் கூட்டு முயற்சிகளும் சமூகப் பணிகளும் ஆங்காங்கே முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை சற்று ஆறுதல் அளிக்கிறது. 

 அண்மையில், யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் ஒரு புற்று நோய் வைத்தியசாலையை தென்னிலங்கை மக்கள் உள்ளிட்டு இலங்கையில் உள்ள மனிதாபிமானிகளும் புலம்பெயர்ந்தோரும் இணைந்து கட்டியெழுப்பிய செய்தியை முகநூலின் ஊடாக அறியக்கிடைத்தது. அதன்போது, சில அரசியல்வாதிகள் தத்தமது அரசியல் இலாபங்களின் பொருட்டு மக்களைப் பல பிரிவினராய்ப் பிரித்து, இனவாத நெருப்பைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேட தொடர்ந்தும் முயற்சிகள் செய்துவந்தாலும், சாதாரண மக்கள் மத்தியில் மனிதமும் சகோதர நேயமும் இன்னும் இறந்துவிடவில்லை என்ற நம்பிக்கையின் கீற்று மனதுக்குள் ஒளிவிட்டுப் பிரகாசித்தது. அந்த மானிடநேய ஒளியை விகசிக்கச் செய்வதும், அணையாது பாதுகாப்பதும்  சக மனிதர்களாய் இணைந்து பயணிக்க முன்வரும் நம் ஒவ்வொருவர் கரத்திலும் உள்ளது என்பதை நினைவிற் கொள்வோம். 

ஆகவே, இலக்கியப் பரிவர்த்தனைகள் மூலமும் பொதுவான சமூகப் பணிகளின் அடிப்படையிலும் நமது சமூகங்கள் பரஸ்பர கொடுக்கல்வாங்கல்களில் ஈடுபடுவதோடு, ஒன்றிணைந்து பணியாற்றக்கூடிய சூழலைக் கட்டியெழுப்புவது தொடர்பில் அவரவர் மட்டத்தில் ஒவ்வொருவரும் முயற்சிகளை மேற்கொள்வோம். இலக்கியச் சந்திப்புகள், சர்வசமயக் கலந்துரையாடல்கள், பாடசாலை/பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான புரிந்துணர்வுப் பயணங்கள்/ கண்காட்சிகள்/ கலைநிகழ்ச்சிகள்/ விளையாட்டுப் போட்டிகள், தொலைக்காட்சி/வானொலி நிகழ்ச்சிகள் என்பவற்றையும் முகநூல் போன்ற சமூக வலைதளங்களையும்கூட இதற்காகச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதை மனங்கொள்வோம்.  

நன்றி: புதிய தளம் (இதழ் - 02) 2014

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்