/* up Facebook

Mar 14, 2014

இது ஆண்களின் உலகமாக மட்டும் இருக்கக்கூடாது - கவின் மலர்


உடலரசியல் என்பது பெண்ணெழுத்தின் ஓர் அங்கம்தான். அதைத்தாண்டி இந்தியச் சூழலில் பெண்ணின் உடலுக்கும் சாதிக்குமான தொடர்பு, பெண்ணின் உடல்மீது, குறிப்பாக அவள் கருப்பைமீது சாதியை ஏற்றிவைத்திருக்கும் இச்சமூகத்தில் பிள்ளைப்பேறு என்பதே சாதியை வளர்க்க என்றாகியிருக்கும் சூழலில் சாதி பெண்ணின் உடல் மீது செலுத்தும் தாக்கம் குறித்தும், சாதிக்கும் பெண்களுக்குமான தொடர்பு குறித்தும் இன்னும் அதிகமாக எழுதப்படவேண்டும் என்பது என் விருப்பம். ஆனால் அதை மட்டுமே எல்லையாகக் கருதவில்லை.

கேள்விகள் : கொங்கு நாடன், புதிய புத்தகம் பேசுதுமாற்று .கொம்.

1. ஊடகவியலாளராகிய நீங்கள் புனைவெழுத்தின் பக்கம் வர நேர்ந்த சந்தர்ப்பம் குறித்து கூறுங்கள்
என் முதல் கவிதை, சிறுகதை இரண்டுமே சொந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே அமைந்தன. கட்டுரைகள் மட்டுமே எழுதிக்கொண்டிருந்த எனக்கு வாழ்க்கையில் நேர்ந்த மறக்க முடியாத ஒரு வேதனையான அனுபவம் உள்ளுக்குள் சீற்றத்தை உண்டுபண்ணியது. அந்த சீற்றத்தையே ‘முகவரியற்றவள்’ என்று  தலைப்பிட்டு கவிதையாக்கி ’உயிர்எழுத்து’ இதழுக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் அந்தக் கவிதை வெளியாகவில்லை. அக்கவிதையோடு அனுப்பி வைத்த இன்னொரு கவிதை ‘பெருவெளி’ வெளியானது. அதுதான் பிரசுரமான முதல் கவிதை. எனினும் சில மாதங்கள் கழித்து ஆனந்தவிகடனில் ‘முகவரியற்றவள்’ கவிதை வெளியானது. சிறுகதைக்குள் செல்ல வைத்தது ஆனந்த விகடன் ஆசிரியர் ரா. கண்ணனின் வார்த்தைகள்தான். அவர் சொன்னபடி முயன்றுபார்த்தால் என்ன என்று தோன்றி எழுதியதுதான் ‘இரவில் கரையும் நிழல்கள்’ என்கிற முதல் சிறுகதை. அதுவும் ‘உயிர்எழுத்து’ இதழில்தான் வெளியானது.

2. கட்டுரை, கவிதை, -சிறுகதை இம்மூன்றிலும் உங்களுக்கு எழுத உவப்பாக இருப்பது எது?
கட்டுரைக்குத் தரவுகள் பல தேடுவது, வரிசைப்படுத்துவது என உழைப்பு கூடுதலாக வேண்டும். கவிதை எப்போதும் எழுதிவிட முடியாது. அதற்கென்று ஒரு மனநிலை தேவைப்படுகிறது. சிறுகதை அப்படியல்ல. எந்த மனநிலையில் எழுத அமர்ந்தாலும் அக்கதை உள்ளிழுத்துக்கொள்கிறது.

3. மேடை அனுபவமுள்ள நீங்கள், ஏன் நாடக அனுபவங்களைப் புனைவாக்கவில்லை?
இப்போதுதானே முதல் தொகுப்பு வந்திருக்கிறது? இனி எழுதுவேன். எத்துறையாயினும் ஆணைவிட பெண்ணுக்கு எழுத நிறைய விஷயங்கள் உள்ளன.

4. எத்தனைக்கு உன்னதமான நட்பும் பெருநகர வாழ்க்கை நெருக்கடியில் நசுக்கித்தான் போகிறது இல்லையா?
நீங்கள் ‘இரவில் கரையும் நிழல்கள்’ கதையை முன்வைத்துக் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அக்கதையில் நட்பு நசுங்கிப்போவதன் காரணம் பெருநகரம் மட்டும் இல்லை. குடும்பம் எனும் அமைப்பு, பெண்களுக்கு அதுதரும் நிர்பந்தம் இவற்றின் பங்குதான் அதிகம். எத்தனையோ நெருக்கமான தோழிகள்கூட இன்று எங்கிருக்கிறார்கள் என்று தெரியாத நிலையில்தான் பல பெண்கள் இருக்கிறார்கள். பெருநகரில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பலரின் கதி இதுதான். ஆனால் குடும்பம், பொறுப்புகள், கூடுதல் சுமைகள், குழந்தைகள், கணவன், உறவினர் என்று எல்லா உறவுகளும் பெண்ணுக்கு அழுத்தம் தந்து நிர்பந்திக்கின்றன. இக்கதையை வாசித்துவிட்டு எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு கட்டுரை எழுதினார். அதன்பின் இக்கதை கூடுதல் கவனம் பெற்றதென்றாலும் அவர் மிகத் தவறாகக் கதையைக் கொண்டுபோய் சேர்த்தார் என்பதில் எனக்கு வருத்தமே. கதையின் இறுதியில் நண்பனைத் தேடி வருகிறாள் அவள். உடனே அவர் அவள் அவனைத் திருமணம் செய்துகொள்ளத்தான் வருவதாக நினைத்து எழுதினார். இரவு பத்து மணிக்கு ஒரு பெண் ஓர் ஆணைத் தேடி வந்தால் அத்தகைய உறவுக்குத்தான் வருவாள் என்று நினைப்பது பழமைவாத இந்துத்துவ மனதின் வெளிப்பாடு. கதையில் எங்குமே அவர்களுக்குள் அப்படி ஓர் உறவு பின்னாளில் உருவாகக்கூடும் என்பதற்கான குறிப்புகள் இல்லை. ஆனால் தன் மனம் நினைப்பதை இக்கதையில் அவர் ஏற்றிவைத்துப் புரிந்துகொண்டார். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திலும் திருமணம் குறித்த பழமைவாதக் கருத்தையே இக்கதை வெளிப்படுத்துகிறது என்று இக்கதை குறித்து நடந்த விவாதத்தில் பேசப்பட்டதாக இணையத்தில் பார்த்தேன். அக்கதையில் ‘ஒரு பெண் விரும்பினால் திருமணம் செய்யலாம். இல்லையெனில் அவளை விட்டுவிடவேண்டும்’ என்பதைத்தான் கதையின் நாயகி சுடர் தன் தோழி கயலிடம் கூறுகிறாள்.  அதற்கு நேர்மாறாகப் புரிந்துகொள்வதை என்னவென்று சொல்வது?

5. காவல்துறையினரால் பாதிக்கப்படும் ஒரு ஆணின் மனஅவசங்களாக விரியும் ‘மெய்’ கதையை, எதுமாதிரியான அனுபவத்தைக் கொண்டு எழுதினீர்கள்?
அ.தி.மு.க. ஆட்சிப்பொறுப்பேற்ற சில மாதங்களில் பரமக்குடியில் செப். 11 அன்று நடந்த தலித் படுகொலைகளை அடுத்து எழுத்தாளர்கள், செயற்பாட்டாளர்கள் கொண்ட உண்மை அறியும் குழுவில் ஓர் உறுப்பினராக பரமக்குடிக்குச் சென்று கொலையுண்டவர்களின் குடும்பங்களை சந்தித்தோம்.  பலியான 6 பேரில் ஒருவரான முத்துக்குமாருக்கு நேர்ந்ததுதான் இது. இறந்துவிட்டார் என்று நினைத்து பிணவறையில் போட்ட கொடூரத்தை அவருடைய குடும்பத்தினர் எங்களுக்குத் தெரிவித்தனர். ஒருவேளை பிணவறையில் அவருக்கு நினைவு திரும்பி கண்விழித்திருந்தால்ஞ் என்று யோசித்துப் பார்த்தேன். வெகுநாட்கள் இந்த விஷயம் என் மனதில் உழன்றபடியே இருந்தது. வலியை வேதனையை சரியாய்ச் சொல்லவேண்டும் என்றால் முத்துக்குமாரின் பார்வையில்தான் அதைச் சொல்ல முடியும்  என்பதால் அவரையே கதைசொல்லி ஆக்கினேன்.

6. ‘அண்ணன்’ கதையை வித்யாசமாகக் கூற முயன்றிருக்கிறீர்கள். கார்த்திக் பாத்திரத்தை தவிர்த்திருந்தால், அண்ணன் மேலும் வித்தியாசமாக வெளிப்பட்டிருப்பான் எனத் தோன்றுகிறது?.
கார்த்திக் மீது கொண்ட காதல் போன்றதல்ல அவள் அண்ணன்மீது வைத்த அன்பு என்பதைச் சொல்லவும் கார்த்திக் தேவைப்படுகிறான். கார்த்திக்கின் பிரிவுத்துயரிலிருந்து அவளை விடுவிக்கவே, தான் அவ்வாறு அவளிடம் நடந்துகொண்டதாகக் கூறுகிறான் அண்ணன். அதற்காகவும் கார்த்திக் தேவைப்படுகிறான்.  நீங்கள் சொல்வதுபோல் கார்த்திக் இல்லாமல் கதையை எழுதிப் பார்க்கவேண்டும் என்கிற ஆவலை இக்கேள்வி தூண்டுகிறது.

7. முதல் சிறுகதைத் தொகுப்பு என்கிற அளவில் Ôநீளும் கனவு தொகுப்பு உங்களுக்கு முழு திருப்தியளித்திருக்கிறதா?

இல்லை. இத்தொகுப்பு சென்ற ஆண்டே வந்திருக்க வேண்டும். இன்னும் சில கதைகள் எழுதுவேன் என்று நினைத்தேன். ஆனால் ஓராண்டு கழிந்ததுதான் மிச்சம். ஒரு சிறுகதைகூட இந்த ஓராண்டில் எழுதவில்லை. இன்னும் சிறப்பாக வந்திருக்க வேண்டும்.

8. உடலரசியலைக் கடந்து பெண்ணெழுத்து தொடவேண்டிய எல்லைகள் எவையாக இருக்க முடியும்?
உடலரசியல் என்பது பெண்ணெழுத்தின் ஓர் அங்கம்தான். அதைத்தாண்டி இந்தியச் சூழலில் பெண்ணின் உடலுக்கும் சாதிக்குமான தொடர்பு, பெண்ணின் உடல்மீது, குறிப்பாக அவள் கருப்பைமீது சாதியை ஏற்றிவைத்திருக்கும் இச்சமூகத்தில் பிள்ளைப்பேறு என்பதே சாதியை வளர்க்க என்றாகியிருக்கும் சூழலில் சாதி பெண்ணின் உடல் மீது செலுத்தும் தாக்கம் குறித்தும், சாதிக்கும் பெண்களுக்குமான தொடர்பு குறித்தும் இன்னும் அதிகமாக எழுதப்படவேண்டும் என்பது என் விருப்பம். ஆனால் அதை மட்டுமே எல்லையாகக் கருதவில்லை.

9. எல்லோரும் எழுதிக் கொண்டிருக்கிற மெல்லிய கருப்பொருள்களைத் தவிர்த்து, முழுக்க அரசியல் பின்னணியில் கதைகள் எழுதும் எண்ணம் இருக்கிறதா?
தன்னை பாதிப்பவற்றை எழுதும் ஒருவர், அதே சமயம், தன்னைச் சுற்றி இச்சமூகத்தில் நடப்பவை பற்றி எழுதவில்லையெனில் அவை எதுவும் அவரை பாதிக்கவில்லை என்றுதான் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. எது நம் மனதைத் தாக்குகிறதோ அதைத்தானே எழுதமுடியும்?  நான் மேலும் கதைகள் நிறைய எழுதுவேன் என நம்புகிறேன். என்னை பாதிப்பவற்றை எழுதுவேன். அது ‘இரவில் கரையும் நிழல்கள்’  ‘மூன்று நிற வானவில்’ ‘அண்ணன்’ போல மெல்லிய உணர்வுகள் சார்ந்ததாக இருக்கலாம். ஆனால் அக்கதைகளிலும் அரசியல் உள்ளீடாக இருக்கிறதென்றே எண்ணுகிறேன்.  அல்லது ‘மெய்’ போலவும் எழுதக்கூடும்.

10. ஆண் மனோபாவத்தில் இதைக் கேட்கவில்லை; அப்பா, அண்ணன், நண்பன், காதலன் என்று உங்கள் கதைவெளிகளில் ஆண்கள் நிறைய உலவுகின்றனர். ஆண்களற்ற பெண்களின் உலகம் தட்டையாகத்தானே இருக்க முடியும்?
ஆண்களற்ற உலகம் வேண்டுமெனச் சொல்லவில்லை. ஆனால் இது ஆண்களின் உலகமாக மட்டும் இருக்கக்கூடாது என்பதுதான் முக்கியம்.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்