/* up Facebook

Mar 22, 2014

மாற்றம் ஏற்படுத்தும் பதிவு - கவிதா முரளிதரன்


தமிழ் சினிமாவில் பெண்களின் சித்தரிப்பு என்பது பெண்ணிய இயக்கங்களைப் பொருத்தவரையில் ஒரு தனி இயக்கமாகவே மாற்றப்பட்டிருக்கிறது. சினிமாவில் பெண்களைச் சித்தரிப்பதில் உள்ள நுட்பமான அரசியல் பற்றித் தீவிரமான விவாதங்கள் தமிழ்ச் சூழலில் கிளப்பப்பட்டிருந்தாலும், அவை வெகுஜன சமூகத்தில் பெரிய அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தவில்லை. அம்மாதிரியான விவாதங்கள் வெகுஜன அளவில் நடக்கவில்லை என்பதைத் தாண்டி, அந்த விவாதங்கள் சில கிளிஷேக்களை மட்டுமே முன் வைத்தன என்பதும் இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

இந்தப் பின்னணியில், தமிழ் சினிமாவில் பெண்களின் சித்தரிப்பை விஞ்ஞானபூர்வமாக அணுகியிருக்கும் கே. பாரதியின் ‘தமிழ் சினிமாவில் பெண்கள்’ புத்தகம் முக்கியத்துவம் பெறுகிறது.

தேசிய இயக்க சினிமா, திராவிட இயக்க சினிமா, மிகையுணர்வு சினிமா, புதிய அலைப் படங்கள், மாற்றங்களும் பின்னடைவுகளும் என்று தமிழ் சினிமாக் களத்தை வகைப்படுத்தி அரசியல்பூர்வமான பார்வையில் பெண்கள் பற்றிய சித்தரிப்பை அணுகியிருப்பதன் மூலம் தமிழ்ச் சமூகம் மதிக்கும் பல பிம்பங்களின் மீதான வெளிப் பூச்சுகளை உதிரச் செய்கிறார் ஆசிரியர்.

தேசிய இயக்க சினிமா காலகட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தை ஆதரித்து வெளிவந்த திரைப்படங்கள் பெண்களை எப்படிச் சித்தரித்தன என்பதைப் பல ஆதாரங்களுடன் பதிவு செய்யும்போது, அது வாசகர்களுக்கு, குறிப்பாக இளம் தலைமுறை வாசகர்களுக்கு முக்கியமான பதிவாக இருக்கிறது. தமிழ்த் திரையில் முதன்முதலில் பெண்ணியச் சலனங்களை ஏற்படுத்திய தியாக பூமி திரைப்படம் குறித்த தகவல்கள் சுவாரஸ்யமானவை. கல்கி எழுதிய கதையை அடிப்படையாகக் கொண்ட படம் இது. கணவனால் கொடுமைக்கு ஆளாகி அவனை விட்டு விலகி, வேலை தேடிக்கொண்டு செல்வத்துடன் திரும்பும் நாயகியை மீண்டும் கணவனை ஏற்றுக்கொள்ளச் சொல்லி நிர்பந்தப்படுத்துகிறது சமூகம். கணவனுக்காகத் தியாகம் செய்யச் சொல்லும் தந்தையிடம் நாயகி இப்படிச் சொல்கிறார்: “எப்பேர்ப்பட்ட தியாகம் வேண்டுமானாலும் செய்ய தயார் அப்பா! ஆனால் சுதந்திரத்திற்காகத்தான் தியாகம் செய்வேனே தவிர, அடிமைத்தனத்திற்காக ஒரு போதும் செய்ய மாட்டேன்.”

இறுதிவரை சமூகத்தின் நிர்பந்தங்களை ஒதுக்கி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுகிறார் நாயகி. சிறையில் கணவரைச் சந்திப்பதோடு படம் முடிகிறது. படத்திற்கு வந்த கடுமையான விமர்சனங்களைப் பற்றி படிக்கும்போது, இன்றளவும் பெண்கள் சித்தரிப்பில் இருக்கும் பிரச்சினைகளின் தொடக்கப் புள்ளியை உணர்ந்துகொள்ள முடிகிறது.

திராவிட இயக்க சினிமாவில் பெரியாரின் பெண்ணியக் கொள்கைகளை அடியொற்றிச் சில படங்கள் வந்தாலும் – குறிப்பாக என்.எஸ். கிருஷ்ணன் படங்கள் – பின்னர் வந்த படங்கள் பெண்கள் பற்றிய மரபான சிந்தனைகளையே வெளிப்படுத்தியதைப் பல திரைப்படங்களின் கதை, வசனங்களை வைத்து ஆதாரபூர்வமாகக் காட்டுகிறார் ஆசிரியர். குறிப்பாக திராவிட இயக்க சினிமாவில் எம்.ஜி.ஆர். படங்களில் பெண்களின் சித்தரிப்பிற்குத் தனி கவனமளித்திருப்பது அதன் தாக்கத்தை உணர்த்துகிறது.

மிகையுணர்வு சினிமாவிலும் கற்பொழுக்கம், தாலி செண்டிமெண்ட், ஆணவக்காரியை அடக்குதல் போன்ற பல குறியீடுகள் இருந்ததை இப்புத்தகத்தின் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது. புதிய அலைப் படங்களில் மாற்றங்கள் இருந்தாலும் அதில் மேற் கொள்ளப்பட்ட சமரசங்கள் குறித்த விரிவான அலசல்களை முன்வைப்பதன் மூலம் வாசகர்களுக்குப் பல திறவுகோல்களை உருவாக்கித் தருகிறார் பாரதி. மாற்றங்களும் பின்னடைவுகளும் பற்றிப் பேசும்போது தமிழ் சினிமாவின் போக்குகளில் தெரிந்த மாற்றங்களையும் ஆரோக்கியமான போக்குகளையும் பதிவுசெய்கிறார். அதேநேரம் தொடர்ச்சியான சில சித்தரிப்புகளையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

தமிழ் சினிமாவில் பெண்கள் சித்தரிப்பு என்பது அந்தந்தக் காலகட்டத்து அரசியல் சூழலின் தாக்கங்களிலிருந்து விடு பட்டவை அல்ல என்பதைப் புத்தகம் நெடுகிலும் உணர்த்துவதன் மூலம் பெண்கள் சித்தரிப்பில் உள்ள ஆதாரமான பிரச்சினையைக் கோடிட்டுக் காட்டுகிறார் ஆசிரியர். பல சமயங்களில் அரசியல் சூழலிலிருந்து இந்த சித்தரிப்புகள் மாறுபடும்போது அவை சந்திக்க வேண்டிய எதிர்வினைகளையும் பதிவு செய்யத் தவறவில்லை. தியாகபூமி தொடங்கி தண்ணீர் தண்ணீர், இங்கிலிஷ் விங்கிலிஷ் வரை திரையில் அபூர்வமாகத் தோன்றும் பெண் கதாபாத்திரங்களையும் புத்தகம் பதிவு செய்கிறது. அந்தந்தக் காலகட்டங்களில் வந்த முக்கியமான படங்களைக் கதை, கதாபாத்திரங்கள், முக்கியமான வசனங்களோடு பதிவு செய்வதன் மூலம் காலத்தின் பிம்பமாக எழுந்து நிற்கிறது இந்தப் படைப்பு.

புத்தகத்தின் பின்னால் கடுமையான உழைப்பு இருப்பதை ஒவ்வொரு பக்கத்திலும் உணர முடிகிறது. வெகுஜனச் சிந்தனையில் மாற்றத்தை உண்டாக்கக்கூடிய இந்த நூல், தமிழ்த் திரையில் பெண்களின் சித்தரிப்பு பற்றித் தீவிரமான அக்கறை கொண்டோருக்கான ஆவணம்.

தமிழ் சினிமாவில் பெண்கள்,
ஆசிரியர்: கே. பாரதி, 
வெளியீடு: விகடன் பிரசுரம், 
விலை: ரூ.110

நன்றி - திஹிந்து

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்