/* up Facebook

Mar 7, 2014

இது மீண்டு வந்த ஒரு பெண்ணின் கதை…. - கேஷாயினி எட்மண்ட்

சர்வதேச பெண்கள் தின சிறப்புக் கட்டுரை


நான் வறிய குடும்பத்தினை சேர்ந்த பெண். என் அப்பா ஒரு கூலித்தொழிலாளி. அம்மா எமது ஊரிலுள்ள ஒரு பணக்கார ஆக்கள்ட வீட்ட வேலைக்கு போறவ. எனக்கு இரண்டு அண்ணன்கள் இரண்டு அக்காக்கள் ஒரு தம்பி இருக்கிறார்கள். பெரிய அண்ணா இயக்கத்தில இருந்து செத்துப்போய்ட்டார். சின்ன அண்ணா வெளிநாட்டுக்கு கள்ளத்தனமா போனவர். போன பிறகு ஒரு கோல் கூட பண்ணல. பெரியக்கா கல்யாணம் முடிச்சு மூன்று பிள்ளைகள் இருக்கிறாங்க. இப்ப வீட்டில ஐயா, அம்மா, சின்னக்காச்சி, தம்பி, நான் என்டு அஞ்சு பேர் இருக்கம்.

நானும் தம்பியும் தான் குடும்பத்திலயே பள்ளிக்கு போய் கூட படிச்சிருக்கம். நான் உயர்தரம் படிச்சிட்டு இருந்த நேரம் தான் ஊரில ஒர அறிவிப்பு கிடைச்சது. அரசாங்கத்தில வேல குடுக்கிறாங்களாம் எண்டு.போரால பாதிக்கப்பட்ட ஏரியா என்டதால பெரிசு படிச்சிருக்க தேவலயாம். தமிழ் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்டு சொன்னவை. நானும் படிச்சிட்டு ரிசால்ட்டுக்காக காத்திட்டு இருந்த நான். அப்பாக்கும் ஒரே வேல இருக்கிறயில்ல. தம்பியும் படிக்கிறவன் அதால நானும் இந்த அறிவிப்ப கேட்டுட்டு விண்ணப்பிச்ச நான்.

விண்ணப்பிச்சு ஒரு மாசத்தில ஜி.எஸ் மூலமா தகவல் அனுப்பினவை. போன இடத்தில நிறைய பேப்பரில எல்லாம் கையெழுத்து வாங்கினவை. எனக்கு பெரிசா இங்கிலீஸ் படிக்க தெரியா. நானும் கையெழுத்துப் போட்டுக்கொடுத்தன். பிறகு இரண்டு கிழமைக்கு பிறகு என்ன வரச்சொல்லி கூப்பிட்டவை. போன இடத்தில ரெயினிங் தரப்போறதா சொன்னவை. அதுக்கு பிறகு தான் தெரிஞ்சது நமக்கு இராணுவ பயிற்சி தரப்போறாங்க என்டு. வீட்டில யாருக்கும் விருப்பம் இல்ல. ஆனா சைன் பண்ணிட்டதால ஒன்டும் செய்யேலா தானே பயிற்சிக்கு போன நாங்க. கொஞ்ச நாள் கழிச்சு தான் அறிஞ்சம் எங்கள முன்னாள் புலிகள் எண்டும் எங்கள புனர்வாழ்வளிச்சு இராணுவத்தில இணைச்சிருக்கம் என்டு சொல்றாங்க என்று.

பக்கத்து வீட்ல எல்லாம் ஒரு மாதிரி பேசியிருக்கினம். அம்மாவும் அப்பாவும் இத விட்டு என்ன விடுவிக்க கேட்டவை. அதக்கு அம்பதாயிரம் கட்டினா தான் விடுவம் என்டாங்க. எங்களால எப்படி முடியும்? காசில்லாததால ஒன்டும் செய்ய முடியல… ஆறு மாசம் பயிற்சி எல்லாம் நடந்தது. காலையில எக்ஸசைஸ் செய்வம் பிறகு சாப்பாடு அதுக்கு பின்ன பாடம் எல்லாம் சொல்லித்தந்தவை. உடுப்பெல்லாம் தந்தவை. சில சில இடங்களுக்கும் கூட்டிப்போனவை. ஒருமுறை கொழும்புக்கு கூட்டி வந்தவை. இது தான் நா முதல் தடவ கொழும்ப பாக்கிறன். இங்க இரண்டு நாள் நிகழ்வொன்டு நிகழ்த்தினவை. டான்ஸ், பாட்டு எல்லாம் பழகின நாங்க. இங்க வந்து நடந்த அந்த நிகழ்வுக்கு பல ஆக்கள் வந்திருந்தவை.

அங்க நா ஒரு அக்காவ பார்த்தன். இந்தியால இருந்து வந்தவ போல இருந்தவ. ஆனா பொட்டு வச்சிருந்தவ. முதலே அவவோட கதைக்க நினைச்சன். ஆனா எங்கள வெளியாக்களோட கதைக்க கூடாது என்டுட்டினம். எங்களுக்கு பக்கத்திலயும் சிங்கள இராணுவ பெம்பளகைகளை நிப்பாட்டி இருந்தவை. அதால கதைக்க முடியல. பிறகு சாப்பாட்டு நேரம் அந்த அக்கா பாத்ரூம் போறத பார்த்து நானும் பின்னால போன நான். அவட்ட போய் நீங்க தமிழா என்டு கேட்டன். ஓம் என்டா.. உங்கட போன் நம்பர் தருவீங்களா? உங்களோட கதைக்கனும் என்டு கேட்டன். பேப்பர் கூட உள்ளுக்குள்ள கொண்டு வரவிடல அதால எழுதிதர ஏலாது பாடமாக்கி கொள்ள முடியுமா என்டு கேட்டா…. இல்லக்கா நா மறந்திடுவன் என்டு சொன்னன். அப்ப உங்க நம்பர சொல்லுங்க நான் பாடமாக்கி கொள்றன் என்டு கேட்டா… இல்லக்கா நீங்க எடுக்கிற நேரம் என்ட போன் அவங்கட்ட இருந்தா பிரச்சினை. உங்கட நம்பர தான் தாங்க என்டு சொன்னன். சரி இங்க கனநேரம் நிக்கிறம் யாரும் யோசிக்க போறாங்க… இப்ப வெளியால சாப்பிட போறன். ஆனா எப்படியாவது இது முடிஞ்சு போகக்குல்ல என்ட நம்பர தருவன் என்டு சொன்ன. சொல்லிட்டு வெளியால கதவ திறந்திட்டு சாப்பிட போய்ட்டா.

அவ எங்களோட இருந்து சாப்பிடல. ஆமிப்பெரியவங்க எல்லோறோடயும் தான் கதைச்சு கொண்டிருந்தவ. எனக்கு கொஞ்சம் பயமாயிட்டு. அவவும் ஆமியிட ஆளோ என்டு. பிறகு சாப்பிட்டு முடிஞ்சதும் எங்களுக்கு பொறுப்பாருந்த ஆமி அக்காட்ட எங்க பக்கம் காட்டி கதைச்சவ. நான் நல்லா பயந்திட்டன். பிறகு  அந்த பொறுப்பாயிருந்த அக்கா எங்களுக்கு பக்கத்தில வந்து அந்த அக்கா ஊடகத்தில இருந்து வந்திருக்கா எங்கள இன்டவியூ எடுக்க கேட்டவ என்டும் மேல தமிழாக்கள் கொஞ்சப்பேர வரசொல்லியும் சொன்னா. அந்த பொறுப்பாயிருந்த அக்காக்கும் நல்லா தமிழ் தெரியும் ஆனா அவ சிங்களம் தான்.

பிறகு நாங்க மூண்டு தமிழ் பிள்ளையலும் ஒரு முஸ்லீம் பிள்ளையும் மேல போனம். அந்த பொறுப்பாயிருந்த சிங்கள அக்காவும் எங்களோ வந்தவ. மேல போன நேரம் நான் கதைச்ச அந்த அக்கா கொஞ்ச பேரோட கமரா மைக்கெல்லாம் வச்சுக்கொண்டு நின்டா. எங்கள்ட சில கேள்வியல கேட்டா ஆனா எங்களுக்கு எல்லாம் சொல்ல முடியல. அந்த பொறுப்பாளர் அக்காவும் பக்கத்தில நின்டு கொண்டிருந்தவ…. நான் மைக்கு முன்னால நின்டு இன்டவியூ முடிச்சோன அந்த ஊடகவியலாளர் அக்கா எங்கட முழுப்பெயரையும் ஊரையும் சொல்லச்சொல்லி எழுதினவ. அப்ப சடாரென்டு என்ட கையில ஒரு டிஸ_ பேப்பர வச்சவ. எனக்கு விளங்கிட்டு இதில ஏதோ இருக்கென்டு. பிறகு அவ எங்கட விடயங்கள எழுதிட்டு போய்ட்டா.


நான் பிறகு தான் பார்த்தன் அதில அந்த அக்காட நம்பர் இருந்திச்சு. நாலு நாளைக்கு பிறகு தான் எனக்கு அவவோட கதைக்க முடிஞ்சது. எங்களுக்கு பயிற்சி இடத்தில காலைல வீட்ட கதைக்க கொஞ்ச நேரம் போன் தருவினம். அந்த நேரத்தில தான் அவவோட கதைச்சன். அதுக்கு பிறகு ஒன்டவிட்டு ஒரு நாள் அவவோட கதைச்சு என்ட விசயம் எல்லாம் சொன்னன். அவ எனக்கு உதவி செய்றன் என்டா. ஆனா தொடந்து கதைக்க வேணாம் சந்தேகபடுவாங்க என்டும் சொன்னா…

பிறகு எப்பவாவது அவவுக்கு கோல் பண்ணி கேப்பன். மூன்டு மாசத்திற்கு பிறகு தான் சில ஆக்கள் என்ன வந்து சந்திச்சு கதைச்சு சில விஷயங்கள கேட்டவை. கிட்டத்தட்ட அஞ்சு மாசத்திற்கு பிறகு எங்களுக்கு பொறுப்பாயிருந்தவங்க என்ன கூப்பிட்டு என்ன போகவிடுவதாக சொன்னாங்க. அதில இருந்து ஒன்டரை கிழமைக்கு பிறகு என்னிட்ட சைன் எல்லாம் வாங்கிட்டு வீட்ட போக விட்டினம். எனக்கு நல்ல சந்தோஷம். ஆனா இன்னம் என்ட சேர்ட்டிபிகட் எல்லாம் தரல அவங்க. நான் வீட்ட வந்த பிறகு அந்த ஊடக அக்காட்ட எடுத்து கதைச்சு நான் மேல படிக்க போறதா அல்லாட்டி வேல ஏதாவது எடுத்து தந்தா வேல செய்றன் என்டு கேட்டன்… என்ன படிக்க விரும்புறீங்க என்டு கேட்டா எனக்கு ஓ.எல்ல நல்ல ரிசால்ட் கொமஸ் படிக்க விருப்பம் என்டு சொன்னன். கெதியா அதுக்கு ஏதாவது ஒழுங்கு செய்றதா சொல்லிருக்கா…. படிக்கிறதுக்காக காத்திருக்கன். ஒரு மாதிரி பழைய வாழ்க்கைக்கு திரும்பிட்டன். நல்லா படிக்கனும் என்டு நினைக்கிறன். படிச்ச பிறகு நல்ல வேல ஒன்டு எடுக்கனும் என்டும் எனக்கு விருப்பம்.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்